Monday, November 23, 2015

கருடார்த்தச்சந்திர வியூகங்கள்! - பீஷ்ம பர்வம் பகுதி - 056

Garuda and Halfmoon battle-arrays! | Bhishma-Parva-Section-056 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 14)

பதிவின் சுருக்கம் : பீஷ்மர் கருட வியூகத்தை அமைத்தது; அர்ஜுனனும், திருஷ்டத்யும்னனும் அர்த்தச்சந்திர வியூகத்தை அமைத்தது; இரு படைகளிலும் முக்கியப் பகுதிகளில் நின்ற வீரர்களின் பட்டியல்...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "அந்த {இரண்டாம் நாள்} இரவு கடந்து {மூன்றாம் நாள்} பொழுது விடிந்ததும், எதிரிகளைத் தண்டிப்பவரான சந்தனுவின் மகன் பீஷ்மர், போருக்குத் தயாராகுமாறு (குரு) படைக்கு உத்தரவிட்டார். சந்தனுவின் மகனும் முதிர்ந்தவருமான குரு பாட்டன் {பீஷ்மர்}, உமது மகன்களுக்கு வெற்றியை விரும்பி, கருடனின் பெயரால் அழைக்கப்படும் வலிமைமிக்க அணிவகுப்பை {கருட வியூகத்தை} அமைத்தார்.


அந்தக் கருடனின் அலகில் உமது தந்தையான தேவவிரதர் {பீஷ்மர்} நின்றார். அதன் இரு கண்களில் பரத்வாஜர் மகனும் {துரோணரும்}, சாத்வத குலத்தின் கிருதவர்மனும் நின்றனர். திரிகார்த்தர்கள், மத்ஸ்யர்கள் [1], கேகயர்கள், வாடதானர்கள் ஆகியோரால் ஆதரிக்கப்பட்டவர்களும், புகழ்பெற்ற போர் வீரர்களுமான அஸ்வத்தாமன், கிருபர் ஆகியோர் அதன் {கருட} வியூகத்தின் தலையில் நின்றார்கள். பூரிஸ்ரவஸ், சலன், சல்லியன் மற்றும் பகதத்தன் ஆகியோரும், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, ஜெயத்ரதனுடன் சேர்ந்த மத்ரகர்கள், சிந்து-சௌவீரர்கள், பஞ்சநதர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள் ஆகியோரும் அதன் {கருட வியூகத்தின்} கழுத்தில் நின்றார்கள்.

[1] இங்கே ஏதோ பிழை ஏற்பட்டிருக்க வேண்டும். மத்ஸ்யம் என்பது விராட நாடாகும். மத்ஸ்யர்கள் பாண்டவர்களை ஆதரித்தவர்கள். ஒருவேளை இவர்கள் மத்ஸ்யத்தில் இருந்த கீசகர்களை ஆதரித்தவர்களாக இருக்கலாம். குரு நாட்டின் தெற்கே அமைந்த மத்ஸ்ய நாட்டைத் தவிர ஆறு மத்ஸ்ய நாடுகள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஒருவேளை இவற்றில் ஏதேனும் ஒன்றாகவும் இருக்கலாம். வேறு பதிப்புகளில் இந்த இடத்தில் மத்ஸ்ய நாட்டவர் குறிப்பிடப்படவில்லை. இங்கே கங்குலியும் விளக்கமேதும் அளிக்கவில்லை.

அதன் {கருட வியூகத்தின்} முதுகில் மன்னன் துரியோதனனும் அவனது தொண்டர்களும் நின்றார்கள். ஓ! ஐயா, ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, அவந்தியின் விந்தன் மற்றும் அனுவிந்தன், காம்போஜர்கள், சகர்கள், சூரசேனர்கள் ஆகியோர் அதன் {கருட வியூகத்தின்} வால் பகுதியில் நின்றார்கள். கவசம் பூண்டவர்களான மகதர்கள், கலிங்கர்கள், தாசேரகர்கள் ஆகியோர் அந்த {கருட வியூக} அணிவகுப்பின் வலது சிறகாக அமைந்தார்கள். பிருஹத்பலனோடு சேர்ந்த கரூஷர்கள் [2], விகுஞ்சர்கள், முண்டர்கள், குண்டீவிருஷர்கள் ஆகியோர் அதன் {கருட வியூகத்தின்} இடது சிறகில் நின்றார்கள்.

[2] மூன்றாம் நாளின் கௌரவப் படையில் கருட வியூகத்தின் இடது சிறகில் கரூசர்கள் நிற்பதாகச் சொல்லப்பட்டுள்ளது. பாண்டவப்படையில் பீமன், விராடன், துருபதன், நீலன் ஆகியோருக்கு அடுத்ததாகக் கரூஷர்கள் நின்றதாகவும் சொல்லப்பட்டுள்ளது. கரூஷ நாடு சேதி நாட்டின் தெற்கே அமைந்த நாடாகும். கரூஷ மன்னன், சேதி மன்னன் சிசுபாலனுடன் பிணக்குக் கொண்டிருந்தான் என்ற குறிப்புச் சபாபர்வம் பகுதி 44ல் காணக்கிடைக்கிறது. கரூஷர்களிலும் இரண்டு தரப்பு இருந்ததா? என்பது தெரியவில்லை. இந்த இதிகாசத்தின் பல இடங்களில் கரூஷர்கள் பாண்டவத் தரப்பிலேயே பட்டியலிடப்பட்டிருக்கிறார்கள்

அப்போது, எதிரிகளைக் கொல்பவனான சவ்யசச்சின் {அர்ஜுனன்}, அந்தப் படையின் போர் அணிவகுப்பைக் கண்டு, திருஷ்டத்யும்னன் துணையுடன், தனது துருப்புகளின் எதிர் அணுவகுப்பை அமைத்தான். உமது அணிவகுப்புக்கு {கருட வியூகத்திற்கு}  எதிராக அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, பாதி நிலவின் {அர்த்தசந்திர} வடிவிலான கடும் அணிவகுப்பை அமைத்தான். பற்பல ஆயுதங்களை அபரிமிதமாகத் தரித்தவர்களும், பல்வேறு நாடுகளைச் சார்ந்தவர்களுமான மன்னர்களால் சூழ அதன் {அர்த்தச் சந்திர வியூகத்தின்} வலது கொம்பில் பீமசேனன் ஒளிர்ந்து கொண்டிருந்தான்.

அவனுக்கு அடுத்ததாக வலிமைமிக்கத் தேர்வீரர்களான விராடன், துருபதன் ஆகியோரும்; விஷமேற்றப்பட்ட ஆயுதங்களைக் கொண்ட நீலன் அவர்களுக்கு அடுத்ததாகவும் நின்று கொண்டிருந்தான். நீலனுக்கு அடுத்துச் சேதிகள், காசிகள், கரூஷர்கள், பௌரவர்கள் ஆகியோரால் சூழப்பட்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான {சிசுபாலனின் மகன்} திருஷ்டகேது நின்றான். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, திருஷ்டத்யும்னனும், சிகண்டியும் பாஞ்சாலர்கள், பிரபத்ரகர்கள் மற்றும் பிற துருப்புகளால் ஆதரிக்கப்பட்டு, போருக்காக அதன் {அந்த வியூகத்தின்} மத்தியில் நின்றார்கள். தன் யானைப்படையால் சூழப்பட்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரனும் அங்கேதான் இருந்தான்.

அவனுக்கு அடுத்ததாக, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சாத்யகியும், திரௌபதியின் ஐந்து மகன்களும் நின்றார்கள். அவர்களுக்கு அடுத்து இராவான் {அரவான்} நின்றான். அவனுக்கு அடுத்து பீமசேனனின் மகனும் (கடோத்கஜனும்), வலிமைமிக்கத் தேர்வீரர்களான கேகயர்களும் [3] நின்றார்கள். அதற்கு அடுத்து (அந்த அணிவகுப்பின் {அர்த்தச் சந்திர வியூகத்தின்}) இடது கொம்பில் அண்டம் முழுமையையும் பாதுகாப்பவனான ஜனார்த்தனனைத் தனது பாதுகாவலனாகக் கொண்டவனான மனிதர்களில் சிறந்தவன் {அர்ஜுனன்} நின்றான். இப்படியே உமது மகன்கள் மற்றும் அவர்களை ஆதரிப்பவர்களின் அழிவுக்காகப் பாண்டவர்கள் தங்கள் வலிமைமிக்க எதிரணிவகுப்பை அமைத்தார்கள்.

[3] கேகயர்கள் கௌரவப்படையின் கருட வியூகத்தின் தலையிலும் நிற்கிறார்கள், பாண்டவப்படையின் அர்த்தச்சந்திர வியூகத்தில் அரவான் மற்றும் கடோத்கஜனுக்கு அடுத்ததாகவும் அவ்வியூகத்தின் இடக்கொம்பின் அருகில் நிற்கிறார்கள்.

அதன் பிறகு, ஒருவரை ஒருவர் தாக்கியபடி உமது துருப்புகளுக்கும், எதிரி துருப்புகளுக்கும் இடையேயான போர் தொடங்கியது. அந்த மோதலில் தேர்களும், யானைகளும் ஒன்று கலந்தன. பெரும் எண்ணிக்கையிலான யானைகளும், தேர்க்கூட்டங்களும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} ஒருவரை ஒருவர் கொல்லும் நோக்கோடு விரைந்து வருவது எங்கும் காணப்பட்டது. (சண்டையில் கலந்து கொள்வதற்காக) விரைந்த எண்ணிலடங்கா தேர்களின் சடசடப்பொலியும், பேரிகைகளின் ஒலியும் ஒன்றாகக் கலந்து உரத்த ஆரவாரத்தை அங்கே எழுப்பின. அந்தக் கடும் மோதலில் ஒருவரை ஒருவர் கொன்றவர்களான, உமது படையையும், அவர்களது படையையும் சேர்ந்த வீரப் போராளிகளின் முழக்கங்கள், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சொர்க்கத்தையே எட்டின" {என்றான் சஞ்சயன்}. 


ஆங்கிலத்தில் | In English