Tuesday, November 24, 2015

தாக்குதலும் படுகொலைகளும்! - பீஷ்ம பர்வம் பகுதி - 057

Attack and Carnage! | Bhishma-Parva-Section-057 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 15)

பதிவின் சுருக்கம் : யுகமுடிவின் அந்தகனைப் போலப் போரிட்ட அர்ஜுனன்; சலிக்காமல் போரிட்ட போர்வீரர்கள்; சிதறி ஓடிய படையணியினர்; குதிரை, யானை, தேர்ப்படைகள் கலந்து போய் ஒன்றையொன்று தாக்கியது; போர்க்களமெங்கும் சிதறிக் கிடந்த ஆயுதங்களும், தளவாடங்களும்; போரால் ஏற்பட்ட புழுதி இரத்தத்தால் நனைந்து தணிந்தது; இரத்தத்தாலும், சதையாலும் சகதியான போர்க்களம்; மூன்றாம் நாளின் போர் தொடக்கத்தின் போது ஏற்பட்ட அமளியின் விவரிப்பு...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "உமது படையும், அவர்களது {பாண்டவர்களின்} படையும் அணிவகுத்துப் புறப்பட்ட பிறகு, வலிமைமிக்கத் தேர்வீரனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, தேர்ப்படை வீரர்களைத் தனது கணைகளால் விழச் செய்து, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தத் தேர்ப்படை அணிகளுக்கு மத்தியில் பெரும் அமளி செய்தான். (இப்படி) யுக முடிவின் அந்தகனைப் போல இருந்த பிருதையின் மகனால் {அர்ஜுனனால்} தார்தராஷ்டிரர்கள் கொல்லப்பட்டாலும் பாண்டவர்களுடன் விடாமல் {சலிக்காமல்} போரிட்டுக் கொண்டிருந்தனர்.


பிரகாசமான புகழை (வெல்ல) விரும்பியும், மரணம் மட்டுமே போரை நிறுத்தும் (நிறுத்துவதற்கான ஒரே வழி) எனக் கொண்டும், வேறு எதிலும் மனத்தைச் செலுத்தாமலும் அவர்கள் {கௌரவப் படையினர்} பாண்டவப் படையணிகளைப் பல இடங்களில் உடைத்து, தாங்களும் உடைந்தனர் {தங்கள் படையணிகளையும் உடைத்துக் கொண்டனர்}. இப்படி உடைந்த பாண்டவ மற்றும் கௌரவத் துருப்புகள் தங்கள் நிலைகளை மாற்றிக் கொண்டு சிதறி ஓடினர். எதையும் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை. சூரியனையே மறைக்கும் அளவிற்க்கு புழுதி பூமியில் இருந்து எழுந்தது. அங்கே இருந்த எவராலும் திசைகளையோ, துணைத்திசைகளையோ வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை.

ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, போர் நடந்த இடத்தில் எல்லாம்,  நிறங்கள், ஆளறி சொற்கள் {சங்கேத வார்த்தைகள்}, பெயர்கள் மற்றும் இனத்தின் தனித்தன்மைகள் ஆகிய அறிகுறிகளால் போராளிகள் வழிநடத்தப்பட்டனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கௌரவர்களின் அணிவகுப்பு {கருட வியூகம்}, பரத்வாஜரின் மகனால் {துரோணரால்} பாதுகாக்கப்பட்டதால் உடைக்க முடியாததாக இருந்தது. சவ்யசச்சினாலும் {அர்ஜுனனாலும்}, பீமனாலும் நன்றாகப் பாதுகாக்கப்பட்டதும் வல்லமைமிக்கதுமான பாண்டவ அணிவகுப்பும் உடைக்க முடியாததாகவே இருந்தது.

போரில் ஒன்றோடு ஒன்று எதிர்த்துப் போரிடுகின்ற தேர்களையும், யானைகளையும் கொண்ட இரண்டு படையின் போர்வீரர்களும் படை முகப்பில் இருந்து வெளிப்பட்டு நன்கு போரிட்டனர். அந்தக் கடுமையான போரில் குதிரைப்படை வீரர்களைப் பளபளப்பாக்கப்பட்ட கூரிய வாட்களாலும், நீண்ட வேல்களாலும் {எதிர்ப்படையின்} குதிரைப்படைவீரர்கள் வீழ்த்தினார்கள்.

(அருகில் உள்ள) தேர்வீரர்களை அடைந்த {எதிர்ப்படையின்} தேர்வீரர்கள் தங்கச் சிறகுகள் கொண்ட கணைகளால் அவர்களை வீழ்த்தினர். உமது தரப்பையும், அவர்களது தரப்பையும் சேர்ந்த யானைப்படை வீரர்கள் அருகில் இருந்த {எதிர்ப்படையின்} யானைப் படைவீரர்களை, அகன்ற தலை கொண்ட கணைகளாலும் {நாராசங்களாலும்}, அம்புகளாலும், வேல்களாலும் {தோமரங்களாலும்} பெரும் எண்ணிக்கையில் வீழ்த்தினர். பெரும் அளவிலான காலாட்படையில் ஒருவருக்கொருவர் கோபத்தை வளர்த்து, தங்கள் வர்க்கப் போராளிகளையே குறுங்கணைகளாலும் {பிண்டிபாலங்களாலும்}, போர்க்கோடரிகளாலும் மகிழ்ச்சியாக வீழ்த்தினர்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (அருகில் இருந்த) யானை வீரர்களை {கஜபதிகளை} அடைந்த தேர்வீரர்கள்,  யானைகளோடு அந்த மோதலில் அவர்களை வீழ்த்தினார்கள். அதே போல யானை வீரர்களும் தேர்வீரர்களை வீழ்த்தினார்கள். மேலும், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, குதிரை வீரன் வேலைக் கொண்டு தேர்வீரனை வீழ்த்தினான். அதே போலத் தேர்வீரனும் குதிரைவீரனை வீழ்த்தினான். காலாட்படை வீரன் தேர்வீரனை வீழ்த்தினான், தேர்வீரன் காலாடபடை வீரர்களைத் தன் கூரிய கணைகளால் வீழ்த்தினான். யானைவீரர்கள் குதிரைவீரர்களை வீழ்த்தினார்கள். குதிரைவீரர்கள் யானைகளின் முதுகில் இருந்த வீரர்களை வீழ்த்தினார்கள். இவை அனைத்தும் மிகவும் அற்புதம் நிறைந்ததாகத் தெரிந்தது.

அங்கேயும், இங்கேயும் காலாட்படை வீரர்கள், யானை வீரர்களில் முதன்மையானோரால் வீழ்த்தப்பட்டனர். காலாட்படை வீரர்களால் யானை வீரர்கள் வீழ்த்தப்படுவதையும் காண முடிந்தது. நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலுமான காலாட்படை கூட்டம் குதிரை வீரர்களை வீழ்த்துவதையும், குதிரைவீரர்கள் காலாட்படை வீரர்களை வீழ்த்துவதையும் காண முடிந்தது. உடைந்த கொடிக்கம்பங்கள், விற்கள், வேல்கள், யானை மேலுள்ள கூடுகள், விலைமதிப்புமிக்கக் கம்பளங்கள், தோமரங்கள், கதாயுதங்கள், பரிகங்கள் {முள் பதித்த தண்டங்கள்}, கம்பனங்கள், ஈட்டிகள், விதவிதமான கவசங்கள், கணபங்கள், அங்குசங்கள், பட்டாக்கத்திகள், தங்கச் சிறகுகள் கொண்ட கணைகள் எனக் களத்தில் சிதறிக் கிடந்த இவை, ஓ! பாரதக் குலத்தில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, மலர் படுக்கைகளைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தன.

சதை மற்றும் இரத்தத்துடன் கூடிய சேறாக மாறிய பூமி, அந்தப் பயங்கரமான போரில் கொல்லப்பட்ட மனிதர்கள், குதிரைகள், யானைகளின் சடலங்களால் கடக்க முடியாததாகியது. மனித இரத்தத்தால் நனைந்த பூமியின் புழுதி மறைந்து போனது {தணிந்தது}. ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சுற்றிலும் இருந்த திசைப்புள்ளிகள் முற்றாகத் தெளிவடைந்தது. சுற்றிலும் தலையற்ற உடல்கள் எழுந்து நின்று, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பூமியின் அழிவைக் குறிப்பிட்டன. பயங்கரமானதும், அச்சம் நிறைந்ததுமான அந்தப் போரில், தேர்வீரர்கள் அனைத்துத் திசைகளிலும் சிதறி ஓடுவது தெரிந்தது.

அப்போது, போரில் ஒப்பற்றவர்களும், சிங்கத்தைப் போன்ற ஆற்றலைக் கொண்டவர்களுமான பீஷ்மர், துரோணர், சிந்துக்களின் ஆட்சியாளன் ஜெயத்ரதன், புருமித்ரன், விகர்ணன், சுபலனின் மகன் சகுனி, சல்லியன் ஆகியோர் போரில் நிலைத்தபடி பாண்டவர்களின் படையணிகளை உடைத்தனர். அதே போல, (தங்கள் தரப்பு) மன்னர்கள் அனைவராலும் ஆதரிக்கப்பட்ட பீமசேனன், ராட்சசன் கடோத்கஜன், சாத்யகி, சேகிதானன், திரௌபதின் மகன்கள் ஆகியோர் தானவர்களைக் கலங்கடிக்கும் தேவர்கள் போல, உமது துருப்புகளையும், உமது மகன்களையும் கலங்கடிக்கத் தொடங்கினர்.

க்ஷத்திரியர்களில் காளையரான அவர்கள் அந்தப் போரில் ஒருவரை ஒருவர் தாக்கிக் காண்பதற்குப் பயங்கரர்களாக மாறி, இரத்தத்தால் நனைந்து புரச மரங்களைப் போலப் பிரகாசித்தனர். இருபடைகளையும் சேர்ந்த வீரர்களில் முதன்மையானோர், தங்கள் எதிரிகளை வீழ்த்தியபடி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஆகாயத்தில் உள்ள ஒளிக்கோள்களைப் போலத் தோன்றினர்.

ஆயிரம் தேர்களால் ஆதரிக்கப்பட்ட உமது மகன் துரியோதனன், பாண்டவர்களுடனும், ராட்சசனுடனும் {கடோத்கசனுடனும்} போரிட விரைந்து வந்தான். பெரும் அளவிலான போராளிகளுடன் இருந்த பாண்டவர்கள் அனைவரும், எதிரிகளைத் தண்டிப்பவர்களான பீஷ்மர் மற்றும் துரோணர் ஆகிய வீரர்களை எதிர்த்துப் போரிட விரைந்தார்கள். சினம் தூண்டப்பட்ட கிரீடம் தரித்தவனும் (அர்ஜுனனும்) மன்னர்களில் முதன்மையானோரை எதிர்த்து விரைந்தான். அர்ஜுனனின் மகன் (அபிமன்யு) மற்றும் சாத்யகி ஆகியோர், சுபலனின் மகனுடைய {சகுனியின்} படைகளை எதிர்த்து முன்னேறிச் சென்றனர். அப்போது, மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் வண்ணம், ஒருவரை ஒருவர் வீழ்த்த விரும்பிய உமது துருப்புகளுக்கும் எதிரிகளின் துருப்புகளுக்கும் இடையே அச்சம் நிறைந்த போர் மீண்டும் தொடங்கியது" {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English