Wednesday, November 25, 2015

கர்ணனை நினைத்த துரியோதனன்! - பீஷ்ம பர்வம் பகுதி - 058

Duryodhana thought of Karna! | Bhishma-Parva-Section-058 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 16)

பதிவின் சுருக்கம் : அர்ஜுனனுக்கும் மன்னர்கள் பலருக்கும் இடையில் ஏற்பட்ட போர்; சாத்யகி மற்றும் அபிமன்யுவைச் சூழ்ந்து கொண்ட சகுனி; சாத்யகியின் தேரைக் காந்தார வீரர்கள் தூள் தூளாக்குவது; யுதிஷ்டிரனின் படைப்பிரிவைத் தாக்கிய துரோணரும், பீஷ்மரும்; துரியோதனனின் மார்பைத் துளைத்து, மயங்கச் செய்து களத்தை விட்டு ஓடச் செய்த பீமன்; சிதறி ஓடிய துரியோதனனின் படைப்பிரிவு; பீஷ்மர் மற்றும் துரோணரின் படைப்பிரிவுகளைச் சிதறி ஓடச் செய்த திருஷ்டத்யும்னனும், யுதிஷ்டிரனும்; கௌரவப் படையைச் சிதறி ஓடச் செய்த அர்ஜுனன்; சிதறி ஓடும் கௌரவப் படையைத் தடுத்த துரியோதனன்; பீஷ்மரைக் கண்டித்த துரியோதனன்; பீஷ்மர் ஏற்ற உறுதி...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "போரிடும் பல்குனனை {அர்ஜுனனைக்} கண்ட அந்த மன்னர்கள் அனைவரும் கோபத்தால் தூண்டப்பட்டு, பல்லாயிரம் தேர்களுடன் அவனை {அர்ஜுனனைப்} அனைத்து புறங்களிலும் சூழ்ந்து கொண்டனர். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, இப்படிப் பெருமளவிலான தேர்ப்படைகளுடன் அவனை {அர்ஜுனனைச்} சூழ்ந்து கொண்டு, அனைத்துப் புறங்களில் இருந்தும் பல்லாயிரம் கணைகளால் அவனை மறைத்தனர். கோபத்தால் தூண்டப்பட்ட அவர்கள் {கௌரவத் தரப்பின் மன்னர்கள்}, கூரிய முனை கொண்ட பிரகாசமான வேல்கள், கதாயுதங்கள், பரிகங்கள் {முள் பதித்த தண்டங்கள்}, தோமரங்கள் போர்க்கோடரிகள், முத்கரங்கள் {சம்மட்டி போன்றவை} மற்றும் உலக்கைகள் {கனத்த தடிகள்} ஆகிய ஆயுதங்களைப் பல்குனனின் {அர்ஜுனனின்} தேர்மீது வீசினார்கள்.


வெட்டுக்கிளிகளின் கூட்டத்தைப் போல, அனைத்துப் புறங்களிலும் (தன்னை நோக்கி) வரும் ஆயுதங்களின் மழையைப் பிருதையின் மகன் {குந்தியின் மகன் அர்ஜுனன்}, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தன் கணைகளைக் கொண்டு தடுத்தான். அச்சந்தர்ப்பத்தில் மனித சக்திக்கு அப்பாற்பட்ட கர வேகத்தை வெளிப்படுத்திய பீபத்சுவை {அர்ஜுனனைக்} கண்ட தேவர்கள், தானவர்கள், கந்தர்வர்கள், பிசாசர்கள், உரகர்கள், ராட்சசர்கள் ஆகியோர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} "அற்புதம், அற்புதம்" என்று சொல்லி அவனைப் {அர்ஜுனனைப்} புகழ்ந்தனர்.

பெரும்படையுடன் இருந்த சுபலன் மகனின் {சகுனியின்} காந்தார வீரர்கள் [1], சாத்யகியையும், அபிமன்யுவையும் சூழ்ந்து கொண்டார்கள். சுபலனின் மகனால் {சகுனியால்} தலைமை தாங்கப்பட்டவர்களும், துணிவுமிக்கவர்களும், கோபமடைந்தவர்களுமான அந்த வீரர்கள், பல்வேறு விதமான ஆயுதங்களுடன் இருந்த அந்த விருஷ்ணி வீரனின் {சாத்யகியின்} அற்புதத் தேரைத் துண்டுகளாக வெட்டினார்கள். அந்தக் கடும் மோதலில் தனது தேரைக் கைவிட்ட சாத்யகி, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, அபிமன்யுவின் தேரில் விரைந்து ஏறிக் கொண்டான். ஒரே தேரில் இருந்த அவ்விருவரும் சுபலன் மகனின் {சகுனியின்} படையைக் கூரிய முனை கொண்ட தங்கள் நேரான கணைகளால் விரைந்து கொல்லத் தொடங்கினர்.

[1] கங்குலியில் கந்தர்வ வீரர்கள் என்று இங்கே இருக்கிறது. அது அச்சுப்பிழையாகவோ, ஸ்கேன் பிழையாகவோ இருக்க வேண்டும். காந்தார வீரர்கள் என்பதே இங்கு சரியாக இருக்கும்.

போரில் நிலைத்துப் போராடிக் கொண்டிருந்த துரோணரும், பீஷ்மரும், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் படைப்பிரிவைக் கங்கப் பறவையின் {கழுகின்} இறகுகளைக் கொண்ட கூரிய கணைகளால் படுகொலை செய்யத் தொடங்கினர். அப்போது தர்மனின் மகனும் {யுதிஷ்டிரனும்}, மாத்ரியின் மூலம் பிறந்தவர்களான பாண்டுவின் மற்ற இரு மகன்களும் {நகுலனும், சகாதேவனும்}, மொத்தப்படையும் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே, துரோணரின் படையைக் கலங்கடிக்கத் தொடங்கினர். அங்கே நடைபெற்ற போர், பழங்காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே நடைபெற்ற பயங்கரப் போரைப் போலக் கடுமையானதாகவும், அச்சம் நிறைந்ததாகவும், மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்துவதாகவும் இருந்தது.

பீமசேனன் மற்றும் கடோத்கசன் ஆகிய இருவரும் பெரும் காரியங்களைச் செய்தனர். அப்போது அங்கே வந்த துரியோதனன் அவர்கள் இருவரையும் தடுத்தான். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, ஹிடிம்பையின் மகன் {கடோத்கசன்} அதுவரை தான் போரிட்டதைவிட மிக அற்புதமாகத் தன் தந்தையை விஞ்சும் அளவுக்குப் போரிட்டான்.

கோபத்தால் தூண்டப்பட்டும் புன்னகைத்தவாறே இருந்த பாண்டுவின் மகன் பீமசேனன், பழிவாங்கும் தன்மையுடன் துரியோதனனின் மார்பை ஒரு கணையால் துளைத்தான். அந்தத் தாக்குதலின் பலத்தால் பீடிக்கப்பட்ட மன்னன் துரியோதனன் தனது தேர்த்தட்டில் அமர்ந்தவாறே மயக்கமடைந்தான். உணர்விழந்தவனை {துரியோதனனைக்} கண்ட அவனது தேரோட்டி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} விரைவாகக் களத்தைவிட்டு வெளியே {தேரில்} அவனைச் சுமந்து சென்றான். அப்போது துரியோதனனை ஆதரித்த துருப்புகள் சிதறி ஓடினர். இப்படி அனைத்துப் புறங்களிலும் ஓடிப்போகும் குரு படையைக் கூர்முனைக் கணைகளால் தாக்கியபடியே பீமன் துரத்திச் சென்றான்.

ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, போர்வீரர்களில் முதன்மையான பிருஷதன் மகனும் (திருஷ்டத்யும்னனும்), பாண்டுவின் மகனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரனும், எதிரிப்படைகளைக் கொல்லும் கூரிய கணைகளால், துரோணர், கங்கையின் மைந்தன் {பீஷ்மர்} ஆகிய இருவரின் படையை அவர்களது கண்ணெதிரிலேயே கொன்றனர். இதனால் சிதறி ஓடிய உமது மகனின் படையைத் தடுக்க இயலாதவர்களாகவே, வலிமைமிக்கத் தேர்வீரர்களான பீஷ்மரும், துரோணரும் இருந்தனர். பீஷ்மரும், உயர் ஆன்மத் துரோணரும் தடுக்க முயற்சித்தும், அந்தப் படைத் துரோணர் மற்றும் பீஷ்மர் ஆகியோரின் கண் முன்பே சிதறி ஓடினர்.

ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, ஆயிரக்கணக்கான தேர்வீரர்கள் அனைத்துப் புறங்களிலும் ஓடிய போது, சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, சினி {சிநி} குலத்துக் காளை {சாத்யகி} ஆகிய இருவரும் ஒரே தேரில் இருந்து கொண்டு, போரிட்டுக் கொண்டிருந்த சுபலன் மகனின் {சகுனியின்} படையைக் கொல்லத் தொடங்கினர். சிநியின் பேரனும் {சாத்யகியும்}, குரு குலத்துக் காளையும் {அபிமன்யுவும்}, தேய்பிறையின் கடைசித் திதியைக் {புதுநிலவைக் [அமாவாசைக்]} கடந்து ஆகாயத்தில் சேர்ந்திருக்கும் சூரியனையும், சந்திரனையும் போலப் பிரகாசித்தனர்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கோபத்தால் தூண்டப்பட்ட அர்ஜுனனும், நீரோடைகளில் மழை பொழியும் மேகங்களைப் போல உமது படையின் மீது அம்புகளைப் பொழிந்தான். பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகளால் போரில் இப்படிக் கொல்லப்பட்ட அந்தக் கௌரவப்படை துயரத்திலும் அச்சத்திலும் நடுங்கி சிதறி ஓடினர். சிதறி ஓடும் படையைக் கண்டவர்களும், வலிமைமிக்கவர்களுமான பீஷ்மர் மற்றும் துரோணர் ஆகிய இருவரும், கோபத்தால் தூண்டப்பட்டும், துரியோதனனின் நன்மையை விரும்பியும் அதை {அந்தப் படை ஓடிப்போவதைத்} தடுக்க முனைந்தனர்.

பிறகு, மன்னன் துரியோதனனே நேரடியாகப் போராளிகளைத் தேற்றி [2], அனைத்துப் புறங்களிலும் சிதறி ஓடும் அந்தப் படையைத் தடுத்தான். அந்த வலிமைமிக்க க்ஷத்திரிய வீரர்கள் அனைவரும் உமது மகனை {துரியோதனனை} எங்குக் கண்டார்களோ அங்கேயே நின்றனர். அப்படி நின்றவர்களைக் கண்டு பொதுவான வேறு பல வீரர்களும் வெட்கத்தாலும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கள் வீரத்தை ஒருவருக்கு ஒருவர் வெளிக்காட்ட விரும்பியும் நின்றனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அப்படி மீண்டும் திரட்டப்பட்ட அந்தப் படையின் வேகம், நிலவு உதிக்கும் நேரத்தில் ஆர்ப்பரிக்கும் கடலைப் போல வேகமுடையதாயிற்று.

[2] பீமனின் கணையால் தாக்கப்பட்டு மயக்கமடைந்து, களத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட துரியோதனன், களத்திற்கு மீண்டும் வந்து சிதறி ஓடும் தனது படையை மீண்டும் திரட்டுகிறான்.

போரிடுவதற்காக மீண்டும் திரண்ட தனது படையைக் கண்ட மன்னன் துரியோதனன், விரைவாகச் சந்தனுவின் மகன் பீஷ்மரிடம் சென்று, "ஓ! பாட்டா {பீஷ்மரே}, நான் சொல்வதைக் கேளும். ஓ! பாரதரே {பீஷ்மரே}, நீரும், ஆயுதமறிந்தோரில் முதன்மையான துரோணரும், அவரது மகனும் {அஸ்வத்தாமனும்}, நமது நண்பர்கள் பிறரும் உயிரோடிருக்கையிலேயே, ஓ! குருவின் மகனே {பீஷ்மரே}, மேலும், வலிமைமிக்க வில்லாளியான கிருபர் உயிரோடிருக்கையிலேயே இப்படி எனது படை சிதறி ஓடுவதை நம்பத்தகுந்ததாக நான் கருத இல்லை.

போரில் பாண்டவர்களை, உமக்கோ, துரோணருக்கோ, துரோணரின் மகனுக்கோ {அஸ்வத்தாமனுக்கோ}, கிருபருக்கோ எவ்வழியிலும் இணையாக நான் கருதவில்லை. ஓ! வீரரே {பீஷ்மரே}, எனது படை கொல்லப்படுவதை மன்னிக்கும் நீர், ஓ! பாட்டா {பீஷ்மரே}, பாண்டுவின் மகன்களுக்குச் சாதகமாக இருக்கிறீர் என்பதில் ஐயமில்லை. ஓ! மன்னா {பீஷ்மரே}, போர் நடைபெறுவதற்கு முன்னரே, பாண்டவர்களுடன் போரிட மாட்டீர் என்பதை என்னிடம் நீர் சொல்லியிருக்க வேண்டும். உம்மிடமிருந்தும், துரோணரிடமிருந்தும் அத்தகு வார்த்தைகளை நான் கேட்டிருந்தால், ஓ! பாரதரே {பீஷ்மரே}, என்ன வழியைப் பின்பற்ற வேண்டும் எனக் கர்ணனுடன் கூடி நான் சிந்தித்திருப்பேன். உங்கள் இருவரினாலும் போரில் கைவிடத்தகாதவன் நான் எனில், ஓ! மனிதர்களில் காளையரே {பீஷ்மரே, துரோணரே}, உங்கள் ஆற்றல்களுக்குத் தக்கவாறு போரிடுவீராக" என்றான் {துரியோதனன்}.

இந்த வார்த்தைகளைக் கேட்டு மீண்டும் மீண்டும் சிரித்த பீஷ்மர், கோபத்தால் தனது கண்களைச் சுழற்றிக் கொண்டு, உமது மகனிடம் {துரியோதனனிடம்}, "ஓ! மன்னா {துரியோதனா}, உனக்கு ஏற்புடையதும், நன்மை நிறைந்ததுமான வார்த்தைகளை நான் பல முறை உனக்குச் சொன்னேன். வாசவனைத் {இந்திரனைத்} தங்களுடன் கொண்ட தேவர்களாலும் கூடப் பாண்டவர்களைப் போரில் வெல்ல இயலாது. எனினும், கிழவனான என்னால் என்ன செய்ய முடியுமோ, ஓ! மன்னர்களில் சிறந்தவனே {துரியோதனா}, அதை என் சக்திக்குத் தக்கபடி இந்தப் போரில் நான் செய்வேன். உனது சொந்தங்களுடன் கூடி அதை இப்போது நீ சாட்சியாகக் காண்பாயாக. தனியனான நான், அனைவரின் பார்வையிலும் இன்று, தங்கள் துருப்புகளின் தலைமையில் உள்ள பாண்டுமகன்களை அவர்களது சொந்தங்களுடன் சேர்த்துத் தடுக்கப் போகிறேன்" என்றார் {பீஷ்மர்}.

பீஷ்மரால் இப்படிச் சொல்லப்பட்டதும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மகிழ்ச்சியால் நிறைந்த உமது மகன் {துரியோதனன்}, சங்குகளை முழக்கவும், பேரிகைகளை அடிக்கவும் ஏற்பாடு செய்தான். உரத்த முழக்கங்களைக் கேட்ட பாண்டவர்களும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கள் சங்குகளை முழக்கி, பேரிகைகளையும், முரசுகளையும் அடிக்கச் செய்தனர்" {என்றான் சஞ்சயன்}.

ஆங்கிலத்தில் | In English