Sunday, December 27, 2015

பீஷ்மரை நோக்கி விரைந்த அர்ஜுனன்! - பீஷ்ம பர்வம் பகுதி - 071

Arjuna rushed against Bhishma! | Bhishma-Parva-Section-071 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 29)

பதிவின் சுருக்கம் : பீஷ்மரை எதிர்த்த அர்ஜுனன்; அர்ஜுனனைக் கண்ட கௌரவப்படை அஞ்சியது; சகுனியைச் சூழ்ந்த நின்ற கலிங்கனும், ஜெயத்ரதனும்; ஒருவரோடு ஒருவர் மோதிய வீரர்களின் பெயர்கள்; கள நிலவர வர்ணிப்பு; போர்க்களத்தில் குதிரைகள் மற்றும் யானைகளுக்கு நேர்ந்த கதி...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "பீஷ்மருடன் போரில் ஈடுபடும் தனது சகோதரர்களையும், மற்றும் பிற மன்னர்களையும் கண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, தன் ஆயுதங்களை உயர்த்தியபடி கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} எதிர்த்து விரைந்தான். பாஞ்சஜன்யத்தின் {சங்கின்} முழக்கத்தையும், காண்டீவ வில்லின் நாணொலியையும் கேட்டும், பிருதையின் {குந்தியின்} மகனுடைய {அர்ஜுனனுடைய} கொடிமரத்தைக் கண்டும் எங்கள் இதயங்களில் பெரும் அச்சம் புகுந்தது.


ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நாங்கள் கண்ட காண்டீவதாரியின் {அர்ஜுனனின்} கொடிமரம், சிங்க வால் பொறியைத் தாங்கி வானத்தில் சுடர்விடும் மலையைப் போலத் தெரிந்தது. அழகும், தெய்வீகக் கைவண்ணமும், பல்வேறு நிறங்களும் கொண்ட அது {கொடி}, மரங்களால் தடை செய்யப்படாதவாறு உதித்தெழுந்த எரிக்கோளைப் போலத் தெரிந்தது. அந்தப் போரில், கைப்பிடியின் பின்புறம் பசும்பொன்னால் அலங்கரிக்கப்பட்டதும், ஆகாயத்தின் மேகத்திரள்களுக்கு மத்தியில் மின்னலின் கீற்றைப் போல அழகாகத் தெரிந்ததுமான காண்டீவத்தைப் போர்வீரர்கள் கண்டனர்.

உமது படையின் போராளிகளைக் கொல்லும்போது, அர்ஜுனன் செய்த முழக்கங்கள் இந்திரனின் முழக்கங்களுக்கு நிகரானவையாக இருந்தன. அவனது {அர்ஜுனனின்} உள்ளங்கைகளின் தட்டல்களும் அச்சத்தை ஊட்டும் வகையில் பேரொலியாக இருந்தன. பொங்கியெழும் புயலால் உதவப்பட்ட மின்னல் பொதிந்த மேகத்திரளின் முழக்கத்தைப் போலத் தனது கணை மழையைத் இடைவிடாது பொழிந்த அர்ஜுனன், திசைக்காட்டியின் பத்து புள்ளிகளையும் {பத்து திசைகளையும்} மறைத்தான்.

பயங்கர ஆயுதங்களைக் கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்} பிறகு, கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} நோக்கி வேகமாக விரைந்தான். அவனது ஆயுதங்களின் விளைவால் நான்கு புலன்களையும் இழந்த எங்களால் கிழக்கையும், மேற்கையும் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை. பிறகு, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, விலங்குகள் சோர்வடைந்து, குதிரைகள் கொல்லப்பட்டு, இதயங்களும் சோர்வடைந்த உமது போர்வீரர்கள் முழுமையாகக் குழம்பிப் போய் [1], ஒருவரோடு ஒருவர் நெருங்கி, உமது மகன்கள் அனைவருடன் பீஷ்மரின் பாதுகாப்பை நாடினர். அந்தப் போரில் சந்தனுவின் மகனான பீஷ்மரே அவர்களைப் பாதுகாப்பவரானார்.

[1] திசைகளை அறியாமல் குழம்பிப் போயினர் என இங்கே விளக்குகிறார் கங்குலி.

அச்சத்தால் பீடிக்கப்பட்ட தேர்வீரர்கள் தங்கள் தேர்களில் இருந்து கீழே குதித்தும், குதிரைப்படை வீரர்கள் தங்கள் குதிரைகளின் முதுகில் இருந்து கீழே குதித்தும், காலாட்படை வீரர்கள் தாங்கள் நின்ற இடத்திலேயும் என அனைவரும் பூமியில் விழ ஆரம்பித்தனர். இடியின் முழக்கத்தை ஒத்திருந்த காண்டீவத்தின் நாணொலியைக் கேட்ட உமது வீரர்கள் அனைவரும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அச்சத்தால் பீடிக்கப்பட்டுப் உருகிப் போவது {பதுங்குவது} போலத் தெரிந்தது.

அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, காம்போஜ இனத்தின் வேகமான பெரும் குதிரைகளைக் கொண்டவனும், பெரும் கோபமானப் படையுடன் கூடிய பல்லாயிரக்கணக்கான கோபர்களால் சூழப்பட்டவனும், மத்ரர்கள், சௌவீரர்கள், காந்தாரர்கள், திரிகர்த்தர்கள், முக்கியத்துவம் வாய்ந்த கலிங்கர்கள் அனைவராலும் ஆதரிக்கப்பட்டவனுமான கலிங்கர்களின் மன்னனும் {சுருதாயுதனும்} [2], மன்னர்கள் அனைவருடன் கூடியவனும், துச்சாசனனைத் தலைமையாகக் கொண்ட பல்வேறு இனங்களின் பெரிய படையாலும், முக்கியமான குதிரைவீரர்கள் பதினாலாயிரம் {14000} பேரால் ஆதரிக்கப்பட்டவனுமான மன்னன் ஜெயத்ரதனும், உமது மகனால் {துரியோதனனால்} தூண்டப்பட்டு, (சகுனியை ஆதரிப்பதற்காக) அந்தச் சுபலனின் மகனை {சகுனியைச்} சூழ்ந்து கொண்டனர்.

[2] இம்மன்னன் சுருதாயுதன் என்று பீஷ்ம பர்வம் பகுதி 16ல் குறிப்பிடப்பட்டுள்ளான்

பிறகு, அந்தப் போரில், தனித்தனி தேர்களிலும், விலங்குகளிலும் போரிட்டவர்களான பாண்டவர்கள் [3] அனைவரும் ஒன்று சேர்ந்து, உமது துருப்புகளைப் படுகொலை செய்யத் தொடங்கினர். தேர்வீரர்கள், குதிரைவீரர்கள், காலாட்படை வீரர்கள் ஆகியோரால் மேகத் திரள் போல எழுப்பப்பட்ட புழுதி, அந்தப் போர்க்களத்தை மிகப் பயங்கரமானதாக்கியது.

[3] பம்பாய் பதிப்புகளில் இங்கே பாண்டவர்கள் என்பதற்குப் பதில் அர்ஜுனம் என்று இருப்பதாகக் கங்குலி குறிப்பிடுகிறார்.

யானைகள், குதிரைகள், தேர்கள் ஆகியவற்றுடன் கூடியதும், வேல்கள், நாராசங்கள், பல்லங்கள் ஆகியவற்றைத் தரித்தவர்களைக் கொண்டதுமான ஒரு பெரும்படையுடன் கூடிய பீஷ்மர், கிரீடம் தரித்தவனுடன் (கிரீடியான அர்ஜுனனுடன்} போரிட்டார் [4].

[4] வேறுபதிப்புகளில் இந்தப் பத்தி முற்றிலும் வேறுமாதிரியாக இருக்கிறது. அது பின்வருமாறு: ஓ! பாரதரே, ஒன்று சேர்ந்திருப்பவர்களான உமது தரப்பினர் அனைவரும் தனித்தனியாகப் பகுக்கப்பட்டிருக்கின்ற தேர்களோடும், வாகனங்களோடும் அர்ஜுனனை அடித்தார்கள்.

அவந்தியின் மன்னன், காசியின் ஆட்சியாளனுடனும், சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} பீமசேனனுடனும் போரிட்டனர்.

தன் மகன்கள் மற்றும் ஆலோசகர்கள் {அமைச்சர்களுடன்} கூடிய மன்னன் யுதிஷ்டிரன், மத்ரத்தின் புகழ்மிக்கத் தலைவன் சல்லியனுடன் போரிட்டான்.

விகர்ணன் சகாதேவனுடனும், சித்திரசேனன் சிகண்டியுடனும் போரிட்டனர்.

மத்ஸ்யர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரியோதனனுடனும் சகுனியுடனும் போரிட்டனர்; துருபதன், சேகிதானன் மற்றும் வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகி ஆகியோர் தன் மகன் {அஸ்வத்தாமன்} துணையுடன் இருந்த உயர் ஆன்மத் துரோணருடன் போரிட்டனர்.

கிருபர், கிருதவர்மன் ஆகிய இருவரும் திருஷ்டத்யும்னனை எதிர்த்து விரைந்தார்கள்.

போர்க்களம் முழுவதும் இப்படியே, குதிரைகள், யானைகள், தேர்கள் ஆகியவற்றின் படைகள் விரைந்து ஒன்றோடொன்று போரிட்டுக் கொண்டன.

வானத்தில் மேகங்கள் ஏதும் இல்லையெனினும், மின்னலின் கீற்றுகள் தெரிந்தன. திசைக்காட்டியின் அனைத்துப் புள்ளிகளும் {திசைகள் அனைத்தும்} புழுதியால் மூடப்பட்டன. மேலும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இடியொலியுடன் கூடி விழும் கடுமையான விண்கற்களும் காணப்பட்டன. கடுங்காற்று வீசியது, மேலிருந்து புழுதி மழை பொழிந்தது. துருப்புகளால் எழுப்பப்பட்ட புழுதியால் மூடப்பட்ட சூரியன் ஆகாயத்திலிருந்து மறைந்தான். புழுதியால் மறைக்கப்பட்டவர்களும், ஆயுதங்களுடன் போரிட்டவர்களுமான போர்வீரர்கள் அனைவரும் தங்கள் புலன்களை இழந்தனர் {மதிமயக்கம் அடைந்தனர்}.

கவசங்கள் அனைத்தையும் ஊடுருவிச் செல்பவையும், வீரர்களின் கரங்களில் இருந்து வீசப்பட்டவையுமான ஆயுதங்கள் உண்டாக்கிய ஒலி அங்கே மிகப்பெரிய ஆரவாரத்தை ஏற்படுத்தியது. மேலும், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, நட்சத்திரங்களைப் போன்ற பிரகாசமிக்கவையும், சிறந்த கரங்களில் இருந்து வீசப்பட்டவையுமான ஆயுதங்கள், வானத்திற்கு ஒளியூட்டின. ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, தங்கத்தால் புடைக்கப்பட்ட காளைத்தோல்களிலானவையும், பல்வேறு நிறங்களிலானவையுமான கேடயங்கள், களமெங்கும் சிதறிக் கிடந்தன. சூரியப் பிரகாசம் கொண்ட வாள்கள், பட்டாக்கத்திகள் ஆகியவற்றால் வெண்டுண்ட தலைகளும், அங்கங்களும் எல்லாப்புறங்களிலும் விழுந்து கிடந்தன.

சக்கரங்கள், அச்சுக்கட்டைகள், நீடங்கள் [5] ஆகியவை ஒடிக்கப்பட்டும், நெடிய கொடிமரங்கள் வீழ்த்தப்பட்டும், குதிரைகள் கொல்லப்பட்டும், பெரிய தேர்வீரர்கள் தரையில் வீழ்ந்தனர். பல தேர்வீரர்கள் கொல்லப்பட்டவுடன், ஆயுதங்களால் சிதைக்கப்பட்ட அவர்களது குதிரைகள், (தாங்கள் பூட்டப்பட்ட) தேர்களை இழுத்துக் கொண்டே ஓடி தரையில் விழுந்தன. களத்தின் பல இடங்களில், கணைகளால் பீடிக்கப்பட்ட அற்புதக் குதிரைகள், தங்கள் அங்கங்கள் சிதைக்கப்பட்டு, வார்களுடன் சேர்த்துத் தங்கள் நுகத்தடிகளைத் தங்களுக்குப் பின்னே இழுத்தோடின. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தேரோட்டிகள் மற்றும் குதிரைகளுடன் கூடிய பல தேர்வீரர்கள், பெரும் பலம் பொருந்திய தனி யானைகளால் நசுக்கப்பட்டிருப்பதும் அங்கே காணப்பட்டது. அந்தப் போரில், பெரும் படைகளுக்கு மத்தியில் இருந்த பல யானைகள், தங்களை ஒத்த யானைகளின் மதநீரின் மணத்தை நுகர்ந்தபடி, மீண்டும் மீண்டும் காற்றை விட்டுவிட்டு நுகரத் தொடங்கின.

[5]. நீடம் என்பது, தேர்வீரன் ஒருவன் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காகத் தேரில் ஏற்படுத்தப்பட்ட இடமாகும். இங்கே இதையே Boxes என்ற சொல்லால் கங்குலி குறிப்பிடுகிறார்.

பல்லங்களால் {அகன்ற தலை கொண்ட கணைகளால்} உயிர் பறிக்கப்பட்டு, தங்கள் முதுகில் மரக்கூடுகள் மற்றும் பாகன்களோடு கீழே விழுந்து கொல்லப்பட்ட யானைகள் களம் முழுவதும் பரவிக் கிடந்தன. பெரும் படைகளுக்கு மத்தியில் இருந்த பல யானைகள், பாகன்களால் ஏவப்பட்டவையும், முதுகில் கொடிமரங்கள், போர்வீரர்கள் ஆகிவற்றைக் கொண்டவையுமான தங்களை ஒத்த பெரும் யானைகளால் நசுக்கப்பட்டுக் களத்தில் கீழே விழுந்தன. பெரும் யானைகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (ஐராவதம் என்றழைக்கப்படும்) யானைகளின் இளவரசனின் துதிக்கைகளை ஒத்த தங்கள் துதிக்கைகளால், பல தேர்களின் ஏர்க்கால்களைப் முறிப்பது அங்கே காணப்பட்டது.

அம்மோதலில், ஜாலர்களான பல தேர்வீரர்கள், யானைகளால் தங்கள் தேர்கள் சிதறடிக்கப்பட்டு, தங்கள் தலை மயிரில் பிடித்து இழுக்கப்பட்டு, மரத்தின் கிளைகள் போல முறித்து வடிவமற்ற திரள்களாக {பொடிகளாக} நசுக்கப்பட்டார்கள். இன்னும் பிற பெரும் யானைகளோ, பிற தேர்களோடு பிணைக்கப்பட்ட தேர்களை இழுத்துப் போட்டு, உரக்கப் பிளிறிக் கொண்டே அனைத்துப் புறங்களிலும் ஓடின. அப்படி அந்தத் தேர்களை இழுத்துச் சென்ற யானைகள், தடாகங்களில் வளரும் தாமரைத் தண்டுகளை இழுக்கும் தங்கள் வகையைச் சேர்ந்த பிற யானைகளைப் போலவே தெரிந்தன.

இப்படியே குதிரைப் படை வீரர்களும், காலாட்படை வீரர்களும், பெரும் தேர்வீரர்களும், கொடிமரங்களும் அந்தப் போர்க்களமெங்கும் பரவிக் கிடந்தன" {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English