Friday, January 01, 2016

சாத்யகியை விரட்டிய பீஷ்மர்! - பீஷ்ம பர்வம் பகுதி - 072

Bhishma drove Satyaki away! | Bhishma-Parva-Section-072 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 30)

பதிவின் சுருக்கம் : போரில் ஈடுபட்ட கௌரவர்கள் மற்றும் பாண்டவத்தரப்புகளுக்கு இடையில் யார் எவருடன் மோதியது என்ற வர்ணனை; வீரர்களுக்கு மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்திய கடுமையான போர்; பீமனின் வில்லை இரண்டாக வெட்டிய பீஷ்ம்ர்; இடையில் குறுக்கிட்ட சாத்யகி; சாத்யகியைப் பின்வாங்கச் செய்த பீஷ்மர்; துரோணருடன் போரிட்டுக் கொண்டிருந்த திருஷ்டத்யும்னனின் படை பீஷ்மரை எதிர்த்து விரைந்தது...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "மத்ஸ்யர்களின் மன்னனான விராடனுடன் கூடிய சிகண்டி, ஒப்பற்றவரும், வலிமைமிக்க வில்லாளியுமான பீஷ்மரை விரைந்து அணுகினான்.

தனஞ்சயன் {அர்ஜுனன்}, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, துரோணர், கிருபர் மற்றும் விகர்ணன் ஆகியோருடனும், வலிமைமிக்க வில்லாளிகளும், பெரும் பலம்வாய்ந்தவர்களும், போரில் துணிச்சல்மிக்கவர்களுமான பிற மன்னர்கள் பலருடனும், நண்பர்கள், சொந்தங்கள் மற்றும் மேற்கு, தெற்கு திசைகளைச் சேர்ந்த பல மன்னர்களால் ஆதரிக்கப்பட்டவனும், வலிமைமிக்க வில்லாளியுமான சிந்துக்களின் ஆட்சியாளனுடனும் {ஜெயத்ரதனுடனும்} மோதினான்.


வலிமைமிக்க வில்லாளியும், பழிவாங்கும் வெறி கொண்டவனுமான உமது மகன் துரியோதனனையும், மேலும் துஸ்ஸகனையும் எதிர்த்து பீமசேனன் முன்னேறினான்.

பெரும் வில்லாளிகளும், ஒப்பற்ற வீரர்களும், தந்தையும் மகனுமாகிய சகுனி மற்றும் வலிமைமிக்கத் தேர்வீரனான உலூகன் ஆகியோரை எதிர்த்து சகாதேவன் முன்னேறினான்.

உமது மகனால் {துரியோதனனால்} வஞ்சமாக நடத்தப்பட்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான யுதிஷ்டிரன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} அந்தப் போரில் (கௌரவர்களின்) யானைப் படைப்பிரிவை எதிர்த்து முன்னேறினான்.

எதிரியைக் கண்ணீர் சிந்தவைக்க இயன்றவனும், பாண்டு மற்றும் மாத்ரியின் மகனுமான வீர நகுலன், திரிகர்த்தர்களின் அற்புதத் தேர்வீரர்களுடன் போரில் ஈடுபட்டான்.

ஒப்பற்ற வீரர்களான சாத்யகி, சேகிதானன் மற்றும் சுபத்திரையின் வலிமைமிக்க மகன் {அபிமன்யு} ஆகியோர் சல்லியனையும், கேகயர்களையும் எதிர்த்து முன்னேறினார்கள்.

போரில் வெல்லப்பட முடியாதவர்களான திருஷ்டகேது மற்றும் ராட்சசன் கடோத்கசன் ஆகியோர் உமது மகன்களின் தேர்ப் படைப்பிரிவுகளை எதிர்த்து முன்னேறினார்கள்.

அளவிலா ஆன்மா கொண்ட (பாண்டவப் படையின்) படைத்தலைவனும், வலிமைமிக்க வில்லாளியுமான திருஷ்டத்யும்னன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கடும் சாதனைகளை அடைந்தவரான துரோணருடன் போரில் ஈடுபட்டான்.

இப்படியே உமது படை மற்றும் பாண்டவப் படை ஆகியவற்றின் வலிமைமிக்க வில்லாளிகளான அந்த வீரர்கள் போரில் ஈடுபட்டு, ஒருவரை ஒருவர் தாக்கத் தொடங்கினர்.

சூரியன் நடுக்கோட்டை {உச்சிவானத்தை - Meridian-ஐ} அடைந்து, அவனது {சூரியனின்} கதிர்களால் வானம் ஒளியூட்டப்பட்ட போது, கௌரவர்களும், பாண்டவர்களும் ஒருவரை ஒருவர் கொல்லத் தொடங்கினர். அப்போது, மிதக்கும் கொடிகளை உச்சியில் கொண்ட கொடிமரங்கள் உடையவையும், தங்கத்தால் பல வண்ணமாக்கப்பட்டவையும், புலித்தோல்களால் மூடப்பட்டவையுமான தேர்கள் அந்தப் போர்க்களத்தில் நகர்ந்தது அழகாகத் தெரிந்தது. ஒருவரை ஒருவர் வீழ்த்த விரும்பி போரில் ஈடுபட்ட வீரர்களின் முழக்கங்கள், சிங்க முழக்கங்களுக்கு இணையான பேரொலியானது. துணிச்சல் மிக்கச் சிருஞ்சயர்களுக்கும், குருக்களுக்கும் இடையில் நடைபெற்றதும், நாங்கள் கண்டதுமான அந்த மோதல் மிகக் கடுமையானதாகவும், பெரும் அற்புதம் நிறைந்ததாகவும் இருந்தது.

சுற்றிலும் தொடுக்கப்பட்ட கணைகளின் விளைவால், ஓ! மன்னா, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, திசைக்காட்டியின் முக்கியமான மற்றும் துணைப் புள்ளிகளையும் {திசைகள் மற்றும் துணைத் திசைகளையும்}, சூரியனையும், ஆகாயத்தையும் வேறுபடுத்திக் காண முடியவில்லை. பளபளப்பான முனைகளையுடைய ஈட்டிகள், (எதிரி மீது) வீசப்படும் தோமரங்கள், நன்கு கடினமாக்கப்பட்ட பட்டாக் கத்திகள், கூன்வாள்கள், பலவண்ணங்களிலான கவசங்கள், (வீரர்கள் மேனியில் இருந்த) ஆபரணங்கள் ஆகியவை கருநெய்தல்களுக்கு {நீலத் தாமரைகளுக்கு} ஒப்பான ஒளியுடன் திசைகள், துணைத்திசைகள் மற்றும் ஆகாயத்தைப் பிரகாசிக்கச் செய்தன.

சந்திரன் மற்றும் சூரியனின் பிரகாசத்திற்கு ஒப்பான ஏகாதிபதிகளின் உடல் காந்தியின் விளைவால், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போர்க்களத்தின் பல இடங்கள் பிரகாசித்தன. துணிச்சல்மிக்கத் தேர்வீரர்களும், மனிதர்களில் புலிகளும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஆகாயத்தில் உள்ள கோள்களைப் போல, அந்தப் போர்க்களத்தில் பிரகாசித்தனர்.

தேர்வீரர்களில் முதன்மையானவரான பீஷ்மர் கோபம் தூண்டப்பட்டவராக, வலிமைமிக்கப் பீமசேனனை துருப்புகளின் பார்வையிலேயே தடுத்தார். தங்கச் சிறகுகள் கொண்டவையும், சாணைக்கல்லில் தீட்டப்பட்டவையும், எண்ணெய் பூசப்பட்டவையும். பீஷ்மரால் தொடுக்கப்பட்ட வேகமான கணைகள், அந்தப் போரில் பீமனைத் துளைத்தன. பெரும் பலம் கொண்டவனான பீமசேனன் அப்போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கோபம் நிறைந்த பாம்புக்கு ஒப்பானதும், கடுமையானதும், வேகமானதுமான ஈட்டி ஒன்றை பெரும் பலத்துடன் அவர் {பீஷ்மர்} மீது வீசினான் {பீமன்}.

ஆனால், தன்னை நோக்கி மூர்க்கமாக விரைந்ததும், தாங்கிக் கொள்ளக் கடினமானதும், தங்கத்தால் ஆன தண்டைக் கொண்டதுமான அந்த ஈட்டியை {சக்தி ஆயுதத்தைத்} தன் நேரான கணைகளால் அந்தப் போரில் பீஷ்மர் வெட்டினார். கூர்மையானதும், நன்கு கடினமாக்கப்பட்டதுமான மற்றொரு பல்லத்தினால், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பீமசேனனின் வில்லை இரண்டு துண்டுகளாக வெட்டினார். அப்போது அந்தப் போரில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீஷ்மரை நோக்கி விரைந்து வந்த சாத்யகி, காது வரை இழுக்கப்பட்ட வில்லின் நாணில் இருந்து கடும் வேகத்துடன் ஏவப்பட்டவையும், கூர்முனை கொண்டவையும், எண்ணற்றவையுமான கணைகளால் உமது தந்தையைத் {பீஷ்மரைத்} தாக்கினான்.

அப்போது, மிகக் கடுமையான கணையொன்றைக் குறிபார்த்த பீஷ்மர், தேரின் நீடத்தில் இருந்த விருஷ்ணி வீரனின் {சாத்யகியின்} தேரோட்டியை விழச்செய்தார். சாத்யகியுடைய தேரின் தேரோட்டி இப்படிக் கொல்லப்பட்டதும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவனது {சாத்யகியின்} குதிரைகள் வெளியே விரைந்தோடின. புயல் போன்ற, அல்லது மனம் போன்ற வேகத்துடன் கூடிய அவை {அந்தக் குதிரைகள்} களத்தில் மூர்க்கமாக ஓடின. அப்போது முழுப் படையாலும் வெளியிடப்பட்ட முழக்கங்கள் பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தின. "ஓ" என்றும், "ஐயோ" என்றும் ஆச்சரிய ஒலிகள், பாண்டவப் படையின் உயர் ஆன்ம வீரர்களிடம் இருந்து எழுந்தன. அந்தக் கதறல்கள், "ஓடு", "பிடி", "குதிரைகளைத் தடு", "விரைந்து செல்" என்றன. இந்த ஆரவாரம் யுயுதானனின் {சாத்யகியின்} தேரைப் பின்தொடர்ந்தே சென்றது.

அதே வேளையில், சந்தனுவின் மகனான பீஷ்மர், தானவர்களைக் கொல்லும் இந்திரனைப் போல, பாண்டவப் படைகளைக் கொல்ல ஆரம்பித்தார். இப்படிப் பீஷ்மரால் பாஞ்சாலர்களும், சோமகர்களும் கொல்லப்பட்டாலும், மெச்சத்தகுந்த தீர்மானத்தை ஏற்ற அவர்கள் {பாண்டவப் படையினர்} பீஷ்மரை நோக்கி விரைந்து சென்றார்கள். திருஷ்டத்யும்னனின் தலைமையாகக் கொண்டவர்களும், பாண்டவப் படையினருமான பிற வீரர்கள், உமது மகனின் {துரியோதனனின்} படையணிகளைக் கொல்ல விரும்பி, அந்தப் போரில் சந்தனுவின் மகனை {பீஷ்மரை} நோக்கி விரைந்தனர். மேலும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீஷ்மர் மற்றும் துரோணரின் தலைமையிலான உமது படையின் வீரர்களும், தங்கள் எதிரிகளை நோக்கி விரைந்து சென்றனர். அதன் பேரில் மற்றுமொரு போர் நடந்தது" {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English