Abhimanyu drove Lakshmana away! | Bhishma-Parva-Section-073 | Mahabharata In Tamil
(பீஷ்மவத பர்வம் – 31)
பதிவின் சுருக்கம் : விராடனுக்கும் பீஷ்மருக்கும் இடையில் நடந்த போர்; அஸ்வத்தாமனின் வில்லை அறுத்த அர்ஜுனன்; துரியோதனனுக்கும் பீமனுக்கும் இடையில் நடந்த போர்; சித்திரசேனன், புருமித்திரன், சத்தியவிரதன் ஆகியோரோடு போரிட்ட அபிமன்யு; அபிமன்யுவை எதிர்த்த லட்சுமணன்; லட்சுமணனின் குதிரைகளையும், தேரோட்டியையும் கொன்ற அபிமன்யு; தேரிழந்த லட்சுமணனைத் தனது தேரில் சுமந்து சென்ற கிருபர்; தெய்வீக ஆயுதங்களைப் பயன்படுத்திய பீஷ்மர்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "பிறகு, மன்னன் விராடன் வலிமைமிக்கத் தேர்வீரரான பீஷ்மரை மூன்று கணைகளால் துளைத்தான். அந்தப் பெரும் தேர்வீரர் {பீஷ்மர்}, தங்கச் சிறகுகள் கொண்ட மூன்று கணைகளால் அவனது {விராடனின்} குதிரைகளைத் துளைத்தார்.
பயங்கரமான வில்லாளியும், உறுதியான கரம் படைத்தவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, ஆறு கணைகளைக் கொண்டு காண்டீவதாரியின் {அர்ஜுனனின்} நடுமார்பில் துளைத்தான். அதன்பேரில், பகை வீரர்களைக் கொல்பவனும், எதிரிகளைக் கலங்கடிப்பவனுமான பல்குனன் {அர்ஜுனன்}, பதிலுக்கு அஸ்வாத்தாமனின் வில்லை அறுத்ததுடன், ஐந்து கணைகளால் அவனை {அஸ்வத்தாமனை} ஆழமாகத் துளைத்தான். கோபத்தில் புலன்களை {உணர்வுகளை} இழந்தவனும், அந்தப் போரில் தனது வில் துண்டாக்கப்பட்டதைத் தாங்கிக் கொள்ள முடியாதவனுமான துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, மேலும் கடினமான மற்றொரு வில்லை எடுத்து, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கூரிய தொண்ணூறு {90} கணைகளால் பல்குனனையும் {அர்ஜுனனையும்}, கடுமையான எழுபது {70} கணைகளால் வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்} துளைத்தான்.
அப்போது கிருஷ்ணனோடு சேர்ந்த பல்குனன் {அர்ஜுனன்} கோபத்தில் கண்கள் சிவக்க, நீண்ட சூடான மூச்சுகளைவிட்டு ஒருகணம் சிந்தித்தான். எதிரிகளைக் கலங்கடிப்பவனும், இடது கையால் வில்லை உறுதியாகப் பிடித்தவனுமான காண்டீவதாரி {அர்ஜுனன்}, கோபத்தால் தூண்டப்பட்டு, (எதிரியின்) உயிரை எடுக்க வல்லவையும், முற்றிலும் நேராக இருப்பவையும், கூர்மையானவையுமான கடுங்கணைகள் பலவற்றைத் தனது வில்லின் நாணில் பொருத்தினான். பலம்வாய்ந்த மனிதர்களில் முதன்மையான அவன் {அர்ஜுனன்}, அந்தக் கணைகளைக் கொண்டு, அந்தப் போரில் துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} விரைவாகத் தாக்கினான். அவனது {அஸ்வத்தாமனின்} கவசத்தைப் பிளந்த அந்தக் கணைகள், அவனது உயிர்க்குருதியைக் குடித்தன.
ஆனால், காண்டீவதாரியால் {அர்ஜுனனால்} இப்படித் துளைக்கப்பட்டாலும், துரோணரின் மகன் {அஸ்வத்தாமல்} நடுங்கவில்லை. அந்தப் போரில் பாதிக்கப்படாதவனும், உயர்ந்த நோன்புகளைக் கொண்ட பீஷ்மரைப் பாதுகாக்க விரும்பியவனுமான அவன் {அஸ்வத்தாமன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பதிலுக்கு அதே போன்ற கணைகளைப் பார்த்தன் {அர்ஜுனன்} மீது ஏவினான். ஒன்றாகச் சேர்ந்திருந்த இரண்டு கிருஷ்ணர்களையும் {இரண்டு கருப்பர்களையும்_ கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனனையும்} எதிர்கொண்ட அவனது {அஸ்வத்தாமனது} அந்தச் செயல், குரு படையின் முதன்மை வீரர்களால் பாராட்டப்பட்டது. அனைத்து ஆயுதங்களைத் தொடுக்கவும், திரும்பப் பெறவும் உரிய முறைகளைத் துரோணரிடம் இருந்த அடைந்திருந்த அஸ்வத்தாமன், உண்மையில், படைகளுக்கு மத்தியில் அச்சமற்ற வகையிலேயே தினமும் போராடி வந்தான்.
எதிரிகளைச் சுடுபவனும், தேர்வீரர்களில் முதன்மையானவனுமான வீரன் பீபத்சு {அர்ஜுனன்}, "இவன் {அஸ்வத்தாமன்} எனது ஆசானின் மகன், இவன் துரோணரின் அன்புக்குரிய மகன். அதிலும் குறிப்பாக இவன் பிராமணன், எனவே, எனது மரியாதைக்குரியவன்" என்று நினைத்தே பரத்வாஜரின் மகனுக்கு {அஸ்வத்தாமனுக்குக்} கருணை காட்டினான். (தனது தேரில் பூட்டப்பட்ட) வெண்குதிரைகளைக் கொண்டவனும், பெரும் ஆற்றலைக் கொண்டவனுமான அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, துரோணரின் மகனை {அஸ்வத்தாமனைத்} தவிர்த்துவிட்டு, தன் கரங்களின் பெரும் வேகத்தைக் காட்சிப்படுத்தியபடியும், உமது துருப்புகளுக்குப் பெரும் அழிவை உண்டாக்கியபடியும் போரிடத் தொடங்கினான்.
அப்போது துரியோதனன், சாணைக்கல்லில் கூர்தீட்டப்பட்டவையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், கழுகின் இறகுகளைச் சிறகாகக் கொண்டவையுமான பத்து {10} கணைகளைக் கொண்டு பெரும் வில்லாளியான பீமனைத் துளைத்தான். அதன்பேரில் கோபம் தூண்டப்பட்ட பீமசேனன், கடினமானதும், நன்கு அலங்கரிக்கப்பட்டதும், எதிரியின் உயிரை எடுக்கவல்லதுமான ஒரு வில்லையும், பத்து கூரிய கணைகளையும் எடுத்தான்.
கடும் சக்தியையும், மூர்க்கமான வேகத்தையும், கூர்மையான முனைகளையும் கொண்ட அந்தக் கணைகளைப் பொருத்தி, வில்லின் நாணைத் தனது காதுவரை இழுத்து, உறுதியாகக் குறிபார்த்து, குருக்களின் மன்னனுடைய {துரியோதனனுடைய} அகன்ற மார்பில் ஆழமாகத் துளைத்தான். அதன் பேரில் அவனது மார்பில் தங்க இழைகளில் தொங்கிக் கொண்டிருந்த ரத்தினம், அந்தக் கணைகளால் சூழப்பட்டு, ஆகாயத்தில் கோள்களால் சூழப்பட்ட சூரியனைப் போல மிக அழகாகத் தெரிந்தது.
கோள்களால் சூழப்பட்ட சூரியன் (சூரிய மண்டலம்) |
பெரும் சக்தி கொண்டவனாக இருப்பினும், மனிதர்கள் அறையும் ஒலியைத் தாங்கிக் கொள்ளாத பாம்பைப் போல, பீமசேனனால் இப்படித் தாக்கப்பட்டதை உமது மகனால் {துரியோதனன்} (பொறுமையாகத்) தாங்கிக் கொள்ள முடியவில்லை. கோபத்தால் தூண்டப்பட்டவனும், தனது படையைக் காக்க விரும்பியவனுமான அவன் {துரியோதனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கச் சிறகுகள் கொண்டவையும், கல்லில் கூர்த்தீட்டப்பட்டவையுமான பல கணைகளைக் கொண்டு பீமனைப் பதிலுக்குத் துளைத்தான். இப்படியே போரில் போராடி, ஒருவரை ஒருவர் கடுமையாகச் சிதைத்துக் கொண்டவர்களான வலிமைமிக்க உமது மகன்கள் இருவரும் {துரியோதனனும் - பீமனும்}, அப்போது, தேவர்கள் இருவரைப் போலத் தெரிந்தனர்.
மனிதர்களில் புலியும், பகைவீரர்களைக் கொல்பவனுமான சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, சித்திரசேனனை பல [1] கூரிய கணைகளாலும், புருமித்ரனை ஏழு கணைகளாலும் துளைத்தான். போரில் இந்திரனுக்கு நிகரான வீரனாகிய அவன் {அபிமன்யு}, சத்தியவிரதனையும் எழுபது கணைகளால் அடித்து, அந்தப் போர்க்களத்தில் நடனமாடியபடியே நம்மைப் பெருந்துன்பத்துக்குள்ளாக்கினான். பிறகு, பத்து கணைகளால் சித்திரசேனனும், ஒன்பது கணைகாளல் சத்தியவிரதனும், ஏழு கணைகளால் புருமித்ரனும் பதிலுக்கு அவனைத் {அபிமன்யுவைத்} துளைத்தனர்.
[1] பத்துக் கணைகள் என்று வேறு ஒரு பதிப்புச் சொல்கிறது.
இப்படித் துளைக்கப்பட்ட அர்ஜுனனின் மகன் {அபிமன்யு}, ரத்தத்தில் நனைந்தபடியே, எதிரிகளைத் தடுக்கவல்ல சித்திரசேனனின் அழகிய பெரிய வில்லை வெட்டி வீழ்த்தினான். மேலும் அவன் {அபிமன்யு}, ஒரு கணையால் எதிராளியின் {சித்திரசேனனின்} கவசத்தைப் பிளந்து அவனது மார்பைத் துளைத்தான். பிறகு, கோபத்தால் தூண்டப்பட்டவர்களும், துணிச்சல்மிக்கவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான உமது படையின் இளவரசர்கள் அம்மோதலில் ஒன்று சேர்ந்து, கூரிய கணைகளால் அவனைத் {அபிமன்யுவைத்} துளைத்தனர்.
வல்லமைமிக்க ஆயுதங்களை அறிந்தவனான அபிமன்யுவோ, அவர்கள் அனைவரையும் கூர்மையான அம்புகளால் அடித்தான். அவனது அருஞ்செயலைக் கண்ட உமது மகன்கள், கோடைக்காலத்தில் வைக்கோல் குவியலை எரிக்கும் சுடர்மிகும் நெருப்பின் தழல்களைப் போல உமது படையை எரித்துக் கொண்டிருந்த அந்த அர்ஜுனன் மகனைச் {அபிமன்யுவைச்} சூழ்ந்து கொண்டனர். (இப்படி) உமது துருப்புகளை அடித்துக் கொண்டிருந்த சுபத்திரையின் மகன் {அபிமன்யு} பிரகாசத்தில் ஒளிர்வதாகத் தெரிந்தது.
அவனது {அபிமன்யுவின்} நடத்தையைக் கண்ட உமது பேரன் {உமது பேரனும் துரியோதனன் மகனுமான} லக்ஷ்மணன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சுபத்திரையின் மகன் {அபிமன்யு} மீது விரைந்து பாய்ந்தான். அதன்பேரில் கோபம் தூண்டப்பட்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான அபிமன்யு, மங்கலக்குறிகளால் அருளப்பட்ட லக்ஷ்மணனையும், அவனது தேரோட்டியையும் ஆறு கூரிய கணைகளால் துளைத்தான். ஆனால் லக்ஷ்மணனும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பல கூரிய கணைகளால் சுபத்திரையின் மகனை {அபிமன்யுவைத்} துளைத்தான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த அருஞ்செயல் பெரும் அற்புதம் நிறைந்ததாகத் தெரிந்தது.
அப்போது, வலிமைமிக்கத் தேர்வீரனான அபிமன்யு, தன் கூரிய கணைகளால் லக்ஷ்மணனின் நான்கு குதிரைகளையும், அவனது தேரோட்டியையும் கொன்றுவிட்டு, அவனிடம் {லக்ஷ்மணனிடம்} விரைந்து சென்றான். அதன்பேரில் பகைவீரர்களைக் கொல்பவனான லக்ஷ்மணன், கொல்லப்பட்ட குதிரைகளைக் கொண்ட அந்தத் தேரில் நின்றபடியே, கோபத்தால் தூண்டப்பட்டு, சுபத்திரையின் மகனை {அபிமன்யுவை} நோக்கி ஒர் ஈட்டியை எறிந்தான். எனினும் அபிமன்யு, பாம்பைப் போன்றதும், தன்னை நோக்கி விரைந்து வந்ததும், கடும் தோற்றம் கொண்டதுமான அந்தத் தடுக்கப்பட முடியாத ஈட்டியைத் தன் கூரிய கணைகளால் துண்டாக்கினான். பிறகு, லக்ஷ்மணனைத் தன் தேரில் ஏற்றிக் கொண்ட கிருபர், துருப்புகள் அனைத்தின் பார்வைக்கெதிரிலேயே, அவனை {லக்ஷ்மணனை} அம்மோதலை விட்டு அகற்றிச் சுமந்து சென்றார்.
அச்சம்தரும் அந்தப் போர் மிதமாக மாறிய போது, மற்றவர் உயிரைப் பறிக்க விரும்பிய போராளிகள் ஒருவரை நோக்கி ஒருவர் விரைந்து சென்றனர். போர்க்களத்தில் உயிரைவிடத் தயாராக இருந்த உமது படையின் வலிமைமிக்க வில்லாளிகளும், பாண்டவப்படையின் பெரும் தேர்வீரர்களும் ஒருவரையொருவர் கொன்றனர். தலைமுடி கலைந்தும், தங்கள் கவசங்களை இழந்தும், தேர்களை இழந்தும், விற்கள் ஒடிந்தும் இருந்த சிருஞ்சயர்கள், தங்கள் வெறுங்கைகளைக் கொண்டே குருக்களுடன் போரிட்டனர். அப்போது கோபத்தால் தூண்டப்பட்டவரும், பெரும் பலமும், வலிமையான கரமும் கொண்டவருமான பீஷ்மர். தன் தெய்வீக ஆயுதங்களைக் கொண்டு உயர் ஆன்மப் பாண்டவர்களின் துருப்புகளைக் கொன்றார். பாகன்களை இழந்த யானைகள், குதிரைகள், தேர்வீரர்கள், குதிரைவீரர்கள் ஆகியோரின் வீழ்ந்த உடல்களால் பூமி மறைக்கப்பட்டது" {என்றான் சஞ்சயன்}.
ஆங்கிலத்தில் | In English |