Sunday, January 03, 2016

சாத்யகியின் மகன்களைக் கொன்ற பூரிஸ்ரவஸ்! - பீஷ்ம பர்வம் பகுதி - 074

Bhurisravas killed Satyaki's sons! | Bhishma-Parva-Section-074 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 32)

பதிவின் சுருக்கம் : துரியோதனன் ஏவிய படைகளைக் கொன்ற சாத்யகி; சாத்யகியின் படையினரைத் தாக்கி விரட்டிய பூரிஸ்ரவஸ்; பூரிஸ்ரவசை சவாலுக்கழைத்த சாத்யகியின் மகன்கள்; சாத்யகியின் பத்து மகன்களைக் கொன்ற பூரிஸ்ரவஸ்; சாத்யகியும், பூரிஸ்ரவசும் தங்கள் தேர்களை இழந்தது; சாத்யகியைப் பீமசேனனும், பூரிஸ்ரவசைத் துரியோதனனும் தங்கள் தங்கள் தேரில் ஏற்றிச் சென்றது; இருபத்தைந்தாயிரம் கௌரவத் தேர்வீரர்களைக் கொன்ற அர்ஜுனன்; ஐந்தாம் நாள் போர் முடிவுக்கு வந்தது....

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போரில் ஒப்பற்றவனான வலிய கரங்களைக் கொண்ட சாத்யகி, அம்மோதலில் பெரும் வலிமையைத் தாங்கக்கூடிய ஓர் அற்புத வில்லை இழுத்து, கொடும்நஞ்சு மிக்கப் பாம்புகளைப் போன்றவையும், சிறகு படைத்தவையுமான எண்ணற்ற கணைகளைத் தொடுத்து, தனது கரங்களின் அற்புத வேகத்தைக் காட்சிப்படுத்தினான். போரில் தன் எதிரிகளைக் கொன்றபோது, விரைவாக வில்லை இழுத்த அவன் {சாத்யகி}, தன் கணைகளை எடுத்து, வில்லின் நாணில் பொருத்தி, எதிரிக்கு மத்தியில் அவற்றை ஏவிய போது, கன மழையைப் பொழியும் மேகத் திரள்களைப் போலத் தெரிந்தான்.


(வளரும் நெருப்பைப் போலச்) சுடர்விட்டெரியும் அவனைக் {சாத்யகியைக்} கண்ட மன்னன் துரியோதனன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அவனுக்கு {சாத்யகிக்கு} எதிராகப் பத்தாயிரம் {10,000} தேர்களை அனுப்பினான். ஆனால், கலங்கடிக்கப்படமுடியாத ஆற்றலும், பெரும் சக்தியும் கொண்டவனான பெரும் வில்லாளி சாத்யகி, வலிமைமிக்க அந்தத் தேர்வீரர்கள் அனைவரையும் தனது தெய்வீக ஆயுதங்களால் கொன்றான். கையில் வில்லுடன் அருஞ்செயலைச் செய்து கொண்டிருந்த அந்த வீரன் {சாத்யகி}, அடுத்ததாகப் போரிட பூரிஸ்ரவசை அணுகினான்.

குருக்களின் புகழைப் பெருக்குபவனான பூரிஸ்ரவசும், யுயுதானனால் {சத்யகியால்} வீழ்த்தப்படும் தார்தராஷ்டிர படையணிகளைக் கண்டு, அவனை {சாத்யகியை} நோக்கி விரைந்தான். இந்திரனை {இந்திராயுதத்தைப்} போன்ற நிறத்தில் இருந்த தனது பெரும் வில்லை இழுத்த அவன் {பூரிஸ்ரவஸ்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தனது கரங்களின் வேகத்தைக் காட்சிப்படுத்தும் வகையில், கடும்நஞ்சுமிக்கப் பாம்புகளைப் போலத் தெரிந்தவையும், இடியின் பலத்தைக் கொண்டவையுமான ஆயிரக்கணக்கான கணைகளை அடித்தான். அதன்பேரில், சாத்யகியைப் பின்தொடர்ந்த போராளிகள், அந்தக் கணைகளின் மரணத் தீண்டலை அந்த மோதலில் தாங்கிக் கொள்ள முடியாமல், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒப்பற்ற சாத்யகியைக் கைவிட்டுத் திக்குகள் அனைத்திலும் சிதறி ஓடினர்.

இதைக் கண்டவர்களும், பெரும் புகழ்பெற்றவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களும், கவசம் தரித்தவர்களும், பல்வேறு வகையிலான ஆயுதங்களைத் தரித்தவர்களும், அற்புத கொடிமரங்களைக் கொண்டவர்களுமான யுயுதானனின் {சாத்யகியின்} வலிமைமிக்க மகன்கள் [1], அந்தப் போரில் பெரும் வில்லாளியான பூரிஸ்ரவசை அணுகி, வேள்விப்பீடப் {யூபஸ்தம்பப்} பொறியைத் தனது கொடிமரத்தில் தாங்கிய அந்த வீரனிடம் {பூரிஸ்ரவசிடம்} கோபத்துடன், "ஓ! கௌரவர்களின் சொந்தக்காரா, ஓ! பெரும்பலம் கொண்டவனே {பூரிஸ்ரவசே}, சேர்ந்திருக்கும் எங்கள் அனைவரிடமோ, எங்கள் ஒவ்வொருவருடன் தனித்தனியாகவோ வந்து போரிடுவாயாக. ஒன்று, போரில் எங்களை வீழ்த்தி, நீ பெரும்புகழை அடைவாயாக, அல்லது உன்னை வீழ்த்தி நாங்கள் பெரும் மனநிறைவு கொள்வோம்" என்றனர்.

[1] இப்படி வந்த சாத்யகியின் மகன்கள் பத்து பேராவர்.

அவர்களால் {சாத்யகியின் மகன்களால்} இப்படிச் சொல்லப்பட்டவனும், பெரும் பலம் கொண்டவனும், தன் ஆற்றலில் செருக்குடையவனும், மனிதர்களில் முதன்மையானவனுமான அந்த வலிமைமிக்க வீரன் {பூரிஸ்ரவஸ்}, அவர்களைத் தன் முன்பு கண்டு, அவர்களிடம் {சாத்யகியின் மகன்களிடம்}, "வீரர்களே, நன்றாகச் சொன்னீர்கள். இப்போது உங்கள் விருப்பம் இத்தகையதே என்றால், அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து கவனத்துடன் போரிடுவீர்களாக. போரில் நான் உங்கள் அனைவரையும் கொல்வேன்" என்றான். அவனால் {பூரிஸ்ரவசால்} இப்படிச் சொல்லப்பட்டவர்களும், பெரும் சுறுசுறுப்புடைய வலிமைமிக்க வில்லாளிகளுமான அவ்வீரர்கள் {சாத்யகியின் மகன்கள்}, அடர்த்தியான கணைமழையால் அந்த எதிரிகளைத் தண்டிப்பவனை {பூரிஸ்ரவசை} மறைத்தார்கள்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒருபுறம் தனியனான பூரிஸ்ரவசுக்கும், மறுபுறம் ஒன்றுசேர்ந்த பலருக்கும் {சாத்யகியின் மகன்களுக்கும்} இடையில் நடைபெற்ற அந்தப் பயங்கரப் போர் பிற்பகலில் நடந்தது. மழைக்காலத்தில் மலை முகட்டில் மழையைப் பொழியும் மேகங்களைப் போல, அந்தப் பத்து வீரர்களும் {சாத்யகியின் பத்து மகன்களும்}, தனியனான வலிமைமிக்க அந்தத் தேர்வீரனைத் {பூரிஸ்ரவசை} தங்கள் கணை மழையால் மறைத்தார்கள். எனினும், அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {பூரிஸ்ரவஸ்}, அவர்களால் தொடுக்கப்பட்டவையும், மரணத்தைத் தரும் காலனின் ஈட்டிகள், அல்லது பிரகாசத்தில் இடியைப் போன்றவையான அந்தக் கணை மேகங்கள் தன்னை நெருங்கும் முன்னரே அறுத்தெறிந்தான். பிறகு, வலிய கரங்கள் கொண்ட அந்த வீரனை {பூரிஸ்ரவசைச்} சூழ்ந்து கொண்ட அவர்கள் {சாத்யகியின் மகன்கள்}, அவனைக் கொல்ல முயற்சி செய்தனர். ஆனால் அந்தச் சோமதத்தன் மகனோ {பூரிஸ்ரவசோ}, கோபத்தால் தூண்டப்பட்டு, ஓ! பாரதரே, அவர்களது விற்களையும், பிறகு அவர்களது தலைகளையும் கூரிய கணைகளால் அறுத்தான். இப்படிக் கொல்லப்பட்ட அவர்கள் {சாத்யகியின் மகன்கள்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இடியால் விழுந்த வலிமைமிக்க மரங்களைப் போலக் கீழே விழுந்தார்கள் [2].

[2] பம்பாய் உரைகளில் சாத்யகியின் மகன்கள் கொல்லப்படும் இந்த இடத்தில் கூடுதலாக ஒரு வரி இருப்பதாகவும், ஆனால் வங்க உரைகள் அவற்றைத் தவிர்த்திருப்பதாகவும் கங்குலி இங்கே விளக்குகிறார். பின்வருவன வேறு பதிப்பில் கண்டவை: தனியனாக இருந்து கொண்டு, அச்சமற்றவன்போலப் போரில் பலரை எதிர்த்துப் போராடிய சோமதத்தன் மகனான பூரிஸ்ரவசின் அற்புத ஆற்றலை நாங்கள் அனைவரும் அவ்விடத்தில் கண்டோம்.

தன் வலிமைமிக்க மகன்கள் போரில் இப்படிக் கொல்லப்பட்டதைக் கண்ட அந்த விருஷ்ணி வீரன் (சாத்யகி), ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உரக்க முழங்கியபடி பூரிஸ்ரவசை எதிர்த்து விரைந்தான். பெரும் தேர்வீரர்களான அவர்கள் ஒவ்வொருவரும் {சாத்யகியும், பூரிஸ்ரவசும்}, தங்கள் தேரை மற்றவர் தேரில் நெருக்கி அழுத்தினார்கள் {மோதினார்கள்}. அம்மோதலில் அவர்கள் இருவரும், மற்றவரின் தேரில் பூட்டப்பட்ட குதிரைகளைக் கொன்றார்கள். பிறகு, தேர்களை இழந்த அந்த வலிமைமிக்க வீரர்கள் இருவரும் தரையில் குதித்தார்கள். பெரும் கத்திகளையும், அற்புத கேடயங்களையும் எடுத்துக் கொண்ட அவர்கள் இருவரும் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொண்டனர். {இப்படி} மோதிக் கொண்ட அம்மனிதப் புலிகள் பிரகாசமாக ஒளிர்ந்தனர்.

அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிறந்த கத்தியுடன் இருந்த சாத்யகியை நோக்கி விரைந்து வந்த பீமசேனன், அவனைத் தன் தேரில் ஏற்றிக் கொண்டான். அதே போல உமது மகனும் {துரியோதனனும்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் வில்லாளிகள் அனைவரின் பார்வைக்கெதிராகவே பூரிஸ்ரவசைத் தனது தேரில் விரைந்து ஏற்றிக் கொண்டான்.

அந்தப் போர் தொடர்ந்து கொண்டிருந்த அதேவேளையில், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, கோபத்தால் தூண்டப்பட்ட பாண்டவர்கள், வலிமைமிக்கத் தேர்வீரரான பீஷ்மருடன் போரிட்டார்கள். சூரியன் சிவப்பு நிறத்தை எட்டியபோது, செயலூக்கத்துடன் முயன்ற தனஞ்சயன் {அர்ஜுனன்}, பெரும் தேர்வீரர்கள் {மகாரதர்கள்} இருபத்தைந்தாயிரம் {25,000} பேரைக் கொன்றான்.

பார்த்தனை {அர்ஜுனனைக்} கொல்வதற்காகத் துரியோதனனால் ஏவப்பட்ட அவர்கள், சுடர்மிகும் நெருப்பில் விழும் பூச்சிகளைப் போல, அவனை {அர்ஜுனனை} வந்தடைவதற்கு முன்பே இப்படி முற்றாக அழிந்தனர். பிறகு, ஆயுதங்களின் அறிவியலை அறிந்தவர்களான மத்ஸ்யர்கள் மற்றும் கேகயர்கள் வலிமைமிக்கத் தேர்வீரனான பார்த்தனையும் {அர்ஜுனனையும்}, அவனது மகனையும் {அபிமன்யுவையும்} (அவர்களை ஆதரிப்பதற்காகச்) சூழ்ந்து கொண்டார்கள். சரியாக அதே நேரத்தில் சூரியனும் மறைந்தான், போராளிகள் அனைவரும் தங்கள் புலன்களை {உணர்வுகளை} இழந்ததாகவும் தெரிந்தது.

பிறகு அந்த மாலை சந்திப் பொழுதில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, களைப்படைந்த விலங்குகளைக் {குதிரைகளைக்} கொண்ட உமது தந்தை தேவவிரதர் {பீஷ்மர்}, துருப்புகளைப் பின்வாங்கச் செய்தார். பாண்டவர்கள் மற்றும் குருக்கள் ஆகிய இருதரப்புத் துருப்புகளும், அந்தப் பயங்கர மோதலால் அச்சத்திலும், கவலையிலும் நிறைந்து, தங்கள் தங்களின் பாசறைகளுக்குச் சென்றனர். கௌரவர்களும், சிருஞ்சயர்களுடன் கூடிய பாண்டவர்களும், (படை அறிவியலின்) விதிகளுக்கு ஏற்புடைய வகையில் இரவில் ஓய்ந்திருந்தனர்" {என்றான் சஞ்சயன்}.

ஐந்தாம் நாள் போர் முற்றிற்று


ஆங்கிலத்தில் | In English