Thursday, February 04, 2016

துரியோதனனை நிந்தித்த கடோத்கசன்! - பீஷ்ம பர்வம் பகுதி - 092

Ghatotkacha reproached Duryodhana!! | Bhishma-Parva-Section-092 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 50)

பதிவின் சுருக்கம் : அரவான் கொல்லப்பட்டதைக் கண்டு கோபத்துடன் கர்ஜித்த கடோத்கசன்; கடோத்கசனைக் கண்டு அஞ்சி நடுங்கிய கௌரவத் துருப்புகள்; கடோத்கசனை எதிர்த்த துரியோதனன்; துரியோதனனை நிந்தித்த கடோத்கசன்...

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, இராவத் {அரவான்} கொல்லப்பட்டதை அவர்கள் {பாண்டவர்கள்} கேட்டபோது, போரில் வலிமைமிக்கப் பார்த்தன் {அர்ஜுனன்} [1] செய்தவை அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டான்.

[1] இங்கே பார்த்தர்கள் {பாண்டவர்கள்} என்றும் கொள்ளலாம். ஏனெனில் வேறு பதிப்பு ஒன்றில் இந்த இடத்தில் பாண்டவர்கள் என்றே இருக்கிறது.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “போரில் இராவத் {அரவான்} கொல்லப்பட்டதைக் கண்டவனும், பீமசேனனின் மகனுமான ராட்சசன் கடோத்கசன் பேரொலியுடன் முழக்கங்களிட்டான். அம்முழக்கங்களின் ஒலிவன்மையின் விளைவால் கடலைத் தன் ஆடைகளாகக் கொண்ட பூமியானவள், தன் மலைகள் மற்றும் காடுகளுடன் வன்மையாக நடுங்கத் தொடங்கினாள். ஆகாயமும், திக்குகள் மற்றும் துணை திக்குகளைக் கொண்ட கோணங்கள் இரண்டும் என அனைத்தும் நடுங்கத் தொடங்கின. பேரொலிமிக்க அவனது முழக்கங்களைக் கேட்டு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உமது துருப்பினரின் [2] தொடைகளும், பிற அங்கங்களும் நடுங்கத் தொடங்கின, மேலும், அவர்களது மேனியில் வியர்வையும் தோன்றியது.


[2] இங்கே the troops என்று இருக்கிறது. அது thy troops என்று இருக்க வேண்டும் என நினைக்கிறேன். வேறு பதிப்புகளில் உமது துருப்புகள் என்றே இருக்கிறது.

மேலும், உமது போராளிகள் அனைவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இதயத்தில் மகிழ்ச்சியற்றவர்களாக ஆனார்கள். சிங்கத்தைக் கண்டு அஞ்சிய யானை ஒன்றைப் போல, களமெங்கிலும் இருந்த வீரர்கள் அசையாமல் நின்றனர். இடியின் இரைச்சலை ஒத்த பேரொலிமிக்க முழக்கங்களையிட்ட அந்த ராட்சசன் {கடோத்கசன்}, பயங்கர வடிவொன்றை ஏற்று, சுடர்மிகும் சூலமொன்றைத் தன் கையில் ஏந்திக் கொண்டு, பல்வேறு வகையான ஆயுதங்கள் தரித்தவர்களும், கடும் வடிவங்களைக் கொண்டவர்களுமான ராட்சசக் காளைகள் பலரால் சூழப்பட்டபடி, யுக முடிவின் போதான அந்தகனைப் போலச் சினம் தூண்டப்பட்ட நிலையில் முன்னேறினான்.

பயங்கர முகத் தோற்றம் கொண்டவனும், கோபத்தில் முன்னேறுபவனுமான அவனையும் {கடோத்கசனையும்}, கிட்டத்தட்ட தன் துருப்புகள் அனைத்தும் அந்த ராட்சன் மீது கொண்ட அச்சத்தால் ஓடுவதையும் கண்ட மன்னன் துரியோதனன், தனது வில்லை எடுத்துக் கொண்டு, நாணில் கணையைப் பொருத்தி, சிங்கத்தைப் போல மீண்டும் மீண்டும் முழங்கியபடி, அந்தக் கடோத்கசனை எதிர்த்து விரைந்தான். அவனுக்கு {துரியோதனனுக்குப்} பின்னால், மலைகளைப் போன்று பெரியவையும், மதநீர் ஒழுகிக் கொண்டிருந்தவையுமான பத்தாயிரம் யானைகளுடன் வங்கர்களின் ஆட்சியாளனும் {பகதத்தனும்} [3] சென்றான்.

[3] சபாபர்வம் பகுதி 14ல்  ஜராசந்தனின் கூட்டாளியும், வாசுதேவக் கிருஷ்ணனின் எதிரியுமான பௌந்தரக வாசுதேவன் வங்கம், புண்டரம், கிராதம் ஆகிய நாடுகளின் மன்னானக குறிப்பிடப்படுகிறான். சபாபர்வம் பகுதி 29ல் பீமசேனன் படையெடுப்பின் போது  சமுத்திரசேனன் மற்றும் சந்திரசேனன் ஆகிய இரு மன்னர்கள் குறிப்பிடப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் வங்கத்தின் ஆட்சியாளர்களா என்பது தெளிவாக அதில் இல்லை. சபா பர்வம் பகுதி 43ல் யுதிஷ்டிரனின் ராஜசூய வேள்வியின் போது அங்கம் மற்றும் வங்கத்தின் ஆட்சியாளனாகக் கர்ணன் குறிப்பிடப்படுகிறான். கர்ண பர்வம் பகுதி 22ல் பகதத்தன் வங்கத்தின் ஆட்சியாளனாகக் குறிப்பிடப்படுகிறான். வங்கத்தின் வடக்கில் உள்ள பிராக்ஜோதிஷ நாட்டின் மன்னன் பகதத்தன் என்பதும், வங்கத்தின் கிழக்கில் உள்ள புண்டர நாட்டின் ஆட்சியாளன் பௌந்தரக வாசுதேவன் என்பதும், வங்கத்தின் மேற்கில் உள்ள அங்க நாட்டின் ஆட்சியாளன் கர்ணன் என்பதும் இங்கே நினைவுகூரத்தக்கது. இதில் பௌந்தரக வாசுதேவன் குருக்ஷேத்திரப் போர் நடக்கும் காலத்தில் உயிருடன் இருந்திருக்க வாய்ப்பில்லை. கர்ணனும் பீஷ்மர் வீழும் வரை போரிடவில்லை எனும் போது, இங்கே குறிப்பிடப்படுவது பகதத்தனாகவே இருக்க வேண்டும். இதற்கான சான்று இதற்கடுத்த பகுதியில் இருக்கிறது.

அந்த யானைப் படையால் சூழப்பட்டு (இப்படி) முன்னேறும் உமது மகனை {துரியோதனனைக்} கண்ட அந்த இரவு உலாவி {கடோத்கசன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கோபத்தால் பெரிதாகக் கொழுந்துவிட்டெரிந்தான். பிறகு, வல்லமைமிக்க அந்த ராட்சசனுக்கும் {கடோத்கசனுக்கும்}, துரியோதனனின் துருப்புகளுக்கும் இடையில், உச்சபட்சத் தீவிரத்துடன் கூடியதும், மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்துவதுமான ஒரு போர் தொடங்கியது. (அடிவானில்) எழுந்த மேகத்தைப் போல இருந்த அந்த யானைப் படையைக் கண்டு சினத்தால் எரிந்த அந்த ராட்சசர்கள், மின்னலுடன் கூடிய மேகங்களைப் போலக் கையில் ஆயுதங்களுடன், பல்வேறு விதங்களிலான முழக்கங்களிட்டபடி, அதை {அந்த யானைப்படையை} நோக்கி விரைந்தனர். கணைகள், ஈட்டிகள், வாள்கள் {ரிஷ்டிகள்}, நாராசங்கள் {நீண்ட கணைகள்} ஆகியவற்றாலும், மேலும், சூலங்கள், உலக்கைகள், போர்க்கோடரிகள், பிண்டிபாலங்கள் {குறுங்கணைகள்} ஆகியவற்றாலும் அவர்கள் {ராட்சசர்கள்}, அந்த யானைப் படையைத் தாக்கத் தொடங்கினர். கொடுமுடிகளாலும் {மலை முகடுகளாலும்}, பெரும் மரங்களாலும் அவர்கள் {அந்த ராட்சசர்கள்} பெரும் யானைகளைக் கொன்றார்கள்.

ராட்சசர்கள் அந்த யானைகளைக் கொன்ற போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவற்றில் சில மத்தகம் நொறுங்கியும், சில குருதியில் குளித்தும், சில தங்கள் அங்கங்கள் உடைக்கப்பட்டும், வெட்டப்பட்டும் கிடப்பதை நாங்கள் கண்டோம். இறுதியாக அந்த யானைப்படை உடைக்கப்பட்டு, குறைக்கப்பட்ட போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சினத்தின் வசப்பட்ட துரியோதனன், தன் உயிரைப் பற்றிக் கவலைப்படாது, அந்த ராட்சசர்களை எதிர்த்து விரைந்தான். பிறகு அந்த வலிமைமிக்க வீரன் {துரியோதனன்}, அந்த ராட்சசர்கள் மீது கூரிய கணைகளின் மேகங்களை {கணைக்களின் கூட்டத்தை} ஏவினான். மேலும் அந்தப் பெரும் வில்லாளி {துரியோதனன்} அவர்களின் {ராட்சச} வீரர்களில் முதன்மையானோர் பலரையும் கொன்றான்.

சினத்தால் கொழுந்துவிட்டெரிந்தவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான உமது மகன் துரியோதனன், ஓ! பாரதர்களின் தலைவா {திருதராஷ்டிரரே}, நான்கு கணைகளைக் கொண்டு ராட்சசர்களில் முக்கியமானவர்களான வேகவான், மஹாருத்ரன் {மகாரௌத்ரன்}, வித்யுஜ்ஜிஹ்வன், பிரமாதி ஆகிய நால்வரைக் கொன்றான். பிறகு, அந்த அளவிடமுடியாத ஆன்மா {மனத்துணிவு} கொண்டன் {துரியோதனன்}, ஓ! பாரதர்களின் தலைவா {திருதராஷ்டிரரே}, அந்த ராட்சசன் {கடோத்கசன்} மீது, தடுப்பதற்குக் கடினமான கணைமாரியைப் பொழிந்தான்.

ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, உமது மகனின் {துரியோதனனின்} அந்த அருஞ்செயலைக் கண்டவனும், பீமசேனனின் வலிமைமிக்க மகனுமான அவன் {கடோத்கசன்} கோபத்தால் சுடர்விட்டெரிந்தான். மின்னலைப் போன்ற பிரகாசத்துடன் கூடிய தனது பெரிய வில்லை வளைத்த அவன் {கடோத்கசன்}, கோபம்நிறைந்த துரியோதனனிடம் மூர்க்கமாக விரைந்தான். காலத்தினால் ஏவப்பட்ட அந்தகனைப் போல (இப்படித்) தன்னிடம் விரையும் அவனைக் {கடோத்கசனைக்} கண்ட உமது மகன் துரியோதனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கிஞ்சிற்றும் நடுங்கவில்லை.

பிறகு, கோபத்தால் சிவந்த கண்களுடன், ஆத்திரத்தால் தூண்டப்பட்ட கடோத்கசன், உமது மகனிடம் {துரியோதனனிடம்}, “கொடியவனான உன்னால் நெடுநாளைக்கு நாட்டை விட்டுத் துரத்தப்பட்டவர்களான எனது தந்தைமாரிடமும், தாயிடமும் பட்டக் கடனிலிருந்து நான் இன்று விடுபடப் போகிறேன். ஓ! மன்னா {துரியோதனா}, பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்}, உன்னால் பகடையாட்டத்தில் வீழ்த்தப்பட்டனர். நோயுற்றிருந்ததால் ஒரே ஆடை உடுத்தியிருந்த துருபதன் மகளான கிருஷ்ணையும் {திரௌபதியும்} சபைக்குக் கொண்டு வரப்பட்டாள். ஓ! மிகப் பொல்லாதவனே {துரியோதனா}, அவளுக்கு உன்னால் பல்வேறு வழிகளிலும் பெரும் தொல்லைகள் கொடுக்கப்பட்டன.

மரங்களடர்ந்த தனது ஓய்வில்லத்தில் {ஆசிரமத்தில்} அவள் {திரௌபதி} வசித்து வந்த போது, உன் நலன் விரும்பியும், சிந்துக்களின் ஆட்சியாளனுமான அந்தத் தீயவன் {ஜெயத்ரதன்}, என் தந்தைமாரை பொருட்படுத்தாது, மேலும் அவளைத் துன்புறுத்தினான். நீ களத்தைவிட்டு வெளியேறாமல் இருந்தாயானால், ஓ! உன் குலத்தில் இழிந்தவனே {துரியோதனா}, இவற்றிற்காகவும், இன்னும் பிற தவறுகளுக்காகவும் நான் இன்று {உன்னைப்} பழி தீர்ப்பேன்” என்றான் {கடோத்கசன்}.

இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்த ஹிடிம்பை மகன் {கடோத்கசன்}, தன் பெரிய வில்லை வளைத்து, தன் (அடி) உதட்டைத் தனது பற்களால் கடித்து, கடைவாயை நாவால் நனைத்து {நக்கி}, மழைக்காலத்தில், மழையின் நீர்த்தாரைகளை மலைச்சாரலில் பொழியும் மேகங்களின் திரளைப் போல, அதிகளவிலான {கணை} மழையால் துரியோதனனை மறைத்தான்” {என்றான் சஞ்சயன்}.

ஆங்கிலத்தில் | In English