Saturday, February 06, 2016

கடோத்கசனிடம் சிக்கிய துரியோதனன்! - பீஷ்ம பர்வம் பகுதி - 093

Duryodhana entangled with Ghatotkacha! | Bhishma-Parva-Section-093 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 51)

பதிவின் சுருக்கம் : கடோத்கசனின் கணைமாரியைத் தாங்கிக் கொண்ட துரியோதனன்; கடோத்கசனைத் தாக்கிய துரியோதனன்; துரியோதனனைக் கொல்ல விரும்பி ஈட்டியை ஓங்கிய கடோத்கசன்; இடையில் புகுந்த பகதத்தன்; பகதத்தன் யானையைக் கொன்ற கடோத்கசன்; வஜ்ராயுதம் போன்ற கணையை ஏவிய துரியோதனன்; கணைக்குத் தப்பிய கடோத்கசன்; கடோத்கசனின் முழக்கங்களைக் கேட்ட பீஷ்மர், துரோணரை எச்சரித்தது; துரியோதனனைக் காக்க கௌரவப்படையின் முன்னணி வீரர்கள் சென்றது; அவர்கள் அனைவரையும் கலங்கடித்தக் கடோத்கசன்...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “{கடோத்கசனின்} அந்தக் கணைமாரி, தானவர்களே கூடத் தாங்கிக் கொள்ள {முடியாத அளவுக்குக்} கடினமானதாக இருந்தாலும், (வானத்திலிருந்து) பொழியும் மழையைத் தாங்கிக் கொள்ளும் ஒரு பெரும் யானையைப் போல, அந்தப் போரில் மன்னன் துரியோதனன் (அமைதியாக {பொறுமையாக}) அதைத் தாங்கிக் கொண்டான். பிறகு கோபத்தால் நிறைந்து, பாம்பைப் போலப் பெருமூச்சு விட்ட உமது மகன் {துரியோதனன்}, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, மிக ஆபத்தான நிலையில் நிறுத்தப்பட்டான்.

பிறகு அவன் {துரியோதனன்}, கூர்முனை கொண்ட இருபத்தைந்து {25} நாராசங்களை ஏவினான். அவை, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கந்தமாதனச் சாரலின் கடும் நஞ்சு கொண்ட சீற்றமிகு பாம்புகளைப் போல, அந்த ராட்சசர்களில் காளை {கடோத்கசன்} மீது பெரும் சக்தியுடன் பாய்ந்தன. அந்நாராசங்களால் துளைக்கப்பட்டதால், அந்த ராட்சசனின் {கடோத்கசனின்} உடலில் குருதி ஒழுகியது, அப்போது அவன் {கடோத்கசன்} மதநீர் ஒழுகும் ஒரு யானையைப் போலத் தெரிந்தான். அதன் பேரில் அந்த மனித ஊனுண்ணி {கடோத்கசன்}, (குரு) மன்னனின் {துரியோதனனின்} அழிவில் தன் இதயத்தை {மனத்தை} நிலைநிறுத்தினான்.


பிறகு அவன் {கடோத்கசன்}, மலையையே கூடத் துளைக்க வல்ல ஒரு பெரும் ஈட்டியை எடுத்துக் கொண்டான். பிரகாசமான பெரும் எரிகோளைப் {தூமகேதுவைப்} போல, ஒளியுடன் சுடர்விட்ட அது {ஈட்டி} மின்னலைப் போலவே ஒளியுடன் எரிந்தது. மேலும் அந்த வலிய கரங்களைக் கொண்ட கடோத்கசன், உமது மகனைக் {துரியோதனனைக்} கொல்ல விரும்பி அந்த ஈட்டியை உயர்த்தினான்.

உயர்த்தப்பட்ட அந்த ஈட்டியைக் கண்ட வங்கர்களின் ஆட்சியாளன், மலை போன்ற ஒரு பெரும் யானையின் மீதேறி அந்த ராட்சசனை {கடோத்கசனை} நோக்கிச் சென்றான். போர்க்களத்தில், பெரும் வேகம் கொண்ட வலிமைமிக்க யானையுடன் சென்ற பகதத்தன் [1], துரியோதனன் தேரின் முன்னிலையில் தன்னை நிறுத்திக் கொண்டான். அந்த யானையைக் கொண்டு உமது மகனை {துரியோதனனை} அவன் முழுமையாக மறைத்து விட்டான். வங்கர்களின் புத்திசாலி மன்னனால் {பகதத்தனால்} இப்படி (துரியோதனன் தேருக்குச் செல்லும்) வழி மறைக்கப்பட்டதைக் கண்ட கடோத்கசனின் கண்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கோபத்தில் சிவந்தன. ஏற்கனவே உயர்த்திப் பிடிக்கப்பட்டிருந்த அந்தப் பெரும் ஈட்டியை அவன் {கடோத்கசன்} அந்த யானையின் மீது ஏவினான்.

[1] கடந்த இரண்டு பகுதிகளாகக் குறிப்பிடப்படும் வங்கர்களின் ஆட்சியாளன் என்பவன், பிராக்ஜோதிஷ நாட்டு மன்னன் பகதத்தனே என்பது இங்குத் தெளிவாகிறது. ஆக, பௌந்தரவாசுதேவன், கர்ணன் ஆகியோரிடம் மாறிமாறி இருந்த வங்க நாடு, குருக்ஷேத்திரப் போர் நடைபெறும் காலத்தில் பகதத்தன் வசம் இருந்தது என்றும் தெரிகிறது. அல்லது இது கங்குலியின் ஊகமாகவும் இருக்கலாம். அப்படியிருந்தால், வங்கத்தின் வெவ்வேறு பகுதிகளை வெவ்வேறு மன்னர்கள் ஆண்டிருக்கலாம். சம்ஸ்க்ருத ஸ்லோகங்களை ஒப்பிட்டால், இதற்கு ஒரு தெளிவு பிறக்கும்.

கடோத்கசன் கரங்களில் இருந்து ஏவப்பட்ட அந்த ஈட்டியால் தாக்குண்ட அந்த யானை, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, குருதியில் நனைந்து, பெரும் வேதனையுடன் கீழே விழுந்து இறந்தது. எனினும், வலிமைமிக்க அந்த வங்கர்களின் மன்னன் {பகதத்தன்}, அந்த யானையில் இருந்து விரைவாகக் குதித்துக் கீழே தரையில் இறங்கினான். அந்த யானைகளின் இளவரசன் கொல்லப்பட்டதையும், உடைந்து பின்வாங்கும் தன் துருப்புகளையும் கண்ட துரியோதனன் அப்போது கவலையில் நிறைந்தான். தான் வீழ்த்தப்பட்டிருந்தாலும், க்ஷத்திரியர்களின் கடமையைக் [2] கருதியும், தன் தனிப்பட்ட செருக்காலும் அந்த மன்னன் {துரியோதனன்} மலையென உறுதியாக நின்றான்.

[2] களத்தில் இருந்து பின்வாங்காமல் இருப்பதில்தான் கடமை அடங்கியிருக்கிறது எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்

கோபத்தால் நிறைந்து, ஊழித்தீயின் {யுக நெருப்பின்} சக்தியை ஒத்த ஒரு கூரிய கணையைக் கொண்டு குறிபார்த்த அவன் {துரியோதனன்}, கடுமையான அந்த இரவு உலாவியின் {கடோத்கசன்} மேல் அஃதை ஏவினான். இந்திரனின் வஜ்ராயுதத்தைப் போலச் சுடர்விட்டபடி தன்னை நோக்கி வரும் அந்தக் கணையைக் கண்ட உயர் ஆன்ம கடோத்கசன், தன் அசைவுகளின் வேகத்தால் {லாகவத்தால்} அதைக் கலங்கடித்தான் {அதில் இருந்து தப்பித்தான்}.

கோபத்தினால் கண்கள் சிவந்த அவன் {கடோத்கசன்}, யுகத்தின் முடிவில் தோன்றும் மேகங்களைப் போல மீண்டும் ஒரு முறை கடுமையாக முழக்கமிட்டு உமது துருப்புகள் அனைத்தையும் அச்சுறுத்தினான். அந்தப் பயங்கரமான ராட்சசனின் {கடோத்கசனின்} கடும் முழக்கங்களைக் கேட்ட சந்தனுவின் மகனான பீஷ்மர், ஆசானை {துரோணரை} அணுகி இவ்வார்த்தைகளைச் சொன்னார், “ராட்சசர்களால் உண்டாக்கப்படுவனவும், நாம் கேட்பனவுமான இந்தக் கடும் முழக்கங்கள், ஹிடிம்பையின் மகன் {கடோத்கசன்} மன்னன் துரியோதனனுடன் போரிடுவதைக் குறிக்கிறது என்பதில் ஐயமில்லை. அந்த ராட்சசன் {கடோத்கசன்}, போரில் எந்த உயிரினத்தாலும் வெல்லப்பட முடியாதவனாவான் [3]. எனவே, நீங்கள் அருளப்பட்டிருப்பீராக {உங்களுக்கு மங்களமுண்டாகட்டும்}, அங்கே சென்று மன்னனை {துரியோதனனைக்} காப்பீராக. அருளப்பட்டவனான துரியோதனன், அந்த உயர் ஆன்ம ராட்சசனால் {கடோத்கசனால்} தாக்கப்படுகிறான். எனவே, எதிரிகளைத் தண்டிப்பவர்களே, இதுவே நமது உயரிய கடமையாகும் [4]” {என்றார் பீஷ்மர்}.

[3] இதன் பிறகு, துரோணரிடம் இருந்து திரும்பிக் கௌரவப் படையின் வீரர்களிடம் பீஷ்மர் பேசுவதாக அவரது பேச்சு அமைந்திருக்கிறது.
[4] மன்னனை மீட்பதே உயரிய கடமையாகும் என இங்கே கங்குலி விளக்குகிறார்

பாட்டனின் {பீஷ்மரின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், நேரத்தை இழக்காமல், {தங்களால்} இயன்ற அளவுக்குப் பெரும் வேகத்தோடு, குருக்களின் மன்னன் {துரியோதனன்} இருந்த இடத்திற்குச் சென்றனர். துரியோதனன், சோமதத்தன், பாஹ்லீகன், ஜெயத்ரதன், கிருபர், பூரிஸ்ரவஸ், சல்லியன், {கோசல மன்னன்} பிருஹத்பலனோடு கூடிய அவந்தியின் இளவரசர்கள் இருவர் {விந்தன் மற்றும் அனுவிந்தன்}, அஸ்வத்தாமர், விகர்ணன், சித்திரசேனன் மற்றும் விவம்சதி ஆகியோரை அவர்கள் சந்தித்தனர். இன்னும் பிற தேர்வீரர்கள் பல்லாயிரம் பேரும், அவர்களைப் பின்தொடர்வோர் அனைவரும் சேர்ந்து, கடுமையாகத் தாக்கப்பட்டிருந்த உமது மகன் துரியோதனைக் காக்க விரும்பி சென்றனர் [5].

[5] இப்படிச் சென்றவர்களில் மேலே துரியோதனன் என்று குறிப்பிட்டிருக்கும் இடத்தில்  வேறொரு பதிப்பில் துரோணர் என்று இருக்கிறது. பீஷ்மர் துரோணரிடமே பேச ஆரம்பிக்கிறார் என்பதைக் கவனத்தில் கொண்டால், இவர்களுடன் துரோணரும் சென்றிருக்க வேண்டும் என்று நாம் அனுமானிக்கலாம்.

அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களால் பாதுகாக்கப்பட்டு, பகை எண்ணங்களுடன் தன்னை நோக்கி வரும் அந்த வெல்லப்பட இயலாத படைப்பிரிவைக் கண்டவனும், ராட்சசர்களில் சிறந்தவனுமான அந்த வலிய கரங்களைக் கொண்ட கடோத்கசன், தண்டாயுதங்கள், உலக்கைகள் மற்றும் பல்வேறு வகைகளிலான பிற ஆயுதங்களைத் தரித்திருந்த தனது சொந்தங்களால் சூழப்பட்டபடி, கையில் பெரும் வில்லுடன், மைநாக மலையைப் போல உறுதியாக நின்றான். பிறகு, அந்த ராட்சசர்கள் ஒருபுறத்திலும், துரியோதனனின் படைப்பிரிவுகளில் முதன்மையான அந்தப் பிரிவு மறுபுறத்திலும் இருந்த அவர்களுக்கிடையில் மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்தும் வகையிலான ஒரு கடும்போர் தொடங்கியது.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் நாணொலி எழுப்பும் விற்களின் பேரொலி, மூங்கில்கள் எரியும்போது உண்டாகும் ஒலியைப் போல அனைத்துப் புறங்களிலும் கேட்கப்பட்டது. போராளிகளின் கவசங்களில் பாயும் ஆயுதங்களால் உண்டாக்கப்பட்ட ஆரவாரவொலி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மலைகள் பிளக்கும் ஒலியை ஒத்திருந்தது. வீரர்களின் கரங்களில் இருந்து ஏவப்பட்ட வேல்கள் {தோமரங்கள்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, ஆகாயத்தின் ஊடாகச் செல்லும் போது, சீறிப்பாயும் பாம்புகளைப் போலத் தெரிந்தன.

பிறகு, பெரும் கோபத்தால் தூண்டப்பட்டு, தன் பெரும் வில்லை வளைத்த அந்த வலிய கரங்களைக் கொண்ட ராட்சச இளவரசன் {கடோத்கசன்}, உரக்க முழங்கியபடி, ஆசானின் {துரோணரின்} வில்லை ஓர் அர்த்தச்சந்திரக் கணையால் சினத்துடன் துண்டித்தான்.

பிறகு, மற்றொரு பல்லத்தினால் {அகன்ற தலை கொண்ட கணையால்} சோமதத்தனின் கொடிமரத்தையும் வீழ்த்திய அவன் {கடோத்கசன்}, உரத்தக் கூச்சலுடன் முழங்கினான்.

மேலும், மூன்று {3} கணைகளால் பாஹ்லீகனின் நடுமார்பில் துளைத்தான்.

பிறகு, கிருபரை ஒரு கணையாலும், சித்திரசேனனை மூன்றாலும் {3 கணைகளாலும்} துளைத்தான்.

மேலும் மற்றொரு கணையால், வலுவான கரத்துடன், தன் வில்லை முழுமையாக வளைத்து, சரியாக ஏவி விகர்ணனின் தோள்ப்பூட்டைத் தாக்கினான். அதன் பேரில் பின்னவன் {விகர்ணன்}, தான் சிந்திய இரத்தத்தினால் மறைக்கப்பட்டு, கீழே தன் தேர்த்தட்டில் அமர்ந்தான்.

அளக்க முடியாத ஆன்மா கொண்ட அந்த ராட்சசன் {கடோத்கசன்}, சினத்தால் தூண்டப்பட்டு, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, பூரிஸ்ரவசின் மேல் பதினைந்து {15} கணைகளை ஏவினான். பின்னவனின் {பூரிஸ்ரவசின்} கவசத்தை ஊடுருவிய அவை பூமியில் நுழைந்தன.

அதன் பிறகு அவன் {கடோத்கசன்}, விவிம்சதி மற்றும் அஸ்வத்தாமனின் தேரைத் தாக்கினான். குதிரைகளின் கடிவாளங்களை விட்டுவிட்ட அவர்கள் {விவிம்சதியும், அஸ்வத்தாமனும்}, கீழே தங்கள் தேர்களின் முன்னிலையில் விழுந்தனர் [6].

[6] கடோத்கசன் அவர்களின் தேரோட்டிகளைத் தாக்கியதாக வேறொரு பதிப்பு சொல்கிறது. தேரில் இருந்து போரிடும் வீரர்கள் ஒரே நேரத்தில் குதிரைகளைச் செலுத்தவும், போரிடவும் முடியாது. எனவே, இங்கே கங்குலி தவறியிருக்க வாய்ப்பிருக்கிறது.

மற்றுமொரு அர்த்தச்சந்திரக் கணையால் அவன் {கடோத்கசன்}, பன்றி வடிவம் பொறிக்கப்பட்டதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதுமான ஜெயத்ரதனின் கொடிமரத்தை வீழ்த்தினான். மேலும், இரண்டாவது ஒரு கணையால் அவன் {கடோத்கசன்} பின்னவனின் {ஜெயத்ரதனின்} வில்லையும் அறுத்தான்.

பிறகு, கோபத்தால் சிவந்த கண்களைக் கொண்ட அவன் {கடோத்கசன்}, நான்கு கணைகளைக் கொண்டு, அவந்தியின் உயர் ஆன்ம மன்னனுடைய நான்கு குதிரைகளைக் கொன்றான்.

மேலும் அவன் {கடோத்கசன்}, முழுமையாக வளைக்கப்பட்ட தன்வில்லில் இருந்து ஏவப்பட்டதும், நன்கு கடினமாக்கப்பட்டதும், கூரியதுமான மற்றொரு கணையால், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, {கோசல} மன்னன் பிருஹத்பலனைத் துளைத்தான். ஆழமாகத் துளைக்கப்பட்டுப் பெரும் வலியை உணர்ந்த பின்னவன் {பிருஹத்பலன்}, கீழே தன் தேர்த்தட்டில் அமர்ந்தான்.

பெருங்கோபத்தால் நிறைந்து, தன் தேரில் அமர்ந்திருந்த அந்த ராட்சசர்களின் இளவரசன் {கடோத்கசன்}, பிறகு, கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளைப் போன்றவையும், கூர்முனை கொண்டவையுமான பிரகாசமான கணைகள் பலவற்றை ஏவினான். அவை, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போரில் சாதித்தவனான சல்லியனைத் துளைப்பதில் வென்றன” {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English