Kauravas ran their backs! | Bhishma-Parva-Section-094 | Mahabharata In Tamil
(பீஷ்மவத பர்வம் – 52)
பதிவின் சுருக்கம் : கௌரவர்களைப் புறமுதுகிட்டோட செய்த கடோத்கசன்; பலரால் சூழப்பட்ட கடோத்கசனின் முழக்கங்கள்; கடோத்கசனின் உதவிக்குச் செல்லும்படி பீமனை ஏவிய யுதிஷ்டிரன்; கடோத்கசனின் உதவிக்குப் பாண்டவ வீரர்கள் பலர் விரைவது; மீண்டும் புறமுதுகிட்டோடிய கௌரவப் படை...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “போர்க்களத்திலிருந்து (உமது படையின்) வீரர்கள் அனைவரையும் புறங்காட்டி ஓடச் செய்த ராட்சசன் கடோத்கசன், ஓ! பாரதர்களின் தலைவா {திருதராஷ்டிரரே}, பிறகு, துரியோதனனைக் கொல்ல விரும்பி அவனை நோக்கி விரைந்தான். மன்னனை {துரியோதனனை} நோக்கி பெரும் மூர்க்கத்துடன் விரையும் அவனைக் {கடோத்கசனைக்} கண்டவர்களும், போரில் அவனை வீழ்த்த இயலாதவர்களுமான உமது படையின் வீரர்கள் பலர், {பதிலுக்கு} அவனைக் {கடோத்கசனைக்} கொல்ல விரும்பி, அவனை நோக்கி விரைந்தார்கள். வலிமைமிக்கத் தேர்வீரர்களான அவர்கள், முழுமையாக ஆறு முழ நீளம் கொண்ட தங்கள் விற்களைகளை வளைத்துக் கொண்டும், சிங்கங்களின் கூட்டத்தைப் போலப் பேரொலியுடன் ஆரவாரம் செய்து கொண்டும் ஒன்று சேர்ந்து, அந்தத் தனி வீரனை {கடோத்கசனை} எதிர்த்து விரைந்தனர்.
பிறகு, கூதிர் காலத்தில், மழைநீர்த்தாரைகளால் மலைச்சாரலை மறைக்கும் மேகங்களைப் போல, அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்ட அவர்கள் தங்கள் கணைமாரியால் அவனை {கடோத்கசனை} மறைத்தார்கள். அக்கணைகளால் ஆழமாகத் துளைக்கப்பட்டுப் பெரும் வலியை உணர்ந்திருந்த அவன் {கடோத்கசன்}, அங்குசத்தால் துளைக்கப்பட்ட யானையைப் போல காணப்பட்டான்.
அப்போது அவன் {கடோத்கசன்}, கருடனைப் போல விரைவாக ஆகாயத்தில் எழுந்தான். ({அப்படி அவன்} அங்கே இருந்த போது), கூதிர்கால மேங்களைப் போலப் பேரொலிமிக்க முழக்கங்கள் பலவற்றைச் செய்த அவன் {கடோத்கசன்}, அந்தக் கடுங்குரலால், ஆகாயத்தையும், முக்கியத் திசைப்புள்ளிகள் மற்றும் துணைத் திசைப்புள்ளிகள் அனைத்தையும் எதிலொலிக்கச் செய்தான்.
ராட்சசனின் {கடோத்கசனின்} அம்முழக்கங்களைக் கேட்ட பிறகு பீமனிடம் பேசிய மன்னன் யுதிஷ்டிரன், ஓ! பாரதர்களில் தலைவரே {திருதராஷ்டிரரே}, அந்த எதிரிகளைத் தண்டிப்பவனிடம் {பீமனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான், “ராட்சசனின் {கடோத்கசனின்} கடுமையான முழக்கத்தால் நாம் கேட்கும் இவ்வொலி, தார்தராஷ்டிரப் படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்களுடன் அவன் போரிடுவதையே ஐயத்திற்கிடமின்றி குறிக்கிறது. ராட்சசர்களில் காளையான அவனால் {கடோத்கசனால்} தாங்க இயன்ற சுமையைவிட இந்தச் சுமை {அவனுக்குக்} கனமானது என்பதையும் நான் காண்கிறேன்.
சினத்தால் தூண்டப்பட்ட பாட்டனும் {பீஷ்மரும்} பாஞ்சாலர்களைக் கொல்லத் தயாராக இருக்கிறார். அவர்களைக் {பாஞ்சாலர்களைக்} காக்கவே பல்குனன் {அர்ஜுனன்} எதிரியுடன் {பீஷ்மருடன்} போரிடுகிறான்.
ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {பீமா}, உடனடிக் கவனத்தைக் கோரும் இந்தப் பணிகள் இரண்டையும் இப்போது கேட்டு, பெரும் ஆபத்தான நிலையில் நிறுத்தப்பட்டிருக்கும் ஹிடிம்பையின் மகனுக்கு {கடோத்கசனுக்கு} உற்றவுதவி செய்யச் செல்வாயாக” என்றான் {யுதிஷ்டிரன்}.
தன் அண்ணனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட விருகோதரன் {பீமன்}, தன் சிங்க முழக்கங்களால் மன்னர்கள் அனைவரையும் அச்சுறுத்தியபடி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, முழு நிலவின் {பௌர்ணமியின்} தொடக்கக் காலத்தில் உள்ள கடலைப் போலப் பெரும் மூர்க்கத்துடனும், பெரும் வேகத்துடனும் சென்றான். சத்தியதிருதி, போரில் வெல்லக் கடினமான சௌசித்தி, சிரேணிமான், வசுதானன், காசி ஆட்சியாளனின் வலிமைமிக்க மகனான அபிபூ ஆகியோரும், அபிமன்யு தலைமையிலான பல தேர்வீரர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களான அந்தத் திரௌபதியின் மகன்கள், வீரனான க்ஷத்ரதேவன், க்ஷத்ரதர்மன், தன் தனிப்பட்ட படைகளுக்குத் தலைமையில் நின்றவனும், தாழ்ந்த நாடுகளின் ஆட்சியாளனுமான நீலன் [1] ஆகியோரும் அவனைப் {பீமனைப்} பின்தொடர்ந்தார்கள். தேர்களின் ஒரு பெரும்படைப்பிரிவுடன் (அவனுக்கு உதவி செய்வதற்காக) ஹிடிம்பையின் மகனை {கடோத்கசனை} இவர்கள் சூழ்ந்து கொண்டார்கள்.
[1] வேறு ஒரு பதிப்பில் அநூப நாட்டு ஆட்சியாளன் இந்த நீலன் எனக் குறிக்கப்படுகிறான். அநூப நாட்டின் தலைநகரம் மஹிஷ்மதியாகும். இந்த நகரம் கார்த்த வீரிய அர்ஜுனனின் ஹேஹேய நாட்டின் தலைநகராக இருந்ததாகவும் மகாபாரதத்தின் அனுசாசன பர்வம் பகுதி 52ல் குறிப்பு இருக்கிறது. சபாபர்வம் பகுதி 30ல் சகாதேவன் இந்த மகிஷ்மதியைத் தாக்கிய போது அதன் ஆட்சியாளனாக மன்னன் நீலனே இருந்தான். எனவே, இந்த அநூப நாட்டைத் தான் கங்குலி தாழ்ந்த நாடு என்று குறிப்பிடுகிறார் என நினைக்கிறேன். அநூப என்பதற்கு “நீரின் அருகில் உள்ள இடம்” என்ற பொருள் என இந்த லிங்கில் தெரிகிறது. நீர் தங்கும் தாழ்வான நாடு என்று கங்குலி இங்குப் பொருள்கொண்டிருக்க வேண்டும்.
ராட்சசர்களின் இளவரசனான அந்தக் கடோத்கசனை மீட்பதற்காக, எப்போதும் சீற்றத்துடன் இருப்பவையும், தாக்குவதில் சாதிப்பவையுமான ஆறாயிரம் {6000} யானைகளுடன் அவர்கள் சென்றார்கள். பேரொலிமிக்கத் தங்கள் சிங்க முழக்கங்களாலும், தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலிகளாலும், குதிரைகளின் குளம்பொலிகளாலும் பூமியையே அவர்கள் நடுங்கச் செய்தார்கள்.
முன்னேறி வரும் அந்த வீரர்களின் ஆரவாரத்தைக் கேட்ட உமது துருப்பினரின் முகங்கள், பீமசேனன் மீது கொண்ட அச்சத்தில் விளைந்த கவலையில் {நிறம்} மங்கிப் போயிற்று. பிறகு, கடோத்கசனை விட்டு விட்டு அவர்கள் அனைவரும் தப்பி ஓடினார்கள்.
புறமுதுகிடாதவர்களான அந்த உயர் ஆன்ம வீரர்கள், உமது வீரர்கள் ஆகிய இரு தரப்பிற்கும் இடையில் களத்தின் அந்தப் பகுதியில் ஒரு பயங்கரப் போர் தொடங்கியது. பல்வேறு விதங்களிலான ஆயுதங்களை ஏவிய அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், ஒருவரை ஒருவர் துரத்தி அடித்தனர். துணிவற்றோரின் இதயங்களில் திகிலை உண்டாக்கிய அந்தக் கடும்போரில் பல்வேறு வகையான {படைகளைச் சேர்ந்த} போராளிகள் ஒருவரோடு ஒருவர் சிக்கிக் கொண்டனர் {கலந்து போரிட்டனர்} [2].
[2] "அந்தப் போரில் குதிரைகள் குதிரைகளோடு எதிர்த்தன. காலாட்கள் காலட்களோடும், தேராளிகள் தேராளிகளோடும் யானைகள் யானைகளோடும் எதிர்த்தன. போர்க்களத்தில் உள்ள வீரர்கள் வெற்றியை விரும்பி ஒருவரை ஒருவர் எதிர்த்தார்கள்" என்று இதே இடத்தில் வேறொரு பதிப்பில் சொல்லப்பட்டுள்ளது. இது கங்குலியில் இருந்து மாறுபட்டிருக்கிறது. போர் தொடங்கிய போது இப்படித்தான் போரிட வேண்டும் என்ற போர் உடன்படிக்கை ஒன்று ஏற்படுத்தப்பட்டது. பதிமூன்றாம் நாள் அபிமன்யு கொலை வரை இந்த விதியை இரு தரப்பினரும் கடைப்பிடித்திருப்பதாகப் பல பதிப்புகளில் சொல்லப்பட்டுள்ளது. இங்கு நேர்ந்திருப்பது கங்குலியின் பிழையா? மூலத்தில் உள்ளதா? என்பதை சம்ஸ்க்ருத அறிஞர்களே சொல்ல வேண்டும்.
குதிரைகள் யானைகளோடும், காலாட்படை வீரர்கள் தேர்வீரர்களோடும் போரிட்டனர். அந்தப் போரில் ஒருவரையொருவர் சவாலுக்கழைத்தபடியே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவர்கள் போரிட்டனர். தேர்கள், குதிரைகள், யானைகள், காலாட்படை வீரர்கள் ஆகியோரின் அந்த மோதலின் விளைவாக, தேர்ச்சக்கரங்களாலும், (அந்தப் போராளிகள் மற்றும் விலங்குகளின்) நடையாலும்) எழுப்பப்பட்ட அடர்த்தியான புழுதி தோன்றியது. சிவந்த புகையின் நிறைத்திலான அடர்த்தியான அந்தப் புழுதி அந்தப் போர்க்களத்தையே மறைத்தது. போராளிகளால் தங்களைச் சேர்ந்தவர்களையும், எதிரிகளையும் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை. மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்தியதும், (யாராலும் யாருக்கும்) கருணை காட்டப்படாததுமான அந்தப் பயங்கர மோதலில், தந்தை மகனை அடையாளங்காணவில்லை, மகனும் தந்தையை அடையாளங்காணவில்லை.
இரைந்து செல்லும் ஆயுதங்கள் மற்றும் போராளிகளின் கூச்சல் ஆகியவற்றால் உண்டான இரைச்சல், ஓ! பாரதக் குலத்தின் தலைவரே {திருதராஷ்டிரரே}, (நரகலோகங்களில் உள்ள) இறந்தவர்களின் ஆவிகளால் உண்டாக்கப்படும் இரைச்சலைப் போல இருந்தது.
யானைகள், குதிரைகள், மனிதர்கள் ஆகியோரின் குருதியையே வெள்ளமாகக் கொண்ட ஓர் ஆறு அங்கே பாயத் தொடங்கியது. (போராளிகளின்) மயிறே அதன் {அந்த ஆற்றின்} களைகள் மற்றும் பாசிகளாக அமைந்தன. மேலும், அந்தப் போரில் மனிதர்களில் உடல்களில் இருந்து விழுந்த தலைகள், கற்களின் மழை பொழிவதைப் போலப் பேரொலியை உண்டாக்கின. யானைகளின் சிதைந்த உடல்களோடும், குதிரைகளின் வெட்டப்பட்ட அங்கங்களோடும் மனிதர்களின் தலையற்ற உடல்கள் அந்த பூமியில் பரவி கிடந்தன.
வலிமைமிக்கத் தேர்வீரர்கள் ஒருவரையொருவர் அடித்து வீழ்த்துவதற்காக ஒருவரை ஒருவர் துரத்தி, பல்வேறு விதங்களிலான ஆயுதங்களை ஏவினார்கள். தங்கள் ஓட்டுநர்களால் {குதிரையோட்டிகளால்} தூண்டப்பட்ட குதிரைகள், {மற்ற} குதிரைகள் மேல் பாய்ந்து, ஒன்றோடொன்று மோதி உயிரற்று கீழே விழுந்தன. கோபத்தில் கண்கள் சிவந்த மனிதர்கள், {வேறு} மனிதர்களை எதிர்த்து விரைந்து, தங்கள் மார்புகளால் ஒருவரையொருவர் தாக்கி, ஒருவரையொருவர் அடித்து வீழ்த்தினர். பகை யானைகளை எதிர்த்துத் தங்கள் வழிகாட்டிகளால் {பாகன்களால்} தூண்டப்பட்ட யானைகள், தங்கள் தந்தங்களின் முனைகளைக் கொண்டு அந்தப் போரில் தங்கள் எதிராளிகளை {எதிரிகளின் யானைகளைக்} கொன்றன.
தங்கள் காயங்களின் விளைவால் குருதியில் போர்த்தப்பட்டவையும், (தங்கள் முதுகுகளில்) கொடிமரங்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான யானைகள் {வேறு} யானைகளுடன் சிக்கி மின்னலால் சக்தியூட்டப்பட்ட மேகங்களின் திரள்களைப் போலத் தெரிந்தன. அவற்றில் தந்தங்களின் முனைகளைக் கொண்டு (பிறரால்) ஏற்றம் கண்ட {தங்கள் முதுகில் வீரர்களைக் கொண்ட} சிலவும், வேல்களை {தோமரங்களைக்} கொண்டு தங்கள் மத்தகங்கள் பிளக்கப்பட்ட சிலவும், முழங்கும் மேகங்களின் திரள்களைப் போலப் பேரொலியுடன் பிளிறிக் கொண்டே அங்கேயும் இங்கேயும் ஓடின. அவற்றில் தங்கள் துதிக்கைகள் வெட்டப்பட்ட [3] சிலவும், அங்கங்கள் சிதைக்கப்பட்ட பிறவும், தங்கள் சிறகுகள் வெட்டப்பட்ட மலைகளைப் போல அந்தப் பயங்கரப் போரில் கீழே விழுந்தன [4].
[3] இலக்கிய ரீதியில் “இரண்டாகப் பிரிக்கப்பட்ட” என்பது பொருள் என இங்கே விளக்குகிறார் கங்குலி.[4] இந்து தொன்மவியலில், இந்திரனின் வஜ்ராயுதத்தால் வெட்டப்படும் வரை, மலைகளுக்குச் சிறகுகள் இருந்தன. இமயத்தின் மகனான மைநாகன் {மைநாக மலை} மட்டுமே தகுந்த நேரத்தில் தப்பினான். இந்நாள் வரை அவன் கடலுக்குள் மறைந்திருக்கிறான்.
பெரும் யானைகள் பிற, எதிராளிகளால் {எதிரிப்படையின் யானைகளால்} பிளக்கப்பட்ட தங்கள் விலாக்களில் இருந்து அதிக அளவில் இரத்தத்தைச் சிந்தி, (மழைக்குப் பிறகு) தங்கள் பக்கங்களில் (நீர்மமாக்கப்பட்ட, நீரில் கறைந்த) செம்மண் ஒழுகிக் கொண்டிருக்கும் மலைகளைப் போலத் தெரிந்தன. நாராசங்களால் கொல்லப்பட்டோ, வேல்களால் {தோமரங்களால்} துளைக்கப்பட்டோ தங்கள் பாகன்களை இழந்த பிற {யானைகள்}, தங்கள் முகடுகளை இழந்த மலைகளைப் போலத் தெரிந்தன. அவற்றில் சில, கோபத்தால் பீடிக்கப்பட்டும், (குமட்டிலும், கன்னப் பொட்டுகளிலும் ஒழுகிக் கொண்டிருக்கும்) மதத்தின் விளைவால் (சீற்றத்துடன்) குருடாகியும் {பார்வை மறைக்கப்பட்டு} [5], அங்குசத்திற்குக் கட்டுப்படாமல் அந்தப் போரில் நூற்றுக்கணக்கான தேர்களையும், குதிரைகளையும், காலாட்படை வீரர்களையும் நசுக்கின.
[5] கண்கள் மறைக்கப்பட்ட என்பதே இங்கே பொருள். “madandha” என்ற சம்ஸ்க்ருதச் சொல் “மதநீரால் குருடாவது” என்பதாகும். பொருளுக்கு உரிய விளக்கமான நீண்ட சொற்களை {உரிச்சொற்களை} நான் பயன்படுத்தியிருப்பதால், பொதுவான ஐரோப்பிய வாசகர்கள் இதைப் புரிந்து கொள்வது அரிதே என்று கங்குலி இங்கே விளக்குகிறார்.
அதேபோல, தோமரங்களாலும், வேல்களாலும் குதிரைவீரர்களால் தாக்கப்பட்ட குதிரைகளும், தங்களைத் தாக்குவோரை எதிர்த்துத் திசைகள் அதிரும்படி விரைந்தன. நற்குலத்தில் பிறந்த தேர்வீரர்கள், தங்கள் உயிர்களை விடத் துணிந்து, எதிர்த்து மோதும் தேர்வீரர்களுடன் தங்கள் முழுப் பலத்தை நம்பி அச்சமற்றவகையில் போரிட்டனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, புகழையோ, சொர்க்கத்தையோ வேண்டிய போராளிகள், சுயம்வரத்தின்போது செயல்படுவதைப் போல, அந்தப் பயங்கர மோதலில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
எனினும், மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்திய அந்தப் பயங்கரப் போரின் போது, பொதுவாகத் தார்தராஷ்டிரத் துருப்புகள் புறமுதுகிட்டோடும்படியே செய்யப்பட்டன” {என்றான் சஞ்சயன்}.
ஆங்கிலத்தில் | In English |