Tuesday, February 09, 2016

துரோணரை மயக்கமடையச் செய்த பீமன்! - பீஷ்ம பர்வம் பகுதி - 095

Bhima caused Drona to swoon! | Bhishma-Parva-Section-095 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 53)

பதிவின் சுருக்கம் : பீமனை நோக்கி விரைந்த துரியோதனன்; பீமனின் வில்லை அறுத்த துரியோதனன்; பீமனுக்கு உதவியாகப் பாண்டவப் படையினர் விரைவது; துரியோதனனைக் காக்கும்படி கௌரவவீரர்களை ஏவிய துரோணர்; துரோணரின் விலாவைத் துளைத்த பீமன் துரோணரை மயக்கமடையச் செய்தது; துரியோதனனும், அஸ்வத்தாமனும் பீமனை எதிர்ப்பது; நீலனுக்கும் அஸ்வத்தாமனுக்கு இடையில் நடந்த போர்; அஸ்வத்தாமனால் துளைக்கப்பட்ட நீலன்; அஸ்வத்தாமனை எதிர்த்த கடோத்கசன்; கடோத்கசன் வெளிப்படுத்திய மாயை; கௌரவர்கள் தோற்றோடியது; எட்டாம் நாள் போரை பாண்டவர்கள் வென்றது...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “தன் துருப்புகள் கொல்லப்பட்டதைக் கண்டு கோபத்தால் தூண்டப்பட்ட மன்னன் துரியோதனன், எதிரிகளைத் தண்டிப்பவனான பீமசேனனை நோக்கி விரைந்தான். இந்திரனுடைய வஜ்ராயுதத்துக்கு நிகரான பிரகாசமுடைய மிகப் பெரும் வில்லை எடுத்துக் கொண்ட அவன் {துரியோதனன்}, அடர்த்தியான கணைமழையால் அந்தப் பாண்டுவின் மகனை {பீமனை} மறைத்தான்.


சினத்தால் நிறைந்த அவன் {துரியோதனன்}, இறகுகளோடு கூடிய சிறகுகள் படைத்த அர்த்தச்சந்திரக் கணை ஒன்றால் குறிபார்த்து {அஃதை ஏவி} பீமசேனனின் வில்லை அறுத்தான். மேலும் அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {துரியோதனன்}, {நல்ல} சந்தர்ப்பத்தில், மலைகளையே பிளக்கவல்லதும், கூர்த்தீட்டப்பட்டதுமான கணை ஒன்றால் தன் எதிராளியை {பீமனை} விரைந்து குறிபார்த்தான். வலிய கரங்களைக் கொண்ட (வீரனான) அவன் {துரியோதனன்}, அதைக் {அந்தக் கணையைக்} கொண்டு, பீமசேனனை மார்பில் தாக்கினான்.

அக்கணையால் ஆழத் துளைக்கப்பட்டு, பெரும் வலியை உணர்ந்தவனும், பெரும் சக்தி படைத்தவனுமான அந்தப் பீமசேனன், தன் கடைவாயை நாவால் நனைத்த படி {நக்கியபடி}, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தன் கொடிக்கம்பத்தைப் பற்றிக் {அழுந்த பிடித்துக்} கொண்டான். உற்சாகமற்ற அந்த நிலையில் இருந்த பீமசேனனைக் கண்ட கடோத்கசன், அனைத்தையும் எரிக்கும் பெருநெருப்பைப் {காட்டுத்தீயைப்} போலக் கோபத்தால் சுடர்விட்டெரிந்தான். பிறகு, அபிமன்யுவின் தலைமையிலான பாண்டவப் படையைச் சேர்ந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலர், (தங்கள் நெஞ்சுக்குள்) உண்டான கோபத்தால் உரக்கக் கூச்சலிட்டபடி அந்த மன்னனை {துரியோதனனை} நோக்கி விரைந்தனர்.

கோபத்தால் நிறைந்து (போரிடுவதற்காகப்) பெரும் சீற்றத்தோடு (இப்படி) முன்னேறி வந்த அவர்களைக் கண்ட பரத்வாஜரின் மகன் {துரோணர்}, (உமது தரப்பின்) வலிமைமிக்கத் தேர்வீரர்களிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னார், “அருளப்பட்டிருப்பீராக, விரைந்து சென்று மன்னனைக் {துரியோதனனைக்} காப்பீராக. துன்பக் கடலில் மூழ்கும் அவன் {துரியோதனன்}, பெரும் ஆபத்தான நிலையில் நிறுத்தப்பட்டிருக்கிறான் {ஆபத்தான நிலையில் இருக்கிறான்}. பெரும் வில்லாளிகளும், பாண்டவப் படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான இவர்கள், பீமசேனனைத் தங்கள் தலைமையாகக் கொண்டு, வெற்றியை வெல்லும் {அடையும்} தீர்மானத்துடன் பல்வேறு வகைகளிலான ஆயுதங்களை ஏவிக்கொண்டும், வீசிக்கொண்டும், பயங்கரக் கூச்சலிட்டுக் கொண்டும், (உங்கள் தரப்பிலுள்ள) மன்னர்களை அச்சுறுத்தியபடி துரியோதனனை நோக்கி விரைந்து வருகிறார்கள்” {என்றார் துரோணர்}.

ஆசானின் {துரோணரின்} இவ்வார்த்தைகளைக் கேட்டதும், சோமதத்தன் தலைமையிலான உமது தரப்பு வீரர்களுமான பலர், பாண்டவப் படையணியை நோக்கி விரைந்தனர். கிருபர், பூரிஸ்ரவஸ், சல்லியன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, விவிம்சதி, சித்திரசேனன், விகர்ணன், சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்}, பிருஹத்பலன், அவந்தியின் இளவரசர்களான அந்த வலிமைமிக்க வில்லாளிகள் இருவர் {விந்தன் மற்றும் அனுவிந்தன்} ஆகியோர் குரு மன்னனைச் {துரியோதனனைச்} சூழ்ந்து கொண்டனர். ஒருவரையொருவர் கொல்ல விரும்பிய அந்தப் பாண்டவர்களும், தார்தராஷ்டிரர்களும், இருபது அடிகள் மட்டுமே முன்னேறி [1] தாக்கத் தொடங்கினர்.

[1] இருபது அடி அளவில் நெருங்கிச் சென்று போரிட்டனர் என்று வேறு ஒரு பதிப்பில் சொல்லப்பட்டுள்ளது. இதுவே சரியானதாகவும் இருக்கும்.

(தார்தராஷ்டிர வீரர்களிடம்) அவ்வார்த்தைகளைச் சொன்னவரும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவருமான பரத்வாஜர் மகன் {துரோணர்}, தன் பெரும் வில்லை வளைத்தபடி, இருபத்தாறு {26} கணைகளால் பீமனைத் துளைத்தார். மழைக்காலத்தில் மலைச்சாரலில் மழைத்தாரைகளைப் பொழியும் முகில்களின் திரளைப் போல, அந்த வலிமைமிக்கத் தேர்வீரர் {துரோணர்} கணைமழையால் பீமசேனனை மீண்டும் ஒருமுறை விரைவாக மறைத்தார். எனினும், பெரும் பலங்கொண்டவனும், வலிமைமிக்க வில்லாளியுமான பீமசேனனோ, பதிலுக்குப் பத்து {10} கணைகளால் அவரது {துரோணரின்} இடது புறத்தில் {இடது விலாவில்} விரைவாகத் துளைத்தான். அந்தக் கணைகளால் ஆழத் துளைக்கப்பட்டு, வலியை உணர்ந்த ஆசான் {துரோணர்}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தன் வயதின் நிமித்தமாக நலிவுற்று {பலவீனமடைந்து}, நினைவையும் இழந்து, கீழே திடீரெனத் தன் தேர்த்தட்டில் அமர்ந்தார்.

இப்படி வலியை உணர்ந்த அவரை {துரோணரைக்} கண்ட மன்னன் துரியோதனன், அஸ்வத்தாமன் ஆகிய இருவரும் கோபத்தால் தூண்டப்பட்டுப் பீமசேனனை நோக்கி விரைந்தனர். யுகத்தின் முடிவில் தன்னை வெளிப்படுத்தும் யமனைப் போன்றவர்களான அவ்விரு வீரர்களைக் கண்டதும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனான பீமசேனன், கதாயுதம் ஒன்றை விரைவாக எடுத்துக் கொண்டு, நேரத்தை இழக்காமல் தன் தேரில் இருந்து கீழே குதித்து, யமதண்டத்தைப் போன்ற கனமான கதாயுதத்தை உயர்த்திப் பிடித்தபடி, மலையொன்றைப் போல அந்தப் போரில் அசையாதவனாக நின்றான். (அவ்விவரிப்பின் படியே) முகடுகளுடன் கூடிய கைலாசத்தைப் போலத் தெரிந்தவனும், (இப்படி) உயர்த்தப்பட்ட கதாயுதத்துடன் கூடியவனுமான அவனை {பீமனைக்} கண்டவர்களான குரு மன்னன் {துரியோதனன்} மற்றும் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ஆகிய இருவரும் அவனை நோக்கி விரைந்தனர்.

அப்போது, பெரும் வேகத்துடன் தன்னை நோக்கி இப்படி விரையும் மனிதர்களில் முதன்மையான அவ்விருவரையும் நோக்கி வலிமைமிக்கப் பீமசேனன் மூர்க்கமாக தானே விரைந்தான். முகத்தில் பயங்கர உணர்வுகளுடனும், சீற்றத்துடனும் இப்படி விரையும் அவனை {பீமனைக்} கண்ட கௌரவப் படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்களில் பலர், அவனை {பீமனை} நோக்கி வேகமாக முன்னேறினர். பரத்வாஜர் மகனால் {அஸ்வத்தாமனால்} [2] தலைமை தாங்கப்பட்ட தேர்வீரர்களான அவர்கள் அனைவரும் இப்படியே ஒன்றுசேர்ந்து, பீமசேனனைக் கொல்லும் விருப்பத்தால் உந்தப்பட்டு, பல்வேறு விதங்களிலான ஆயுதங்களை அவனது {பீமனின்} மார்பில் ஏவி, அனைத்துப் புறங்களில் இருந்தும் பீமனைப் பீடித்தனர்.

[2] பரத்வாஜரின் மகன்,  என்று இங்கு சொல்லப்பட்டாலும், அது துரோணரைக் குறிக்கவில்லை என்றே கொள்ளவேண்டும். துரோணர் மயக்கமடைந்திருப்பதாலும், பீமனைத் தாக்க விரைபவனாக முன்னர் அஸ்வத்தாமனே சொல்லப்பட்டிருக்கிறான் என்பதாலும், பின்னால் வரும் வர்ணனைகள் அஸ்வத்தாமனையே வெளிப்படையாகக் குறிப்பதாலும், இங்கு பரத்வாஜரின் மகன் என்பதை பரத்வாஜரின் வழித்தோன்றல் என்றே பொருள் கொள்ளவேண்டும். எனவே, இஃது அஸ்வத்தாமனாகவே இருக்க வேண்டும். அல்லது இது மயக்கம் தெளிந்த துரோணராகவும் இருக்கலாம்.

இப்படி பீடிக்கப்பட்டுப் பெரும் ஆபத்தான நிலையில் நின்றிருந்த அந்த வலிமைமிக்கத் தேர்வீரனைக் {பீமனைக்} கண்டவர்களும், அபிமன்யுவின் தலைமையில் இருந்தவர்களுமான பாண்டவப் படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலரும், அவனை {பீமனைக்} காக்க விரும்பி தங்கள் இன்னுயிரையே இழக்கத் துணிந்து அந்த இடத்திற்கு விரைந்தனர். நீலமேகங்களின் திரளைப் போலத் தெரிந்தவனும், பீமனின் அன்பு நண்பனும், தாழ்ந்த நாட்டின் [3] வீர ஆட்சியாளனுமான நீலன், கோபத்தால் நிறைந்து துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} நோக்கி விரைந்தான். பெரும் வில்லாளியான நீலன், துரோணர் மகனுடனான {அஸ்வத்தாமனுடனான} ஒரு மோதலை எப்போதும் விரும்பினான் [4].

[3] அநூப நாடு. இது குறித்து மேலதிகத் தகவலுக்குப் பீஷ்ம பர்வம் பகுதி 94-க்குச் செல்லவும்.

[4] இந்த நீலன், எப்போதும் அஸ்வத்தாமனோடு பகைமை பாராட்டுபவன் என்று வேறு பதிப்பொன்றில் சொல்லப்பட்டுள்ளது.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பழங்காலத்தில் தேவர்களுக்குப் பயங்கரமாக இருந்தவனும், கோபத்துடன் மூன்று உலகங்களையும் தன் சக்தியால் அச்சுறுத்தியவனும், வெல்லப்பட முடியாதவனுமான தானவன் விப்ரசித்தியைத் துளைத்த சக்ரனைப் {இந்திரனைப்} போலத் தன் பெரிய வில்லை வளைத்த அவன் {நீலன்}, சிறகு படைத்த கணைகள் பலவற்றால் துரோணரின் மகனை {அஸ்வத்தாமனைத்} துளைத்தான். நீலனால் அப்படி நன்கு ஏவப்பட்டவையும், இறகுகளுடன் கூடிய சிறகு படைத்தவையுமான கணைகளால் துளைக்கப்பட்டு, குருதியில் மறைந்து, பெரும் வலியை உணர்ந்த அந்தத் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} கோபத்தால் நிறைந்தான்.

புத்திசாலி மனிதர்களில் முதன்மையானவனான அவன் {அஸ்வத்தாமன்}, இந்திரனின் வஜ்ராயுதத்தைப் போல உரத்த நாணொலி கொண்ட தன் பெரிய வில்லை வளைத்து நீலனின் அழிவில் தன் இதயத்தை நிலைநிறுத்தினான். பிறகு புத்திசாலி மனிதர்களில் முதன்மையானவனான அவன் {அஸ்வத்தாமன்}, கொல்லன் கைகளால் கூராக்கப்பட்ட சில பிரகாசமான பல்லங்களைக் குறிபார்த்து தன் எதிராளியின் {நீலனின்} நான்கு குதிரைகளைக் கொன்று, அவனது கொடிமரத்தையும் வீழ்த்தினான் [5]. மேலும் அவன் {அஸ்வத்தாமன்}, ஏழாவது கணையால் நீலனின் மார்பைத் துளைத்தான். ஆழத்துளைக்கப்பட்டு, பெரும் வலியை உணர்ந்த அவன் {நீலன்}, கீழே தன் தேர்த்தட்டில் அமர்ந்தான்.

[5] இங்கே தேரோட்டியையும் அடித்தான் என்று வேறொரு பதிப்பில் உள்ளது. இஃதை ஏற்றுக் கொண்டால்தான் அடுத்த வரியில் வரும் ஏழாவது கணையால் என்ற சொற்றொடர் சரியாக இருக்க முடியும்.

நீல மேகங்களின் திரளைப் போலத் தெரிந்த மன்னன் நீலன் மயக்கத்தில் இருப்பதைக் கண்ட கடோத்கசன், கோபத்தால் நிறைந்து, தன் சொந்தங்கள் புடைசூழ போரின் ஆபரணமான துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} நோக்கி மூர்க்கமாக விரைந்தான். அதே போலவே, போரில் எளிதில் வீழ்த்தப்பட முடியாத பிற ராட்சசர்கள் பலரும் அஸ்வத்தாமனை நோக்கி விரைந்தனர். பயங்கர முகத்தோற்றம் கொண்ட அந்த ராட்சசன் {கடோத்கசன்} தன்னை நோக்கி வருவதைக் கண்ட பரத்வாஜரின் வீரமகனும் {அஸ்வத்தாமனும்} அவனை {கடோத்கசனை} நோக்கி மூர்க்கமாகவே விரைந்தான்.

கோபத்தால் நிறைந்த அவன் {அஸ்வத்தாமன்}, கடோத்கசனுக்கு முன்பாக இருந்தவர்களும், கோபம் நிறைந்தவர்களும், அச்சந்தரும் முகத்தோற்றம் கொண்டவர்களுமான ராட்சசர்கள் பலரைக் கொன்றான். பெரிய வடிவம் கொண்டவனும், பீமனின் மகனுமான கடோத்கசன், துரோண மகனின் {அஸ்வத்தாமனின்} வில்லில் இருந்து ஏவப்பட்ட கணைகளின் மூலம் அம்மோதலில் முறியடிக்கப்பட்ட அவர்களைக் {ராட்சசர்களைக்} கண்டு கோபத்தால் நிறைந்தான். பிறகு அவன் {கடோத்கசன்}, கடுமையானதும், அச்சத்தைத் தருவதுமான மாயையை வெளிப்படுத்தினான். அதன் மூலம், இயல்புக்குமீறிய மாயாசக்திகள் கொண்ட அந்த ராட்சசர்களின் இளவரசன் {கடோத்கசன்}, அந்தப் போரில் துரோணரின் மகனைக் {அஸ்வத்தாமனைக்} குழப்பினான் {மயங்கச் செய்தான்}.

பிறகு, அந்த மாயையின் விளைவால் உமது துருப்புகள் அனைத்தும் போர்க்களத்தில் புறமுதுகிட்டோடின. வெட்டப்பட்டவர்களாக, பூமியின் பரப்பில் நெடுஞ்சாண் கிடையாகக் கிடப்பவர்களாக, அதிர்வுடன் நடுங்குபவர்களாக, முற்றிலும் ஆதரவற்றவர்களாக, குருதியில் நனைந்தவர்களாகவே ஒருவரையொருவர் அவர்கள் {கௌரவர்கள்} கண்டனர். துரோணர், துரியோதனன், சல்லியன், அஸ்வத்தாமன், கௌரவர்களில் முதன்மையானவர்களாகக் கருதப்பட்ட பெரும் வில்லாளிகளான பிறர் ஆகியோரும் தப்பி ஓடுவதாகத் தெரிந்தது. தேர்வீரர்கள் அனைவரும் நொறுக்கப்பட்டதாகவும், மன்னர்கள் அனைவரும் கொல்லப்பட்டதாகவும் தெரிந்தது [6]. குதிரைகளும், குதிரையோட்டிகளும் ஆயிரக்கணக்கில் வெட்டி வீழ்த்தப்பட்டதாகத் தெரிந்தது. இவை யாவற்றையும் கண்ட உமது துருப்புகள் தங்கள் பாசறைகளை நோக்கித் தப்பி ஓடினர்.

[6] வேறுபதிப்பில் இந்தப் பத்தி சற்றே மாறுபட்டிருக்கிறது. அது பின்வருமாறு: அறுக்கப்பட்டவர்களும், போர்க்களத்தில் புரள்கிறவர்களும், தளர்ச்சியுற்றவர்களும், ரத்தத்தால் நனைக்கப்பட்டவர்களுமான வீரர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு துரோணரையும், துரியோதனனையும், சல்லியனையும், அஸ்வத்தாமனையும் பார்த்தார்கள். சிறந்த வில்லாளிகளும், கௌரவர்களில் முக்கியத் தேர்வீரர்களும் பெரும்பாலும் அழிக்கப்பட்டார்கள்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, என்னதான் நானும், தேவவிரதரும் {பீஷ்மரும்} எங்கள் குரலின் உச்சத்தில் “போரிடுவீர்! ஓடாதீர்!! இவை யாவும் போரில் கடோத்கசனால் உண்டாக்கப்பட்ட ராட்சச மாயையாகும்” என்று இரைந்து கூச்சலிட்டாலும், தங்கள் புலன்கள் குழப்பப்பட்ட அவர்கள் நிற்கவே இல்லை. நாங்கள் இருவரும் இப்படிச் சொன்னாலும், பீதியால் பீடிக்கப்பட்டிருந்த அவர்கள் எங்கள் வார்த்தைகளுக்கு எந்த மதிப்பையும் அளிக்கவில்லை. அவர்கள் தப்பி ஓடுவதைக் கண்ட பாண்டவர்கள், வெற்றி தங்களுடையது என்று கருதினார்கள். (தங்களுடன் உள்ள) கடோத்கசனுடன் அவர்கள் சிங்க முழக்கங்களையிட்டார்கள் {சிங்கம் போல முழங்கினார்கள்} [7].

[7] வேறு ஒரு பதிப்பில், “அந்தக் கௌரவர்கள் வேகமாக ஓடுவதைக் கண்ட பாண்டவர்கள் வெற்றியை அடைந்து கடோத்கசனோடு சேர்ந்து சிம்ம முழக்கமிட்டனர்” என்று இருக்கிறது.

சங்கொலிகள், துந்துபி ஒலிகள் ஆகியவற்றோடு கலந்த தங்கள் கூச்சலுடன் சுற்றிலும் அந்தச் சூழ்நிலையையே {தங்கள் பேரொலியால்} அவர்கள் நிறைத்தார்கள். இப்படியே சூரியன் மறையும் நேரத்தின் நெருக்கத்தில் அந்தப் பொல்லாத கடோத்கசனால் முறியடிக்கப்பட்ட உமது படை முழுவதும் திசைகள் அனைத்திலும் தப்பி ஓடியது” {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English