“Karna ran away” said Bhishma! | Bhishma-Parva-Section-099 | Mahabharata In Tamil
(பீஷ்மவத பர்வம் – 57)
பதிவின் சுருக்கம் : அர்ஜுனனின் திறமையையும், பாண்டவர்கள் வெல்லப்பட முடியாதவர்கள் என்பதையும் துரியோதனனுக்கு எடுத்துச் சொன்ன பீஷ்மர்; சிகண்டியைத் தவிரப் பாஞ்சாலர்களைத் தான் கொல்வதாக உறுதியேற்ற பீஷ்மர்; பீஷ்மரின் உறுதியை துச்சாசனனுக்குத் தெரிவித்த துரியோதனன்; பீஷ்மரைப் பாதுகாப்பதே முதன்மையான கடமை என்று துச்சாசனனுக்கு ஆணையிட்ட துரியோதனன்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “உயர் ஆன்ம பீஷ்மர், உமது மகனின் {துரியோதனனின்} கத்தி போன்ற சொற்களால் ஆழத் துளைக்கப்பட்டுப் பெரும் துயரில் நிறைந்தார். ஆனால் மறுமொழியாக ஏற்பில்லாத {இனிமையற்ற} வார்த்தை ஒன்றையும் அவர் சொல்லவில்லை. உண்மையில், அந்தச் சொற்கத்திகளால் சிதைக்கப்பட்டு, துயராலும், சினத்தாலும் நிறைந்த அவர் {பீஷ்மர்}, ஒரு பாம்பைப் போலப் பெருமூச்சுவிட்டுக் கொண்டு, நீண்ட நேரம் (அமைதியாகச்) சிந்தித்தார்.
உலகை அறிந்தவர்களில் முதன்மையானவரான அவர் {பீஷ்மர்}, பிறகு கோபத்தால், தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள் ஆகியோருடன் கூடிய உலகத்தையே எரித்துவிடுபவரைப் போலத் தன் விழிகளை உயர்த்தி, உமது மகனிடம் இந்த அமைதியான வார்த்தைகளைச் சொன்னார், "ஓ! துரியோதனா, உன் சொற்கத்திகளால் என்னை ஏன் இப்படித் துளைக்கிறாய்? உனக்கு எது நன்மையோ அதைச் செய்ய முழு வல்லமையுடன் முயற்சி செய்கிறேன், எப்போதும் {உனக்கு நன்மையே} செய்கிறேன். உண்மையில், உனக்கு ஏற்புடையதைச் செய்ய விரும்பியே, போரில் என் உயிரையும் விடத் தயாராக இருக்கிறேன்.
உண்மையிலேயே பாண்டவர்கள் வெல்லப்படமுடியாதவர்களாவர். பாண்டுவின் அந்தத் துணிச்சல்மிக்க மகன் {அர்ஜுனன்}, போரில் சக்ரனையே {இந்திரனையே} வெற்றிக் கொண்டு காண்டவ வனத்தில் அக்னியை நிறைவு {திருப்தி} கொள்ளச் செய்தானே, அதுவே {அவன் வெல்லப்பட முடியாதவன் என்பதை உணர்த்தப்} போதுமான அறிகுறியாகும். ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {துரியோதனா}, பாண்டுவின் அதே மகன் {அர்ஜுனன்}, கந்தர்வர்களால் சிறைபிடிக்கப்பட்டுத் தூக்கிச் செல்லப்பட்ட உன்னை மீட்டானே, அதுவே போதுமான அறிகுறியாகும்.
அந்தச் சந்தர்ப்பத்தில், ஓ! தலைவா {துரியோதனா}, துணிச்சல்மிக்க உன் உடன் பிறந்த தம்பிகள் அனைவரும், சூத சாதியைச் சேர்ந்த அந்த ராதையின் மகனும் {கர்ணனும்} தப்பி ஓடினார்கள். (அர்ஜுனனால் நீ மீட்கப்பட்ட) அதுவும் {அந்த நிகழ்வும்} போதுமான அறிகுறியே.
அவன் {அர்ஜுனன்}, விராடனின் நகரத்தில் ஒன்றுகூடியிருந்த நம் அனைவரின் மீதும் தனியாளாகவே பாய்ந்தான். அது போதுமான அறிகுறியே.
அவன் {அர்ஜுனன்}, சினத்தால் தூண்டப்பட்டிருந்த துரோணரையும், என்னையும் போரில் வென்று, எங்கள் ஆடைகளை எடுத்துச் சென்றான். அது போதுமான அறிகுறியே.
பசுக்களைக் கவர்ந்த அந்த முந்தைய நிகழ்விலேயே அவன் {அர்ஜுனன்}, வலிமைமிக்க வில்லாளிகளான துரோணரின் மகனையும் {அஸ்வத்தாமனையும்}, சரத்வானின் மகனையும் {கிருபரையும்} தோல்வியடையச் செய்தான். அது போதுமான அறிகுறியே.
பசுக்களைக் கவர்ந்த அந்த முந்தைய நிகழ்விலேயே அவன் {அர்ஜுனன்}, வலிமைமிக்க வில்லாளிகளான துரோணரின் மகனையும் {அஸ்வத்தாமனையும்}, சரத்வானின் மகனையும் {கிருபரையும்} தோல்வியடையச் செய்தான். அது போதுமான அறிகுறியே.
தன் ஆண்மையைக் குறித்துப் பெரிதாகத் தற்பெருமை பேசும் கர்ணனையும் தோல்வியடைச் செய்த அவன் {அர்ஜுனன்}, பின்னவனின் {கர்ணனின்} ஆடைகளை உத்தரனுக்குக் கொடுத்தான். அது போதுமான அறிகுறியே.
அந்தப் பிருதையின் மகன் {குந்தியின் மகன் அர்ஜுனன்}, வாசவனாலேயே {இந்திரனாலேயே} வீழ்த்தப்பட இயலாத நிவாதகவசர்களைப் போரில் வீழ்த்தினான். அது போதுமான அறிகுறியே.
சங்கு, சக்கரம், கதாயுதம் தரித்து அண்டத்தைக் காப்பவனையே {கிருஷ்ணனை} தன் பாதுகாவலனாகக் கொண்ட அந்தப் பாண்டுவின் மகனை {அர்ஜுனனை}, போரில் பலத்தால் வெல்ல இயன்றவன் உண்மையில் எவன் இருக்கிறான்? எல்லையில்லா சக்தி படைத்தவனும், அண்டத்தையே அழிப்பவனும் அந்த வாசுதேவனே {கிருஷ்ணனே}. அனைவருக்கும் உயர்ந்த தலைவனும், தேவர்களுக்குத் தேவனும், பரமாத்மாவும், அழிவில்லாதவனும் அவனே {கிருஷ்ணனே}. நாரதராலும், இதர பெரும் முனிவர்களாலும், ஓ! மன்னா {துரியோதனா}, பலவாறாக விவரிக்கப்படுபவன் அவனே {கிருஷ்ணனே}.
எனினும், ஓ! சுயோதனா {துரியோதனா}, உன் மூடத்தனத்தின் விளைவால், சொல்லத்தக்கது எது, {சொல்லத்} தகாதது எது என்பதை நீ அறியவில்லை. மரணத்தின் விளிம்பில் நிற்கும் மனிதன் மரங்கள் அனைத்தையும் தங்கத்தாலானவையாகக் காண்கிறான். அப்படியே, ஓ! காந்தாரியின் மகனே {துரியோதனா}, நீயும் அனைத்தையும் தலைகீழாகப் {விபரீதமாகப்} பார்க்கிறாய். பாண்டவர்களுடனும், சிருஞ்சயர்களுடனும் கடும்பகையை {நீயாகவே} தூண்டிக் கொண்ட நீ, யுத்தத்தில் இப்போது அவர்களுடன் (நீயே) போரிடுவாயாக. நீ ஆண்மையுடன் செயல்பட்டு {அதை} நாங்கள் காணும்படி செய்வாயாக.
என்னைப் பொறுத்தவரை, ஓ! மனிதர்களில் புலியே {துரியோதனா}, சிகண்டியை மட்டும் தவிர்த்து, ஒன்றாகக் கூடியிருக்கும் சோமகர்கள் மற்றும் பாஞ்சாலர்கள் அனைவரையும் நான் கொல்வேன். {ஒன்று} போரில் அவர்களால் கொல்லப்பட்டு நான் யமலோகம் செல்வேன், அல்லது போரில் அவர்களைக் கொன்று, நான் உனக்கு மகிழ்ச்சியைத் தருவேன்.
துருபதனின் மாளிகையில் முதலில் சிகண்டி பெண்ணாகவே {சிகண்டினியாகவே} பிறந்தான். வரம் அருளப்பட்டதன் விளைவாலேயே அவள் {சிகண்டினி} ஆணானாள். அனைத்துக்கும் பிறகும் கூட அவள் {இன்னும்} சிகண்டினிதானே. ஓ! பாரதா {துரியோதனா}, நான் என் உயிரையே இழப்பதாக இருந்தாலும், அவனைக் {சிகண்டியைக்} கொல்ல மாட்டேன். படைப்பாளன் {பிரம்மன்} முதலில் {முற்காலத்தில்} படைத்தவாறே அவள் {இன்னும்} அதே சிகண்டினிதான்.
ஓ! காந்தாரியின் மகனே {துரியோதனா}, மகிழ்வான உறக்கத்தில் இவ்விரவைக் கடத்துவாயாக. உலகம் நீடித்திருக்கும் வரை மனிதர்களால் {வீரர்களால்} பேசப்படப்போகும் ஒரு கடும்போரை நாளை நான் போரிடப் போகிறேன் {செய்யப் போகிறேன்}" {என்றார் பீஷ்மர்}.
ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பீஷ்மரால் இப்படிச் சொல்லப்பட்டவனான உமது மகன் {துரியோதனன்} அங்கிருந்து வந்துவிட்டான். {தன் குரு போன்ற} திருவாளரிடம் {பீஷ்மரிடம்} தலைவணங்கிய பிறகு அவன் {துரியோதனன்}, தனது பாசறைக்குத் திரும்பி வந்தான். திரும்பி வந்த மன்னன் {துரியோதனன்}, தனது பணியாட்களை அனுப்பிவிட்டான். பிறகு, அந்த எதிரிகளை அழிப்பவன் விரைவாகத் தனது வசிப்பிடத்திற்குள் நுழைந்தான். (பாசறைக்குள்) நுழைந்ததும், அந்த ஏகாதிபதி {துரியோதனன்}, அந்த இரவை (உறக்கத்தில்) கழித்தான்.
அந்த இரவு விடிந்ததும், எழுந்த மன்னன் {துரியோதனன்}, அரசவீரர்கள் அனைவரிடமும் "படைகளை அணிவகுக்கச் செய்வீராக. சினத்தால் தூண்டப்பட்ட பீஷ்மர் இன்று சோமகர்கள் அனைவரையும் கொல்லப் போகிறார்" என்றான். இரவில் துரியோதனனின் வெகுவான புலம்பல்களைக் கேட்டிருந்த பீஷ்மர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவற்றைத் தனக்கான கட்டளைகளாகவே கருதினார். பெரும் துயரில் நிறைந்து, தன் அடிமைத்தனத்தை இகழ்ந்த அந்தச் சந்தனுவின் மகன் {பீஷ்மர்}, போரில் அர்ஜுனனுடனான ஒரு மோதலை நினைத்து {கருதி} வெகு நேரம் சிந்தித்தார் [1].
[1] இதே இடத்தில் வேறு ஒரு பதிப்பில், "பீஷ்மர் இரவில் பலவாறான துரியோதனனின் அந்தப் புலம்பலைக் கேட்டு அதைத் தனக்கு அவமதிப்பு போலக் கருதி அதிகமாக விலகி {அதிக ஒழிவடைந்து}, தன் சுதந்திரமற்றத் {பராதீனத்} தன்மையை நிந்தித்துப் போர்க்களத்தில் அர்ஜுனனோடு போர் புரிய விரும்பி நெடுநேரம் ஆலோசித்தார்.
கங்கையின் மைந்தர் {பீஷ்மர்} அப்படி நினைப்பதைக் குறிப்புகளால் புரிந்து கொண்ட துரியோதனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துச்சாசனனிடம், "ஓ! துச்சாசனா, பீஷ்மரைப் பாதுகாக்க விரைவாகத் தேர்கள் நியமிக்கப்படட்டும். (நமது படையின்) இருபத்திரண்டு {22} பிரிவுகள் முழுமையும் தூண்டப்படட்டும். பாண்டவர்களை அவர்களுடைய துருப்புகளுடன் படுகொலை செய்து அரசாட்சியைக் {நாமே} கைப்பற்றவேண்டுமென்று தொடர்ந்து பல ஆண்டுகளாக நாம் எதை சிந்தித்து கொண்டிருக்கிறோமோ அதற்கான நேரம் இப்போது வந்துள்ளது. இக்காரியத்தில், பீஷ்மரைப் பாதுகாப்பதே நமது முதன்மையான கடமை என நான் நினைக்கிறேன். நம்மால் பாதுகாக்கப்படும் அவர் {பீஷ்மர்} போரில் நம்மையும் பாதுகாத்து, பார்த்தர்களையும் {பாண்டவர்களையும்} கொல்வார்.
தூய ஆன்மாவுடன் அவர் {பீஷ்மர்} என்னிடம், "சிகண்டியை நான் கொல்லேன். அவன் முன்பு பெண்ணாயிருந்தவன், எனவே, ஓ! மன்னா {துரியோதனா}, போரில் அவன் என்னால் தவிர்க்கப்பட வேண்டியவன். ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {துரியோதனா}, என் தந்தைக்கு நன்மை செய்ய விரும்பிய நான், முன்பு விரிந்து வளர்ந்த அரசாட்சியைத் துறந்தேன் என்பதை உலகம் அறியும்.
எனவே, ஓ! மனிதர்களில் முதன்மையானவனே {துரியோதனா}, பெண்ணையோ, முன்பு பெண்ணாக இருந்த எவரையுமோ போரில் நான் கொல்லேன். இதை நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன்.
ஓ! மன்னா {துரியோதனா}, இந்தச் சிகண்டி முதலில் பெண்ணாகப் பிறந்தவன். நீ அந்தக் கதையைக் கேட்டிருக்கிறாய். போர் தொடங்குவதற்கு முன்னர் நான் சொன்னது போலவே அவள் சிகண்டினியாகப் பிறந்திருந்தாள். மகளாகப் பிறந்த அவள் ஆணாக ஆனாள் [2]. உண்மையில், அவள் என்னுடன் போரிடுவாள், ஆனால் நான் என் கணைகளை அவள் மீது ஏவ மாட்டேன். பாண்டவர்களின் வெற்றியை விரும்பும் பிற க்ஷத்திரியர்களைப் பொறுத்தவரை, ஓ! ஐயா {துரியோதனா}, அவர்கள் போர்க்களத்தில் நான் அடையத்தக்க இடத்திற்கு வந்தால், நான் அவர்களைக் கொல்வேன்" என்றார் {பீஷ்மர்}. இவையே, சாத்திரங்களை அறிந்தவரும், பாரதர்களின் குலத்தலைவனுமான அந்தக் கங்கையின் மைந்தர் {பீஷ்மர்} என்னிடம் சொன்ன வார்த்தைகளாகும்.
[2] சிகண்டினியானவன் கன்னிகையாகப் பிறந்து பிறகு புருஷனானவன். என்று வேறு ஒரு பதிப்பில் இருக்கிறது.
எனவே, அந்தக் கங்கையின் மைந்தரைக் {பீஷ்மரைக்} காப்பதே நமது முதன்மையான கடமை என்று முழு ஆன்மாவோடு {மனத்தோடு} நான் நினைக்கிறேன். பெரும் காட்டில் பாதுகாப்பில்லாத சிங்கத்தை ஓர் ஓநாய்கூடக் கொன்றுவிடலாம். ஓநாயால் கொல்லப்படும் சிங்கத்தைப் போல, சிகண்டியால் கங்கையின் மைந்தர் {பீஷ்மர்} கொல்லப்படாதிருக்கட்டும். நமது தாய்மாமன் சகுனி, சல்லியன், கிருபர், துரோணர், விவிம்சதி ஆகியோர் கங்கையின் மைந்தரைக் {பீஷ்மரைக்} கவனமாகப் பாதுகாக்கட்டும். அவர் பாதுகாக்கப்பட்டால், (நமது) வெற்றி உறுதியே" என்றான் {துரியோதனன் துச்சாசனனிடம்}.
துரியோதனனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அனைவரும், தேர்களின் பெரும் படைப்பிரிவு ஒன்றின் துணையுடன் கங்கையின் மைந்தரை {பீஷ்மரைச்} சூழ்ந்து கொண்டனர். உமது மகன்களும் பீஷ்மரைச் சுற்றித் தங்கள் நிலைகளை அமைத்துக் கொண்டு போரிடச் சென்றனர். பூமியையும் ஆகாயத்தையும் நடுங்கச் செய்தபடியும், பாண்டவர்களின் {பாண்டவப் படையினரின்} இதயங்களில் அச்சத்தை உண்டாக்கியபடியும் அவர்கள் அனைவரும் சென்றார்கள். அந்தத் தேர்களாலும், யானைகளாலும் ஆதரிக்கப்பட்ட (அந்தக் கௌரவப் படையின்) வலிமைமிக்கத் தேர்வீரர்கள், போரில் கவசம் தரித்துப் பீஷ்மரைச் சூழ்ந்து நின்றார்கள். தேவர்கள் தங்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் நடந்த போரில் வஜ்ரபாணியைப் {இந்திரனைப்} பாதுகாத்து நின்றது போலவே அந்த வலிமைமிக்கத் தேர்வீரரைப் {பீஷ்மரைப்} பாதுகாக்க அவர்கள் அனைவரும் தங்கள் நிலைகளை எடுத்தார்கள்.
பிறகு மீண்டுமொருமுறை தன் தம்பியிடம் {துச்சாசனனிடம்} பேசிய துரியோதனன், "யுதாமன்யு அர்ஜுனனுடைய தேரின் இடது சக்கரத்தைப் பாதுகாக்கிறான், உத்தமௌஜஸ் அவனது வலது சக்கரத்தைப் பாதுகாக்கிறான். மேலும் (இப்படிப் பாதுகாக்கப்படும்) அர்ஜுனன் சிகண்டியைப் பாதுகாக்கிறான். ஓ! துச்சாசனா, பார்த்தனால் {அர்ஜுனனால்} பாதுகாக்கப்படும் சிகண்டியால், நம் பாதுகாப்பையும் மீறி பீஷ்மரைக் கொல்ல இயலாதபடி தக்க நடவடிக்கைகளை எடுப்பாயாக" என்றான். தன் அண்ணனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட உமது மகன் துச்சாசனன், பீஷ்மரை முன்னிலையில் நிறுத்தி துருப்புகளுடன் போரில் முன்னேறினான்.
பிறகு மீண்டுமொருமுறை தன் தம்பியிடம் {துச்சாசனனிடம்} பேசிய துரியோதனன், "யுதாமன்யு அர்ஜுனனுடைய தேரின் இடது சக்கரத்தைப் பாதுகாக்கிறான், உத்தமௌஜஸ் அவனது வலது சக்கரத்தைப் பாதுகாக்கிறான். மேலும் (இப்படிப் பாதுகாக்கப்படும்) அர்ஜுனன் சிகண்டியைப் பாதுகாக்கிறான். ஓ! துச்சாசனா, பார்த்தனால் {அர்ஜுனனால்} பாதுகாக்கப்படும் சிகண்டியால், நம் பாதுகாப்பையும் மீறி பீஷ்மரைக் கொல்ல இயலாதபடி தக்க நடவடிக்கைகளை எடுப்பாயாக" என்றான். தன் அண்ணனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட உமது மகன் துச்சாசனன், பீஷ்மரை முன்னிலையில் நிறுத்தி துருப்புகளுடன் போரில் முன்னேறினான்.
(இப்படிப் பெரும் எண்ணிக்கையிலான தேர்களால் சூழப்பட்ட) பீஷ்மரைக் கண்ட தேர்வீரர்களில் முதன்மையான அந்த அர்ஜுனன், திருஷ்டத்யும்னனிடம், "ஓ! இளவரசே {திருஷ்டத்யும்னா}, இன்று பீஷ்மரின் முன்பாக மனிதர்களில் புலியான சிகண்டியை நிறுத்துவாயாக, ஓ! பாஞ்சால இளவரசே {திருஷ்டத்யும்னா}, நானே அவனுக்குப் {சிகண்டிக்குப்} பாதுகாவலனாக இருப்பேன்" என்றான் {அர்ஜுனன்}" {என்றான் சஞ்சயன்}.
ஆங்கிலத்தில் | In English |