Wednesday, February 17, 2016

சர்வதோபத்திர மண்டல வியூகங்கள்! - பீஷ்ம பர்வம் பகுதி - 100

Sarvatobhadra and Constellation Vyuhas! | Bhishma-Parva-Section-100 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 58)

பதிவின் சுருக்கம் : பீஷ்மர் அமைத்துக் கொண்ட சர்வதோபத்திர வியூகம்; பாண்டவர்கள் அமைத்துக் கொண்ட வியூகம்; பாண்டவர்களும் கௌரவர்களும் தங்கள் தங்கள் வியூகங்களில் நின்ற நிலைகள்; போர் தொடங்கும் முன்பு காணப்பட்ட அபசகுனங்கள்....

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பிறகு, சந்தனுவின் மகனான பீஷ்மர் துருப்புகளுடன் கிளம்பினார். அவர் {பீஷ்மர்} தனது துருப்புகளைச் சர்வதோபத்திரம் என்று அழைக்கப்படும் வலிமைமிக்க வியூகத்தில் அமைத்தார் [1]. கிருபர், கிருதவர்மன், வலிமைமிக்கத் தேர்வீரனான சைப்யன், சகுனி, சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்}, காம்போஜர்களின் ஆட்சியாளன் சுதக்ஷிணன் ஆகியோர் அனைவரும் பீஷ்மருடனும், உமது மகன்களுடனும் சேர்ந்து மொத்தப் படையின் முன்னணியில் தங்கள் நிலைகளை அமைத்துக் கொண்டு அந்த (கௌரவ) வியூகத்தின் முகப்பில் நின்றார்கள்.


[1] சர்வதோபத்திரம் என்ற வியூகமானது, அனைத்துத் திக்குகளையும் வீரர்கள் நோக்கும் வகையில் சதுரமான ஒரு வியூகமாக இருந்திருக்க வேண்டும் எனத் தெரிகிறது எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். சர்வதோபத்திரம் என்றால் அனைத்துப் புறங்களிலும் பாதுகாப்பானது என்று பொருளாம்.
 வில்லிபாரதத்தில் கௌரவர்கள் சருப்பதோபத்ர வியூகம் அமைத்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
ஒரு பேர் யூகம் சருப்பதோபத்ரம் ஆக அணி செய்து,  மான உரவோன், .   {வில்லி பாரதம் 3:ஒ.போ.ச.10}

கவசங்கள் தரித்திருந்த துரோணர், பூரிஸ்ரவஸ், சல்லியன், பகதத்தன் ஆகியோர், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அந்த வியூகத்தின் வலது பக்கத்தில் தங்கள் நிலைகளை அமைத்தனர். அஸ்வத்தாமன், சோமதத்தன், பெரும் தேர்வீரர்களான அவந்தியின் இளவரசர்கள் இருவர் {விந்தன், அனுவிந்தன்} ஆகியோர் ஒரு பெரும் படையுடன் இடது பக்கத்தைப் பாதுகாத்தனர். துரியோதனன், ஓ, ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அனைத்துப் புறங்களிலும் திரிகர்த்தர்களால் சூழப்பட்டுப் பாண்டவர்களுடன் மோதுவதற்காக வியூகத்தின் மத்தியில் தன் நிலையை அமைத்துக் கொண்டான். தேர்வீரர்களில் முதன்மையான அலம்புசன், வலிமைமிக்கத் தேர்வீரனான சுருதாயுஷ் [2] ஆகியோர் கவசங்களைத் தரித்துக் கொண்டு, வியூகத்தின் பின்புறத்திலும், எனவே மொத்தப்படையின் பின்புறத்திலும் தங்கள் நிலையை அமைத்துக் கொண்டனர். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உமது வீரர்கள் அந்தச் சந்தர்ப்பத்தில் இப்படித் தங்கள் வியூகத்தை அமைத்துக்கொண்டும், கவசம் தரித்துக் கொண்டும் எரியும் நெருப்பைப் போலத் தெரிந்தனர்.

[2] கலிங்க மன்னன் சுருதாயுஷ் பீமனால் கொல்லப்பட்டதாக பீஷ்ம்பர்வம் பகுதி 54ஆவில் குறிப்பு இருக்கிறது. இது வேறு ஒருவனாக இருக்க வேண்டும்.

கவசம் தரித்தவர்களான மன்னன் யுதிஷ்டிரன், பாண்டுவின் மகனான பீமசேனன், மாத்ரியின் இரட்டை மகன்களான நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோர் {தங்கள்} வியூகத்தின் முன்னிலையில் தங்கள் நிலைகளை அமைத்துக் கொண்டனர், எனவே அவர்கள் அனைவரும் தங்கள் துருப்புகளின் முகப்பிலேயே இருந்தனர் [3]. பகையணியினரை அழிப்பவர்களான திருஷ்டத்யும்னன், விராடன், வலிமைமிக்க வில்லாளியான சாத்யகி ஆகியோர் ஒரு பெரும்படையின் துணையோடு நின்றனர். சிகண்டி, விஜயன் (அர்ஜுனன்), ராட்சசன் கடோத்கசன், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட சேகிதானன், வீர குந்திபோஜன் ஆகியோர், ஒரு பெரும்படையால் சூழப்பட்டுப் போருக்காக நின்றனர். பெரும் வில்லாளியான அபிமன்யு, வலிமைமிக்கத் துருபதன், (ஐந்து) கைகேய {கேகயச்} சகோதரர்கள் ஆகியோர் கவசம் தரித்துக் கொண்டு போருக்காக நின்றனர்.

[3] கங்குலியின் பதிப்பில் அர்ஜுனனின் பெயர் இங்கு விடுபட்டுள்ளது. வேறு பதிப்புகளில் அர்ஜுனனின் பெயரும் இடம்பெறுகிறது.

இப்படியே போரில் பெரும் துணிவுமிக்கவர்களான அந்தப் பாண்டவர்களும் கவசமணிந்து கொண்டு வலிமைமிக்கதும், வெல்லப்பட முடியாததுமான வியூகத்தை [4] வகுத்துக் கொண்டு போருக்காக நின்றனர்.

[4] வேறு பதிப்புகளில் நட்சத்திரக் கூட்டங்களைப் போல (circular galaxy formation) வட்டவடிவிலான மண்டல வியூகம் என்று சொல்லப்படுகிறது. வில்லிபாரதத்தில் பாண்டவர்கள் பற்ப  வியூகம் அமைத்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது.  வில்லிபாரத விளக்கவுரையில் பற்பம் என்பதை பத்மம் அதாவது பத்ம வியூகம் என்று விளக்கியிருக்கிறார்கள். பற்பம் என்றால் சாம்பல் என்ற பொருளும் உண்டு.

வெம் பற்ப ராக வரை யூகமாக, முறையால் அணிந்து, வெயில் கால் அம் பற்ப ராக பதி என்ன நிற்க  {வில்லி பாரதம் 3:ஒ.போ.ச.13}

பிறகு, ஓ! ஏகாதிபதி, உமது வியூகத்தின் மன்னர்கள் தங்கள் படைகளோடு கூடி சிறப்பாக முயற்சி செய்து, தங்களுக்கு முன்னிலையில் பீஷ்மரை நிறுத்திக் கொண்டு, போரில் பார்த்தர்களை {பாண்டவர்களை} எதிர்த்து விரைந்தனர். அதே போலவே பீமசேனனால் தலைமை தாங்கப்பட்ட பாண்டவர்களும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போரில் வெற்றியை விரும்பி, பீஷ்மருடன் போரிடுவதற்காகச் சென்றனர்.

சிங்க முழக்கங்கள், குழம்பிய கூக்குரல்கள் ஆகியவற்றுடன் தங்கள் சங்குகள், கிரகசங்கள், மாட்டுக் கொம்புகள் ஆகியவற்றை ஊதிக்கொண்டு, பேரிகைகள், பணவங்கள் ஆகியவற்றை ஆயிரக்கணக்கில் அடித்துக் கொண்டு பாண்டவர்கள் {பாண்டவப் படையினர்} சென்றனர். பயங்கரக் கூச்சல்களை எழுப்பியபடியே அந்தப் பாண்டவர்கள் போருக்குச் சென்றார்கள். எங்கள் பேரிகைகள், பணவங்கள், சங்குகள், துந்துபிகள் ஆகியவற்றின் ஆரவாரத்துடனும், உரத்த சிங்க முழக்கங்களுடனும், இன்னும் பிற விதங்களிலான கூச்சல்களாலும் நாங்களும் எதிரியின் கூச்சல்களுக்கு மறுமொழி கொடுத்தபடியே சினத்தால் தூண்டப்பட்டு அவர்களை எதிர்த்து பெரும் மூர்க்கத்துடன் விரைந்தோம்.

இந்த ஒலிகள் அனைத்தும் ஒன்றோடொன்று கலந்து ஒரு பயங்கர இரைச்சலை உண்டாக்கியது. பிறகு, இரு படைகளின் வீரர்களை ஒருவரையொருவர் நோக்கி விரைந்து தாக்கத் தொடங்கினர். அந்த மோதலால் உண்டான ஆரவாரத்தின் விளைவாகப் பூமியே நடுங்குவதாகத் தெரிந்தது. பறவைகளும் கடுமையாக இரைந்தபடியே காற்றில் {ஆகாயத்தில்} பறந்தன. எழும்போது ஒளிமிக்கவனாக இருந்த சூரியன் {ஒளி} மங்கினான். பெரும் பயங்கரங்களைக் குறிப்பது போலக் காற்றுக் கடுமையாக வீசியது. மோசமான படுகொலைகளை முன்னறிவிக்கும் வண்ணம், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அச்சந்தரும் நரிகள் பயங்கரமாக ஊளையிட்டபடியே உலவின.

திசைகள் எரிவது போலத் தெரிந்தன, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நீலவானத்தில் இருந்து புழுதி {மண்} மாரி பொழிந்தது. இரத்தத்தோடு கூடிய எலும்புத்துண்டுகளும் அங்கே மழையாகப்பொழிந்தது. அழுது கொண்டிருந்த விலங்குகள் அனைத்தின் கண்களில் இருந்தும் கண்ணீர் வழிந்தது. கவலையால் நிறைந்த அவை, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிறுநீரையும், தங்கள் குடல்களில் இருந்த உள்ளடக்கங்களையும் {மலத்தையும்} வெளியேற்றத் தொடங்கின. ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, மனித ஊனுண்ணிகள், ராட்சசர்கள் ஆகியோரின் உரத்தக் கூச்சல்கள் போரின் பேரொலியையே செவிக்குப் புலப்படாதவையாக ஆக்கின. நரிகள், வல்லூறுகள், காக்கைகள் நாய்கள் ஆகியன, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, பல்வேறு விதங்களிலான ஒலிகளை எழுப்பியபடி, களத்தில் பாயவும், கீழ்நோக்கி வரவும் ஆரம்பித்தன. சூரிய வட்டிலை {சூரியனைத்} தாக்கிய சுடர்மிகும் எரிகோள்கள் {தூமகேது} பெரும் பயங்கரங்களை முன்னறிவித்தபடி பூமியில் வேகமாக விழுந்தன.

பாண்டவர்களுக்கும் , தார்தராஷ்டிரர்களுக்கும் உரிய இரு பெரும் படைகளும், அந்தப் பயங்கர மோதலில் புயலால் நடுங்கும் காடுகளைப் போலச் சங்குகள் மற்றும் பேரிகைகள் உருவாக்கிய பெரும் ஆரவாரத்தின் விளைவாக நடுங்கின. மன்னர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றால் நிறைந்தவையும், தீய {அசுபமான} காலத்தில் ஒருவரோடொருவர் மோதிக்கொண்டவையுமான இரு படைகளும் உண்டாக்கிய ஒலி, புயலால் கலங்கடிக்கப்படும் பெருங்கடல்களின் ஒலிகளை ஒத்திருந்தது” {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English