Friday, February 19, 2016

அபிமன்யுவின் ஆற்றல்! - பீஷ்ம பர்வம் பகுதி - 101

The prowess of Abhimanyu! | Bhishma-Parva-Section-101 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 59)

பதிவின் சுருக்கம் : அபிமன்யு வெளிப்படுத்திய ஆற்றல்; அபிமன்யுவை எதிர்க்க அலம்புசனை ஏவிய துரியோதனன்; அலம்புசனுக்கும் திரௌபதி மகன்களுக்கும் இடையில் நடந்த மோதல்; அலம்புசனை மயங்கச் செய்த திரௌபதியின் மகன்கள்; திரௌபதியின் மகன்கள் தங்கள் தேர்களை இழந்தது; அவர்களது நிலையைக் கண்ட அபிமன்யு அலம்புசனோடு மோதியது...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பெரும் சக்தி படைத்த உன்னத அபிமன்யு, பழுப்பு நிறத்திலான தன் குதிரைகளால் சுமக்கப்பட்டு, மழைத்தாரைகளைப் பொழியும் மேகங்களைப் போலத் தன் கணைமாரியைப் பொழிந்தபடி துரியோதனனின் வலிமைமிக்கப் படையை நோக்கி விரைந்தான். ஓ! குருகுலத்தின் மகனே {திருதராஷ்டிரரே}, எதிரிகளைக் கொல்பவனான சுபத்திரையின் மகன் {அபிமன்யு} கோபத்தால் தூண்டப்பட்டு, ஆயுத செல்வத்தை எடுத்துக் கொண்டு அளவற்ற கடலாகிய (கௌரவப்) படையில் மூழ்கினான். அந்தப் போரில் {அபிமன்யுவைத்} தடுக்க உமது வீரர்களால் இயலவில்லை.

அந்தப் போரில் அவனால் {அபிமன்யுவால்} ஏவப்பட்டவையான உயிரைக்குடிக்கும் கணைகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இறந்த ஆவிகளின் மன்னனுடைய {யமனுடைய} உலகங்களுக்கு வீர க்ஷத்திரியர்கள் பலரை அனுப்பி வைத்தன. உண்மையில், கோபத்தால் தூண்டப்பட்ட சுபத்திரையின் மகன் {அபிமன்யு} அந்தப் போரில் கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளைப் போன்றோ, காலனின் தண்டத்தைப் {யமதண்டத்தைப்} போன்றோ இருந்த சுடர்மிகும் கடுங்கணைகளை ஏவினான்.

அந்தப் பல்குனன் மகன் {அர்ஜுனன் மகன் அபிமன்யு}, தேர்களோடு கூடிய தேர்வீரர்களையும், குதிரையோட்டிகளோடு கூடிய குதிரைகளையும், தாங்கள் நடத்திய பெரும் விலங்குகளோடு {யானைகளோடு} கூடிய யானைவீரர்களையும் துண்டுகளாக வேகமாகப் பிளந்தான். பூமியின் ஆட்சியாளர்கள் {அரசர்கள்} மகிழ்ச்சியில் நிறைந்து, அந்த வல்லமைமிக்கச் சாதனைகளை மெச்சி அதை அடைந்தவனையும் {அபிமன்யுவையும்} புகழ்ந்தார்கள்.

அந்தச் சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பஞ்சுப் பொதியை வானத்தில் அனைத்துப் பக்கங்களிலும் வீசியடிக்கும் பெருங்காற்றைப் போல (கௌரவப்படையின்) அந்தப் பிரிவுகளை வீசினான். அவனால் {அபிமன்யுவால்} முறியடிக்கப்பட்ட துருப்புகள், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சேற்றில் மூழ்கிய யானைகளைப் போல, ஒரு பாதுகாவலனை அடையத் தவறின. துருப்புகள் அனைத்தையும் முறியடித்த பிறகு, ஓ! மனிதர்களில் சிறந்தவரே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, புகைச்சுருளேதும் அற்ற சுடர்மிகும் நெருப்பைப் போல அபிமன்யு நின்று கொண்டிருந்தான். உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, விதியால் உந்தப்பட்ட பூச்சிகளால் சுடர்மிகும் நெருப்பைத் தாங்கிக் கொள்ள முடியாததைப் போல அந்த எதிரிகளைக் கொல்பவனை {அபிமன்யுவை} உமது வீரர்களால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. {அப்படியே விதியால் உந்தப்பட்ட கௌரவப் படையினர் அபிமன்யுவைத் தாக்கி உயிரிழந்தனர்}

பாண்டவர்களின் எதிரிகள் அனைவரையும் தாக்கிய பிறகு, வலிமைமிக்கத் தேர்வீரனும், பெரும் வில்லாளியுமான அவன் {அபிமன்யு}, வஜ்ரத்தை ஏந்திய வாசவனைப் {இந்திரனைப்} போலவே அந்தக் கணத்தில் தெரிந்தான். தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட பின்புறத்தடி கொண்ட அவனின் {அபிமன்யுவின்} வில்லானது, ஒவ்வொரு புறமும் நகர்ந்த போது மேகங்களுக்கு மத்தியில் தென்படும் மின்னலின் கீற்றைப் போலத் தெரிந்தது. அந்தப் போரில் அவனது வில்லின் நாணில் இருந்த வந்த நல்ல பதத்திலான {நன்கு கடினமாக்கப்பட்ட} கூரிய கணைகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, காட்டில் மலர்ந்திருக்கும் மரங்களில் இருந்து வரும் வண்டுக் கூட்டங்களைப் போல வந்தன. அந்த உயர் ஆன்ம சுபத்திரையின் மகன் {அபிமன்யு} தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட அங்கங்களுடைய தன் தேரில் களத்தில் திரிந்த போது, (அவனைத் தாக்குவதற்கு) ஒரு சந்தர்ப்பத்தையும் மக்களால் {பகை வீரர்களால்} காண இயலவில்லை.

கிருபர், துரோணர், வலிமைமிக்கத் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} ஆகியோரையும் குழப்பியபடியே பெரும் சுறுசுறுப்புடனும், திறமையுடனும் அந்தப் பெரும் வில்லாளி {அபிமன்யு} போர்க்களத்தில் நகர்ந்து கொண்டிருந்தான். அப்படி உமது துருப்புகளை அவன் {அபிமன்யு} எரித்த போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, இடைவிடாமல் அவனது வில் வட்டமாக வளைக்கப்படுவதையும், அது சூரியனைச் சுற்றி சில நேரங்களில் காணப்படும் வட்டமான ஒளிவளையத்துக்கு ஒப்பாக இருப்பதையும் நான் கண்டேன். துணிச்சல் மிக்க க்ஷத்திரியர்கள், இப்படித் திறமையுடன் எதிரியை எரிக்கும் அவனை {அபிமன்யுவைக்} கண்டு, அந்தச் சாதனைகளின் விளைவாக, இந்த உலகம் இரண்டு பல்குனர்களைக் {அர்ஜுனர்களைக்} கொண்டிருப்பதாகவே நினைத்தனர்.

உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவனால் {அபிமன்யுவால்} பீடிக்கப்பட்ட பாரதர்களின் அந்தப் பெரும் படை, மது குடித்த பெண்ணைப் போல அங்கேயே இங்கேயும் சுற்றியது. அந்தப் பெரும்படையை முறியடித்து, வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலரை நடுங்கச் செய்த அவன் {அபிமன்யு}, மயனை வீழ்த்திய பிறகு (தேவர்களை மகிழ்வித்த வாசவனைப் {இந்திரனைப்} போல) தன் நண்பர்களை மகிழ்வித்தான். அந்தப் போரில் அவனால் {அபிமன்யுவால்} முறியடிக்கப்பட்ட போது, உமது துருப்புகள் மேகங்களின் முழக்கத்தை ஒத்த துன்பப்பேரொலிகளை வெளியிட்டன.

ஓ! பாரதா {திருதராஷ்டிரரே}, காற்றால் கலங்கடிக்கப்படும் அலைகள் நிறைந்த கடலின் முழக்கத்தை ஒத்ததாக இருந்த உமது துருப்புகளின் பரிதாபகரமான ஒப்பாரியைக் கேட்ட துரியோதனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ரிஷ்யசிருங்கன் மகனிடம் {அலம்புசனிடம்}, “ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {அலம்புசா}, இரண்டாவது பல்குனனை {அர்ஜுனனைப்} போல இருக்கும் இந்த அபிமன்யு அவன் ஒருவனாகவே, தேவர்களின் படையை முறியடிக்கும் விருத்திரனைப் போல, சினத்தால் (எனது) படையை முறியடிக்கிறான். அனைத்து அறிவியலிலும் நன்கு திறன் பெற்ற உன்னைத் தவிர, ஓ! ராட்சசர்களில் சிறந்தவனே {அலம்புசா}, அவனுக்கு {அபிமன்யுவுக்குத்} தீர்வைத் தரும் வேறு எந்த மருந்தையும் போரில் நான் காணவில்லை. எனவே, விரைந்து சென்று, சுபத்திரையின் அந்த வீர மகனை {அபிமன்யுவைப்} போரில் கொல்வாயாக. எங்களைப் பொறுத்தவரை, பீஷ்மர் மற்றும் துரோணரின் தலைமையில் செல்லும் நாங்கள் பார்த்தனை {அர்ஜுனனைக்} கொல்வோம்” என்று சொன்னான் {துரியோதனன்}.

இப்படிச் சொல்லப்பட்டதும், உமது மகனின் {துரியோதனனின்} கட்டளையின் பேரில், வலிமைமிக்க அந்த வீர ராட்சசன் {அலம்புசன்}, மழைக்காலத்தின் மேகங்களைப் போல உரத்த முழக்கங்களையிட்டபடியே போரிட விரைந்து சென்றான். அந்தப் பேரொலியின் விளைவால், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, காற்றால் கலங்கடிக்கப்படும் பெருங்கடலைப் போலப் பாண்டவர்களின் அந்தப் பெரும்படை முழுமையாக நடுங்கியது. அந்த முழக்கங்களால் பீதியடைந்த போராளிகள் பலர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கள் இன்னுயிரை விட்டுப் பூமியில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்தார்கள். மகிழ்ச்சியால் நிறைந்த அந்த ராட்சசன் {அலம்புசன்}, தன் வில்லை எடுத்து, நாணில் கணையைப் பொருத்தி, தன் தேர்த்தட்டில் நடனமாடிக்கொண்டிருப்பவனாகத் தோன்றியபடியே அபிமன்யுவை எதிர்த்துச் சென்றான். பிறகு அந்தக் கோபக்கார ராட்சசன் {அலம்புசன்}, அந்தப் போரில் அர்ஜுனன் மகனை {அபிமன்யுவை} தான் அடையும் தொலைவில் கொண்டு வந்து, அவன் {அபிமன்யுவின்} அருகில் இருந்தவர்களையும் சேர்த்து அவனது படைப்பிரிவுகளை முறியடிக்கத் தொடங்கினான்.

உண்மையில், அந்த ராட்சசன் {அலம்புசன்}, தேவர்களின் படையை எதிர்த்து விரைந்த பலனைப் {பலன் என்ற அசுரனைப்} போல, அந்த வலிமைமிக்கப் பாண்டவப் படையைப் போரில் எதிர்த்து விரைந்து கொல்லவும் தொடங்கினான். ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, பயங்கர முகத்தோற்றம் கொண்ட ராட்சசனால் போரில் தாக்கப்பட்ட துருப்புகளின் மத்தியில் நடந்த அந்தப் படுகொலை மிகப் பெரியதாக இருந்தது. தன் ஆற்றலை வெளிப்படுத்திய அந்த ராட்சசன் {அலம்புசன்}, ஆயிரக்கணக்கான கணைகளால் பாண்டவர்களின் அந்தப் பெரிய படையை முறியடிக்கத் தொடங்கினான். இப்படி அந்தப் பயங்கர முகம் படைத்த ராட்சசனால் {அலம்புசனால்} படுகொலை செய்யப்பட்டுப் பெரும் அச்சத்தை அடைந்த அந்தப் பாண்டவப் படை தப்பி ஓடியது.

தாமரைத் தண்டுகளைக் கலக்கும் யானையைப் போல அந்தப் படையைக் கலங்கடித்த வலிமைமிக்க ராட்சசன் {அலம்புசன்}, பிறகு, திரௌபதியின் மகன்களை எதிர்த்துப் போரிட விரைந்தான். போரில் சாதித்தவர்களும், பெரும் வில்லாளிகளுமான அந்தத் திரௌபதியின் மகன்கள், சூரியனை எதிர்த்து விரையும் ஐந்து கோள்களைப் போல அந்த ராட்சசனை {அலம்புசனை} நோக்கி விரைந்தனர். பயங்கர நிகழ்வான உலக அழிவின்போது ஐந்து கோள்களால் பீடிக்கப்படும் சந்திரனைப் போல அந்த ராட்சசர்களில் சிறந்தவன் {அலம்புசன்}, பெரும் சக்தி கொண்ட அந்தச் சகோதரர்களால் {திரௌபதியின் மகன்களால்} பீடிக்கப்பட்டான்.

பிறகு வலிமைமிக்கப் பிரதிவிந்தியன் போர்க்கோடரிகளைப் போலக் கூர்மையானவையும், கவசங்கள் அனைத்தையும் ஊடுருவ வல்ல முனைகளைக் கொண்டவையும், தீட்டப்பட்டவையுமான கணைகளால் அந்த ராட்சசனை {அலம்புசனைத்} துளைத்தான். அதன்பேரில் தன் கவசம் துளைக்கப்பட்ட அந்த ராட்சசர்களில் முதன்மையானவன் {அலம்புசன்}, சூரியக் கதிர்களால் ஊடுருவப்பட்ட மேகங்களின் திரளைப் போலத் தெரிந்தான். தங்கச் சிறகுகளைக் கொண்ட இந்தக் கணைகளால் துளைக்கப்பட்ட ரிஷ்யசிருங்கன் மகன் {அலம்புசன்}, ஓ! மன்னா, சுடர்மிகும் முகடுகளைக் கொண்ட ஒரு மலையைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.

பிறகு, அந்த ஐந்து சகோதரர்களும், அந்த ராட்சசர்களில் முதன்மையானவனை {அலம்புசனைத்} தங்கச் சிறகுகளைக் கொண்டவையும் தீட்டப்பட்டவையுமான கணைகள் பலவற்றைக் கொண்டு அந்தப் போரில் துளைத்தனர். கோபக்காரப் பாம்புகளை ஒத்த அந்தப் பயங்கரக் கணைகளால் துளைக்கப்பட்ட அலம்புசன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாம்புகளின் மன்னனைப் போலவே சினத்தால் எரிந்தான். சிலக்கணங்களிலேயே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் பெரும் தேர்வீரர்களால் ஆழத் துளைக்கப்பட்ட அந்த ராட்சசன் {அலம்புசன்}, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, பெரிதும் பீடிக்கப்பட்டு நீண்ட நேரத்திற்கு [1] உணர்விழந்தவனாக {மயக்கத்தில்} நீடித்தான்.

[1] ஒரு முகூர்த்த காலம் என்று வேறு பதிப்பில் உள்ளது.

பிறகு தன் சுயநினைவு திரும்பி, கோபத்தால் தன் அளவை விட இரு மடங்கு பெருகிய அவன் {அலம்புசன்}, அவர்களது {திரௌபதி மகன்களின்} கணைகள், கொடிமரங்கள் மற்றும் விற்களை வெட்டினான். அப்போது சிரிப்பவன் போல இருந்த அவன் {அலம்புசன்}, அவர்கள் ஒவ்வொருவரையும் ஐந்து {5} கணைகளால் தாக்கினான். பிறகு, வலிமைமிக்க ராட்சசனும், பெரும் தேர்வீரனுமான அந்த அலம்புசன், கோபத்தால் தூண்டப்பட்டு, தன் தேர்த்தட்டில் நடனமாடுபவனைப் போல இருந்து கொண்டு, தன் சிறப்பு வாய்ந்த எதிரிகளான அந்த ஐவரின் குதிரைகளையும், பிறகு தேரோட்டிகளையும் விரைவாகக் கொன்றான். சினத்தால் எரிந்த அவன் {அலம்புசன்}, நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான, பல்வேறு வண்ணங்களிலான கூரிய கணைகளால் அவர்களை {திரௌபதியின் மகன்களை} மீண்டும் துளைத்தான். இரவு உலாவியான அந்த ராட்சசன் அலம்புசன், அந்தப் பெரும் வில்லாளிகளைத் தங்கள் தேர்களை இழக்கச் செய்த பிறகு, அவர்களை {திரௌபதியின் மகன்களை} யமலோகம் அனுப்பும் விருப்பத்துடன் அவர்களை நோக்கி மூர்க்கமாக விரைந்தான்.

தீய ஆன்மா கொண்ட அந்த ராட்சசனால் {அலம்புசனால்} அந்தப் போரில் (இப்படிப்) பீடிக்கப்பட்ட அவர்களைக் கண்ட அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, அவனிடம் {அலம்புலசனிடம்} விரைந்தான். பிறகு, அவனுக்கும் {அபிமன்யுவுக்கும்} அந்த மனித ஊனுண்ணிக்கும் {அலம்புசனுக்கும்} இடையில் நடைபெற்ற போரானது, விருத்திரனுக்கும் வாசவனுக்கும் {இந்திரனுக்கும்} இடையில் நடந்ததைப் {நடந்த போரைப்} போல இருந்தது. உமது படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்களும், பாண்டவர்களினுடையவர்களும் {பாண்டவர்களின் வலிமைமிக்கத் தேர்வீரர்களும்} அந்த மோதலைக் காணும் பார்வையாளர்களானார்கள்.

கடும்போரில் ஒருவரோடொருவர் மோதி, கோபத்தில் சுடர்விட்டு, பெரும் வலிமையுடன், இருந்த அவர்கள் {இருவரும்} சினத்தில் கண்கள் சிவந்து அந்தப் போரில் மற்றவனை யுக நெருப்பை ஒத்தவனாகவே கண்டனர். அவர்களுக்கிடையிலான அந்த மோதல், பழங்காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் நடந்த போரில் சக்ரனுக்கும் {இந்திரனுக்கும்}, சம்பரனுக்கும் இடையில் நடந்ததைப் {நடந்த மோதலைப்} போலக் கடுமையாகவும், பயங்கரமாகவும் ஆனது.” {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English