“Fight without Boastfulness” said Duryodhana! | Bhishma-Parva-Section-104 | Mahabharata In Tamil
(பீஷ்மவத பர்வம் – 62)
பதிவின் சுருக்கம் : பீஷ்மருக்கும் சோமகர்களுக்கு இடையில் நடைபெற்ற போர்; துருபதனின் வில்லைத் துண்டித்த பீஷ்மர்; பாஞ்சாலர்களைப் பீஷ்மரிடம் இருந்து காக்க விரைந்த பாண்டவப் படையினர்; அங்கே நடந்த பயங்கரப் போர் குறித்த வர்ணனை; போர்க்களத்தில் பயங்கரமாக ஓடிய குருதிப் புனல்; பாண்டவர்களைப் புகழ்ந்தும், கௌரவர்களை இகழ்ந்தும் பேசிய வீரர்கள்; கௌரவர்களைத் துரிதப்படுத்திய துரியோதனன்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பெரும் படுகொலைகளால் நிறைந்த கடும்போர் ஒன்று, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீஷ்மருக்கும், சோமகர்களுக்கும் இடையில் நடுப்பகல் வேளையில் நடந்தது. தேர்வீரர்களில் முதன்மையான அந்தக் கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான கூர்மையான கணைகளால் பாண்டவர்களின் படையணியை எரிக்கத் தொடங்கினார். காளைக்கூட்டங்கள், (தங்கள் நடையால்) நெல் கட்டுகளின் குவியலை அரைப்பதைப் போல உமது தந்தை தேவவிரதர் {பீஷ்மர்} அந்தத் துருப்புகளைக் கலங்கடித்தார்.
திருஷ்டத்யும்னன், சிகண்டி, விராடன் மற்றும் துருபதன் ஆகியோர், அந்தப் போரில் பீஷ்மரின் மீது பாய்ந்து, அந்த வலிமைமிக்கத் தேர்வீரரைத் தங்கள் எண்ணற்ற கணைகளால் தாக்கினர். பிறகு திருஷ்டத்யும்னன், விராடன் ஆகியோர் ஒவ்வொருவரையும் மூன்று கணைகளால் துளைத்த பீஷ்மர், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, துருபதன் மீது நாராசம் {நீண்ட கணை} ஒன்றை ஏவினார். பகைவர்களை அழிப்பவரான அந்தப் பீஷ்மரால் போரில் இப்படித் துளைக்கப்பட்ட அந்தப் பெரும் வில்லாளிகள், (மனிதர்களின் கால்களால்) மிதிபட்ட பாம்புகளைப் போலக் கோபத்தை அடைந்தனர்.
சிகண்டி, பாரதர்களின் பாட்டனான பீஷ்மரைக் (கணைகள் பலவற்றால்) துளைத்தான். எனினும், மங்காப் புகழ் கொண்ட அந்தப் பீஷ்மர், எதிரியைப் {சிகண்டியைப்} பெண்ணாகக் கருதி அவனைத் தாக்கவில்லை. அப்போது, திருஷ்டத்யும்னன், அந்தப் போரில் நெருப்பைப் போலக் கோபத்தில் சுடர்விட்டெரிந்து, பாட்டனை {பீஷ்மரை} மூன்று கணைகளால் கரங்களிலும், மார்பிலும் தாக்கினான். துருபதன் இருபத்தைந்து {25} கணைகளாலும், விராடன் பத்து {10} கணைகளாலும், சிகண்டி இருப்பத்தைந்து {25} கணைகளாலும் பீஷ்மரைத் துளைத்தார்கள். ஆழமாகத் துளைக்கப்பட்டு, குருதியால் மறைக்கப்பட்ட அந்தப் பீஷ்மர், பல வண்ண மலர்களால் நிறைந்திருந்த சிவந்த அசோகத்தை {அசோக மரத்தைப்} போலத் தெரிந்தார்.
அப்போது, அந்தக் கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, அவர்கள் {பாண்டவப் படைவீரர்கள்} ஒவ்வொருவரையும் மூன்று கணைகளால் பதிலுக்குத் துளைத்தார். பிறகு, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, பல்லம் {அகன்ற தலை கொண்ட கணை} ஒன்றினால் துருபதனின் வில்லையும் துண்டித்தார். வேறு வில்லைக் கையில் எடுத்த பின்னவன் {துருபதன்}, ஐந்து கணைகளால் பீஷ்மரைத் துளைத்தான். மேலும் அவன் {துருபதன்}, அந்தப் போர்க்களத்தில், கூர்மையான மூன்று கணைகளால் பீஷ்மரின் தேரோட்டியையும் துளைத்தான்.
பிறகு, யுதிஷ்டிரனின் தலைமையிலான திரௌபதியின் மகன்கள் ஐவர், கேகய சகோதரர்கள் ஐவர், சாத்வத குலத்தின் சாத்யகி ஆகியோர் அனைவரும், திருஷ்டத்யும்னன் தலைமையிலான பாஞ்சாலர்களைக் காப்பாற்ற விரும்பி, கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} நோக்கி விரைந்தனர். அதே போல, உமது படையின் வீரர்கள் அனைவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீஷ்மரைப் பாதுகாக்க முனைந்து, பாண்டவப் படையை எதிர்த்துத் தங்கள் துருப்புகளின் முன்னணியில் விரைந்தனர். உமது படை மற்றும் அவர்களது படையின் மனிதர்கள் மற்றும் குதிரைகளுக்கிடையில் அங்கே கடுமையாக நடந்த அந்தப் பொது மோதல் யமனின் ஆட்சிப்பகுதிகளைப் பெருகச் செய்யும்படி இருந்தது.
தேர்வீரர்களின் மீது பாய்ந்த தேர்வீரர்கள் ஒருவரையொருவர் யமலோகத்திற்கு அனுப்பினர். அதுபோலவே, மனிதர்கள், யானை வீரர்கள், குதிரைவீரர்கள் ஆகியோர் (தங்கள் வர்க்கத்தைச் சேர்ந்த) பிறர் மீது பாய்ந்து நேரான கணைகளால் அவர்களை அடுத்த உலகத்திற்கு அனுப்பினார்கள். பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பல்வேறு விதங்களிலான கடுங்கணைகள் மூலம் தேர்வீரர்களையும், தேரோட்டிகளையும் இழந்த தேர்கள் அங்கேயும் இங்கேயும் எனப் போர்க்களமெங்கும் {குதிரைகளால்} இழுத்துச் செல்லப்பட்டன. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போரில் பெரும் எண்ணிக்கையிலான மனிதர்களையும், குதிரைகளையும் நசுக்கிய அந்தத் தேர்கள் (வேகத்தில்) காற்று போன்றவையாகவும், ஆகாயத்தில் தோன்றும் (காட்சியாகத் தோன்றும்) நீராவி மாளிகைகளுக்கு {கந்தர்வ நகரங்களுக்கு} [1] ஒப்பானவையாகவும் தெரிந்தன.
[1] காற்றினால் ஆகாயத்தில் உண்டாக்கப்படும் பலவடிவங்களிலான மேக வரிசைகளே இவை என்று நாம் இங்கே பொருள் கொள்ளலாம்.
கவசமணிந்தவர்களாக, காந்தியுள்ளவர்களாக, காதுகுண்டலம் மற்றும் தலைப்பாகைகளை உடையவர்களாக, தங்கத்தாலான தோள்வளைகள் மற்றும் மாலைகளைப் பூண்டவர்களாக, தேவர்களின் பிள்ளைகளுக்கு ஒப்பானவர்களாக, போரில் இந்திரனின் ஆற்றலுக்கு இணையானவர்களாக, செல்வத்தில் விஸ்வரவணனையும் {குபேரனையும்}, புத்திக்கூர்மையில் பிருஹஸ்பதியையும் விஞ்சியவர்களாக, பரந்த மாநிலங்களை ஆள்பவர்களாக, பெரும் வீரர்களாக இருந்த தேர்வீரர்களில் பலர், தங்கள் தேர்களை இழந்து அங்கேயும் இங்கேயும் சாதாரண மனிதனைப் போல ஓடுவது தெரிந்தது.
திறன்மிக்கப் பாகன்களை இழந்த பெரும் யானைகளும், ஓ! மனிதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே} {தங்கள்} நட்புப் படையணிகளையே நசுக்கியபடி ஓடி, உரத்த பிளிறல்களுடன் கீழே விழுந்தன. புதிதாக எழுந்த மேகங்களைப் போலத் தெரிந்த மிகப் பெரிய யானைகள், தங்கள் கவசங்களை இழந்து, மேகங்களைப் போலவே முழங்கிக் கொண்டு திசைகள் அனைத்திலும் ஓடுவது தெரிந்தது. ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அவற்றின் {யானைகளின் மீதிருந்த} சாமரங்கள், பலவண்ணங்களிலான கொடிமரங்கள், தங்கப் பிடி கொண்ட குடைகள், (தங்கள் பாகர்களின்) பளபளக்கும் வேல்கள் ஆகியவை சிதறிக் கிடந்தன. தங்கள் யானைகளை இழந்த, உமது மற்றும் அவர்களது தரப்பைச் சேர்ந்த பாகன்களும், அந்தப் பயங்கர அழுத்தத்தில் ஓடியது தெரிந்தது.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குதிரைகள், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு, காற்றின் வேகத்தில் நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் ஓடுவது தெரிந்தது. தங்கள் குதிரைகளை இழந்த குதிரை வீரர்கள் வாள்களை ஏந்திய படி {தப்பி} ஓடவோ, (அவர்களைத் தாக்கும் பிறரால்) விரட்டப்பட்டோ ஓடுவதோ தெரிந்தது. அந்தப் பயங்கரப் போரில் தப்பி ஓடும் யானையைச் சந்திக்கும் மற்றொரு யானை காலாட்படையினரையும், குதிரைகளையும் விரைவாக நசுக்கிச் சென்றது. அதே போல, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த மிகப்பெரிய உயிரினங்கள் {யானைகள்} அந்தப் போரில் பல தேர்களை நசுக்கின. தேர்களும், (தங்கள் வழியில்) விழுந்து கிடக்கும் குதிரைகளை நசுக்கின. அப்படியே குதிரைகளும், அந்தப் போரின் அழுத்தத்தில், காலாட்படை வீரர்கள் பலரை (தங்கள் குளம்புகளால்) நசுக்கின.
இப்படியே, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அவை ஒன்றையொன்று பல்வேறு வழிகளில் நசுக்கின. கடுமை நிறைந்த அந்தப் பயங்கரப் போரில் குருதிப் புனலோடு கூடிய ரத்த ஆறு பாய்ந்தது. விற்களின் குவியல்கள் அதன் நேரான பாதைக்குத் தடங்கல் செய்தது, (கொல்லப்பட்ட வீரர்களின்) தலைமயிர்கள் அதன் பாசிகளாகின. (உடைந்த) தேர்கள் அதன் மடுக்களாகின, கணைகள் அதன் நீர்ச்சுழிகளாகவும் அமைந்தன. குதிரைகள் அதன் மீன்களாக அமைந்தன. (உடலில் இருந்து வெட்டப்பட்ட) தலைகள் அதன் கற்பாறைகளாக அமைந்தன. அதில் {களத்தில்} இருந்த யானைகள் அதன் முதலைகளாக அமைந்தன. கவசங்களும், தலைப்பாகைகளும் அதன் நுரைகளாகின. (வீரர்களின் கைகளில் இருந்த) விற்கள் அதன் ஊற்றின் வேகமாகவும், வாள்கள் அதன் ஆமைகளாகவும் அமைந்தன. அங்கே நிறைந்திருந்த கொடிகளும், கொடிமரங்களும் அதன் கரைகளில் உள்ள மரங்களாக அமைந்தன. மனிதர்கள் அந்த ஆறு தொடர்ந்து உண்ணும் {அரிக்கும்} அதன் கரைகளாக அமைந்தனர். அதில் இருந்த மனிதஊனுண்ணிகள் அதன் அன்னங்களாக அமைந்தன. அந்த ஓடை {ஆறு} (தன் நீரூற்றால் கடலைப் பெருகச் செய்வதை விட்டு) யமனின் ஆட்சிப்பகுதியை பெருக்கியது.
வலிமைமிக்கத் தேர்வீரர்களான துணிவுமிக்க க்ஷத்திரியர்கள், அச்சமனைத்தையும் உதறிவிட்டு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தெப்பங்கள் மற்றும் படகுகளாகச் செயல்பட்ட தேர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றின் துணையோடு அந்த ஆற்றைக் கடக்க முயன்றனர். மரணமன்னனின் {யமனின்} உலகத்திற்கு இறந்தவர்களின் ஆவிகளை இட்டுச் செல்லும் வைதரணீ நதியைப் போல, குருதிப் புனலோடு கூடிய அந்த ஆறு போரில் அஞ்சித் தங்கள் உணர்வுகளை இழந்து மயக்கமடைந்தவர்களைச் சுமந்து சென்றது.
போர்க்களத்தில் அந்தப் பயங்கர அழிவைக் கண்ட க்ஷத்திரியர்கள் அனைவரும், “ஐயோ, துரியோதனனின் தவறால் மன்னர்கள் அழிவடைகிறார்களே. ஓ!, பாவம் நிறைந்த ஆன்மா கொண்ட திருதராஷ்டிரன் பேராசையினால் மயங்கி, எண்ணற்ற நற்குணங்களைக் கொண்ட அந்தப் பாண்டுவின் மகன்களிடத்தில் ஏன் பொறாமைக்கு இடமளித்தான்?” என்று உரக்கக் கூறினர்.
பாண்டவர்களைப் புகழ்ந்தும், உமது மகன்களை நிந்தித்தும், ஒருவருக்கொருவர் பேசிக்கொண்ட இந்த வகையிலான பல்வேறு அலறல்கள் அங்கே கேட்டன. அனைவருக்கும் எதிராகக் குற்றம் புரிபவனான உமது மகன் துரியோதனன், போராளிகள் அனைவராலும் சொல்லப்பட்ட இந்த வார்த்தைகளைக் கேட்டு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பீஷ்மர், துரோணர், கிருபர் மற்றும் சல்லியனிடம், “அகந்தை கொள்ளாமல் போரிடுவீராக. ஏன் எப்போதும் தாமதிக்கிறீர்கள்?” என்று கேட்டான் {துரியோதனன்}.
பகடையாட்டத்தால் விளைந்ததும், பயங்கரப் படுகொலையால் குறிக்கப்பட்டதுமான அந்தக் கடும்போர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, குருக்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையில் மீண்டும் தொடங்கியது. ஓ! விசித்திரவீரியன் மகனே {திருதராஷ்டிரரே}, சிறப்பு வாய்ந்த மனிதர்கள் பலரால் அதற்கு {பகடைக்கு} எதிராக எச்சரிக்கப்பட்டும் {உமது நண்பர்களின் ஆலோசனைகளை} மறுத்ததன் பயங்கரக் கனியையே {பலனையே} இப்போது நீர் காண்கிறீர்.
அந்தப் போரில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டுவின் மகன்களோ, அவர்களது துருப்புகளோ, அவர்களைப் பின்தொடர்பவர்களோ, கௌரவர்களோ தங்கள் உயிர்களைக் குறித்துக் கிஞ்சிற்றும் கருதிப் பார்க்கவில்லை. விதியாலோ, உமது தீய கொள்கையின் காரணமாகவோ, ஓ! மனிதர்களில் புலியே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உறவினர்களின் இந்தப் பயங்கரமான அழிவு நடக்கிறது” {என்றான் சஞ்சயன்}.
ஆங்கிலத்தில் | In English |