Tuesday, February 23, 2016

சாத்யகி பீஷ்மர் மோதல்! - பீஷ்ம பர்வம் பகுதி - 105

The encounter of Satyaki and Bhishma! | Bhishma-Parva-Section-105 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 63)

பதிவின் சுருக்கம் : அர்ஜுனனுக்கும் திரிகர்த்த மன்னன் சுசர்மனுக்கும் இடையில் நடைபெற்ற போர்; தப்பி ஓடிய படைவீரர்கள்; திரிகர்த்தப்படையை முறியடித்த அர்ஜுனன்; அர்ஜுனனைத் தாக்கிய துரியோதனன்; அபிமன்யுவுக்கும் சித்திரசேனனுக்கும் இடையில் நடந்த போர்; துரோணர்-துருபதன், பீமன்-பாஹ்லீகர்; சாத்யகி-கிருதவர்மன் ஆகியோருக்கிடையில் நடந்த போர்கள்; சாத்யகிக்கும்-பீஷ்மருக்கும் நடந்த கடுமையான போர்; சாத்யகியைப் பீஷ்மரிடம் இருந்து காக்க விரைந்த பாண்டவர்கள்...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், ஓ! மனிதர்களில் புலியே {திருதராஷ்டிரரே}, அர்ஜுனன்,  தீட்டப்பட்ட தன் கணைகளின் மூலம் சுசர்மனைப் பின்தொடர்ந்து வந்த க்ஷத்திரியர்களை மரணமன்னனின் {யமனின்} வசிப்பிடத்திற்கு அனுப்பி வைத்தான். எனினும் அந்தப் போரில், சுசர்மனும் தன் கணைகளால் பார்த்தனை {அர்ஜுனனைத்} துளைத்தான். மேலும், அவன் {சுசர்மன்}, எழுபதால் {70 கணைகளால்} வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்}, ஒன்பது {9} கணைகளால் மீண்டும் அர்ஜுனனையும் துளைத்தான். வலிமைமிக்கத் தேர்வீரனான அந்த இந்திரன் மகன் {அர்ஜுனன்}, அந்தக் கணைகளைத் தன் கணை மழையால் தடுத்து, சுசர்மனின் துருப்பினரை யமலோகத்திற்கு அனுப்பினான்.


அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் {சுசர்மனின் வீரர்கள்}, யுகமுடிவிலான காலனைப் போன்ற பார்த்தனால் {அர்ஜுனனால்} அந்தப் போரில் கொல்லப்பட்டபோது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீதியடைந்த அவர்கள் அனைவரும் போர்க்களத்தை விட்டுத் தப்பி ஓடினார்கள். சிலர் தங்கள் குதிரைகளையும், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, சிலர் தங்கள் தேர்களைக் கைவிட்டும், பிறர் தங்கள் யானைகளைக் கைவிட்டும் திக்குகள் அனைத்திலும் தப்பி ஓடினார்கள். இன்னும் பிறர், தங்கள் குதிரைகள், யானைகள், தேர்கள் ஆகியவற்றுடன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} பெரும் வேகத்துடன் தப்பி ஓடினார்கள். அந்தப் பயங்கரப் போரில் தங்கள் ஆயுதங்களைப் புறந்தள்ளிய காலாட்படை வீரகள், ஒருவரையொருவர் கருதிப் பாராமல் அங்கேயும் இங்கேயும் தப்பி ஓடினர். திரிகர்த்தர்களின் ஆட்சியாளனான சுசர்மனாலும், மன்னர்களில் முதன்மையானோரான இன்னும் பிறராலும் தடுக்கப்பட்டாலும் அவர்கள் போரில் நிலைபெறவில்லை.

அந்தப் படை முறியடிக்கப்பட்டதைக் கண்ட உமது மகன் துரியோதனன், படைகள் அனைத்திற்கும் முன்னின்று, திரிகர்த்தர்கள் ஆட்சியாளனின் உயிருக்காக ({சுசர்மனைக்} காப்பதற்காகத்) தன் வீரியம் முழுமையும் பயன்படுத்திப் பீஷ்மரின் தலைமையில் அந்தப் போரில் தனஞ்சயனை {அர்ஜுனனைத்} தாக்கினான். தன் தம்பிகள் அனைவரின் துணையோடு பல்வேறு விதமான கணைகளை இறைத்துக் கொண்டு போரில் அவன் {துரியோதனன்} நின்றான். மீதி மனிதர்கள் அனைவரும் தப்பி ஓடிவிட்டனர்.

அதேபோலப் பாண்டவர்களும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கவசம்பூண்டு கொண்டு, பல்குனனின் {அர்ஜுனனின்} நிமித்தமாகத் தங்கள் வீரியம் முழுமையையும் பயன்படுத்தி, பீஷ்மர் இருந்த இடத்திற்குச் சென்றனர். அவர்கள் {பாண்டவப் படையினர்}, போரில் அந்தக் காண்டீவந்தாங்கியின் {அர்ஜுனனின்} பயங்கர ஆற்றலை அறிந்திருந்தாலும், உரத்த கூக்குரல்களுடனும் பெரும் துணிச்சலுடனும் பீஷ்மர் இருந்த இடத்திற்குச் சென்று அனைத்துப் புறங்களிலும் அவரை {பீஷ்மரைச்} சூழ்ந்து கொண்டனர். பிறகு அந்தப் பனைமரக்கொடி வீரர் {பீஷ்மர்}, அந்தப் போரில் தன் நேரான கணைகளால் பாண்டவப் படையை மறைத்தார்.

சூரியன் நடுக்கோட்டை {உச்சி வானை} அடைந்ததும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தக் கௌரவர்கள் {கௌரவப் படையினர்} குழம்பிய திரளாக இருந்த பாண்டவர்களுடன் {பாண்டவப் படையினருடன்} போரிட்டனர். வீர சாத்யகி, ஐந்து {5} கணைகளால் கிருதவர்மனைத் துளைத்ததும், ஆயிரக்கணக்கான தன் கணைகளை இறைத்தபடி போரில் நிலைத்தான். மன்னன் துருபதனும், தீட்டப்பட்ட கணைகள் பலவற்றால் துரோணரைத் துளைத்து, மீண்டும் எழுபது {70} கணைகளால் அவரையும் {துரோணரையும்}, ஒன்பதால் {9 கணைகளால்} அவரது தேரோட்டியையும் துளைத்தான். பீமசேனனும், தன் பெரும்பாட்டனான பாஹ்லீகரைத் துளைத்து, காட்டுப் புலியைப் போல உரக்க முழங்கினான்.

அர்ஜுனன் மகன் (அபிமன்யு), கணைகள் பலவற்றால் சித்திரசேனனால் [1] துளைக்கப்பட்டு, மூன்று கணைகளால் சித்திரசேனனின் மார்பில் ஆழமாகத் துளைத்தான். ஒருவரோடொருவர் போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அந்த மனிதர்களில் முதன்மையானோர் இருவரும் {அபிமன்யுவும், சித்திரசேனனும்}, ஆகாயத்தில் உள்ள வெள்ளி மற்றும் சனி கோள்களைப் போலக் களத்தில் பிரகாசமாகத் தெரிந்தனர். பிறகு எதிரிகளைக் கொல்பவனான அந்தச் சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, ஒன்பது கணைகளால் தன் எதிராளியின் குதிரைகளையும், தேரோட்டியையும் கொன்று உரத்த முழக்கமிட்டான். அதன் பேரில், அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் (அதாவது சித்திரசேனன்), ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, குதிரைகள் கொல்லப்பட்ட அந்தத் தேரில் இருந்து கீழே வேகமாகக் குதித்து, தாமதம் செய்யாமல் துர்முகனின் [2] தேரில் ஏறிக் கொண்டான்.

[1] [2] துரியோதனனின் தம்பி

வீரத் துரோணர், பின்னவனின் {துருபதனின்} தேரோட்டியையும் துளைத்தார். பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் துருப்புகளின் முகப்பில் இருந்த துருபதன் இப்படிப் பீடிக்கப்பட்டு, பழங்காலத்தில் இருந்து (தனக்கும் துரோணருக்கும் இடையில்) நீடிக்கும் பகையை நினைவுகூர்ந்து, வேகமான தன் குதிரைகளின் உதவியால் பின்வாங்கினான். பீமசேனன், மன்னன் பாஹ்லீகரை, துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, ஒரு கணத்திற்குள் தனது குதிரைகள், தேர் மற்றும் தேரோட்டி ஆகியவற்றை இழக்கச் செய்தான். மனிதர்களில் சிறந்த அந்தப் பாஹ்லீகர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் ஆபத்தான சூழ்நிலையில் விழுந்து, தன் இதயத்தில் அச்சத்துடன் அந்த வாகனத்தில் இருந்து கீழே குதித்து, அந்தப் போரில் லக்ஷ்மணனின் [3] தேரில் விரைவாக ஏறினார்.

[3] துரியோதனனின் மகன்

சாத்யகி, அந்தப் பயங்கரப் போரில் கிருதவர்மனைத் தடுத்து, பாட்டன் {பீஷ்மர்} மீது பாய்ந்து, பல்வேறு வகையான கணைகளை அவர் மீது பொழிந்தான். அவன் {சாத்யகி}, தன் பெரிய வில்லை அசைத்தபடி, இறகுகளால் சிறகமைந்த அறுபது தீட்டப்பட்ட கணைகளால் பாட்டனை {பீஷ்மரை} துளைத்து, தன் தேரில் நடனமாடுபவனைப் போலக் காணப்பட்டான். பிறகு பாட்டன் {பீஷ்மர்}, பாம்புகளின் மகளைப் போல அழகானதும், பெரும் வேகம் கொண்டதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், இரும்பினால் செய்யப்பட்டதுமான வலிமைமிக்க ஓர் ஈட்டியை அவன் {சாத்யகியின்} மீது ஏவினார். விருஷ்ணி குலத்தின் அந்த ஒப்பற்ற வீரன் {சாத்யகி}, காலனுக்கு ஒப்பான தடுக்க முடியாத அந்த ஈட்டியைக் கண்டு, தன் அசைவுகளின் நளினத்தால் {லாகவத்தால்} அதைக் கலங்கடித்தான்.

அதன் பேரில், அந்த விருஷ்ணி குலத்தோனை {சாத்யகியை} அடைய முடியாத அந்தக் கடும் ஈட்டி, சுடர் மிகுந்து பிரகாசிக்கும் ஒரு பெரிய எரி கோளைப் போலக் கீழே பூமியில் விழுந்தது. பிறகு, அந்த விருஷ்ணி குலத்தோன் {சாத்யகி}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கத்தைப் போல ஒளிரும் தன் ஈட்டியைத் தன் உறுதியான கைகளில் ஏந்தி பாட்டனின் {பீஷ்மரின்} தேரின் மேல் வீசினான். அந்தப் பயங்கரப் போரில் சாத்யகியின் பலமான கரங்களால் வீசப்பட்ட அந்த ஈட்டி (விதி முடிந்த) மனிதனை நோக்கி வேகமாக விரையும் மரண இரவைப் போல மூர்க்கமாகச் சென்றது. எனினும் பீஷ்மர், அது தன்னை நோக்கி பெரும் சக்தியுடன் வந்த போதே, கூர் முனை கொண்ட க்ஷுரப்ரங்கள் {குதிரை லாடம் போன்ற தலை கொண்ட கணைகள்} இரண்டால் அதை இரண்டாகத் துண்டித்தார்; அதன்பேரில் அது கீழே பூமியில் விழுந்தது. எதிரிகளைக் கலங்கடிப்பவரான அந்தக் கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, அந்த ஈட்டியைத் துண்டித்து, கோபத்தால் தூண்டப்பட்டு, சிரித்துக் கொண்டே ஒன்பது கணைகளால் சாத்யகியின் மார்பைத் தாக்கினார்.

பிறகு அந்தப் பாண்ட வீரர்கள், ஓ! பாண்டுவின் தமையரே {திருதராஷ்டிரரே}, அந்த மதுகுலத்தோனை {சாத்யகியை} மீட்கும் பொருட்டு, தங்கள் தேர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றோடு, அந்தப் போரில் பீஷ்மரைச் சூழ்ந்து கொண்டனர். பிறகு, வெற்றியை விரும்பியவர்களான பாண்டவர்கள் மற்றும் குருக்கள் ஆகிய இருவருக்கும் இடையில் மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்த கூடிய வகையில் கடும் போரொன்று மீண்டும் தொடங்கியது” {என்றான் சஞ்சயன்}. 


ஆங்கிலத்தில் | In English