Friday, February 26, 2016

பீஷ்மரைக் கொல்ல விரைந்த கிருஷ்ணன்! - பீஷ்ம பர்வம் பகுதி - 107

Krishna rushed to kill Bhishma! | Bhishma-Parva-Section-107 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 65)

பதிவின் சுருக்கம் : பீஷ்மருக்கும் பாண்டவர்களுக்கு இடையில் ஏற்பட்ட போர்; பீஷ்மருடன் சேர்ந்து கொண்ட துரோணர்; பாண்டவப் படைக்குப் பீஷ்மர் ஏற்படுத்திய அழிவு; சிதறி ஓடிய பாண்டவப் படை; அர்ஜுனனைத் தூண்டிய கிருஷ்ணன்; பீஷ்மர் இருந்த இடத்திற்கு விரைந்த அர்ஜுனன்; அர்ஜுனனின் மென்மையைக் கண்டு கோபமுற்ற கிருஷ்ணன், பீஷ்மரைக் கொல்ல இரண்டாவது முறையாகத் தேரைவிட்டு இறங்கி அவரை நோக்கி மூர்க்கமாகச் சென்றது; பீஷ்மர் கிருஷ்ணனை வணங்கியது; அர்ஜுனன் கெஞ்சியது; மீண்டும் தன் தேரில் ஏறிய கிருஷ்ணன்; பீஷ்மர் பாண்டவப் படையை முறியடித்தது; ஒன்பதாம் நாள் போர் முடிவை எட்டியது...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பிறகு உமது தந்தை {பீஷ்மர்}, கோபத்தால் தூண்டப்பட்டு, பெரும் கூர்மை கொண்ட சிறப்பான கணைகளால் பார்த்தர்களையும் {பாண்டவர்களையும்}, அவர்களது துருப்புகளையும் சுற்றிலும் தாக்கத் தொடங்கினார்.


அவர் {பீஷ்மர்}, பனிரெண்டு {12} கணைகளால் பீமனையும், ஒன்பதால் {9 கணைகளால்} சாத்யகியையும் துளைத்தார். மூன்று {3} கணைகளால் நகுலனைத் துளைத்த அவர், ஏழால் {7 கணைகளால்} சகாதேவனைத் துளைத்தார். அவர் {பீஷ்மர்}, பனிரெண்டு {12} கணைகளால் யுதிஷ்டிரனைக் கரங்களிலும், மார்பிலும் துளைத்தார். மேலும், அந்த வலிமைமிக்க வீரர் {பீஷ்மர்}, திருஷ்டத்யும்னனையும் துளைத்து உரக்க முழக்கமிட்டார்.

பனிரெண்டு கணைகளால் நகுலனும், மூன்றால் {மூன்று கணைகளால்} சாத்யகியும் அவரைப் {பீஷ்மரைப்} (பதிலுக்குத்) துளைத்தனர். எழுபது கணைகளால் திருஷ்டத்யும்னனும், ஏழால் {ஏழு கணைகளால்} பீமசேனனும் அவரைத் துளைத்தனர். யுதிஷ்டிரனும் பதிலுக்குப் பனிரெண்டு கணைகளால் பாட்டனை {பீஷ்மரைத்} துளைத்தான்.

(மறுபுறம்) துரோணர், சாத்யகியைத் துளைத்து, அடுத்ததாகப் பீமசேனனைத் துளைத்தார். அவர் {துரோணர்} அவர்கள் ஒவ்வொருவரையும் யம தண்டத்திற்கு ஒப்பான ஐந்து கூரிய கணைகளால் துளைத்தார். எனினும் அவர்கள் இருவரில் ஒவ்வொருவரும் {சாத்யகியும், பீமனும்}, பதிலுக்கு மூன்று நேரான கணைகளால், அந்தணர்களில் காளையான துரோணரைத் துளைத்தனர் [1].

[1] வேறு ஒரு பதிப்பில் “அவ்விருவரும் வேணுகங்களால் பெரிய யானையை அடிப்பது போலப் பிராமணர்களில் சிறந்தவரான அந்தத் துரோணரை இலக்கில் நேராகச் செல்லும் மும்மூன்று கணைகளால் திருப்பி அடித்தார்கள்" என்று இருக்கிறது.

சௌவீரர்கள், கிதவர்கள், கிழக்கத்தியர்கள் {கீழ்நாட்டு வீரர்கள்}, மேற்கத்தியர்கள் {மேனாட்டு வீரர்கள்}, வடக்கத்தியர்கள் {வடநாட்டு வீரர்கள்}, மாளவர்கள், அபீஷாஹர்கள், சூரசேனர்கள், சிபிக்கள், வசாதிகள் ஆகியோர் கூர்மையான கணைகளைக் கொண்டு பீஷ்மரால் இடையறாமல் கொல்லப்பட்டாலும், போரில் அவரை {பீஷ்மரைத்} தவிர்க்கவில்லை {விட்டு விலகவில்லை}. அதே போல, பல்வேறு ஆயுதங்களைத் தரித்துப் பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்த மன்னர்கள் பாண்டவர்களை (போரில் அவர்களைத் தவிர்க்க முயலாமல்) அணுகினார்கள்.

மேலும் பாண்டவர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அனைத்துப் புறங்களிலும் பாட்டனைச் {பீஷ்மரைச்} சூழ்ந்து கொண்டனர். அந்தத் தேர்களின் பெரும் கூட்டத்தால் வெல்லப்படாத பீஷ்மர், அனைத்துப் புறங்களிலும் சூழப்பட்டிருந்தாலும், காட்டின் மத்தியில் பிடித்த நெருப்பைப் போலச் சுடர்விட்டபடி தன் எதிரிகளை எரித்தார்.

பீஷ்மரின் தேரே அவரது நெருப்புக் கூடமாகவும்; அவரது வில் (அந்த நெருப்பின்) தழல்களாகவும்; வாள்கள், ஈட்டிகள், கதாயுதங்கள் {அந்நெருப்பின்} எரிபொருளாகவும் {விறகாகவும்}; அவரது கணைகள் (அந்நெருப்பின்) பொறிகளாகவும்; அவரே {பீஷ்மரே} க்ஷத்திரியர்களில் முதன்மையானோரை எரிக்கும் அந்த நெருப்பாகவும் இருந்தார். உண்மையில் அவர் {பீஷ்மர்}, பெரும் சக்தியும், கழுகின் இறகுகளையும், தங்கச் சிறகுகளையும் கொண்ட கணைகளாலும், கர்ணிகளாலும் {முள் பதித்த கணைகளாலும் barbed arrows}, நாளீகங்களாலும், நாராசங்களாலும் {நீண்ட கணைகளாலும்} பகைக்கூட்டத்தை மறைத்தார். அவர் {பீஷ்மர்}, தன் கூரிய கணைகளால் யானைகளையும், தேர்வீரர்களையும் வீழ்த்தினார். மேலும் அவர் {பீஷ்மர்} அந்தப் பெரிய தேர்ப்படையை, இலைகளாலான தலைகள் மழிக்கப்பட்ட பனங்காடு ஒன்றை {மொட்டைப்பனை மரங்கள் நிறைந்த காட்டை} ஒத்திருக்கச் செய்தார்.

வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரும், ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவருமான அவர் {பீஷ்மர்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தேர்கள், யானைகள் மற்றும் குதிரைகள் ஆகியவை தங்கள் ஓட்டுனர்களை இழக்கும்படி செய்தார். இடி முழக்கம் போன்ற பேரொலியுடன் இருந்த அவரது வில்லின் நாணொலியையும், அவரது உள்ளங்கை {தட்டல்} ஒலிகளையும் கேட்டு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, துருப்புகள் அனைத்தும் நடுங்கின.

உமது தந்தையின் {பீஷ்மரின்} கணைகளே, ஓ! பாரதக் குலத்தின் காளையே, எதிரியிடம் பேசின. உண்மையில், பீஷ்மரின் வில்லில் இருந்து ஏவப்பட்ட கணைகள் கவசங்களை மட்டும் தாக்கவில்லை (ஆனால் அவற்றைத் துளைத்துச் சென்றன) [2]. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துணிச்சல் மிக்கத் தங்கள் ஓட்டுனர்களை இழந்த பல தேர்கள் அவற்றில் பூட்டப்பட்ட வேகமான குதிரைகளால் களமெங்கும் இழுத்துச்செல்லப்படுவதை நாங்கள் கண்டோம்.

[2] வீரர்கள் ஒருவரையொருவர் ஆயிரம் கணைகளால் துளைத்தார்கள் எனப் படிக்கும்போது அதன் சாத்தியம் குறித்த சந்தேகம் எழும். ஆனால், அவற்றைச் சமன் செய்யும் வகையில் இந்த வரி அமைந்திருப்பதாகக் கருதுகிறேன். Indeed, shot from Bhishma's bow they did not strike the coats of mail only (but pierced them through) என்பது கங்குலியின் மொழிபெயர்ப்பு, அதுபோலவே மன்மதநாதத்மதத்தரின் ஆங்கிலப்பதிப்பில், “Then the arrows, shot from the bow of Bhishma, did not only strike against the armours of combatant but penetrated through them“, அதாவது, “பிறகு பீஷ்மரின் வில்லில் இருந்து ஏவப்பட்ட அந்தக் கணைகள், போராளியின் கவசங்களை மட்டும் தாக்கவில்லை, ஆனால் அவற்றை ஊடுருவிச் சென்றன” என்று இருக்கிறது. அப்படியெனில், இதற்கு முன்பு நாம் கண்ட “கணைகள் வீரர்களைத் துளைத்தன” என்ற வார்த்தைகளை, “கணைகள், வீரர்களின் கவசங்களைத் தாக்கின, அவற்றை ஊடுருவவில்லை” என்றும் எடுத்துக் கொள்ளலாம் அல்லவா?

சேதிகள் {சைத்யர்கள்}, காசிகள், கரூசர்கள் ஆகியோரைச் சேர்ந்தவர்களும், பெரும் புகழையும், உன்னதப் பிறப்பையும் கொண்டவர்களும், போரில் தங்கள் உயிரை இழக்கத் துணிந்தவர்களும், களத்தில் இருந்து பின்வாங்காதவர்களும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட சிறந்த கொடிமரங்களை உடையவர்களுமான பதினாலாயிரம் {14000} தேர்வீரர்கள், வாயை அகல விரித்திருக்கும் அந்தகனை ஒத்த பீஷ்மரைப் போரில் சந்தித்து, அவர்கள் அனைவரும் தங்கள் தேர்களோடும், குதிரைகளோடும், யானைகளோடும் அடுத்த உலகத்திற்குச் சென்றனர். மேலும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அச்சுகள் மற்றும் அடிமரங்கள் நொறுங்கிய சிலவும், சக்கரங்கள் நொறுங்கிய சிலவும் என நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் தேர்களை நாங்கள் கண்டோம்.

வரூதங்களோடு {மரக்கூடுகளோடு} [3] உடைத்துத் தள்ளப்பட்ட தேர்கள், கீழே வீழ்த்தப்பட்டு நெடுஞ்சாண் கிடையாகக் கிடக்கும் தேர்வீரர்கள், கணைகள், உடைக்கப்பட்ட அழகிய கவசங்கள், கோடரிகள் {பட்டசங்கள்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கதாயுதங்கள், பிண்டிபாலங்கள் {குறுங்கணைகள்}, கூர்மையுள்ள கணைகள், தேர்களின் அடிமரங்கள், அம்பறாத்தூணிகள், உடைக்கப்பட்ட சக்கரங்கள், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, எண்ணிலடங்கா விற்கள், வாள்கள், காது குண்டலங்கள் அணிந்த தலைகள், தோலாலான கையுறைகள், விரலுறைகள், கீழே வீழ்த்தப்பட்ட கொடிமரங்கள், பலவாறாக அறுக்கப்பட்ட விற்கள் ஆகியவற்றால் பூமி விரவி கிடந்தது.

[3] இஃது ஆயுதங்களால் தாக்கப்படாதவாறு தேரைச்சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் ஒரு பலகைத்தடுக்காகும். இச்சொல் வில்லிபாரதத்திலும் “வசிப்பிடம்” என்ற பொருளில் கையாளப்பட்டுள்ளது.

பாகன்களை இழந்த யானைகளும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கொல்லப்பட்ட (பாண்டவப் படையின்) குதிரைவீரர்களும் கீழே இறந்து கிடந்தனர். அந்த வீரப் பாண்டவர்கள் {பாண்டவ வீரர்கள்} முயற்சித்தாலும், பீஷ்மரின் கணைகளால் பீடிக்கப்பட்டு, போர்க்களத்தைவிட்டு ஓடும் தேர்வீரர்களைத் தடுக்க அவர்கள் சக்தியற்றவர்களாக இருந்தனர். உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இந்திரனுக்கு இணையான சக்தியைக் கொண்ட பீஷ்மரால் அந்த வலிமைமிக்கப் படை கொல்லப்பட்ட போது, இருவராக எவரும் ஓடாதவாறு முற்றாகச் சிதறி ஓடியது.

வீழ்த்தப்பட்ட தேர்கள், யானைகள், குதிரைகள், அதிகமாகக் கீழே கிடந்த கொடிமரங்கள் ஆகியவற்றைக் கொண்ட பாண்டு மகன்களின் அந்தப் படை, உணர்வுகளை இழந்து துன்பப் பேரொலிகளை எழுப்பின. அந்நேரத்தில் விதியால் உந்தப்பட்டுத் தந்தை மகனைக் கொன்றான், மகனும் தந்தையைக் கொன்றான், நண்பன் தன் அன்புக்குரிய நண்பனை அடித்தான். பாண்டவப் படையின் போராளிகள் பலர், தங்கள் கவசங்களை எறிந்துவிட்டு, கலைந்த கேசங்களுடன் திக்குகள் அனைத்திலும் தப்பி ஓடுவது காணப்பட்டது. உண்மையில், அந்தப் பாண்டவத் துருப்புகள், ஏர்க்கால்களின் கட்டுப்பாட்டில் நீடிக்காமல் அச்சத்தால் காட்டுத்தனமாக {கட்டுப்பாடு இல்லாமல்} ஓடும் காளைகளைப் போலத் தெரிந்தன. உண்மையில் நாங்கள் கேட்ட துன்பக் குரல் பேரொலியாக இருந்தது.

பிறகு, அந்த யாதவர்களுக்கு மகிழ்ச்சியளிப்பவன் {கிருஷ்ணன்}, பாண்டவப்படை சிதறி ஓடுவதைக் கண்டு, (தான் வழிநடத்திய) சிறந்த தேரின் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டு, பிருதையின் மகனான பீபத்சுவிடம் {அர்ஜுனனிடம்}, “ஓ! பார்த்தா {அர்ஜுனா}, நீ எதிர்பார்த்த நேரம் இதோ வந்து விட்டது. இப்போதே தாக்குவாயாக, ஓ! மனிதர்களில் புலியே {அர்ஜுனா}, அல்லது நீ உனது உணர்வுகளை இழந்துவிடுவாய். முன்னர், ஓ! வீரா {அர்ஜுனா}, விராடரின் நகரத்தில் நடந்த மன்னர்களின் கூட்டத்தில், ஓ! பார்த்தா {அர்ஜுனா}, சஞ்சயனின் முன்னிலையில் இவ்வார்த்தைகளை நீ சொன்னாய்: “யுத்தத்தில் என்னோடு போரிடப் போகும் பீஷ்மர், துரோணர் ஆகியோரையும், திருதராஷ்டிரர் மகனின் {துரியோதனனின்} வீர்கள் அனைவரையும், அவர்களைப் பின்தொடர்பவர்கள் அனைவரையும் சேர்த்து நான் கொல்வேன்” {என்று சொன்னாய்}. ஓ! குந்தியின் மகனே, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {அர்ஜுனா}, அந்த உனது வார்த்தைகளை உண்மையாக்குவாயாக. க்ஷத்திரியன் ஒருவனின் கடமையை நினைவு கூர்ந்து எந்தக் கவலையும் இல்லாமல் போரிடுவாயாக” என்றான் {கிருஷ்ணன்}.

வாசுதேவனால் {கிருஷ்ணனால்} இப்படிச் சொல்லப்பட்ட அர்ஜுனன் தன் தலையைக் கீழே தொங்கப் போட்டு, அவனைச் சாய்வாகப் பார்த்தான். பிறகு, விருப்பமில்லாமல் பதிலுரைத்த அந்தப் பீபத்சு {அர்ஜுனன்}, “கொல்லத்தகாதவர்களைக் கொன்று நரகத்தையே இறுதியாகக் கொண்ட அரசாட்சியை அடைவது, அல்லது நாடுகடத்தப்பட்டவன் காட்டில் படும் துன்பங்களை அடைவது (இவை மட்டுமே மாற்று {இவை இரண்டில் ஒன்றையே தேர்ந்தெடுக்க முடியும்}). இவற்றில் நான் எதை அடைய வேண்டும்? குதிரைகளைத் தூண்டுவாயாக, ஓ! ரிஷிகேசா {கிருஷ்ணா}, உன் கட்டளையை நான் செய்வேன் {நிறைவேற்றுவேன்}. வெல்லப்பட முடியாத வீரரான குரு பாட்டன் பீஷ்மரை நான் வீழ்த்துவேன்” என்றான் {அர்ஜுனன்}.

இப்படிக் கேட்டுக்கொள்ளப்பட்ட மாதவன் {கிருஷ்ணன்}, சூரியன் போலப் பார்க்கப்பட முடியாதவராகப் பிரகாசித்துக் கொண்டிருந்த பீஷ்மர் இருந்த இடத்திற்கு அந்த வெள்ளிநிறக் குதிரைகளைத் தூண்டினான். பிறகு, பின்வாங்கிச் சென்ற யுதிஷ்டிரனின் அந்தப் பெரும்படை, பீஷ்மருடன் மோதச் செல்லும் வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பார்த்தனை {அர்ஜுனனைக்} கண்டு, மீண்டும் போரிட வந்தது. அப்போது, குருக்களில் முதன்மையான பீஷ்மர் ஒரு சிங்கத்தைப் போல மீண்டும் மீண்டும் முழங்கினார். பிறகு அவர் {பீஷ்மர்},  கணைமாரியால் தனஞ்சயனின் தேரை விரைவாக மறைத்தார். ஒரு கணத்திற்குள் அவனுடைய {அர்ஜுனனுடைய} தேர், குதிரைகள், தேரோட்டி {கிருஷ்ணன்} ஆகியோர் அந்தக் கணை மாரியின் விளைவால் முழுமையாகப் பார்க்கப்பட முடியாதனவாக ஆகினர் {மறைக்கப்பட்டனர்}.

எனினும் அச்சமற்ற வாசுதேவன் {கிருஷ்ணன்}, பொறுமையைத் திரட்டிக் கொண்டு பீஷ்மரின் கணைகளால் சிதைக்கப்பட்ட குதிரைகளைப் பெரும் சுறுசுறுப்புடன் தூண்டினான். அப்போது பார்த்தன் {அர்ஜுனன்}, மேகங்களின் முழக்கத்தைப் போன்ற நாணொலி கொண்ட தன் தெய்வீக வில்லை {காண்டீவத்தை} எடுத்து, தன் கணைகளால் பீஷ்மரின் வில்லை (துண்டுகளாக) வெட்டி, அவரது கைகளில் இருந்து அதை {வில்லை} விழச் செய்தான்.

பிறகு, இப்படி வில் வெட்டப்பட்ட உமது தந்தையான அந்தக் குரு வீரர் {பீஷ்மர்}, கண் இமைப்பதற்குள் மற்றொரு பெரிய வில்லில் நாணேற்றினார். எனினும், கோபத்தால் தூண்டப்பட்ட அர்ஜுனன், அவரது {பீஷ்மரின்} அந்த வில்லையும் துண்டித்தான்.

சந்தனுவின் மகன் {பீஷ்மர்}, அர்ஜுனன் வெளிப்படுத்திய கரநளினத்தை {கர லாகவத்தை} மெச்சி, "ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, நன்று செய்தாய், நன்று, ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, நன்று" என்றார். இப்படி அவனிடம் சொன்ன பீஷ்மர், அந்தப் போரில் மற்றொரு அழகிய வில்லை எடுத்து, பார்த்தனின் {அர்ஜுனனின்} தேரின் மேல் பல கணைகளை ஏவினார். வாசுதேவன் {கிருஷ்ணன்}, (பீஷ்மரின்) அந்தக் கணைகள் அனைத்தையும் கலங்கடிக்கும் வகையில் சுழன்று நகர்ந்து, குதிரைகளைக் கையாள்வதில் {தன்} பெரும் திறமையை வெளிப்படுத்தினான். பீஷ்மரின் கணைகளால் சிதைக்கப்பட்ட அந்த மனிதர்களில் புலிகளான இருவரும், கொம்புகளில் சிராய்ப்புகளைக் கொண்ட கோபக்காரக் காளைகள் இரண்டைப் போல அழகாகத் தெரிந்தனர்.

பகைவீரர்களைக் கொல்பவனும், வலிய கரங்களைக் கொண்டவனுமான அந்த மதுகுலத்து வாசுதேவன் {கிருஷ்ணன்}, மென்மையாகப் போரிடும் பார்த்தனையும் {அர்ஜுனனையும்}, போரில் இடையறாமல் தன் கணைமாரியைப் பொழியும் பீஷ்மரையும், இரண்டு படைகளுக்கும் நடுவில் இருந்து கொண்டு, சூரியனைப் போல அனைத்தையும் பின்னவர் {பீஷ்மர்} எரிப்பதையும், யுதிஷ்டிரனின் போராளிகளுள் முதன்மையானவர்களை அடித்து வீழ்த்துவதையும், உண்மையில், யுக முடிவில் என்ன நடக்குமோ, அதை யுதிஷ்டிரனின் படையில் {பீஷ்மர்} சாதிப்பதையும் கண்டு, அதை {கிருஷ்ணனால்} மேலும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

அப்போது, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அந்த யோக சக்திகளின் பெருந்தலைவன் {கிருஷ்ணன்}, வெள்ளியைப் போலத் தெரிந்த பார்த்தனின் {அர்ஜுனனின்} குதிரைகளை விட்டுவிட்டு, கோபத்தால் நிறைந்து, அந்தப் பெரும் தேரில் இருந்து கீழே குதித்தான். அடிக்கடி சிங்கம் போல முழங்குபவனும், அளவிலா காந்தி கொண்டவனும், அண்டத்தின் தலைவனும், பெரும் சக்தி கொண்டவனுமான அந்த வலிமைமிக்கக் கிருஷ்ணன், சினத்தால் தாமிரம் போலச் சிவந்த கண்களுடன், தன் வெறுங்கைகளையே தன் ஆயுதமாகக் கொண்டு, தன் நடையால் அண்டத்தையே பிளந்துவிடுபவனைப் போல, பீஷ்மரைக் கொல்ல விரும்பி, கையில் சாட்டையுடன் அவரை {பீஷ்மரை} நோக்கி விரைந்தான்.

மாதவன் {கிருஷ்ணன்} பீஷ்மரின் அருகே இருப்பதையும், அந்தச் சீற்றமிகு போரில் அவர் {பீஷ்மர்} மீது {கிருஷ்ணன்} பாய இருப்பதையும் கண்டு போராளிகள் அனைவரின் இதயங்களும் {மனங்களும்} மயக்கத்தில் இருப்பதாகத் தெரிந்தது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வாசுதேவன் மீது கொண்ட அச்சத்தால் விளைந்த, "பீஷ்மர் கொல்லப்பட்டார், பீஷ்மர் கொல்லப்பட்டார்" என்ற இந்த உரத்த கூக்குரல்களே, அங்கே கேட்கப்பட்டன. மஞ்சள் ஆடை {பீதாம்பரம்} உடுத்தியவனும், இந்திரநீலக்கல்லைப் போலக் கறுத்த உடலைக் கொண்டவனுமான ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, பீஷ்மரைத் தொடர்ந்த போது {எதிர்த்த போது}, மின்னலின் சக்தியூட்டப்பட்ட மேகங்களின் திரளைப் போல அழகாகத் தெரிந்தான். அந்த மது குலத்தின் காளை {கிருஷ்ணன்}, சிங்கம் ஒன்று யானையை நோக்கிச் செல்வதைப் போலவோ, மாட்டுமந்தையின் தலைவன் {காளை} ஒன்று, தன் வகையான மற்றொன்றை {காளையை} நோக்கிச் செல்வதைப் போலவோ, முழக்கப்பேரொலியுடன் பீஷ்மரை நோக்கி மூர்க்கமாக விரைந்தான்.

பீஷ்மர், தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட அவன் {புண்டரீகாக்ஷன், கிருஷ்ணன்} (இப்படித்) தன்னை நோக்கி வருவதைக் கண்டு, அச்சமற்ற வகையில் தன் பெரிய வில்லை வளைக்கத் தொடங்கினார். அச்சமற்ற இதயத்துடன் கூடிய அவர் {பீஷ்மர்}, கோவிந்தனிடம் {கிருஷ்ணனிடம்}, "வா, ஓ! தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனே {புண்டரீகாக்ஷா}, வா. ஓ! தேவர்களின் தேவா, நான் உன்னை வணங்குகிறேன். ஓ! சாத்வதர்களில் சிறந்தவனே {கிருஷ்ணா}, இந்தப் போரில் இன்று என்னைக் கீழே வீசி எறிவாயாக. ஓ! தேவா {கிருஷ்ணா}, போரில் உன்னால் கொல்லப்படுவது, ஓ! பாவமற்றவனே, ஓ! கிருஷ்ணா, உலகில் அனைத்துவகையிலும் எனக்குப் பெரும் நன்மையைச் செய்யும். ஓ! கோவிந்தா {கிருஷ்ணா}, மூவுலகங்களில் உள்ள அனைவரிலும், போரில் இன்று எனக்குச் செய்யப்படும் மதிப்பு {கௌரவம்} பெரியதாகும். ஓ! பாவமற்றவனே {கிருஷ்ணா}, நீ விரும்பியவாறு என்னைத் தாக்கலாம், ஏனெனில் நான் உன் அடிமையாவேன்" என்றார் {பீஷ்மர்}.

அதேவேளையில், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்}, பின்னாலிருந்து கேசவனை {கிருஷ்ணனை} விரைவாகத் தொடர்ந்து வந்து, தன் இரு கைகளாலும் அவனைச் {கிருஷ்ணனை} சுற்றிவளைத்துப் பிடித்தான். ஆண்மக்களில் சிறந்தவனும், தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனுமான கிருஷ்ணன், பார்த்தனால் {அர்ஜுனனால்} {இப்படிப்} பிடிக்கப்பட்டிருந்தாலும், பின்னவனையும் {அர்ஜுனனையும்} சேர்த்து இழத்துக் கொண்டு பெரும் வேகத்துடன் முன்னேறிக் கொண்டிருந்தான். எனினும், பகைவீரர்களைக் கொல்பவனான வலிமைமிக்கப் பார்த்தன் {அர்ஜுனன்}, ரிஷிகேசனின் {கிருஷ்ணனின்} கால்களைப் பலமாகப் பற்றிக் கொண்டு, பத்தாவது எட்டில் {பத்தாவது அடியில்} பெரும் சிரமத்துடன் அவனைத் {கிருஷ்ணனை} நிறுத்தினான்.

பிறகு, கேசவனின் {கிருஷ்ணனின்} அன்பு நண்பனான அர்ஜுனன், கவலையில் நிறைந்து அவனிடம் {கிருஷ்ணனிடம்} பாசத்துடன், "ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, நிற்பாயாக, ஓ! கேசவா {கிருஷ்ணா}, "நான் போரிடேன்" என்று முன்பு நீ சொன்ன வார்த்தைகளைப் பொய்யாக்குவது உனக்குத் தகாது. ஓ! மாதவா {கிருஷ்ணா}, நீ ஒரு பொய்யன் என்று மக்கள் சொல்வார்கள். இந்தச் சுமைகள் {பொறுப்புகள்} அனைத்தும் என் மீதே இருக்கின்றன. பாட்டனை {பீஷ்மரை} நான் கொல்வேன். ஓ! கேசவா {கிருஷ்ணா}, என் பகைவர்களின் அழிவை அடைவதற்கான அனைத்தையும் நான் செய்வேன் என, ஓ! பகைவர்களைக் கொல்பவனே {கிருஷ்ணா}, என் ஆயுதங்கள் மீதும், உண்மை {சத்தியம்} மீதும், என் நற்செயல்களின் மீதும் நான் உறுதி கூறுகிறேன் {ஆணையேற்கிறேன்}. வெல்லப்பட முடியாதவரான அந்த வலிமைமிக்கத் தேர்வீரர் {பீஷ்மர்}, யுக முடிவில் (அண்ட அழிவு ஏற்படும்போது) உள்ள பிறை சந்திரனைப் போல, மிக எளிமையாகக் கீழே வீசி எறிப்படுவதை இந்நாளே பார்ப்பாயாக" என்று சொன்னான் {அர்ஜுனன்}. எனினும், மாதவன் {கிருஷ்ணன்}, உயர் ஆன்ம பல்குனனின் {அர்ஜுனனின்} இவ்வார்த்தைகளைக் கேட்டாலும், ஒரு வார்த்தையும் பேசாமல், ஆனால் கோபத்துடன் மீண்டும் தேரின் மேல் ஏறினான் [4].

[4] பீஷ்ம பர்வம் பகுதி 59ல் மூன்றாம் நாள் போரில் இதே போன்றதொரு காட்சி உண்டு. அப்போது பீஷ்மரைக் கொல்ல விரையும் கிருஷ்ணன், தன் கையில் சுதர்சனச் சக்கரத்தைக் கொண்டிருந்தான். இப்போதோ சாட்டையைக் கொண்டிருக்கிறான். அப்போதும் அர்ஜுனன், கிருஷ்ணனைப் பத்தாவது எட்டில் தான் தடுத்து நிறுத்தினான். இது போலவே அந்தப் பகுதியிலும் அர்ஜுனனின் உறுதிகளை ஏற்று மீண்டும் தன் தேரில் ஏறினான் கிருஷ்ணன். இந்தச் சம்பவம் போரில் இருமுறை நடந்ததாகவும் இருக்கலாம், அல்லது இரண்டில் ஒன்று சிலரால் சொல்லப்படுவதைப் போல இடைசெருகலாகவும் இருக்கலாம். என்னைப் பொறுத்தவரை இந்தப் பகுதியில் உள்ள வர்ணனையை விடப் பீஷ்ம பர்வம் பகுதி 59ல் உள்ள வர்ணனை தகவல்கள் நிறைந்ததாக இருக்கிறது. எனினும் இந்தப்போரில் தேரோட்டியாகச் செயல்பட்ட கிருஷ்ணன், இங்கே சாட்டையோடு போவது இயல்பாகத் தெரிகிறது.

பிறகு, சந்தனுவின் மகனான பீஷ்மர், தங்கள் தேரில் நின்றுகொண்டிருந்த அந்த மனிதர்களில் புலிகளான இருவர் மீதும், மலைச்சாரலில் மழையைப் பொழியும் மேகங்களைப் போலத் தன் கணைமாரிகளை மீண்டும் பொழிந்தார். உமது தந்தையான தேவவிரதர் {பீஷ்மர்}, கோடை காலத்தில் அனைத்துப் பொருட்களின் சக்திகளையும் தன் கதிர்களால் உறிஞ்சும் சூரியனைப் போல (பகை) வீரர்களின் உயிர்களை எடுத்தார். பாண்டவர்கள், போரில் குருக்களின் படையணிகளை உடைத்ததைப் போலவே, உமது தந்தையும் {பீஷ்மரும்} போரில் பாண்டவப் படையணிகளை உடைத்தார்.

மேலும் முறியடிக்கப்பட்டவர்களான அந்தப் படைவீரர்கள், ஆதரவற்றவர்களாகக் கொடூரமாகப் பீஷ்மரால் நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் கொல்லப்படும்போது, தன்னொளியில் சுடர்மிகும் நடுப்பகல் சூரியனைப் போல இருந்த அவரை {பீஷ்மரை} அந்தப் போரில் பார்க்கும் சக்தி கூட அற்றவர்களாக இருந்தனர். உண்மையில், அச்சத்தால் பீடிக்கப்பட்ட பாண்டவர்கள் {பாண்டவப் படைவீரர்கள்}, அந்தப் போரில் மனித சக்திக்கு மேம்பட்ட சாதனைகளை அப்போது அடைந்து வந்த பீஷ்மரை மருட்சியுடன் கண்டனர். இப்படித் தப்பியோடும் பாண்டவத் துருப்பினர், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பலமான ஒரு நபரால் கீழே மிதித்துத் தள்ளப்பட்டு, எறும்புக் கூட்டத்தில் மூழ்கிய ஒரு பசுமந்தையைப் போல ஒரு பாதுகாவலனை அடையத் தவறினர் [5].

[5] கங்குலியின் ஆங்கிலப் பதிப்பில் இந்த வரி, “And the Pandava troops, thus fleeing away, O Bharata, failed to find a protector, like a herd of kine sunk in a shoal of ants while being trod down by a strong person என்று இருக்கிறது. வேறு ஒரு பதிப்பில், “அப்படிப் பீஷ்மாரல் துரத்தப்படும் பாண்டவப் படைகள் சேற்றில் அமிழ்ந்த பசுக்கள் போலப் பாதுகாவலனை அடையவில்லை. பலசாலியான பீஷ்மரால் துர்பலர்களான பாண்டவப் படையினர் போரில் எறும்புகள் போல நசுக்கப்பட்டார்கள்” என்று இருக்கிறது. மன்மதநாதத் தத்தரின் பதிப்பில் “Then, O Bharata, the Pandava troops thus curshed by Bhishma, could not find a protector, like kine sunk in slough or like an ephemeral ant afflicted by a powerful creature” , அதாவது “பிறகு, ஓ! பாரதரே, பீஷ்மரால் இப்படி நசுக்கப்பட்ட பாண்டவத் துருப்புகளால், சகதியில் மூழ்கிய பசுவைப் போலவோ, பலம் நிறைந்த ஓர் உயிரினத்தால் பாதிக்கப்பட்டு ஓடும் எறும்பைப் போலவோ பாதுகாவலன் ஒருவனைக் கண்டடைய முடியவில்லை.” என்று இருக்கிறது.

உண்மையில், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அபரிமிதமான கணைகளைக் கொண்டவரும், (பாண்டவப் படையின்) மன்னர்களை எரித்துக் கொண்டிருந்தவரும், அந்தக் கணைகளின் விளைவாக நெருப்புக் கதிர்களை உதிர்க்கும் சுடர்மிக்கச் சூரியனைப் போலத் தெரிந்தவரும், அசைக்கப்பட முடியாதவருமான அந்த வலிமைமிக்க வீரரைப் பாண்டவர்களால் {பாண்டவப் படையினரால்} பார்க்க இயலவில்லை. அவர் {பீஷ்மர்} இப்படிப் பாண்டவப் படையைக் கலங்கடித்துக் கொண்டிருந்த போது, பகலை உண்டாக்குபவனான ஆயிரங்கதிரோன் {சூரியன்} {தான்} மறையும் மலைகளுக்குச் சென்றான், களைத்துப் போயிருந்த துருப்புகளும் (களத்திலிருந்து) பின்வாங்குவதில் தங்கள் இதயங்களை நிலைக்கச் செய்தனர்” {என்றான் சஞ்சயன்}.

ஒன்பதாம் நாள் போர் முற்றும்



ஆங்கிலத்தில் | In English