Sunday, March 06, 2016

அர்ஜுனனுக்கு அஞ்சிய துரியோதனன்! - பீஷ்ம பர்வம் பகுதி – 110

Duryodhana influenced by terror beholding Arjuna! | Bhishma-Parva-Section-110 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 68)

பதிவின் சுருக்கம் : பீஷ்மர் புரிந்த கடுமையான போர்; பீஷ்மர் இருந்த இடத்திற்கு விரைந்து வந்த அர்ஜுனன்; அர்ஜுனனைக் கண்டு சிதறி ஓடிய கௌரவப் படை; பீஷ்மரிடம் பேசிய துரியோதனன்; துரியோதனனுக்குப் பதில் சொன்ன பீஷ்மர்; போரில் பீஷ்மரைத் தடுத்த பாண்டவப் படையினர்; பீஷ்மரால் கொல்லப்பட்ட படையினரின் எண்ணிக்கை...

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “பாஞ்சால இளவரசனான சிகண்டி, கோபத்தால் தூண்டப்பட்டு, நீதிமிக்க ஆன்மாவும், கட்டுப்பாடான நோன்புகளையும் கொண்ட கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} போரில் எவ்வாறு எதிர்த்துச் சென்றான்? பெரும் செயல்வேகம் தேவைப்பட்ட அந்தச் சந்தர்ப்பத்தில், வெற்றியை விரும்பி ஆயுதங்களை உயர்த்தியவர்களும், பாண்டவப்படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்களில், செயல்வேகத்துடன் முயற்சி செய்து, சிகண்டியைப் பாதுகாத்தவர்கள் யாவர்? பெரும் சக்தியைக் கொண்ட சந்தனுவின் மகன் பீஷ்மரும், அந்தப் பத்தாம் {10} நாள் போரில் பாண்டவர்கள் மற்றும் சிருஞ்சயர்களுடன் எவ்வாறு போரிட்டார்? போரில் பீஷ்மருடன் சிகண்டி மோதும் கருத்தை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. (உண்மையில், சிகண்டி பீஷ்மரைத் தாக்கிய போது), பீஷ்மரின் தேரோ, அவரது வில்லோ முறிக்கப்பட்டதா?” என்று கேட்டான் {திருதராஷ்டிரன்}.


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அந்தப் போரில் போராடிக் கொண்டிருந்தபோது, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, பீஷ்மரின் வில்லுக்கோ, தேருக்கோ எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. அப்போது அவர் {பீஷ்மர்} நேரான கணைகளால் எதிரையைக் கொன்று கொண்டிருந்தார். உமது படையின் பல்லாயிரக்கணக்கான வலிமைமிக்கத் தேர்வீரர்களும், யானைகளும், நன்கு சேணம் பூட்டப்பட்ட குதிரைகளும் பாட்டனைப் {பீஷ்மரைத்} தங்கள் முன்னிலையில் கொண்டு போரிடச் சென்றன.

ஓ! குரு குலத்தவரே {திருதராஷ்டிரரே}, எப்போதும் வெல்பவரான பீஷ்மர், தன் நோன்புக்கு ஏற்புடையவகையில், பார்த்தர்களின் துருப்புகளைக் கொல்வதில் இடையறாமல் ஈடுபட்டார். (அவர்களோடு {பாண்டவப் படைவீரர்களோடு}) போரிடுபவரும், தன் கணைகளால் தனது எதிரிகளைக் கொல்பவருமான அந்தப் பெரும் வில்லாளியைப் {பீஷ்மரைப்} பாஞ்சாலர்களாலும், பாண்டவர்களாலும், தாங்கிக் கொள்ள இயலவில்லை. பத்தாம் நாள் வந்த போது, பீஷ்மர், நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான தன் கணைகளால் அந்த எதிரிப் படையைப் பிரித்துச் சிதறடித்தார்.

ஓ! பாண்டுவின் அண்ணனே {திருதராஷ்டிரரே}, வேல் தரித்த யமனுக்கு ஒப்பான அந்தப் பெரும் வில்லாளி பீஷ்மரைப் போரில் வீழ்த்த பாண்டுவின் மகன்களால் முடியவில்லை. பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வெல்லப்பட முடியாதவனும், இடது கையாலும் வில்வளைக்க இயன்றவனுமான பீபத்சு, அல்லது தனஞ்சயன் {அர்ஜுனன்}, தேர்வீரர்கள் அனைவரையும் அச்சுறுத்தியபடி அந்த இடத்திற்கு வந்தான். சிங்கத்தைப் போல உரக்க முழங்கி, வில்லின் நாணைத் தொடர்ச்சியாகப் பின்னிழுத்து, கணைகளின் மாரியைப் பொழிந்தபடி, காலனைப் போலவே அந்தப் போர்க்களத்தில் திரிந்தான். அவனது முழக்கங்களால் அச்சமடைந்த உமது வீரர்கள், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, சிங்கத்தின் ஒலியைக் கேட்ட சிறு விலங்குகளைப் போல, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அச்சத்தால் தப்பி ஓடினர்.

இப்படி அந்தப் படையைப் பீடித்து, வெற்றிமகுடம் சூட்டிய பாண்டுவின் மகனை {அர்ஜுனனைக்} கண்ட துரியோதனன், தானும் அச்சத்தின் ஆதிக்கத்துக்குள்ளாகி பீஷ்மரிடம், “ஓ! ஐயா {பீஷ்மரே}, (தன் தேரில் பூட்டப்பட்ட) வெண் குதிரைகளையும், தன் தேரோட்டியாகக் கிருஷ்ணனையும் கொண்ட அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, காட்டை எரிக்கும் தீயைப் போல என் துருப்புகள் அனைத்தையும் எரிக்கிறான். ஓ! வீரர்களில் முதன்மையானவரே, ஓ! கங்கையின் மைந்தரே {பீஷ்மரே}, போரில் பாண்டுவின் மகனால் {அர்ஜுனனால்} கொல்லப்படுவதையும், {என்} துருப்புகள் அனைத்தும் ஓடுவதையும் பாரும்.

உண்மையில், ஓ! எதிரிகளை எரிப்பவரே {பீஷ்மரே}, காட்டில் மந்தையாளன் {இடையன்} தன் கால்நடைகளை நையப்புடைப்பதைப் போலவே, {அர்ஜுனனால்} என் படையும் நையப்புடைக்கப்படுகிறது. வெல்லப்பட முடியாதவனான பீமனும், தனஞ்சயனின் {அர்ஜுனனின்} கணைகளால் பிளக்கப்பட்டு, அனைத்துப் புறங்களிலும் சிதறி ஓடும் எனது படையை முறியடிக்கிறான். சாத்யகி, சேகிதானன், மாத்ரியின் இரட்டை மகன்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்}, வீர அபிமன்யு ஆகியோரும் எனது துருப்புகளை முறியடிக்கின்றனர். துணிச்சல் மிக்கத் திருஷ்டத்யும்னன், ராட்சசன் கடோத்கசன் ஆகியோரும், இந்தக் கடும் போரில் என் படையை மூர்க்கமாக உடைத்துத் துரத்துகின்றனர்.

அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களால் கொல்லப்படும் இந்தத் துருப்புகளில், ஓ! மனிதர்களில் புலியே {பீஷ்மரே}, நிலைத்து நிற்பதிலும், களத்தில் போராடுவதிலும் தேவர்களுக்கு இணையான ஆற்றல் படைத்த உம்மைத் தவிர வேறு புகலிடத்தை நான் காணவில்லை. எனவே, தாமதமில்லாமல் அந்தப் பெரும் தேர்வீரர்களை அடைந்து, பீடிக்கப்படும் இந்தத் துருப்புகளுக்குப் புகலிடமாவீராக” என்றான் {துரியோதனன்}.

அவனால் {துரியோதனனால்} இப்படிச் சொல்லப்பட்ட உமது தந்தையும், சந்தனுவின் மகனுமான தேவவிரதர் {பீஷ்மர்}, ஒருக்கணம் சிந்தித்து, தான் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானித்துக் கொண்டு, உமது மகனுக்கு ஆறுதல் அளிக்கும் இந்த வார்த்தைகளைச் சொன்னார், “ஓ! துரியோதனா, நான் சொல்வதை அமைதியாகக் கேட்பாயாக. ஓ! மன்னா, ஓ! பெரும்பலம் கொண்டவனே {துரியோதனா}, “உயர் ஆன்மா கொண்ட பத்தாயிரம் {10000} க்ஷத்திரியர்களை ஒவ்வொரு நாளும் கொன்றுவிட்டே போரில் இருந்து திரும்புவேன்” என்று முன்பு நான் உன்னிடம் உறுதியேற்றேன். ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, அந்நோன்பை நான் நிறைவேற்றி இருக்கிறேன். ஓ! பெரும்பலம் கொண்டவனே, இன்று நான் இன்னும் பெரிய சாதனை ஒன்றை அடைவேன்.

ஒன்று இன்று நான் கொல்லப்பட்டு உறங்குவேன், அல்லது பாண்டவர்களைக் கொல்வேன். {இந்த இரண்டில் ஒன்று இன்று ஏற்படுவது உறுதி}. ஓ! மனிதர்களில் புலியே {துரியோதனா}, உன் படையின் தலைமையில் இருந்து எனது உயிரை விடுவதன் மூலம், நீ எனக்கு அளித்த உணவின் நிமித்தமாக நான் உனக்குப் பட்ட கடனிலிருந்து இன்று விடுபடுவேன் [1]" என்றார் {பீஷ்மர்}.

[1] வேறொரு பதிப்பில் கூடுதல் செய்திகள் இருக்கின்றன. அது பின்வருமாறு, “இப்போது நான், கொல்லப்பட்டுப் பூமியில் படுக்கவாவது படுப்பேன்; அல்லது பாண்டவர்களைக் கொல்லவாவது கொல்வேன். இந்திரனுடன் கூடிய அமரர்களாலும் பெரும் பலசாலிகளான பாண்டவர்களை வெல்ல முடியாது. அப்படியிருக்க, மரணம் எய்தக் கூடிய க்ஷத்திரியனால் எவ்வாறு அவர்களை வெல்ல முடியும்? ஓ! மனிதர்களில் சிறந்தவனே! நான் போரில் உயிரை விட்டு, எஜமானின் அன்னத்தை உண்டதால் ஏற்பட்ட உன் கடனை இன்று தீர்த்துக் கொள்ளப்போகிறேன்” என்று இருக்கிறது.

அந்த வெல்லப்பட முடியாத வீரர் {பீஷ்மர்}, இவ்வார்த்தைகளைச் சொன்ன பிறகு, க்ஷத்திரியர்களுக்கு மத்தியில் தன் கணைகளை இறைத்துக் கொண்டு, பாண்டவப் படையைத் தாக்கினார். பிறகு பாண்டவர்கள், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, கடும் நஞ்சுமிக்கப் பாம்பொன்றைப் போலக் கோபத்தால் தூண்டப்பட்டவரும், தன் படைகளுக்கு மத்தியில் இருந்தவருமான கங்கையின் மைந்தரைத் {பீஷ்மரைத்} தடுக்கத் தொடங்கினர். உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் பத்தாம் நாள் போரில் பீஷ்மர், ஓ! குரு குலத்தவரே {திருதராஷ்டிரரே}, தன் வலிமையை வெளிப்படுத்தி, நூறாயிரக் கணக்கில் கொன்றார்.

சூரியன் தன் கதிர்களால் (பூமியின்) ஈரப்பதத்தை உறிஞ்சுவதைப் போல, பாஞ்சாலர்களில் முதன்மையான அரசத் தேர்வீரர்களின் சக்திகளை அவர் {பீஷ்மர்} வற்ற செய்தார். மனிதர்களில் சிறந்தவரான அந்தப் பீஷ்மர், பெரும் செயல்வேகத்துடன் பத்தாயிரம் {10000} யானைகளையும், பத்தாயிரம் {10000} குதிரைகளையும், அவற்றைச் செலுத்திய வீரர்களையும், இருநூறாயிரம் {2,00,000-இரண்டு லட்சம்} காலாட்படை வீரர்களையும் கொன்ற பிறகு, புகைச்சுருள் ஏதுமற்ற நெருப்பைப் போல அந்தப் போரில் பிரகாசமாக ஒளிர்ந்தார் [2]. எனினும் பாண்டவர்கள், போரில் அந்தப் பெரும் வில்லாளியால் {பீஷ்மரால்} பீடிக்கப்பட்டாலும், வலிமைமிக்கச் சிருஞ்சயத் தேர்வீரர்கள் துணையுடன் அவரைப் {பீஷ்மரைக்} கொல்வதற்காக மேலும் விரைந்தார்கள்.

[2] வேறொரு பதிப்பில் இதற்கடுத்து, "உத்தராயணத்தை அடைந்து சுட்டெரிக்கும் சூரியனைப் போல ஒளிரும் அந்தப் பீஷ்மரைப் பாண்டவப் படை வீரர்களில் சிலர் பார்ப்பதற்கும் சக்தியற்றவர்களாக இருந்தார்கள்" என்று இருக்கிறது.

தன்னைச் சுற்றிலும் எண்ணற்றோருடன் மேலும் மேலும் போரிட்டுக் கொண்டிருந்த சந்தனுவின் மகன் பீஷ்மர், மேகத்திரள்களால் அனைத்துப் புறங்களிலும் மறைக்கப்பட்ட மேருவின் குன்றைப் போலக் காணப்பட்டார். எனினும், உமது மகன்கள் (பீஷ்மரைப் பாதுகாப்பதற்காக) பெரும்படையுடன் அவரைப் {பீஷ்மரைச்} சூழ்ந்து நின்றனர். பிறகு (குருக்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையில்) ஒரு பயங்கப் போர் தொடங்கியது" {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English