The encounter between Arjuna and Dussasana! | Bhishma-Parva-Section-111 | Mahabharata In Tamil
(பீஷ்மவத பர்வம் – 69)
பதிவின் சுருக்கம் : சிகண்டியை அறிவுறுத்திய அர்ஜுனன்; ஒருவரையொருவர் எதிர்த்துப் போரிட்ட வீரர்களின் பட்டியல்; அர்ஜுனனைத் தடுத்த துச்சாசனன்; துச்சாசனனின் வில்லையும் தேரையும் முறித்த அர்ஜுனன்; அர்ஜுனனைத் தவிர்த்துப் பீஷ்மரிடம் ஓடிய துச்சாசனன்; மயக்கம் தெளிந்த துச்சாசனன் மீண்டும் அர்ஜுனனுடன் போரிட்டது...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போரில் பீஷ்மரின் ஆற்றலைக் கண்ட அர்ஜுனன், சிகண்டியிடம், "பாட்டனை {பீஷ்மரை} நோக்கிச் செல்வாயாக. இன்று நீ பீஷ்மரிடம் சிறு அச்சத்தையும் கொள்ளக்கூடாது. என் கூரிய கணைகளின் மூலம் நானே அவரது சிறந்த தேரில் இருந்து அவரைப் {பீஷ்மரைக்} கீழே வீழ்த்துவேன்" என்றான் {அர்ஜுனன்}.
பார்த்தனால் {அர்ஜுனனால்} இப்படிச் சொல்லப்பட்ட சிகண்டி, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அந்த வார்த்தைகளைக் கேட்டு கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} நோக்கி விரைந்தான்.
அதே போல, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, திருஷ்டத்யும்னனும், வலிமைமிக்கத் தேர்வீரனான அபிமன்யுவும் பார்த்தனின் {அர்ஜுனனின்} வார்த்தைகளைக் கேட்டு பீஷ்மரை நோக்கி மகிழ்ச்சியுடன் விரைந்தனர்.
முதிர்ந்தவர்களான விராடன், துருபதன் ஆகியோரும் கவசம் பூண்ட குந்திபோஜனும், உமது மகன் {துரியோதனன்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே பீஷ்மரை நோக்கி விரைந்தனர்.
நகுலன், சகாதேவன், வீரமன்னன் யுதிஷ்டிரன் ஆகியோரும், வீரர்களில் எஞ்சியோர் அனைவரும், ஓ! ஏகாதிபதி, பீஷ்மரை நோக்கியே விரைந்தார்கள்.
ஒன்றாகச் சேர்ந்து செல்லும் (பாண்டவப் படையின்) அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களை எதிர்த்த உமது வீரர்களைப் பொறுத்தவரை, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவர்கள் தங்கள் சக்திக்குத் தக்கபடி எதிர்த்தார்கள். உம்மிடம் (அவர்களைக் குறித்துச்) சொல்லும் என்னை {என் வார்த்தைகளைக்} கேட்பீராக.
அந்தப் போரில், சித்திரசேனன் [1], இளம்புலியொன்று காளையைத் தாக்குவதைப் போல, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, பீஷ்மரிடம் சென்று கொண்டிருந்த சேகிதானனை எதிர்த்து விரைந்தான்.
[1] துரியோதனன் தம்பிகளுள் ஒருவன்.
கிருதவர்மன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் செயல்வேகத்துடனும், ஆவேசத்துடனும் முயன்று பீஷ்மரை அடைந்திருந்த திருஷ்டத்யும்னனைத் தடுத்தான்.
சோமதத்தன் மகன் {பூரிஸ்ரவஸ்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சினத்தால் தூண்டப்பட்டுப் பீஷ்மரைக் கொல்ல விரும்பிய பீமசேனனைப் பெரும் செயல்வேகத்துடன் தடுத்தான்.
அதேபோலப் பீஷ்மரின் உயிரைக் (காக்க) விரும்பிய விகர்ணனும், சுற்றிலும் எண்ணற்ற கணைகளை இறைத்த துணிச்சல் மிக்க நகுலனைத் தடுத்தான்.
சினத்தால் தூண்டப்பட்ட சரத்வானின் மகனான கிருபரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீஷ்மரின் தேரை நோக்கி முன்னேறிய சகாதேவனைத் தடுத்தார்.
வலிமைமிக்கத் துர்முகன் [2], பீஷ்மரைக் கொல்ல விரும்பியவனும், கொடுஞ்செயல் புரிபவனுமான பீமசேனனின் வலிமைமிக்க மகனை {கடோத்கசனை} நோக்கி விரைந்தான்.
[2] துரியோதனனின் தம்பிகளுள் ஒருவன்.
உமது மகன் துரியோதனன், போரில் முன்னேறிய சாத்யகியைத் தடுத்தான் [3].
[3] வேறு பதிப்பொன்றில் சாத்யகியை எதிர்த்தது அலம்புசன் என்று சொல்லப்பட்டுள்ளது.
காம்போஜர்களின் ஆட்சியாளன் சுதக்ஷிணன், ஓ! மன்னா, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பீஷ்மரின் தேரை நோக்கி முன்னேறிய அபிமன்யுவைத் தடுத்தான்.
சினத்தால் தூண்டப்பட்ட அஸ்வத்தாமன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, முதிர்ந்தவர்களும், ஒன்றிணைந்திருப்பவர்களும், எதிரிகளைத் தண்டிப்பவர்களுமான விராடன் மற்றும் துருபதன் ஆகிய இருவரையும் தடுத்தான்.
போரில் ஆவேசத்துடன் முயன்று வந்த பரத்வாஜரின் மகன் {துரோணர்}, பீஷ்மரின் மரணத்தை விரும்பியவனும், பாண்டவர்களில் மூத்தவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரனை எதிர்த்தார்.
வலிமைமிக்க வில்லாளியான துச்சாசனன், அந்தப் போரில் (தன் பிரகாசமான ஆயுதங்களால்) பத்து திக்குகளுக்கும் ஒளியூட்டுபவனும், பீஷ்மரை அடைய விரும்பியவனும், சிகண்டியைத் தன் முன்னிலையில் கொண்டவனும், பெரும் வேகத்துடன் விரைந்து வந்தவனுமான அர்ஜுனனைத் தடுத்தான்.
அந்தப் பெரும்போரில் உமது படையின் பிற வீரர்கள், பீஷ்மருக்கு எதிராகச் செல்லும் பாண்டவர்களின் {பாண்டவப் படையின்} வலிமைமிக்கத் தேர்வீரர்களைத் தடுத்தார்கள்.
சினத்தால் தூண்டப்பட்ட வலிமைமிக்கத்தேர்வீரனான திருஷ்டத்யும்னன், பீஷ்மரை மட்டுமே எதிர்த்து விரைந்து, {தன்} துருப்புகளிடம் மீண்டும் மீண்டும் உரத்த குரலில், "அதோ, குரு குலத்தை மகிழ்விப்பவரான அர்ஜுனர், போரில் பீஷ்ரை எதிர்த்துச் செல்கிறார். கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} எதிர்த்து விரைவீராக. அஞ்சாதீர். பீஷ்ரால் போரில் உங்களைத் தாக்க இயலாது [4]. போரில் அர்ஜுனரிடம் போராட வாசவனும் {இந்திரனும்} துணியமாட்டான். எனவே, போரில் துணிச்சலைக் கொண்டிருந்தாலும், முதிர்ந்து, பலமற்றவராக இருக்கும் பீஷ்மரைக் குறித்த என்ன சொல்ல வேண்டும்?" என்றான்.
[4] அதாவது, பீஷ்மர் உங்களைப் பிடிக்கவோ, அடையவோ மாட்டார் எனச் சொல்வதாகக் கங்குலி இங்கே விளக்குகிறார்
தங்கள் படைத்தலைவனின் {திருஷ்டத்யும்னனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட பாண்டவப் படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்கள், மகிழ்ச்சியால் நிறைந்து கங்கை மைந்தரின் {பீஷ்மரின்} தேரை நோக்கி விரைந்தனர். எனினும், உமது படையில் மனிதர்களில் முதன்மையான பலர், உயிரூட்டும் சக்தியின் மூர்க்கமான திரள் போலப் பீஷ்மரை எதிர்த்து விரையும் அவ்வீரர்களை மகிழ்ச்சியாக ஏற்றுத் தடுத்தனர் [5].
[5] வேறொரு ஒரு பதிப்பில், "போரில் வரும் அந்தப் பாண்டவ வீரர்களை, உமது வீரர்களில் சிறந்த மனிதர்கள், உற்சாகத்துடன், வெள்ளத்தை மலைகள் தடுப்பது போலத் தடுத்தார்கள்" என்று இருக்கிறது.
வலிமைமிக்கத் தேர்வீரனான துச்சாசனன், அச்சங்கள் அனைத்தையும் கைவிட்டு, பீஷ்மரின் உயிரைப் பாதுகாக்க விரும்பி, தனஞ்சயனை {அர்ஜுனனை} எதிர்த்து விரைந்தான். அதே போல, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வீரப்பாண்டவர்களும், பீஷ்மரின் தேரின் அருகில் நின்ற அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களான உமது மகன்களை எதிர்த்துப் போரிட விரைந்தனர். பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துச்சாசனனின் தேர் வரை சென்ற பார்த்தனால் {அர்ஜுனனால்} மேலும் முன்னேற முடியாத மிக அற்புதமான ஒரு நிகழ்வைக் கண்டோம். பொங்கும் கடலைத் தடுக்கும் கரையைப் போலவே உமது மகன் (துச்சாசனன்}, கோபம் நிறைந்த பாண்டுவின் மகனைத் {அர்ஜுனனைத்} தடுத்தான்.
இருவரும் தேர்வீரர்களில் முதன்மையானவர்களாக இருந்தனர். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, இருவரும் வெல்லப்பட முடியாதவர்களாகவும் இருந்தனர். அழகிலும், காந்தியிலும் ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே} அவ்விருவரும் சூரியனையோ, சந்திரனையோ ஒத்திருந்தனர். கோபம் தூண்டப்பட்டிருந்த அவ்விருவரும், ஒருவரை ஒருவர் கொல்ல விரும்பினர். பழங்காலத்தின் மயனும் சக்ரனும் {இந்திரனும்} போல, அந்தப் பயங்கரப் போரில் அவ்விருவரும் மோதிக் கொண்டனர்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் துச்சாசனன், மூன்று {3} கணைகளால் பாண்டுவின் மகனையும் {அர்ஜுனனையும்}, இருபதால் {20 கணைகளால்} வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்} துளைத்தான். விருஷ்ணி குலத்தோன் {கிருஷ்ணன்} இப்படிப் பீடிக்கப்பட்டதைக் கண்டு சினத்தால் தூண்டப்பட்ட அர்ஜுனன், நூறு நாராசங்களால் துச்சாசனனைத் துளைத்தான். இவை {அந்தக் கணைகள்}, பின்னவனின் {துச்சாசனனின்} கவசங்களின் ஊடாக ஊடுருவி அந்தப் போரில் அவனது குருதியைக் குடித்தன.
பிறகு துச்சாசனன், கோபத்தால் தூண்டப்பட்டு, ஐந்து கணைகளால் பார்த்தனை {அர்ஜுனனைத்} துளைத்தான். மீண்டும், ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, மூன்று கூரிய கணைகளால் அர்ஜுனனின் நெற்றியைத் துளைத்தான். நெற்றியில் தைத்த கணைகளோடு கூடிய அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் நெடும் கொடுமுடிகளோடு கூடிய மேரு மலையைப் போல அழகாகத் தெரிந்தான். பெரும் வில்லாளியான அந்தப் பார்த்தன், வில் தரித்த உமது மகனால் {துச்சாசனனால்} இப்படி ஆழத் துளைக்கப்பட்டு, அந்தப் போரில் மலர்ந்திருக்கும் கின்சுகம் {பலாச மரம்} ஒன்றைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.
பிறகு, அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, சினத்தால் தூண்டப்பட்ட ராகு, வளர்பிறையின் பதினைந்தாவது {15} நாளில் முழுமையாக இருக்கும் சந்திரனைப் பீடிப்பதைப் போலச் சினத்தால் தூண்டப்பட்டுத் துச்சாசனனைப் பீடித்தான். அந்த வலிமைமிக்க வீரனால் {அர்ஜுனனால்} இப்படிப் பீடிக்கப்பட்ட உமது மகன் {துச்சாசனன்}, அந்தப் போரில், கங்கப் பறவையின் தன்மைகளைக் கொண்ட {கழுகின் இறகுகளாலான} சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான பல கணைகளால் பார்த்தனை {அர்ஜுனனைத்} துளைத்தான். பிறகு பார்த்தன் {அர்ஜுனன்}, மூன்று கணைகளால் துச்சாசனனின் வில்லை அறுத்து, அவனது தேரையும் ஒடித்து, காலனின் கணைகளை ஒத்த கடுங்கணைகள் பலவற்றை அவன் {துச்சாசனன்} மீது ஏவினான் [6]. எனினும், உமது மகன், வீரியத்துடன் முயன்று பார்த்தனின் {அர்ஜுனனின்} அந்தக் கணைகள் தன்னை அடையும் முன்பே அவற்றை வெட்டினான். இவை அனைத்தும் மிக அற்புதமாகத் தெரிந்தன.
[6] வேறொரு பதிப்பில் கங்குலியில் இல்லாத செய்தி ஒன்று இருக்கிறது. அது பின்வருமாறு. "அந்தத் துச்சாசனன், பீமனுக்கு எதிரில் நின்று கொண்டு வேறு வில்லைக் கையிலெடுத்து இருபத்தைந்து கணைகளாலே அர்ஜுனனை இரண்டு கைகளிலும் மார்பிலும் தாக்கினான்".
பிறகு, உமது மகன் மிகக் கூர்மையான கணைகள் பலவற்றால் பார்த்தனை {அர்ஜுனனைத்} துளைத்தான். அப்போது சினத்தால் தூண்டப்பட்ட பார்த்தன் {அர்ஜுனன்} கல்லில் கூராக்கப்பட்டவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையுமான எண்ணற்ற கணைகளைத் தன் வில்லின் நாணில் பெருத்தி, அவற்றைக் குறி பார்த்து, தன் எதிரியின் மீது அவை அனைத்தையும் ஏவினான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தடாகத்தைப் பிளந்து செல்லும் அன்னப்பறைவைகளைப் போல, அவை அந்த உயர் ஆன்ம வீரனின் {துச்சாசனனின்} உடலை ஊடுருவிச் சென்றன. இப்படி உயர் ஆன்ம பாண்டுவின் மகனால் {அர்ஜுனனால்} பீடிக்கப்பட்ட உமது மகன் {துச்சாசனன்} பார்த்தனை {அர்ஜுனனைத்} தவிர்த்துவிட்டு, பீஷ்மரின் தேரை நோக்கி விரைந்தான்.
உண்மையில், அடியற்ற ஆழமான நீரில் இப்படி மூழ்கிக் கொண்டிருந்தவனுக்குத் {துச்சாசனனுக்குப்} பீஷ்மர் ஒரு தீவானார். வீரமும் ஆற்றலும் கொண்ட உமது மகன் {துச்சாசனன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பிறகு உணர்வு மீண்டு, (அசுரன்) விருத்திரனைத் தடுத்த புரந்தரனைப் {இந்திரனைப்} போல, பார்த்தனை {அர்ஜுனனை} மீண்டும் தடுக்கத் தொடங்கினான். பெரும் வடிவம் கொண்ட உமது மகன் {துச்சாசனன்}, அர்ஜுனனைத் துளைக்கத் தொடங்கினான், ஆனால் பின்னவனோ {அர்ஜுனனோ} (இவை அனைத்தாலும்) எள்ளளவும் வலியை உணரவில்லை" {என்றான் சஞ்சயன்}.
ஆங்கிலத்தில் | In English |