Tuesday, March 08, 2016

பகைவீரர்களின் தனிப்பட்ட மோதல்கள்! - பீஷ்ம பர்வம் பகுதி – 112

The single combats between the hostile heroes! | Bhishma-Parva-Section-112 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 70)

பதிவின் சுருக்கம் : அலம்புசன் சாத்யகி, சாத்யகி பகதத்தன் ஆகியோருக்கு இடையிலான மோதல்; துரியோதனனின் உத்தரவின் பேரில் சாத்யகியைச் சூழ்ந்த கொண்ட கௌரவர்கள்; சுதக்ஷிணன் அபிமன்யு மோதல்; சிகண்டி பீஷமர் மோதல்; விராடன் மற்றும் துருபதனை எதிர்த்த அஸ்வத்தாமன்; கிருபர் சகாதேவன், விகர்ணன் நகுலன், துர்முகன் கடோத்கசன், கிருதவர்மன் திருஷ்டத்யும்னன், பீமசேனன் பூரிஸ்ரவஸ், துரோணர் யுதிஷ்டிரன், சித்திரசேனன் சேகிதானன் ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட போர்களின் வர்ணனை...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “வலிமைமிக்க வில்லாளியான ரிஷ்யசிருங்கன் மகன் (அலம்புசன்), அந்தப் போரில் கவசமணிந்து பீஷ்மரை நோக்கி முன்னேறிய சாத்யகியைத் தடுத்தான். எனினும், கோபத்தால் தூண்டப்பட்ட அந்த மது குலத்தோன் {சாத்யகி}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சிரித்துக் கொண்டே ஒன்பது கணைகளால் ராட்சசனைத் {அலம்புசனைத்} துளைத்தான். கோபத்தால் தூண்டப்பட்ட ராட்சசனும் {அலம்புசனும்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிநி வம்சக் காளையான அந்த மதுகுலத்தோனை {சாத்யகியை} ஒன்பது கணைகளால் பீடித்தான்.


பகைவீரர்களைக் கொல்பவனான மதுகுலத்து சிநியின் பேரன் {சாத்யகி}, கோபத்தால் தூண்டப்பட்டு, அந்த ராட்சசன் {அலம்புசன்} மீது அபரிமிதமான கணைகளைப் பொழிந்தான். பிறகு, அந்த வலிமைமிக்க ராட்சசன் {அலம்புசன்}, கலங்கடிக்கப்பட முடியா ஆற்றல் கொண்ட சாத்யகியைப் பல கூரிய கணைகளால் துளைத்து, பேரொலியை எழுப்பினான். பெரும் சக்தி கொண்ட அந்த மதுகுலத்தோன் {சாத்யகி}, அந்தப் போரில் ராட்சசனால் ஆழத் துளைக்கப்பட்டாலும், உறுதியாகத் தன் ஆற்றலை நம்பி (தன் காயங்களைக் கண்டு) நகைத்து பெரும் முழக்கங்களைச் செய்தான்.

பிறகு பகதத்தன் சினத்தால் தூண்டப்பட்டு, அங்குசத்தால் பெரும் யானை ஒன்றை பாகன் துளைப்பதைப் போல, பல கூரிய கணைகளால் அந்தப் போரில் மதுகுலத்தோனை {சாத்யகியைப்} பீடித்தான். பிறகு, தேர்வீரர்களில் முதன்மையான அந்தச் சிநியின் பேரன் {சாத்யகி}, போரில் ராட்சசனை {அலம்புசனைக்} கைவிட்டு, பிராக்ஜோதிஷர்களின் ஆட்சியாளன் {பகதத்தன்} மீது நேரான பல கணைகளை ஏவினான். பிராக்ஜோதிஷர்களின் ஆட்சியாளன் {பகதத்தன்}, தன் கர நளினத்தை வெளிக்காட்டியபடி பெரும் கூர்மை கொண்ட பல்லம் {அகன்ற தலை கொண்ட கணை} ஒன்றால் சாத்யகியின் பெரிய வில்லை அறுத்தான்.

பிறகு, சினத்தால் தூண்டப்பட்ட அந்தப் பகைவீரர்களைக் கொல்பவன் {சாத்யகி}, பெரும் வேகம் கொண்ட மற்றொரு வில்லை எடுத்து, கூரிய கணைகள் பலவற்றால் அந்தப் போரில் பகதத்தனைத் துளைத்தான். வலிமைமிக்க வில்லாளியான அந்தப் பகதத்தன் ஆழத்துளைக்கப்பட்டு, தன் கடைவாயை நாவால் நனைக்கத் {நக்கத்} தொடங்கினான். பிறகு அவன் {பகதத்தன்}, அந்தப் போரில் தன் எதிரியின் {சாத்யகியின்} மேல், முழுதும் இரும்பாலானதும் தங்கத்தாலும், வைடூரியக் கற்களாலும் அலங்கரிக்கப்பட்டதும், யமனின் தண்டத்தைப் போன்று கடுமையானதுமான ஓர் உறுதிமிக்க ஈட்டியை ஏவினான்.

பகதத்தனுடைய கரத்தின் பலத்தால் ஏவப்பட்டு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன்னை நோக்கி வேகமாக வரும் அந்த ஈட்டியைத் தன் கணைகளின் மூலம் இரண்டாக அறுத்தான் சாத்யகி. அதன் பேரில், காந்தியை இழந்த பெரும் எரி கோளைப் போல அந்த ஈட்டி திடீரெனக் கீழே விழுந்தது. ஈட்டி கலங்கடிக்கப்பட்டதைக் கண்ட உமது மகன் {துரியோதனன்}, ஓ! ஏகாதிபதி, பெரும் எண்ணிக்கையிலான தேர்களுடன் அந்த மது குலத்தோனை {சாத்யகியைச்} சூழ்ந்து கொண்டான்.

விருஷ்ணிகளில் வலிமைமிக்கத் தேர்வீரனான அவன் {சாத்யகி} இப்படிச் சூழப்பட்டதைக் கண்ட துரியோதனன், கோபத்துடன் தன் தம்பிகள் அனைவரிடமும், "கௌரவர்களே, உங்களிடமிருந்தோ, இந்தப் பெரும் தேர்ப்படைப்பிரிவிடம் இருந்தோ சாத்யகி உயிருடன் தப்பாதபடியான நடவடிக்கைகளை எடுப்பீராக. இவன் {சாத்யகி} கொல்லப்பட்டால், பாண்டவர்களின் பரந்த படையும் கொல்லப்பட்டதாகவே கருதப்படும்" என்றான். துரியோதனனின் வார்த்தைகளை ஏற்று "அப்படியே ஆகட்டும்" என்று பதிலுரைத்த அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், பீஷ்மரின் பார்வையிலேயே சிநியின் பேரனோடு போரிட்டனர்.

வலிமைமிக்கக் காம்போஜர்களின் ஆட்சியாளன் {சுதக்ஷிணன்}, அந்தப் போரில் பீஷ்மரை எதிர்த்து முன்னேறிய அபிமன்யுவைத் தடுத்தான். அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, ஓ! ஏகாதிபதி, பல நேரான கணைகளால் அம்மன்னனை {சுதக்ஷிணனைத்} துளைத்து, அறுபத்துநான்கு கணைகளால் மீண்டும் அந்த ஏகாதிபதியைத் துளைத்தான். எனினும், பீஷ்மரின் உயிரை {காக்க} விரும்பி சுதக்ஷிணன், அந்தப் போரில் ஐந்து கணைகளால் அபிமன்யுவையும், ஒன்பதால் {9 கணைகளால்} அவனது தேரோட்டியையும் துளைத்தான். அவ்விரு வீரர்களும் சந்தித்துக் கொண்டதன் விளைவால் அங்கே உண்டான அந்தப் போர் மிகக் கடுமையானதாக இருந்தது.

பிறகு, எதிரிகளைக் கலங்கடிப்பவனான சிகண்டி, கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} நோக்கி விரைந்தான்.

வலிமைமிக்கத் தேர்வீரர்களும் முதிர்ந்தவர்களுமான விராடன், துருபதன் ஆகிய இருவரும் சினத்தால் தூண்டப்பட்டு, கௌரவப் படையைத் தடுத்துக் கொண்டே பீஷ்மருடன் போரிட விரைந்தனர். தேர்வீரர்களில் சிறந்தவனான அஸ்வத்தாமன், சினத்தால் தூண்டப்பட்டு, அவ்விரு வீரர்களுடன் மோதினான். பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அவனுக்கும், அவர்களுக்கும் இடையில் போர் தொடங்கியது.

ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, பிறகு விராடன், வலிமைமிக்க வில்லாளியும், போர்க்கள ரத்தினமுமான துரோண மகனை {அஸ்வத்தாமனை}, பின்னவன் {அஸ்வத்தாமன்} தங்களை எதிர்த்து முன்னேறியபோது பல்லங்களால் தாக்கினான். மூன்று கணைகளால் துருபதனும் அவனைத் துளைத்தான். பிறகு ஆசானின் நிலமான {வாரிசான} அஸ்வத்தாமன், பீஷ்மரை நோக்கிச் செல்லும் துணிச்சல்மிக்க விராடன் மற்றும் துருபதன் ஆகியோரை இப்படியே தாக்கி, கணைகள் பலவற்றால் அவ்விருவரையும் துளைத்தான். துரோணரின் மகனால் ஏவப்பட்ட கடுங்கணைகள் அனைத்தையும் தடுத்த அந்த முதிர்ந்த வீரர்கள் இருவரின் {துருபதன், விராடனின்} அற்புதமான செய்கையை நாங்கள் கண்டோம்.

காட்டில் மதங்கொண்ட எதிராளியை {யானையை} எதிர்த்து விரையும் மற்றொரு யானையைப் போல, சரத்வானின் மகனான கிருபர், பீஷ்மரை நோக்கி முன்னேறிய சகாதேவனை எதிர்த்துச் சென்றார். போரில் துணிச்சல்மிக்கக் கிருபர், வலிமைமிக்கத் தேர்வீரனான அந்த மாத்ரியின் மகனைத் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட எழுபது கணைகளால் விரைவாகத் தாக்கினார். எனினும், அந்த மாத்ரியின் மகன் {சகாதேவன்}, தன் கணைகளின் மூலம் கிருபரின் வில்லை இரண்டாகத் துண்டித்தான்.

கிருபரின் வில்லை அறுத்த சகாதேவன், ஒன்பது கணைகளால் அவரையும் {கிருபரையும்} துளைத்தான். அந்தப் போரில், சினத்தால் தூண்டப்பட்ட கிருபர், பெரும் வலிமையைத் தாங்கவல்ல மற்றொரு வில்லை எடுத்து, பீஷ்மரின் உயிரை {காக்க} விரும்பி, பத்து கணைகளால் மாத்ரியின் மகனை {சகாதேவனை} மகிழ்ச்சியாகத் தாக்கினார். அதே போலப் பதிலுக்குப் பாண்டுவின் மகனும் {சகாதேவனும்}, பீஷ்மரின் மரணத்தை விரும்பி, சினத்தால் தூண்டப்பட்டு, கோபம் நிறைந்த கிருபருடைய மார்பை (பல கணைகளால்) தாக்கினான். பிறகு அங்கே பயங்கரமான மற்றும் கடுமையான ஒரு போர் நிகழ்ந்தது.

எதிரிகளை எரிப்பவனான விகர்ணன், பாட்டன் பீஷ்மரைக் காக்க விரும்பி, அந்தப் போரில் சினத்தால் தூண்டப்பட்டு, அறுபது {60} கணைகளால் நகுலனைத் துளைத்தான். நகுலனும், உமது புத்திசாலி மகனால் ஆழத் துளைக்கப்பட்டு, பதிலுக்கு எழுபத்தேழு {70} கணைகளால் விகர்ணனைத் துளைத்தான். மனிதர்களில் புலிகளும், எதிரிகளைத் தண்டிப்பவர்களுமான அவ்வீரர்கள் இருவரும், பீஷ்மரின் நிமித்தமாக, மாட்டுக் கொட்டிலில் உள்ள காளைகள் இரண்டைப் போல ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.

பெரும் ஆற்றலைக் கொண்ட உமது மகன் துர்முகன், போரிட முன்னேறுபவனும், தான் வந்த வழியெங்கும் உமது படையினரைக் கொன்றவனுமான கடோத்கசனை எதிர்த்துப் பீஷ்மரின் நிமித்தமாகச் சென்றான். எனினும், எதிரிகளைத் தண்டிப்பவனான ஹிடிம்பையின் மகன் {கடோத்கசன்}, சினத்தால் தூண்டப்பட்டு, நேரான கணையொன்றால் துர்முகனை மார்பில் தாக்கினான். பிறகு வீரத் துர்முகனும், மகிழ்ச்சியாகக் கூச்சலிட்டபடி, கூர்முனை கொண்ட அறுபது {60} கணைகளால் அந்தப் போர்க்களத்தில் பீமசேனனின் மகனைத் {கடோத்கசனைத்} துளைத்தான்.

வலிமைமிக்கத் தேர்வீரனான அந்த ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்}, பீஷ்மரைக் கொல்ல விரும்பிப் போரில் முன்னேறியவனும், தேர்வீரர்களில் முதன்மையானவனுமான திருஷ்டத்யும்னனைத் தடுத்தான். எனினும், பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, முழுதும் இரும்பாலான ஐந்து {5} கணைகளால் கிருதவர்மனைத் துளைத்து, மீண்டும் ஐம்பது {50} கணைகளால் அவனது {கிருதவர்மனின்} நடுமார்பில் விரைவாகத் தாக்கினான். அதே போல, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பிருஷதன் மகன் {துருபதன் மகன் திருஷ்டத்யும்னன்}, கங்கப் பறவையின் இறகுகளாலானச் சிறகுகளைக் கொண்ட, கூரிய, சுடர்மிக்க ஒன்பது கணைகளால் கிருதவர்மனைத் தாக்கினான். பெரும் வீரத்துடன் மோதிக் கொண்ட அவ்விருவருக்கும் இடையில் பீஷ்மரின் நிமித்தமாக நேர்ந்த அந்தப் போர் விருத்திரனுக்கும் வாசவனுக்கும் {இந்திரனுக்கும்} இடையில் நடந்த போரைப் போலக் கடுமையாக இருந்தது.

வலிமைமிக்கப் பீஷ்மரை நோக்கி முன்னேறிய பீமசேனனை எதிர்த்த பூரிஸ்ரவஸ், "நில், நில்" என்று சொன்னபடி பெரும் வேகத்துடன் சென்றான். அந்தச் சோமதத்தன் மகன் {பூரிஸ்ரவஸ்}, அந்தப் போரில் தங்கச் சிறகுகள் கொண்டதும், மிகக் கூர்மையானதுமான கணையொன்றால் பீமனை, அவனது நடுமார்பில் தாக்கினான். மார்பில் தாங்கிய அந்தக் கணையுடன் வீர பீமசேனன், ஓ! மன்னர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, பழங்காலத்தில் ஸ்கந்தனின் வேலால் தாக்கப்பட்ட கிரௌஞ்ச மலையைப் போல அழகாகத் தெரிந்தான்.

போரில் சீறிய மனிதர்களில் காளையரான அவ்விருவரும், தங்கள் கொல்லன்களால் பளபளப்பாக்கப்பட்டுப் பிரகாசமாக இருந்தவையும், சூரியனின் ஒளியைக் கொண்டவையுமான கணைகளால் ஒருவரையொருவர் தாக்கினர். பீஷ்மரின் மரணத்திற்காக ஏங்கிய பீமன், சோமதத்தனின் வலிமைமிக்க மகனுடன் போரிட்டான், மேலும் பின்னவன் {பூரிஸ்ரவஸ்}, பீஷ்மரின் வெற்றியை விரும்பி முன்னவனோடு {பீமனோடு} போரிட்டான். அவ்விருவரும் மற்றவரின் சாதனைகளுக்கு எதிர்செயலை கவனமாகச் செய்தனர்.

பரத்வாஜரின் மகன் {துரோணர்}, பெரும் படையின் துணையுடன் பீஷ்மரை நோக்க வந்த குந்தியின் மகனான யுதிஷ்டிரனைத் தடுத்தார். ஓ! மன்னா, ஓ ஐயா {திருதராஷ்டிரரே}, மேகங்களின் முழக்கத்தை ஒத்த துரோணரின் தேர் சடசடப்பொலியைக் கேட்ட பிரபத்திரகர்கள் நடுங்கத் தொடங்கினர். பயங்கர முயற்சி செய்த பாண்டு மகனின் {யுதிஷ்டிரனின்} அந்தப் பெரும்படை, போரில் துரோணரால் தடுக்கப்பட்டு ஓர் அடிகூட முன்னேற முடியவில்லை.

உமது மகன் சித்திரசேனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீஷ்மரை அடையப் பயங்கரமாக முயன்றவனும், கோபம்நிறைந்த முகத்தோற்றம் கொண்டவனுமான சேகிதானனைத் தடுத்தான். பெரும் ஆற்றலும், பெரும் கரவேகம் கொண்ட அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {சித்திரசேனன்}, பீஷ்மரின் நிமித்தமாக, தன் சக்தி முழுவதையும் பயன்படுத்தி சேகிதானனுடன் போரிட்டான். சேகிதனானும், தன் சக்தி முழுவதையும் பயன்படுத்திச் சித்திரசேனனுடன் போரிட்டான். அவ்வீரர்களின் சந்திப்பின் விளைவாக நடந்த போர் மிகக் கடுமையானதாக இருந்தது.

அர்ஜுனனைப் பொறுத்தவரை, அனைத்து வழிகளிலும் அவன் தடுக்கப்பட்டாலும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மேலும் உமது மகனை {துச்சாசனனைப்} புறமுதுகிட நிர்பந்தித்து, உமது துருப்புகளை நசுக்கினான். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, எனினும், தன் சக்தி முழுமையையும் பயன்படுத்திய துச்சாசனன், பீஷ்மரைக் காப்பதற்காகப் பார்த்தனைத் {அர்ஜுனனைத்} தடுக்கத் தொடங்கினான். இத்தகு படுகொலைக்கு ஆளான உமது மகனின் படை, (பாண்டவப் படையின்) தேர்வீரர்களில் முதன்மையான பலரால் அங்கேயும் இங்கேயும் கலங்கடிக்கப்பட்டது" {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English