Wednesday, March 16, 2016

பயங்கரப் போரும், பேரழிவும்! - பீஷ்ம பர்வம் பகுதி – 117

The dreadful battle and carnage! | Bhishma-Parva-Section-117 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 75)

பதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரன் கேள்வியும், சஞ்சயன் பதிலளிக்கத் தொடங்கியதும்; வாழ்வை வெறுத்த பீஷ்மர், தன்னைக் கொல்ல அறிவுறுத்தி, யுதிஷ்டிரனைத் தூண்டிய பீஷ்மர்; படைவீரர்களைத் தூண்டிய யுதிஷ்டிரன்; பாண்டவப் படையின் முயற்சி; ஒருவரை ஒருவர் எதிர்த்த மன்னர்களையும் தேர்வீரர்களையும் பற்றிய குறிப்பு; போரில் எழுந்த ஆரவாரமும், பேரொலியும்; இரு தரப்பிலும் ஏற்பட்ட இழப்புகள்...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பீஷ்மரின் நிமித்தமாகத் தன் ஆற்றலை வெளிப்படுத்திய அபிமன்யு, பெரும்படையால் ஆதரிக்கப்பட்ட உமது மகனுடன் {துரியோதனனுடன்} போரிட்டான். பிறகு, கோபத்தால் தூண்டப்பட்ட துரியோதனன், ஒன்பது {9} நேரான கணைகளால் அபிமன்யுவின் மார்பிலும், பிறகு மூன்று {3} கணைகளாலும் தாக்கினான்.



பிறகு அந்தப் போரில் கோபத்தால் தூண்டப்பட்ட அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, மரணக்கோலுக்கு {காலதண்டத்திற்கு} ஒப்பான ஒரு பயங்கர ஈட்டியை துரியோதனனின் தேர் மீது ஏவினான். எனினும் வலிமைமிக்கத் தேர்வீரனான உமது மகன் {துரியோதனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் வேகத்துடன் தன்னை நோக்கி வரும் பயங்கர சக்தி கொண்ட அந்த ஈட்டியைப் பெரும் கூர்மையுள்ள பல்லம் ஒன்றினால் இரண்டாக வெட்டினான். தன் ஈட்டி பூமியில் விழுந்ததைக் கண்ட அர்ஜுனனின் கோபக்கார மகன் {அபிமன்யு}, மூன்று கணைகளால் துரியோதனனின் கைகளையும், மார்பையும் துளைத்தான். ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, பாரதக் குலத்தின் அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {அபிமன்யு}, பத்து கடுங்கணைகளால் மீண்டும் ஒருமுறை, குரு மன்னனின் {துரியோதனின்} நடு மார்பைத் துளைத்தான்.

சுபத்திரையின் மகன் {அபிமன்யு} மற்றும் அந்தக் குரு குலக் காளை {துரியோதனன்} ஆகிய இரு வீரர்களுக்கு இடையில் நடந்ததும், முன்னவன் {அபிமன்யு} பீஷ்மரின் மரணத்திற்காகவும், பின்னவன் {துரியோதனன்} அர்ஜுனனின் தோல்விக்காகவும் போரிட்டதுமான அந்தப் போர், காண்பதற்குக் கடுமையானதாகவும், சுவாரஸ்யமானதாகவும், புலன்களுக்கு நிறைவைத்தருவதாகவும், மன்னர்கள் அனைவராலும் மெச்சப்படுவதாகவும் இருந்தது.

அந்தணர்களில் காளையும், எதிரிகளைத் தண்டிப்பவனும், அந்தப் போரில் கோபத்தால் தூண்டப்பட்டவனுமான துரோண மகன் {அஸ்வத்தாமன்}, ஒரு கடுங்கணையால் {நாராசத்தால்} சாத்யகியின் மார்பைப் பலமாகத் தாக்கினான். அளவிலா ஆன்மா கொண்டவனும், சிநியின் பேரனுமான அந்த வீரன் {சாத்யகி}, கங்கப் பறவையின் இறகுகளால் அமைந்த சிறகுகளைக் கொண்ட ஒன்பது {9} கணைகளால் ஆசான் மகனின் {அஸ்வத்தாமனின்} முக்கிய அங்கங்கள் அனைத்தையும் தாக்கினான். பிறகு, அந்தப் போரில் அஸ்வத்தாமன், ஒன்பது {9} கணைகளால் சாத்யகியை (பதிலுக்குத்) தாக்கி, மீண்டும் விரைவாக முப்பதால் {30} அவனது கரங்களையும் மார்பையும் தாக்கினான். அப்போது, பெரும் புகழைக் கொண்டவனும், சாத்வத குலத்தோனுமான அந்தப் பெரும் வில்லாளி {சாத்யகி}, துரோணரின் மகனால் {அஸ்வத்தாமனால்} ஆழத் துளைக்கப்பட்டு, (பதிலுக்கு) பின்னவனை {அஸ்வத்தாமனைக்} கணைகளால் துளைத்தான்.

வலிமைமிக்கத் தேர்வீரனான பௌரவன், அந்தப் போரில் {சேதி மன்னன்} திருஷ்டகேதுவைத் தன் கணைகளால் மறைத்து, அந்தப் பெரும் வில்லாளியைக் {திருஷ்டகேதுவைக்} கடுமையாகச் சிதைத்தான். பெரும் பலம் கொண்ட வலிமைமிக்கத் தேர்வீரனான திருஷ்டகேது, முன்னவனை {பௌரவனை} முப்பது கணைகளால் விரைவாகத் துளைத்தான் பிறகு, வலிமைமிக்கத் தேர்வீரனான பௌரவன் திருஷ்டகேதுவின் வில்லை அறுத்து, உரக்கக் கூச்சலிட்டபடி, கூர் தீட்டப்பட்ட கணைகளால் அவனைத் {திருஷ்டகேதுவைத்} துளைத்தான். மற்றொரு வில்லை எடுத்த திருஷ்டகேது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் கூர்மையுள்ள எழுபத்துமூன்று {73} கணைகளால் அந்தப் பௌரவனைத் துளைத்தான்.

பெரும் வில்லாளிகளும், வலிமைமிக்கத் தேர்வீரர்களும், பெரும் தோற்றம் கொண்டவர்களுமான அவ்விருவரும், கணைமாரியால் ஒருவரையொருவர் துளைத்துக் கொண்டனர். ஒருவரின் வில்லை மற்றவர் வெட்டுவதிலும், ஒருவரின் குதிரைகளை மற்றவர் கொல்வதிலும் அவர்கள் ஒவ்வொருவரும் வென்றனர். மேலும் அவர்கள் இருவரும் இப்படித் தங்கள் தேர்களையும் இழந்து, வாள்களால் போரிட்டு ஒருவரோடொருவர் மோதிக் கொண்டனர். காளைத் தோலாலானவையும், நூறு நிலவுகளாலும், நூறு நட்சத்திரங்களாலும் அலங்கரிக்கப்பட்டவையான அழகிய கேடயங்களை அவ்விருவரும் எடுத்துக் கொண்டனர். மேலும் அவர்கள் ஒவ்வொருவரும் பெரும் பிரகாசம் கொண்ட பளபளக்கும் வாள் ஒன்றையும் எடுத்துக் கொண்டனர்.

இப்படித் தங்களை {ஆயுதங்களால்} தரித்துக் கொண்ட அவர்கள், ஆழ்ந்த கானகத்தில், பருவகாலமடைந்த ஒரு பெண் சிங்கத்தின் துணையை நாடும் இரண்டு சிங்கங்களைப் போல ஒருவரை நோக்கி மற்றவர் விரைந்தனர். அழகான வளையங்களில் {களத்தில் வட்டமாகச்} சுழன்ற அவர்கள், முன்னேறியும், பின்வாங்கியும் தங்கள் பிற நகர்வுகளை வெளிக்காட்டியபடியும் ஒருவரையொருவர் தாக்க முயன்றனர். பிறகு கோபத்தால் தூண்டப்பட்ட பௌரவன், திருஷ்டகேதுவிடம், “நில், நில்” என்று சொல்லி, தன் பெரிய வாளால் அவனது நெற்றி எலும்பில் தாக்கினான்.

சேதிகளின் மன்னனும் {திருஷ்டகேதுவும்} அந்தப் போரில், கூர்முனை கொண்ட தன் பெரும் வாளால், மனிதர்களில் காளையான அந்தப் பௌரவனை அவனது தோள்ப்பூட்டில் தாக்கினான். இப்படி அந்தப் பயங்கரப் போரில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட அந்த எதிரிகளை ஒடுக்குபவர்களான அவர்கள் இருவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போர்க்களத்தில் கீழே விழுந்தனர். உமது மகன் ஜெயத்சேனன், தன் தேரில் பௌரவனைத் தூக்கிக் கொண்டு, அவ்வாகனத்தின் மூலமே அவனைப் {பௌரவனைப்} போர்க்களத்தில் இருந்து விலக்கினான். திருஷ்டகேதுவைப் பொறுத்தவரை, வீரமிக்கவனும், பெரும் ஆற்றலைக் கொண்டவனும், மாத்ரியின் மகனுமான வீர சகாதேவன் களத்தில் இருந்து அவனைத் {திருஷ்டகேதுவைத்} தூக்கிச் சென்றான்.

சித்திரசேனன், முழுவதும் இரும்பாலான பல கணைகளால் சுசர்மனைத் [1] துளைத்து, மேலும் அறுபது {60} கணைகளாலும், பிறகு மேலும் ஒன்பதாலும் {9 கணைகளாலும்} அவனை {சுசர்மனைத்} துளைத்தான். எனினும், போரில் கோபத்தால் தூண்டப்பட்ட சுசர்மன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} நூற்றுக்கணக்கான கணைகளால் உமது மகனை {சித்திரசேனனைத்} துளைத்தான். சித்திரசேனனும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சினத்தால் தூண்டப்பட்டு, தன் எதிரியை நேரான முப்பது கணைகளால் துளைத்தான். எனினும், சுசர்மனும் பதிலுக்குச் சித்திரசேனனைத் துளைத்தான்.

[1] இவன் திரிகர்த்த மன்னன் சுசர்மன் இல்லை. இவன், பாண்டவத் தரப்பைச் சார்ந்த வேறொரு சுசர்மனாக இருக்க வேண்டும் எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். மேலும், இங்கே குறிப்பிடப்படும் சித்திரசேனன் துரியோதனனின் தம்பியாவான். திரிகர்த்த மன்னன் சுசர்மனும் துரியோதனன் தரப்பில் இருந்து போரிட்டவன் ஆவான். எனவே ஒரே தரப்பைச் சேர்ந்த இருவருக்குள் போர் நேர்ந்திருக்க முடியாது.

பீஷ்மரின் அழிவுக்கான அந்தப் போரில், புகழையும் மதிப்பையும் மேம்படுத்துபவனான சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, தன், (தன் தந்தையான) பார்த்தனுக்கு {அர்ஜுனனுக்கு} உதவும் வகையில் தன் ஆற்றலை வெளிப்படுத்தி, இளவரசன் பிருஹத்பலனோடு போரிட்டு, பிறகு பீஷ்மரின் எதிரே சென்றான். கோசலர்களின் ஆட்சியாளன் {பிருஹத்பலன்}, இரும்பாலான ஐந்து கணைகளால் அர்ஜுனன் மகனை {அபிமன்யுவைத்} துளைத்து, மேலும் இருபது {20} நேரான கணைகளால் மீண்டும் அவனைத் துளைத்தான். பிறகு சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, முழுவதும் இரும்பாலான எட்டு கணைகளால் கோசலர்களின் ஆட்சியாளனைத் {பிருஹத்பலனைத்} துளைத்தான். எனினும், அவன் {அபிமன்யு}, கோசலர்களின் ஆட்சியாளனை நடுங்கச் செய்வதில் வெல்லவில்லை, எனவே, அவன் {அபிமன்யு} மீண்டும் கணைகள் பலவற்றால் அவனைத் {பிருஹத்பலனைத்} துளைத்தான். மேலும் அந்தப் பல்குனன் மகன் {அபிமன்யு}, பிருஹத்பலனின் வில்லை அறுத்து, கங்கப் பறவையின் இறகுகளாலான சிறகுகளைக் கொண்ட முப்பது கணைகளைக் கொண்டு அவனை {பிருஹத்பலனை} மீண்டும் தாக்கினான். பிறகு, மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட இளவரசன் பிருஹத்பலன், கோபத்துடன் அந்தப் போரில் பல்குனன் மகனை {அபிமன்யு} பல கணைகளால் துளைத்தான். ஓ! எதிரிகளை எரிப்பவரே {திருதராஷ்டிரரே}, சினத்தால் தூண்டப்பட்டவர்களும், போரின் வகைகள் அனைத்தையும் அறிந்தவர்களுமான அவர்கள் இருவருக்குள்ளும் பீஷ்மரின் நிமித்தமாக நடைபெற்ற அப்போரானது, பழங்காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடைபெற்ற போரின் போது, பலிக்கும் வாசவனுக்கும் {இந்திரனுக்கும்} இடையில் நடந்த மோதலைப் போலவே இருந்தது.

யானை படைப்பிரிவுக்கு எதிராகப் போரிட்ட பீமசேனன், பெரிய மலைகளைத் தன் வஜ்ரத்தால் பிளந்த சக்ரனைப் {இந்திரனைப்} போல மிகப் பிரகாசமாகத் தெரிந்தான். உண்மையில், மலைகளைப் போலப் பெரிதானவையாக இருந்த யானைகள், அந்தப் போரில் பீமசேனனால் கொல்லப்பட்டு, தங்கள் பிளிறல்களால் பூமியையே நிறைத்த படி பெரும் எண்ணிக்கையில் கீழே களத்தில் விழுந்தன. மலை போன்ற அளவுகளைக் கொண்டவையும், கனமான பெரும் உலோகக் குவியல் போன்றவையும், மத்தகம் பிளக்கப்பட்டுப் பூமியில் கிடந்தவையுமான அந்த யானைகள் பூமியின் பரப்பில் சிதறிக் கிடக்கும் மலைகளைப் போலத் தெரிந்தன.

ஒரு பெரும் படையால் பாதுகாக்கப்பட்ட வலிமைமிக்க வில்லாளியான யுதிஷ்டிரன், அந்தப் பயங்கரப் போரில் மத்ரர்களின் ஆட்சியாளனுடன் {சல்லியனுடன்} மோதியபடி அவனைப் பீடித்தான். பீஷ்மரின் நிமித்தமாகப் பதிலுக்குத் தன் ஆற்றலை வெளிப்படுத்திய மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, வலிமைமிக்கத் தேர்வீரனான தர்மனின் மகனை {யுதிஷ்டிரனை} அந்தப் போரில் பீடித்தான்.

சிந்துக்களின் மன்னன் {ஜெயத்ரதன்}, கூர்முனை கொண்ட ஒன்பது நேரான கணைகளால் விராடனைத் துளைத்து, மேலும் முப்பதால் {30 கணைகளால்} அவனை மீண்டும் தாக்கினான். எனினும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒரு பெரும் படைப்பிரிவின் தலைவனான விராடன், கூர் முனை கொண்ட முப்பது {30} கணைகளால் ஜெயத்ரதனின் நடுமார்பைத் தாக்கினான். அழகிய விற்களையும், அழகிய வாள்களையும் தரித்துக் கொண்டு, அழகிய கவசங்கள், ஆயுதங்கள், கொடிமரங்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டு, அழகிய வடிங்களைக் கொண்டவர்களான மத்ஸ்யர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} ஆகிய இருவரும் அந்தப் போரில் பிரகாசமாகத் தெரிந்தனர்.

துரோணர், பாஞ்சாலர்களின் இளவரசனான திருஷ்டத்யும்னனுடன் பயங்கர போரில் மோதி, தன் நேரான கணைகளால் கடுமையாகப் போரிட்டார். பிறகு துரோணர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பிருஷதன் {துருபதன்} மகனுடைய {திருஷ்டத்யும்னனின்} பெரிய வில்லை அறுத்து, ஐம்பது {50} கணைகளால் அவனை ஆழமாகத் துளைத்தார். பிறகு பகைவீரர்களைக் கொல்பவனான அந்தப் பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, தன்னுடன் மோதிய துரோணரின் மேல் பல கணைகளை ஏவினான். எனினும், வலிமைமிக்கத் தேர்வீரரான துரோணர், அந்தக் கணைகள் அனைத்தையும் தன் கணைகளால் தாக்கி அவற்றை வெட்டினார். பிறகு துரோணர், கடும் கணைகள் ஐந்தை {5} துருபதன் மகனின் {திருஷ்டத்யும்னன்} மேல் ஏவினார்.

பிறகு பகைவீரர்களைக் கொல்பவனான அந்தப் பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, சினத்தால் தூண்டப்பட்டு, மரணக் கோலுக்கு {யம தண்டத்துக்கு} ஒப்பான ஒரு கதாயுதத்தை அந்தப் போரில் துரோணரின் மேல் ஏவினான். எனினும், துரோணர், தன்னை நோக்கி மூர்க்கமாக வந்து கொண்டிருந்ததும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதுமான அந்தக் கதாயுதத்தை ஐம்பது {50} கணைகளால் தடுத்தார். அதன் பேரில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரோணரின் வில்லில் இருந்து ஏவப்பட்ட அந்தக் கணைகளால் துண்டுகளாக வெட்டப்பட்ட அந்தக் கதாயுதம், கீழே பூமியில் விழுந்தது. பிறகு, எதிரிகளை எரிப்பவனான பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, தன் கதாயுதம் கலங்கடிக்கப்பட்டதைக் கண்டு, முழுவதும் இரும்பாலான சிறந்த ஈட்டி ஒன்றைத் துரோணரின் மேல் ஏவினான். எனினும் துரோணர், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் ஒன்பது கணைகளால் அந்த ஈட்டியை வெட்டி, பெரும் வில்லாளியான பிருஷதன் மகனைப் {திருஷ்டத்யும்னனைப்} பீடித்தார். இப்படியே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீஷ்மரின் நிமித்தமாகத் துரோணருக்கும், பிருஷதன் மகனுக்கு {திருஷ்டத்யும்னனுக்கும்} இடையில் அந்தக் கடுமையான மற்றும் பயங்கரமான போர் நடைபெற்றது.

அர்ஜுனன், கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} அடைந்து, கூர்முனை கொண்ட கணைகள் பலவற்றால் அவரைப் பீடித்து, காட்டில் மற்றொரு யானையை நோக்கிச் செல்லும் மதங்கொண்ட ஒரு யானையைப் போல அவரை நோக்கி விரைந்தான். எனினும், பெரும் ஆற்றலைக் கொண்ட மன்னன் பகதத்தன், அந்தப் போரில் கணைமாரியால் அர்ஜுனனின் வழியைத் தடுத்து, அவனை {அர்ஜுனனை} நோக்கி விரைந்தான். பிறகு அர்ஜுனன், அந்தப் பயங்கரப் போரில், இரும்பாலானவையும், வெள்ளியைப் போலப் பிரகாசமாக இருந்தவையும், கூர்முனை கொண்டவையுமான பளபளக்கும் கணைகள் பலவற்றால் தன்னை நோக்கி யானையில் வந்து கொண்டிருந்த பகதத்தனைத் துளைத்தான்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அதே வேளையில் குந்தியின் மகன் {அர்ஜுனன்- சிகண்டியிடம்},  “செல், பீஷ்மரை நோக்கிச் சென்று அவரைக் கொல்வாயாக” என்று சிகண்டியைத் தூண்டினான். பிறகு, ஓ! பாண்டுவின் அண்ணனே {திருதராஷ்டிரரே}, பாண்டுவின் மகனை {அர்ஜுனனைக்} கைவிட்ட பிராக்ஜோதிஷர்களின் ஆட்சியாளன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துருபதனின் தேரை எதிர்த்துச் சென்றான்.

பிறகு அர்ஜுனன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சிகண்டியை முன்னணியில் கொண்டு பீஷ்மரை நோக்கி விரைவாகச் சென்றான். பிறகு, உமது படையின் துணிவுமிக்கப் போராளிகள் அனைவரும், உரக்கக் கூச்சலிட்டபடியே பெரும் வீரியத்துடன் அர்ஜுனனை எதிர்த்து விரைந்ததால், அங்கே கடும் போர் ஒன்று நடைபெற்றது. இவை அனைத்தும் மிக அற்புதமாகக் காணப்பட்டது. கோடை காலத்தில் ஆகாயத்தின் மேகத் திரளைகளை விலக்கும் காற்றைப் போல, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது மகனின் பல்வேறு படைப்பிரிவுகளை அர்ஜுனன் விலகச் செய்தான். எனினும் சிகண்டி, கவலையேதும் இல்லாமல், பாரதர்களின் பாட்டனிடம் {பீஷ்மரிடம்} வந்து, கணைகள் பலவற்றால் அவரைத் துளைத்தான்.

பீஷ்மரைப் பொறுத்தவரை, அப்போது அவரது தேரே அவரது நெருப்பறையானது {அக்னிகிருகமானது}. அந்நெருப்பின் தழலாக அவரது வில்லே ஆனது. வாள்களும், ஈட்டிகளும், கதாயுதங்களும் அந்நெருப்பின் எரிபொருளாகின {விறகாகின}. அந்தப் போரில் க்ஷத்திரியர்களை எரிக்க அவர் ஏவிய கணைமாரியே அந்நெருப்பின் சுடர்ப்பொறிகளாகின {தீப்பொறிகளாகின}. தொடர்ந்து ஊட்டப்படும் எரிபொருளால் பற்றி எரியும் நெருப்பானது காற்றின் உதவியோடு, உலர்ந்த புற்குவியலுக்கு மத்தியில் பரவுவதைப் போல, பீஷ்மரும் தெய்வீக ஆயுதங்களை இறைத்தபடி தழல்களுடன் சுடர்விட்டெரிந்தார்.

மேலும் அந்தக் குருவீரர் {பீஷ்மர்}, அந்தப் போரில் பார்த்தனை {அர்ஜுனனைப்} பின்தொடர்ந்து வந்த சோமகர்களைக் கொன்றார். உண்மையில், அந்த வலிமைமிக்கத் தேர்வீரர் {பீஷ்மர்}, தங்கச் சிறகுகள் கொண்டவையும், கூர் தீட்டப்பட்டவையும், நேரானவையுமான தன் கணைகளின் மூலம், அர்ஜுனனின் பிற படைகளையும் தடுத்தார். அந்தப் பயங்கரப் போரில், அடிவானின் முக்கிய மற்றும் துணைப் புள்ளிகள் {திக்குகளும், துணைத்திக்குகளும்} அனைத்தையும் தன் சிங்க முழக்கங்களால் நிறைத்த பீஷ்மர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பல தேர்வீரர்களையும் (அவர்களது தேரில் இருந்து} வீழ்த்தினார், மேலும், பல குதிரைகளையும், அவற்றைச் செலுத்துபவர்களையும் வீழ்த்தினார். இலைகளாலான தங்கள் தலைகள் வெட்டப்பட்ட பனைமரக்காடுகளைப் போல அந்தத் தேர்களில் பெரும்படை தெரியும்படி செய்தார்.

ஆயுதம் தாங்குவோர் அனைவரிலும் முதன்மையான அவர் {பீஷ்மர்}, அந்தப் போரில், தேர்களையும், குதிரைகளையும், யானைகளையும், அவற்றைச் செலுத்துபவர்களை இழக்கச் செய்தார். இடி முழக்கத்திற்கு ஒப்பான அவரது வில்லின் நாணொலி, உள்ளங்கைகளின் தட்டல்கள் ஆகிய இரண்டையும் கேட்டு, களமெங்கும் இருந்த துருப்புகள் நடுங்கின. ஓ! மனிதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, உமது தந்தையின் {பீஷ்மரின்} கணைகள் பாயும்போது அவற்றில் எவையும் பயனற்றதாக ஆகவில்லை. உண்மையில், பீஷ்மரின் வில்லில் இருந்து ஏவப்பட்ட அவை எதிரியின் உடலை தொட்டு மட்டும் விழவில்லை (ஆனால், அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவை அவர்களை ஊடுருவிச் சென்றன).

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வேகமான குதிரைகள் பூட்டப்பட்ட தேர் கூட்டங்கள் தங்கள் தேரோட்டிகளை இழந்து, காற்றின் வேகத்தில் அனைத்துப் பக்கங்களிலும் இழுத்துச் செல்லப்படுவதை நாங்கள் கண்டோம். சேதிகள், காசிகள் மற்றும் கரூசர்களைச் சேர்ந்தவர்களும், உன்னதப் பிறப்பைக் கொண்டவர்களும், தங்கள் உயிரையே விடத் தயாராக இருந்தவர்களும், பின்வாங்காதவர்களும், துணிச்சல்மிக்கவர்களும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கொடிமரங்களைக் கொண்டவர்களுமான பெரும் தேர்வீரர்கள் பதினாலாயிரம் {14000} பேர், வாயை அகல விரித்திருக்கும் காலனைப் போல இருந்த வீரர் பீஷ்மரை அணுகித் தங்கள் குதிரைகள், தேர்கள் மற்றும் யானைகளோடு அடுத்த உலகத்திற்கு அனுப்பப்பட்டனர்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் பீஷ்மரை அணுகிய சோமகர்களில் பெரும் தேர்வீரன் ஒருவன் கூட அம்மோதலில் இருந்து உயிருடன் திரும்பவில்லை. பீஷ்மரின் ஆற்றலைக் கண்ட மக்கள், (அவரை அணுகி) அந்த வீரர்கள் அனைவரும், ஏற்கனவே இறந்தோர் மன்னனின் {யமனின்} வசிப்பிடத்திற்கு அனுப்பப்பட்டதாகவே கருதினர். உண்மையில், (தன் தேரில்) வெண் குதிரைகள் பூட்டப்பட்டவனும், கிருஷ்ணனைத் தன் தேரோட்டியாகக் கொண்டவனுமான அர்ஜுனனையும், அளவிலா சக்தி கொண்ட பாஞ்சால இளவரசன் சிகண்டியையும் தவிர அந்தப் போரில் பீஷ்மரை அணுக எந்தத் தேர்வீரனும் துணியவில்லை” {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English