Sunday, March 13, 2016

யுதிஷ்டிரனை அறிவுறுத்திய பீஷ்மர்! - பீஷ்ம பர்வம் பகுதி – 116

The advice of Bhishma to Yudhishthira! | Bhishma-Parva-Section-116 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 74)

பதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரன் கேள்வியும், சஞ்சயன் பதிலளிக்கத் தொடங்கியதும்; வாழ்வை வெறுத்த பீஷ்மர், தன்னைக் கொல்ல அறிவுறுத்தி, யுதிஷ்டிரனைத் தூண்டிய பீஷ்மர்; படைவீரர்களைத் தூண்டிய யுதிஷ்டிரன்; பாண்டவப் படையின் முயற்சி; ஒருவரை ஒருவர் எதிர்த்த மன்னர்களையும் தேர்வீரர்களையும் பற்றிய குறிப்பு; போரில் எழுந்த ஆரவாரமும், பேரொலியும்; இரு தரப்பிலும் ஏற்பட்ட இழப்புகள்...

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, வலிமையும் சக்தியும் கொண்ட சந்தனுவின் மகன் பீஷ்மர், பத்தாம் {10} நாள் போரில் பாண்டவர்கள் மற்றும் சிருஞ்சயர்களுடன் எவ்வாறு போரிட்டார்? குருக்களும் போரில் பாண்டவர்களை எவ்வாறு தடுத்தனர்? போரையே ஆபரணமாகக் கொண்ட பீஷ்மர், அந்தப் பெரும்போரில் போரிட்டதை எனக்கு விவரமாகச் சொல்வயாக” என்று கேட்டான்.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கௌரவர்கள் எவ்வாறு பாண்டவர்களுடன் போரிட்டனர் என்றும், அந்தப் போர் எவ்வாறு நடந்தது என்றும் இப்போது நான் உமக்கு விவரிப்பேன்.



நாளுக்கு நாள், கோபத்தில் தூண்டப்பட்ட உமது படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலர், கிரீடம் தரித்தவனின் (அர்ஜுனனின்) பெரும் ஆயுதங்களால் அடுத்த உலகத்திற்கு அனுப்பப்பட்டனர். எப்போதும் வெல்லும் குரு வீரரான பீஷ்மரும், தன் நோன்புக்கு ஏற்புடைய வகையில், பார்த்தப் படைக்கு {பாண்டவபடைக்கு} மத்தியில் பெரும் அழிவையே எப்போதும் ஏற்படுத்தினார்.

ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, குருக்களுக்குத் தலைமையில் நின்று போரிடும் பீஷ்மரையும், பாஞ்சாலர்களுக்குத் தலைமையில் நின்று போரிடும் அர்ஜுனனையும் கண்ட எங்களால், வெற்றி எத்தரப்பில் தன்னை அறிவித்துக் கொள்ளும் என்று உண்மையிலேயே சொல்ல முடியவில்லை.

பத்தாம் {10} நாள் போரில், பீஷ்மரும் அர்ஜுனனும் ஒருவரோடொருவர் மோதியபோது, பயங்கரப் பேரழிவு அங்கே நிகழ்ந்தது. அந்நாளில், ஓ! எதிரிகளை எரிப்பவரே {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்க உயர்ந்த ஆயுதங்களை அறிந்தவரான சந்தனுவின் மகன் பீஷ்மர், ஆயிரமாயிரம் வீரர்களைத் தொடர்ச்சியாகக் கொன்றார். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பெயர்கள் மற்றும் குடும்பங்கள் {கோத்திரங்களும்} அறியப்படாதவர்களும், போரில் பின்வாங்காதவர்களும், பெரும் துணிவுமிக்கவர்களுமான பலர் அந்நாளில் பீஷ்மரால் கொல்லப்பட்டனர்.

பத்து நாட்கள் பாண்டவப் படையை எரித்தவரான அற ஆன்மா கொண்ட {தர்மாத்மா} பீஷ்மர், தன் உயிரைக் காத்துக் கொள்ளும் விருப்பம் அனைத்தையும் கைவிட்டார். வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட உமது தந்தை தேவவிரதர் {பீஷ்மர்}, தன் துருப்புகளுக்குத் தலைமையில் இருந்து கொண்டு, தாம் கொல்லப்படுவதை விரும்பி, “பெரும் எண்ணிக்கையிலான வீரர்களில் முதன்மையானோரை இனியும் நான் கொல்லேன்” என்று நினைத்தார்.

அவர் {பீஷ்மர்}, தன் அருகில் இருந்த யுதிஷ்டிரனைக் கண்டு, அவனிடம் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! யுதிஷ்டிரா, ஓ! பெரும் விவேகியே {பேரறிவாளனே}, ஓ! கல்வியின் அனைத்து கிளைகளையும் அறிந்தவனே, ஓ! ஐயா {யுதிஷ்டிரா}, நீதிமிக்கதும், சொர்க்கத்திற்கு வழிகாட்டுவதுமான நான் சொல்லும் வார்த்தைகளைக் கேட்பாயாக. ஓ! பாரதா, ஓ! ஐயா {யுதிஷ்டிரா}, இந்த என் உடலை இனிமேலும் பாதுகாக்க நான் விரும்பவில்லை. பெரும் எண்ணிக்கையிலான மனிதர்களைப் போரில் கொன்றே நெடுங்காலத்தை நான் கடந்திருக்கிறேன். எனக்கு ஏற்புடையதைச் செய்ய நீ விரும்புவாயெனில், பாஞ்சாலர்களுடனும், சிருஞ்சயர்களுடனும் கூடிய பார்த்தனை {அர்ஜுனனை} உனக்கு முன்னில்லையில் நிறுத்தி, என்னைக் கொல்ல முயல்வாயாக” என்றார் {பீஷ்மர்}.

மெய்ப்பார்வை கொண்ட மன்னன் யுதிஷ்டிரன், இஃதையே அவரது நோக்கம் என உறுதி செய்து கொண்டு, (தன் உதவிக்கு) சிருஞ்சயர்களைக் கொண்டு போரிடச் சென்றான். பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, திருஷ்டத்யும்னனும், பாண்டுவின் மகனான யுதிஷ்டிரனும், பீஷ்மரின் அந்த வார்த்தைகளைக் கேட்டு, தங்கள் வியூகத்தை {வியூகத்தில் இருந்த படைவீரர்களைத்} தூண்டினார்கள்.

யுதிஷ்டிரன், “முன்னேறுவீராக! போரிடுவீராக! போரில் பீஷ்மரை வீழ்த்துவீராக! எதிரிகளை வெல்பவனும், கலங்கடிக்க முடியாத நோக்கம் கொண்டவனுமான ஜிஷ்ணுவால் {அர்ஜுனனால்} நீவிர் அனைவரும் பாதுகாக்கப்படுவீர். பெரும் வில்லாளியும், (நமது படைகளின்) தலைவனுமான இந்தப் பிருஷதன் மகனும் {துருபதன் மகன் திருஷ்டத்யும்னனும்}, பீமனும் உங்களை நிச்சயமாகப் பாதுகாப்பார்கள். சிருஞ்சயர்களே, போரில் இன்று பீஷ்மரிடம் எந்த அச்சமும் கொள்ளாதீர். சிகண்டியை முன்னிறுத்தி பீஷ்மரை இன்று நாம் வீழ்த்துவோம் என்பதில் ஐயமில்லை” என்றான் {யுதிஷ்டிரன்}.

பத்தாம் {10} நாள் போரில் இத்தகு விரதம் பூண்ட பாண்டவர்கள், (வெல்வது அல்லது) சொர்க்கத்திற்குச் செல்வது எனத் தீர்மானித்து, சினத்தால் குருடாகி, சிகண்டியையும், பாண்டுவின் மகனான தனஞ்சயனையும் {அர்ஜுனனையும்} தங்கள் முன்னிலையில் கொண்டு முன்னேறினர். மேலும், பீஷ்மரை வீழ்த்த மிகக் கடுமையான முயற்சிகளை அவர்கள் செய்தனர்.

பிறகு, பெரும் வலிமையைக் கொண்ட பல்வேறு மன்னர்கள், உமது மகனால் {துரியோதனனால்} தூண்டப்பட்டு, துரோணர், அவரது மகன் {அஸ்வத்தாமன்} மற்றும் ஒரு பெரும்படையின் துணையோடும், தன் தம்பிகள் அனைவருக்கும் தலைமையில் இருந்த வலிமைமிக்கத் துச்சாசனனோடும், அந்தப் போரின் மத்தியில் இருந்த பீஷ்மரை நோக்கி {அவரைக் காப்பதற்காக} முன்னேறினர். பிறகு, உமது படையின் துணிச்சல்மிக்க வீரர்களான அவர்கள், உயர்ந்த நோன்புகளைக் கொண்ட பீஷ்மரைத் தங்கள் முன்னணியில் கொண்டு, சிகண்டியின் தலைமையிலான பார்த்தர்களோடு {பாண்டவர்களோடுப்} போரிட்டனர்.

சேதிகள் மற்றும் பாஞ்சாலர்கள் ஆகியோரால் ஆதரிக்கப்பட்ட குரங்குக் கொடியோன் அர்ஜுனன், சிகண்டியை முன்னிறுத்திக் கொண்டு சந்தனுவின் மகனான பீஷ்மரை நோக்கிச் சென்றான்.

சிநியின் பேரன் {சாத்யகி} துரோணரின் மகனோடு {அஸ்வத்தாமனோடு} போரிட்டான், திருஷ்டகேது பூருவின் வழித்தோன்றலுடனும் {பௌரவனுடனும்}, {சோமக [பாஞ்சால] இளவரசன்} யுதாமன்யு [1] தொண்டர்களுக்குத் தலைமையில் இருந்த உமது மகன் துரியோதனனுடனும் போரிட்டனர். விராடன், தன் படைகளுக்குத் தலைமையில் நின்று, ஜெயத்ரதனோடும், அவனை ஆதரித்த அவனது துருப்புகளோடும் போரிட்டான். வர்த்தக்ஷத்தரினின் வாரிசோ [2], ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, சிறந்த வில் மற்றும் கணைகளோடு கூடிய உமது மகன் சித்திரசேனனுடன் மோதினான்

[1] வேறு ஒரு பதிப்பில் இங்கே துரியோதனனுடன் போரிட்டது அபிமன்யு என்று இருக்கிறது. கங்குலியின் அடுத்த பகுதியின் தொடக்கத்தில் அபிமன்யு துரியோதனனுடனேயே போரிடுகிறான்.

[2] "வங்க மற்றும் பம்பாய் உரைகள் இரண்டுமே இங்கே குழப்பத்தையே தருகின்றன. பர்துவான் பண்டிதர்களால் தீர்மானிக்கப்பட்ட உரையையே நான் இங்குப் பின்பற்றியிருக்கிறேன். பர்துவான் பண்டிதர்களின் இந்தத் தீர்மானம் புறக்கணிக்கப்பட்டால், இந்த வரி, "தன் படைகளின் தலைமையில் நின்ற விராடன், தன் துருப்புகளால் ஆதரிக்கப்பட்ட ஜெயத்ரதனுடனும், வர்த்தக்ஷேமியின் வாரிசுடனும் மோதினான் என்ற பொருளைத் தரும். ஆனால் அது தவறாகிவிடும்" என்று இங்கே விளக்குகிறார் கங்குலி. கங்குலியில் விருத்தக்ஷத்திரன், வர்த்தக்ஷத்திரன், வர்த்தக்ஷேமி என்ற பெயர் குழப்பமும் இருக்கிறது. வேறொரு பதிப்பில், "விராடனோ, படைகளுடன் சேர்ந்து, துருப்புகளுடன் கூடியவனும், விருத்தக்ஷத்திரனுடைய மகனுமான ஜயத்ரதனை எதிர்த்தான்" என்று இருக்கிறது. சித்திரசேனனைக் குறித்த குறிப்பு இல்லை. மன்மதநாததத்தரின் பதிப்பில், "ஓ! எதிரிகளைப் பீடிப்பவரே {திருதராஷ்டிரரே}, விராடன், தன் படைப்பிரிவால் ஆதரிக்கப்பட்டு, விருத்தக்ஷத்ரனின் வாரிசானவனும், தன் துருப்புகளுடன் கூடியவனுமான ஜெயத்ரதனுடன் மோதினான்" என்று இருக்கிறது. இங்கேயும் சித்திரசேனனைக் குறித்த குறிப்பு ஏதும் இல்லை.

யுதிஷ்டிரன், வலிமைமிக்க வில்லாளியும், தன் துருப்புகளுக்குத் தலைமையில் நின்றவனுமான சல்லியனை எதிர்த்து விரைந்தான். பீமசேனன், நன்கு பாதுகாத்துக் கொண்டு, (கௌரவப் படையின்) யானைப்படைப் பிரிவை எதிர்த்துச் சென்றான். தன் தம்பிகள் துணையுடன் கூடிய பாஞ்சால இளவரசனான திருஷ்டத்யும்னன், சீற்றத்தால் தூண்டப்பட்டு, ஆயுதங்கள் தாங்கியோர் அனைவரிலும் முதன்மையானவரும், வெல்லப்பட முடியாதவரும், தடுக்கப்பட முடியாதவருமான துரோணரை எதிர்த்து விரைந்தான்.

சிங்கக் கொடியினை தன் கொடிமரத்தில் கொண்டவனும், எதிரிகளைத் தண்டிப்பவனுமான {கோசலர்களின்} இளவரசன் பிருஹத்பலன், கர்ணீகர {கோங்கு மரம்} மலர்க்கொடியைத் தாங்கிய கொடிமரத்துடன் கூடிய சுபத்ரையின் மகனை {அபிமன்யுவை} எதிர்த்து விரைந்தான் [3]. மன்னர்கள் பலரின் துணையோடு கூடிய உமது மகன்கள், சிகண்டி மற்றும் பிருதையின் {குந்தியின்} மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகிய இருவரையும் கொல்ல விரும்பி அவர்களை எதிர்த்து விரைந்தனர்.

[3] மன்மதநாததத்தரின் பதிப்பில், “எதிரிகளை அடுக்குபவனான இளவரசன் பிருஹத்பலன், கோங்கு மலர்கள் அசைவது போல அசையும் சிங்க உருவம் பொறித்த கொடியைத் தன் கொடிமரத்தில் கொண்ட சுபத்திரையின் மகனை {அபிமன்யுவை} எதிர்த்தான்” என்று இருக்கிறது.

பயங்கர ஆற்றலைக் கொண்ட இரு படைகளின் போராளிகளும் ஒருவரை நோக்கி ஒருவர் விரைந்த போது (அவர்களது நடையால்) பூமி நடுங்கியது. போரில் சந்தனுவின் மகனை {பீஷ்மரைக்} கொண்ட உமது படையும், எதிரியின் படையும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, ஒருவரோடு ஒருவர் கலந்தனர். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சினத்தில் எரிந்து, ஒருவரை ஒருவர் எதிர்த்து விரையும் அந்தப் போராளிகளால் எழுந்த மிகப் பெரிய ஆரவாரம், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} அனைத்துப் பக்கங்களிலும் கேட்கப்பட்டது. சங்கொலிகளாலும், படைவீரர்களின் சிங்க முழக்கங்களாலும் எழுந்த பேரிரைச்சல் பயங்கரமாக இருந்தது. சூரியனுக்கோ, சந்திரனுக்கோ இணையான காந்தியைக் கொண்ட வீரமன்னர்கள் அனைவரின் தோள்வளைகளும், கிரீடங்களும் மங்கிப் போயிற்று.

இரு படைகளைச் சேர்ந்தவர்களின் விற்களின் நாணொலிகளும், கணைகளின் “விஸ்” ஒலிகளும், சங்கொலிகளும், பேரிகைகளின் ஒலிகளும், தேர்களின் சடசடப்பொலியும் மேகங்களின் கடும் முழக்கங்களுக்கு இணையாக இருந்தன. இரு படைகளைச் சேர்ந்தவர்களின் பராசங்கள், ஈட்டிகள், ரிஷ்டிகள் மற்றும் கணைகளின் மழையால் போர்க்களத்திற்கு மேலே இருந்த ஆகாயம் இருளடைந்தது {ஒளியற்றதாகியது}. அந்தப் பயங்கரப் போரில் தேர்வீரர்களும், குதிரை வீரர்களும், குதிரைவீரர்களை வீழ்த்தினார்கள். யானைகள், யானைகளைக் கொன்றன, காலாட்படை வீரர்கள், காலாட்படை வீரர்களைக் கொன்றனர்.

பீஷ்மரின் நிமித்தமாகக் குருக்களுக்கும் {கௌரவர்களுக்கும்}, பாண்டவர்களுக்கும் இடையில் நடைபெற்ற அப்போர், ஓ! மனிதர்களில் புலியே {திருதராஷ்டிரரே}, ஒரு சதைத்துண்டுக்காக மோதும் இரு பருந்துகளைப் போல மிகக் கடுமையானதாக இருந்தது. ஒருவரை ஒருவர் கொல்ல விரும்பி, ஒருவரை ஒருவர் வீழ்த்த விரும்பி போரில் ஈடுபட்ட போராளிகளுக்குள் நடைபெற்ற அந்த மோதல் மிகப் பயங்கரமானதாக இருந்தது” {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English