Wednesday, March 23, 2016

கர்ணனை அனுமதித்த பீஷ்மர்! - பீஷ்ம பர்வம் பகுதி – 124

Bhishma permitted Karna! | Bhishma-Parva-Section-124 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 82)

பதிவின் சுருக்கம் : பீஷ்மரிடம் சென்ற கர்ணன்; கர்ணனிடம் அன்பொழுகப் பேசிய பீஷ்மர்; கர்ணனைப் பாண்டவர்களுடன் சேருமாறு அறிவுறுத்திய பீஷ்மர்; பீஷ்மரின் அறிவுரையை மறுத்துப் போரில் களம் காண பீஷ்மரிடம் அனுமதி கோரிய கர்ணன்; கர்ணனுக்கு அனுமதியளித்த பீஷ்மர்...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “சந்தனுவின் மகனான பீஷ்மர் அமைதியடைந்த பிறகு, ஓ! ஏகாதிபதி, அங்கே இருந்த பூமியின் ஆட்சியாளர்கள் அனைவரும் தங்களுக்கு உரிய இடங்களுக்கு {தங்கள் தங்கள் பாசறைகளுக்குத்} திரும்பினர். பீஷ்மரின் படுகொலையைக் கேள்விப்பட்ட [1] மனிதர்களில் காளையான ராதையின் மகன் (கர்ணன்), ஓரளவு அச்சத்தால் தூண்டப்பட்டு அங்கே வந்தான். அவன் {கர்ணன்}, நாணல் படுக்கையில் {கிடப்பதைப் போல} கிடக்கும் [2] அந்தச் சிறப்புவாய்ந்த வீரரை {பீஷ்மரைக்} கண்டான். பிறகு, பெரும்புகழ் கொண்ட அந்த விருஷன் (கர்ணன்), கண்களை மூடிக் கிடந்த அந்த வீரரை {பீஷ்மரை} அணுகி, கண்ணீரால் தடைபட்ட குரலுடன் அவரது பாதத்தில் விழுந்தான். அவன் {கர்ணன் பீஷ்மரிடம்}, “ஓ! குருக்களின் தலைவரே {பீஷ்மரே}, உமது கண்களுக்கு முன்பாக இருந்த போதெல்லாம், உம்மால் எங்கும் வெறுப்புடனே பார்க்கப்பட்ட நான் ராதையின் மகன் {கர்ணன்} {வந்திருக்கிறேன்}” என்றான் [3].


[1] பீஷ்ம பர்வம் பகுதி 121ல் பீஷ்மரின் மரணத்தை நினைத்து வருந்திய குறிப்பு இருக்கிறது.

[2] வேறொரு பதிப்பில், “அவன் {கர்ணன்}, அப்பொழுது கணைகளின் படுக்கையை அடைந்த மகாத்மாவான பீஷ்மரை, ஜனனகாலத்தில் நாணல்படுக்கையில் கிடந்த வீரனும், தலைவனுமான சுப்ரமண்யனைப் போலக் கண்டான்” என்று இருக்கிறது.

[3] வேறொரு பதிப்பில், “ஓ குருக்களில் சிறந்தவரே, யான் ராதையின் மகன்; குற்றம்மற்றவனாயினும் பார்க்கும்பொழுதெல்லாம் உம்மால் வெறுக்கப்படுபவன்” என்று கர்ணன் கூறியதாக இருக்கிறது.

இவ்வார்த்தைகளைக் கேட்டவரும், குருக்களின் முதிர்ந்த தலைவருமான கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, திரையால் [4] மூடப்பட்ட தன் கண்களின் இமைகளை மெல்ல உயர்த்தி, காவலர்களை விலகச் செய்து, அந்த இடத்தில் யாரும் இல்லாததைக் கண்டு {உறுதி செய்து கொண்டு}, மகனை அணைக்கும் தந்தையைப் போல ஒரு கரத்தால் கர்ணனை அணைத்துக் கொண்டு, பெரும்பாசத்துடன் இவ்வார்த்தைகளைச் சொன்னார். {பீஷ்மர் கர்ணனிடம்} “வா, என்னுடன் ஒப்பிட்டுக் கொண்டு எப்போதும் சவால் விடும் எதிராளியான நீ வருவாயாக. நீ என்னிடம் வந்திராவிடில் அஃது உனக்கு நன்றாயிராது என்பதில் ஐயமில்லை. நீ குந்தியின் மகனே, ராதையினுடையவனல்ல {ராதையின் மகன் அல்ல}. அதிரதனும் உன் தந்தையல்ல. ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, உன்னைக் குறித்த இவை அனைத்தையும் நான் நாரதரிடமும், கிருஷ்ண துவைபாயனரிடமும் {வியாசரிடமும்} கேட்டிருக்கிறேன். இவையனைத்தும் உண்மை என்பதில் ஐயமில்லை.

[4] ஒரு வேளை பீளையாக இருக்கலாம்.

ஓ! மகனே {கர்ணா} நான் உன்னிடம் வெறுப்பெதையும் கொண்டிருக்கவில்லை என்பதை நான் உண்மையாகவே சொல்கிறேன். உன் சக்தியைக் குறைப்பதற்காகவே நான் அத்தகு கடும் வார்த்தைகளைப் பயன்படுத்தினேன். ஓ! அற்புத நோன்புகளைக் கொண்டவனே {கர்ணா}, காரணமே இல்லாமல் நீ பாண்டவர்களைத் தவறாகப் பேசுகிறாய். பாவத்தாலேயே நீ இவ்வுலகில் வந்தாய். இதன் காரணமாக உனது இதயம் அப்படி இருக்கிறது. செருக்காலும், இழிந்தோரின் தோழமையாலும் உன் இதயம் தகுதிவாய்ந்த மனிதர்களையும் {புண்ணியவான்களையும்} வெறுக்கிறது. இதன் காரணமாகவே நான் குரு முகாமில் உன்னைக் குறித்து அத்தகு கடும் வார்த்தைகளைப் பேசினேன்.

பூமியில் எதிரியால் தாங்கிக் கொள்ளக் கடினமான உன் போராற்றலைக் குறித்து நான் அறிவேன். பிராமணர்கள் மீது நீ கொண்ட மரியாதையையும், உனது வீரத்தையும், கொடையளிப்பதில் நீ கொண்ட பெரும் பற்றையும் நான் அறிவேன். ஓ! தேவனைப் போன்றவனே {கர்ணா}, மனிதர்களில் உன்னைப் போல வேறு எவனும் இல்லை. குடும்பத்துக்குள் உண்டாகும் பிளவுக்கு அஞ்சியே நான் உன்னைக் குறித்துக் கடும் வார்த்தைகளை எப்போதும் பேசினேன்.

வில்லாளித்தன்மை, ஆயுதத்தைக் குறிபார்த்தல், கர நளினம் {லாகவம்}, ஆயுத பலம் ஆகியவற்றில் நீ பல்குனனுக்கோ {அர்ஜுனனுக்கோ}, உயர் ஆன்ம கிருஷ்ணனுக்கோ இணையானவனாவாய்! ஓ! கர்ணா, காசி நகரத்திற்குத் தனியாக உன் வில்லுடன் சென்று, குரு மன்னனுக்கு {துரியோதனனுக்கு} மணமகளை {பானுமதியை} அடைவதற்காகப் போரில் மன்னர்களைத் தாக்கினாய். வலிமைமிக்கவனும், வெல்லப்பட இயலாதவனும், போரில் தன் ஆற்றல் குறித்து எப்போதும் தற்பெருமை பேசுபவனுமான மன்னன் ஜராசந்தனும் போரில் உனக்கு இணையாக முடியவில்லை. நீ பிராமணர்களுக்கு அர்ப்பணிப்புடன் இருப்பவன்; நீ எப்போதும் நல்ல போரைச் செய்பவன். சக்தியிலும், பலத்திலும் நீ தேவர்களின் பிள்ளைக்கு இணையானவன், மேலும், நிச்சயமாக மனிதர்களுக்கு மேன்மையானவன்.

உனக்கு எதிராக நான் கொண்டிருந்த கோபம் தணிந்துவிட்டது. முயற்சியால் விதியைத் தவிர்க்க முடியாது. ஓ! எதிரிகளைக் கொல்பவனே {கர்ணா}, வீரர்களான பாண்டுவின் மகன்கள் உனக்கு இரத்த {உடன்பிறந்த} சகோதரர்களாவர். ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {கர்ணா}, நீ எனக்கு ஏற்புடையதைச் செய்ய விரும்பினால் அவர்களுடன் {பாண்டவர்களுடன்} சேர்வாயாக. ஓ! சூரியனின் மகனே {கர்ணா}, இந்தப் பகையுணர்ச்சிகள் என்னோடு முடியட்டும். பூமியின் மன்னர்கள் அனைவரும் இன்று ஆபத்திலிருந்து விடுபடட்டும்” என்றார் {பீஷ்மர்}.

கர்ணன் {பீஷ்மரிடம்}, “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே {பீஷ்மரே}, இதை நான் அறிவேன். இவை யாவிலும் (நீர் சொல்வதைப் போலவே) ஐயமில்லை. நீர் என்னிடம் சொல்வதைப் போலவே, ஓ! பீஷ்மரே, நான் குந்தியின் மகனே, சூதர் ஒருவரின் மகனல்ல. எனினும், நான் குந்தியால் கைவிடப்பட்டு, சூதர் ஒருவரால் வளர்க்கப்பட்டு வந்தேன். (இவ்வளவு நெடுங்காலத்திற்கு) துரியோதனனின் செல்வத்தை அனுபவித்த நான், அஃதை இப்போது பொய்யாக்கத் துணியேன்.

பாண்டவர்களுக்காக உறுதியாகத் தீர்மானம் செய்திருக்கும் வசுதேவரின் மகனை {கிருஷ்ணனைப்} போல, ஓ! பிராமணர்களுக்கு அபரிமித கொடையளிப்பவரே {பீஷ்மரே}, துரியோதனனுக்காக, என் உடைமைகள், என் உடல், என் பிள்ளைகள், மனைவி ஆகியோரையும் கைவிட நான் தயாராகவுள்ளேன். ஓ! குரு குலத்தவரே {பீஷ்மரே}, நோயால் மரணம் க்ஷத்திரியருக்குரியதில்லை. துரியோதனனைச் சார்ந்தே நான் எப்போதும் பாண்டவர்களை அவமதித்து வந்தேன். இக்காரியங்கள் அதன் வழியில் செல்ல விதிக்கப்பட்டிருக்கிறது. அது தவிர்க்க முடியாததாகும்.

முயற்சியால் விதியை வெல்லத் துணிந்தவர்கள் {இதுவரை} யார் இருந்துள்ளனர்? ஓ! பாட்டா {பீஷ்மரே}, பூமியின் அழிவைக் குறிக்கும் பல்வேறு சகுனங்கள் உம்மால் காணப்பட்டு, சபையிலும் அறிவிக்கப்பட்டது. அந்தப் பாண்டுவின் மகனும் {அர்ஜுனனும்}, வாசுதேவனும் {கிருஷ்ணனும்} பிற மனிதர்களால் வெல்லப்பட முடியாதவர்கள் என்பதை நான் நன்கறிவேன். அவர்களோடே நாம் போரிடத் துணிகிறோம். போரில் நான் பாண்டுவின் மகனை {அர்ஜுனனை} வீழ்த்துவேன். இதுவே என் உறுதியான தீர்மானமாகும்.

(பாண்டவர்களுக்கு எதிரான) இந்தக் கடும் பகையைக் கைவிட இயன்றவனாக நான் இல்லை. மகிழ்ச்சியான இதயத்துடனும், என் வகையின் கடமைகளை என் கண் முன் கொண்டும், நான் தனஞ்சயனை {அர்ஜுனனை} எதிர்ப்பேன். ஓ! வீரரே {பீஷ்மரே}, போரில் உறுதியான தீர்மானத்தைக் கொண்டிருக்கும் எனக்கு உமது அனுமதியைக் கொடுப்பீராக. நான் போரிடுவேன். இதுவே என் விருப்பமாகும். எப்போதாவது நான், கோபத்தாலோ, சிந்தனையற்ற தன்மையினாலோ உமக்கு எதிராகக் கடுஞ்சொற்களைப் பேசியிருந்தாலும், எந்தச் செயலையாவது உமக்கெதிராகச் செய்திருந்தாலும் என்னை நீர் மன்னிப்பதே உமக்குத் தகும்” என்றான் {கர்ணன்}.

பீஷ்மர் {கர்ணனிடம்}, “உண்மையிலேயே, இந்தக் கடும் பகையை உன்னால் கைவிட இயலவில்லையெனில், ஓ! கர்ணா நான் உனக்கு அனுமதியளிக்கிறேன். சொர்க்கத்தில் விருப்பத்துடன் போரிடுவாயாக. கோபமில்லாமலும், பழியுணர்ச்சியின்றியும், உனது சக்திக்கும், துணிவுக்கும் தகுந்த வகையில், அற நடத்தை நோற்று மன்னனுக்கு {துரியோதனனுக்குப்} பணிசெய்வாயாக. ஓ! கர்ணா, என் அனுமதியைப் பெற்றுக் கொள்வாயாக. நீ எதை வேண்டினாயோ அதை அடைவாயாக. நீ தனஞ்சயன் {அர்ஜுனன்} மூலமாக, க்ஷத்திரியனின் கடமைகளை நிறைவேற்ற வல்ல உலகங்கள் அனைத்தையும் {இதன் பிறகு} அடைவாயாக.

நேர்மையான போரைத் தவிர, வேறெதிலும் க்ஷத்திரியன் ஒருவனுக்குப் பெருமகிழ்ச்சி இல்லை என்பதால், செருக்கிலிருந்து விடுபட்டு, உன் பலம் மற்றும் சக்தியை நம்பி போரில் ஈடுபடுவாயாக. அமைதியை ஏற்படுத்த நான் நீண்ட காலம் பெருமுயற்சிகளைச் செய்தேன். ஆனால், ஓ! கர்ணா, நான் அந்தப் பணியில் வெல்லவில்லை. இதை நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன்” என்றார் {பீஷ்மர்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “கங்கையின் மைந்தர் {பீஷ்மர்} இதைச் சொன்னதும், பீஷ்மரை வணங்கிய அந்த ராதையின் மகன் {கர்ணன்}, அவரிடம் மன்னிப்பைப் பெற்று, தன் தேரில் ஏறி, உமது மகனை (அவனது {துரியோதனனின்} பாசறையை} நோக்கிச் சென்றான்” {என்றான் சஞ்சயன்}" {என்றார் வைசம்பாயனர்}.

***************** பீஷ்ம வத உபபர்வம் முற்றிற்று ***************
********* பீஷ்ம பர்வம் முற்றிற்று *********



ஆங்கிலத்தில் | In English