Friday, March 25, 2016

பீஷ்ம பர்வச் சுவடுகளைத் தேடி!

கிருஷ்ண ஜெயந்தி அன்று {03.08.2015} பீஷ்ம பர்வம் மொழிபெயர்ப்பைத் தொடங்கி, பங்குனி உத்திரத்தன்று {23.03.2016} நிறைவை எட்டுகிறேன். மொத்தம் 234 நாட்களாகியிருக்கின்றன. நினைத்ததைவிடக் காலம் அதிகமாகத்தான் ஆகியிருக்கிறது. பொருளளவில் பீஷ்ம பர்வம் கனமானதாகும். ஆரம்ப அத்தியாயங்களிலேயே ஜம்பூகண்ட நிர்மாண பர்வம், பூமி பர்வம் ஆகியவற்றில் புவியியல், இயற்கையின் வரலாறு குறித்த செய்திகள்; அது முடிந்தவுடனேயே பகவத் கீதை எனும் தத்துவ உரை; அதன் பிறகு, முதல் பத்து நாள் போரின் வர்ணனைகள் என்று அடுத்தடுத்து மொழிபெயர்க்கக் கடினமான பகுதிகளையே பீஷ்ம பர்வம் கொண்டிருக்கிறது. எதிர்பாரா தாக்குதல்களைச் செய்து, அந்தப் போர் முடிந்த பிறகு இரு தரப்பும் ஒப்பந்தமிடுவதை நாம் கண்டிருக்கிறோம். ஆனால் மகாபாரதத்தில் போர் தொடங்குவதற்கு முன்பே இருதரப்பும் போர் உடன்படிக்கைகளை ஏற்றுக் கொண்டு போரிடுவது நம்மை வியப்பில் ஆழ்த்தும். ஒன்றன்றபின் ஒன்றாக ஏற்படும் பிரமிப்புகளே கூட நம்மைத் தாமதம் செய்யத்தூண்டுகிறது. மேலும், நான் அடிக்கடி வெளியூர்களுக்குச் சென்றது, அலுவலகப் பணிகள், இயற்கை சீற்றங்கள், மின் பழுது, இணையப் பழுது என என்னென்ன எல்லாம் உண்டோ, அனைத்தும் பீஷ்ம பர்வம் தாமதமாவதற்கு ஒவ்வொரு வகையில் காரணங்களாகின.


23.03.2016 அன்று பங்குனி உத்திரம், அன்று அர்ஜுனன் பிறந்தநாளும் கூட, அன்றே பீஷ்ம பர்வத்தின் நிறைவை எட்டிவிட வேண்டும் என்று மனத்தில் தோன்றியது. அது தோன்றிய போது பீஷ்ம பர்வத்தில் மூன்று பகுதிகள் எஞ்சியிருந்தன. 22ந்தேதி காலையில் பகுதி 122ஐயும், அன்று இரவே பகுதி 123யும் மொழிபெயர்த்து வலையேற்றினேன். 23ந்தேதி பகல் பொழுதில் அலுவலகத்தில் மொழிபெயர்க்க முடியாது என்பதால் 22ந்தேதி இரவே அதிக நேரத்தை எடுத்துக் கொண்டு இறுதிப் பகுதியான 124ஐயும் முடித்து விட வேண்டும் என்று முயன்றேன். மணி 3.30 ஆகிவிட்டது கண்கள் சொக்கிவிட்டன. ஒரு பத்தி கூட மொழிபெயர்க்க முடியவில்லை. சரி காலையில் எழுந்து இந்தப் பகுதியை முடித்த பிறகுதான் அலுவலகத்தைத் திறக்க வேண்டும் என்று மனத்தில் தீர்மானித்துக்கொண்டு உறங்கிவிட்டேன்.

காலை 8.00 மணிக்கு எழுந்தேன். எழுந்ததும் கணினியில் அமர்ந்தேன். பகுதி 124ல் பீஷ்மரைக் கர்ணன் சந்தித்தான். இரண்டு மூன்று வரிகள் தாண்டுவதற்குள் கர்ணன் பேசும் ஒரு வசனம் மனத்தை கனக்கச் செய்தது. 8.30க்குப் பிள்ளைகளைப் பள்ளியில் விட வேண்டும். மொழிபெயர்ப்பதை நிறுத்தி எழுந்து சென்றேன். பள்ளிக்குச் சென்று திரும்பும் வழியெங்கும் கர்ணனே மனமுழுவதும் நிறைந்திருந்தான். பள்ளியில் இருந்து திரும்பியதும் மொழிபெயர்ப்பைத் தொடராமல், அந்தப் பகுதி முழுவதையும் ஆங்கிலத்தில் படித்தேன். அந்தக் காலத்து மனிதர்களின் பண்புகளை எண்ணி எண்ணி வியந்தேன். சரி மொழிபெயர்க்க ஆரம்பிக்கலாம் என்று நினைத்த போது, வாசலில் நண்பர் சீனிவாசன் ஓர் அவசர வேலையுடன் வந்திருந்தார். ஒரு கல்லூரியின் பிராஸ்பெக்டஸ் வடிவமைப்பைச் செய்வதற்கு வந்திருந்தார். “அர்ஜுனன் பிறந்த நாளில் பீஷ்ம பர்வத்தை முடிக்கக் கர்ணன் விடமாட்டான் போல, இன்னுமாடா உங்க பகை தொடருது” என்று நினைத்துக் கொண்டு வேண்டா வெறுப்பாக அலுவலகத்தைத் திறந்து கணினியில் அமர்ந்தேன்.

3, 4 விதங்களில் அந்த வடிவமைப்பைக் கேட்டார் நண்பர். சில ஐயங்களுக்காக, அவர் கல்லூரிக்குப் போன் செய்து பேசிக் கொண்டிருந்தபோது, வீட்டுக்கு வந்து அவசர அவசரமாகக் காலை உணவை உண்டுவிட்டு மீண்டும் அலுவலகம் சென்று {வீடும் அலுவலகமும் அருகருகில்தான்} வடிவமைப்பில் அமர்ந்தேன். நேரம் போனதே தெரியவில்லை. மதியம் மணி 2.30 இருக்கும். “வாங்கையா, வாங்க, நல்லவரே” என்று யாரையோ அழைத்தார் நண்பர் சீனிவாசன். “யாரது?” என்று திரும்பிப் பார்த்தேன். என் முகத்தின் அருகே நண்பர் ஜெயவேலன் அவர்கள் முகம் இருந்தது. “என்னங்க, திடீர்னு வந்திருக்கீங்க?” என்றேன். “பீஷ்ம பர்வம் முடிச்சிட்டீங்க போல!” என்றார். “இல்லங்க, வேல… அதான் முடியல” என்றேன். “சரி, சீக்கிரம் முடிங்க” என்று சொல்லித் தன் கையில் இருந்த கவரை என்னிடம் கொடுத்தார். கவரை வாங்கி வைத்துவிட்டு, வடிவமைப்பு வேலையையும் செய்து கொண்டே நண்பர்கள் இருவருடனும் பேசிக் கொண்டிருந்தேன்.

அன்று என் மனைவியின் தந்தையுடைய நினைவு நாள். அங்கும் நான் செல்ல வேண்டியிருந்தது. என் மனைவி காலையிலேயே சென்று விட்டாள். நண்பர்களை அலுவலகத்திலேயே இருத்திவிட்டு, பிள்ளைகளைப் பள்ளியில் இருந்து அழைத்து வந்தேன். பிறகு நண்பர் சீனிவாசனின் வடிவமைப்பு வேலைகளை முடித்துக் கொடுத்துவிட்டு, நண்பர் ஜெயவேலனையும் வழியனுப்பிவிட்டு, என் மாமியார் வீட்டுக்குச் சென்றேன். மீண்டும் வீடு திரும்பும்போது இரவு மணி 10.00 ஆகிவிட்டது. அதன் பிறகே இறுதிப் பகுதியை மொழிபெயர்த்து வலையேற்ற முடிந்தது. இந்த ஒரு பகுதி மட்டுமல்ல, பீஷ்ம பர்வத்தின் பெரும்பாலான பகுதிகள் இப்படித்தான் மொழிபெயர்க்கப்பட்டன. இன்று ஒரு பகுதியை மொழிபெயர்த்து வலையேற்றிவிட வேண்டும் என்று நினைத்தால், அது முடிவதற்கே ஒரு பெரும் போர் செய்ய வேண்டியதிருக்கும். ஆனாலும் பீஷ்ம பர்வம் நிறைவை எட்டிய போது ஏதோ இனம் புரியாத ஒரு மகிழ்ச்சி மனத்தில் பரவியது. அது போன்ற ஓர் உணர்வு யாருக்கும் எளிதில் கிட்டிவிடாது. பரமனின் கருணையை எண்ணி மகிழ்கிறேன்.

நண்பர் ஜெயவேலன் அவர்கள் கொடுத்த கவரை காலையில்தான் பிரித்தேன். எண்ணியது போலவே ரூ.12,400/- இருந்தது. ஒவ்வொரு பதிவையும் வலையேற்றியதும், அப்பதிவைத் திருத்தி அடுத்தநாளே அந்தப் பதிவைக் குறித்துப் பின்னூட்டம் தரும் திரு.ஜெயவேலன் அவர்கள் பிப்ரவரி 1, 2016 அன்று நாடு முழுவதும் உடல் மற்றும் உறுப்புத் தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கையில் விழிப்புணர்வு பதாகைகளுடன் இரு சக்கர வாகனத்தில் தன் பயணத்தை ஆரம்பித்தார். தங்க நாற்கரச்சாலையில் 10,300 கி.மீ. கொண்ட தன் பிரச்சாரப்பயணத்தை மார்ச் 4 அன்று நிறைவு செய்தார். நண்பர் ஜெயவேலன் அவர்களின் 10000 கிமீ இருசக்கர வாகன பயணத்தின் வாயிலாக உடல் மற்றும் உறுப்புத் தானம் விழிப்புணர்வு குறித்த நிகழ்வுகளை காண கீழ்கண்ட லிங்கிற்குச் செல்லலாம்:

https://www.facebook.com/10000-km-Bike-Ride-to-spread-Awareness-of-Organs-and-Body-Donation-1520691041594782/

அவர் இல்லாத அந்த 33 நாட்களும் கண்களை இழந்த குருடன் நிலையாகவே எனக்கு இருந்தது. பயணத்தில் இருந்து திரும்பி ஒன்றிரண்டு நாட்களுக்குள் அவர் திருத்தாதிருந்த 33 பகுதிகளையும் திருத்தி விட்டார். இப்படி முழுமஹாபாரதம் வளர்வதில் அவரது பங்கும், அவரது மனைவி தேவகி ஜெயவேலன் அவர்களது பங்கும் மிகப் பெரியது.

ஆதிபர்வம் இன்னும் வெளிவரவில்லையே ஏன்?

அச்சிடப்போகிறோம் என்று அறிவித்த உடனேயே, முடிந்தவரை சொற்பிழைகள் அனைத்தையும் நீக்கி, அச்சக நண்பர் சீனிவாசன் அவர்களிடம் அச்சேற்றிவிடும்படி கோப்பினைக் கொடுத்தும் விட்டேன். பிறகு தான், இப்போது மொழிபெயர்க்கும் பர்வங்களில் உள்ளது போல ஆதிபர்வத்தில் ஒவ்வொரு பகுதியின் சுருக்கங்களும் இல்லை என்பது நினைவுக்கு வந்தது. எனவே, புத்தகத்தை அச்சிட வேண்டாம் என்று நண்பரிடம் சொல்லி, ஒவ்வொரு பகுதிக்கு முன்பும் அந்தந்தப் பகுதியின் சுருக்கங்களைச் சேர்த்தேன். கிட்டத்தட்ட அதையும் முடிக்கும் சமயத்தில் விஜயசாரதி என்றொரு நண்பர் அறிமுகமானார். அவர் குழந்தைகளுக்கான மகாபாரதத்தை எழுதி வருகிறார். அதில் சில பக்கங்களையும் நான் கண்டேன். குழந்தையோடு குழந்தையாக அமர்ந்து கதை சொல்வது போல நேர்த்தியான நடையில் எழுதியிருந்தார். பிற்காலத்தில் அஃது ஒரு பெரிய படைப்பாக நிச்சயம் அறியப்படும். அப்படிப்பட்ட அவர் நம் மஹாபாரதத்தை படிக்க நேர்ந்தவிதத்தைச் சொல்லிப் பாராட்டி, “ஆதிபர்வம் அச்சிடப் போகிறீர்களா?” என்றும் கேட்டார். நான், “ஆம்” என்றதும். “ஆதிபர்வத்தின் ஆரம்பப் பகுதிகளில் ஆங்காங்கே சில வரிகள் விடுபட்டிருக்கின்றன, அதைச் சரி செய்த பிறகு அச்சுக்குச் செல்லுங்கள்” என்று சொன்னார். “மீண்டும் ஒவ்வொரு வரியையும் சரிபார்ப்பது எனக்கு மிகப் பெரிய வேலையாக இருக்கும். அதனால் பீஷ்ம பர்வம் மற்றும் பிற பர்வங்களின் மொழிபெயர்ப்பும் பாதிக்கப்படும்” என்று நான் சொன்னேன். “நானே சரி பார்த்து, ஒவ்வொரு பகுதியாக உங்களுக்கு அனுப்புகிறேன்” என்றார் அவர். நானும் சம்மதித்தேன். இதுவரை ஆதிபர்வத்தில் 56 பகுதிகளை அனுப்பியிருக்கிறார். அவர் சுட்டிக் காட்டும் இடங்களைச் சரி பார்த்து மீண்டும் திருத்தி வருகிறேன். அவரது புண்ணியத்தால், வாசகர்கள் எளிதாகப் புரிந்து கொள்வதற்கு ஏதுவாகப் புதிய அடிக்குறிப்புகளையும் சேர்க்க முடிகிறது. வேறு புத்தகங்களையும் மேற்கோளில் சேர்க்க முடிகிறது. இந்தத் திருத்தங்கள் முடிந்ததும் அச்சுக்குச் செல்ல வேண்டியதுதான். பார்ப்போம், உத்தரவு மேலிருந்தல்லவா வர வேண்டும்! காத்திருப்போம்.

பாண்டிச்சேரி "முகநூல் நண்பர்கள் சந்திப்பு"

2016, ஜனவரி 30 அன்று, முகநூல் நண்பர் திரு.நாராயணன் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த "முகநூல் நண்பர்கள் சந்திப்புக் கூட்டம்" புதுவையில் நடைபெற்றது. புதிய நண்பர்கள் பலரைப் பெற முடிந்தது. முகநூல் நண்பர்கள் கூட்டத்திற்கு முன்மாதிரியான கூட்டமாக அது அமைந்தது. நிகழ்வில் பேசிய அனைவரும் அருமையாகப் பேசினார்கள். திடீரென என்னையும் பேச அழைத்துவிட்டார் நாராயணன் அவர்கள். தயார் செய்து பேசினாலே நான் பயங்கரமாகப் பேசுவேன். இப்போது தயாரிப்பில்லாமல் பேசவேண்டும். ஏதோ பேசி சமாளித்துவிட்டேன். "திராவிட மாயை" சுப்பு மணியன் அவர்களைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பும் கிடைத்தது. நண்பர் முத்துமாணிக்கத்தின் உரை நெகிழ்வை ஏற்படுத்தியது. அனுபமா ரெட்டி என்றொரு நண்பர் உணர்வுப் பூர்வமாகப் பேசினார். காவல்துறையைச் சேர்ந்த ஒரு பெண்மணியும் அருமையாகப் பேசினார். யோகானந்த் ராமலிங்கம் அவர்கள் நிகழ்வை அருமையாகத் தொகுத்து வழங்கினார். இடையிடையே சுப்பு அவர்களின் நகைச்சுவை கலந்த அனுபவ உரைகளும் அருமையாக இருந்தது. மொத்தத்தில் அன்றைய நிகழ்வு மனத்துக்கு நிறைவை அளித்தது. என்னுடன் நண்பர் சீனிவாசனும் வந்திருந்தார். அந்நிகழ்வு முடிந்ததும் நாங்கள் இருவரும் வடலூர் சென்று வள்ளலாரின் சபையைத் தரிசித்துவிட்டு சென்னை திரும்பினோம்.

ஆடியோ பதிவுகளின் வேலைகளும் நடந்து கொண்டிருக்கின்றன. நண்பர் தேவகி ஜெயவேலன் அவர்கள் அதைச் செய்து கொண்டிருக்கிறார். ஆதி பர்வம் முதல் 21 பகுதிகளும், விராட பர்வம் முழுமையாக 72 பகுதிகளும், உத்யோக பர்வம் முழுமையாக 199 பகுதிகளும், பீஷ்ம பர்வம் முதல் 50 பகுதிகளும் நிறைவு செய்திருக்கிறார். அலுவலகப் பணி, வீட்டுப் பணி, ரோட்டரி சங்கப் பணி, ரோட்டராக்ட் சங்கப் பணி, மஹாபாரத ஆடியோ பணி எனச் சுழன்று சுழன்று வேலை செய்து வருகிறார். அவரது உழைப்புப் பிரமிப்பைத் தருகிறது.

விவாத மேடையில் நண்பர் தாமரைச் செல்வன் அவர்கள் பெரும் ஆய்வுகளை அப்போதைக்கப்போது தந்து கொண்டே இருக்கிறார். மேலும் வாசகர்களின் கேள்விகளுக்கும் அவரே பதிலளித்து வருகிறார். சில வேளைகளில் என் மின்னஞ்சலுக்கு வரும் சில கேள்விகளையும் அவருக்கே நான் அனுப்பி விடுவதுமுண்டு. மஹாபாரதத்தில் தெளிந்த ஞானம் கொண்டவர் அவர்.

நண்பர் செல்வராஜ் ஜெகன் அவர்கள் வழக்கம்போபவே ஒவ்வொரு 50 பகுதி நிறைவின் போதும், வலைத்தளத்தில் உள்ள பகுதிகளை வேர்ட் கோப்பில் சேகரித்து அனுப்பித் தருகிறார். சில வேளையில் நான் வலைத்தளத்தில் பல திருத்தங்களைச் செய்திருப்பேன், எனவே அவரை அப்பகுதிகளை மீண்டும் எடுத்துத் தரச் சொல்வேன். நான் கேட்ட போதெல்லாம் சலிக்காமல் அதைச் செய்து தந்திருக்கிறார்.

மஹாபாரதத்தின் மூலம் மற்றொரு நண்பரும் எனக்கு அறிமுகமானர். அவர் பெயர் வெற்றிவேல். வயதில் மிகவும் இளையவர். மூர்த்திச் சிறிதாயினும் கீர்த்திப் பெரிது என்பது போல 24 வயதிற்குள்ளாகவே பெரும் காரியங்களைச் செய்து வருகிறார். கரிகாலன் சம்பந்தமான ஒரு சரித்திர நாவலை எழுதி முடித்துள்ளார். “வானவல்லி” என்ற தலைப்பில் நான்கு பாகங்களில் அதை எழுதியிருக்கிறார். குறைந்தது 2000 பக்கங்கள் இருக்கும் என நினைக்கிறேன். அவரது நாவல் வெளிவருவதற்கு முன்பே, அதைப் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மயிலை சீனி.வேங்கடசாமி அவர்களின் தாக்கம் இவரிடம் அதிகம் இருக்கிறது. அந்நாவல் முழுவதையும் வேறு தடையில்லாமல் என்னால் ரசித்துப் படிக்க முடிந்தது. நல்ல வேகமான நடையும் கூட… பிற்காலத்தில் இந்நண்பர் பெரிய எழுத்தாளராக வர வாய்ப்பிருக்கிறது.

இப்படி நண்பர்கள் பலரையும் மஹாபாரதம் எனக்கு அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறது. அடுத்து துரோண பர்வம்… இன்று ஹோலிப் பண்டிகை இதோ அதற்குள் நுழைகிறேன்…. வழக்கமாகத் திரௌபதி சிரிப்பாள், பீஷ்ம பர்வத்தில் கர்ணன் சிரித்தான். வரப்போகும் துரோண மற்றும் கர்ண பர்வங்களிலும் அவனே சிரிப்பான் என நினைக்கிறேன்.

நன்றி

அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
திருவொற்றியூர்
24.03.2016

பின்குறிப்பு: இப்பதிவில், பாண்டிச்சேரியில் நண்பர் திரு நாராயணன் அவர்களின் ஏற்பாட்டின் பேரில் நிகழ்ந்த முகநூல் நண்பர்கள் கூடுகையைப் பதிய நான் மறந்துவிட்டேன். துரோண பர்வம் பகுதி 1-ஐ மொழிபெயர்த்து வலையேற்றிய பிறகு உறங்கச் சென்றேன். அதிகாலையில் ஒரு கனவு...

நான் என் வீட்டைவிட்டு வெளியே வருகிறேன் {கனவில்தான்}. சற்றுத் தொலைவில் புதுவையில் நான் சந்தித்திருந்த திரு.முத்துமாணிக்கம் அவர்கள் நின்று கொண்டிருக்கிறார். அந்தக் கூட்டத்தில் அவர் ஆற்றிய வெளிப்படையான உரையைக் கேட்டு நெகிழ்ந்திருந்தேன். இவர் ஏன் இங்கு நிற்கிறார். ஒரு வேளை நம்மைத் தேடித்தான் வந்திருக்கிறாரோ என்று எண்ணி அவரை நோக்கிக் கையசைத்தவாறே நடந்து சென்றேன். அவருடன் ஒரு நண்பரும் இருந்தார். அவர் புகைப்பிடித்துக் கொண்டிருந்தார். முத்துமாணிக்கத்தின் நண்பர் புகைப்பிடிக்கிறாரா? பரவாயில்லை அது அவரவர் விருப்பம்தானே என்றெண்ணி ஓடிச் சென்று அவரது கைகளைப் பிடித்துக் கொண்டு வீட்டுக்கு வாருங்கள் என்று அழைத்தேன். திடீரெனச் சூழல் மாறுகிறது. பொழுது இருட்டிவிட்டது. இருட்டு என்றால் அப்படியொரு மையிருட்டு. என் வீட்டை நோக்கி நாங்கள் நடக்க எத்தனிக்கையில் எங்களை நோக்கி ஒரு மங்கை நடந்து வருகிறாள். சிவப்பு நிறப் பட்டுடுத்தியிருக்கிறாள், நீல நிற இரவிக்கையணிந்திருக்கிறாள். அவள் எங்களை நெருங்கி வந்து கொண்டிருக்கிறாள். அருகில் வரும்போதுதான் தெரிகிறது அவள் தன் கூந்தலை முன்னே தொங்கவிட்டபடி நடந்துவருகிறாள். நெஞ்சில் திக் என்று இருக்கிறது. யார் இந்தப் பெண் என்று மனம் நினைத்தாலும், அச்சத்தில் அந்தப் பெண்ணுக்கு விலகி வழி அளிக்கிறேன். அப்படியே காட்சி மறைகிறது.

திடீரென வேறொரு காட்சி நானும் என் தம்பிகளில் ஒருவரும் ஒரு இடத்தில் நின்றிருக்கிறோம். எங்களுக்கு முன்பு ஒரு அகழி இருக்கிறது. அகழியைத் தாண்டி பூங்கா போன்ற ஒரு பகுதி இருக்கிறது. அந்த இடம் அவ்வளவு அழகாக இருக்கிறது. அப்படியே அந்தக் காட்சியில் லயித்துக் கொண்டிருக்கும்போது அந்தப் பக்கத்தில் ஒரு பெரும் மனிதன் வருகிறான். பெரும் மனிதன் என்றால் 6 அடி 7 அடி மனிதனல்ல; அதையும் விட மிகப் பெரும் மனிதன். அவன் அகழியை நோக்கித் தான் நடந்து வருகிறான். அழகாகத் தெரிகிறான். அவன் முகத்தைப் பார்க்கிறேன். அவனுக்குக் கருவிழிகளில்லை. கண்கள் முழுவதும் வெள்ளையாக இருக்கின்றன. என்னடா இது என்று நினைத்துக் கொண்டிருக்கையில்தான் அவனுக்கு இரண்டு பக்கத்திலும் மற்றும் இரண்டு முகங்கள் இருப்பதைக் காண்கிறேன். அவனது தாடி மீசை ஆகியவற்றோடு சேர்த்துப் பார்க்கையில் சிங்கம் போன்ற முகமாகத் தெரிகிறது. நான் "ஆ" என்று அலறிக் கொண்டே, ஆர்கிமீடிஸ் போல "நான் பாத்துட்டேன், நான் பாத்துட்டேன்" என்று கதறுகிறேன். அதுவரை என்னைக் கவனியாத அம்மனிதன் என்னை நோக்கித் திரும்புகிறான். என் இதயம் கிலி கொள்கிறது. அருகில் இருந்த என் தம்பியையும் மறந்துவிட்டு அச்சத்தால் "ஆ" என்று அலறியபடியே தலைதெறிக்க ஓடுகிறேன். ஓடுகிறேன் ஓடுகிறேன் எவ்வளவு தூரம் என்பது தெரியவில்லை. பிறகு ஒரு வீட்டிற்குள் செல்கிறேன். அவ்வீடு எனக்குத் தெரிந்தவர்கள் யாரோ ஒருவருடைய வீடு என எண்ணுகிறேன். மூச்சுவாங்குகிறது. நான் நிர்வாணமாக இருப்பதை உணர்கிறேன். அங்கே கொடியில் தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு வேட்டியை எடுத்து உடுத்துகிறேன். கனவு கலைந்து வியர்த்து எழுகிறேன். எப்பா, என்ன கனவு இது?

பிறகு தான் பாண்டிச்சேரி நிகழ்வு நினைவுக்கு வந்து மேலுள்ள பதிவில் திருத்தியிருக்கிறேன். 27.03.2016