Saturday, March 26, 2016

கர்ணனை நினைத்த கௌரவர்கள்! - துரோண பர்வம் பகுதி – 001

Kauravas remembered Karna! | Drona-Parva-Section-001 | Mahabharata In Tamil

(துரோணாபிஷேக பர்வம் – 01)

பதிவின் சுருக்கம் : கௌரவர்களின் நிலை குறித்து வினவிய ஜனமேஜயன்; பதிலளித்த வைசம்பாயனர்; கௌரவர்களின் செயல்பாடுகளை விவரித்த சஞ்சயன்; கர்ணனின் சூளுரை; கர்ணனை அழைத்த கௌரவர்கள்; திருதராஷ்டிரன் கேள்வி…

ஓம்! நாராயணனையும், மனிதர்களில் மேன்மையான {புருஷோத்தமனான} நரனையும், சரஸ்வதி தேவியையும் பணிந்து ஜெயம் என்ற சொல் {மஹாபாரதம் என்ற இதிகாசம்} சொல்லப்பட வேண்டும். {இங்கு ஜெயம் என்று குறிப்பிடப்படுவது - அதர்மத்தை தர்மம் வென்ற கௌரவ மற்றும் பாண்டவர்களின் கதையே ஆகும்}.


{விசித்திரவீரயன் மகன் பாண்டு. பாண்டு மகன் அர்ஜுனன். அர்ஜுனன் மகன் அபிமன்யு. அபிமன்யு மகன் பரிக்ஷித்.பரிக்ஷித் மகன் ஜனமேஜயன். அந்த ஜனமேஜயன் நடத்திய நாகயாகத்தின் போது, ஜனமேஜயன் கேட்டுக் கொண்டதற்கிணங்க வியாசரின் முன்னிலையிலேயே வியாசரின் சீடரான வைசம்பாயனர் உரைத்ததே இந்த மகாபாரதம். வைசம்பாயனர் உரைத்ததைக் கேட்ட "சௌதி"யே தற்போது நைமிசாரண்யத்தில் மகாபாரதத்தை விவரிக்கிறார். அதில் வரும் போர்காட்சிகளை திருதராஷ்டிரனிடம் சஞ்சயன் சொல்லும் பகுதியில் வருவதே இந்த துரோணப் பர்வம்...}

ஜனமேஜயன் {வியாசரின் சீடரான வைசம்பாயனரிடம்} , "ஓ! மறுபிறப்பாள முனிவரே {பிராமண முனிவரே வைசம்பாயனரே}, ஒப்பற்ற வீரமும், பலமும், வலிமையும், சக்தியும், ஆற்றலும் கொண்ட தனது தந்தையான தேவவிரதர் {பீஷ்மர்}, பாஞ்சாலர்களின் இளவரசனான சிகண்டியால் கொல்லப்பட்டதைக் கேட்டுக் கண்ணீரால் குளித்த கண்களுடன் கூடிய வலிமைமிக்க மன்னன் திருதராஷ்டிரர் உண்மையில் என்ன செய்தார்? ஓ! சிறப்புமிக்கவரே {வைசம்பாயனரே}, பீஷ்மர், துரோணர் மற்றும் பிற பெரும் தேர்வீரர்களின் மூலம், வலிமைமிக்க வில்லாளிகளான பாண்டுவின் மகன்களை வீழ்த்தி அரசுரிமையைப் பெற விரும்பினான் அவரது மகன் (துரியோதனன்). ஓ! தவத்தைச் செல்வமாகக் கொண்டவரே {வைசம்பாயனரே}, வில்லாளிகள் அனைவரின் அந்தத் தலைவர் {பீஷ்மர்} கொல்லப்பட்ட பிறகு, அந்தக் குரு குலத்தோன் {துரியோதனன்} செய்த அனைத்தையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான் {ஜனமேஜயன்}.



வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “தன் தந்தை {பீஷ்மர்} கொல்லப்பட்டதைக் கேட்ட குரு குலத்தின் மன்னன் திருதராஷ்டிரன், கவலை மற்றும் துயரத்தால் நிறைந்து மன அமைதியை அடைந்தானில்லை. அக்கவலையால், அந்தக் குரு குலத்தோன் {திருதராஷ்டிரன்} இவ்வாறு வருந்திக் கொண்டிருந்தபோது, தூய ஆன்மா கொண்ட {தேரோட்டி}கவல்கணன் மகன் {சஞ்சயன்} மீண்டும் அவனிடம் {திருதராஷ்டிரனிடம்} வந்தான். பிறகு, ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, அம்பிகையின் மகனான திருதராஷ்டிரன், அவ்விரவில் {குருக்ஷேத்திர} முகாமில் இருந்து யானையின் பெயரால் அழைக்கப்படும் நகரத்திற்கு {ஹஸ்தினாபுரத்திற்கு} திரும்பியிருந்த சஞ்சயனிடம் பேசினான். பீஷ்மரின் வீழ்ச்சியைக் கேட்டதன் விளைவால் உற்சாகமற்ற இதயத்துடனும், தன் மகன்களின் வெற்றியை விரும்பியும், பெருந்துயரத்துடனும் அவன் {திருதராஷ்டிரன்} இப்புலம்பல்களில் ஈடுபட்டான் {இவ்வாறு புலம்பினான்}.

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “பயங்கர ஆற்றலைப் படைத்த உயர் ஆன்ம பீஷ்மருக்காக அழுத பிறகு, ஓ! மகனே {சஞ்சயா}, விதியால் உந்தப்பட்ட கௌவர்கள் அடுத்ததாக என்ன செய்தனர்? வெல்லப்பட முடியாத அந்த உயர் ஆன்ம வீரர் {பீஷ்மர்} கொல்லப்பட்டதும், துன்பக்கடலில் மூழ்கியிருந்த அந்தக் கௌரவர்கள் உண்மையில் என்ன செய்தனர்? ஓ! சஞ்சயா, பெருகியிருந்ததும், உயர் திறம் பெற்றதுமான அந்த உயர் ஆன்ம பாண்டவர்களின் படை, உண்மையில் மூவுலகங்களுக்கும் கூரிய {கூர்மையான} அச்சத்தைத் தூண்டவே செய்யும். எனவே, ஓ! சஞ்சயா, அந்தக் குரு குலத்துக் காளையான தேவவிரதர் {பீஷ்மர்} வீழ்ந்ததும், ({அங்கே} கூடியிருந்த) மன்னர்கள் என்ன செய்தனர் என்பதை எனக்குச் சொல்வாயாக” என்றான் {திருதராஷ்டிரன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் தேவவிரதர் கொல்லப்பட்டதும் உமது மகன்கள் என்ன செய்தனர் என்பதை நான் சொல்லும்போதே சிதறாத கவனத்துடன் கேட்பீராக.

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றல் கொண்ட பீஷ்மர் கொல்லப்பட்டதும், உமது வீரர்கள் மற்றும் பாண்டவர்கள் ஆகிய இரு தரப்பினரும் (நிலைமையைக் குறித்து) தனித்தனியே சிந்திக்கலாயினர். க்ஷத்திரிய வகையின் கடமைகளை நினைவுகூர்ந்த அவர்கள் {இரு தரப்பினரும்}, ஆச்சரியத்தாலும், இன்பத்தாலும் நிறைந்தனர்; ஆனாலும், தங்கள் {க்ஷத்திரிய} வகையின் கடமைகளின் படி நடக்கும் அவர்கள் அனைவரும், அந்த உயர் ஆன்ம வீரரை {பீஷ்மரை} வணங்கினர். பிறகு அந்த மனிதர்களில் புலிகள், அளவிலா ஆற்றலைக் கொண்ட பீஷ்மருக்காக நேரான கணைகளால் ஆன தலையணையும், படுக்கையும் அமைத்தனர். பீஷ்மரின் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளைச் செய்து விட்டு, தங்களுக்குள் (இனிய விவாதங்களால்) பேசிக்கொண்டனர். பிறகு கங்கையின் மைந்தரிடம் {பீஷ்மரிடம்} விடை பெற்றுக் கொண்டு, அவரை வலம் வந்து, கோபத்தால் சிவந்த கண்களுடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்ட அந்த க்ஷத்திரியர்கள், விதியால் உந்தப்பட்டு மீண்டும் ஒருவரை எதிர்த்து ஒருவர் போரிட்டனர்.

பிறகு, உமது படையின் பிரிவுகளும், பகைவருடையவையும் எக்காளங்களின் முழக்கத்தோடும், பேரிகையொலிகளோடும் வெளியே அணிவகுத்து வந்தன. கங்கை மைந்தரின் {பீஷ்மரின்} வீழ்ச்சிக்குப் பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நாளின் சிறந்த பகுதி கடந்த போது, கோபத்தின் ஆதிக்கத்திற்கு வசப்பட்டவர்களும், விதியால் இதயம் பீடிக்கப்பட்டவர்களும், உயர் ஆன்ம பீஷ்மரின் ஏற்கத்தகுந்த வார்த்தைகளை அலட்சியம் செய்தவர்களுமான அந்தப் பாரதக் குலத்தின் முதன்மையானோர் ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு பெரும் வேகத்தோடு வெளியே சென்றனர்.

உமது மற்றும் உமது மகனின் மூடத்தனங்களின் விளைவாலும், சந்தனு மகனின் {பீஷ்மரின்} படுகொலையாலும், மன்னர்கள் அனைவருடன் கூடிய கௌரவர்கள் காலனால் அழைக்கப்பட்டவர்கள் போலவே தெரிந்தனர். தேவவிரதரை {பீஷ்மரை} இழந்த கௌரவர்கள், பெரும் துயரத்தால் நிறைந்து, இரை தேடும் விலங்குகள் நிறைந்த கானகத்தில், மந்தையாளன் இல்லாத வெள்ளாடு மற்றும் செம்மறியாடுகளின் மந்தைகளைப் போலத் தெரிந்தனர்.

உண்மையில், அந்தப் பாரதக் குல முதன்மையானவரின் {பீஷ்மரின்} வீழ்ச்சிக்குப் பிறகு, விண்மீன்களற்ற ஆகாயம் போலவோ, காற்றில்லாத வானம் போலவோ, பயிர்களற்ற பூமி போலவோ, தூய இலக்கணமில்லாத சிதைந்த உரையைப் போலவோ [1], பழங்காலத்தில் பலிக்குப் {பலிச்சக்கரவர்த்திக்குப்} பிறகு தாக்குதலுக்குட்படுத்தப்பட்டு, வீழ்த்தப்பட்ட அசுரப்படையைப் போலவோ, கணவனை இழந்த அழகிய காரிகையைப் போலவோ [2], நீர் வற்றிய ஆற்றைப் போலவோ, தன் துணையை இழந்து, காட்டில் ஓநாய்களால் சூழப்பட்ட பெண்மானைப் போலவோ, சரபத்தால் [3] கொல்லப்பட்ட சிங்கத்துடன் கூடிய பெரிய மலைக்குகையைப் போலவோ அந்தக் குரு படை தெரிந்தது. உண்மையில், ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, கங்கை மைந்தரின் {பீஷ்மரின்} வீழ்ச்சிக்குப்பிறகு, பாரதப் படையானது, கடலின் நடுவில் அனைத்துப் புறங்களிலும் வீசும் பெருங்காற்றால் புரட்டப்படும் சிறு படகைப் போல இருந்தது.

[1] அதாவது, தூய்மையற்ற கோவைகளுடன் கூடிய உரையைப் போன்றது எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[2] கைம்மையால் {கைம்பெண் நிலையால்} ஆடைகள் மற்றும் ஆபரணங்களை இழந்த பெண் போலவோ எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[3] சரபம் என்பது, எட்டுக் கால்களைக் கொண்டதும், சிங்கத்தைவிட வலுவானதுமான ஓர் அற்புதமான விலங்காக இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

வலிமைமிக்கவர்களும், தப்பாத குறி கொண்டவர்களுமான வீரப் பாண்டவர்களால் பெரிதும் பீடிக்கப்பட்ட அந்தக் கௌரவப் படை, கலங்கியிருந்த அதன் குதிரைகள், தேர்வீரர்கள் மற்றும் யானைகளுடன், ஆதரவற்றுப் பீதியடைந்து மிகவும் கலக்கமுற்றிருந்தது. அச்சமடைந்திருந்த மன்னர்களும், சாதாரணப் படைவீரர்களும், தேவவிரதரை {பீஷ்மரை} இழந்த அந்தப் படையில், அதற்கு மேலும் ஒருவரையொருவர் நம்பாமல் உலகத்தின் பாதாள லோகத்திற்கு மூழ்குவதாகத் தெரிந்தது.

பிறகு அந்தக் கௌரவர்கள், தேவவிரதருக்கு {பீஷ்மருக்கு} இணையான கர்ணனை உண்மையில் நினைவுகூர்ந்தனர். ஆயுதங்களைத் தாங்குவோர் அனைவரிலும் முதன்மையானவனும், (கல்வி மற்றும் தவத் துறவுகளில்) விருந்தினன் போல ஒளிர்பவனுமான அவனிடம் {கர்ணனிடம்} அனைவரின் இதயங்களும் திரும்பின. துயரைக் களைய இயன்ற நண்பன் ஒருவனை நோக்கித் துன்பத்தில் இருக்கும் ஒரு மனிதன் திரும்புவதைப் போல, அனைத்து இதயங்களும் அவனை {கர்ணனை} நோக்கித் திரும்பின.

மேலும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்த மன்னர்கள், “கர்ணா! கர்ணா!” என்று கூச்சலிட்டுக் கொண்டே, “நமது நண்பனும், சூதனின் மகனுமான அந்த ராதையின் மகன் {கர்ணன்} போரில் உயிரை விட எப்போதும் தயாராக இருப்பவனாவான். பெரும் புகழைக் கொண்ட கர்ணன், தன் தொண்டர்களுடனும், நண்பர்களுடனும் சேர்ந்து இந்தப் பத்து நாட்களும் போரிடாதிருந்தான். ஓ! அவனை விரைவாக அழைப்பீராக” என்றனர் [4].

[4] வேறொரு பதிப்பில் இந்தப் பத்தி வேறு மாதிரியாக இருக்கிறது, “அங்கிருந்த மன்னர்கள், நமக்கு நன்மை செய்பவனும், உயிரைவிடத் துணிந்தவனும், சூதனின் மகனுமான ராதேயனைக் குறித்து, “கர்ணா! கர்ணா” என்று அழைத்தனர். பெரும் புகழ் கொண்டவனான அந்தக் கர்ணன் தன் மந்திரிகளுடனும், நண்பர்களுடனும் அப்போது பத்து நாட்கள் வரையில் போரிடாமலேயே இருந்து படையை மட்டும் (போரில்) ஏவி கொண்டிருந்தான்” என்று அஃதில் இருக்கிறது. “படையை மட்டுமே ஏவிக்கொண்டிருந்தான்” என்பது வேறு பாடம் என்றும் அஃதில் அடிக்குறிப்பிருக்கிறது.

மனிதர்களில் காளையான அவன் {கர்ணன்}, இரண்டு மகாரதர்களுக்கு இணையானவனாக இருந்தாலும், க்ஷத்திரியர்கள் அனைவரின் முன்னிலையில் வீரமும் வலிமையும் மிக்கத் தேர்வீரர்களைக் குறிப்பிட்டுக் கொண்டிருந்தபோது, பீஷ்மரால் அர்த்த ரதன் {தேர்வீரர்களில் பாதித் திறன் கொண்டவன்} என்று வலிய கரங்களைக் கொண்ட அந்த வீரன் {கர்ணன்} வகுக்கப்பட்டான். (ரதர்கள் மற்றும் அதிரதர்கள் அனைவரிலும்) முதன்மையான அவன் {கர்ணன்}, வீரர்கள் அனைவராலும் மதிக்கப்படும் அவன் {கர்ணன்}, யமன், குபேரன், வருணன், இந்திரன் ஆகியோரோடும் போரிடத் துணிந்தவனான அவன் {கர்ணன்}, ரதர்கள், அதிரதர்கள் ஆகியோர் எண்ணப்பட்டபோதும் இப்படியே {பீஷ்மரால் அர்த்த ரதன் என்று} வகுக்கப்பட்டான்.

இதனால் ஏற்பட்ட கோபத்தால் அவன் {கர்ணன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கங்கையின் மைந்தரிடம் {பீஷ்மரிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்: “ஓ! குரு குலத்தவரே {பீஷ்மரே}, நீர் வாழும் காலம் வரை, நான் போரிடேன்! எனினும், பெரும்போரில் பாண்டுவின் மகன்களைக் கொல்வதில் நீர் வென்றால், ஓ! கௌரவரே {பீஷ்மரே}, துரியோதனனின் அனுமதியுடன் நான் காடுகளில் ஓயச் செல்வேன். மறுபுறம், ஓ! பீஷ்மரே, பாண்டவர்களால் கொல்லப்பட்டு நீர் சொர்க்கத்தை அடைந்தாலோ, அதன் பிறகு, தனித்தேரில் செல்லும் நான், பெரும் தேர்வீரர்களாக உம்மால் கருதப்படும் அவர்கள் {பாண்டவர்கள்} அனைவரையும் கொல்வேன்” {என்றான் கர்ணன்}. பெரும் புகழையும் வலிய கரங்களையும் கொண்ட கர்ணன், இதைச் சொல்லிவிட்டு, உமது மகனின் {துரியோதனனின்} அனுமதியுடன் முதல் பத்து நாட்கள் போரிடாதிருந்தான்.

ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, போரில் பெரும் ஆற்றலும் அளவிலா வலிமையும் கொண்டவரான பீஷ்மர், யுதிஷ்டிரனின் படை வீரர்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்களைக் கொன்றார். எனினும், குறி தவறாதவரும், பெரும் சக்தி கொண்டவருமான அந்த வீரர் {பீஷ்மர்} கொல்லப்பட்ட போது, ஆற்றைக் கடக்க விரும்புபவர்கள் படகை நினைப்பதைப் போல, உமது மகன்களும் கர்ணனை நினைத்தனர். உமது வீரர்களும், உமது மகன்களும் மன்னர்கள் அனைவருடன் சேர்ந்து கொண்டு “கர்ணா!” என்று கூச்சலிட்டனர். மேலும் அவர்கள் அனைவரும், “உன் ஆற்றலை வெளிப்படுத்துவதற்கான நேரம் இதுவே” என்றனர்.

ஜமதக்னியின் மகனிடம் {பரசுராமரிடம்} இருந்து ஆயுதங்களின் அறிவைப் பெற்றவனும், தடுக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனுமான கர்ணனை நோக்கி எங்கள் இதயங்கள் திரும்பின. உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் ஆபத்துகளில் இருந்து தேவர்களைக் காக்கும் கோவிந்தனை {கிருஷ்ணனைப்} போலவே, பெரும் ஆபத்துகளில் இருந்து நம்மைப் பாதுகாக்க வல்லவன் அவனே {கர்ணனே}” {என்றான் சஞ்சயன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இப்படி மீண்டும் மீண்டும் கர்ணனைப் புகழ்ந்து கொண்டிருந்த சஞ்சயனிடம், பெரும்பாம்பொன்றைப் போலப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்த திருதராஷ்டிரன் இவ்வார்த்தைகளைச் சொன்னான்.

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “நீங்கள் அனைவரும் சூத சாதியைச் சேர்ந்த வீரனான ராதையின் மகனை {கர்ணனைப்} போரில் தன் உயிரையும் விடத் தயாராக இருந்தவனாகக் கண்டதால் உங்கள் அனைவரின் இதயங்களும் விகர்த்தனன் மகனான கர்ணனை நோக்கித் திரும்பின [என்று நான் புரிந்து கொள்கிறேன்]. கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்ட அந்த வீரன் {கர்ணன்}, ஆபத்தில் இருந்து விடுபட விரும்பியவர்களும், அச்சம் மற்றும் துயரால் பீடிக்கப்பட்டவர்களுமான துரியோதனன் மற்றும் அவனது தம்பிகளின் எதிர்பார்ப்புகளைப் பொய்யாக்கவில்லை என நான் நம்புகிறேன். கௌரவர்களின் புகலிடமாக இருந்த பீஷ்மர் கொல்லப்பட்ட போது, வில்லாளிகளில் முதன்மையான கர்ணனால் {பீஷ்மரை இழந்ததால் ஏற்பட்ட} அந்த இடைவெளியை நிரப்புவதில் வெல்ல முடிந்ததா? அந்த இடைவெளியை நிரப்பினாலும், கர்ணனால் எதிரியை அச்சத்தால் நிரப்ப முடிந்ததா? வெற்றி குறித்த என் மகன்களின் நம்பிக்கைகளுக்குக் கனிகளை {பலன்களைக்} கொண்டு அவனால் {கர்ணனால்} மகுடம் சூட்ட முடியுமா?” {என்று கேட்டான் திருதராஷ்டிரன்}.


ஆங்கிலத்தில் | In English