Drona became the commander! | Drona-Parva-Section-007 | Mahabharata In Tamil
(துரோணாபிஷேக பர்வம் – 07)
பதிவின் சுருக்கம் : திருஷ்டத்யும்னனைத் தன்னால் கொல்ல இயலாது என்று சொன்ன துரோணர்; படைத்தலைவராக நிறுவப்பட்ட துரோணர்; மகிழ்ச்சியடைந்த கௌரவப் படை; பதினோராம் நாள் போர் தொடங்கியது; கௌரவர்கள் சகட வியூகமும், பாண்டவர்கள் கிரௌஞ்ச வியூகமும் அமைத்துப் போரிட்டது; போரில் ஒருவரையொருவர் நேருக்கு நேர் கண்ட அர்ஜுனனும் கர்ணனும்; கௌரவத் தரப்பில் காணப்பட்ட தீய சகுனங்கள்; பாண்டவப் படையை நோக்கி விரைந்த துரோணர்; கௌரவப் படையைக் கலங்கடித்த திருஷ்டத்யும்னன்; பாண்டவப் படையை மீண்டும் மீண்டும் பிளந்த துரோணர்...
துரோணர் {துரியோதனனிடம்}, “ஆறு அங்கங்களுடன் கூடிய வேதத்தை நானறிவேன். மனித விவகாரங்களின் அறிவியலையும் {தண்டநீதியையும்} நானறிவேன். சைப்ய ஆயுதத்தையும், பல்வேறு வகைகளிலான பிற ஆயுதங்களையும் நானறிவேன். வெற்றியில் விருப்பம் கொண்டு, என்னிடம் எந்தக் குணங்கள் இருக்கின்றன என உன்னால் கூறப்பட்டனவோ அவையனைத்தையும் உண்மையில் வெளிப்படுத்த முயற்சி செய்து பாண்டவர்களோடு நான் போர்புரிவேன். எனினும், ஓ! மன்னா {துரியோதனா}, என்னால் பிருஷதன் மகனை {துருபதன் மகன் திருஷ்டத்யும்னனைக்} கொல்ல இயலாது. ஓ! மனிதர்களில் காளையே {துரியோதனா}, அவன் {திருஷ்டத்யும்னன்}, என்னைக் கொல்லவே படைக்கப்பட்டவனாவான். நான் பாண்டவர்களுடன் போரிட்டுக் கொண்டே சோமகர்களைக் கொல்வேன். பாண்டவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் மகிழ்ச்சியான இதயங்களோடு என்னுடன் போரிட மாட்டார்கள்” என்றார் {துரோணர்}.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இப்படித் துரோணரால் அனுமதிக்கப்பட்ட உமது மகன் {துரியோதனான்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சாத்திரங்களில் பரிந்துரைக்கப்படும் சடங்குகளின் படி துரோணரைப் படைத்தலைவராகச் செய்தான். துரியோதனனால் தலைமைதாங்கப்பட்ட (கௌரவப் படையின்) மன்னர்கள், பழங்காலத்தில் இந்திரனால் தலைமை தாங்கப்பட்ட தேவர்கள், ஸ்கந்தனைப் {முருகனை தேவர்களின் படைத்தலைவனாகப்} பதவியேற்கச் {அபிஷேகம்} செய்ததைப் போல, படைகளின் தலைவராகத் துரோணரைப் பதவியேற்கச் செய்தனர். துரோணரைத் தலைமையில் நிறுவியதும், பேரிகைகளின் ஒலிகளிலும், சங்குகளின் உரத்த முழக்கத்திலும் படையின் மகிழ்ச்சி வெளிப்பட்டது.
பிறகு, ஒரு பண்டிகை நாளில் காதுகளுக்கு இனிமையான வாழ்த்துகளைக் கேட்பது போன்ற கூச்சல்களாலும், ஜெயம் என்று சொல்லும் பிராமணர்களில் முதன்மையானோரின் கூச்சல்களாலும், மனம் நிறைந்த பிராமணர்களின் மங்கலகரமான வழிபாட்டாலும், கோமாளிகளின் {நடிகர்களின்} நடனத்தாலும் துரோணர் முறையாகக் கௌரவிக்கப்பட்டார். மேலும், அந்தக் கௌரவப் போர்வீரர்கள் பாண்டவர்கள் ஏற்கனவே வீழ்த்தப்பட்டதாகவே கருதினர்.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “பிறகு, அந்த வலிமைமிக்கத் தேர்வீரரான பரத்வாஜர் மகன் {துரோணர்}, தலைமைப் பொறுப்பை அடைந்து, போருக்காகத் துருப்புகளை வியூகத்தில் அணிவகுக்கச் செய்து, எதிரியுடன் போரிட விரும்பி உமது மகன்களுடன் புறப்பட்டார். கவசம் தரித்தவர்களான சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்}, கலிங்கர்களின் தலைவன் {சுருதாயுதன்}, உமது மகன் விகர்ணன் ஆகியோர் (துரோணரின்) வலப்பக்கத்தில் நின்றனர். சகுனி, காந்தாரக் குலத்தைச் சேர்ந்தோரும், பளபளக்கும் வேல்களால் போரிடுவோருமான குதிரை வீரர்களில் முதன்மையானோர் பலரோடும் சேர்ந்து அவர்களுக்கு {ஜெயத்ரதன் முதலானோருக்கு} ஆதரவாகச் செயல்படச் சென்றான். கிருபர், கிருதவர்மன், சித்திரசேனன், துச்சாசனன் தலைமையிலான விவிம்சதி ஆகியோர்{துரோணரின்} இடப்பக்கத்தைப் பாதுகாக்க கடுமையாக முயன்றனர். சுதக்ஷிணன் தலைமையிலான காம்போஜர்கள், சகர்கள், யவனர்கள் ஆகியோர் பெரும் வேகம் கொண்ட குதிரைகளோடு பின்னவர்களை {கிருபர் முதலானோரை} ஆதரிக்கச் சென்றனர்.
மத்ரர்கள், திரிகர்த்தர்கள், அம்பஷ்டர்கள், மேற்கத்தியர்கள், வடக்கத்தியர்கள், மாலவர்கள், சூரசேனர்கள், சூத்ரர்கள், மலதர்கள், சௌவீரர்கள், கைதவர்கள், கிழக்கத்தியர்கள், தெற்கத்தியர்கள் ஆகியோர் உமது மகனையும் (துரியோதனனையும்), சூதனின் மகனையும் (கர்ணனையும்) தங்கள் தலைமையில் நிறுத்தி, {படையின்} பின்பக்க காவலாக அமைந்தனர் [1]. வில்லாளிகளின் தலைமையில் சென்ற விகர்த்தனன் மகன் கர்ணன் (முன்னேறும்) படைக்குப் பலத்தைக் கூட்டி, அந்தப் படையின் வீரர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தான். சுடர்மிக்கதும், பெரியதும், உயரமானதும், யானை கட்டும் கயிறு பொறிக்கப்பட்டதுமான அவனது கொடிமரம், அவனது படைப்பிரிவுகளை மகிழ்ச்சியூட்டும்படி, சூரியப்பிரகாசத்துடன் ஒளிர்ந்து கொண்டிருந்தது.
[1] வங்க மற்றும் பம்பாய் உரைகளுக்கு இடையே வாசிப்பில் கணிசமான வேறுபாடுகள் தோன்றுகின்றன. இரண்டிலும் தனித்தனி குறைபாடுகள் உள்ளன. தலைவரான துரோணர் படையின் முன்னணியில் சென்றதாகத் தெரிகிறது. வில்லாளிகள் அனைவருக்கும் தலைமையில் செல்வதாக விவரிக்கப்படும் கர்ணன், பின்பகுதி படையின் தலைமையில் சென்றதாகவே எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். அப்படியிருந்தால் அவன் துரோணருக்கு அடுத்ததாக இருந்திருக்க வேண்டும் எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். வேறொரு பதிப்பில் இந்தப் பத்தி, “மேற்கண்ட நாட்டினர் உமது மகன் துரியோதனனை முன்னிட்டுக் கொண்டு, சூத மகனான கர்ணனுக்குப் பின் உமது மகன்களோடு சேர்ந்து தங்களுடைய படைகளை உற்சாகப்படுத்திக் கொண்டு சென்றனர்” என்று இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், “அனைவரும் தங்கள் தலைமையில் உமது மகன் துரியோதனனைக் கொண்டு, சூத மகனை {கர்ணனைத்} தங்கள் பின்னே கொண்டு, தங்கள் படை வீரர்களின் இதயங்களை மகிழ்ச்சிப்படுத்திய படியே அணிவகுத்து, (முன்னேறிச்) செல்லும் துருப்புகளின் பலத்தை அதிகரித்தனர்” என்று இருக்கிறது. எனவே மூன்று பதிப்புகளும் மூன்று விதமாக இந்தப் பத்தியைச் சொல்லியிருக்கின்றன.
கர்ணனைக் கண்ட யாரும், பீஷ்மரின் மரணத்தால் ஏற்பட்ட பேரிடரைக் கருதவில்லை. குருக்களோடு சேர்ந்த மன்னர்கள் அனைவரும் துயரில் இருந்து விடுபட்டனர். பெரும் எண்ணிக்கையிலான வீரர்கள் ஒன்றுகூடி, தங்களுக்குள், “கர்ணனைக் களத்தில் காணும் பாண்டவர்களால் போரில் நிற்க இயலாது. உண்மையில், கர்ணன், வாசவனைத் {இந்திரனைத்} தங்கள் தலைமையில் கொண்ட தேவர்களையே கூடப் போரில் வீழ்த்தக் கூடியவனாவான். எனவே, சக்தியும் ஆற்றலுமற்ற பாண்டுவின் மகன்களைக் குறித்து என்ன சொல்வது? வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பீஷ்மர், போரில் பார்த்தர்களைத் தப்ப விட்டார். எனினும், கர்ணன் தன் கூரிய கணைகளால் போரில் அவர்களைக் கொல்வான்” என்றனர்.
இப்படி ஒருவரோடொருவர் பேசிக்கொண்ட அவர்கள் மகிழ்ச்சியால் நிறைந்து, ராதையின் மகனை {கர்ணனை} வழிபட்டபடியும், பாராட்டியபடியும் முன்னேறிச் சென்றனர். நமது படையைப் பொறுத்தவரை, துரோணரால் அது சகட (வாகன) வடிவில் அணிவகுக்கப்பட்டது; அதே வேளையில் நம் எதிரிகளின் வியூகமோ, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் மகிழ்ச்சியோடிருந்த நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனால் அது கிரௌஞ்ச (நாரை) வடிவத்தில் அணிவகுக்கப்பட்டது.
அவர்களது வியூகத்தின் தலைமையில் மனிதர்களில் முதன்மையானோரான விஷ்ணு {கிருஷ்ணன்}, தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகிய இருவரும் குரங்கின் வடிவம் பொறிக்கப்பட்ட தங்கள் கொடியைப் பறக்கவிட்டபடி நின்றனர். படை முழுமைக்கும் திமிலைப் போன்றதும், வில்லாளிகள் அனைவருக்கும் புகலிடமானதும், அளவிலா சக்தி கொண்டதுமான பார்த்தனின் {அர்ஜுனனின்} அந்தக் கொடி, வானத்தில் மிதந்த போதே, உயர் ஆன்ம யுதிஷ்டிரனின் படை முழுமைக்கும் ஒளியூட்டுவதைப் போலத் தெரிந்தது. பெரும் புத்திக் கூர்மை கொண்ட பார்த்தனின் {அர்ஜுனனின்} அந்தக் கொடி யுக முடிவில் உலகத்தை எரிப்பதற்காக உதிக்கும் சுடர்மிக்கச் சூரியனை ஒத்திருப்பதாகத் தெரிந்தது.
வில்லாளிகளுக்கு மத்தியில் அர்ஜுனன் முதன்மையானவன்; விற்களுக்கு மத்தியில் காண்டீவம் முதன்மையானது; உயிரினங்களுக்கு மத்தியில் வாசுதேவனே முதன்மையானவன்; அனைத்து வகைச் சக்கரங்களுக்கும் மத்தியில் சுதர்சனமே முதன்மையானது. சக்தியின் பண்புருவங்களான இந்த நான்கையும் சுமந்து கொண்டு, வெண் குதிரைகள் பூட்டப்பட்ட அந்தத் தேர், (தாக்குவதற்காக) உயர்த்தப்பட்ட மூர்க்கமான சக்கரத்தைப் போல, (எதிரி) படையின் முன்னணியில் தன் நிலையை ஏற்றது.
கர்ணன் உமது படையின் முகப்பிலும், தனஞ்சயன் {அர்ஜுனன்} பகையணியின் முகப்பிலும் என இப்படியே மனிதர்களில் முதன்மையான அவ்விருவரும் தங்கள் தங்கள் படைகளின் முகப்பில் நின்றனர். கோபத்தால் தூண்டப்பட்டவர்களும், ஒருவரை ஒருவர் கொல்ல விரும்பியவர்களுமான கர்ணன் மற்றும் அர்ஜுனன் ஆகியோர் அந்தப் போரில் ஒருவரையொருவர் பார்த்தனர்.
பிறகு, வலிமைமிக்கத் தேர்வீரரான பரத்வாஜர் மகன் {துரோணர்}, பெரும் வேகத்துடன் போரில் முன்னேறியபோது, பூமியானது பேரொலியுடன் அழுது நடுங்குவதாகத் தெரிந்தது. பழுப்பு நிறத்தாலான பட்டு கவிகைக்கு ஒப்பானதும், காற்றால் எழுப்பப்பட்டதுமான அடர்த்தியான புழுதியானது வானத்தையும் சூரியனையும் மறைத்தது. ஆகாயம் மேகமற்றதாக இருப்பினும், இறைச்சித்துண்டுகள், எலும்புகள் மற்றும் இரத்தத்தாலான மழை பொழிந்தது. ஆயிரக்கணக்கான கழுகுகள் {கிருத்ரங்கள்}, பருந்துகள், கொக்குகள், கங்கங்கள் {ஸ்யேனங்கள் – ஒரு வகைக் கழுகு}, காக்கைகள் ஆகியன (கௌரவத்) துருப்புகளின் மீது தொடர்ந்து விழத் தொடங்கின. பேரொலியுடன் நரிகள் ஊளையிட்டன; மூர்க்கமானவையும் பயங்கரமானவையுமான பறவைகள் பல இறைச்சியுண்டு, இரத்தம் குடிக்கும் விருப்பத்தால் உமது படைக்கு இடதுபுறத்தில் சுற்றின [2], பேரொலியோடும், நடுக்கத்தோடும் கூடியவையும், சுடர்மிக்கவையுமான பல எரி கோள்கள், (வானத்துக்கு) ஒளியூட்டியபடி, தங்கள் வாலினால் பெரும் பகுதிகளைச் சூழ்ந்து கொண்டு பிரகாசத்துடன் களத்தில் விழுந்தன. (கௌரவப்) படையின் தலைவர் {துரோணர்} புறப்பட்டபோது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சூரியனின் அகன்ற வட்டில் இடியோசைகளுடன் கூடிய மின்னலின் கீற்றுகளை வெளியிடுவதாகத் தெரிந்தது. கடுமையானதும், வீரர்களின் அழிவைக் குறிப்பதான இவையும், இன்னும் பல சகுனங்களும் போரின் போது காணப்பட்டன.
[2] “படையைத் தங்கள் வலப்புறம் கொல்வது” அஃதாவது உமது படைக்கு இடப்புறத்தில் பறவைகள் பறப்பது தீய சகுனமாகும் எனத் திருதராஷ்டிரனிடம் சஞ்சயன் சொல்வதாக இங்கே கங்குலி விளக்குகிறார்.
பிறகு, ஒருவரையொருவர் கொல்ல விரும்பிய குருக்கள் மற்றும் பாண்டவர்களின் துருப்புகளுக்கு இடையிலான மோதல் தொடங்கியது. அங்கே எழுந்த ஆரவாரத்தின் பேரொலி முழுப் பூமியையும் நிறைப்பதாகத் தெரிந்தது. ஒருவரோடொருவர் சினம் கொண்டவர்களும், தாக்குவதில் திறம் கொண்டவர்களுமான பாண்டவர்களும், கௌரவர்களும், வெற்றியின் மீது கொண்ட விருப்பத்தால் கூரிய ஆயுதங்கள் கொண்டு ஒருவரையொருவர் தாக்கத் தொடங்கினர்.
பிறகு, சுடர்மிக்கப் பிரகாசத்தைக் கொண்ட அந்தப் பெரும் வில்லாளி {துரோணர்}, நூற்றுக்கணக்கான கூரிய கணைகளை இறைத்தபடி பெரும் மூர்க்கத்துடன் பாண்டவத் துருப்புகளை நோக்கி விரைந்தார். துரோணர் தங்களை நோக்கி விரைவதைக் கண்ட பாண்டவர்களும், சிருஞ்சயர்களும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மாரிக்கு மேல் மாரியாக (தனித்துவமான தொகுப்புகளாலான) கணைகளைக் கொண்டு அவரை வரவேற்றனர். துரோணரால் கலங்கடிக்கப்பட்டு, பிளக்கப்பட்ட பாண்டவர்கள் மற்றும் பாஞ்சாலர்களின் அந்தப் பெரும்படை, காற்றால் பிளக்கப்பட்ட கொக்கு வரிசைகளைப் போல உடைந்தனர். அந்தப் போரில் தெய்வீக ஆயுதங்கள் பலவற்றைத் தூண்டி அழைத்த துரோணர், குறுகிய காலத்திற்குள்ளாகவே பாண்டவர்களையும், சிருஞ்சயர்களையும் பீடித்தார்.
திருஷ்டத்யும்னன் தலைமையிலான பாஞ்சாலர்கள், வாசவனால் {இந்திரனால்} கொல்லப்பட்ட தானவர்களைப் போலத் துரோணரால் கொல்லப்பட்டு அந்தப் போரில் நடுங்கினர். பிறகு, வலிமைமிக்கத் தேர்வீரனும், தெய்வீக ஆயுதங்களை அறிந்த வீரனுமான அந்த யக்ஞசேனன் மகன் (திருஷ்டத்யும்னன்), துரோணரின் படைப்பிரிவில் பல இடங்களைத் தன் கணை மாரியால் பிளந்தான். அந்த வலிமைமிக்கப் பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, தன் கணைமாரியால் துரோணரின் கணை மாரியை கலங்கடித்துக் குருக்களுக்கு மத்தியில் பெரும் படுகொலைகளைச் செய்தான்.
போரில் {சிதறி ஓடிய} தன் மக்களுக்குப் பின் சென்ற வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட துரோணர், அவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, பிருஷதன் மகனை {திருஷ்டத்யும்னனை} நோக்கி விரைந்தார். கோபத்தால் தூண்டப்பட்ட மகவத் {இந்திரன்}, பெரும் சக்தியுடன் தன் கணைமாரியைத் தானவர்கள் மீது பொழிந்ததைப் போல அவர் {துரோணர்}, பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்} மீது அடர்த்தியான கணைமாரியைப் பொழிந்தார். துரோணரின் கணைகளால் அசைக்கப்பட்ட பாண்டவர்களும், சிருஞ்சயர்களும், சிங்கத்தால் தாக்கப்பட்ட சிறு விலங்கின் கூட்டத்தைப் போல மீண்டும் மீண்டும் உடைந்தனர். வலிமைமிக்கத் துரோணர், அந்தப் பாண்டவப் படையை நெருப்பு வளையமாகச் சுற்றினர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இவை அனைத்தையும் காண அற்புதமாக இருந்தது.
வானத்தில் காணப்படும் {கந்தர்வ} நகரத்துக்கு ஒப்பானதும், (படைகளின்) அறிவியலில் {சாத்திரங்களில்} கண்டபடி தேவையான அனைத்துப் பொருட்களுடன் அமைக்கப்பட்டதும், காற்றில் மிதக்கும் கொடியைக் கொண்டதும், சடசடப்பொலியைக் களத்தில் எதிரொலிக்கச் செய்வதும், (நன்கு) தூண்டப்பட்ட குதிரைகளைக் கொண்டதும், ஸ்படிகம் போன்ற பிரகாசமான கொடிமரத்தைக் கொண்டதும், பகைவரின் இதயங்களில் நடுக்கத்தை ஏற்படுத்துவதுமான தன் சிறந்த தேரில் சென்ற துரோணர் அவர்களுக்கு {எதிரி படையினரின்} மத்தியில் பெரும் படுகொலைகளைச் செய்தார்” {என்றான் சஞ்சயன்}.
ஆங்கிலத்தில் | In English |