Drona was slained! | Drona-Parva-Section-008 | Mahabharata In Tamil
(துரோணாபிஷேக பர்வம் – 08)
பதிவின் சுருக்கம் : துரோணர் உண்டாக்கிய அழிவு; துரோணரைத் தடுக்கும்படி பாண்டவர்களைத் தூண்டிய யுதிஷ்டிரன்; பாண்டவப்படையைக் கலங்கடித்த துரோணர் திருஷ்டத்யும்னனால் கொல்லப்பட்டது...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “குதிரைகள், {அவற்றைச்} செலுத்துபவர்கள், தேர்வீரர்கள், யானைகள் ஆகியவற்றை இப்படிக் கொல்லும் துரோணரைக் கண்ட பாண்டவர்கள், கவலைக்குள்ளாகாமல் அவரை அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டனர் [1]. பிறகு, திருஷ்டத்யும்னன் மற்றும் தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகியோரிடம் பேசிய மன்னன் யுதிஷ்டிரன், அவர்களிடம், “அந்தக் குடத்தில் பிறந்தவர் (துரோணர்), நம் ஆட்களால் அனைத்துப் பக்கங்களிலும் கவனமாகச் சூழப்பட்டுத் தடுக்கப்படட்டும்” என்றான். இப்படிச் சொல்லப்பட்ட வலிமைமிக்கத் தேர்வீரர்களான அர்ஜுனனும், பிருஷதன் மகனும் {திருஷ்டத்யும்னனும்}, தங்கள் தொண்டர்களுடன் சேர்ந்து, துரோணர் வந்ததும் அவர்கள் அனைவரும் பின்னவரை {துரோணரை} வரவேற்றனர் {எதிர்த்தனர்}.
[1] வேறொரு பதிப்பில், “பாண்டவர்கள் மன வருத்தத்தை அடைந்து அவரை நான்கு பக்கங்களிலும் சூழ்ந்து நின்று தடுக்கவில்லை” என்றிருக்கிறது. மன்மதநாத தத்தரின் பதிப்பிலும், “பாண்டவர்கள் பெரிதும் பீடிக்கப்பட்டு, அவரது முன்னேற்றத்தைத் தடுக்க முடியாதவர்களாக இருந்தனர்” என்றே இருக்கிறது.
மகிழ்ச்சியால் நிறைந்திருந்த கேகய இளவரசர்கள், பீமசேனன், சுபத்ரையின் மகன் {அபிமன்யு}, கடோத்கசன், யுதிஷ்டிரன், இரட்டையர்கள் (நகுலன் மற்றும் சகாதேவன்), மத்ஸ்யர்களின் ஆட்சியாளன் {விராடன்}, துருபதன் மகன், திரௌபதியின் மகன்கள் (ஐவர்), திருஷ்டகேது, சாத்யகி, கோபம் நிறைந்த சித்திரசேனன், வலிமைமிக்கத் தேர்வீரனான யுயுத்சு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பாண்டு மகன்களை {பாண்டவர்களைப்} பின்தொடர்ந்த பிற மன்னர்கள் ஆகியோர் அனைவரும் தங்கள் குலத்துக்கும் {குலப்பெருமைக்கும்} ஆற்றலுக்கும் தக்கபடி பல்வேறு சாதனைகளை அடைந்தனர். அந்தப் பாண்டவ வீரர்களால் அந்தப் போரில் காக்கப்படும் படையைக் கண்ட பரத்வாஜர் மகன் {துரோணர்}, கோபத்தால் தன் கண்களைத் திருப்பி, அதன் மீது தன் பார்வையைச் செலுத்தினார்.
சினத்தால் தூண்டப்பட்டவரும், போரில் வெல்லப்பட முடியாதவருமான அந்த வீரர் {துரோணர்}, தன் தேரில் நின்றபடியே, பெரும் மேகத்திரள்களை அழிக்கும் சூறாவளியைப் போல அந்தப் பாண்டவப் படையை எரித்தார். தேர்வீரர்கள், குதிரைகள், காலாட்படை வீரர்கள், யானைகள் ஆகியவற்றின் மீது அனைத்துப் பக்கங்களிலும் விரைந்த துரோணர், வயதில் கனம் கொண்டிருந்தாலும் ஓர் இளைஞனைப் போலக் களத்தில் மூர்க்கமாகத் திரிந்தார். காற்றைப் போல வேகமானவையும், அற்புத இனத்தைச் சேர்ந்தவையும், இரத்தத்தால் நனைந்தவையுமான அவரது {துரோணரது} சிவந்த குதிரைகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அழகான தோற்றத்தை அடைந்தது.
முறையாக நோன்புகளை நோற்கும் அந்த வீரர் {துரோணர்}, கோபத்தால் தூண்டப்பட்டு யமனைப் போல அவர்களை அழிப்பதைக் கண்ட யுதிஷ்டிரனின் படைவீரர்கள் அனைத்துப்பக்கங்களிலும் தப்பி ஓடினர். சிலர் தப்பி ஓடினர், சிலர் திரும்பினர், சிலர் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர், மேலும் சிலர் அந்தக் களத்திலேயே நின்றனர், அவர்கள் உண்டாக்கிய ஒலி கடுமையானதாகவும், பயங்கரமானதாகவும் இருந்தது. வீரர்களிடம் மகிழ்ச்சியை உண்டாக்கி, மருண்டவர்களிடம் அச்சத்தை உண்டாக்கிய அவ்வொலி முழு வானத்தையும் பூமியையும் நிறைத்தது.
மீண்டும் அந்தப் போரில் தன் பெயரை அறிவித்துக் கொண்ட துரோணர், எதிரிகளுக்கு மத்தியில் நூற்றுக்கணக்கான கணைகளை இறைத்தபடி தன்னை மிகக் கடுமையானவராக அமைத்துக் கொண்டார். உண்மையில், அந்த வலிமைமிக்கத் துரோணர் முதிர்ந்தவராக இருப்பினும், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, இளைஞனைப் போலச் செயல்பட்டு, பாண்டுமகனின் படைப்பிரிவுகளுக்கு மத்தியில் காலனைப் போலத் திரிந்து கொண்டிருந்தார். தலைகளையும், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட கடங்களையும் துண்டித்த அந்தக் கடும் வீரர் {துரோணர்}, தேர்த்தட்டுகள் பலவற்றை வெறுமையானவை ஆக்கி சிங்க முழக்கமிட்டார்.
அவரது {துரோணரது} மகிழ்ச்சி ஆரவாரத்தின் விளைவாகவும், அவரது கணைகளின் சக்தியாலும், ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, குளிரால் பீடிக்கப்பட்ட மாட்டு மந்தையைப் போல (எதிரிப் படையின்) வீரர்கள் நடுங்கினர். அவரது தேரின் சடசடப்பொலியின் விளைவாகவும், அவரது நாண் கயிற்றின் ஒலியாலும், அவரது வில்லின் நாணொலியாலும் மொத்த ஆகாயமே பேரொலியால் எதிரொலித்தது. அந்த வீரரின் {துரோணரின்} கணைகள், அவரது வில்லில் இருந்து ஆயிரக்கணக்கில் ஏவப்பட்டு, {அடிவானின்} திசைப்புள்ளிகள் அனைத்தையும் நிறைத்தபடி, (எதிரியின்) யானைகள், குதிரைகள், தேர்கள் மற்றும் காலாட்படை மீது பொழிந்தன.
பிறகு, பெரும் சக்தி கொண்ட வில்லைத் தரித்திருந்தவரும், தழல்களை ஆயுதங்களாகக் கொண்ட நெருப்புக்கு ஒப்பானவருமான துரோணரைப் பாஞ்சாலர்களும், பாண்டவர்களும் துணிவுடன் அணுகினர். அவர் {துரோணர்}, அவர்களது யானைகள், காலாட்படைவீரர்கள் மற்றும் குதிரைகளுடன் அவர்களை யமலோகம் அனுப்பத் தொடங்கினார். அந்தத் துரோணர் பூமியை இரத்தச் சகதியாக்கினார்.
தன் வலிமைமிக்க ஆயுதங்களை இறைத்தபடி, அனைத்துப் பக்கங்களிலும் அடர்த்தியான தன் கணைகளை ஏவியபடி இருந்த துரோணர், விரைவில் தன் கணைமாரியைத் தவிர வேறேதும் தெரியாதவாறு {அடிவானின்} திசைப்புள்ளிகள் அனைத்தையும் மறைத்தார். காலாட்படைவீரர்கள், தேர்கள், குதிரைகள், யானைகள் ஆகியவற்றுக்கிடையே துரோணரின் கணைகளைத் தவிர வேறேதும் காணப்படவில்லை. தேர்களுக்கு மத்தியில் மின்னலின் கீற்றுகள் அசைவதைப் போல அவரது தேரின் கொடிமரம் மட்டுமே காணப்பட்டது [2]. தளர்வுக்கு உட்படுத்த முடியாத ஆன்மா கொண்ட {மனம் தளராத} துரோணர், வில்லையும் கணைகளையும் தரித்துக் கொண்டு, கேகய இளவரசர்கள் ஐவரையும், பாஞ்சாலர்களின் ஆட்சியாளனையும் {துருபதனையும்} பீடித்து, யுதிஷ்டிரனின் படைப்பிரிவை எதிர்த்து விரைந்தார்.
[2] வேறொரு பதிப்பில் இவ்வரி, “காலாட்படை, தேர்கள், குதிரைகள், யானைகளுக்கு மத்தியில் திரிந்த அவரது கொடி மேகங்களில் மின்னல் போலக் காணப்பட்டது” என்றிருக்கிறது.
பிறகு, பீமசேனன், தனஞ்சயன் {அர்ஜுனன்}, சிநியின் பேரன் {சாத்யகி}, துருபதன் மகன்கள், காசியின் ஆட்சியாளனான சைப்யன் மகன் [3], சிபி மகிழ்ச்சியுடனும் உரத்த முழக்கங்களுடனும் தங்கள் கணைகளால் அவரை {துரோணரை} மறைத்தனர். தங்கச் சிறகுகளால் அலங்கரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கணைகள் துரோணரின் வில்லில் இருந்து ஏவப்பட்டு, அந்த வீரர்களின் இளம் குதிரைகள் மற்றும் யானைகளின் உடலைத் துளைத்து, தங்கள் சிறகுகளை இரத்தத்தால் பூசிக் கொண்டு பூமிக்குள் நுழைந்தன. கணைகளால் துளைக்கப்பட்டு வீழ்ந்திருக்கும் போர்வீரர்களின் கூட்டங்கள், தேர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவை விரவிக் கிடந்த அந்தப் போர்க்களமானது, கார்மேகத் திரள்களால் மறைக்கப்பட்ட ஆகாயம் போலத் தெரிந்தது.
[3] வேறொரு பதிப்பில் “சைப்யன் மகனும், காசிமன்னனும், சிபியும்” என்று தனித்தனியாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும் “சைப்யன் மகன், காசிகளின் ஆட்சியாளன், சிபி” என்று தனித்தனியாகவே கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே கங்குலி தவறியிருக்கிறார் என்றே தெரிகிறது.
பிறகு துரோணர், உமது மகன்களின் செழிப்பை விரும்பி, சாத்யகி, பீமன், தனஞ்சயன், சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, துருபதன், காசியின் ஆட்சியாளன் ஆகியோரின் படைப்பிரிவுகளை நசுக்கி, போரில் பல்வேறு வீரர்களைத் தரையில் வீழ்த்தினார். உண்மையில், அந்த உயர் ஆன்ம வீரர் {துரோணர்} இவற்றையும் இன்னும் பல சாதனைகளையும் அடைந்து, ஓ! குருக்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, யுகத்தின் முடிவில் எழும் சூரியனைப் போல உலகத்தை எரித்துவிட்டு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே} சொர்க்கத்திற்குச் சென்றார். பகைக்கூட்டங்களைக் கலங்கடிப்பவரும், தங்கத் தேரைக் கொண்டவருமான அந்த வீரர் {துரோணர்}, பெரும் சாதனைகளை அடைந்து, போரில் பாண்டவ வீரர்களின் கூட்டத்தை ஆயிரக்கணக்கில் கொன்று, இறுதியாகத் திருஷ்டத்யும்னனால் தானே கொல்லப்பட்டார்.
உண்மையில், துணிச்சல் மிக்கவர்களும், புறமுதுகிடாதவர்களுமான இரண்டு {2} அக்ஷௌஹிணிக்கு [4] மேலான படை வீரர்களைக் கொன்றவரும், புத்திக்கூர்மை மிக்கவருமான அந்த வீரர் {துரோணர்}, இறுதியாக உயர்ந்த நிலையை அடைந்தார். உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அடைவதற்கு அரிதான மிகக் கடினமான சாதனைகளை அடைந்த அவர் {துரோணர்}, இறுதியில் கொடுஞ்செயல்புரிந்த பாஞ்சாலர்களாலும் பாண்டவர்களாலும் கொல்லப்பட்டார்.
[4] வேறு பதிப்பு ஒன்றில் "ஒரு அக்ஷௌஹிணிக்கு மேல்" என்றே சொல்லப்பட்டுள்ளது. மன்மத நாத தத்தர் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே "இரண்டு அக்ஷௌஹிணிக்கு மேல்" என்றே உள்ளது.
போரில் ஆசான் {துரோணர்} கொல்லப்பட்ட போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அனைத்து உயிரினங்கள் மற்றும் துருப்புகள் அனைத்தின் உரத்த ஆரவாரம் ஆகாயத்தில் எழுந்தது. “ஓ! இது நிந்திக்கத்தக்கது” என்ற உயிரினங்களின் கதறல் வானத்திலும், பூமியிலும், இவைகளுக்கு இடைப்பட்ட இடைவெளியிலும், திசைகள் மற்றும் துணைத்திசைகளிலும் எதிரொலித்துக் கேட்கப்பட்டது. தேவர்கள், பித்ருக்கள், அவரது {துரோணரின்} நண்பர்கள் ஆகிய அனைவரும் அந்த வலிமைமிக்க வீரரான பரத்வாஜர் மகன் {துரோணர்} இப்படிக் கொல்லப்பட்டதைக் கண்டனர். வெற்றி அடைந்த பாண்டவர்கள் சிங்க முழக்கங்கள் செய்தனர். அவர்களது உரத்த கூச்சலால் பூமியே நடுங்கியது” {என்றான் சஞ்சயன்}.
ஆங்கிலத்தில் | In English |