Monday, April 04, 2016

உணர்வுகளை இழந்த திருதராஷ்டிரன்! - துரோண பர்வம் பகுதி – 009

Dhritarashtra lost his senses! | Drona-Parva-Section-009 | Mahabharata In Tamil

(துரோணாபிஷேக பர்வம் – 09)

பதிவின் சுருக்கம் : துரோணரின் பெருமைகளைச் சொல்லி வருந்திய திருதராஷ்டிரன், தன் உணர்வுகளை இழந்து மயங்கியது...

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஆயுதங்களைத் தரிப்போர் அனைவரிலும் அதிகமாக ஆயுதங்களை அறிந்த துரோணரைப் பாண்டவர்களும் சிருஞ்சயர்களும் போரில் எவ்வாறு கொன்றனர்? (போரிடும் சமயத்தில்) அவரது தேர் உடைந்ததா? (எதிரியைத்) தாக்கும்போது அவரது வில் ஒடிந்ததா? அல்லது, துரோணர் கவனக்குறைவாக இருந்த நேரத்தில் அவர் தனது மரண அடியைப் பெற்றாரா?


ஓ! குழந்தாய் {சஞ்சயா}, எதிரிகளால் அவமதிக்கத் தகாத வீரரும், தங்கச் சிறகுகள் கொண்ட அடர்த்தியான கணைகளின் மாரியை இறைப்பவரும், கர நளினம் {லாகவம்} கொண்டவரும், பிராமணர்களில் முதன்மையானவரும், அனைத்தையும் சாதித்தவரும், போர்க்கலையின் அனைத்து வகைகளையும் அறிந்தவரும், பெரும் தூரத்திற்குத் தன் கணைகளை ஏவவல்லவரும், தற்கட்டுப்பாடு கொண்டவரும், ஆயுதங்களின் பயன்பாட்டில் பெரும் திறம்பெற்றவரும், தெய்வீக ஆயுதங்களைத் தரித்தவரும், மங்காத புகழ் கொண்டவரும், எப்போதும் கவனம் நிறைந்தவரும், போரில் கடுஞ்சாதனைகளை அடைந்தவருமான அந்த வலிமைமிக்க வீரரை {துரோணரைப்} பாஞ்சால இளவரசனான அந்தப் பிருஷதன் மகன் (துருபதன் மகன் திருஷ்டத்யும்னன்) எவ்வாறு கொன்றான்?

நால்வகை ஆயுதங்களைக் கொண்டவரான அந்த வீரர், ஐயோ!, வில்லாளித்தன்மை கொண்ட அந்தத் துரோணர் கொல்லப்பட்டார் என்று நீ சொல்வதாலும், உயர் ஆன்ம பிருஷதன் மகனால் {திருஷ்டத்யும்னனால்}, துணிச்சல்மிக்கத் துரோணரே கொல்லப்பட்டாரென்பதாலும், முயற்சியை விட விதியே வலிமையானது என வெளிப்படையாக எனக்குத் தெரிகிறது. புலித் தோல்களால் மூடப்பட்டதும், பசும்பொன்னால் அலங்கரிக்கப்பட்டதுமான தனது பிரகாசமான தேரில் செல்லும் அந்த வீரர் {துரோணர்} கொல்லப்பட்டதைக் கேட்டு என்னால் துயரைப் போக்க முடியவில்லை.

ஓ! சஞ்சயா, இழிந்தவனான நான், துரோணர் கொல்லப்பட்டதைக் கேட்டும் உயிரோடிருப்பதால், பிறரின் துன்பத்தில் விளைந்த துயரத்தால் எவனும் இறப்பதில்லை என்பதில் ஐயமில்லை. விதியே அனைத்திலும் வலியது என்றும், முயற்சி கனியற்றது {பலனற்றது} என்றும் நான் கருதுகிறேன். துரோணரின் மரணத்தைக் கேட்டும், நூறு துண்டுகளாக என் இதயம் உடைந்து போகாததால் கடுமையாக இருக்கும் அது {என் இதயம்} நிச்சயம் இரும்பாலானதே. வேதங்கள், எதிர்காலத்தை அறியும் உளவியல், வில்லாளித்தன்மை ஆகியவற்றின் கல்வியைப் பெற விரும்பி எவருக்காகப் பிராமணர்களும், இளவரசர்களும் காத்திருந்தார்களோ, ஐயோ, அவர் {துரோணர்} எவ்வாறு காலனால் எடுத்துக் கொள்ளப்பட்டார்?

பெருங்கடல் வறண்டு போவதைப் போலவோ, மேரு அதன் இடத்தில் இருந்து பெயர்க்கப்படுவதைப் போலவோ, அல்லது ஆகாயத்தில் இருந்து சூரியன் வீழ்வதைப் போலவோ ஆன துரோணரின் வீழ்ச்சியை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தீயோரை ஒடுக்குபவராகவும், நல்லோரைக் காப்பவராகவும் அவர் இருந்தார்.

இழிந்த துரியோதனனுக்காகத் தன் உயிரை எவர் கொடுத்தாரோ, எவருடைய ஆற்றலால் என் தீய மகன்களுக்கு வெற்றியில் விருப்பம் உண்டானதோ, எவருடைய புத்திக்கூர்மை பிருஹஸ்பதி அல்லது உசனஸுக்கு {சுக்ராச்சாரியருக்கு} இணையானதோ, ஐயோ, அந்த எதிரிகளை எரிப்பவர் {துரோணர்} எவ்வாறு கொல்லப்பட்டார்? [1].

[1] வேறொரு பதிப்பில் இங்கே விடுபட்ட ஒரு பத்தியும் இருக்கிறது. அது பின்வருமாறு: “பெரும் மகிமை கொண்ட எவர், தனக்குக் கீழ் இருந்த போர்வீரர்கள் அனைவரும் நிலைத்திருக்கக் காரணமாக இருந்தாரோ, எவருக்குக் காலன் வசப்பட்டிருந்தானோ, அந்தத் துரோணர் எவ்வாறு கொல்லப்பட்டார்?” என்று அதிக வரி இருக்கிறது.

சிவப்பு நிறத்தாலானவையும், தங்க வலையால் மூடப்பட்டவையும், காற்றின் வேகத்தைக் கொண்டவையும், போரில் எந்த ஆயுதத்தாலும் தாக்கப்பட முடியாதவையும், பெரும் பலம் கொண்டவையும், உற்சாகமாகக் கனைப்பவையும், நன்கு பயிற்சியளிக்கப்பட்டவையும், சிந்து இனத்தைச் சேர்ந்தவையும், அவரது {துரோணரின்} தேரில் பூட்டப்பட்டிருந்தவையும், அந்த வாகனத்தைச் சிறப்பாக இழுத்தவையும், போர்க்களத்தின் மத்தியில் எப்போதும் பாதுகாப்பாக இருந்தவையுமான அவரது பெரிய குதிரைகள் பலவீனமடைந்து மயக்கமுற்றனவா? போரில், சங்கொலிகள் மற்றும் பேரிகையொலிகளைக் கேட்டு முழங்கும் யானைகளின் பிளிறல்களைப் பொறுமையாகத் தாங்கிக் கொண்டு, விற்களின் நாணொலி, கணைகள் மற்றும் பிற ஆயுதங்களின் மழை ஆகியவற்றால் நடுங்காது, தங்கள் தோற்றத்தாலேயே எதிரியின் வீழ்ச்சியை முன்னறிவித்துக் கொண்டு, (கடும் உழைப்பின் விளைவால்) எப்போதும் பெருமூச்சு விடாமல், களைப்பு மற்றும் வலிகள் அனைத்திற்கும் மேலாக இருந்தவையான பரத்வாஜர் மகனின் {துரோணரின்} தேரை இழுத்த அந்த வேகமான குதிரைகள் எவ்வாறு வீழ்த்தப்பட்டன? அத்தகு குதிரைகளே அவரது தங்கத் தேரில் பூட்டப்பட்டிருந்தன. அத்தகு குதிரைகளே அந்த நரவீரர்களில் {human heroes} முதன்மையானவரால் {துரோணரால்} அதில் {அந்தத் தேரில்} பூட்டப்பட்டது.

பசுந்தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தன் சிறந்த தேரில் ஏறிய அவரால் {துரோணரால்}, ஓ! மகனே {சஞ்சயா}, ஏன் பாண்டவப் படை எனும் கடலைக் கடக்க முடியவில்லை? எந்த வீரர், பிற வீரர்களிடம் எப்போதும் கண்ணீரை வரவழைப்பாரோ, எவருடைய (ஆயுத) அறிவை உலகின் வில்லாளிகள் அனைவரும் நம்பி இருந்தனரோ, அந்தப் பரத்வாஜர் மகன் {துரோணர்} போரில் அடைந்த சாதனை என்ன? உண்மையில் {சத்தியத்தில்} உறுதியான பற்று கொண்டவரும், பெரும் வலிமை கொண்டவருமான துரோணர், உண்மையில் போரில் என்ன செய்தார்?

சொர்க்கத்தில் உள்ள சக்ரனுக்கு {இந்திரனுக்கு} ஒப்பானவரும், வீரர்களில் முதல்வரும், வில்தரித்தோர் அனைவரிலும் முதன்மையானவரும், கடும் சாதனைகளை அடைந்தவருமான அவருடன் {துரோணருடன்} மோதிய தேர்வீரர்கள் யாவர்? தங்கத் தேரைக் கொண்டவரும், பெரும் வலிமையும் பலமும் கொண்டவரும், தெய்வீக ஆயுதங்களை இருப்புக்குத் தூண்டி அழைப்பவருமான அவரை {துரோணரைக்} கண்டதும் பாண்டவர்கள் தப்பி ஓடினார்களா? அல்லது நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், தன் தம்பிகளுடன் கூடி, பாஞ்சால இளவரசனை (திருஷ்டத்யும்னனைத்) தன் கட்டுக் கயிறாகக் கொண்டு [2] அனைத்துப் பக்கங்களிலும் தன் துருப்புகளால் துரோணரைச் சூழ்ந்து கொண்டு அவரைத் தாக்கினானா?

[2] ஒருவேளை இது, பாதுகாப்பிற்குத் தயாராக திருஷ்டத்யும்னனை நிற்க வைத்தார் என்ற பொருளைக் கொண்டிருக்கலாம் என இங்கே கங்குலி விளக்குகிறார்.

பார்த்தன் {அர்ஜுனன்}, தன் நேரான கணைகளால் பிற தேர்வீரர்களைத் தடுத்திருக்க வேண்டும், அதன்பிறகே பாவச்செயல்களைப் புரியும் பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்} துரோணரைச் சூழ்ந்திருக்க வேண்டும். அர்ஜுனனால் பாதுகாக்கப்பட்ட மூர்க்கமான திருஷ்டத்யும்னனைத் தவிர அந்த வலிமைமிக்க வீரருக்கு {துரோணருக்கு} மரணத்தைக் கொடுக்கக்கூடிய வேறு எந்த வீரனையும் நான் காணவில்லை. கேகயர்கள், சேதிகள், கரூசர்கள், மத்ஸ்யர்கள் மற்றும் பிற மன்னர்கள், பாம்பை மொய்க்கும் எறும்புகளைப் போல ஆசானை {துரோணரைச்} சூழ்ந்திருந்த போது, அவர் {துரோணர்} ஏதோ ஒரு கடுமையான சாதனையில் ஈடுபட்டிருக்கும்போதே இழிந்தவனான திருஷ்டத்யும்னன் அவரைக் கொன்றிருப்பான் என்று தெரிகிறது. இதுவே என் எண்ணம்.

வேதங்களையும், அதன் அங்கங்களையும், ஐந்தாவதான (ஐந்தாவது வேதமான) வரலாறுகளையும் {புராணங்களையும்} கற்று, ஆறுகளுக்குக் கடலைப் போலப் பிராமணர்களுக்குப் புகலிடமாக இருந்த அந்த எதிரிகளை எரிப்பவர் எவரோ, பிராமணர் மற்றும் க்ஷத்திரியர் என இருவகையில் வாழ்ந்தவர் எவரோ, ஐயோ! வயதால் முதிர்ந்த அந்தப் பிராமணர் {துரோணர்} ஆயுத முனையில் எவ்வாறு தன் முடிவைச் சந்தித்திருக்க முடியும்? பெருமைமிகுந்தவராக இருப்பினும், என் காரணமாக அவர் அவமானத்தையும், துன்பத்தையும் அடைய நேர்ந்ததே. தகாதவராக இருப்பினும் அவர் குந்தி மகனின் {அர்ஜுனனின்} கைகளால் தன் நடத்தைக்கான கனியை அடைந்தார் [3]. உலகத்தில் வில் தரிப்போர் அனைவரும் எவரது சாதனைகளை நம்பியிருக்கிறார்களோ, உண்மையை உறுதியாகப் பின்பற்றுபவரும், பெரும் திறன் கொண்டவருமான அந்த வீரர் {துரோணர்}, ஐயோ, செல்வத்தை விரும்பும் நபர்களால் எவ்வாறு கொல்லப்பட முடியும்?

[3] அர்ஜுனனை ஆயுதப் பயிற்சியில் கவனமாக வளர்த்ததால், தன் அக்கறை மற்றும் உழைப்புக்கான கனியை {பலனை} மரணத்தின் வடிவில், அதுவும் தன் சீடனின் கைகளாலே மரணத்தைப் பெறும் நிலையைத் துரோணர் அடைந்தார் எனத் திருதராஷ்டிரன் சொல்வதாகத் தெரிகிறது எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

பெரும் வலிமையும், பெரும் சக்தியும் கொண்டு சொர்க்கத்தில் உள்ள சக்ரனை {இந்திரனைப்} போல உலகத்தில் முதன்மையான அவர் {துரோணர்}, ஐயோ, சிறுமீனால் கொல்லப்படும் திமிங்கலத்தைப் போலப் பார்த்தர்களால் {பாண்டவர்களால்} எவ்வாறு கொல்லப்பட முடியும்? வெற்றியை விரும்பும் எந்த வீரனும் எவரிடம் உயிரோடு தப்ப முடியாதோ, வேத அன்பை விரும்புவோரின் வேத ஒலி, வில்லாளித்தன்மையில் திறத்தை விரும்புவோரின் விற்களால் உண்டான நாணொலி ஆகிய இரண்டும் எவரிடம் நீங்காதிருந்ததோ, ஒருபோதும் உற்சாகமிழக்காமல் எவர் இருந்தாரோ, ஐயோ, செழிப்பைக் கொண்டவரும், போரில் வீழ்த்தப்பட முடியாதவருமான அந்த வீரர், சிங்கத்திற்கோ, யானைக்கோ ஒப்பான ஆற்றலைக் கொண்ட அந்த வீரர் கொல்லப்பட்டிருக்கிறார். அவர் இறந்தார் என்ற கருத்தையே என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை [4]. எவருடைய புகழ் மங்கவில்லையோ, எவருடைய வலிமை அவமதிக்கப்பட்டதில்லையோ அந்த வெல்லப்பட முடியாத வீரரை {துரோணரை}, மனிதர்களில் முதன்மையானோர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே பிருஷதன் மகனால் {திருஷ்டத்யும்னனால்} போரில் எவ்வாறு கொல்ல முடியும்?

[4] வேறு பதிப்பில் இந்தப் பத்தியில் இதற்கு மேலும் இருக்கிறது. அது பின்வருமாறு: “அவர் உலகத்தையே எதிர்த்து போரிடக்கூடியவராயிற்றே? எவர் பிரம்மவர்ச்சஸில் நான்முகனுக்கு {பிரம்மனுக்கு} ஒப்பானவரோ, க்ஷத்திரிய தர்மத்தில் நாராயணனுக்கு இணையானவரோ, முழுமையான பிரம்மக்ஷத்திரிய ஒளிகள் ஈஸ்வரனுக்கு வசப்பட்டிருந்தது போல எவருக்கு வசப்பட்டிருந்தனவோ, கீழ்ப்படுத்த முடியாத புகழும், பலமும் உள்ளவரான அந்தத் துரோணரைப் போரில் வெல்வதற்கு வல்லமையுள்ளவன் எவன்? யுதிஷ்டிரனின் தவத்தினால் என்னைச் சேர்ந்த குரு வீரர்கள் அனைவரும் குதிரைகள், தேர்கள், யானைகள் ஆகியவற்றோடு கொல்லப்பட்டார்கள் என நான் நினைக்கிறேன்”.

துரோணருக்கு முன்பும், அவருக்குப் பக்கத்திலும் நின்று அவரைப் பாதுகாத்தபடி போரிட்டவர்கள் யாவர்? அடைவதற்குக் கடினமான அந்த முடிவை அடையும்போது, அவருக்குப் பின்புறத்தில் சென்றவர்கள் யாவர்? துரோணரின் வலது மற்றும் இடது சக்கரங்களைப் பாதுகாத்த உயர் ஆன்ம வீரர்கள் யாவர்? போரில் அந்த வீரர் {துரோணர்} போராடிக்கொண்டிருந்த போது அவருக்கு முன்னிலையில் இருந்தவர் யாவர்? அந்தச் சந்தர்ப்பத்தில், தங்கள் உயிரையே விடத்துணிந்து, முகத்துக்கு முகமாக மரணத்தைச் சந்தித்தவர்கள் யாவர்? துரோணரின் போரில் இறுதிப் பயணத்தில் சென்ற வீரர்கள் யாவர்?

துரோணரின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட அந்த க்ஷத்திரியர்களில் எவராவது தங்களைப் பொய்யர்களாக நிரூபித்துக் கொண்டு அந்த வீரரை {துரோணரைப்} போரில் கைவிட்டனரா? அப்படிக் கைவிடப்பட்டுத் தனியாக இருந்தபோது எதிரியால் அவர் {துரோணர்} கொல்லப்பட்டாரா? பெரும் ஆபத்திலேயே இருந்தாலும் அச்சத்தால் போரில் எப்போதும் புறமுதுகிடாதவர் துரோணர். அப்படியிருக்கையில் எதிரியால் அவர் எவ்வாறு கொல்லப்பட்டார்?

ஓ! சஞ்சயா, பெரும் துன்பத்தில் இருந்தாலும் கூட, ஒரு சிறப்பு மிகுந்த மனிதன் தன் வலிமையின் அளவுக்குத் தக்க தன் ஆற்றலைப் பயன்படுத்துவான். இவையாவும் துரோணரிடம் இருந்தன. ஓ! குழந்தாய் {சஞ்சயா}, நான் என் புலனுணர்வை இழக்கிறேன். இந்த உரையாடல் சிறிது நேரம் நிற்கட்டும். என் உணர்வுகள் மீண்ட பிறகு, ஓ! சஞ்சயா, மீண்டும் உன்னை நான் கேட்கிறேன்” {என்றான் திருதராஷ்டிரன்}.


ஆங்கிலத்தில் | In English