Tuesday, April 05, 2016

திருதராஷ்டிரனின் விசாரணை! - துரோண பர்வம் பகுதி – 010

Dhritarashtra’s enquiry! | Drona-Parva-Section-010 | Mahabharata In Tamil

(துரோணாபிஷேக பர்வம் – 10)

பதிவின் சுருக்கம் : தன் படைவீரர்களில் யார் யார், பாண்டவர்களில் யார் யாரைத் துரோணரை அணுகவிடாமல் தடுத்தனர் எனச் சஞ்சயனிடம் கேட்கும் திருதராஷ்டிரன்...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “சூத மகனிடம் {சஞ்சயனிடம்} இப்படிப் பேசிய திருதராஷ்டிரன், அதீத துயரத்தால் இதயம் பீடிக்கப்பட்டும், தன் மகனின் {துரியோதனனின்} வெற்றியில் நம்பிக்கையிழந்தும் தரையில் விழுந்தான். உணர்வுகளை இழந்து கீழே விழுந்த அவனைக் {திருதராஷ்டிரனைக்} கண்ட அவனது பணியாட்கள் {தாதிகள்}, அவனுக்கு விசிறிவிட்டுக் கொண்டே நறுமணமிக்கக் குளிர்ந்த நீரை அவன் மீது தெளித்தனர். அவன் {திருதராஷ்டிரன்} விழுந்ததைக் கண்ட பாரதப் பெண்மணிகள், ஓ! மன்னா {ஜனமேஜயா}, அனைத்துப் பக்கங்களிலும் அவனைச் சூழ்ந்து கொண்டு தங்கள் கைகளால் அவனுக்கு {திருதராஷ்டிரனுக்கு} மென்மையாகத் தடவிக் கொடுத்தனர். கண்ணீரால் தடைபட்ட குரலுடன், அந்த அரசப் பெண்மணிகள் தரையில் இருந்த மன்னனை மெதுவாக எழுப்பி அவனை {திருதராஷ்டிரனை} அவனது ஆசனத்தில் இருத்தினார்கள். மன்னன் {திருதராஷ்டிரன்} இருக்கையில் இருந்தாலும் மயக்கத்தின் ஆதிக்கத்திலேயே தொடர்ந்து நீடித்தான். அவனைச் சுற்றி நின்று அவர்கள் விசிறிவிட்ட போது, அவன் {திருதராஷ்டிரன்} முற்றிலும் அசைவற்று இருந்தான். பிறகு, அந்த ஏகாதிபதியின் {திருதராஷ்டிரனின்} உடலில் ஒரு நடுக்கம் ஏற்பட்டு, அவன் மெல்ல தனது உணர்வுகளை மீண்டும் பெற்றான். பிறகு, அவன் {திருதராஷ்டிரன்}, சூத சாதியைச் சேர்ந்த கவல்கணன் மகனிடம் {சஞ்சயனிடம்}, போரில் நேர்ந்த சம்பவங்கள் குறித்து மீண்டும் விசாரிக்க ஆரம்பித்தான்.


திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “தன் ஒளியால் இருளை விலக்கும் உதயச் சூரியனைப் போன்றவனும், கோபம் கொண்ட மதயானையைப் போல எதிரியை எதிர்த்து வேகமாக விரைபவனும், பெண் யானையோடு சேருவதற்காகப் பகை யானையை எதிர்த்துச் செல்லும் மதயானையைப் போன்றவனும், பகைக்கூட்டங்களின் படைத்தலைவர்களால் வெல்லப்பட முடியாதவனுமான அந்த அஜாதசத்ரு {யுதிஷ்டிரன்} வந்த போது, துரோணரிடம் செல்ல விடாமல் அவனைத் தடுத்த (என் படையின்) வீரர்கள் யாவர்?

மனிதர்களில் முதன்மையானவனும், போரில் என் படையின் துணிச்சல்மிக்க வீரர்கள் பலரைக் கொன்றவனும், வலிமைமிக்கக் கரங்களையும், புத்திக்கூர்மையையும், கலங்கடிக்கமுடியாத ஆற்றலையும் படைத்த வீரமிக்க இளவரசனும், எவரின் துணையுமின்றித் தன் பார்வையால் மட்டுமே துரியோதனனின் மொத்த படையையும் எரிக்கவல்லவனும், வெற்றியில் விருப்பம் கொண்டவனும், வில்லாளியும், மங்காப் புகழ் கொண்ட வீரனும், முழு உலகத்திலும் தற்கட்டுப்பாடு கொண்ட ஏகாதிபதி என்று மதிக்கப்படுபவனான அந்த வீரனை {யுதிஷ்டிரனைச்} சூழ்ந்து {அவனைத் தடுத்த} (என் படையின்) வீரர்கள் யாவர்?

வெல்லப்பட முடியாத இளவரசனும், மங்காப் புகழ் கொண்ட வில்லாளியும், மனிதர்களில் புலியும், குந்தியின் மகனும், எதிரியை எதிர்த்து எப்போதும் பெரும் சாதனைகளைச் செய்யும் வலிமைமிக்க வீரனும், பெரும் உடற்கட்டும், பெரும் துணிவும் கொண்ட வீரனும், பத்தாயிரம் {10000} யானைகளுக்கு நிகரான பலத்தைக் கொண்டவனுமான அந்தப் பீமசேனன் பெரும் வேகத்துடன் துரோணரிடம் வந்த போது, ஓ! என் படையை நோக்கி விரைந்து வந்த அவனைச் சூழ்ந்து கொண்ட என் படையின் துணிச்சல்மிக்கப் போராளிகள் யாவர்?

மேகங்களின் திரளைப் போலத் தெரிபவனும், மேகங்களைப் போலவே இடிகளை வெளியிடுபவனும், மழை பொழியும் இந்திரனைப் போலவே கணைமாரி பொழிபவனும், தன் உள்ளங்கைகளின் தட்டல்கள் மற்றும் தன் தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலி ஆகியவற்றால் திசைகள் அனைத்தையும் எதிரொலிக்கச் செய்பவனும், மின்னலின் கீற்றைப் போன்ற வில்லைக் கொண்டவனும், தன் சக்கரங்களின் சடசடப்பொலியையே முழக்கங்களாகக் கொண்ட மேகத்துக்கு ஒப்பான தேரைக் கொண்டவனும், தன் கணைகளின் “விஸ்” ஒலியாலே மிகக் கடுமையானவனாகத் தெரிபவனும், பயங்கரமான மேகத்துக்கொப்பான கோபத்தைக் கொண்டவனும், புயலைப் போன்றோ, மேகத்தைப் போன்ற வேகத்தைக் கொண்டவனும், எதிரியின் முக்கிய அங்கங்களையே எப்போதும் துளைப்பவனும், கணைகளைத் தரித்துக் கொண்டு பயங்கரமாகத் தோன்றுபவனும், காலனைப் போலவே திசைகள் அனைத்தையும் மனிதக் குருதியால் குளிக்க வைப்பவனும், கடுமுழுக்கம் செய்பவனும், பயங்கர முகத்தோற்றம் கொண்டவனும், காண்டீவத்தைத் தரித்துக் கொண்டு, துரியோதனன் தலைமையிலான என் வீரர்களின் மேல் கல்லில் கூர்த்தீட்டப்பட்டவையும், கழுகிறகுகளால் ஆனவையுமான கணைகளைத் தொடர்ச்சியாகப் பொழிபவனும், பெரும் புத்திக்கூர்மை கொண்ட வீரனும், பெரும் சக்தி கொண்ட தேர்வீரனுமான அந்தப் பீபத்சு {அர்ஜுனன்} உங்களிடம் வந்த போது, ஐயோ, உங்கள் மனநிலை எப்படி இருந்தது?

பெரும் குரங்கைத் தன் கொடியில் கொண்ட அந்த வீரன், அடர்த்தியான கணை மழையால் ஆகாயத்தைத் தடுத்தபோது, அந்தப் பார்த்தனை {அர்ஜுனனைக்} கண்ட உங்கள் மன நிலை எப்படி இருந்தது? அர்ஜுனன், தான் வரும் வழியிலேயே கடும் சாதனைகளை அடைந்து, காண்டீவத்தின் நாணொலியால் உங்கள் துருப்புகளைக் கொன்றபடி உங்களை எதிர்த்தானா? சூறாவளியானது சேர்ந்திருக்கும் மேகத்திரள்களை அழிப்பதைப் போலவோ, நாணற்காடுகளை அவற்றின் ஊடாகப் பாய்ந்து சாய்ப்பதைப் போலவோ தனஞ்சயன் {அர்ஜுனன்} [1] உங்கள் உயிர்களை எடுத்தானா? காண்டீவதாரியை {அர்ஜுன்னைப்} போரில் தாங்கிக் கொள்ள வல்ல மனிதன் எவன் இருக்கிறான்? (பகையணியின்) படையின் முகப்பில் இவன் {அர்ஜுனன்} இருக்கிறான் என்று கேட்டாலே, ஒவ்வொரு எதிரியின் இதயமும் இரண்டாகப் பிளந்து விடுமே!

[1] கங்குலியில் இந்த இடத்தில் துரியோதனன் என்ற பெயரே இருக்கிறது. ஆனால் இது பொருந்தி வராததால் இங்கே தனஞ்சயன் என்று மாற்றியிருக்கிறேன். வேறொரு பதிப்பிலும், மன்மதநாததத்தரின் பதிப்பிலும் இந்த இடத்தில் தனஞ்சயன் என்றே இருக்கிறது.

துருப்புகள் நடுங்கி, வீரர்களே கூட அச்சத்தால் பீடிக்கப்பட்ட அந்தப் போரில், துரோணரைக் கைவிடாமல் இருந்தோர் யாவர்? அச்சத்தால் அவரை {துரோணரைக்} கைவிட்ட கோழைகள் யாவர்? போரில் மனித சக்திக்கு அப்பாற்பட்ட போராளிகளையும் வீழ்த்திய தனஞ்சயனின் {அர்ஜுனனின்} வடிவத்தில் வந்த காலனை {மரணத்தை} உயிருக்குக் கிஞ்சிற்றும் அஞ்சாமல் முகத்துக்கு முகம் நேராகச் சந்தித்தோர் யாவர்? மேகங்களின் முழக்கத்திற்கு ஒப்பான காண்டீவ ஒலியையும், வெண்குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் வரும் அந்த வீரனின் {அர்ஜுனனின்} வேகத்தையும் என் துருப்புகள் தாங்க இயன்றவையல்ல. விஷ்ணுவை {கிருஷ்ணனைத்} தேரோட்டியாகவும், தனஞ்சயனை {அர்ஜுனனைப்} போர் வீரனாகவும் கொண்ட அந்தத் தேர், தேவர்களும் அசுரர்களும் ஒன்று சேர்ந்தாலும் வீழ்த்தப்பட முடியாதது என்றே நான் கருதுகிறேன்.

மென்மையானவனும், இளைஞனும், துணிச்சல்மிக்கவனும், மிக அழகிய முகத் தோற்றம் கொண்டவனும், புத்திக்கூர்மை, திறம் மற்றும் விவேகத்தைக் கொடையாகக் கொண்டவனும், போரில் கலங்கடிக்கப்பட முடியா ஆற்றல் கொண்டவனும், பாண்டுவின் மகனுமான நகுலன், பேரொலியுடன் பகைவீரர்கள் அனைவரையும் பீடித்து, துரோணரை நோக்கி விரைந்த போது, அவனை {நகுலனைச்} சூழ்ந்து கொண்ட (என் படை) வீரர்கள் யாவர்?

கடும் நஞ்சுமிக்கக் கோபக்காரப் பாம்புக்கு ஒப்பானவனும், வெண் குதிரைகளைக் கொண்டவனும், போரில் வெல்லப்பட முடியாதவனும், மெச்சத்தகுந்த நோன்புகளை நோற்பவனும், தன் காரியங்களில் கலங்கடிக்கப்பட முடியாதவனும், அடக்கத்தைக் கொடையாகக் கொண்டவனும், போரில் வீழ்த்தப்பட முடியாதவனுமான சகாதேவன் நம்மிடம் வந்தபோது, அவனை {சகாதேவனைச்} சூழ்ந்து கொண்ட (என் படை) வீரர்கள் யாவர்?

சௌவீர மன்னனின் பெரும்படையை நொறுக்கி, சீரான அங்கங்களைக் கொண்ட அழகிய போஜக் கன்னிகையைத் தன் மனைவியாகக் கொண்டவனும், மனிதர்களில் காளையும், உண்மை, உறுதி, துணிச்சல் மற்றும் பிரம்மச்சரியத்தை எப்போதும் கொண்டவனும், பெரும் வலிமையைக் கொடையாகக் கொண்டவனும், எப்போதும் உண்மை பயில்பவனும், எப்போதும் உற்சாகமிழக்காதவனும், வெல்லப்பட முடியாதவனும், போரில் வாசுதேவனுக்கு {கிருஷ்ணனுக்கு} இணையானவனும், அவனாலேயே {கிருஷ்ணனாலேயே} தன்னைப் போன்ற இரண்டாமவன் என்று கருதப்பட்டவனும், தனஞ்சயன் {அர்ஜுனன்} அளித்த கல்வியால் கணைகளைப் பயன்படுத்துவதில் முதன்மையானவனும், ஆயுதங்களில் பார்த்தனுக்கே {அர்ஜுனனுக்கே} இணையான போர்வீரனும், யுயுதானன் என்று அழைக்கப்பட்டவனுமான அந்தச் சாத்யகி, ஓ!, துரோணரை அணுகமுடியாதபடி தடுத்த (என் படை) வீரர்கள் யாவர்?

விருஷ்ணிகளில் முதன்மையான வீரனும், வில்லாளிகள் அனைவரிலும் பெரும் துணிச்சல் கொண்டவனும், ஆயுதங்களில் (அதன் பயன்பாட்டிலும், அறிவிலும்) ராமருக்கு {பரசுராமருக்கு} இணையானவனுமான அந்தச் சாத்வத குலத்தவனிடம் {சாத்யகியிடம்} ஆற்றல், புகழ், உண்மை {சத்தியம்}, உறுதி, புத்திக்கூர்மை, வீரத்தன்மை, பிரம்மஞானம், உயர்ந்த ஆயுதங்கள் ஆகியன கேசவனிடம் {கிருஷ்ணனிடம்} நிலைபெற்றிருக்கும் மூவுலகங்களைப் போல நிலைபெற்றிருக்கின்றன. இந்தச் சாதனைகள் அனைத்தையும் கொண்டவனும், தேவர்களாலேயே தடுக்கப்பட முடியாதவனும், பெரும் வில்லாளியுமான அந்தச் சாத்யகியைச் சூழ்ந்து கொண்ட (என் படை) வீரர்கள் யாவர்?

பாஞ்சாலர்களில் முதன்மையானவனும், வீரமும், உயர்பிறப்பும் கொண்டவனும், உயர் பிறப்பைக் கொண்ட வீரர்கள் அனைவருக்கும் பிடித்தமானவனும், போரில் நற்செயல்களையே செய்பவனும், அர்ஜுனனின் நன்மையில் எப்போதும் ஈடுபடும் இளவரசனும், என் தீமைக்காகவே பிறந்தவனும், யமனுக்கோ, வைஸ்ரவணனுக்கோ {குபேரனுக்கோ}, ஆதித்யனுக்கோ, மகேந்திரனுக்கோ, வருணனுக்கோ இணையானவனும், பெரும் தேர்வீரனாகக் {மாகரதனாகக்} கருதப்படும் இளவரசனும், போரின் களத்தில் தன் உயிரையே விடத் துணிந்தவனுமான உத்தமௌஜஸ்ஸை, ஓ!, சூழ்ந்து கொண்ட (என் படை) வீரர்கள் யாவர்?

சேதிகளில் தனி வீரனாக வெளிப்பட்டு, அவர்களைக் {சேதிகளைக்} கைவிட்டு பாண்டவர்களின் தரப்பை அரவணைத்த திருஷ்டகேது, துரோணரை நோக்கி விரைந்த போது, அவனை எதிர்த்தவர்கள் (என் படைவீரர்களில்) யாவர்?

கிரிவ்ராஜத்தில் [2] பாதுகாப்பாக இருந்த இளவரசன் துர்ஜயனைக் கொன்ற துணிச்சல்மிக்கக் கேதுமான், துரோணரை அணுகமுடியாதபடி தடுத்த (என் படை) வீரர்கள் யாவர்?

[2] வேறொரு பதிப்பில் இவ்வரி, “அபராந்த நாட்டில் கிரித்வார நகரத்தில் (எவ்விதத்தாலும்) நெருங்க முடியாத இளவரசனைக் கொன்ற கேதுமான் எனும் வீரனைத் துரோணரிடம் நாடாமல் எவன் தடுத்தான்?” என்று இருக்கிறது.

மனிதர்களில் புலியும், தன் (மேனியின்) ஆண்மை மற்றும் பெண்மையின் தகுதிகளையும், தகுதியின்மைகளையும் அறிந்தவனும் [3], யக்ஞசேனன் {துருபதன்} மகனும், போரில் உயர் ஆன்ம பீஷ்மரின் மரணத்திற்குக் காரணமாக அமைந்தவனுமான சிகண்டி துரோணரை நோக்கி விரைந்த போது அவனைச் சூழ்ந்து கொண்ட (என் படையின்) வீரர்கள் யாவர்?

[3] வேறொரு பதிப்பில் இவ்வரி, “பெண் மற்றும் ஆண்களின் குணா குணங்களை அறிந்த சிறந்த ஆண்மகன்” என்று இருக்கிறது.

விருஷ்ணி குலத்தின் முதன்மையான வீரனும், வில்லாளிகள் அனைவரின் தலைவனும், தனஞ்சயனை {அர்ஜுனனை} விடப் பெரும் அளவுக்கான சாதனைகள் அனைத்தையும் கொண்ட துணிவுமிக்க வீரனும், ஆயுதங்கள், உண்மை, பிரம்மச்சரியம் ஆகிவற்றை எப்போதும் கொண்டவனும், சக்தியில் வாசுதேவனுக்கும் {கிருஷ்ணனுக்கும்}, பலத்தில் தனஞ்சயனுக்கு {அர்ஜுனனுக்கும்} இணையானவனும், ஆதித்யனுக்கு இணையான காந்தியைக் கொண்டவனும், பிருஹஸ்பதிக்கு இணையான புத்தியைக் கொண்டவனும், வாயை அகலத் திறந்த காலனுக்கு ஒப்பானவனுமான அந்த உயர் ஆன்ம அபிமன்யு, துரோணரை நோக்கி விரைந்த போது, அவனைச் சூழ்ந்து கொண்ட (என் படையின்) வீரர்கள் யாவர்? பயங்கர அறிவு கொண்ட இளைஞனும், பகையணி வீரர்களைக் கொல்பவனுமான அந்தச் சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, ஓ!, துரோணரை நோக்கி விரைந்த போது உங்கள் மன நிலை எப்படி இருந்தது?

மனிதர்களில் புலிகளான திரௌபதியின் மகன்கள், கடலை நோக்கிச் செல்லும் ஆறுகளைப் போலப் போரில் துரோணரை எதிர்த்து விரைந்த போது அவர்களைச் சூழ்ந்து கொண்ட வீரர்கள் யாவர்?

பனிரெண்டு வயதிலேயே (குழந்தைத்தனமான) விளையாட்டுகள் அனைத்தையும் கைவிட்ட பிள்ளைகளும், சிறப்பு மிக்க நோன்புகளை நோற்றவர்களும், ஆயுதங்களுக்காகப் பீஷ்மரிடம் காத்திருந்தவர்களும், திருஷ்டத்யும்னனின் வீர மகன்களுமான க்ஷத்ரஞ்சயன், க்ஷத்ரதேவன், கர்வத்தைப் போக்கும் க்ஷத்ரவர்மன், மனதன் ஆகியோர், ஓ, துரோணரை அணுகாதபடித் தடுத்தது யார்?

போரில் நூறு தேர்வீரர்களுக்கும் மேன்மையானவனாக விருஷ்ணிகளால் கருதப்படும் சேகிதானன் துரோணரை அணுகாதபடி, ஓ!, அந்தப் பெரும் வில்லாளியைத் தடுத்தது யார்? [4]

[4] இங்கே இதற்கு மேலும் ஒரு வரி வேறொரு பதிப்பில், “வெல்லப்பட முடியாதவனும், உதாரஸ்வாமுள்ளவனும், கலிங்கர்களின் கன்னியைப் போரில் கவர்ந்தவனுமான வார்த்தக்ஷேமியை {சுசர்மனைத்} துரோணரிடம் இருந்து தடுத்தவன் எவன்?” என்றிருக்கிறது

அறம்சார்ந்தோரும், ஆற்றல் கொண்டோரும், தடுக்கப்பட முடியாதோரும், இந்திரகோபகம் என்றழைக்கப்படும் பூச்சிகளின் நிறத்துக்கு ஒப்பானோரும், சிவப்புக் கவசங்கள், சிவப்பு ஆயுதங்கள் மற்றும் சிவப்பு கொடிகளைக் கொண்டோரும், பாண்டவர்களுக்குத் தாய்வழி முறையில் தம்பிகளும் [5], பின்னவர்களின் வெற்றியை எப்போதும் விரும்புபவர்களுமான கேகயச் சகோதரர்கள் ஐவர், துரோணரைக் கொல்ல விரும்பி அவரை நோக்கி விரைந்த போது, அந்த வீரமிக்க இளவரசர்களை, ஓ!, சூழ்ந்து கொண்ட (என் படை) வீரர்கள் யாவர்?

[5] பாண்டவர்களுக்குச் சித்தி மகன்கள்; அதாவது குந்தியின் தங்கை மகன்கள்.

போரின் தலைவனும், வில்லாளிகளில் முதன்மையானவனும், குறிதவறா வீரனும், பெரும் பலம் கொண்டவனும், வாரணாவதத்தில் எவனைக் கொல்ல விரும்பி கோபம் நிறைந்த மன்னர்கள் பலர் சேர்ந்து ஆறு மாதங்கள் ஒன்றாகப் போரிட்டும் வீழ்த்தப்பட முடியாதவனான மனிதர்களில் புலியும், (சுயம்வரத்தில்) ஒரு கன்னியை மனைவியாக அடைய விரும்பி வலிமைமிக்கத் தேர்வீரனான காசியின் இளவரசனை ஒரு பல்லத்தினால் வாரணாசி போரில் வீழ்த்தியவனுமான யுயுத்சுவை, ஓ!, தடுத்த (என் படையின்) வீரன் யார்?

பாண்டவர்களின் ஆலோசகர்களின் தலைவனும், துரியோதனனுக்குத் தீமை செய்வதில் ஈடுபடுபவனும், துரோணரின் அழிவுக்காக உண்டாக்கப்பட்டவனுமான திருஷ்டத்யும்னன், போரில் என் வீரர்கள் அனைவரையும் எரித்து என் படையணிகள் அனைத்தையும் உடைத்துக் கொண்டு துரோணரை நோக்கிச் சென்ற போது, அந்த வலிமைமிக்க வில்லாளியை {திருஷ்டத்யும்னனை}, ஓ!, சூழ்ந்து கொண்ட (என் படை) வீரர்கள் யாவர்?

ஆயுதங்களை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனும், துருபதன் மடியிலேயே வளர்க்கப்பட்டவனும், (அர்ஜுனனின்) ஆயுதங்களால் பாதுகாக்கப்பட்டவனுமான சிகண்டியை [6], ஓ!, துரோணரை அணுகவிடாதபடித் தடுத்த (என் படை) வீரர்கள் யாவர்?

[6] சைகண்டினம் என்று மூலத்தில் உள்ளதாக வேறொரு பதிப்பில் சொல்லப்பட்டுள்ளது.

இந்தப் பூமியைத் தன் தேரின் சடசடப்பொலியால் தோல்கச்சையாகச் சுற்றியவனும், வலிமைமிக்கத் தேர்வீரனும், எதிரிகளைக் கொல்வோர் அனைவரிலும் முதன்மையானவனும், சிறந்த உணவு, பானம் மற்றும் கொடைகளை அபரிமிதமாக அளித்துப் பத்து குதிரை வேள்விகளை {அஸ்வமேத யாகங்களைத்} தடையில்லாமல் செய்தவனும், தன் குடிமக்களைத் தன் பிள்ளைகளைப் போல எண்ணி ஆண்டவனும், கங்கையின் ஓடையில் உள்ள மணற்துகள்களைப் போல எண்ணிலாத பசுகளை வேள்விகளில் தானமாக அளித்தவனும், வேறு யாராலும் செய்யப்படாத, இனியும் செய்ய முடியாத சாதனைகளைச் செய்தவனும், கடுமையான சாதனைகளைச் செய்த பிறகு “உசீநரன் மகனுக்கு இணையாக, அசையும் மற்றும் அசையாத உயிரினங்களைக் கொண்ட மூவுலகத்திலும் வேறு இரண்டாம் உயிரினத்தை நாங்கள் காண வில்லை. மனிதர்களால் அடையப்பட முடியாத (மறுமையில்) உலகங்களை அடைந்தோரிலும் இவனைப் போல எவனும் இல்லை. இனியும் இருக்க மாட்டான்” என்று தேவர்களாலேயே சொல்லப்பட்டவனும், உசீநரன் மகனின் பேரனுமான அந்தச் சைப்யன் (துரோணரிடம்) வந்த போது, ஓ, (என் படைகளுக்கு மத்தியில்) தடுத்தவர் யார்?

மத்ஸ்யர்களின் மன்னனான விராடனின் தேர்ப் பிரிவானது போரில் துரோணரை அடைந்த போது, அதைச் சூழ்ந்து கொண்ட (என் படை) வீரர்கள் யாவர்?

என் மகன்களுக்கு முள்ளாக இருந்தவனும், பாண்டவர்களின் வெற்றியை எப்போதும் விரும்பும் வீரனும், பெரும் மாய சக்திகளையும், பெரும் பலம் மற்றும் ஆற்றலையும் கொண்ட வீர ராட்சசனும், ஒரே நாளில் பீமனுக்குப் பிறந்தவனும் [7], யாரிடம் நான் பெரும் அச்சங்களைக் கொண்டிருந்தேனோ அந்தப் பெரும் உடல் கொண்ட ராட்சசன் கடோத்கசனைத் துரோணரிடம் அணுகமுடியாதபடிச் செய்தவன் யார்?

[7] கடோத்கசன் பீமசேனன் மூலம் பிறந்த ஹிடிம்பையின் மகனாவான். ராட்சசப் பெண்கள் தாங்கள் கருவுற்ற அந்த நாளிலேயே ஈன்றெடுப்பார்கள், அவர்களின் வாரிசுகளும் தாங்கள் பிறந்த அந்த நாளிலேயே இளமையை அடைவார்கள் என இங்கே விளக்குகிறார் கங்குலி.

ஓ! சஞ்சயா, யாருக்காக இவர்களும் இன்னும் பலரும் போர்க்களத்தில் தங்கள் உயிரையே விடத் தயாராக இருக்கிறார்களோ அவர்களால் எதைத்தான் வெல்லமுடியாது?

சார்ங்கம் {சாரங்கம்} என்று அழைக்கப்படும் வில்லைத் தரிப்பவனும், உயிரினங்கள் அனைத்திலும் பெரியவனும் ஆனவனே {கிருஷ்ணனே} அவர்களுக்குப் {பாண்டவர்களுக்குப்} புகலிடமாகவும், நன்மை செய்பவனாகவும் இருக்கும்போது, அந்தப் பிருதையின் {குந்தியின்} மகன்கள் தோல்வியைச் சந்திப்பது எவ்வாறு? உண்மையில், வாசுதேவன் {கிருஷ்ணன்} உலகங்கங்கள் அனைத்தின் பெரும் ஆசானும், அனைத்தின் தலைவனும், நிச்சயமானவனும் ஆவான். தெய்வீக ஆன்மாவும் எல்லையில்லா சக்தியும் கொண்ட {அந்த} நாராயணனே போரில் மனிதர்களுக்குப் புகலிடமாவான். விவேகிகள் அவனது தெய்வீகச் செயல்களை உரைக்கின்றனர். எனது உறுதியை மீட்பதற்காக நானும் அவை அனைத்தையும் அர்ப்பணிப்புடன் {பக்தியுடன்} உரைப்பேன்” {என்றான் திருதராஷ்டிரன்}.


ஆங்கிலத்தில் | In English