The greatness of Krishna listed by Dhritarashtra! | Drona-Parva-Section-011 | Mahabharata In Tamil
(துரோணாபிஷேக பர்வம் – 11)
பதிவின் சுருக்கம் : கிருஷ்ணனின் வரலாற்றை நினைவுகூர்ந்த திருதராஷ்டிரன் தன் மகன்களின் நிலையை எண்ணி வருந்தியது...
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, கோவிந்தன் {கிருஷ்ணன்} வேறு எந்த மனிதனாலும் சாதிக்க முடியாத அருஞ்செயல்களைச் செய்தான், அந்த வாசுதேவனின் {கிருஷ்ணனின்} தெய்வீகச் செயல்களைக் கேட்பாயாக.
ஓ! சஞ்சயா, மாட்டிடையன் (நந்தன்) குடும்பத்தில் வளர்க்கப்பட்ட அந்த உயர் ஆன்மா கொண்டவன் {கிருஷ்ணன்}, சிறுவனாக இருந்தபோதே தன் கரங்களின் வலிமையை மூவுலகங்களும் அறியச் செய்தான்.
பலத்தில் (தெய்வீக குதிரையான) உச்சைஸ்வனுக்கு இணையானவனும், காற்றின் வேகத்தைக் கொண்டவனும், யமுனையின் (கரைகளில் உள்ள) காடுகளில் வாழ்ந்தவனுமான ஹயராஜனைக் [1] கொன்றான்.
[1] ஹயராஜன் என்பான் உண்மையில் குதிரைகளின் இளவரசனாவான். கேசி என்றும் அழைக்கப்பட்ட அவன் குதிரையின் வடிவில் இருந்த அசுரனாவான் என்று கங்குலி இங்கே விளக்குகிறார்.
பசுக்களுக்குக் காலனாக எழுந்தவனும், பயங்கரச் செயல்கள் புரிபவனும், காளையின் வடிவில் இருந்தவனுமான தானவனைத் {ரிஷபனைத்} தன் வெறும் கைகள் இரண்டால் தன் குழந்தைப் பருவத்திலேயே கொன்றான்.
தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட அவன் {கிருஷ்ணன்}, பிரலம்பன், ஜம்பன், பீடன் மற்றும் தேவர்களுக்குப் பயங்கரனாக இருந்த முரண் ஆகிய வலிமைமிக்க அசுரர்களையும் கொன்றான்.
அதுபோலவே ஜராசந்தனால் பாதுகாக்கப்பட்ட பயங்கர சக்தி கொண்ட கம்சனும், அவனது தொண்டர்களும், தன்னாற்றலின் துணையை மட்டுமே [2] கொண்ட கிருஷ்ணனால் போரில் கொல்லப்பட்டனர்.
[2] எந்த ஆயுதங்களும் இல்லாமல் என இங்கே விளக்குகிறார் கங்குலி.
போரில் பெரும் வல்லமையும் ஆற்றலும் கொண்டவனும், ஒரு முழு அக்ஷௌஹிணியின் தலைவனும், போஜர்களின் மன்னனும், கம்சனின் இரண்டாவது தம்பியும், சூரசேனர்களின் மன்னனுமான சுநாமன், எதிரிகளைக் கொல்பவனும், பலதேவனைத் தனக்கு அடுத்தவனாகக் கொண்டவனுமான அந்தக் கிருஷ்ணனால் அவனுடைய துருப்புகளுடன் சேர்த்துப் போரில் எரிக்கப்பட்டான்.
பெரும் கோபம் கொண்ட இருபிறப்பாள முனிவர் {துர்வாசர்}, {கிருஷ்ணனின்} (ஆராதனையில் மனம் நிறைந்து) அவனுக்கு {கிருஷ்ணனுக்கு} வரங்களை அளித்தார்.
தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனும், பெரும் துணிச்சல் மிக்கவனுமான கிருஷ்ணன், ஒரு சுயம்வரத்தில் மன்னர்கள் அனைவரையும் வீழ்த்தி, காந்தாரர்கள் மன்னனின் மகளைக் கவர்ந்தான். கோபம் கொண்ட அந்த மன்னர்களை, ஏதோ அவர்கள் பிறப்பால் குதிரைகளைப் போல அவன் {கிருஷ்ணன்}, தன் திருமணத் தேரில் பூட்டிச் சாட்டையால் காயப்படுத்தினான்.
வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, வேறொருவனை {பீமனைக்} கருவியாகப் பயன்படுத்தி ஒரு முழு அக்ஷௌஹிணி துருப்புகளுக்குத் தலைவனான ஜராசந்தனைக் கொல்லச் செய்தான் [3].
[3] மகதர்களின் பலமிக்க மன்னனும், கிருஷ்ணனின் உறுதியான எதிரியுமான ஜராசந்தன், கிருஷ்ணனின் தூண்டுதலின் பேரில் பீமனால் கொல்லப்பட்டான் என இங்கே விளக்குகிறார் கங்குலி.
வலிமைமிக்கக் கிருஷ்ணன், மன்னர்களின் தலைவனான சேதிகளின் வீர மன்னனையும் {சிசுபாலனையும்}, ஏதோ ஒரு விலங்கை {கொல்வதைப்} போல, ஆர்க்கியம் சம்பந்தமாகப் பின்னவன் சச்சரவை ஏற்படுத்திய சந்தர்ப்பத்தில் கொன்றான்.
தன் ஆற்றலை வெளிப்படுத்திய மாதவன் {கிருஷ்ணன்} ஆகாயத்தில் இருந்ததும், சால்வனால் காக்கப்பட்டதும், நாட முடியாததுமான “சௌபம்” என்று அழைக்கப்பட்ட தைத்திய நகரத்தைக் கடலுக்குள் வீசினான்.
அங்கர்கள், வங்கர்கள், கலிங்கர்கள், மகதர்கள், காசிகள், கோசலர்கள், வாத்சியர்கள், கார்க்யர்கள், பௌண்டரர்கள் ஆகிய இவர்களை அனைவரையும் அவன் {கிருஷ்ணன்} போரில் வீழ்த்தினான்.
அவந்திகள், தெற்கத்தியர்கள், மலைவாசிகள், தசேரகர்கள், காஸ்மீரர்கள், ஔரஷிகர்கள், பிசாசர்கள், சமுத்கலர்கள், காம்போஜர்கள், வாடதானர்கள், சோழர்கள், பாண்டியர்கள், ஓ! சஞ்சயா, திர்கர்த்தர்கள், மாலவர்கள், வீழ்த்துவதற்குக் கடினமான தரதர்கள், பல்வேறு ஆட்சிப்பகுதிகளில் இருந்த வந்த கசர்கள், சகர்கள், தொண்டர்களுடன் கூடிய யவனர்கள் ஆகியோர் அனைவரும் அந்தத் தாமரைக் கண்ணனால் {கிருஷ்ணனால்} வீழ்த்தப்பட்டனர்.
பழங்காலத்தில் அனைத்து வகை நீர்வாழ் உயிரினங்களாலும் சூழப்பட்ட கடலில் புகுந்து நீரின் ஆழத்திற்குள் இருந்த வருணனையும் போரில் வென்றான்.
அந்த ரிஷிகேசன் {கிருஷ்ணன்}, பாதாளத்தின் ஆழங்களில் வாழ்ந்த பஞ்சஜன்யனைப் (பஞ்சஜன்யன் என்ற பெயர் கொண்ட தானவனைப்} போரில் கொன்று பாஞ்சஜன்யம் என்று அழைக்கப்படும் தெய்வீக சங்கை அடைந்தான்.
வலிமைமிக்கவனான கேசவன் {கிருஷ்ணன்}, பார்த்தனோடு {அர்ஜுனனோடு} சேர்ந்து காண்டவ வனத்தில் அக்னியை மனம் நிறையச் செய்து, வெல்லப்படமுடியாத நெருப்பாயுதத்தையும் {ஆக்னேயாஸ்திரத்தையும்}, (சுதர்சனம் என்றழைக்கப்படும்} சக்கரத்தையும் பெற்றான்.
வீரனான கிருஷ்ணன், கருடன் மீதேறிச் சென்று அமராவதியை (அமராவதிவாசிகளை} அச்சுறுத்தி மகேந்திரனிடம் இருந்து {இந்திரனின் அரண்மனையில் இருந்து} பாரிஜாதத்தை {பாரிஜாதம் என்றழைக்கப்பட்ட தெய்வீக மலரைக்} [4] கொண்டு வந்தான். கிருஷ்ணனின் ஆற்றலை அறிந்த சக்ரன் {இந்திரன்} அச்செயலை அமைதியாகப் பொறுத்தான்.
[4] அமராவதியில் இருந்து பூமிக்குப் பாரிஜாதத்தை மறுநடவு செய்தான் எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். வேறொரு பதிப்பில் “பாரிஜாத மரத்தைக் கொண்டுவந்தான்” என்றிருக்கிறது.
மன்னர்களில், கிருஷ்ணனால் வீழ்த்தப்பட்டாத எவரும் இருப்பதாக நாம் கேட்டதில்லை.
ஓ! சஞ்சயா, என் சபையில் அந்தக் கமலக்கண்ணன் செய்த அற்புதமான செயலை அவனைத் தவிர இவ்வுலகத்தில் வேறு எவன் செய்யத்தகுந்தவன்?
அர்ப்பணிப்பால் {பக்தியால்} சரணமடைந்த நான், கிருஷ்ணனை ஈசுவரனாகக் கண்ட காரணத்தினால், (அந்த அருஞ்செயலைக் குறித்த) அனைத்தும் என்னால் நன்கு அறியப்பட்டது. ஓ! சஞ்சயா, அதைச் சாட்சியாக என் கண்களால் கண்ட என்னால், பெரும் சக்தியும், பெரும் புத்திக்கூர்மையும் கொண்ட ரிஷிகேசனுடைய (முடிவற்ற) சாதனைகளின் எல்லையைக் காண இயலவில்லை.
கதன், சாம்பன், பிரத்யும்னன், விதூரதன், [5] சாருதேஷ்ணன், சாரணன், உல்முகன், நிசடன், வீரனான ஜில்லிபப்ரு, பிருது, விபிருது, சமீகன், அரிமேஜயன் ஆகிய இவர்களும், தாக்குவதில் சாதித்தவர்களான இன்னும் பிற வலிமைமிக்க விருஷ்ணி வீரர்களும், விருஷ்ணி வீரனான அந்த உயர் ஆன்ம கேசவனால் {கிருஷ்ணனால்} அழைக்கப்படும்போது, பாண்டவப் படையில் தங்கள் நிலைகளை எடுத்துப் போர்க்களத்தில் நிற்பார்கள். பிறகு (என் தரப்பில்) அனைத்தும் பெரும் ஆபத்துக்குள்ளாகும். இதுவே என் எண்ணம்.
[5] வேறொரு பதிப்பில் இங்கே அகாவஹன், அனிருத்தன், என்று கூடுதல் பெயர்களும் இருக்கின்றன.
ஜனார்த்தனன் எங்கே இருக்கிறானோ, அங்கே பத்தாயிரம் யானைகளின் பலம் கொண்டவனும், கைலாச சிகரத்திற்கு ஒப்பானவனும், காட்டு மலர்களாலான மாலைகளை அணிந்தவனும், கலப்பையை ஆயுதமாகத் தரித்தவனுமான வீர ராமன் {பலராமன்} இருப்பான்.
ஓ! சஞ்சயா, அனைவருக்கும் தந்தை அந்த வாசுதேவன் என மறுபிறப்பாளர்கள் எவனைச் சொல்கிறார்களோ, அந்த வாசுதேவன் {கிருஷ்ணன்} பாண்டவர்களுக்காகப் போரிடுவானா? ஓ! மகனே, ஓ! சஞ்சயா, பாண்டவர்களுக்காக அவன் கவசம் தரித்தானெனில், அவனது எதிராளியாக இருக்க நம்மில் ஒருவரும் இல்லை.
கௌரவர்கள், பாண்டவர்களை வீழ்த்த நேர்ந்தால், அந்த விருஷ்ணி குலத்தோன் {கிருஷ்ணன்}, பின்னவர்களுக்காக {பாண்டவர்களுக்காக} தன் வலிமைமிக்க ஆயுதத்தை எடுப்பான். அந்த மனிதர்களில் புலி, அந்த வலிமைமிக்கவன் {கிருஷ்ணன்}, போரில் மன்னர்கள் அனைவரையும், கௌரவர்களையும் கொன்று குந்தியின் மகனிடம் {யுதிஷ்டிரனிடம்} முழு உலகத்தையும் கொடுப்பான். ரிஷிகேசனை {கிருஷ்ணனைத்} தேரோட்டியாகவும், தனஞ்சயனை {அர்ஜுனனை} அதன் போராளியாகவும் கொண்ட தேரை, வேறு எந்தத் தேரால் போரில் எதிர்க்க முடியும்? எவ்வழியிலும் குருக்களால் {கௌரவர்களால்} வெற்றியை அடைய முடியாது. எனவே, அந்தப் போர் எவ்வாறு நடைபெற்றது என்பது அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக.
அர்ஜுனன், கேசவனின் {கிருஷ்ணனின்} உயிராவான், மேலும் கிருஷ்ணனே எப்போதும் வெற்றியாவான், கிருஷ்ணனிலேயே எப்போதும் புகழும் இருக்கிறது. அனைத்து உலகங்களிலும் பீபத்சு {அர்ஜுனன்} வெல்லப்படமுடியாதவனாவான். கேசவனிலேயே முடிவில்லாத புண்ணியங்கள் அதிகமாக இருக்கிறது. மூடனான துரியோதனன் விதியின் காரணமாகக் கிருஷ்ணனை, அந்தக் கேசவனை அறியாததால், தன் முன்னே காலனின் பாசத்தை {சுருக்குக் கயிற்றைக்} கொண்டிருப்பதாகத் தெரிகிறது. ஐயோ, தாசார்ஹ குலத்தோனான கிருஷ்ணனையும், பாண்டுவின் மகனான அர்ஜுனனையும் துரியோதனன் அறியவில்லை.
இந்த உயர் ஆன்மாக்கள் புராதனத் தேவர்களாவர். அவர்களே நரனும், நாராயணனுமாவர். உண்மையில் அவர்கள் ஒரே ஆன்மாவைக் கொண்டவர்களாகயிருப்பினும், பூமியில் அவர்கள் தனித்தனி வடிவம் கொண்டவர்களாக மனிதர்களால் காணப்படுகிறார்கள். உலகம் பரந்த புகழைக் கொண்ட இந்த வெல்லப்பட முடியாத இணை நினைத்தால், தங்கள் மனத்தாலேயே இந்தப் படையை அழித்துவிட முடியும். அவர்கள் கொண்ட மனிதநேயத்தின் விளைவாலேயே அவர்கள் அதை {அழிவை} விரும்பவில்லை [6].
[6] தேவர்களாக இருப்பினும் அவர்கள் தங்கள் பிறப்பை மனிதர்களாகக் கொண்டிருக்கிறார்கள், எனவே அவர்கள் மனிதர்களின் வழிகளிலேயே தங்கள் நோக்கங்களை அடைவார்கள். இதன் காரணமாகவே அவர்கள் இந்தப் படையை அழிக்க விரும்பாமல் இருக்கிறார்கள் என இங்கே விளக்குகிறார் கங்குலி.
பீஷ்மரின் மரணம் மற்றும், உயர் ஆன்ம துரோணரின் கொலை ஆகியன யுகமே மாறிவிட்டதைப் போல உணர்வுகளைப் புரட்டுகின்றன. உண்மையில், பிரம்மச்சரியத்தாலோ, வேதங்களின் கல்வியாலோ, (அறச்) சடங்குகளாலோ, ஆயுதங்களாலோ எவனாலும் மரணத்தைத் தவிர்க்க இயலாது. போரில் வெல்லப்பட முடியாதவர்களும், உலகங்கள் அனைத்திலும் மதிக்கப்படுபவர்களும், ஆயுதங்களை அறிந்த வீரர்களுமான பீஷ்மர் மற்றும் துரோணரின் கொலையைக் கேட்டும், ஓ! சஞ்சயா, நான் இன்னும் ஏன் உயிரோடு இருக்கிறேன்?
பீஷ்மர் மற்றும் துரோணரின் மரணத்தின் விளைவாக, ஓ! சஞ்சயா, யுதிஷ்டிரனின் எந்தச் செழிப்பைக் கண்டு நாங்கள் பொறாமை கொண்டோமோ, அதையே இனிமேல் நாங்கள் சார்ந்து வாழ வேண்டியிருக்கும். உண்மையில், என் செயல்களின் விளைவாலேயே குருக்களுக்கு இந்த அழிவு நேர்ந்திருக்கிறது. ஓ! சூதா {சஞ்சயா}, அழிவடையக் கனிந்திருக்கும் இவர்களைக் கொல்ல புல்லும் இடியாக மாறும் [7]. எந்த யுதிஷ்டிரனின் கோபத்தால் பீஷ்மரும், துரோணரும் வீழ்ந்தனரோ அந்த யுதிஷ்டிரன் அடையப்போகும் உலகம் முடிவிலான செழிப்பைக் கொண்டது. அவனது {யுதிஷ்டிரனது} மனநிலையின் விளைவாலேயே நல்லோர் யுதிஷ்டிரனின் தரப்பை அடைந்து என் மகனுக்கு {துரியோதனனுக்குப்} பகையாகினர்.
[7] காலத்தினால் பக்குவம் செய்யப்பட்ட மனிதர்களைக் கொல்லும் விஷயத்தில் புல்லும் கூட வஜ்ராயுதம் போல ஆகிறது.
அனைத்தையும் அழிக்க வந்த குரூரமான அந்தக் காலத்தை {யாராலும்} வெற்றி கொள்ள முடியாது. புத்திமான்களால் ஒருவிதமாகக் கணக்கிடப்பட்ட காரியங்களும் கூட, விதியால் வேறு விதமாக நிகழ்கின்றன. இதுவே என் எண்ணம். எனவே, தவிர்க்க முடியாததும், மிகக் கடுமையான சோக நினைவைத் தரக்கூடியதும், (நம்மால்) கடக்க முடியாததுமான இந்தப் பயங்கரப் பேரிடர் நிகழ்ந்த போது நடந்த அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக” {என்றான் திருதராஷ்டிரன்}.
ஆங்கிலத்தில் | In English |