“Partha! Art thou alive?” asked Krishna | Drona-Parva-Section-019 | Mahabharata In Tamil
(சம்சப்தகவத பர்வம் – 03)
பதிவின் சுருக்கம் : களத்திற்குத் திரும்பிய சம்சப்தகர்களுடன் போரிட்ட அர்ஜுனன்; அர்ஜுனனையும், கிருஷ்ணனையும் கணைகளால் மறைத்த நாராயணர்கள்; கிருஷ்ணார்ஜுனர்கள் மாண்டார்கள் என்று கொண்டாடிய நாராயணர்கள்; அர்ஜுனனைக் காணாத கிருஷ்ணன் அவன் உயிரோடிருக்கிறானா என வினவியது; களத்தில் அர்ஜுனன் ஆடிய ருத்ரதாண்டவம்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “களத்திற்கு மீண்டும் திரும்பி வந்த சம்சப்தகர்களைக் கண்ட அர்ஜுனன், உயர் ஆன்ம வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்}, “ஓ! ரிஷிகேசா {கிருஷ்ணா}, குதிரைகளைச் சம்சப்தகர்களை நோக்கித் தூண்டுவாயாக. இவர்கள் உயிரோடுள்ளவரை போரைக் கைவிடமாட்டார்கள். இதையே {என்றே} நான் நினைக்கிறேன். இன்று என் கரங்களின் பயங்கர வலிமையையும், எனது வில்லின் வலிமையையும் நீ சாட்சியாகக் காண்பாயாக. (யுக முடிவில்) உயிரினங்களைக் கொல்லும் ருத்திரனைப் போல, நான் இவர்கள் அனைவரையும் இன்று கொல்வேன்” என்றான் {அர்ஜுனன்}.
வெல்லப்பட முடியாதவனான கிருஷ்ணன், இவ்வார்த்தைகளைக் கேட்டுப் புன்னகைத்து, மங்கலகரமான பேச்சுகளால் அர்ஜுனனுக்கு மகிழ்வூட்டி, அவன் {அர்ஜுனன்} செல்ல விரும்பிய இடங்களுக்கெல்லாம் அவனை இட்டுச் சென்றான். அந்தத் தேரானது, வெண்குதிரைகளால் இழுத்துச் செல்லப்பட்ட போது, ஆகாயத்தில் செல்லும் தெய்வீகத் தேரைப் {விமானம்} போலவே மிகவும் பிரகாசமானதாக இருந்தது. அது {அந்தத் தேர்}, பழங்காலத்தில் நடந்த தேவாசுரப் போரில் சக்ரனின் {இந்திரனின்} தேரைப் போல வட்டமான நகர்வுகளையும், முன்னோக்கியும், பின்னோக்கியும் எனப் பல்வேறு வகைகளிலான பிற நகர்வுகளையும் வெளிப்படுத்தியது.
பிறகு கோபத்தால் தூண்டப்பட்ட நாராயணர்கள், பல்வேறு விதமான ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு, கணை மழையால் தனஞ்சயனை {அர்ஜுனனை} மறைத்து, அவனைச் சூழ்ந்து கொண்டனர். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, விரைவில் அவர்கள் குந்தியின் மகனையும் {அர்ஜுனனையும்}, கிருஷ்ணனையும் சேர்த்து அந்தப் போரில் கண்ணுக்குப் புலப்படாத வகையில் முழுமையாக மறைத்துவிட்டனர். பிறகு, கோபத்தால் தூண்டப்பட்ட பல்குனன் {அர்ஜுனன்}, தன் சக்தியை இரட்டிப்பாக்கி, (காண்டீவத்தின்) நாணை விரைவாகத் தேய்த்துப் போரில் காண்டீவத்தைப் (உறுதியாகப்) பற்றினான்.
பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, உறுதியான கோபக்குறியீடான சுருக்கங்களைத் தன் புருவத்தில் தோன்றச் செய்து {புருவங்களை நெறித்து}, தேவதத்தம் என்று அழைக்கப்படும் தன் மகத்தான சங்கை ஊதி, பெரும் எண்ணிக்கையிலான எதிரிகளைக் கொல்லவல்ல துவஷ்டிரா {துவஷ்டா} [1] என்று அழைக்கப்படும் ஆயுதத்தை ஏவினான். அதன் பேரில், ஆயிரக்கணக்கான தனித்தனி வடிவங்கள் (அர்ஜுனனாகவும், வாசுதேவனாகவும் {கிருஷ்ணனாகவும்} அங்கே தோன்றத் தொடங்கின. அர்ஜுனன் வடிவிலான அந்தப் பல்வேறு வடிவங்களால் குழம்பிய துருப்புகள், ஒவ்வொருவரையும் அர்ஜுனனாகவே கருதி தங்களுக்குள் ஒருவரையொருவர் தாக்கத் தொடங்கினர்.
[1] வேறொரு பதிப்பில் இந்த வரி, “அவன் கோபத்துக்கு அடையாளமான புருவ நெறித்தலை முகத்தில் உண்டுபண்ணிக் கொண்டு தேவதத்தம் என்கிற பெரிய சங்கை ஊதி, சத்ரு கூட்டங்களைக் கொல்லக்கூடியதும், த்வஷ்டாவைத் தேவதையாகக் கொண்டதுமான அஸ்திர மந்திரத்தை மனத்தினால் ஜபித்தான்” என்று இருக்கிறது.
“இவன் அர்ஜுனன்!”, “இவன் கோவிந்தன்!”, “இவர்கள் பாண்டுவின் மகனும் {அர்ஜுனனும்}, யது குலத்தோனும் {கிருஷ்ணனும்} ஆவர்!” இப்படியே சொல்லிக் கொண்டு, தங்கள் புலன்களை இழந்த அவர்கள் {நாராயணர்கள்}, அந்தப் போரில் ஒருவரை ஒருவர் கொன்றனர். உண்மையில் அந்த வீரர்கள் (ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட போது) பூத்திருக்கும் கின்சுகங்களைப் {பலாச மரங்களைப்} போல அழகாகத் தெரிந்தனர் [2]. அவர்களால் ஏவப்பட்ட ஆயிரக்கணக்கான கணைகளையும் எரித்த அந்த (வலிமைமிக்க ஆயுதம்) அவ்வீரர்களை யமலோகம் அனுப்பியது.
[2] வேறொரு பதிப்பில் இதற்கு மேலும் இன்னும் இருக்கிறது. அது பின்வருமாறு: “அந்த வீரர்கள் இரத்தப் பெருக்குப் பெருகுகின்றவர்களும், இரத்தத்தால் நன்கு நனைக்கப்பட்டவர்களுமாகி யுத்த பூமியில் செஞ்சந்தனக் குழம்பினால் பூசப்பட்டவர்கள் போல விளங்கினார்கள். பிறகு பீபத்சுவானவன் காண்டீவமென்கிற வில்லை வலிமையுடன் அசைவுறச் செய்து, சூரியன் கிரணங்களால் இருளை அடிப்பது போலக் கூர்மையான அம்புகளாலே அவர்களை அடித்தான். மாண்டவர்கள் போக மிகுந்திருக்கின்றன அந்தப் போர்வீரர்கள் மறுபடியும் தனஞ்சயனைச் சூழ்ந்து கொண்டு அம்பு மழைகளாலே அவனைக் குதிரைகளோடும், கொடிமரத்தோடும், தேரோடும் கூடக் கண்ணுக்குப் புலப்படாதபடி செய்தார்கள். அர்ஜுனன் அவர்களால் விடப்பட்ட ஆயிரக்கணக்கான அம்புகளையும், அவர்களுடைய அஸ்திரத்தையும் சாம்பலாகச் செய்து அந்த வீரர்களை யமலோகத்திற்கு அனுப்பினான்” என்று இருக்கிறது. இதில் பெரும்பகுதி கூறியது கூறலாக இருப்பதால் கங்குலி விட்டிருக்கலாம்.
பிறகு பீபத்சு {அர்ஜுனன்}, சிரித்துக் கொண்டே தன் கணைகளால், லலித்தர்களையும், மாலவர்களையும், மாவேல்லகர்களையும், திரிகர்த்த வீரர்களையும் நசுக்கினான். விதியால் தூண்டப்பட்ட அந்த க்ஷத்திரியர்கள் அந்த வீரனால் {அர்ஜுனனால்} இப்படிக் கொல்லப்பட்ட போது, அவர்கள் பார்த்தன் {அர்ஜுனன்} மீது பல்வேறு விதங்களிலான கணை மழைகளைப் பொழிந்தனர். அந்தப் பயங்கரக் கணைகளின் மழைகளில் மூழ்கியதால் அர்ஜுனனையோ, அவனது தேரையோ, கேசவனையோ {கிருஷ்ணனையோ} அதற்கு மேலும் காண முடியவில்லை.
இலக்கைத் தாக்கும் தங்கள் கணைகளைக் கண்ட அவர்கள் {நாராயணர்கள்} மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இரு கிருஷ்ணர்களும் {அர்ஜுனனும், கிருஷ்ணனும்} ஏற்கனவே கொல்லப்பட்டு விட்டதாகக் கருதிய அவர்கள், மகிழ்ச்சிகரமாகத் தங்கள் ஆடைகளைக் காற்றில் அசைத்தனர். ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அந்த வீரர்கள் ஆயிரக்கணக்கான பேரிகைகளையும், மிருதங்கங்களையும் அடித்துத் தங்கள் சங்குகளையும் ஊதி சிங்க முழக்கங்களிட்டனர்.
பிறகு கிருஷ்ணன், வியர்வையில் நனைந்து, மிகவும் பலவீனமடைந்து அர்ஜுனனிடம், “ஓ! பார்த்தா {அர்ஜுனா}, நீ எங்கிருக்கிறாய்? உன்னை நான் காணவில்லை. ஓ! எதிரிகளைக் கொல்பவனே {அர்ஜுனா}, நீ உயிரோடிருக்கிறாயா?” என்றான் {கிருஷ்ணன்}.
அவனது {கிருஷ்ணனின்} வார்த்தைகளைக் கேட்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, தன் எதிரிகளால் பொழியப்பட்ட அந்தக் கணை மழையை, வாயவ்ய ஆயுதத்தின் {வாயவ்யாஸ்திரத்தின்} மூலம் மிக வேகமாக விலக்கினான். பிறகு (அந்த வலிமைமிக்க ஆயுதத்தின் அதி தேவதையான} சிறப்புமிக்க வாயு, ஏதோ அந்தச் சம்சப்தகர்கள் மரங்களின் உலர்ந்த இலைகளைப் போலக் குதிரைகள், யானைகள், தேர்கள் மற்றும் ஆயுதங்களுடன் கூடிய அவர்களின் கூட்டங்களை அடித்துச் சென்றான். காற்றால் அடித்துச் செல்லப்பட்ட அவர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மரங்களில் இருந்து பறந்து செல்லும் பறவை கூட்டங்களைப் போல மிக அழகாகத் தெரிந்தனர்.
இப்படி அவர்களைப் பீடித்த தனஞ்சயன் {அர்ஜுனன்}, கூரிய கணைகளால் அவர்களை நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் பெரும் வேகத்தோடு தாக்கினான். தன் பல்லங்களின் மூலம் அவன் {அர்ஜுனன்}, அவர்களது தலைகளையும், ஆயுதங்களைப் பிடித்திருந்த அவர்களது கரங்களையும் வெட்டினான். அவன் {அர்ஜுனன்} தன் கணைகளால் யானைத் துதிக்கைகளுக்கு ஒப்பான அவர்களது தொடைகளைத் தரையில் வீழ்த்தினான். சிலர் தங்கள் முதுகுகளிலும், கரங்களிலும், கண்களிலும் காயம்பட்டனர்.
இப்படியே, தனஞ்சயன் {அர்ஜுனன்}, தன் எதிரிகளின் பல்வேறு அங்கங்களையும், வானத்தில் இருக்கும் நீர் மாளிகைகளைப் {கந்தர்வ நகரங்களைப் [மேகங்களைப்]} போலத் தெரிபவையும், விதிப்படி தயாரித்து அலங்கரிக்கப்பட்டவையுமான {அவர்களின்} தேர்களையும் இழக்கச் செய்தான். மேலும் அவன் {அர்ஜுனன்}, தன் கணைகளின் மூலம் அவர்களது சாரதிகளையும் {தேரோட்டிகளையும்}, குதிரைகளையும், யானைகளையும் துண்டுகளாக வெட்டினான். பல இடங்களில் கொடிமரங்கள் வெட்டப்பட்ட தேர்க்கூட்டங்கள் தலையற்ற பனைமரக் காடுகளைப் போலத் தெரிந்தன. சிறந்த ஆயுதங்கள், கொடிகள், அங்குசங்கள், கொடிமரங்கள் ஆகியவற்றுடன் கூடிய யானைகள், சக்ரனின் {இந்திரனின்} இடியால் பிளக்கப்பட்ட காடுகள் நிறைந்த மலைகளைப் போல விழுந்தன. சாமரங்கள் போலத் தெரியும் வால்கள் கொண்டவையும், கவசங்களால் மறைக்கப்பட்டவையும், நரம்புகளும், கண்களும் வெளியே புடைத்தவையுமான குதிரைகள், பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகளால் கொல்லப்பட்டுத் தங்கள் சாரதிகளுடன் சேர்ந்து தரையில் உருண்டன.
அர்ஜுனனின் கணைகள் மூலம் கொல்லப்பட்டு, {இதுவரை} தங்கள் நகங்களாகவே இருந்த வாள்களை அதற்கு மேலும் பிடிக்க முடியாமல், தங்கள் கவசங்கள் கிழிபட்டு, எலும்புகளின் இணைப்புகள் உடைபட்டு, முக்கிய அங்கங்கள் பிளக்கப்பட்டிருந்த காலாட்படை வீரர்கள், போர்க்களத்தில் ஆதரவற்ற நிலையில் கிடந்தனர். அந்த வீரர்கள் கொல்லப்பட்டதன் விளைவால், அல்லது அவர்கள் கொல்லப்படும்போது, வீழ்த்தப்படும்போது, வீழும்போது, நிற்கும்போது, அல்லது அவர்கள் சுழற்றப்படும்போது அந்தப் போர்க்களம் பயங்கர வடிவத்தை ஏற்றது. (அர்ஜுனனின் கணைகள் உண்டாக்கிய) உதிர மழையின் மூலம் காற்றில் எழுந்த புழுதி தணிந்தது. நூற்றுக்கணக்கான தலையற்ற உடல்களால் விரவிக்கிடந்த பூமி கடக்க முடியாததானது.
அந்தப் போரில் பீபத்சுவின் {அர்ஜுனனின்} தேரானது, யுக முடிவில் அனைத்து உயிரினங்களையும் அழிப்பதில் ஈடுபடும் ருத்திரனின் தேரைப் போலக் கடுமையாக ஒளிர்ந்தது. இப்படிப் பார்த்தனால் {அர்ஜுனனால்} கொல்லப்படும்போதும், அவ்வீரர்கள், தங்கள் குதிரைகள், தேர்கள், பெரும் துன்பத்தில் இருந்த தங்கள் யானைகள் ஆகியவற்றுடன் அவனை {அர்ஜுனனை} எதிர்ப்பதை நிறுத்தவில்லை; ஒருவர் பின் ஒருவராக உயிரை இழந்தாலும், அவர்கள் சக்ரனின் {இந்திரனின்} விருந்தினர்கள் ஆனார்கள். உயிரிழந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களால் விரவிக் கிடந்த அந்தப் போர்க்களமானது, ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, இறந்த உயிரினங்களின் ஆவிகளால் நிறைந்த யமலோகம் போலப் பயங்கரமானதாகத் தெரிந்தது.
அர்ஜுனன் (சம்சப்தகர்களுடன்) சீற்றத்துடன் போரிட்டுக் கொண்டிருந்த அதே வேளையில், துரோணர், போருக்காக அணிவகுக்கப்பட்ட தன் படைகளின் தலைமையில் நின்றபடி, யுதிஷ்டிரனை எதிர்த்து விரைந்தார். தாக்குவதில் சிறந்தவர்களும், முறையாக அணிவகுக்கப்பட்டவர்களுமான பல வீரர்கள், யுதிஷ்டிரனைப் பிடிக்கும் விருப்பத்தால், செயலூக்கத்துடன் அவரைப் {துரோணரைப்} பின்தொடர்ந்து சென்றனர். அதன் பிறகு நேர்ந்த போரானது, மிகக் கடுமையானதாக இருந்தது” {என்றான் சஞ்சயன்}.
ஆங்கிலத்தில் | In English |