Saturday, April 23, 2016

யுதிஷ்டிரனை நெருங்கிய துரோணர்! - துரோண பர்வம் பகுதி – 020

Drona rushed near Yudhishthira! | Drona-Parva-Section-020 | Mahabharata In Tamil

(சம்சப்தகவத பர்வம் – 04)

பதிவின் சுருக்கம் : பனிரெண்டாம் நாள் போரில் கருட வியூகம் அமைத்த துரோணர்; அர்த்தச்சந்திர வியூகம் அமைத்த யுதிஷ்டிரன்; கௌரவப்படையின் அந்த வியூகத்தில் எந்தெந்த நிலைகளில் யார் யார் நின்றனர் என்ற குறிப்பு; கௌரவ வியூகத்தில் பகதத்தன் ஏற்ற நிலை; திருஷ்டத்யும்னனிடம் பேசிய யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனிடம் உறுதி கூறிய திருஷ்டத்யும்னன் துரோணரைத் தடுத்தது; திருஷ்டத்யும்னனுக்கும் துர்முகனுக்கும் இடையில் நடைபெற்ற போர்; களத்தின் பயங்கர நிலவரம்; யுதிஷ்டிரனை நெருங்கிய துரோணர்...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்த வலிமைமிக்கத் தேர்வீரரான பரத்வாஜர் மகன் {துரோணர்} இரவைக் கழித்ததும், சுயோதனனிடம் {துரியோதனனிடம்}, “நான் உன்னவன் [1]. சம்சப்தகர்களுடன் பார்த்தன் {அர்ஜுனன்} மோதுவதற்கான ஏற்பாடுகளை நான் செய்துவிட்டேன் [2]” என்றார்.


[1] பம்பாய் உரையில் இது வேறு மாதிரியாக உள்ளது எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். வேறு ஒரு பதிப்பில் துரோணர், துரியோதனனுடன் பலவாறாகப் பேசினார் என்று மட்டுமே உள்ளது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளது போலவே உள்ளது.

[2] இங்கே உள்ள உரை சரியானதாகத் தெரியவில்லை. இது நிச்சயம் உறுதி செய்யப்பட வேண்டும். இந்த ஒரு சுலோகம் முழுமையும் பிழையானதாகத் தெரிகிறது எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். வேறு ஒரு பதிப்பில் துரோணர், துரியோதனனுடன் பலவாறாகப் பேசினார் என்று மட்டுமே உள்ளது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளது போலவே உள்ளது.

பார்த்தன் {அர்ஜுனன்} சம்சப்தகர்களைக் கொல்வதற்காக வெளியே சென்ற பிறகு, ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, துரோணர், போருக்காக அணிவகுக்கப்பட்ட தன் துருப்புகளின் தலைமையில் நின்றபடி நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனைப் பிடிக்க முன்னேறினார். துரோணர் தன் படைகளைக் கருட வடிவில் {கருட வியூகத்தில்} அணிவகுத்திருப்பதைக் கண்ட யுதிஷ்டிரன், தன் துருப்புகளை அரை வட்ட வடிவில் {அர்த்தச்சந்திர வியூகத்தில்} எதிரணிவகுத்தான்.

அந்தக் கருடனின் வாய்ப்பகுதியில் வலிமைமிக்கத் தேர்வீரரான துரோணரே நின்றார். தன் உடன் பிறந்த தம்பிகளால் சூழப்பட்ட மன்னன் துரியோதனன் அதன் தலையாக அமைந்தான். கிருதவர்மனும், சிறப்புமிக்கக் கிருபரும் அந்தக் கருடனின் இரு கண்களாக அமைந்தனர். பூதசர்மன், க்ஷேமசர்மன், வீரமிக்கக் கரகாக்ஷன், கலிங்கர்கள், சிங்களர்கள், கிழக்கத்தியர்கள், சூத்திரர்கள், ஆபிரர்கள், தசேரகர்கள், சகர்கள், யவனர்கள், காம்போஜர்கள், ஹம்சபதர்கள், சூரசேனர்கள், தரதர்கள், மத்திரர்கள், காலிகேயர்கள் ஆகியோரும், நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான யானைகள், குதிரைகள், தேர்கள், காலாட்படைகள் ஆகியவற்றுடன் கூடி அதன் {அந்தக் கருட வியூகத்தின்} கழுத்தில் நின்றனர்.

ஒரு முழு அக்ஷௌஹிணியால் சூழப்பட்ட பூரிஸ்ரவஸ், சல்லியன், சோமதத்தன், பாஹ்லிகன் ஆகிய இந்த வீரர்கள் வலது சிறகில் தங்கள் நிலைகளை எடுத்தனர். அவந்தியின் விந்தன் மற்றும் அனுவிந்தன், காம்போஜர்களின் ஆட்சியாளன் சுதக்ஷிணன் ஆகியோர் துரோணரின் மகனான அஸ்வத்தாமனுக்கு முன்பு இடது சிறகில் நின்றனர். (அந்தக் கருடனின்) பின்புறத்தில் கலிங்கர்கள், அம்பஷ்டர்கள், மகதர்கள், பௌண்டரர்கள், மத்ரகர்கள், காந்தாரர்கள், சகுனர்கள், கிழக்கத்தியர்கள், மலைவாசிகள் மற்றும் வசாதிகள் ஆகியோர் இருந்தனர்.

{கருட வியூகத்தின்} வாலில், விகர்த்தனன் மகன் கர்ணன், தன் மகன்கள், சொந்தங்கள், நண்பர்கள் ஆகியோருடன் பல்வேறு நாடுகளால் உண்டான ஒரு பெரிய படையால் சூழப்பட்டு நின்றான். போரில் சாதித்தவர்களான ஜெயத்ரதன், பீமரதன், சம்பாதி, ரிஷபன், ஜயன், போஜர்கள், பூமிஞ்சயன், விருஷன், கிராதன், நிஷாதர்களின் வலிமைமிக்க ஆட்சியாளன் ஆகியோர் ஆனைவரும் பெரிய படை ஒன்றால் சூழப்பட்டவர்களாகப் பிரம்மலோகத்தைத் தங்கள் கண்களின் முன் கொண்டு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த வியூகத்தின் இதயப்பகுதியில் நின்றனர்.

துரோணரால் அமைக்கப்பட்ட அந்த வியூகமானது அதன் காலாட்படைவீரர்கள், குதிரைகள், தேர்கள் மற்றும் யானைகளின் விளைவாக (போருக்கு அது முன்னேறியபோது) புயலால் கொந்தளிக்கும் கடல் போல நிலையற்றதாக இருந்தது. கோடை காலத்தில் {கோடை காலத்தின் முடிவில்} மின்னலுடன் முழங்கும் மேகங்கள் அனைத்துப் புறங்களில் இருந்தும் (வானத்தில்) விரைவதைப் போல, போரை விரும்பிய வீரர்கள், அந்த வியூகத்தின் சிறகுகளிலிருந்தும் பக்கங்களிலிருந்தும் போரிடத் தொடங்கினர்.

பிராக்ஜோதிஷர்களின் ஆட்சியாளன் {பகதத்தன்}, முறையாக ஆயத்தம் செய்யப்பட்ட தன் யானையின் மீதேறி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உதயச் சூரியனைப் போல அந்தப் படையின் மத்தியில் பிரகாசமாகத் தெரிந்தான். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, தன் தலைக்கு மேலே வெண்குடை கொண்ட அவன் {பகதத்தன்} கிருத்திகை நட்சத்திரக்கூட்டத்துடன் கூடிய முழு நிலவைப் போலத் தெரிந்தான். மது போன்ற கசிவினால் குருடானதும், கறுமாக்கல் திரளைப் போலத் தெரிந்ததுமான அந்த யானை பெரும் மேகங்களால் (மேகங்கள் மழை பொழிவதால்) துவைக்கப்பட்ட பெரும் மலையைப் போலப் பிரகாசித்தது. அந்தப் பிராக்ஜோதிஷர்களின் ஆட்சியாளன் {பகதத்தன்}, தேவர்களால் சூழப்பட்ட சக்ரனை {இந்திரனைப்} போலவே, பல்வேறு ஆயுதங்களைத் தரித்திருந்த மலை நாடுகளைச் சேர்ந்த வீர மன்னர்கள் பலரால் சூழப்பட்டிருந்தான்.

பிறகு யுதிஷ்டிரன், போரில் எதிரிகளால் வீழ்த்தப்பட முடியாத மனித சக்திக்கு மீறிய வியூகத்தைக் கண்டு பிருஷதன் மகனிடம் {யுதிஷ்டிரன் திருஷ்டத்யும்னனிடம்}, “ஓ! தலைவா, ஓ! புறாக்களைப் போன்ற வெண்ணிற குதிரைகளைக் கொண்டவனே {திருஷ்டத்யும்னா}, அந்தப் பிராமணரால் {துரோணரால்} நான் சிறைபடாதிருக்கத் தகுந்த ஏற்பாடுகளைச் செய்வாயாக” என்றான்.

திருஷ்டத்யும்னன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! சிறந்த நோன்புகளைக் கொண்டவரே {யுதிஷ்டிரரே}, துரோணர் எவ்வளவுதான் முயன்றாலும் நீர் அவர் வசத்தை அடைய மாட்டீர். நான் உயிரோடுள்ளவரை, ஓ! குருகுலத்தவரே {யுதிஷ்டிரரே}, நீர் எந்தக் கவலையையும் உணர்வது தகாது. எந்தச் சூழ்நிலையிலும் போரில் என்னைத் துரோணரால் வீழ்த்த இயலாது” என்றான் {திருஷ்டத்யும்னன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “புறாக்களின் நிறத்திலான குதிரைகளையுடைய வலிமைமிக்கத் துருபதன் மகன் {திருஷ்டத்யும்னன்} இவ்வார்த்தைகளைச் சொன்ன பிறகு, தன் கணைகளை இறைத்தபடி துரோணரை நோக்கி விரைந்தான். தனக்கு முன்பு திருஷ்டத்யும்னன் வடிவில் நின்ற அந்தத் தீய சகுனத்தைக் கண்ட துரோணர் மகிழ்ச்சியற்றவரானார் [3].

[3] வேறொரு பதிப்பில் இதற்கு மேலும் இருக்கிறது. அது பின்வருமாறு, “தமக்கு விருப்பமில்லாத தோற்றமுள்ளவனும், போரில் முன் நிற்பவனுமான திருஷ்டத்யும்னனைக் கண்டு, துரோணர் ஒரு கணத்திற்குள் அதிகச் சந்தோஷமற்ற மனத்தையுடைவரானார். ஓ! பெரும் மன்னா, அந்தத் திருஷ்டத்யும்னன் துரோணரைக் கொல்வதற்காகவே பிறந்தவன். அவனிடத்திலிருந்து மரணத்தை அடைய வேண்டியவராயிருப்பதால் துரோணர் மதிமயங்கினார்; அந்தப் போர்க்களத்தில் அந்தப் படையை எதிரில் பார்ப்பதற்குச் சிறிது சக்தியற்றவரானார். பிறகு, அவர் போர்க்களத்தில் திருஷ்டத்யும்னனை விட்டுவிட்டுத் துருபதனுடைய படையின் மீது கூர்மையான அம்புகளை இறைத்துக் கொண்டு சீக்கிரமாகச் சென்றார். அந்தப் பிராமணர் துரோணர் துருபதனுடைய பெரிய படையைப் பிளந்தார்” என்று இருக்கிறது. அதற்குப் பிறகு பின்னுள்ளதைப் போலவே தொடர்கிறது.

எதிரிகளை நசுக்குபவனான உமது மகன் துர்முகன் இதைக் கண்டு, துரோணருக்கு ஏற்புடையதைச் செய்ய விரும்பி, திருஷ்டத்யும்னனைத் தடுக்கத் தொடங்கினான். பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, துணிச்சல் மிக்கப் பிருஷதன் மகனுக்கும் {திருஷ்டத்யும்னனுக்கும்}, உமது மகன் துர்முகனுக்கும் இடையில் நடைபெற்ற போரானது பயங்கரமானதாகவும், கடுமையானதாகவும் இருந்தது. அப்போது பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, கணைகளின் மழையால் துர்முகனை விரைவாக மறைத்து அடர்த்தியான கணை மழையால் பரத்வாஜரின் மகனையும் {துரோணரையும்} தடுத்தான். துரோணர் தடுக்கப்பட்டதைக் கண்ட உமது மகன் துர்முகன், பிருஷதன் மகனை {திருஷ்டத்யும்னனை} நோக்கி வேகமாக விரைந்து பல்வேறு விதங்களிலான கணைகளின் மழையால் அவனைக் குழப்பினான்.

பாஞ்சால இளவரசனும் {திருஷ்டத்யும்னனும்}, குருகுலத்தில் முதன்மையானவனும் {துர்முகனும்} போரிட்டுக் கொண்டிருக்கையில், துரோணர், யுதிஷ்டிரனுடைய படையின் பல பகுதிகளை எரித்தார். காற்றினால் மேகங்களின் திரள் பல்வேறு திசைகளில் சிதறிப் போவதைப் போலவே, யுதிஷ்டிரனின் படையும் துரோணரால் களத்தின் பல பகுதிகளுக்குச் சிதறடிக்கப்பட்டது. குறுகிய காலத்திற்கு மட்டுமே அந்தப் போர் ஒரு இயல்பான மோதலைப் போலத் தெரிந்தது.

பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, யாருக்கும் எந்தக் கருணையும் காட்டாத மதங்கொண்ட இரு மனிதர்களுக்கு இடையிலான மோதலாக அது மாறியது. அதற்கு மேலும் போராளிகளால் தங்கள் மனிதர்களுக்கும், எதிரிகளுக்கும் இடையில் வேறுபாட்டைக் காண முடியவில்லை. அனுமானங்கள் மற்றும் குறிச்சொற்களால் வழிநடத்தப்பட்ட போர்வீரர்களால் அந்தப் போர் தொடர்ந்து நடந்தது. அவர்களின் {அந்த வீரர்களின்} தலைப்பாகைகள், கழுத்தணிகள் மற்றும் பிற ஆபரணங்களில் உள்ள ரத்தினங்கள் {சூடாரத்தினங்கள்}, கவசங்கள் ஆகியவற்றில் சூரியனின் ஒளிக்கதிர்கள் விழுந்து விளையாடுவதாகத் தெரிந்தது. படபடக்கும் கொடிகளுடன் கூடிய தேர்கள், யானைகள், குதிரைகள் ஆகியன கொக்குகளுடன் கூடிய மேகங்களின் திரள்களுக்கு ஒப்பானவையாக அந்தப் போரில் தெரிந்தன.

மனிதர்கள் மனிதர்களைக் கொன்றனர், கடும் உலோகம் கொண்ட குதிரைகள் குதிரைகளைக் கொன்றன, தேர்வீரர்கள் தேர்வீரர்களைக் கொன்றனர், யானைகள் யானைகளையே கொன்றன.

விரைவில், உயர்ந்த கொடிமரங்களைத் தங்கள் முதுகில் கொண்ட யானைகளுக்கும் , (அவற்றை நோக்கி விரையும்) வலிமையான எதிராளிகளுக்கும் {யானைகளுக்கும்} இடையில் பயங்கரமானதும், கடுமையானதுமான மோதல் நடந்தது. அந்தப் பெரும் உயிரினங்கள் {யானைகள்}, தங்கள் உடல்களோடு எதிராளிகளின் உடலைத் தேய்த்தது, (தங்கள் தந்தங்களால்) ஒன்றை மற்றொன்று கிழித்தது, எண்ணற்ற தந்தங்கள் {பிற} தந்தங்களோடு உராய்ந்தது ஆகிய அனைத்தின் விளைவால் புகையுடன் கூடிய நெருப்பு உண்டாயிற்று. (தங்கள் முதுகில் இருந்த) கொடிமரங்கள் வெட்டப்பட்ட அந்த யானைகள், அவற்றின் தந்தங்களில் உண்டான நெருப்புகளின் விளைவால், ஆகாயத்தில் மின்னலுடன் கூடிய மேகங்களின் திரள்களைப் போலத் தெரிந்தன.

(பகை யானைகளால்) இழுக்கப்படுபவை, முழங்குபவை, கீழே விழுபவை ஆகிய யானைகளால் விரவிக் கிடந்த பூமியானது, மேகங்களால் நிறைந்த கூதிர்கால வானத்தைப் போல அழகாகத் தெரிந்தது. கணைகள் மற்றும் வேல்களின் மழையால் கொல்லப்படும்போது அந்த யானைகளின் முழக்கம், மழைக்காலத்தின் மேகங்களின் முழக்கங்களுக்கு ஒப்பாக ஒலித்தன. வேல்கள் மற்றும் கணைகளால் காயம் அடைந்த பெரும் யானைகள் சில பீதியடைந்திருந்தன.

அந்த உயிரினங்களில் சில பெரும் அலறலோடு களத்தை விட்டு ஓடின. பிற யானைகளின் தந்தங்களால் தாக்கப்பட்ட சில, யுக முடிவில் அனைத்தையும் அழிக்கும் மேகங்களின் முழக்கத்திற்கு ஒப்பாகத் துன்பத்தில் அலறின. பெரும் எதிராளிகளிடம் புறமுதுகிட்ட சில, கூரிய அங்குசங்கள் மூலம் தூண்டப்பட்டு மீண்டும் களத்திற்குத் திரும்பின. பகையணிகளை நசுக்கிய அவை தங்கள் வழியில் வந்த எவரையும் கொல்லத் தொடங்கின. யானைப்பாகர்களின் கணைகள் மற்றும் வேல்களால் தாக்கப்பட்ட {மற்ற} யானைப்பாகர்கள், தங்கள் கரங்களில் இருந்த ஆயுதங்கள் மற்றும் அங்குசங்கள் நழுவத் தங்கள் விலங்குகளின் முதுகுகளில் இருந்து கீழே விழுந்தனர்.

தங்கள் முதுகில் பாகர்கள் இல்லாத பல யானைகள் பெரும் திரள்களில் இருந்து பிரிந்த மேகங்களைப் போல அங்கேயும் இங்கேயும் திரிந்து ஒன்றோடொன்று மோதி கீழே விழுந்தன. பெரும் யானைகள் சில தங்கள் முதுகில் கொல்லப்பட்ட அல்லது வீழ்த்தப்பட்ட வீரர்களை, அல்லது ஆயுதங்களை நழுவவிட்டோரைச் சுமந்து கொண்டு தனியாக அனைத்துத் திசைகளிலும் திரிந்து கொண்டிருந்தன [4]. அந்தப் படுகொலைகளுக்கு மத்தியில், தாக்கப்பட்டோ, வேல்கள், வாள்கள் அல்லது போர்க்கோடரிகளால் தாக்கப்படும்போதோ துன்பப் பேரொலிகளை வெளியிட்டபடியே அந்தப் பயங்கரப் படுகொலையில் சில யானைகள் வீழ்ந்தன.

[4] Ekacharas என்று இங்கே சொல்லப்படுவது "தங்கள் வகையைச் சேர்ந்த யானைகளைப் பார்க்கப் பொறுக்காமல், அதாவது தனியாகத் திரிவது" என்று நீலகண்டரால் விளக்கப்படுகிறது. வட்டார மொழிபெயர்ப்பாளர்கள் சிலர் இந்த வார்த்தை காண்டாமிருகத்தைக் குறிக்கிறது என்று எடுத்துக் கொள்கின்றனர் எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

மலைகளைப் போன்ற பெரும் உடல்களைக் கொண்ட அந்த உயிரினங்கள் திடீரெனச் சுற்றிலும் விழுவதால் தாக்கப்பட்ட பூமியானது நடுங்கிக் கொண்டே ஒலிகளை வெளியிட்டது. பாகன்களோடு சேர்த்துக் கொல்லப்பட்ட அந்த யானைகள், தங்கள் முதுகுகளில் கொடிமரங்களுடன் கிடந்த போது, பூமியானது மலைகளால் விரவிக் கிடப்பதைப் போல அழகாகத் தெரிந்தது. நீண்ட கணைகளால் {நாராசங்களால்} தாக்கப்பட்ட சில யானைகள் கொக்குகளைப் போல அலறியபடியும், நண்பர்கள் மற்றும் எதிரிகளைத் தங்கள் நடையால் நசுக்கிக் கொன்றபடியும் அனைத்துத் திசைகளிலும் ஓடின.

யானைகள், குதிரைகள் மற்றும் தேர்வீரர்கள் ஆகியோரின் எண்ணற்ற உடல்களால் மறைக்கப்பட்டிருந்த பூமியானது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இரத்தமும் சதையும் சேர்ந்த சேறானது. சக்கரங்களுடன் கூடிய தேர்களும், சக்கரங்களற்ற பலவும், யானைகளின் தந்த முனைகளால் நசுக்கப்பட்டு, அவற்றில் {அந்தத் தேர்களில்} இருந்த வீரர்களோடு சேர்த்து அவற்றால் {அந்த யானைகளால்} தூக்கி வீசப்பட்டன. வீரர்களை இழந்த தேர்கள் காணப்பட்டன. ஓட்டுநர்கள் இல்லாத குதிரைகளும், யானைகளும் காயங்களால் பீடிக்கப்பட்டு அனைத்துத் திசைகளிலும் ஓடிக் கொண்டிருந்தன.

எந்த வேறுபாடும் காணமுடியாத அளவுக்கு அங்கே நடந்த போர் மிகக் கடுமையானதாக இருந்ததால் அங்கே தந்தை தனது மகனைக் கொன்றான், மகன் தனது தந்தையைக் கொன்றான். கணுக்கால் ஆழம் கொண்ட இரத்தச் சேற்றில் மூழ்கிய மனிதர்கள், சுடர்மிகும் காட்டுத்தீயால் விழுங்கப்பட்ட அடிப்பாகங்களைக் கொண்ட உயர்ந்த மரங்களைப் போலத் தெரிந்தனர். ஆடைகள், கவசங்கள், குடைகள், கொடிமரங்கள் ஆகியவை குருதியால் நனைந்திருந்தன. களத்தில் இருந்த அனைத்தும் இரத்தம் கலந்தவையாகவே தெரிந்தன. பெரும் எண்ணிக்கையில் கொல்லப்பட்ட குதிரைகள், தேர்கள், மனிதர்கள் ஆகியவை தேர்ச்சக்கரங்கள் உருள்வதால் மீண்டும் மீண்டும் துண்டுகளாக வெட்டப்பட்டன.

யானைகளை ஓடையாகக் கொண்டதும், கொல்லப்பட்ட மனிதர்களை மிதக்கும் பாசிகளாகக் கொண்டதும், தேர்களைச் சுழல்களாகக் கொண்டதுமான அந்தத் துருப்புகள் எனும் கடல் மிகக் கடுமையானதாகவும் பயங்கரமானதாவும் தெரிந்தது. குதிரைகள், யானைகள் என்ற பெரிய மரக்கலங்களைக் கொண்ட வீரர்கள், தங்கள் செல்வமாக வெற்றியை விரும்பி, அந்தக் கடலில் குதித்து, மூழ்குவதற்குப் பதிலாக, தங்கள் எதிரிகளின் உணர்வுகளை இழக்கச் செய்தனர். தனிப்பட்ட அடையாளங்களைக் {கொடிகளைக்} கொண்ட அந்த வீரர்கள் அனைவரும், கணை மழைகளால் மறைக்கப்பட்ட போது, அவர்களில் எவரும் தங்கள் அடையாளங்களை {கொடிகளை} இழந்தாலும் உற்சாகத்தை இழக்கவில்லை.

அந்தப் பயங்கரப் போரில் தனது எதிரிகளின் அறிவைக் குழப்பிய துரோணர் (இறுதியாக) யுதிஷ்டிரனை நோக்கி விரைந்தார்” {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English