Monday, April 25, 2016

பாஞ்சால இளவரசர்களைக் கொன்ற துரோணர்! - துரோண பர்வம் பகுதி – 021

Drona killed Panchala princes! | Drona-Parva-Section-021 | Mahabharata In Tamil

(சம்சப்தகவத பர்வம் – 05)

பதிவின் சுருக்கம் : கணை மழையால் யுதிஷ்டிரனை வரவேற்ற துரோணர்; துரோணரைத் தடுத்த சத்யஜித்தும் விருகனும்; விருகனையும், சத்தியஜித்தையும் கொன்ற துரோணர்; விராடனின் தம்பியான சதானீகனைக் கொன்ற துரோணர்; துரோணர் உண்டாக்கிய குருதிப்புனல்; திருடசேனன் க்ஷேமன், வசுதேவன் {வசுதானன்}, பாஞ்சாலன்; {சுசித்ரன்}, ஆகியோரைக் கொன்ற துரோணர்; துரோணரிடமிருந்து தப்பி ஓடிய யுதிஷ்டிரன்...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “பிறகு துரோணர், அச்சமற்ற வகையில் யுதிஷ்டிரன் தன்னை நெருங்குவதைக் கண்டு, அடர்த்தியான கணைகளின் மழையால் அவனை {யுதிஷ்டிரனை} வரவேற்றார். யானைக்கூட்டத்தின் தலைவன் வலிமைமிக்கச் சிங்கத்தால் தாக்கப்படும்போது, {மற்ற} யானைகள் அலறுவதைப் போல யுதிஷ்டிரப்படையின் துருப்புகளுக்கு மத்தியில் பேரொலி எழுந்தது.


துரோணரைக் கண்டவனும், துணிச்சல்மிக்கவனும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றல் கொண்டவனுமான சத்தியஜித், யுதிஷ்டிரனைப் பிடிக்க விரும்பிய ஆசானை {துரோணரை} நோக்கி விரைந்தான். பெரும் வலிமைமிக்க ஆசானும் {துரோணரும்}, பாஞ்சால இளவரசனும் {சத்தியஜித்தும்}, இந்திரனையும், பலியையும் போல அடுத்தவர் துருப்புகளை கலங்கடித்தபடி ஒருவரோடொருவர் போரிட்டனர். பிறகு, கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றல் கொண்ட சத்தியஜித் வலிமைமிக்க ஆயுதம் {அஸ்திரம்} ஒன்றைத் தூண்டிக் கூர்முனைக் கணைகளால் துரோணரைத் துளைத்தான். மேலும் சத்தியஜித் துரோணரின் தேரோட்டியின் மீது, பாம்பின் விஷத்தைப் போல மரணத்தைத் தரக்கூடியவையும், காலனைப் போலத் தெரிபவையுமான ஐந்து கணைகளை ஏவினான். இப்படித் தாக்கப்பட்ட தேரோட்டி தன் உணர்வுகளை இழந்தான்.

உடனே சத்தியஜித், துரோணரின் குதிரைகளைப் பத்து கணைகளால் துளைத்தான்; மேலும் சினத்தால் நிறைந்த அவன் {சத்தியஜித்} அவரது {துரோணரின்} பார்ஷினி ஓட்டுநர்கள் [1] {இருவரையும்} ஒவ்வொருவரையும் பத்து {பத்துப் பத்து} கணைகளால் துளைத்தான். கோபத்தால் தூண்டப்பட்ட அவன் {சத்தியஜித்}, எதிரிகளை நசுக்குபவரான துரோணரின் கொடிமரத்தை வெட்டினான். பிறகு, எதிரிகளைத் தண்டிப்பவரான துரோணர், போரில் தன் எதிரியின் இந்த அருஞ்செயல்களைக் கண்டு, அவனை {சத்தியஜித்யை} அடுத்த உலகத்திற்கு அனுப்ப மனத்தில் தீர்மானித்தார் [2]. பிறகு தனது துருப்புகளின் தலைமையில் இருந்த அவன் {சத்தியஜித்} தன் தேரில் {அந்தக் களத்தை} வட்டமாகச் சுழன்றான். சத்தியஜித்தின் கணை பொருத்தப்பட்ட வில்லை அறுத்த ஆசான் {துரோணர்}, விரைவாக உயிர் நிலைகளையே ஊடுருவவல்ல பத்து கணைகளால் அவனைத் துளைத்தார். அதன்பேரில், மற்றொரு வில்லை எடுத்த வீரமிக்கச் சத்தியஜித், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கங்கப் பறவையின் இறகுகளால் சிறகமைந்த முப்பது கணைகளால் துரோணரைத் தாக்கினான் [3].

[1] extremity of the fore-axle to which the outside horses of a four-horse chariot are attached = நான்கு குதிரைகள் கொண்ட தேரில் வெளிப்புறத்தில் {வேறு} குதிரைகளை இணைப்பதற்காக உள்ள முன் அச்சே பார்ஷினி எனப்படும். அதில் அமர்ந்திருக்கும் அதிகப்படியான தேரோட்டிகளே பார்ஷினி ஓட்டுநர்களாவர்.

[2] அஃதாவது, “அவனுடைய வேளை வந்துவிட்டது என்று தன் மனத்தில் நினைத்தார்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[3] வேறொரு பதிப்பில் இதன் பிறகு இன்னும் ஒரு வரி இருக்கிறது. அது பின்வருமாறு, “போரில் சத்தியஜித்தினால் விழுங்கப்படுகிறவர் போலிருக்கும் துரோணரைப் பார்த்துப் பாஞ்சால ராஜகுமாரனான விருகனானவன் கூர்மையுள்ள நூறு அம்புகளாலே அடித்தான்” என்றிருக்கிறுது. அதன் பிறகு பின்வரும் வர்ணனையின் படியே தொடர்கிறது.

சத்தியஜித்தால் போரில் (இப்படி) எதிர்க்கப்பட்ட துரோணரைக் கண்ட பாண்டவர்கள், மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்துத் தங்கள் ஆடைகளை அசைத்தனர். பிறகு, சினத்தால் தூண்டப்பட்ட வலிமைமிக்க விருகன், அறுபது {60} கணைகளால் துரோணரை நடுமார்பில் துளைத்தான். அந்த அருஞ்செயல் பெரும் அற்புதமானதாகத் தெரிந்தது.

பிறகு, பெரும் வேகமுடையவரும், வலிமைமிக்கத் தேர்வீரரும், (தன் எதிரிகளின்) கணை மழைகளால் மறைக்கப்பட்டவருமான துரோணர், தன் கண்களை அகல விரித்துத் தன் சக்தி அனைத்தையும் திரட்டினார். பிறகு, சத்தியஜித் மற்றும் விருகன் ஆகிய இருவரின் விற்களையும் அறுத்த துரோணர், ஆறு கணைகளால் விருகனை அவனது தேரோட்டி மற்றும் குதிரைகளுடன் சேர்த்துக் கொன்றார். கடினமான மற்றொரு வில்லை எடுத்த சத்தியஜித், துரோணரை அவரது குதிரைகள், அவரது தேரோட்டி மற்றும் அவரது கொடிமரம் ஆகியவற்றோடு சேர்த்துத் துளைத்தான்.

பாஞ்சாலர்களின் இளவரசனால் {சத்தியஜித்தால்} போரில் இப்படிப் பீடிக்கப்பட்ட துரோணரால் அந்தச் செயலைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவர் {துரோணர்}, தன் எதிரியின் அழிவுக்காக (அவன் மீது) தன் கணைகளை விரைவாக ஏவினார். பிறகு துரோணர் தன் எதிராளியின் குதிரைகள், கொடிமரங்கள், அவனது வில்லின் கைப்பிடி மற்றும் அவனது பார்ஷினி ஓட்டுநர்கள் இருவர் ஆகியோரை இடையறாத கணைகளால் மறைத்தார். ஆனால் (இப்படி) மீண்டும் மீண்டும் அவனது வில் வெட்டப்பட்டாலும், உயர்வான ஆயுதங்களை அறிந்த அந்தப் பாஞ்சால இளவரசன் {சத்தியஜித்}, சிவப்பு குதிரைகளைக் கொண்டவரிடம் {துரோணரிடம்} தொடர்ந்து போரிட்டான். அந்தப் பயங்கரப் போரில் சத்யஜித் சக்தியில் பெருகுவதைக் கண்ட துரோணர், அந்தச் சிறப்புமிக்க வீரனின் {சத்தியஜித்தின்} தலையை அர்த்தச்சந்திரக் கணை ஒன்றினால் வெட்டி வீழ்த்தினார்.

போராளிகளில் முதன்மையானவனும், பாஞ்சாலர்களில் வலிமைமிக்கத் தேர்வீரனுமான அவன் {சத்தியஜித்} படுகொலை செய்யப்பட்டதும், துரோணர் மீது கொண்ட அச்சத்தின் காரணமாக வேகமான குதிரைகளின் மூலம் (சுமக்கப்பட்ட) யுதிஷ்டிரன் தப்பி ஓடினான் [4].

[4] இந்தப் பகுதியிலேயே {துரோண பர்வம் பகுதி 21லேயே}, மீண்டும் யுதிஷ்டிரன் தப்பி ஓடுவதாக இதே போன்ற வரிகளால் உரைக்கப்படுகிறது. இடைச்செருகல் குறித்துச் சந்தேகப்பவர்களின் கவனத்தை இந்தப் பகுதி நிச்சயம் ஈர்க்கும். சத்தயஜித் கொல்லப்பட்டால் களத்தை விட்டு விலகும்படி அர்ஜுனன் யுதிஷ்டிரனைக் கேட்டுக் கொண்டது, இங்கே நினைவுகூரத்தக்கது.

பிறகு, பாஞ்சாலர்கள், கேகயர்கள், மத்ஸ்யர்கள், சேதிகள், காரூஷர்கள், கோசலர்கள் ஆகியோர் துரோணரைக் கண்டு, யுதிஷ்டிரனை மீட்க விரும்பி , அவரை {துரோணரை} நோக்கி விரைந்தனர். எனினும், பெரும் எண்ணிக்கையிலான பகைவர்களைக் கொல்பவரான துரோணர், யுதிஷ்டிரனைப் பிடிக்க விரும்பி, பஞ்சுக் குவியலை எரிக்கும் நெருப்பைப் போல அந்தப் படைப்பிரிவுகளை எரிக்கத் தொடங்கினார்.

பிறகு, மத்ஸ்யர்கள் ஆட்சியாளனுடைய {விராடனின்} தம்பியான சதானீகன், அந்தப் (பாண்டவப் படை) பிரிவுகளை இப்படி இடையறாமல் அழிப்பதில் ஈடுபடும் துரோணரை நோக்கி விரைந்தான். சதானீகன், கொல்லனின் கைகளால் பளபளப்பாக்கப்பட்டுச் சூரியனின் கதிர்களைப் போலப் பிரகாசமாக இருந்த ஆறு கணைகளால் துரோணருடன் சேர்த்து அவரது தேரோட்டியையும், குதிரைகளையும் துளைத்துப் பெருமுழக்கம் செய்தான்.

அந்தக் கொடுஞ்செயலில் ஈடுபட்டு [5], அடைவதற்கு அரிதானதைச் சாதிக்க முயன்ற அவன் {சதானீகன்}, வலிமைமிக்கத் தேர்வீரரான பரத்வாஜரின் மகனை {துரோரணை} கணைகளின் மழைகளால் மறைத்தான். பிறகு துரோணர், தன்னை நோக்கி ஆர்ப்பரிப்பவனும், காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டவனுமான சதானீகனின் தலையைக் கத்தி போன்ற கூர்மையானதொரு கணையால் அவனது உடலிலிருந்து விரைவாக அறுத்தார். அதன்பேரில், மத்ஸ்ய வீரர்கள் அனைவரும் தப்பி ஓடினர்.

[5] சதானீகன் போரிட்டது ஒரு பிராமணருடன் என்பதால் அது கொடுஞ்செயல் எனப்படுகிறது எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

மத்ஸ்யர்களை வீழ்த்திய பிறகு, அந்தப் பரத்வாஜர் மகன் {துரோணர்}, சேதிகள், காரூசர்கள், கைகேயர்கள், பாஞ்சாலர்கள், சிருஞ்சயர்கள் மற்றும் பாண்டவர்களையும் மீண்டும் மீண்டும் வீழ்த்தினார். தங்கத்தேரைக் கொண்டவரும், சினத்தால் தூண்டப்பட்டவருமான அந்த வீரர் {துரோணர்}, காட்டை எரிக்கும் நெருப்பைப் போலத் தங்கள் படைப்பிரிவுகளை எரிப்பதைக் கண்ட சிருஞ்சயர்கள் (அச்சத்தால்) நடுங்கினர்.

பெரும் சுறுசுறுப்புக் கொண்டு எதிரியை இடையறாமல் கொல்லும் அவர் {துரோணர்} தன் வில்லை வளைக்கும்போது உண்டாகும் நாணொலி திசைகள் அனைத்திலும் கேட்கப்பட்டன. பெரும் கர நளினம் {லாவகம்} கொண்ட அந்த வீரரால் {துரோணரால்} ஏவப்பட்ட கடுங்கணைகள் யானைகளையும், குதிரைகளையும், காலாட்படை வீரர்களையும், தேர்வீரர்களையும், யானைப் பாகன்களையும் நசுக்கின. கோடை காலத்தில் கடும் காற்றுடன் கூடிய வலிமைமிக்க மேகத் திரள்கள் முழக்கத்துடன் கல்மாரியைப் பொழிவதைப் போலவே, துரோணரும் எதிரிகளின் இதயத்தில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் கணைமாரியைப் பொழிந்தார். வலிமைமிக்க வீரரும், பெரும் வில்லாளியும், நண்பர்களின் அச்சங்களை விலக்குபவருமான அவர் {துரோணர்}, (பகை) கூட்டத்தைக் (களத்தில்) கலங்கடித்தபடியே திசைகள் அனைத்திலும் திரிந்து கொண்டிருந்தார். அளக்க இயலாத சக்தி கொண்ட துரோணரின் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட வில்லானது, மேகங்களுடன் கூடிய மின்னலின் கீற்றுகள் போலத் திசைகள் அனைத்திலும் காணப்பட்டது. போரில் அவர் திரிந்து கொண்டிருந்த போது, அவரது கொடியில் உள்ள அழகிய பீடமானது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சிகரத்திற்கோ, இமயத்திற்கோ ஒப்பானதாகத் தெரிந்தது.

பாண்டவத் துருப்புகளுக்கு மத்தியில் துரோணர் உண்டாக்கிய படுகொலையானது, தேவர்கள் மற்றும் அசுரர்கள் ஆகிய இருவராலும் புகழப்படும் விஷ்ணுவால் தைத்திய படைக்கு மத்தியில் ஏற்படுத்தப்பட்டதைப் போலவே பெரிதானதாக இருந்தது. வீரரும், பேச்சில் உண்மையுடையவரும், பெரும் விவேகமும், வலிமையும் கொண்டவரும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலையுடையவருமான துரோணர், கடுமையானதும், மருண்டோரை அஞ்சச் செய்வதுமான நதி ஒன்றை அங்கே பாயச் செய்தார்.

கவசங்களே அதன் அலைகளாகின, கொடிமரங்கள் அதன் சுழல்களாகின. (அது பாய்கையில்) பெரும் எண்ணிக்கையிலான மனிதர்களைச் சுமந்து சென்றது. யானைகளும், குதிரைகளும் அதன் பெரும் முதலைகளாகின, வாள்கள் அதன் மீன்களாகின. அது {அந்த ஆறு} கடக்கப்பட முடியாததாக இருந்தது. துணிவுமிக்க வீரர்களின் எலும்புகள் அதன் கூழாங்கற்களாகின, பேரிகைகளும், முரசங்களும் அதன் ஆமைகளாகின. கேடயங்களும், கவசங்களும் அதன் படகுகளாகின, வீரர்களின் தலைமயிர் பாசியும் புற்களுமாகின. அம்புகள் அதன் சிற்றலைகளாகவும், விற்கள் அதன் நீரோட்டமாகவும் அமைந்தன. போராளிகளின் கரங்கள் அதன் பாம்புகளாகின. கடும் நீரோட்டத்தைக் கொண்ட ஆறு அந்தப் போர்க்களமெங்கும் ஓடி குருக்கள், சிருஞ்சயர்கள் ஆகிய இருவரையும் அடித்துச் சென்றது. மனிதர்களின் தலைகள் அதன் கற்களாகின, அவர்களின் தொடைகள் அதன் மீன்களாகின. கதாயுதங்கள் (பலர் கடக்க முயன்ற) தெப்பங்களாகின. தலைப்பாகைகள் அதன் பரப்பை மறைத்த நுரைகளாகின, (விலங்குகளின்) குடல்கள் அதன் பாம்புகளாகின. கடுமையான (தோற்றத்தைக் கொண்ட) அது வீரர்களை (அடுத்த உலகத்திற்கு) அடித்துச் சென்றது. குருதியும், சதையும் அதன் சகதிகளாகின. யானைகள் அதன் முதலைகளாகவும், கொடிமரங்கள் (அதன் கரைகளில் நிற்கும்) மரங்களாகின. ஆயிரக்கணக்கான க்ஷத்திரியர்கள் அதில் மூழ்கினர். குதிரைவீரர்கள், யானை வீரர்கள் ஆகியோர் அதன் சுறாக்களாகினர், கடுமையான (இறந்தோரின்) உடல்கள் அடைத்துக் கொண்டிருக்க அது கடப்பதற்கு மிகக் கடினமானதாக ஆனது. அந்த ஆறு யமலோகத்தை நோக்கி ஓடிக் கொண்டிருந்தது. ராட்சசர்கள், நாய்கள் மற்றும் நரிகளால் அது நிறைந்திருந்தது. சுற்றிலும் கடுமையான மனித ஊனுண்ணிகளால் அது மொய்க்கப்பட்டிருந்தது.

பிறகு, குந்தி மகனின் தலைமையிலான பாண்டவ வீரர்கள் பலர், காலனைப் போலவே தங்கள் படைப்பிரிவுகளை எரித்துக் கொண்டிருந்த வலிமைமிக்கத் தேர்வீரரான துரோணரை நோக்கி விரைந்து, அனைத்துப் பக்கங்களிலும் அவரைச் சூழ்ந்து கொண்டனர். உண்மையில், சூரியன் தன் கதிர்களால் உலகை எரிப்பதைப் போலத் தன்னைச் சுற்றி இருக்கும் அனைத்தையும் எரித்துக் கொண்டிருந்த துரோணரை அந்தத் துணிச்சல்மிக்க வீரர்கள் முழுமையாகச் சூழ்ந்து கொண்டனர்.

பிறகு, உயர்த்தப்பட்ட ஆயுதங்களைக் கொண்ட உமது படையின் மன்னர்கள் மற்றும் இளவரசர்கள் அனைவரும் பெரும் வில்லாளியான அந்த வீரரை {துரோணரை} ஆதரிப்பதற்காக அவரை நோக்கி விரைந்தனர்.

சிகண்டி, ஐந்து நேரான கணைகளால் துரோணரைத் துளைத்தான். க்ஷத்ரதர்மன் இருபது கணைகளாலும், வசுதேவன் [6] ஐந்தாலும் அவரைத் துளைத்தனர். உத்தமௌஜஸ் மூன்று கணைகளாலும், க்ஷத்ரதேவன் ஐந்தாலும் அவரைத் துளைத்தனர். அந்தப் போரில் சாத்யகி நூறு கணைகளாலும், யுதாமன்யு எட்டாலும் அவரைத் துளைத்தனர். யுதிஷ்டிரன் பனிரெண்டு கணைகளாலும், திருஷ்டத்யும்னன் பத்தாலும், சேகிதானன் மூன்றாலும் துரோணரைத் துளைத்தனர்.

[6] வேறொரு பதிப்பில் இவன் வசுதானன் என்று குறிப்பிடப்படுகிறான். மன்மதநாத தத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே வசுதேவன் என்றே இருக்கிறது.

மதங்கொண்ட யானைக்கு ஒப்பானவரும், கலங்கடிக்கப்பட முடியாத நோக்கைக் கொண்டவருமான துரோணர் (பாண்டவர்களின்) தேர்ப்படையை அணுகி திருடசேனனை வீழ்த்தினார். பிறகு, அச்சமற்ற வகையில் போரிட்டுக் கொண்டிருந்த மன்னன் க்ஷேமனை அணுகி ஒன்பது கணைகளால் அவனைத் தாக்கினார். அதன் பேரில், உயிரிழந்த க்ஷேமன் தன் தேரில் இருந்து கீழே விழுந்தான். (பகை) துருப்புகளின் மத்தியில் சென்ற அவர் {துரோணர்}, அனைத்துத் திசைகளிலும் திரிந்து தானே பாதுகாப்பில்லாதபோது, மற்றவரைப் பாதுகாத்தார். பிறகு அவர் {துரோணர்} பனிரெண்டு கணைகளால் சிகண்டியையும், இருபதால் உத்தமௌஜஸையும் துளைத்தார். மேலும் அவர் {துரோணர்}, பல்லம் ஒன்றினால் வசுதேவனை {வசுதானனாக இருக்க வேண்டும்} யமனுலகிற்கு அனுப்பினார். மேலும் அவர் {துரோணர்}, எண்பது கணைகளால் க்ஷேமவர்மனையும், இருபத்தாறால் சுதக்ஷிணனையும் துளைத்தார். மேலும் அவர் {துரோணர்}, பல்லம் ஒன்றினால் க்ஷத்ரதேவனை அவனது தேர்த்தட்டில் இருந்து வீழ்த்தினார். தங்கத் தேர் கொண்ட துரோணர், அறுபத்துநான்கு கணைகளால் யுதாமன்யுவையும், முப்பதால் சாத்யகியையும் துளைத்து, யுதிஷ்டிரனை விரைவாக அணுகினார். அப்போது, மன்னர்களில் சிறந்த யுதிஷ்டிரன், வேகமான குதிரைகளால் சுமக்கப்பட்டபடி ஆசானிடம் இருந்து விரைவாகத் தப்பி ஓடினான் [7].

[7] அடிக்குறிப்பு [4]ல் சொல்லப்பட்ட இடமே இஃது. துரோண பர்வம் பகுதி 17ல் வரும் அர்ஜுனன் கூற்றுப்படி சத்தியஜித் இறந்த உடனேயே யுதிஷ்டிரன் தப்பி இருக்க வேண்டும்.

பிறகு, பாஞ்சாலன் துரோணரை நோக்கி விரைந்தான். அந்த இளவரசனின் வில்லை வெட்டிய துரோணர், அவனது குதிரைகளுடனும், தேரோட்டியுடனும் சேர்த்து அவனைக் {பாஞ்சாலனைக்} கொன்றார். உயிரிழந்த அந்த இளவரசன் ஆகாயத்தில் இருந்து தளர்ந்து விழும் ஒளிக்கோளைப் போலத் தன் தேரில் இருந்து பூமியில் விழுந்தான் [8].

[8] வேறொருபதிப்பில் இதற்கு மேலும் தொடர்கிறது. அது பின்வருமாறு, “அவனைக் கொன்ற துரோணர் கௌரவர்களால் சூழப்பட்டுப் பிரகாசித்தார். விருஷ்ணி குலத்தில் பிறந்தவனும், மன்னனுமான வார்த்தக்ஷேமியோ அவரைச் சிறந்த ஒன்பது கணைகளால் அடித்து மீண்டும் ஐந்து பாணங்கள் அவரை அடித்தான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சாத்யகி அந்தத் துரோணரை அறுபத்து நான்கு கணைகளால் அடித்தான், பலமுள்ளவனான சுசிதரன் துரோணரைப் பத்து கணைகளால் அடித்து முழங்கினான். மன்னரே, போரில் துரோணர் அந்தச் சுசித்ரன் மீது அம்பு மழைகளைப் பொழிந்தார். வேந்தரே, பிறகு, அவர் சுசித்ரனை சாரதியோடும், குதிரைகளோடும் விழும்படி செய்தார். அவன் போரில் கொல்லப்பட்டுப் பூமியில் விழுந்தான். பெரும் மன்னா, தள்ளப்படும் அந்தச் சுசித்ரன் ஆகயத்தினின்று கீழே விழும் நட்சத்திரம் போலப் பிரகாசித்தான்” என்று இருக்கிறது. இதன்பிறகு, பின்வருமாறே தொடர்கிறது.

அந்தப் பாஞ்சாலர்களின் சிறப்புமிக்க இளவரசன் விழுந்ததன் பேரில், “துரோணரைக் கொல்லுங்கள், துரோணரைக் கொல்லுங்கள்” என்ற உரத்த அலறல் அங்கே கேட்டது. வலிமைமிக்கத் துரோணர், சினத்தால் தூண்டப்பட்டிருந்த பாஞ்சாலர்கள், கைகேயர்கள், சிருஞ்சயர்கள் மற்றும் பாண்டவர்கள் அனைவரையும் நசுக்கத் தொடங்கினார். பிறகு குருக்களால் ஆதரிக்கப்பட்ட துரோணர், சாத்யகியையும், சேகிதானன் மகனையும், சேனாபிந்துவையும், சுவர்ச்சஸையும் இன்னும் எண்ணற்ற பிற மன்னர்களையும் வீழ்த்தினார்.

ஓ! மன்னா, அந்தப் பெரும்போரில் வெற்றியை அடைந்த உமது வீரர்கள், திசைகள் அனைத்திலும் தப்பி ஓடிய பாண்டவர்களைக் {பாண்டவ வீரர்களைக்} கொன்றனர். இந்திரனால் கொல்லப்பட்ட தானவர்களைப் போல அனைத்துப் பக்கங்களிலும் இப்படிக் கொல்லப்பட்ட பாஞ்சாலர்கள், கைகேயர்கள், மத்ஸ்யர்கள் ஆகியோர் (அச்சத்தால்) நடுங்கத் தொடங்கினர்” {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English