Old Bhagadatta and Elephant Supratika! | Drona-Parva-Section-024 | Mahabharata In Tamil
(சம்சப்தகவத பர்வம் – 08)
பதிவின் சுருக்கம் : துரியோதனன் யானைப்படையுடன் சேர்ந்து பீமனை எதிர்த்தது; துரியோதனனின் வில்லையும், கொடியையும் அறுத்த பீமன்; அங்க மன்னனைக் கொன்ற பீமன்; பீமனைத் தடுத்த பகதத்தன்; சுப்ரதீகத்தின் துதிக்கைகளில் சிக்கிய பீமன், அதனிடம் இருந்து தப்பித்தது; பீமன் கொல்லப்பட்டதாக நினைத்த யுதிஷ்டிரன்; தசார்ணனைக் கொன்ற பகதத்தன்; சாத்யகியின் தேரைத் தூக்கி வீசி பீமனின் குதிரைகளை விரட்டிய சுப்ரதீகம்; ருசிபர்வனைக் கொன்ற பகதத்தன்...
பீமனைத் துதிக்கையில் சுருட்டிய சுப்ரதீகம் - கர்நாடகா, பேளூரில் உள்ள சென்னகேசவர் கோவில் சிற்பம் |
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்} சொன்னான், “இப்படித் துருப்புகள் போரிட்டுக் கொண்டு, தனித்தனிப் பிரிவுகளில் ஒன்றையொன்று எதிர்த்துச் சென்ற போது, பெரும் சுறுசுறுப்புக் கொண்ட பார்த்தனும் {அர்ஜுனனும்}, எனது படையின் போர்வீரர்களும் எவ்வாறு போரிட்டனர்? மேலும் அர்ஜுனன், தேர்வீரர்களான சம்சப்தகர்களை என்ன செய்தான்? மேலும், ஓ! சஞ்சயா, சம்சப்தகர்கள் பதிலுக்கு அர்ஜுனனை என்ன செய்தனர்” என்றான்.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “துருப்புகள் இப்படிப் போரில் ஈடுபட்டு ஒன்றையொன்று எதிர்த்துச் சென்ற போது, உமது மகன் துரியோதனன் தன் யானைப் படையை வழிநடத்திக் கொண்டு பீமசேனனைத் தானே எதிர்த்து விரைந்தான். யானையொன்று மற்றொரு யானையை அழைப்பது போலவும், காளையொன்று மற்றொரு காளையை அழைப்பது போலவும், மன்னனாலேயே {துரியோதனனாலேயே} அழைக்கப்பட்ட பீமசேனன், கௌரவப் படையின் அந்த யானைப்பிரிவை எதிர்த்து விரைந்தான்.
போரில் திறம் பெற்றவனும், வலிமைமிக்கப் பெரும் கரங்களைக் கொண்டவனுமான பிருதையின் மகன் {பீமன்}, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அந்த யானைப்பிரிவை விரைவாகப் பிளந்தான். தங்கள் உடலின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள புண்களில் ஊனீர் வடிபவையும், மலை போன்றவையுமான அந்தப் பெரும் யானைகள் பீமசேனனின் கணைகளால் சிதைக்கப்பட்டுப் புறமுதுகிடச் செய்யப்பட்டன.
உண்மையில், காற்று எழும்போது மேகத்திரள்களை விரட்டுவதைப் போலவே, அந்தப் பவனன் மகன் {பீமன்} கௌரவர்களின் அந்த யானைப் படையை முறியடித்தான். அந்த யானைகளின் மீது தன் கணைகளை ஏவிய பீமன், தன் கதிர்களால் உலகத்தில் உள்ள அனைத்தையும் தாக்கும் உதயச் சூரியனைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான். பீமனின் கணைகளால் பீடிக்கப்பட்ட யானைகள் குருதியால் மறைக்கப்பட்டு, ஆகாயத்தில் சூரியக்கதிர்களால் ஊடுருவப்பட்ட மேகத்திரள்களைப் போல அழகாகத் தெரிந்தன.
பிறகு, கோபத்தால் தூண்டப்பட்ட துரியோதனன், தன் யானைகளுக்கு மத்தியில் படுகொலைகளை நிகழ்த்திக் கொண்டிருந்த அந்த வாயுத்தேவன் மகனை {பீமனைக்} கூரிய கணைகளால் துளைத்தான். பிறகு, கோபத்தால் கண்கள் சிவந்த பீமன், மன்னனை {துரியோதனனை} யமலோகத்திற்கு அனுப்ப விரும்பி, கூரிய கணைகள் பலவற்றால் அவனை விரைவாகத் துளைத்தான். மேனியெங்கும் கணைகளால் சிதைக்கப்பட்ட துரியோதனன், சினத்தால் தூண்டப்பட்டு, சிரித்துக் கொண்டே, சூரியக் கதிர்களின் பிரகாசத்தை உடைய கணைகள் பலவற்றால் பாண்டுவின் மகனான பீமனைத் துளைத்தான். பிறகு, பாண்டுவின் மகன் {பீமன்}, பல்லங்கள் இரண்டால் துரியோதனனின் வில்லையும், பல்வேறு ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டதும், யானை ஆபரணத்தைக் [1] கொண்டதுமான கொடிமரத்தையும் விரைவாக வெட்டிவீழ்த்தினான்.
[1] வேறொரு பதிப்பில் இந்த வரி, “பாண்டவன் அந்தத் துரியோதனனுடைய இரத்தினத்தினால் சித்தரிக்கப்பட்ட கொடிமரத்திலுள்ள மணிமயமான அரவத்தையும் {பாம்பையும்}, வில்லையும் இரண்டு அர்த்தச்சந்திர பாணங்களாலே சீக்கிரமாக அறுத்தான்” என்றிருக்கிறது. அஃதாவது இந்த இரண்டு பதிப்பிற்கு இடையில் பீமன் பயன்படுத்திய ஆயுதமும் துரியோதனனின் கொடியும் மாறுபடுகின்றன. மன்மதநாததத்தரின் பதிப்பில் துரோண பர்வம் பகுதி 26ல் இந்தச் செய்தி, “துரியோதனன் ரத்தினங்களாலும், ஆபரணங்களாலும் பொறிக்கப்பட்ட (செயற்கையான) யானையைத் தன் கொடியில் கொண்டிருந்தான்; இந்த யானையையும், முன்னவனின் {துரியோதனனின்} வில்லையும், அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்} இரண்டு பல்லங்களால் விரைவாக அறுத்தெறிந்தான்” என்று இருக்கிறது. இந்த வர்ணனையில் கங்குலியும், மன்மதநாததத்தரின் பதிப்பும் ஒத்துப்போகின்றன.
பீமனால் துரியோதனன் இப்படிப் பீடிக்கப்படுவதைக் கண்டு, ஓ! ஐயா, அங்கர்களின் ஆட்சியாளன் [2] பாண்டுவின் மகனை {பீமனைப்} பீடிப்பதற்காக அங்கே வந்தான். அதன் பேரில் பீமசேனன் அப்படி உரத்த முழக்கங்களுடன் முன்னேறி வரும் அந்த யானைகளின் இளவரசனை ஒரு நாராசத்தால் அதன் கும்பங்கள் இரண்டுக்கு இடையில் ஆழமாகத் துளைத்தான். அதன் உடலினூடாக ஊடுருவிச் சென்ற அந்தக் கணை பூமியில் ஆழமாக மூழ்கியது. இதன் பேரில் இடியால் பிளக்கப்பட்ட மலையைப் போல அந்த யானை கீழே விழுந்தது. அந்த யானை அப்படி விழுந்த போது, அதனுடன் சேர்ந்து அந்த மிலேச்ச மன்னனும் விழுந்தான். ஆனால் பெரும் சுறுசுறுப்புடைய விருகோதரனோ {பீமனோ}, தன் எதிராளி கீழே விழுவதற்கு முன்னரே ஒரு பல்லத்தால் அவனது தலையை அறுத்தான். அங்கர்களின் வீர ஆட்சியாளன் விழுந்த போது, அவனது படைப்பிரிவுகள் தப்பி ஓடின. பீதியால் தாக்குண்ட குதிரைகள், யானைகள், தேர்வீரர்கள் ஆகியோர் அப்படித் தப்பி ஓடுகையில் காலாட்படை வீரர்களை நசுக்கினர்.
[2] ஆதிபர்வம் பகுதி 138ல் கர்ணனை துரியோதனன் அங்க மன்னனாக்குகிறான். இங்கே வேறொரு மிலேச்ச மன்னன் அங்க மன்னனாகக் காட்டப்படுகிறான். அப்படியெனில் குருக்ஷேத்திரப் போர் நடக்கையில் அங்கம் கர்ணனின் கைகளில் இல்லையா?
இப்படிப் பிளக்கப்பட்ட அந்தத் துருப்புகள், அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடிய போது, பீமனை எதிர்த்து பிராக்ஜோதிஷர்களின் ஆட்சியாளன் {பகதத்தன்} தன் யானையின் மேல் ஏறி வந்தான். துதிக்கை மற்றும் (முன்னங்) கால்கள் இரண்டும் சுருக்கப்பட்டு, சினத்தால் நிறைந்து, கண்களை உருட்டிக் கொண்டு வந்த அந்த யானை அந்தப் பாண்டுவின் மகனை {பீமனை} (சுடர்மிகும் நெருப்பைப் போல) எரிப்பதாகத் தெரிந்தது. குதிரை பூட்டப்பட்ட விருகோதரனின் {பீமனின்} தேரை அது தூசியாகப் பொடி செய்தது.
பிறகு அஞ்சலிகாபேதம் {அஞ்சலிகா வேதம்} என்ற அறிவியலை அறிந்ததால், பீமன் முன்னோக்கி ஓடி அந்த யானையின் உடலுக்கு அடியில் பதுங்கினான். உண்மையில், அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்} தப்பி ஓடவில்லை. யானையின் உடலுக்குக் கீழே பதுங்கிய அவன் {பீமன்}, தன் வெறுங்கைகளால் அதை {யானையை} அடிக்கடி தாக்கத் தொடங்கினான். தன்னைக் கொல்ல முனையும் அந்த வெல்லப்பட முடியாத யானையை அவன் அடித்தான். அதன் பேரில் பின்னது {அந்த யானை} குயவனின் சக்கரத்தைப் போல விரைவாகச் சுழலத் தொடங்கியது.
பத்தாயிரம் {10000} யானைகளின் பலத்தைக் கொண்ட அருளப்பட்ட விருகோதரன் {பீமன்} இப்படி அந்த யானையைத் தாக்கிய பிறகு, அந்தச் சுப்ரதீகத்தின் உடலை விட்டு வெளியே வந்து, பின்னதை {சுப்ரதீகம் என்ற அந்த யானையை} எதிர்த்து நின்றான். பிறகு {அந்த யானை} சுப்ரதீகம் பீமனைத் தன் துதிக்கைகளால் பிடித்துத் தன் முட்டிக்கால்களால் அவனைக் கீழே வீசி எறிந்தது. உண்மையில், அவனைக் கழுத்தோடு சேர்த்துப் பிடித்த அந்த யானை அவனைக் கொல்ல விரும்பியது. அந்த யானையின் துதிக்கையைத் திருகிய பீமன், அதன் கட்டில் {பிடியில்} இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, மீண்டும் அந்தப் பெரும் உயிரினத்துடைய உடலின் அடியில் பதுங்கினான். தன் படையைச் சேர்ந்த பகையானையின் வருகையை எதிர்பார்த்த அவன் {பீமன்} அங்கேயே காத்திருந்தான். பிறகு அந்த விலங்கின் உடலுக்கு அடியில் இருந்து வெளிப்பட்ட பீமன், பெரும் வேகத்துடன் ஓடிச் சென்றான்.
“ஐயோ, அந்த யானையால் பீமன் கொல்லப்பட்டான்” என்று துருப்புகள் அனைத்தும் பேரொலியை உண்டாக்கின. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த யானையால் பீதியடைந்த பாண்டவப் படை விருகோதரன் எங்குக் காத்திருந்தானோ அங்கே திடீரென ஓடின. அதே வேளையில் பீமன் கொல்லப்பட்டான் என்று நினைத்த மன்னன் யுதிஷ்டிரன், பாஞ்சாலர்களின் உதவியுடன் பகதத்தனை அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டான். எண்ணற்ற தேர்களால் அவனைச் சூழ்ந்து கொண்டவனும், தேர்வீரர்களில் முதன்மையானவனுமான மன்னன் யுதிஷ்டிரன், நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான கூரிய கணைகளால் பகதத்தனை மறைத்தான். பிறகு, மலையகப் பகுதிகளின் மன்னனான அந்தப் பகதத்தன், தன் இரும்பு அங்குசத்தால் அந்தக் கணைமாரியைத் தடுத்து, தன் யானையின் மூலம் பாண்டவர்கள், பாஞ்சாலர்கள் ஆகிய இருவரையும் எரிக்கத் தொடங்கினான்.
உண்மையில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கிழவனான பகதத்தன் தன் யானையைக் கொண்டு அடைந்த அந்தச் சாதனை மிக அற்புதமானதாக நாங்கள் கண்டோம். பிறகு, மதப்பெருக்குடைய வேகமான யானையின் மீது வந்த தசார்ணர்களின் ஆட்சியாளன் {சுதர்மன்}, சுப்ரதீகத்தின் விலாவைத் தாக்குவதற்காகப் பிராக்ஜோதிஷ மன்னனை {பகதத்தனை} எதிர்த்து விரைந்தான். பயங்கர வடிவிலான அந்த இரு யானைகளுக்கும் இடையில் நடைபெற்ற போரானது பழங்காலத்தில் காடுகள் அடர்ந்த சிறகு படைத்த மலைகள் இரண்டுக்கு இடையில் நடைபெற்ற போருக்கு ஒப்பானதாக இருந்தது. பகதத்தனின் யானையானது {சுப்ரதீகம்} சுழன்று விலகி, தசார்ணர்களின் மன்னனுடைய யானையைத் தாக்கி, பின்னதன் விலாவைப் பிளந்து அதைக் கொன்றது. அப்போது பகதத்தன் சூரியக் கதிர்களைப் போன்று பிரகாசமான ஏழு வேல்களை எடுத்து, யானையில் இருந்து விழப்போகின்ற தனது (மனித) எதிரியை {தசார்ண மன்னன் சுதர்மனைக்} கொன்றான்.
(பல கணைகளால்) மன்னன் பகதத்தனைத் துளைத்த யுதிஷ்டிரன், பெரும் எண்ணிக்கையிலான தேர்களுடன் அவனை அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டான். அந்தத் தேர்வீரர்கள் அனைவரும் தன்னைச் சூழத் தன் யானையில் இருந்த அவன் {பகதத்தன்}, அடர்ந்த காட்டுக்கு மத்தியில் மலை முகட்டில் உள்ள சுடர்மிகும் நெருப்பைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான். தன் மீது கணைகளை மழையாகப் பொழிந்த கடும் வில்லாளிகளால் செலுத்தப்பட்ட அந்தத் தேர் அணிவகுப்பின் மத்தியில் அவன் {பகதத்தன்} அச்சமில்லாமல் நின்றான்.
பிறகு அந்தப் பிராக்ஜோதிஷ மன்னன் {பகதத்தன்}, (தன் கட்டைவிரலால்) தனது யானையை அழுத்தி, யுயுதானனுடைய {சாத்யகியின்} தேரை நோக்கி அதைத் தூண்டினான் [3]. அந்த மகத்தான யானை {சுப்ரதீகம்}, சினியின் பேரனுடைய {சாத்யகியின்} தேரைப் பற்றிப் பெரும் வேகத்துடன் தூரமாக வீசி எறிந்தது. எனினும், யுயுதானன் சரியான நேரத்தில் விலகித் தப்பினான். அவனது தேரோட்டியும், அந்தத் தேரில் பூட்டப்பட்டிருந்த சிந்து இனத்தைச் சேர்ந்த பெரிய குதிரைகளைக் கைவிட்டுச் சாத்யகியை விரைவாகப் பின்தொடர்ந்து, பின்னவன் {சாத்யகி} எங்கு நின்றானோ அங்கேயே நின்றான்.
[3] வேறொரு பதிப்பில் இதன்பிறகு இன்னும் ஒரு வரியாக, “சாத்வதர்களுள் சிறந்த அந்த யுயுதானனும், நேரில் வருகின்ற அந்த யானையைக் கண்டு, கூர்மையுள்ளவையும், பாம்புகளைப் போன்றவையுமான ஐந்து கணைகளால் அதை அடித்தான்” என்று இருக்கிறது.
அதே வேளையில் அந்த யானை அந்தத் தேர்களின் வளையத்திற்குள் இருந்து வெளியே வந்து (தன் வழியைத் தடுக்க முயன்ற) மன்னர்கள் அனைவரையும் கீழே வீசத் தொடங்கியது. அதிவேகமாகச் செல்லும் அந்த யானையினால் அச்சமடைந்த அந்த மனிதர்களில் காளையர், போர்க்களத்தில் அந்த ஒரு யானையே பலவாகப் பெருகிவிட்டதாகக் கருதினர். உண்மையில், அந்தத் தனது யானையின் மீதிருந்த பகதத்தன், ஐராவதத்தின் மேலிருக்கும் தேவர்களின் தலைவன் {இந்திரன்} (பழங்காலத்தில்) தானவர்களை அடித்து வீழ்த்தியதைப் போலப் பாண்டவர்களை {பாண்டவ வீரர்களை} அடித்து வீழ்த்தத் தொடங்கினான். பாஞ்சாலர்கள் அனைத்துத் திசைகளிலும் ஓடிய போது அவர்களாலும், அவர்களின் யானைகள் மற்றும் குதிரைகளாலும் எழுந்த பயங்கரமான ஒலி அச்சம் நிறைந்த பேரொலியாக இருந்தது.
அந்தப் பாண்டவத் துருப்புகள் இப்படிப் பகதத்தனால் அழிக்கப்பட்ட போது, சினத்தால் தூண்டப்பட்ட பீமன், பிராக்ஜோதிஷ ஆட்சியாளனை {பகதத்தனை} எதிர்த்து மீண்டும் விரைந்தான். பிறகு, பின்னவனின் {பகதத்தனின்} யானை {சுப்ரதீகம்}, முன்னேறி வரும் பீமனின் குதிரைகளைத் தன் துதிக்கையால் நீரைப் பீய்ச்சி நனைத்து அச்சுறுத்தியது. அதன்பேரில் அந்த விலங்குகள் {குதிரைகள்} பீமனைக் களத்தைவிட்டு வெளியே சுமந்து சென்றன.
பிறகு, கிருதியின் மகனான ருசிபர்வன் {?}, தன் தேரில் ஏறி, கணைமழையை இறைத்தபடி காலனைப் போல முன்னேறி பகதத்தனை எதிர்த்து வேகமாக விரைந்தான். அப்போது மலைப்பகுதிகளின் ஆட்சியாளனும், அழகிய அங்கங்களைக் கொண்டவனுமான அந்தப் பகதத்தன், நேரான கணையொன்றால் ருசிபர்வனை யமனுலகிற்கு அனுப்பினான். வீரனான ருசிபர்வன் வீழ்ந்த பிறகு, சுபத்ரையின் மகன் {அபிமன்யு}, திரௌபதியின் மகன்கள், சேகிதானான், திருஷ்டகேது, யுயுத்சு ஆகியோர் அந்த யானையை {சுப்ரதீகத்தைப்} பீடிக்கத் தொடங்கினர்.
அந்த யானையைக் கொல்ல விரும்பிய அந்த வீரர்கள் அனைவரும், பேரொலியை எழுப்பிக் கொண்டு, மேகங்கள் மழையைப் பொழிந்து பூமியை நனைப்பதைப் போலத் தங்கள் கணை மழையை அந்த விலங்கின் {யானையின்} மீது பொழிந்தனர். திறமைமிக்கப் பாகனான பகதத்தனால் குதிகாலாலும், மாவெட்டியாலும் {அங்குசத்தாலும்}, கால்கட்டைவிரலாலும் தூண்டப்பட்ட அந்த விலங்கு {யானை} தன் துதிக்கையை நீட்டிக் கொண்டு நிலைத்த {அசைவற்றிருக்கும்} காதுகளோடும், கண்களோடும் விரைவாக ஓடியது.
யுயுத்சுவின் குதிரைகளை மிதித்துக் கீழே தள்ளிய அந்த விலங்கு {யானை சுப்தரதீகம்} {அவனது} தேரோட்டியையும் கொன்றது. அதன்பேரில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, யுயுத்சு தன் தேரைக் கைவிட்டு விரைவாகத் தப்பி ஓடினான். பிறகு அந்த யானைகளின் இளவரசனை {சுப்ரதீகத்தைக்} கொல்ல விரும்பிய பாண்டவ வீரர்கள் பேரொலியை எழுப்பிக் கொண்டு கணைகளின் மழையால் அதை விரைவாக மறைத்தனர். அந்த நேரத்தில் சினத்தால் தூண்டப்பட்ட உமது மகன் {துரியோதனன்}, சுபத்ரை மகனின் {அபிமன்யுவின்} தேரை எதிர்த்து விரைந்தான். அதேவேளையில், தன் யானையில் இருந்த மன்னன் பகதத்தன் எதிரி மீது கணைகளை ஏவி கொண்டு, பூமியை நோக்கித் தன் கதிர்களை இறைக்கும் சூரியைனைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.
பிறகு அர்ஜுனன் மகன் {அபிமன்யு} பனிரெண்டு கணைகளாலும், யுயுத்சு பத்தாலும், திரௌபதியின் மகன்கள் ஒவ்வொருவரும் மூன்று {மூன்று மூன்று} கணைகளாலும் அவனை {பகதத்தனைத்} துளைத்தனர், திருஷ்டகேது மூன்று கணைகளால் அவனைத் துளைத்தான் [4]. பெரும் கவனத்துடன் ஏவப்பட்ட அந்தக் கணைகளால் துளைக்கப்பட்ட அந்த யானை, சூரியக் கதிர்களால் ஊடுருவப்பட்ட பெரும் மேகத் திரளைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தது. எதிரியின் அந்தக் கணைகளால் பீடிக்கப்பட்ட அந்த யானை {சுப்ரதீகம்}, அதன் பாகனால் {பகதத்தனால்} திறமையுடனும், வீரத்துடனும் தூண்டப்பட்டு, தன் விலாக்களின் பக்கம் உள்ள பகை வீரர்களை வீசத் தொடங்கியது.
[4] வேறொரு பதிப்பில் இதற்குப் பிறகு, “சேகிதானன் மறுபடியும் மேன்மேலும் ஆயுதங்களை ஏவும் பகதத்தனை அறுபத்துநான்கு கணைகளால் அடித்தான். பிறகு பகதத்தன் அனைவரையும் மும்முன்று கணைகளால் திருப்பியடித்தான்” என்றிருக்கிறது.
காட்டில் தன் மந்தையைத் தடியால் ஓட்டும் மாட்டிடையனைப் போல, பகதத்தன் மீண்டும் மீண்டும் பாண்டவப் படையைத் தாக்கினான். பருந்துகளால் தாக்கப்பட்டுக் கரைந்து கொண்டே விரைவாகப் பின்வாங்கும் காக்கைகளைப் போல, பெரும் வேகத்தோடு ஓடிக் கொண்டிருந்த பாண்டவத்துருப்புகளுக்கு மத்தியில் குழப்பமான உரத்த ஒலி கேட்கப்பட்டது. தன் பாகனின் {பகதத்தனின்} அங்குசத்தால் தாக்கப்பட்ட அந்த யானைகளின் இளவரசன் {சுப்ரதீகம்}, முற்காலத்தில் இருந்த சிறகுகள் படைத்த மலைக்கு ஒப்பானதாக இருந்தது. கொந்தளிக்கும் பெருங்கடலைக் கண்டு அஞ்சும் வணிகர்களைப் போல, அப்போது அது {அந்த யானை} எதிரியின் இதயங்களை அச்சத்தால் நிரப்பியது.
அச்சத்தால் ஓடிக்கொண்டிருந்த யானைகள், தேர்வீரர்கள், குதிரைகள் ஆகியோர் அப்படி ஓடிக் கொண்டிருந்தபோதே, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அவை ஏற்படுத்திய பயங்கரமான ஆரவாரம், அந்தப் போரில், பூமி, வானம், சொர்க்கம், திசைகள் மற்றும் துணைத்திசைகள் ஆகியவற்றை நிறைத்தது. யானைகளில் முதன்மையான அந்த யானையில் அமர்ந்திருந்த மன்னன் பகதத்தன், தேவர்களால் நன்கு பாதுகாக்கப்பட்ட போரில், தேவர்களின் படைக்குள் பழங்காலத்தில் ஊடுருவிய அசுரன் விரோசனனைப் போலப் பகைவர்களின் படைக்குள் ஊடுருவினான். பயங்கரக் காற்று வீசத் தொடங்கியது; புழுதி மேகம் வானத்தையும் துருப்புகளையும் மறைத்தன; களமெங்கும் திரிந்த அந்தத் தனி யானைப் பலவாகப் பெருகிவிட்டதாக மக்கள் கருதினர்” {என்றான் சஞ்சயன்}.
ஆங்கிலத்தில் | In English |