Monday, May 02, 2016

பார்த்தனின் செயலை வியந்த மாதவன்! - துரோண பர்வம் பகுதி – 025

Madhava wondered Partha’s feat! | Drona-Parva-Section-025 | Mahabharata In Tamil

(சம்சப்தகவத பர்வம் – 09)

பதிவின் சுருக்கம் : பகதத்தனைக் கொல்வதாக உறுதியேற்று அவனிடம் விரைந்த அர்ஜுனனை சம்சப்தகர்கள் போருக்கு அழைப்பது; பகதத்தனை விட்டுச் சம்சப்தகர்களிடம் திரும்பிய அர்ஜுனன்; போரில் தாக்கப்பட்டு மயக்கமடைந்த கிருஷ்ணன்; பிரம்மாஸ்திரத்தை ஏவிய அர்ஜுனன்; அர்ஜுனன் ஏற்படுத்திய பேரழிவு; அர்ஜுனனின் செயலை எண்ணி வியந்த கிருஷ்ணன்...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “போரில் அர்ஜுனனின் அருஞ்செயல்களைக் குறித்து நீர் என்னைக் கேட்டீர். ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே {திருதராஷ்டிரரே} போரில் பார்த்தன் {அர்ஜுனன்} எதை அடைந்தான் என்பதைக் கேளும். களத்தில் பகதத்தன் பெரும் சாதனைகளைச் செய்த போது, துருப்புகளுக்கிடையில் ஏற்பட்ட அலறலைக் கேட்டும், எழுந்த புழுதியைக் கண்டும், குந்தியின்மகன் {அர்ஜுனன்} கிருஷ்ணனிடம், “ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, பிராக்ஜோதிஷர்களின் ஆட்சியாளன் {பகதத்தன்} தன் யானையில் பெரும் வேகத்தோடு போருக்கு முன்னேறுவதாகத் தெரிகிறது. நாம் கேட்கும் இந்த உரத்த ஆரவாரம் அவனால் {பகதத்தனால்} ஏற்பட்டதாகவே இருக்க வேண்டும். யானையின் முதுகில் இருந்து போரிட்டு {பகையணியைக்} கலங்கடிக்கும் கலையை நன்கறிந்தவனும், போரில் இந்திரனுக்குச் சற்றும் குறையாதவனுமான அவன் {பகதத்தன்} உலகில் உள்ள யானை வீரர்கள் அனைவரிலும் முதன்மையானவன் என நான் நினைக்கிறேன்.


மேலும் அவனது யானையும் {சுப்ரதீகமும்} போரில் மோதுவதற்கு எதிரியற்ற முதன்மையான யானையாகும். பெரும் திறமை கொண்டதும், களைப்பனைத்துக்கும் மேலானதுமான அது {அந்த யானை}, ஆயுதங்கள் எதையும் பொருட்படுத்தாது. ஓ! பாவமற்றவனே {கிருஷ்ணனா}, அனைத்து ஆயுதங்களையும் தாங்க வல்லதும், நெருப்பின் தீண்டலைக் கொண்டதுமான அஃது {அந்த யானை} ஒன்றே தனியாக இன்று பாண்டவப் படையை அழித்துவிடும். நம்மிருவரைத் தவிர அந்த உயிரினத்தைத் தடுக்கவல்லவர் வேறு யாருமில்லை. எனவே, பிராக்ஜோதிஷர்களின் ஆட்சியாளன் {பகதத்தன்} இருக்கும் இடத்திற்கு விரைவாகச் செல்வாயாக. தன் யானையுடைய பலத்தின் விளைவால் போரில் செருக்குடையவனும், தன் வயதின் விளைவால் ஆணவம் கொண்டவனுமான அவனை {பகதத்தனை} பலனைக் {பலாசுரனைக்} கொன்றவனிடம் {இந்திரனிடம்} விருந்தினனாக இன்றே அனுப்புவேன்” என்றான் {அர்ஜுனன்}.

அர்ஜுனனின் இந்த வார்த்தைகளால் கிருஷ்ணன், பாண்டவப் படையணிகளைப் பிளந்து கொண்டிருக்கும் பகதத்தன் இருக்கும் இடத்திற்கு முன்னேறத் தொடங்கினான். அர்ஜுனன், பகதத்தனை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, பதினாலாயிரம் {14000} எண்ணிக்கையிலான வலிமைமிக்கச் சம்சப்தகத் தேர்வீரர்களும், வாசுதேவனை {கிருஷ்ணனை} வழக்கமாகப் பின்தொடரும் பத்தாயிரம் கோபாலர்கள் அல்லது நாராயணர்களும், களத்ததிற்குத் திரும்பி அவனைப் போருக்கு அழைத்தனர் [1].

[1] வேறொரு பதிப்பில் இந்த வரி, “செல்லுகின்ற அந்த அர்ஜுனனை பெரும் தேர்வீரர்களான பதினாலாயிரம் சம்சப்தகர்கள் பின்பக்கத்திலிருந்து அழைத்துக் கொண்டு நெருங்கி வந்தனர். அவர்களுள் பெரும் தேர்வீரர்களான பத்தாயிரம் திரிகர்த்தர்கள் அர்ஜுனனையும், பெரும் தேர்வீரர்களான நாலாயிரம் பேர் கிருஷ்ணனையும் அழைத்துக் கொண்டு பின்தொடர்ந்தனர். மன்மதநாத தத்தரின் பதிப்பில் இவ்வரிகள் இன்னும் தெரிவாக இருப்பதாகத் தெரிகிறது. அது பின்வருமாறு: “அர்ஜுனன் பகதத்தனை நோக்கிச் சென்ற போது, வலிமைமிக்கத் தேர்வீரர்களான பதினாலாயிரம் சம்சப்தகர்கள் பின்புறத்தில் இருந்து அவனை மகிழ்ச்சியாக அழைத்தனர். பதினாலாயிரம் பேர்களான இவர்களில் பத்தாயிரம் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் திரிகர்த்த குலத்தைச் சேர்ந்தவர்கள், (எஞ்சிய) நாலாயிரம் பேர் வசுதேவர் மகனைப் பின்தொடர்பவர்களாவர் {கோபாலர்கள் அல்லது நாராயணர்கள் ஆவர்}” என்று இருக்கிறது.

{ஒருபுறம்} பகதத்தனால் பிளக்கப்படும் பாண்டவப் படையைக் கண்டும், மறுபுறம் சம்சப்தகர்களால் அழைக்கப்பட்டும், அர்ஜுனனின் இதயம் இரண்டாகப் பிரிந்தது. அவன் {அர்ஜுனன்}, “சம்சப்தகர்களுடன் போரிட இந்த இடத்திற்குத் திரும்புவது, அல்லது யுதிஷ்டிரரிடம் செல்வது ஆகிய இந்த இரண்டு செயல்களில் இன்று எது எனக்குச் சிறந்தது?” என்று எண்ணத் தொடங்கினான். தன் புரிதலின் துணை கொண்டு சிந்தித்த அவனது {அர்ஜுனனின்} இதயம் இறுதியாக, ஓ! குரு குலத்தைத் தழைக்க வைப்பவரே {திருதராஷ்டிரரே}, சம்சப்தகர்களைக் கொல்வதில் உறுதியாக நிலைத்தது.

குரங்குகளில் முதன்மையானதைத் தன் கொடியில் கொண்ட அந்த இந்திரனின் மகன் (அர்ஜுனன்), தனியாகப் போரில் ஆயிரக்கணக்கான தேர்வீரர்களைக் கொல்ல விரும்பித் திடீரெனத் திரும்பினான். அர்ஜுனனைக் கொல்ல துரியோதனன், கர்ணன் ஆகிய இருவரும் நினைத்ததும் இதுவே. இதற்காகவே அவர்கள் இந்த இரட்டை மோதலுக்கான ஏற்பாட்டைச் செய்திருந்தனர். பாண்டுவின் மகனும் தன் இதயத்தை அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் அலைபாயவிட்டான், ஆனால், இறுதியில், போர்வீரர்களில் முதன்மையான சம்சப்தகர்களைக் கொல்லத் தீர்மானித்துத் தன் எதிரிகளின் நோக்கத்தைக் கலங்கடித்தான்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தேர்வீரர்களான வலிமைமிக்கச் சம்சப்தகர்கள் ஆயிரக்கணக்கான நேரான கணைகளை அர்ஜுனன் மீது ஏவினர். அந்தக் கணைகளால் மறைக்கப்பட்ட குந்தியின் மகனான பார்த்தனோ {அர்ஜுனனோ}, ஜனார்த்தனன் என்று அழைக்கப்படும் கிருஷ்ணனோ, குதிரைகளோ, அந்தத் தேரோ காணப்படவில்லை {கண்ணுக்குப் புலப்படவில்லை}. அப்போது ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} தன் புலன்களை இழந்து, பெரிதும் வியர்த்தான். அதன் பேரில் பிரம்மாயுதத்தை ஏவிய பார்த்தன் {அர்ஜுனன்}, கிட்டத்தட்ட அவர்கள் அனைவரையும் அழித்தான்.

வில்லின் நாண்கயிறுகளைப் பிடித்துக் கொண்டும், விற்களையும், கணைகளையும் கொண்ட நூற்றுக்கணக்கான கரங்களும், நூறு நூறான கொடிமரங்களும், குதிரைகளும் கீழே தரையில் விழுந்தன, மேலும், தேரோட்டிகளும், தேர்வீரர்களும் விழுந்தனர். காடுகள் அடர்ந்து வளர்ந்த முதன்மையான மலைகளுக்கும், மேகத் திரள்களுக்கும் ஒப்பானவையும், நன்றாகப் பழக்கப்பட்டவையுமான பெரும் யானைகள் பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகளால் பீடிக்கப்பட்டும், தங்கள் பாகன்களை இழந்தும் பூமியில் விழுந்தன. பாகர்களைத் தங்கள் முதுகுகளில் கொண்ட பல யானைகள், அர்ஜுனனின் கணைகளால் நசுக்கப்பட்டு, தங்கள் முதுகில் உள்ள சித்திரவேலைப்பாடுகளைக் கொண்ட துணிகள் வெட்டப்பட்டு, தங்கள் அம்பாரிகள் உடைக்கப்பட்டு உயிரை இழந்து கீழே விழுந்தன.

கிரீடியின் {அர்ஜுனனின்} பல்லங்களால் வெட்டப்பட்ட மனிதர்களுடைய கரங்கள், வாள்கள், வேல்கள், கத்திகள், நகங்கள், முத்கரம், போர்க்கோடரி ஆகியவற்றைப் பிடித்த நிலையிலேயே கீழே விழுந்தன. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, காலைச்சூரியனைப் போன்றோ, தாமரையைப் போன்றோ, சந்திரனைப் போன்றோ இருந்த அழகிய தலைகள் அர்ஜுனனின் கணைகளால் வெட்டப்பட்டுத் தரையில் விழுந்தன. சினத்தில் இப்படிப் பல்வேறு வகைகளிலான மரணக் கணைகளால் எதிரியைக் கொல்வதில் பல்குனன் {அர்ஜுனன்} ஈடுபட்டபோது, அந்தப் படை எரிவது போலத் தெரிந்தது. தண்டுகளுடன் கூடிய தாமரைகளை நசுக்கும் யானையைப் போல அந்தப் படையை நசுக்கும் தனஞ்சயனை {அர்ஜுனனைக்} கண்ட அனைத்து உயிரினங்களும், “நன்று, நன்று” என்று சொல்லி அவனை மெச்சின.

வாசவனுக்கு {இந்திரனுக்கு} ஒப்பான பார்த்தனின் அந்தச் சாதனையைக் கண்ட மாதவன் {கிருஷ்ணன்} மிகவும் ஆச்சரியமடைந்து, கூப்பிய கரங்களுடன் அவனிடம் {அர்ஜுனனிடம்}, “ஓ! பார்த்தா {அர்ஜுனா}, நீ அடைந்திருக்கும் சாதனையைச் சக்ரனாலோ {இந்திரனாலோ}, யமனாலோ, பொக்கிஷங்களின் தலைவனாலோ {குபேரனாலோ} செய்ய முடியாது என்றே நான் நினைக்கிறேன். இன்று வலிமைமிக்கச் சம்சப்தக வீரர்கள் அனைவரையும் நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் வீழ்த்தியதை நான் கண்டேன்” என்றான் {கிருஷ்ணன்}.

பார்த்தன் {அர்ஜுனன்}, போரில் ஈடுபட்ட சம்சப்தகர்களைக் கொன்ற பிறகு, கிருஷ்ணனிடம், “பகதத்தனிடம் செல்வாயாக” என்றான்” {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English