Tuesday, May 03, 2016

வாய்ப்பைப் பயன்படுத்தாத அர்ஜுனன்! - துரோண பர்வம் பகுதி – 026

Arjuna availed not the opportunity! | Drona-Parva-Section-026 | Mahabharata In Tamil

(சம்சப்தகவத பர்வம் – 10)

பதிவின் சுருக்கம் : அர்ஜுனனைச் சவாலுக்கழைத்த சுசர்மன்; சுசர்மனின் தம்பிகளைக் கொன்ற அர்ஜுனன்; சுசர்மனை மயக்கமடையச் செய்து கௌரவர்களை நோக்கி முன்னேறிய அர்ஜுனன்; பகதத்தன் அர்ஜுனன் மோதல்; தேரைத் திருப்பி சுப்ரதீகத்தைக் கொல்லும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த கிருஷ்ணன்; நியாயமான போரைக் கருதி அந்த வாய்ப்பைப் பயன்படுத்தாத அர்ஜுனன்...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பார்த்தனின் {அர்ஜுனனின்} விருப்பத்தின் பேரில் கிருஷ்ணன், தங்கக் கவசத்தால் மறைக்கப்பட்டவையும், மனோவேகம் கொண்டவையுமான அவனது வெண்குதிரைகளைத் துரோணரின் படைப்பிரிவுகளை நோக்கித் தூண்டினான். இப்படி அந்தக் குருக்களில் முதன்மையானவன் {அர்ஜுனன்}, துரோணரால் அதீதமாகப் பீடிகப்பட்ட தன் சகோதரர்களை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, {அர்ஜுனனோடு} போரிட விரும்பிய சுசர்மன் தன் தம்பிகளோடு அவனைப் பின்தொடர்ந்தான்.


பிறகு எப்போதும் வெல்பவனான அர்ஜுனன், கிருஷ்ணனிடம், “ஓ! மங்காத மகிமை கொண்டவனே {அச்யுதா, கிருஷ்ணா}, இங்கே தன் தம்பிகளோடு கூடிய சுசர்மன் போருக்குச் சவால் விடுக்கிறான். ஓ! எதிரிகளைக் கொல்பவனே {கிருஷ்ணா}, வடக்கில் நமது படை (துரோணரால்) பிளக்கப்படுகிறது. நான் இதைச் செய்ய வேண்டுமா, அதைச் செய்ய வேண்டுமா என இந்தச் சம்சப்தகர்களின் விளைவால் இன்று என் இதயம் அலைபாய்கிறது. நான் இப்போது சம்சப்தகர்களைக் கொல்வேனா? அல்லது ஏற்கனவே எதிரிகளால் பீடிக்கப்படும் என் துருப்புகளைத் தீங்கிலிருந்து காப்பேனா? நான், ’இவற்றில் எது எனக்குச் சிறந்தது?’ என்றே நினைக்கிறேன் என அறிவாயாக” என்றான் {அர்ஜுனன்}.

இப்படி அவனால் {அர்ஜுனனால்} சொல்லப்பட்ட தாசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்}, தேரைத் திருப்பிக் கொண்டு, அந்தப் பாண்டுவின் மகனை {அர்ஜுனனைத்} திரிகர்த்தர்களின் ஆட்சியாளன் {சுசர்மன்} இருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றான். அப்போது அர்ஜுனன் ஏழு கணைகளால் சுசர்மனைத் துளைத்து, மேலும் இரண்டு கூரிய கணைகளால் அவனது வில்லையும், கொடிமரத்தையும் அறுத்தான். பிறகு அவன் {அர்ஜுனன்}, ஆறு கணைகளைக் கொண்டு திரிகர்த்த மன்னனின் {சுசர்மனின்} தம்பிகளை விரைவாக யமலோகம் அனுப்பிவைத்தான் [1].

[1] வேறொரு பதிப்பில் இந்த வரி சற்றே மாறுபடுகிறது, “அர்ஜுனன் விரைந்து ஆறு பாணங்களாலே திரிகர்த்த தேசாதிபனுடைய சகோதரனைக் குதிரைகளோடும் சாரதியோடும் யமலோகத்திற்கு அனுப்பினான்” என்று இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் இப்படியே இருக்கிறது.

பிறகு சுசர்மன், அர்ஜுனனைக் குறிபார்த்து முழுக்க இரும்பாலானதும், பாம்பு போலத் தெரிந்ததுமான ஈட்டி ஒன்றை அவன் {அர்ஜுனன்} மீது எறிந்தான், வாசுதேவனைக் {கிருஷ்ணனைக்} குறி பார்த்து, அவன் மீது வேல் ஒன்றை எறிந்தான். மூன்று கணைகளால் அந்த ஈட்டியையும், மேலும் மூன்று கணைகளால் அந்த வேலையும் அறுத்த அர்ஜுனன், தன் கணைகளின் மாரியால் இருந்த சுசர்மனை, அவனைத் தேரிலேயே புலன்களை இழக்கச் செய்தான்.

பிறகு, மழையைப் பொழியும் வாசவனை {இந்திரனைப்} போலக் கணைகளின் மாரியை இறைத்தபடி (உமது படைப்பிரிவை நோக்கி) மூர்க்கமாக அவன் {அர்ஜுனன்} முன்னேறியபோது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது துருப்புகளில் எவரும் எதிர்க்கத் துணியவில்லை. முன்னேறிச் செல்லும்போதே வைக்கோல் குவியலை எரிக்கும் நெருப்பைப் போலத் தன் கணைகளால் கௌரவர்களின் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அனைவரையும் எரித்தபடி தனஞ்சயன் {அர்ஜுனன்} முன்னேறினான். உயிர்வாழும் உயிரினமொன்று நெருப்பின் தீண்டலைத் தாங்கிக் கொள்ள முடியாததைப் போல, புத்திசாலியான அந்தக் குந்தியின் மகனுடைய {அர்ஜுனனின்} தடுக்கப்பட முடியாத வேகத்தை உமது துருப்புகளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

உண்மையில், அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தன் கணைகளால் பகைவரின் படையை மூழ்கடித்து, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, (தன் இரையின் மீது) பாயும் கருடனைப் போல, பிராக்ஜோதிஷர்களின் மன்னனிடம் {பகதத்தனிடம்} வந்தான். தன் முடிவை அடைவதற்கு வஞ்சகமான பகடையாட்டத்தின் உதவியை நாடிய உமது மகனின் {துரியோதனனின்} பிழைக்காகவும், க்ஷத்திரியர்களை அழிப்பதின் பொருட்டும், அவன் {அர்ஜுனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, {பாவமற்ற} அப்பாவிப் பாண்டவர்களுக்குப் போரில் நன்மையைச் செய்வதும், எதிரிகள் அனைவருக்கும் கேடுவிளைவிப்பதுமான காண்டீவத்தைத் தன் கைகளில் பிடித்தான்.

இப்படிப் பார்த்தனால் {அர்ஜுனனால்} கலங்கடிக்கப்பட்ட உமது படை, ஓ !மன்னா, பாறையின் மீது மோதிய படகைப் போலப் பிளந்தது. பிறகு, துணிச்சல்மிக்கவர்களும், வெற்றியைக் கைப்பற்றும் உறுதியான தீர்மானத்துடன் கூடியவர்களுமான பத்தாயிரம் {10000} வில்லாளிகள் (அர்ஜுனனுடன் மோதுவதற்காக) முன்னேறினர். அச்சமற்ற இதயங்களைக் கொண்ட அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அனைவரும் அவனை {அர்ஜுனனைச்} சூழ்ந்து கொண்டனர். போரில் எவ்வளவு கனமான எந்தச் சுமையையும் தாங்க வல்ல பார்த்தன் {அர்ஜுனன்} அந்தக் கனமான சுமையை அடைந்தான். மதங்கொண்ட அறுபது வயது கோபக்கார யானை ஒன்று தாமரைக்கூட்டங்களை நசுக்குவதைப் போலவே, பார்த்தனும் {அர்ஜுனனும்} அந்த உமது படைப்பிரிவை நசுக்கினான்.

அந்தப் படைப்பிரிவு இப்படி நசுக்கப்பட்டபோது, மன்னன் பகதத்தன், அதே யானையில் {சுப்ரதீகத்தில்} அர்ஜுனனை நோக்கி மூர்க்கமாக விரைந்தான். அதன் பேரில் மனிதர்களில் புலியான தனஞ்சயன் {அர்ஜுனன்} தன் தேரில் இருந்த படியே பகதத்தனை வரவேற்றான். அர்ஜுனன் தேருக்கும், பகதத்தன் யானைக்கும் இடையில் நடந்த மோதலானது அதீத கடுமையும் தீவிரமும் கொண்டதாக இருந்தது. அறிவியல் விதிகளின்படி {சாத்திர விதிப்படி} தயாரிக்கப்பட்ட தன் தேரில் ஒருவனும், தன் யானையில் மற்றவனும் என, வீரர்களான பகதத்தன் மற்றும் தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகிய இருவரும் களத்தில் திரிந்தனர்.

அப்போது பகதத்தன், மேகத்திரள்களைப் போலத் தெரிந்த தன் யானையில் இருந்து கொண்டு, தலைவன் இந்திரனைப் போலத் தனஞ்சயன் {அர்ஜுனன்} மீது கணை மாரியைப் பொழிந்தான். எனினும் வாசவனின் {இந்திரனின்} வீரமகன் {அர்ஜுனன்}, பகதத்தனின் அந்தக் கணை மாரி தன்னை அடையும் முன்பே அவற்றைத் தன் கணைகளால் வெட்டினான். பிறகு பிராக்ஜோதிஷர்களின் மன்னன் {பகதத்தன்} அர்ஜுனனின் கணைமாரியைக் கலங்கடித்து, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பார்த்தன் {அர்ஜுனன்} மற்றும் கிருஷ்ணன் ஆகிய இருவரையும் கணைகள் பலவற்றால் தாக்கினான். கணைகளின் அடர்த்தியான மழையால் அவர்கள் இருவரையும் மூழ்கடித்த பகதத்தன், கிருஷ்ணனையும் பார்த்தனையும் {அர்ஜுனனையும்} அழிப்பதற்காகத் தன் யானையைத் தூண்டினான்.

அந்தகனைப் போல முன்னேறி வரும் அந்தக் கோபக்கார யானையைக் கண்ட ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, அந்த யானை தன் இடப்பக்கத்தில் இருக்குமாறு தன் தேரை விரைவாக நகர்த்தினான். தனஞ்சயனுக்கு {அர்ஜுனனுக்கு}, அந்தப் பெரும் யானையை, அதன் முதுகில் உள்ள பாகனோடு {பகதத்தனோடு} சேர்த்துக் கொல்ல இப்படிப்பட்ட வாய்ப்புக் கிடைத்தாலும், நியாயமான {நல்ல} போரின் விதிகளை நினைவுகூர்ந்த அவன் {அர்ஜுனன்}, அதை {அந்த வாய்ப்பைப்} பயன்படுத்திக் கொள்ள விரும்பவில்லை [2]. எனினும், அந்த யானை {சுப்ரதீகம்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பிற யானைகளையும், தேர்களையும், குதிரைகளையும் அடைந்து, அவையனைத்தையும் யமலோகத்திற்கு அனுப்பியது. இதைக் கண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்} சினத்தால் நிறைந்தான்” {என்றான் சஞ்சயன்}.

[2] வேறொரு பதிப்பில் இந்த வரி, “கோபங்கொண்ட அந்தகன் போல வருகின்ற அந்த யானையைக் கண்டு ஜனார்த்தனன் தேரினாலே அதிவேகத்தோடே அதனை அபஸவ்யமாகச் சுற்றினான். தனஞ்சயன் யுத்ததர்மத்தை நினைத்து யுத்தத்திற்காக வந்திருந்தாலும், திரும்பிய அந்தப் பெரிய யானையை அதன் மீதுள்ள பகதத்தனோடு மரணத்துக்கு உட்படுத்த விரும்பவில்லை.” என்றிருக்கிறது.


ஆங்கிலத்தில் | In English