Abhimanyu broke the array! | Drona-Parva-Section-034 | Mahabharata In Tamil
(அபிமன்யுவத பர்வம் – 04)
பதிவின் சுருக்கம் : அபிமன்யுவைப் போரிட வேண்டாம் என்று தடுத்த தேரோட்டி சுமித்ரன்; துரோணரின் தலைமையிலான வீரர்களுடன் மோதிய அபிமன்யு; துரோணரின் கண்ணெதிரிலேயே வியூகத்தைப் பிளந்த அபிமன்யு; கௌரவப் படைக்குப் பேரழிவை ஏற்படுத்திய அபிமன்யு; களத்தைவிட்டு ஓடிய கௌரவப் படையின் போர்வீரர்கள்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "புத்திக்கூர்மை கொண்ட யுதிஷ்டிரனின் வார்த்தைகளைக் கேட்ட சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, துரோணரின் வியூகத்தை நோக்கித் தன் தேரோட்டியைத் தூண்டினான். "செல்வீர், செல்வீர்" என்று அபிமன்யுவால் தூண்டப்பட்ட அந்தத் தேரோட்டி {சுமித்ரன்}, அவனிடம் {அபிமன்யுவிடம்}, "ஓ! நீண்ட ஆயுளைக் கொண்டவனே, பாண்டவர்களால் உன் மேல் சுமத்தப்பட்டிருக்கும் சுமையானது மிகக் கனமானதாகும். அஃதை உன்னால் தாங்க முடியுமா? முடியாதா? என்பதை உறுதி செய்து கொண்ட பிறகே நீ போரில் ஈடுபட வேண்டும். ஆசான் துரோணரோ மேன்மையான ஆயுதங்களை ஆழப் புரிந்தவரும், (போரில்) சாதித்தவருமாவார். நீயோ, பெரும் ஆடம்பரத்துடன் வளர்க்கப்பட்டு, போருக்கு பழக்கமில்லாதவனாக இருக்கிறாய்" என்றான் {தேரோட்டி சுமித்ரன்}.
இந்த வார்த்தைகளைக் கேட்ட அபிமன்யு, தன் தேரோட்டியிடம் சிரித்துக் கொண்டே, "ஓ! தேரோட்டியே, யார் இந்தத் துரோணர்? மேலும், க்ஷத்திரியர்களின் இந்தப் பரந்த கூட்டம்தான் என்ன? தேவர்கள் அனைவரின் உதவியோடு, சக்ரனே {இந்திரனே} தன் ஐராவதத்தில் வந்தாலும், போரில் நான் மோதுவேன். நான் இந்த க்ஷத்திரியர்கள் அனைவரையும் குறித்துச் சிறு கவலையும் கொள்ளவில்லை. பகைவரின் இந்தப் படை என்னில் பதினாறில் ஒரு பங்குக்கும் சமமாகாது. ஓ! சூதரின் மகனே {சுமித்திரரே}, விஷ்ணுவையே {கிருஷ்ணரையே} தாய்மாமனாகவும், அண்டத்தை வெல்லும் அர்ஜுனரை என் தந்தையாகவும் கொண்டு, போரில் ஒரு பகைவனாக இருக்கும் என் இதயத்தில் அச்சம் நுழைய முடியாது" என்றான்.
பிறகும் அபிமன்யு, அந்தத் தேரோட்டியின் {சுமித்ரனின்} வார்த்தைகளை அலட்சியம் செய்து, பின்னவனைத் {தேரோட்டியைத்} தூண்டும் வகையில், "துரோணரை நோக்கி வேகமாகச் செல்வீராக" என்றான். இப்படி ஆணையிடப்பட்ட தேரோட்டி, சிறிதும் உற்சாகமற்ற இதயத்துடன், தங்க இழைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த அபிமன்யுவின் மூன்று வயதான குதிரைகளைத் தூண்டினான். துரோணரின் படையை நோக்கி சுமித்ரனால் தூண்டப்பட்ட அந்தப் புரவிகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் வேகத்துடனும், ஆற்றலுடனும் துரோணரையே நோக்கி விரைந்தன.
(தங்களை நோக்கி) அவ்வழியில் அவன் {அபிமன்யு} வருவதைக் கண்ட துரோணரின் தலைமையிலான கௌரவர்கள் அனைவரும் அவனை எதிர்த்துச் சென்றனர். மேலும், பாண்டவர்களும் அவனைப் {அபிமன்யுவைப்} பின்னால் தொடர்ந்து சென்றனர். அர்ஜுனனுக்கும் மேம்பட்டவனும், தங்கக் கவசம் பூண்டவனும், கோங்கு மரம் பொறித்த சிறந்த கொடிரமரத்தைக் கொண்டவனுமான அந்த அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, யானைகளின் மந்தையைத் தாக்கும் சிங்கக் குட்டியைப் போலப் போரிட விரும்பி, துரோணரின் தலைமையிலான போர்வீரர்களுடன் அச்சமற்றவகையில் மோதினான். மகிழ்ச்சியால் நிறைந்த அந்தப் போர் வீரர்கள், அபிமன்யு தங்கள் வியூகத்தைத் {சக்கரவியூகத்தைத்} துளைக்க முயன்ற அந்த வேளையில் அவனை {அபிமன்யுவைத்} தாக்கத் தொடங்கினர். கங்கையின் நீரோட்டம் பெருங்கடலில் கலக்கும் இடத்தில் நீர்ச்சுழி காணப்படுவதைப் போல, அங்கே {போர்க்களத்தில்} ஒரு கணம் கொந்தளிப்பு உண்டானது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு போராடும் வீரர்களிடையில் அங்கே தொடங்கிய போரானது, கடுமையானதாகவும், பயங்கரமானதாகவும் மாறியது.
அந்தப் பயங்கரப் போர் நடந்து கொண்டிருக்கையில், அந்த அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, துரோணர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்த வியூகத்தைப் {சக்கரவியுகத்தைப்} பிளந்து அதற்குள் ஊடுருவினான். பிறகு, மகிழ்ச்சியால் நிறைந்த {உமது படையின்} பெரும் எண்ணிக்கையிலான யானைகள், குதிரைகள், தேர்கள் மற்றும் காலாட்படையினர், இப்படி எதிரியின் மத்தியில் ஊடுருவி வந்த அந்த வலிமைமிக்கப் போர்வீரனை {அபிமன்யுவைச்} சூழ்ந்து கொண்டு, அவனைத் தாக்கத் தொடங்கினர். பல்வேறு இசைக்கருவிகளின் ஒலிகள், கொக்கரிப்புகள், அக்குள் தட்டல்கள், முழக்கங்கள், கூச்சல்கள், சிம்ம கர்ஜனைகள், "நில், காத்திரு" என்ற ஒலிகள், குழப்பமான கடுங்குரல்கள், "போகாதே, நில், என்னிடம் வா" என்ற அலறல்கள், "இவன், இதோ நான், பகைவன்" என்று மீண்டும் மீண்டும் சொல்லப்பட்ட ஒலிகள், யானைகளின் பிளிறல்கள், மணிகள் மற்றும் ஆபரணங்களின் கிங்கிணியோசைகள், வெடித்த சிரிப்புகள், குதிரைக் குளம்பு மற்றும் தேரின் {தேர்ச்சக்கரங்களின்} சடசடப்பொலிகள் ஆகியவற்றுடன் [பூமியை எதிரொலிக்கும்படி செய்து கொண்டு], அர்ஜுனன் மகனை {அபிமன்யுவை} நோக்கி அந்த (கௌரவப்) போர்வீரர்கள் விரைந்தனர்.
எனினும், பெரும் கர நளினமும் {லாவகமும்}, உடலின் முக்கிய அங்கங்களின் அறிவையும் கொண்ட அந்த வலிமைமிக்க வீரன் {அபிமன்யு}, முக்கிய அங்கங்களைத் துளைக்கவல்ல ஆயுதங்களை வேகமாக ஏவி, முன்னேறி வரும் அந்தப் போர்வீரர்களைக் கொன்றான். பல்வேறு விதங்களிலான கூரிய கணைகளால் கொல்லப்பட்ட அந்தப் போர் வீரர்கள் முற்றிலும் ஆதரவற்றவர்களாகி சுடர்மிக்க நெருப்பில் விழும் பூச்சிகளைப் போலப் போர்க்களத்தில் அபிமன்யுவிடம் தொடர்ச்சியாக விழுந்தனர்.
பிறகு, வேள்வி ஒன்றில், புரோகிதர்கள் வேள்வி மேடையைக் குசப்புற்களால் {தர்ப்பைகளால்} பரப்புவதைப் போல, அபிமன்யு, அவர்களுடைய உடல்களையும், உடலின் உறுப்புகளையும் போர்க்களத்தில் பரப்பினான். மேலும் அந்த அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, அவ்வீரர்களின் கரங்களை ஆயிரக்கணக்கில் வெட்டி வீழ்த்தினான். அவற்றில் {அந்தக் கரங்களில்} சில உடும்புத்தோலாலான கையுறைகளையும், சில விற்களையும் கணைகளையும் கொண்டிருந்தன, சில {கரங்கள்} வாள்களையோ, கேடயங்களையோ, அங்குசங்களையோ, கடிவாளங்களையோ கொண்டிருந்தன; மேலும் சில வேல்களையும், போர்க்கோடரிகளையும் கொண்டிருந்தன. சில கதாயுதங்களையோ, இரும்பு குண்டுகளையோ {பந்துகளையோ}, ஈட்டிகளையோ கொண்டிருந்தன; சில ரிஷ்டிகளையும், கவைக்கோல்களையும், கோடரிகளையும் கொண்டிருந்தன. சில பிண்டிபாலங்களையோ {குறுங்கணைகளையோ}, பரிகங்களையோ {முள் பதிக்கப்பட்ட தண்டாயுதங்களையோ}, கணைகளையோ, கம்பனங்களையோ பிடித்திருந்தன. சில சாட்டைகளையும், மகத்தான சங்குகளையும், பராசங்களையும், கசகிரகங்களையும் கொண்டிருந்தன. சில முத்கரங்களையும், சில பிறவகை ஏவுகணைகளையும் கொண்டிருந்தன. சில சுருக்குக் கயிறுகளையும் {பாசங்களையும்}, சில கனமான தண்டங்களையும், சில கற்களையும் கொண்டிருந்தன. அந்தக் கரங்கள் அனைத்தும் கைவளையங்களால் அலங்கரிக்கபட்டும், இனிமையான நறுமணப் பொருட்கள் மற்றும் தைலங்களால் பூசப்பட்டுமிருந்தன. ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, கருடனால் கொல்லப்பட்ட ஐந்து தலை நாகங்களைப் போலக் குருதி பூசப்பட்டிருந்த அந்தக் கரங்களின் பிரகாசத்தால் அந்தப் போர்க்களமே அழகானது.
அழகிய மூக்குகள், முகங்கள், மயிர் ஆகியவற்றைக் கொண்டு, பருக்களில்லாமல் அழகிய குண்டலங்களைக் கொண்ட எதிரிகளின் எண்ணற்ற தலைகளைப் பல்குனன் மகன் {அபிமன்யு} போர்க்களத்தில் பரப்பினான். கோபத்துடன் பற்களால் உதடுகளைக் கடித்திருந்ததால், அவை {அந்தத் தலைகள்} அனைத்திலும் அதிகமாக இரத்தம் பாய்ந்து கொண்டிருந்தது. அழகிய மாலைகள், கிரீடங்கள், தலைப்பாகைகள், மணிகள், ரத்தினங்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டுச் சூரியச்சந்திரர்களுக்கு இணையான காந்தியைக் கொண்டு, தண்டை இழந்த தாமரைப் மலரைப் போல அவை {அந்தத் தலைகள்} தெரிந்தன. பல நறுமணப்பொருட்களால் மணத்துடன் இருந்த அவை, உயிரோடிருந்தவரை ஏற்புடைய நன்மையான வார்த்தைகளைப் பேசிக் கொண்டிருந்தன.
ஆகாயத்தின் நீர் மாளிகைகளைப் போலத் தெரிந்தவையும், நன்கு தயாரிக்கப்பட்டவையும், முன்னிலையில் ஏர்க்கால்களையும், சிறந்த மூங்கில் சட்டங்களையும் கொண்டவையும், கொடிமரங்கள் நிறுவப்பட்டு அழகாகத் தெரிந்தவையுமான பல்வேறு தேர்கள், தங்கள் ஜங்கங்கள் {ஏர்க்காலைத் தாங்கும் அண்டை மரங்கள்}, குபரங்கள் {சக்கரங்களின் விளிம்புகள்}, நேமிகள் {ஆரக்கால்}, தசனங்கள் {சக்கரங்களில் உள்ள குடம்}, சக்கரங்கள், கொடிமரங்கள் மற்றும் தேர்த்தட்டு ஆகியவற்றை இழந்தன. அவற்றில் இருந்த போருக்கான கருவிகள் அனைத்தும் நொறுக்கப்பட்டன. அவற்றை மறைத்த விலையுயர்ந்த விரிப்புகள் பறந்து சென்றன, அவற்றில் இருந்த போர்வீரர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர்.
{இப்படி} தன் முன் வந்த அனைத்தையும் தன் கணைகளால் சிதைத்த அபிமன்யு அனைத்துப் பக்கங்களிலும் திரிவதாகத் தெரிந்தது. தன் கூரிய கணைகளால் யானை வீரர்களையும், கொடிமரங்கள், அங்குசங்கள், கொடிகள், அம்பறாத்தூணிகள், கவசங்கள், கச்சைகள், கழுத்தணிகள், விரிப்புகள், மணிகள், துதிக்கைகள், தந்தங்கள் ஆகியவற்றோடு கூடிய யானைகளையும், யானைகளைப் பின்பக்கத்தில் இருந்து பாதுகாத்த காலாட்படை வீரர்களையும் அவன் {அபிமன்யு} துண்டுகளாக வெட்டினான்.
வனாயு, மலைநாடுகள், காம்போஜம், பாஹ்லீகம் ஆகியவற்றில் பிறந்தவையும், அசைவற்ற வால்கள், காதுகள், கண்கள் ஆகியவற்றைக் கொண்டவையும், உறுதியானவையும், பெரும் வேகமுடையவையும், நன்கு பழக்கப்பட்டவையும், வாள்கள், வேல்கள் ஆகியவற்றைத் தரித்த சாதனைவீரர்களால் செலுத்தப்பட்டவையுமான குதிரைகள், தங்கள் அழகிய வால்களில் உள்ள சிறந்த ஆபரணங்களை இழந்தவையாகத் தெரிந்தன. அவை பலவற்றில் நாக்குகள் மற்றும் கண்கள் அவற்றின் இடத்தில் இருந்து தெறித்து, வெளியில் நரம்புகள் புடைத்து, ஈரல்கள் பிதுங்கியிருந்தன. அவற்றின் முதுகில் இருந்த சாரதிகள் உயிரற்று அவற்றின் பக்கத்திலேயே கிடந்தனர். அவற்றை அலங்கரித்த மணி வரிசைகள் அனைத்தும் நொறுங்கிக் கிடந்தன. இப்படிக் களத்தில் பரவிக் கிடந்த அவை {குதிரைகள்}, ராட்சசர்களுக்கும், இரைதேடும் விலங்குகளுக்கும் பெரும் மகிழ்ச்சியை அளித்தன. கவசங்களும், (தங்கள் உடல்களை மறைக்கும்) தோலுறைகளும் பிளக்கப்பட்ட அவை கழித்த மலஜலங்களால் நனைந்திருந்தன. இப்படியே உமது படையின் குதிரைகளில் முதன்மையானவை பலவற்றைக் கொன்ற அபிமன்யு பிரகாசமாகத் தெரிந்தான்.
நினைத்தும் பார்க்க முடியாத பழங்காலத்தின் விபுவை {விஷ்ணுவைப்} போல மிகக் கடினமான சாதனையைத் தனியாக அடைந்த அபிமன்யு, பயங்கரமான அசுரப் படையை நசுக்கிய அளவிலா சக்தி கொண்ட முக்கண்ணனை (மகாதேவனைப்) போல, உமது படையின் மூன்று வகை (தேர்கள், யானைகள், குதிரைகள்) படையை நசுக்கினான். உண்மையில், அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, தன் எதிரிகளால் தாங்கிக் கொள்ள முடியாத சாதனைகளைப் போரில் அடைந்து, உமது படையின் காலாட்படை வீரர்களின் பெரும்பிரிவை எங்கும் சிதைத்தான்.
(தேவர்ப்படைத்தலைவன்) ஸ்கந்தனால் {முருகனால்} அழிக்கப்பட்ட அசுரப்படையைப் போல, தனி ஒருவனான சுபத்ரை மகனின் {அபிமன்யுவின்} கூரிய கணைகளால் இப்படிப் பேரழிவுக்கு உள்ளான உமது சேனையைக் கண்ட உமது வீரர்களும், உமது மகன்களும் அனைத்துப் பக்கங்களையும் வெறித்துப் பார்த்தனர். அவர்கள் வாய்கள் வரண்டன; அவர்களின் கண்கள் ஓய்வற்றவையாகின; அவர்களின் உடல்கள் வியர்வையால் மறைந்தன; அவர்களுக்கு மயிர்ச்சிலிர்ப்பும் உண்டாயிற்று. எதிரியை வீழ்த்தும் நம்பிக்கையை இழந்த அவர்கள், களத்தை விட்டு ஓடுவதில் தங்கள் இதயங்களை நிலைநாட்டினர். தங்கள் உயிர்களைக் காத்துக் கொள்ள விரும்பிய அவர்கள், ஒருவரையொருவர் பேர் சொல்லியும், குடும்பப் பெயர்களைச் சொல்லியும் அழைத்து, காயம்பட்டுக் களத்தில் கிடந்த தங்கள் மகன்கள், தந்தைமார், சகோதரர்கள், சொந்தங்கள், திருமணத்தால் உண்டான உறவினர்கள் ஆகியோரைக் கைவிட்டு, தங்கள் குதிரைகளையும், யானைகளையும் (மிக வேகமாகத்) தூண்டி தப்பி ஓட முயற்சித்தனர்” {என்றான் சஞ்சயன்}.
ஆங்கிலத்தில் | In English |