Thursday, May 12, 2016

சல்லியனை மயக்கமடையச் செய்த அபிமன்யு! - துரோண பர்வம் பகுதி – 035

Abhimanyu made Salya faint! | Drona-Parva-Section-035 | Mahabharata In Tamil

(அபிமன்யுவத பர்வம் – 05)

பதிவின் சுருக்கம் : அபிமன்யுவை எதிர்த்த துரியோதனன்; துரியோதனனைக் காத்த கௌரவப் படை; அஸ்மகன் மகனைக் கொன்ற அபிமன்யு; கர்ணனை நடுங்கச்செய்தல்; மேலும் மூவரைக் கொல்வது; மற்றும் சல்லியனோடு மோதி, அவனை மயக்கமடையச் செய்வது...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "அளவிலா சக்தி கொண்ட சுபத்திரையின் மகனால் {அபிமன்யுவால்} தன் படை முறியடிக்கப்படுவதைக் கண்ட துரியோதனன், சினத்தால் நிறைந்து, முன்னவனை {அபிமன்யுவை} எதிர்த்துத் தானே சென்றான். போரில் சுபத்திரையின் மகனை {அபிமன்யுவை} நோக்கி மன்னன் {துரியோதனன்} திரும்புவதைக் கண்ட துரோணர், (கௌரவப்) போர்வீரர்கள் அனைவரிடமும், “மன்னனைக் காப்பீராக. வீர அபிமன்யு, நமக்கு முன்னிலையில், தான் குறிவைக்கும் அனைவரையும் நாம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கொன்று வருகிறான். எனவே, அவனை {அபிமன்யுவை} எதிர்த்து, அச்சமில்லாமல் வேகமாக விரைந்து, குரு மன்னனை {துரியோதனனைக்} காப்பீராக” என்றார் {துரோணர்}.


எப்போதும் வெற்றியால் அருளப்பட்டவர்களும், நன்றியுணர்வும், வலிமையும் மிக்கவர்களுமான போர்வீரர்கள் பலர், துரியோதனனின் நன்மையைத் தங்கள் இதயத்தில் கொண்டு, அச்சத்துடன் உமது மகனை {துரியோதனனைச்} சூழ்ந்து கொண்டனர். துரோணர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, கிருபர், கர்ணன், கிருதவர்மன், சுபலனின் மகனான பிருஹத்பலன் {சகுனியின் சகோதரன்}, மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, {சோமதத்தன் மகன்களான} பூரி மற்றும் பூரிஸ்ரவஸ், {பாஹ்லீக நாட்டு} சலன், பௌரவன், {கர்ணனின் மகன்} விருஷசேனன் ஆகியோர் கூரிய கணைகளை ஏவிக்கொண்டு, சுபத்திரையின் மகனை {அபிமன்யுவை} அந்தக் கணை மழையின் மூலம் தடுத்தனர். அந்தக் கணை மழையின் மூலம் அவனை {அபிமன்யுவைக்} குழப்பிய அவர்கள் துரியோதனனை மீட்டனர்.

எனினும் அந்த அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, {உணவுக்} கவளத்தைத் தன் வாயிலிருந்து பறித்தது போன்ற அந்தச் செயலைப் பொறுத்துக் கொள்ளவில்லை. அந்தச் சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களையும், அவர்களது தேரோட்டிகள் மற்றும் குதிரைகளையும் அடர்த்தியான கணை மழையால் மறைத்து, அவர்களைப் புறமுதுகிடச் செய்து சிங்க முழக்கம் செய்தான். இரையைத் தேடி பசியுடன் செல்லும் சிங்கத்தைப் போன்ற அவனது {அபிமன்யுவின்} கர்ஜனையைக் கேட்டு, துரோணரின் தலைமையிலான அந்தத் தேர்வீரர்கள், கோபத்துடன் அதைப் பொறுத்துக் கொள்ளவில்லை. பெரும் எண்ணிக்கையிலான தேர்களுடன் அவனை {அபிமன்யுவை} அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்ட அவர்கள், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அவன் மீது பல்வேறு விதங்களிலான கணைகளை மழையாகப் பொழிந்தனர். எனினும் உமது பேரன் {அபிமன்யு}, கூரிய கணைகளின் மூலம் அவற்றை (அவற்றில் எதுவும் தன்னை அடையும் முன்பே) ஆகாயத்திலேயே வெட்டிய பிறகு, தன் கணைகளால் அவர்கள் அனைவரையும் துளைத்தான். அவனது அந்த அருஞ்செயலைக் காண மிக அற்புதமானதாக இருந்தது.

கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான அவனின் {அபிமன்யுவின்} கணைகளின் மூலம் அவனால் இப்படித் தூண்டப்பட்ட அவர்கள், சுபத்திரையின் மகனை {அபிமன்யுவைக்} கொல்லவிரும்பி, புறமுதுகிடாத அவனைச் சூழ்ந்து கொண்டனர். எனினும், அந்த அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, பொங்கும் கடலைத் தடுக்கும் கரையைப் போலத் தனியாகவே, அந்த (கௌரவத்) துருப்புகளெனும் கடலைத் தன் கணைகளின் மூலம் தடுத்தான். அபிமன்யுவும் அவனைச் சார்ந்தவர்களும் ஒரு புறமும், அந்த வீரர்கள் அனைவரும் ஒரு புறமும் என ஒருவரையொருவர் தாக்கி இப்படிப் போரிட்டுக் கொண்டிருந்த அந்த வீரர்களில் ஒருவரும் களத்தில் புறங்காட்டவில்லை.

கடுமையான அந்தப் பயங்கரப் போரில் துஸ்ஸகன் ஒன்பது கணைகளால் அபிமன்யுவைத் துளைத்தான். துச்சாசனன் பனிரெண்டு கணைகளால் அவனைத் துளைத்தான்; சரத்வானின் மகனான கிருபர் மூன்றால் அவனைத் துளைத்தார். துரோணர், கடும் நஞ்சுமிக்கப் பாம்புக்கு ஒப்பான பதினேழு கணைகளால் அவனைத் துளைத்தார். விவிம்சதி எழுபது கணைகளாலும், கிருதவர்மன் ஏழு கணைகளால் அவனைத் துளைத்தனர். பூரிஸ்ரவஸ் மூன்று கணைகளாலும், மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்} ஆறாலும் அவனைத் துளைத்தனர். சகுனி இரண்டாலும், மன்னன் துரியோதனன் மூன்று கணைகளாலும் அவனைத் துளைத்தனர்.

எனினும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் தேரில் நர்த்தனம் செய்பவனைப் போலத் தெரிந்த வீர அபிமன்யு, அந்த வீரர்கள் ஒவ்வொருவரையும் மூன்று {மூன்று மூன்று} கணைகளால் துளைத்தான். பிறகு அபிமன்யு, அவனை அச்சுறுத்த முயன்ற உமது மகன்களின் விளைவால், சினத்தால் நிறைந்து, பண்பாலும் பயிற்சியாலும் அவன் அடைந்த அற்புத பலத்தை வெளிப்படுத்தினான். கருடன் அல்லது காற்றின் வேகத்தைக் கொண்டவையும், கடிவாளம் பிடித்தவரின் விருப்பங்களுக்குக் கீழ்ப்படிபவையும், நன்கு பயிற்றுவிக்கப்பட்டவையுமான தன் குதிரைகளால் சுமக்கப்பட்ட அவன் {அபிமன்யு}, விரைவாக அஸ்மகனின் வாரிசைத் [1] தடுத்தான் [2]. பெரும் பலம் கொண்ட அந்த அழகிய அஸ்மகன் மகன், அவன் {அபிமன்யுவின்} முன்னிலையிலேயே நின்று, பத்து கணைகளால் அவனைத் துளைத்து, “நில், நில்” என்று சொன்னான். அபிமன்யுவோ, சிரித்துக் கொண்டே, பத்து கணைகளைக் கொண்டு, முன்னவனின் {அஸ்மகன் மகனின்} குதிரைகள், தேரோட்டி, கொடிமரம், இரண்டு கரங்கள், வில், தலை ஆகியவை கீழே பூமியில் விழும்படி செய்தான். அஸ்மகர்களின் வீர அட்சியாளன் இப்படிச் சுபத்திரையின் மகனால் {அபிமன்யுவால்} கொல்லப்பட்ட பிறகு, நடுக்கமுற்ற அவனது {அஸ்மகன் மகனின்} படை களத்தில் இருந்து தப்பி ஓடத் தொடங்கியது.

[1] இவனுக்கு அஸ்மகதாயாதன் என்று பெயர் என Encyclopedia of Hindu World என்ற புத்தகத்தில் 705ம் பக்கத்தில் குறிப்பு உள்ளது. ஆதிபர்வம் பகுதி 178, 179 ஆகியவற்றில் அஸ்மகன் குறித்த கதையைப் படிக்கலாம். அஸ்மகனுக்கு மூலகன் என்று ஒரு மகன் இருந்ததாகவும், இவன் பின்னாட்களில் நாரீகவசன் என்று அழைக்கப்பட்டதாகப் பாகவதம் 9.9 சொல்கிறது. கங்குலியில் அஸ்மகன் மகனுடைய பெயர் குறிப்பிடப்படவில்லை. வேறொரு பதிப்பில் இவன் அஸ்மகன் என்றே குறிக்கப்படுகிறான்.

[2] வேறொரு பதிப்பில் இந்த வரி, “அஸ்மகராஜன் கருடனுக்கும் காற்றிற்கும் சமமான வேகமுள்ளவையும், சாரதி சொல்வதைச் செய்கின்றவையுமான குதிரைகளோடு அந்த அபிமன்யுவை விரைவுடன் எதிர்த்து வந்தான்” என்று இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே அஸ்மகன் மகன் என்றே உள்ளது. மேலும் அஸ்மகன் மகனை அபிமன்யு எதிர்த்துச் செல்வதாகவே உள்ளது.

பிறகு, கர்ணன், கிருபர், துரோணர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, காந்தாரர்களின் ஆட்சியாளன் {சகுனி}, சலன், சல்லியன், பூரிஸ்ரவஸ், {துரியோதனன் தம்பி} கிராதன், சோமதத்தன், {துரியோதனன் தம்பி} விவிம்சதி, {கர்ணனின் மகன்} விருஷசேனன், சுஷேனன், குண்டபேதி, பிரதர்த்தனன், பிருந்தாரகன், லலித்தன், பிரபாகு, தீர்க்கலோசனன் {தாருக்கலோசனன்} [3], கோபம் கொண்ட துரியோதனன் ஆகியோர் அவன் {அபிமன்யு} மீது தங்கள் கணைகளைப் பொழிந்தனர்.

[3] கர்ணனின் மகன் விருஷசேனனுக்குப் பிறகு குறிப்பிடப்படுபவர்கள் யாவர் என்பது தெரியவில்லை.

அந்தப் பெரும் வில்லாளிகளின் நேரான கணைகளால் அதீதமாகத் துளைக்கப்பட்ட அபிமன்யு, கவசமனைத்தையும், உடலையும் துளைக்கவல்ல கணைகளைக் கர்ணன் மீது ஏவினான். கர்ணனின் கவசத்தைத் துளைத்து, பிறகு அவனது உடலையும் துளைத்த அந்தக் கணை, பிறகு எறும்புப்புற்றைத் துளைத்துச் செல்லும் பாம்பைப் போலப் பூமிக்குள் நுழைந்தது. ஆழத் துளைக்கப்பட்ட கர்ணன் பெரும் வலியை உணர்ந்து முற்றிலும் ஆதரவற்றவனாக ஆனான் {மனத்தளர்ச்சியடைந்தான்}. உண்மையில் கர்ணன், நிலநடுக்கத்தின் போதான மலை ஒன்றைப் போல நடுங்கத் தொடங்கினான்.

பிறகு, சினத்தால் தூண்டப்பட்ட அர்ஜுனனின் வலிமைமிக்க மகன் {அபிமன்யு}, பெரும் கூர்மையைக் கொண்ட வேறு மூன்று கணைகளால் சுஷேனன், தீர்க்கலோசனன், குண்டபேதி ஆகிய மூன்று வீரர்களைக் கொன்றான். அதே வேளையில், (அதிர்ச்சியில் இருந்து மீண்ட) கர்ணன், இருபத்தைந்து கணைகளால் அபிமன்யுவைத் துளைத்தான். அஸ்வத்தாமன் இருபதாலும், கிருதவர்மன் ஏழாலும் அவனைத் தாக்கினர். சினத்தால் நிறைந்த அந்தச் சக்ரன்மகனின் {இந்திரன் மகனான அர்ஜுனனின்} மகன் {அபிமன்யு}, கணைகளையே எங்கும் நிறைத்தபடி களத்தில் திரிந்து கொண்டிருந்தான். சுருக்குக் கயிற்றைத் {பாசத்தைத்} தரித்த யமனைப் போலவே துருப்புகள் அனைத்தும் அவனை {அபிமன்யுவை} கருதின.

பிறகு அவன் {அபிமன்யு}, தன் அருகே வர நேர்ந்த சல்லியனின் மேல் தன் கணை மழையை இறைத்தான். பிறகு அந்த வலிமைமிக்கப் போர்வீரன் {அபிமன்யு} பெருமுழக்கம் முழங்கி, அதனால் உமது துருப்புகளை அச்சுறுத்தினான். அதேவேளையில், ஆயுதங்களில் சாதித்த அபிமன்யுவால் துளைக்கப்பட்டு, தன் முக்கிய அங்கங்களில் ஊடுருவிய அந்த நேரான கணைகளோடு கூடிய சல்லியன், தன் தேர்த்தட்டில் அமர்ந்தபடியே மயக்கமடைந்தான்.

சுபத்திரையின் கொண்டாடப்படும் மகனால் {அபிமன்யுவால்} இப்படித் துளைக்கப்பட்ட சல்லியனைக் கண்ட துருப்புகள் அனைத்தும், பரத்வாஜரின் மகன் {துரோணர்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே தப்பி ஓடின. வலிமைமிக்கத் தேர்வீரனான சல்லியன், தங்கச் சிறகுகள் கொண்ட கணைகளால் இப்படி மறைக்கப்பட்டதைக் கண்ட உமது படையினர், சிங்கத்தால் தாக்கப்பட்ட மான்கூட்டத்தை {விலங்குகளைப்} போலத் தப்பி ஓடின. போரில் (தனது வீரம் மற்றும் திறமை ஆகியவற்றுக்காகப்} புகழப்பட்டு, பிதுர்கள், தேவர்கள், சாரணர்கள், சித்தர்கள், யக்ஷர்கள், பூமியிலுள்ள பல்வேறு வகையிலான உயிரினங்களின் கூட்டங்களால் கொண்டாடப்பட்டு, தெளிந்த நெய்யினால் ஊட்டப்பட்ட நெருப்பு {ஹோமம் செய்யப்பட்ட அக்னி} போல அந்த அபிமன்யு மிகப் பிரகாசமாகத் தெரிந்தான்” {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English