Wednesday, May 11, 2016

வியூகத்தைப் பிளப்பாய் அபிமன்யு! - துரோண பர்வம் பகுதி – 033

Break the array Abhimanyu! | Drona-Parva-Section-033 | Mahabharata In Tamil

(அபிமன்யுவத பர்வம் – 03)

பதிவின் சுருக்கம் : சக்கர வியூகத்தை எதிர்த்து விரைந்து துரோணரால் பீடிக்கப்பட்ட பாண்டவப் படை; அந்த வியூகத்தைப் பிளக்குமாறு அபிமன்யுவை ஏவிய யுதிஷ்டிரன்; வியூகத்தை விட்டு வெளியே வரத்தெரியாது என்ற அபிமன்யு; யுதிஷ்டிரனும், பீமனும் கூறிய உறுதிமொழிகள்; துரோணரின் படையை நோக்கி விரைந்த அபிமன்யு...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "பிறகு, பரத்வாஜர் மகனால் {துரோணரால்} பாதுகாக்கப்பட்ட அந்த வெல்லப்பட முடியாத வியூகத்தை {சக்கரவியூகத்தைப்} பீமசேனனின் தலைமையில் பார்த்தர்கள் {பாண்டவர்கள்} அணுகினார்கள். சாத்யகி, சேகிதானன், பிருஷதன் {துருபதன்} மகனான திருஷ்டத்யும்னன், பெரும் ஆற்றலைக் கொண்ட குந்திபோஜன், வலிமைமிக்கத் தேர்வீரனான துருபதன், அர்ஜுனன் மகன் (அபிமன்யு), {திருஷ்டத்யும்னன் மகன்} க்ஷத்ரதர்மன், {கைகேய இளவரசனனான} வீர பிருஹத்ஷத்ரன், சேதிகளின் ஆட்சியாளன் திருஷ்டகேது, மாத்ரியின் இரட்டை மகன்கள் (நகுலன் மற்றும் சகாதேவன்), கடோத்கசன், பலம்நிறைந்த {பாஞ்சால இளவரசன்} யுதாமன்யு, வெல்லப்படாத சிகண்டி, தடுக்கப்பட முடியாத {பாஞ்சால இளவரசன்} உத்தமௌஜஸ், வலிமைமிக்கத் தேர்வீரனான விராடன், கோபத்தால் தூண்டப்பட்ட திரௌபதியின் மகன்கள் ஐவர், சிசுபாலனின் வீரமகன் {சுகேது}, வலிமையும் சக்தியும் கொண்ட கைகேயர்கள், ஆயிரக்கணக்கான சிருஞ்சயர்கள் ஆகிய இவர்களும், ஆயுதங்களில் சாதித்தவர்களும், போரில் தடுக்கப்படக் கடினமானவர்களுமான இன்னும் பிறரும், போரிட விரும்பி தங்களைப் பின்தொடர்வோருக்குத் தலைமையேற்றுப் பரத்வாஜரின் மகனை {துரோணரை} எதிர்த்து விரைந்தனர்.


எனினும், பரத்வாஜரின் வீரமகனோ {துரோணரோ}, அவ்வீரர்கள் தன்னருகே வந்ததும் அடர்த்தியான கணைகளின் மழையால் அச்சமற்ற வகையில் அவர்கள் அனைவரையும் தடுத்தார். நீரின் வலிமைமிக்க அலைகள், ஊடுருவமுடியாத மலையை எதிர்த்துச் செல்வதைப் போலவோ, பொங்கி வரும் கடலானது கரைகளை அணுகுவதைப் போலவோ சென்ற அந்த வீரர்கள் துரோணரால் தடுக்கப்பட்டனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரோணரின் வில்லில் இருந்து ஏவப்பட்ட கணைகளால் பீடிக்கப்பட்ட பாண்டவர்கள், அவரின் முன்னிலையில் நிற்க முடியாதவர்களானார்கள். நாங்கள் கண்ட துரோணரின் பலமானது மிக அற்புதமாக இருந்தது, பாஞ்சாலர்கள் மற்றும் சிருஞ்சயர்கள் அவரை {துரோணரை} அணுகுவதில் தோல்வியை அடைந்தனர்.

சினத்தால் முன்னேறும் துரோணரைக் கண்ட யுதிஷ்டிரன், அவரது முன்னேற்றத்தைத் தடுக்கப் பல்வேறு வழிகளைச் சிந்தித்தான். இறுதியாக, துரோணர் யாராலும் தடுப்பட முடியாதவர் என்று கருதிய யுதிஷ்டிரன், தாங்கிக் கொள்ள முடியாத அந்தக் கனமான சுமையைச் சுபத்திரையின் மகன் {அபிமன்யு} மீது வைத்தான். பகைவீரர்களைக் கொல்பவனும், வாசுதேவனுக்கு {கிருஷ்ணனுக்கு} குறையாதவனும், அர்ஜுனனின் சக்திக்கு மேம்பட்டவனுமான அபிமன்யுவிடம் பேசிய மன்னன் {யுதிஷ்டிரன்}, “ஓ! குழந்தாய் {அபிமன்யு}, (சம்சப்தகர்களிடம் இருந்து) திரும்பி வரும் அர்ஜுனன் நம்மை நிந்திக்காத வகையில் செயல்படுவாயாக. சக்கரவியூகத்தைப் பிளப்பது எவ்வாறு என்பதை நாங்கள் அறியோம். அவ்வியூகத்தை நீயோ, அர்ஜுனனோ, கிருஷ்ணனோ, பிரத்யும்னனோதான் பிளக்க முடியும். ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {அபிமன்யு}, (அந்த அருஞ்செயலைச் செய்ய) ஐந்தாவதாக வேறு எந்த மனிதனும் காணப்படவில்லை. ஓ! குழந்தாய், ஓ! அபிமன்யு, உனது தந்தைமாரும், உனது மாமன்மாரும், இந்தத் துருப்புகள் அனைத்தும் உன்னிடம் இருந்து கேட்பது எதுவோ, அந்த வரத்தை அளிப்பதே உனக்குத் தகும். உனது ஆயுதங்களை விரைவாக எடுத்துக் கொண்டு, துரோணரின் இந்த வியூகத்தை அழிப்பாயாக, இல்லையெனில், {சம்சப்தகர்களுடனான} போரில் இருந்து திரும்பி வரும் அர்ஜுனன் நம் அனைவரையும் நிந்திப்பான்” என்றான் {யுதிஷ்டிரன்}.

அதற்கு அபிமன்யு, “என் தந்தைமாருக்கு வெற்றியை விரும்பும் நான், போரில் துரோணரால் அமைக்கப்பட்ட அந்த உறுதியான, கடுமையான, முதன்மையான வியூகத்தினுள் {சக்கரவியூகத்தினுள்} விரைவில் ஊடுருவுவேன். இவ்வகை வியூகத்தைத் {சக்கரவியூகத்தைத்} தாக்கும் (அதற்குள் ஊடுருவும்) முறை என் தந்தையால் எனக்குக் கற்றுத்தரப்பட்டிருக்கிறது. எனினும், {அங்கே} எவ்வித ஆபத்தாவது எனக்கு நேர்ந்தால், என்னால் அதை {வியூகத்தை} விட்டு வெளியே வர இயலாது [1]” என்றான் {அபிமன்யு}.

[1] வேறொருபதிப்பில் “என் தந்தையால் வியூகத்தையுடைத்து நாசம் செய்வதில் நான் உபதேசிக்கப்பட்டிருக்கிறேன். ஓர் ஆபத்து நேரிடும் காலத்தில் வெளிப்படுவதற்கு நான் சக்தியற்றவனாயிருக்கிறேன்” என்று அபிமன்யு சொல்வதாக இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், “இவ்வகை வியூகத்தை ஊடுருவும் வழியை என் தந்தை எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார். ஆனால், அங்கே எனக்கு ஏதாவது ஆபத்து நேருமானால், அந்த வியூகத்திலிருந்து வெளியே வர எனக்குத் தெரியாது” என்று அபிமன்யு சொல்வதாக இருக்கிறது. இங்கே, மன்மதநாததத்தரின் பதிப்பு தெளிவாக இருப்பதாகத் தெரிகிறது.

யுதிஷ்டிரன் {அபிமன்யுவிடம்}, “ஓ! போர்வீரர்களில் முதன்மையானவனே {அபிமன்யு} இந்த வியூகத்தை ஒரு முறை பிளந்து, எங்களுக்கு வழியை ஏற்படுத்திவிடுவாயாக. நீ செல்லும் பாதையிலேயே நாங்கள் அனைவரும் உன்னைப் பின்தொடர்ந்து வருவோம். போரில் நீ தனஞ்சயனுக்கு {அர்ஜுனனுக்கு} இணையானவனாவாய். நீ உள்ளே நுழைவதைக் காணும் நாங்கள், உன்னைப் பின்தொடர்ந்து வந்து, அனைத்துப் பக்கங்களில் இருந்தும் உன்னைப் பாதுகாப்போம்” என்றான் {யுதிஷ்டிரன்}.

பீமன் {அபிமன்யுவிடம்}, “நானும் உன்னைப் பின்தொடர்வேன். மேலும், திருஷ்டத்யும்னன், சாத்யகி, பாஞ்சாலர்கள், பிரபத்ரகர்கள் ஆகியோரும் பின்தொடர்ந்து வருவார்கள். உன்னால் ஒரு முறை வியூகம் பிளக்கப்பட்ட பிறகு, மீண்டும் மீண்டும் அதற்குள் நுழைந்து, அதனுள் இருக்கும் போர்வீரர்களில் முதன்மையானோரை நாங்கள் கொல்வோம்” என்றான் {பீமன்}.

அபிமன்யு, “சுடர்மிகும் நெருப்புக்குள் நுழையும் கோபம் நிறைந்த பூச்சியைப் போல, துரோணரின் வெல்லப்பட முடியாத இந்த வியூகத்தை நான் ஊடுருவுவேன். (என் தந்தையின் குலம் மற்றும் தாயின் குலம் ஆகிய) இரண்டு குலங்களுக்கும் நன்மையைத் தரும் செயலை நான் இன்று செய்வேன். என் தாய்க்கும் {சுபத்திரைக்கும்}, என் தாய்மாமனுக்கும் {கிருஷ்ணனுக்கும்} இனிமையானதை நான் செய்வேன் [2]. உதவியற்ற {தன்னந்தனி} சிறுவனான என்னால் தொடர்ந்து கொல்லப்படும் பெரும் எண்ணிக்கையிலான பகை வீரர் கூட்டங்களை இன்று அனைத்து உயிர்களும் காணும். இன்று என்னுடன் மோதி, எவராவது உயிருடன் தப்பினால், பார்த்தருக்கும் {அர்ஜுனருக்கும்}, சுபத்திரைக்கும் பிறந்தவன் என என்னை நான் கருத மாட்டேன். தனி ஒருவனாகத் தேரில் செல்லும் என்னால், க்ஷத்திரிய குலத்தைப் போரில் எட்டு துண்டுகளாக வெட்ட முடியாமல் போனால் அர்ஜுனனின் மகனாக என்னை நான் கருத மாட்டேன்” என்றான் {அபிமன்யு} [3].

[2] வேறொரு பதிப்பிலும், மன்மதநாததத்தரின் பதிப்பிலும், “என் தந்தைக்கும், என் மாமனுக்கும் இனிமையானதை நான் இன்று செய்வேன்” என்று இருக்கிறது.

[3] வேறொரு பதிப்பில் இந்தக் கடைசி இரு வரிகள், “போர்க்களத்தில் இப்போது ஒருவனாவது உயிரோடு என்னால் விடப்படுவானாகில் நான் அர்ஜுனரால் உண்டுபண்ணப்பட்டவனுமல்லேன்; சுபத்திராதேவியின் மகனுமல்லேன். நான் ஒரு தேரோல் எல்லா க்ஷத்ரியர்களுடைய கூட்டத்தை எட்டுத் துண்டாகச் செய்யாமல் போவேனேயாகில், நான் அர்ஜுனருக்குப் பிள்ளையல்லேன்” என்று இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், “இன்று என்னுடன் மோதி எவனும் உயிருடன் தப்பினால், பார்த்தரால் {அர்ஜுனரால்} பெறப்பட்டவனாகவோ, சுபத்திரைக்குப் பிறந்தவனாகவோ என்னை நான் கருதமாட்டேன். தனியொரு தேரில் செல்லும் நான் மொத்த க்ஷத்திரிய குலத்தையும் போரில் எட்டு துண்டுகளாக்கவில்லை என்றால், அர்ஜுனரால் பெறப்பட்ட மகனாக என்னை நான் கருதமாட்டேன்” என்று இருக்கிறது.

யுதிஷ்டிரன் {அபிமன்யுவிடம்}, “மனிதர்களில் புலிகளும், கடும் வலிமை கொண்ட பெரும் வில்லாளிகளும், சாத்யர்கள், ருத்திரர்கள், மருத்துக்கள் ஆகியோருக்கு ஒப்பானவர்களும், ஆற்றலில் வசுக்களையோ, அக்னியையோ, ஆதித்தியனையோ போன்றவர்களால் பாதுகாக்கப்படும் நீ, துரோணரின் வெல்லப்பட முடியாத இந்த வியூகத்தைத் துளைக்கத் துணிவாயாக. மேலும், ஓ! சுபத்திரையின் மைந்தா {அபிமன்யு}, நீ இவ்வாறு பேசுவதால் உனது பலமும் பெருகட்டும்” என்றான் {யுதிஷ்டிரன்}.

யுதிஷ்டிரனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அபிமன்யு, தன் தேரோட்டியான சுமித்திரனிடம் “துரோணரின் படையை நோக்கி விரைவாகக் குதிரைகளைத் தூண்டுவாயாக” என்று ஆணையிட்டான்” {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English