Friday, May 13, 2016

தேர்ப்படையைப் புறமுதுகிடச் செய்த அபிமன்யு! - துரோண பர்வம் பகுதி – 036

Car-division turned back by Abhimanyu ! | Drona-Parva-Section-036 | Mahabharata In Tamil

(அபிமன்யுவத பர்வம் – 06)

பதிவின் சுருக்கம் : சல்லியனின் தம்பியைக் கொன்ற அபிமன்யு; அபிமன்யுவை அச்சுறுத்திய மத்ரர்களின் படை; கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனன் அளித்த ஆயுதங்களை ஏவிய அபிமன்யு; புறமுதுகிட்டோடிய கௌரவர்களின் தேர்ப்படை...

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, நம் வில்லாளிகளில் முதன்மையானோரை இப்படித் தன் நேரான கணைகளால் கலங்கடித்துக் கொண்டிருந்த போது, அவனைத் தடுக்க முயன்ற எனது படையின் வீரர்கள் யாவர்?” என்று கேட்டான் {திருதராஷ்டிரன்}.


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பரத்வாஜரின் மகனால் {துரோணரால்} பாதுகாக்கப்பட்ட (கௌரவத்) தேர்ப்படைகளைப் பிளப்பதில் ஈடுபட்டவனும் இளமை நிறைந்தவனுமான {பாலகனுமான} அபிமன்யுவின் போராற்றல் குறித்துக் கேளும். சுபத்திரை மகனின் {அபிமன்யுவின்} கணைகளால் மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்} முடக்கப்பட்டதைக் கண்ட சல்லியனின் தம்பி, கோபத்தால் நிறைந்து, தன் கணைகளை இறைத்தபடி அபிமன்யுவை எதிர்த்து முன்னேறினான். எனினும், பெரும் கரநளினம் கொண்ட அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, தன் எதிராளியின் {சல்லியன் தம்பியின்} தலை, தேரோட்டி, அவனது திரிவேணு, (தேரில் உள்ள) இருக்கை, அவனது தேர்ச்சக்கரங்கள், அவனது ஏர்க்கால்கள், கணைகள், அம்பறாத்தூணி, தேர்த்தட்டு, அவனது கொடி மற்றும் அவனது தேரில் இருந்த போருக்கான பிற பொருட்கள் அனைத்தையும் தன் கணைகளின் மூலம் வெட்டினான். அவனைக் {அபிமன்யுவைக்} காண முடியாத அளவுக்கு அவனது இயக்கங்கள் மிக வேகமாக இருந்தன. போர்க்களத்தின் ரத்தினங்கள் அனைவரின் தலைவனும், முதன்மையானவனுமான அவன் {சல்லியனின் தம்பி}, வலிமைமிக்கப் புயலால் வேரோடு சாய்க்கப்பட்ட பெரும் மலையென உயிரை இழந்து கீழே தரையில் விழுந்தான். அவனைப் பின்தொடர்ந்தவர்கள் அச்சத்தால் பீடிக்கப்பட்டு அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடினர்.

அர்ஜுனன் மகனின் {அபிமன்யுவின்} அந்த அருஞ்செயலைக் கண்ட உயிரினங்கள் அனைத்தும் மிகவும் மகிழ்ந்து, ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, “நன்று, நன்று” என்ற பேரொலிகளால் அவனை உற்சாகப்படுத்தின.

சல்லியனின் தம்பி இப்படிக் கொல்லப்பட்டதும், அவனைப் பின்தொடர்ந்தவர்கள் {மத்ரப் படைவீரர்கள்} பலர், தங்கள் குடும்பப் பெயர்கள், வசிப்பிடங்கள் மற்றும் பெயர்களை உரக்க அறிவித்து, சினத்தால் நிறைந்து, பல்வேறு ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு, அர்ஜுனன் மகனை {அபிமன்யுவை} எதிர்த்து விரைந்தனர். சிலர் தேர்களிலும், சிலர் குதிரைகளிலும், சிலர் யானைகளிலும், இன்னும் சிலர் கால்களாலும் {காலாட்படையாகவும்} சென்றனர். அவர்கள் அனைவரும் கடும்பலம் கொண்டவர்களாக இருந்தனர். அவர்கள் {மத்ரப் படையினர்}, தங்கள் கணைகளின் “விஸ்” ஒலி, தங்கள் தேர்ச்சக்கரங்களின் ஆழ்ந்த முழக்கங்கள், கடுங்கூக்குரல்கள், கதறல்கள், கூச்சல்கள், சிங்க முழக்கங்கள், நாண்கயிற்றின் உரத்த நாணொலிகள், தங்கள் உள்ளங்கைத் தட்டொலிகள் ஆகியவற்றால் அர்ஜுனன் மகனை {அபிமன்யுவை} அச்சுறுத்தியபடியே {அவனை நோக்கி} விரைந்தனர். அவர்கள் {அபிமன்யுவிடம்}, “நீ எங்களிடம் இருந்து இன்று உயிருடன் தப்ப மாட்டாய்” என்றனர். இப்படி அவர்கள் {மத்ரப் படைவீரர்கள்} சொன்னதைக் கேட்ட சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, சிரித்துக் கொண்டே, அவர்களில் தன்னை முதலில் துளைத்தவனைத் தன் கணைகளால் துளைத்தான்.

அர்ஜுனனின் வீர மகன் {அபிமன்யு}, அழகும், பெரும் வேகமும் கொண்ட பல்வேறு ஆயுதங்களை வெளிப்படுத்திக் கொண்டு அவர்களுடன் மிதமாகவே போரிட்டான். வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்} இருந்து தான் பெற்றிருந்த ஆயுதங்களையும், தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்} இருந்து தான் பெற்றிருந்த ஆயுதங்களையும், வாசுதேவனும், தனஞ்சயனும் பயன்படுத்தும் அதே வழியில் வெளிப்படுத்தினான். தான் சுமக்கும் கனமான சுமையை அலட்சியம் செய்த அவன் {அபிமன்யு}, அச்சமனைத்தையும் விட்டுத் தன் கணைகளை மீண்டும் மீண்டும் ஏவினான். குறிபார்ப்பதற்கும், கணையொன்றை விடுவதற்கும் இடையில் எந்த இடைவெளியையும் {அவனிடம்} காண முடியவில்லை. நடுங்கிக் கொண்டிருக்கும் அவனது வில், கூதிர்காலச் சூரியனின் சுடர்மிக்க வட்டிலைப் போல வட்டமாக வளைக்கப்படுவது மட்டுமே அனைத்துப் பக்கங்களிலும் காணப்பட்டது.

ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அவனது {அபிமன்யுவனது} வில்லின் நாணொலி மற்றும் அவனது உள்ளங்கைத் தட்டொலி ஆகியவற்றை, இடியுடன் கூடிய மேகங்கள் முழங்கி எதிரொலிப்பதைப் போல நாங்கள் கேட்டோம். பணிவு, கோபம், மேன்மையானவர்களுக்கு மரியாதை, மிகுந்த அழகு ஆகியவற்றைக் கொண்ட அந்தச் சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, பகைவீரர்கள் மீது கொண்ட மரியாதையின் காரணமாக அவர்களுடன் மிதமாகவே போரிட்டான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மழைக்காலம் முடிந்ததும் வரும் கூதிர்காலத்தின் பகலை உண்டாக்குபவனைப் போல அவன் {அபிமன்யு}, மென்மையாகத் தொடங்கிப் பின் படிப்படியாகக் கடுமையடைந்தான். சூரியன் தன் கதிர்களை வெளியிடுவதைப் போலக் கோபத்தால் நிறைந்த அபிமன்யு, தங்கச்சிறகுகள் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான கணைகளை ஏவினான். பரத்வாஜரின் மகன் {துரோணர்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அந்தக் கொண்டாடப்படும் வீரன் {அபிமன்யு}, கௌரவப்படையின் தேர்ப்பிரிவை பல்வேறு விதங்களிலான கணைகளால் மறைத்தான். அதன்பேரில், இப்படிப் பீடிக்கப்பட்ட அந்தப்படை , அபிமன்யுவின் கணைகளால் களத்தில் புறமுதுக்கிட்டோடின” {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English