Saturday, May 14, 2016

அபிமன்யுவைக் கண்டு மகிழ்ந்த துரோணர்! - துரோண பர்வம் பகுதி – 037

Drona delighted with Abhimanyu ! | Drona-Parva-Section-037 | Mahabharata In Tamil

(அபிமன்யுவத பர்வம் – 07)

பதிவின் சுருக்கம் : அபிமன்யு செய்த கடும்போர்; அபிமன்யுவைக் கண்டு கிருபரிடம் மெச்சிய துரோணர்; அபிமன்யுவைக் கொல்ல கௌரவர்களைத் தூண்டிய துரியோதனன்; அபிமன்யுவைக் கொல்லப் போவதாகச் சொன்ன துச்சாசனன்; அபிமன்யுவுக்கும் துச்சாசனனுக்கும் இடையில் ஏற்பட்ட போர்...

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, என் மகனின் படை முழுவதையும் தனியாளாகத் தடுத்ததைக் கேட்டு, வெட்கம், மனநிறைவு ஆகிய பல்வேறு உணர்வுகளால் என் இதயம் கலங்குகிறது. ஓ! கவல்கணன் மைந்தா {சஞ்சயா}, அசுரப்படையுடன் மோதிய ஸ்கந்தனைப் {முருகனைப்} போலத் தெரியும் இளமைநிறைந்த அபிமன்யுவின் மோதலைக் குறித்து விவரமாக மீண்டும் எனக்கு அனைத்தையும் சொல்வாயாக” என்றான் {திருதராஷ்டிரன்}.


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஒருவனுக்கும், பலருக்கும் இடையில் நடந்த அந்தப் பயங்கர மோதலை, அந்தக் கடும்போரை அது நடந்தது போலவே நான் உமக்கு உரைக்கிறேன்.

தன் தேரில் ஏறிய அபிமன்யு, எதிரிகளைத் தண்டிப்பவர்களும், பெரும் வீரம் கொண்டவர்களும், தங்கள் தேர்களில் இருந்தவர்களுமான உமது படையின் போர்வீரர்கள் மீது தன் கணைகளைப் பெரும் துணிச்சலுடன் பொழிந்தான். அவன் {அபிமன்யு}, நெருப்பு வளையம் போல வேகமாகச் சுழன்று, துரோணர், கர்ணன், கிருபர், சல்லியன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, போஜகுலத்தின் கிருதவர்மன், பிருஹத்பலன், துரியோதனன், சோமதத்தன், வலிமைமிக்கச் சகுனி, பல்வேறு மன்னர்கள், பல்வேறு இளவரசர்கள், பல்வேறு அணிகளிலான துருப்பினர் ஆகியோரைத் {தன் கணைகளால்} துளைத்தான். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மேன்மையான ஆயுதங்களின் மூலம் தன் எதிரிகளைக் கொல்வதில் ஈடுபட்டவனும், வலிமையும் சக்தியும் கொண்டவனுமான சுபத்திரையின் வீரமகன் {அபிமன்யு}, எங்கும் இருப்பவனாகத் தெரிந்தான். அளவிலா சக்தி கொண்ட சுபத்திரை மகனின் {அபிமன்யுவின்} நடத்தையைக் கண்ட உமது துருப்புகள் மீண்டும் மீண்டும் நடுங்கின.

அப்போது பெரும் ஞானியான பரத்வாஜர் மகன் {துரோணர்}, போரில் பெரும் திறம் கொண்ட அந்தப் போர்வீரனைக் {அபிமன்யுவைக்} கண்டு, மகிழ்ச்சியால் தன் கண்களை அகல விரித்து, கிருபரிடம் வந்து, {தன் பேச்சால்} உமது மகனின் {துரியோதனனின்} உயிரையே நசுக்கத்தக்க வகையில் அவரிடம் {கிருபரிடம்} பின்வரும் வார்த்தைகளைச் சொன்னார், “பார்த்தர்களுக்குத் தலைமையில் நிற்கும் இளமை நிறைந்த சுபத்திரை மகன் {அபிமன்யு}, தன் நண்பர்கள் அனைவருக்கும், மன்னன் யுதிஷ்டிரன், நகுலன், சகாதேவன், பாண்டுவின் மகனான பீமசேனன் ஆகியோருக்கும், தன் சொந்தங்கள் அனைவருக்கும், திருமணத்தால் உண்டான உறவினர்களுக்கும், போரில் கலந்து கொள்ளாமல் பார்வையாளர்களாக மட்டும் இந்தப் போரைக் கண்டு வருபவர்களுக்கும் மகிழ்வூட்டியபடியே அதோ வருகிறான். இந்தப் போரில் அவனுக்கு {அபிமன்யுவிற்கு} நிகராக எந்த வில்லாளியையும் நான் கருதவில்லை. அவன் {அபிமன்யு} மட்டும் விரும்பினானென்றால், இந்தப் பரந்த படையையே அவனால் கொல்ல முடியும். வேறு ஏதோ காரணத்திற்காக அவன் அதை விரும்பவில்லை என்றே தெரிகிறது” என்றார் {துரோணர்}.

துரோணர், அவர் உணர்ந்த மனநிறைவை நன்கு வெளிப்படுத்தும்படி சொன்ன இந்த வார்த்தைகளைக் கேட்ட உமது மகன் {துரியோதனன்}, அபிமன்யுவிடம் கொண்ட கோபத்துடனும் லேசாகச் சிரித்தபடியும் துரோணரைப் பார்த்தான். உண்மையில் துரியோதனன், கர்ணன், மன்னன் பாஹ்லீகன், துச்சாசனன், மத்ரர்களின் ஆட்சியாளன், உமது படையின் வலிமைமிக்கத்தேர்வீரர்கள் வேறு பலர் ஆகியோரிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான், “பிரம்மத்தை அறிந்தோர் அனைவரிலும் முதன்மையானவரான க்ஷத்திரிய குலத்தினர் அனைவரின் ஆசான் {துரோணர்}, உணர்வு மழுக்கத்தால் இந்த அர்ஜுனன் மகனை {அபிமன்யுவைக்} கொல்ல விரும்பவில்லை. போரில் ஆசானிடம் {துரோணரிடம்} எவனும் உயிரோடு தப்ப முடியாது. ஆசானை {துரோணரை} எதிர்த்து யமனே அவரது எதிரியாக வந்தாலும் அவனும் {எமனும்} அவரிடம் தப்ப முடியாது. ஓ! நண்பர்களே, வேறு எந்த மனிதனையும் குறித்து நான் என்ன சொல்வேன்? இதை நான் உண்மையாகவே சொல்கிறேன். இவனோ அர்ஜுனன் மகனாக இருக்கிறான், அர்ஜுனனோ ஆசானின் {துரோணரின்} சீடனாக இருக்கிறான். இதற்காகவே ஆசான் {துரோணர்} இந்த இளைஞனை {சிறுவனைக்} காக்க விரும்புகிறார். சீடர்கள், மகன்கள், அவர்களது மகன்கள் {பேரர்கள்} ஆகியோர் அறம் சார்ந்தோரின் {நல்லோரின்} அன்புக்குரியவர்களாகவே எப்போதும் இருக்கிறார்கள். துரோணரால் பாதுகாக்கப்படும் இந்த இளமைநிறைந்த அர்ஜுனன் மகன் {அபிமன்யு} தன்னைப் பேராண்மை கொண்டவனாகக் கருதிக் கொள்கிறான். தன்னைத் தானே உயர்வாக மதித்துக் கொள்ளும் அவன் {அபிமன்யு} மூடன் மட்டுமே. எனவே, தாமதமில்லாமல் அவனை நசுக்குவீர்களாக” என்றான் {துரியோதனன்}.

குரு மன்னனால் {துரியோதனனால்} இப்படிச் சொல்லப்பட்ட அந்தப் போர்வீரர்கள், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சினத்தால் தூண்டப்பட்டு, தங்கள் எதிரியைக் கொல்ல விரும்பி, துரோணர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, சாத்வத குலமகள் சுபத்திரையின் மகனை {அபிமன்யுவை} நோக்கி விரைந்தனர்.

குறிப்பாக, குருக்களில் புலியான துச்சாசனன், துரியோதனனின் அந்த வார்த்தைகளைக் கேட்டு, பின்னவனிடம் {துரியோதனனிடம்}, “ஓ! ஏகாதிபதி {துரியோதனரே}, பாண்டவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, பாஞ்சாலர்களின் கண்களுக்கு முன்பாகவே நான் அவனைக் கொல்வேன் என்று நான் உமக்குச் சொல்கிறேன். சூரியனை விழுங்கும் ராகுவைப் போல, நான் இன்று சுபத்திரையின் மகனை {அபிமன்யுவை} நிச்சயமாக விழுங்குவேன்” என்று பதிலுரைத்தான் {துச்சாசனன்}.

குரு மன்னனிடம் {துரியோதனனிடம்} மீண்டும் உரக்கப் பேசிய துச்சாசனன், “பெரும் வீணர்களான இரண்டு கிருஷ்ணர்களும் {கருப்பர்களான வாசுதேவனும், அர்ஜுனனும்}, என்னால் சுபத்திரையின் மகன் {அபிமன்யு} கொல்லப்பட்டான் என்பதைக் கேட்டு, மனிதர்களின் உலகை விட்டு இறந்தோருடைய ஆவிகளின் உலகத்திற்குச் {யமலோகத்திற்குச்} செல்வார்கள் என்பதில் ஐயமில்லை. பாண்டுவின் மனைவியருக்குப் பிறந்த பிற மகன்களும், இரண்டு கிருஷ்ணர்களின் மரணத்தைக் கேட்டுத் தங்கள் நண்பர்கள் அனைவருடன் சேர்ந்து துக்கத்தால் தங்கள் உயிரை ஒரே நாளில் விடுவார்கள் என்பதும் தெளிவு. எனவே, இந்த உமது ஒரு பகைவன் {அபிமன்யு} கொல்லப்பட்டால், உமது எதிரிகள் அனைவரும் கொல்லப்படுவார்கள் என்பது தெளிவாகிறது. ஓ! மன்னா {துரியோதனரே}, எனக்கு நன்மையை விரும்புவீராக, இதோ நான் உமது எதிரியைக் கொல்லப் போகிறேன்” என்றான் {துச்சாசனன்}.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இந்த வார்த்தைகளைச் சொன்ன உமது மகன் துச்சாசனன், சினத்தால் நிறைந்து, உரக்க முழங்கியபடியே சுபத்திரையின் மகனை {அபிமன்யுவை} எதிர்த்து விரைந்து கணை மழையால் அவனை {அபிமன்யுவை} மறைத்தான். பிறகு அபிமன்யு, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, தன்னை நோக்கி கோபத்துடன் முன்னேறும் உமது மகனை கூர் முனைகளைக் கொண்ட இருப்பத்தாறு கணைகளால் வரவேற்றான். எனினும், சினத்தால் நிறைந்து, மதங்கொண்ட யானையைப் போலத் தெரிந்த துச்சாசனன், அந்தப் போரில் சுபத்திரையின் மகனான அபிமன்யுவுடன் தீவிரமாகப் போரிட்டான். தேர்ப்போரில் நிபுணர்களான அவ்விருவரும், இடப்புறம் ஒருவரும், வலப்புறம் மற்றவரும் எனத் தங்கள் தேர்களில் வட்டமாகச் சுழன்று போரிட்டனர். பிறகு அந்தப் போர்வீரர்கள், தங்கள் பணவங்கள், மிருதங்கங்கள், துந்துபிக்கள், கிரகசங்கள், பெரும் ஆனகங்கள், பேரிகைகள் மற்றும் ஜர்ஜரங்கள் ஆகியவற்றுடன் தங்கள் சிங்க முழக்கங்களையும் கலந்து, உப்புநீரின் கொள்ளிடமான பெருங்கடலில் இருந்து எழும் ஒலியைப் போலச் செவிடாக்கும்படி ஒலியை எழுப்பினர்” {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English