Abhimanyu made Duhsasana faint! | Drona-Parva-Section-038 | Mahabharata In Tamil
(அபிமன்யுவத பர்வம் – 08)
பதிவின் சுருக்கம் : துச்சாசனனை நிந்தித்த அபிமன்யு; துச்சாசனனைத் தாக்கி மயக்கமடையச் செய்தது; கர்ணனிடம் பேசிய துரியோதனன்; கர்ணனுக்கு அபிமன்யுவுக்கும் இடையில் ஏற்பட்ட போர்; கர்ணனின் வில்லை அறுத்த அபிமன்யு; அபிமன்யுவை எதிர்த்த கர்ணனின் தம்பி...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "பிறகு, கணைகளால் சிதைக்கப்பட்ட அங்கங்களுடன் கூடியவனும், நுண்ணறிவு கொண்டவனுமான அபிமன்யு, தன் முன்பு நின்று கொண்டிருந்த தன் எதிரியான துச்சாசனனிடம் சிரித்துக் கொண்டே, “தற்புகழ்ச்சிகளை மோகத்துடன் சச்சரவு செய்பவர் எவரோ, நீதிகள் அனைத்தையும் எப்போதும் கைவிடுபர் எவரோ, குரூரருமானவர் எவரோ, அந்த வீண் வீரர் போரில் என் முன்பு நிற்பதை நற்பேறாலேயே நான் காண்கிறேன். (குருக்களின்) சபையில், மன்னர் திருதராஷ்டிரர் கேட்டுக் கொண்டிருக்கும்போதே, உமது கடுமுரையால் மன்னர் யுதிஷ்டிரரை நீர் கோபப்படுத்தினீர். பகடையில் மோசடியையும், சுபலன் மகனின் {சகுனியின்} திறனையும் நம்பிய நீர், வெற்றியால் பித்துப் பிடித்து, பீமரிடம் பலவாறு பிதற்றினீர். அந்தச் சிறப்புமிக்கோரின் கோபத்தினால், இறுதியாக நீர் உமது நடத்தையின் கனியை அடையப்போகிறீர். ஓ! தீய புரிதல் கொண்டவரே {துச்சாசனரே}, பிறர் உடைமைகளைத் திருடியது, கோபம், அமைதியை வெறுத்தது, பேராசை, அறியாமை, (சொந்தங்களுடன்) பகை, அநீதி, துன்புறுத்தல், கடும் வில்லாளிகளான என் தந்தைமாரின் அரசை அவர்களை இழக்கச் செய்தது மற்றும் உமது கடும் மனோ நிலை ஆகியவற்றிற்கான கனியை {பலனைத்} தாமதமில்லாமல் பெறுவீராக.
மொத்தப் படையும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே இன்று என் கணைகளால் நான் உம்மைத் தண்டிக்கப் போகிறேன். உமக்கெதிராகக் கொண்டிருக்கும் கோபச்சுமையை இன்று நான் இறக்கி வைக்கப் போகிறேன். கோபம் கொண்ட கிருஷ்ணைக்கும் {அன்னை திரௌபதிக்கும்}, உம்மைத் தண்டிக்கும் சந்தர்ப்பத்திற்காக எப்போதும் ஏங்கும் என் தந்தைக்கும் {அர்ஜுனருக்கும்} நான் பட்ட கடனிலிருந்து இன்று நான் விடுபடப் போகிறேன். ஓ! கௌரவரே {துச்சாசனரே}, பீமருக்கு நான் பட்ட கடனிலிருந்தும் இன்று நான் விடுபடுவேன். உண்மையில் போரை நீர் கைவிடவில்லையெனில், உயிரோடு என்னிடம் இருந்து தப்ப மாட்டீர்” என்றான் {அபிமன்யு}.
இந்த வார்த்தைகளைச் சொன்னவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், பகைவீரர்களைக் கொல்பவனுமான அந்த வீரன் {அபிமன்யு}, துச்சாசனனை அடுத்த உலகத்திற்கு அனுப்பவல்லதும், யமன், அல்லது அக்னி, அல்லது வாயுத்தேவனின் காந்தியைக் கொண்டதுமான கணையொன்றை குறிபார்த்தான். துச்சாசனனின் மார்பை விரைவாக அணுகிய அந்தக் கணை, அவனது தோள்ப்பூட்டில் பாய்ந்து, எறும்புப் புற்றுக்குள் செல்லும் பாம்பைப் போல, {கணையின்} சிறகுகள் வரை அவனது உடலுக்குள் ஊடுருவியது. மேலும் விரைவாக அபிமன்யு நெருப்பின் தீண்டலைக் கொண்டவையும், முழுமையாக வளைக்கப்பட்ட வில்லில் இருந்து ஏவப்பட்டவையுமான இருபத்தைந்து கணைகளால் மீண்டும் அவனைத் தாக்கினான். ஆழமாகத் துளைக்கப்பட்டுப் பெரும் வலியை உணர்ந்த துச்சாசனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் தேர்த்தட்டில் அமர்ந்தவாறே மயக்கமடைந்தான். இப்படிச் சுபத்திரை மகனின் {அபிமன்யுவின்} கணைகளால் பீடிக்கப்பட்டுத் தன் உணர்வுகளை இழந்த துச்சாசனன், அவனது தேரோட்டியால் போருக்கு மத்தியில் இருந்து வேகமாக வெளியே சுமந்து செல்லப்பட்டான்.
இதைக் கண்டவர்களான பாண்டவர்கள், திரௌபதியின் மகன்கள் ஐவர், விராடன், பாஞ்சாலர்கள், கேகயர்கள் ஆகியோர் சிங்க முழக்கம் செய்தனர். மகிழ்ச்சியால் நிறைந்த பாண்டவத் துருப்புகள் பல்வேறு இசைக்கருவிகளை அடிக்கவும் முழக்கவும் செய்தனர். சுபத்ரை மகனின் {அபிமன்யுவின்} அந்த அருஞ்செயலைக் கண்ட அவர்கள் மகிழ்ச்சியால் சிரித்தனர். யமன், மாருதன், சக்ரன் {இந்திரன்}, அசுவினி இரட்டையர் ஆகியோரின் உருவங்களைத் தங்கள் கொடிகளில் கொண்ட (ஐந்து) திரௌபதி மகன்கள், சாத்யகி, சேகிதானன், திருஷ்டத்யும்னன், சிகண்டி, கேகயர்கள், திருஷ்டகேது, மத்ஸ்யர்கள், பாஞ்சாலர்கள், சிருஞ்சயர்கள் மற்றும் யுதிஷ்டிரனின் தலைமையிலான பாண்டவர்கள் ஆகிய அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், தீராச்சினமும், செருக்குமுடைய தங்கள் எதிரி {துச்சாசனன்} இப்படி வீழ்த்தப்பட்டதைக் கண்டு மகிழ்ச்சியில் நிறைந்தனர். மேலும் அவர்கள் அனைவரும் துரோணரின் வியூகத்தைத் துளைக்கும் விருப்பத்துடன் வேகமாக விரைந்தனர். பிறகு, வெற்றி அடையும் விருப்பத்தால் தூண்டப்பட்டவர்களும், புறமுதுகிடாதவர்களுமான அந்தப் போர்வீரர்களுக்கும், எதிரியின் போர்வீரர்களுக்கும் இடையில் பயங்கரப் போர் ஒன்று நடைபெற்றது.
அந்தப் பயங்கரப் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, ராதையின் மகனுடன் {கர்ணனுடன்} பேசிய துரியோதனன், “எரிக்கும் சூரியனுக்கு ஓப்பான வீரத் துச்சாசனன், போரில் எதிரியைக் கொல்ல முயன்று இறுதியில் அபிமன்யுவுக்கு அடிபணிந்ததைப் பார். சினத்தால் தூண்டப்பட்டு வலிமைமிக்கக் கடுஞ்சிங்கங்களாகத் தெரியும் பாண்டவர்களும், சுபத்திரையின் மகனை {அபிமன்யுவைக்} காக்க விரும்பி நம்மை நோக்கி விரைகின்றனர்” என்றான்.
இப்படிச் சொல்லப்பட்ட கர்ணன் சினங்கொண்டு, உமது மகனுக்கு {துரியோதனனுக்கு} நன்மை செய்ய விரும்பி, வெல்லப்பட முடியாத அபிமன்யுவின் மேல் கூரிய கணைகளை மழையாகப் பொழிந்தான். வீரக் கர்ணன், தன் எதிரியை {அபிமன்யுவை} அவமதிக்கும் வகையில், போர்க்களத்தில் பின்னவனை {எதிரியான அபிமன்யுவைப்} பின் தொடர்ந்து வருவரையும் பெரும் கூர்மை கொண்ட சிறந்த கணைகள் பலவற்றால் துளைத்தான். எனினும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரோணரை எதிர்த்துச் செல்ல விரும்பிய உயர் ஆன்ம அபிமன்யு, எழுபத்துமூன்று கணைகளால் ராதையின் மகனை {கர்ணனைத்} துளைத்தான்.
கௌரவப் படையின் தேர்வீரர்களில் முதன்மையானோர் அனைவரையும் பீடித்துக் கொண்டிருந்தவனும், இந்திரனின் மகனுக்கு {அர்ஜுனனுக்கு} மகனுமான அபிமன்யு, துரோணரிடம் செல்வதைத் தடுப்பதில் உமது படையில் எந்தத் தேர்வீரனும் அந்நேரத்தில் வெல்லவில்லை. வில்லாளிகள் அனைவரிலும் பெருமதிப்புக்கு உரியவனான கர்ணன், வெற்றியடைய விரும்பி, தன் சிறந்த ஆயுதங்களை எடுத்து நூற்றுக்கணக்கான கணைகளால் சுபத்திரையின் மகனை {அபிமன்யுவைத்} துளைத்தான். ஆயுதங்களை அறிந்தோர் அனைவரிலும் முதன்மையானவனும், {பரசு} ராமரின் வீரச் சீடனுமான அவன் {கர்ணன்}, எதிரிகளால் தோற்கடிக்கப்பட முடியாத அபிமன்யுவைத் தன் ஆயுதங்களின் மூலம் இப்படிப் பீடித்தான்.
ஆயுத மழையால் ராதையின் மகனால் {கர்ணனால்} போரில் பீடிக்கப்பட்டாலும், (ஆற்றலில்) தேவர்களையே ஒத்திருந்த அந்தச் சுபத்திரையின் மகன் {அபிமன்யு} எந்த வலியையும் உணரவில்லை. அந்த அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, கல்லில் கூர்த்தீட்டப்பட்டவையும், கூர்முனைகளைக் கொண்டவையுமான தன் கணைகளைக் கொண்டு வீரப் போர்வீரர்கள் பலரின் விற்களை வெட்டி, பதிலுக்குக் கர்ணனைப் பீடிக்கத் தொடங்கினான். அபிமன்யு சிரித்துக் கொண்டே, கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பானவையும், வட்டமாக வளைக்கப்பட்ட வில்லில் இருந்து ஏவப்பட்டவையுமான கணைகளால் கர்ணனின் குடை, கொடிமரம், தேரோட்டி மற்றும் குதிரைகளை விரைவாக வெட்டினான்.
பிறகு கர்ணன் அபிமன்யுவின் மேல் ஐந்து நேரான கணைகளை ஏவினான். எனினும், பல்குனன் மகனோ {அபிமன்யுவோ} அவற்றை அச்சமற்றவகையில் வரவேற்றான். பெரும் வீரமும் தீரமும் கொண்ட பின்னவன் {அபிமன்யு}, ஒரே ஒரு கணையால் கர்ணனின் வில் மற்றும் கொடிமரத்தை வெட்டி ஒரு கணத்தில் அவற்றைக் கீழே தரையில் விழச் செய்தான். இத்தகு துயரில் இருக்கும் கர்ணனைக் கண்ட அவனது தம்பி {கர்ணனின் தம்பி}, பெரும் பலத்துடன் வில்லை வளைத்துக் கொண்டு, சுபத்திரையின் மகனை எதிர்த்து வேகமாகச் சென்றான். பிறகு பார்த்தர்களும், அவர்களைப் பின்தொடர்பவர்களும், உரக்க கர்ஜித்துத் தங்கள் இசைக்கருவிகளை முழக்கி சுபத்திரையின் மகனை {அபிமன்யுவை} (அவனது வீரத்திற்காக} மெச்சினார்கள்” {என்றான் சஞ்சயன்}.
ஆங்கிலத்தில் | In English |