Abhimanyu made Karna flee! | Drona-Parva-Section-039 | Mahabharata In Tamil
(அபிமன்யுவத பர்வம் – 09)
பதிவின் சுருக்கம் : கர்ணனின் தம்பியைக் கொன்று, கர்ணனைப் புறமுதுகிடச் செய்த அபிமன்யு; அபிமன்யு செய்த கடும்போர்; போர்க்களத்தின் நிலவரம் ...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "உரக்க முழங்கி வந்த கர்ணனின் தம்பி [1], கையில் வில்லுடன், மீண்டும் மீண்டும் நாண் கயிற்றை இழுத்த படியே விரைவாகத் தன்னை அந்தச் சிறந்த இரு வீரர்களுக்கு மத்தியில் நிறுத்திக் கொண்டான். மேலும் அந்தக் கர்ணனின் தம்பி, சிரித்துக் கொண்டே, வெல்லப்பட முடியாத அபிமன்யுவின் குடை, கொடிமரம், தேரோட்டி மற்றும் குதிரைகளைப் பத்து கணைகளால் துளைத்தான். மனித சக்திக்கு அப்பாற்பட்ட சாதனைகளை அபிமன்யு தன் தந்தையை {அர்ஜுனனைப்} போலவும், பாட்டனைப் போலவும் ஏற்கெனவே அடைந்திருந்தாலும், அந்தக் கணைகளால் அவன் {அபிமன்யு} இப்படிப் பீடிக்கப்பட்டதைக் கண்ட உமது படையின் போர்வீரர்கள் மகிழ்ச்சியால் நிறைந்தனர்.
[1] விராட பர்வம் பகுதி 54ல் கர்ணனின் தம்பியான சங்கிராமஜித் அர்ஜுனனால் கொல்லப்பட்டதாக ஒரு குறிப்பு வருகிறது. விராட பர்வம் பகுதி 60ல் கர்ணனுக்கு அர்ஜுனன் இதைச் சுட்டிக் காட்டுகிறான். இஃதை உத்யோக பர்வம் பகுதி 49ல் சுட்டிக் காட்டிப் பீஷ்மர் கர்ணனைக் கண்டிக்கிறார். இங்கே சுட்டப்படும் கர்ணனின் தம்பி பெயர் இன்னதென்று தெரியவில்லை.
அப்போது, வில்லைப் பலமாக வளைத்த அபிமன்யு, சிரித்துக் கொண்டே, தன் எதிராளியின் {கர்ணன் தம்பியின்} தலையைச் சிறகு படைத்த கணை ஒன்றால் அறுத்தான். உடலில் இருந்து அறுக்கப்பட்ட அந்தத் தலை கீழே பூமியில் விழுந்தது. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கோங்கு மரம் ஒன்று உலுக்கப்பட்டு, மலையின் உச்சியிலிருந்து காற்றால் தூக்கி வீசப்பட்டதைப் போலத் தன் தம்பி கொல்லப்பட்டு வீழ்த்தப்படுவதைக் கண்ட கர்ணன் வலியால் நிறைந்தான். அதேவேளையில், சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, தன் கணைகளின் மூலம் கர்ணனைக் களத்தில் இருந்து ஓடச் செய்து பெரும் வில்லாளிகள் பிறரை எதிர்த்து வேகமாக விரைந்தான் [2]. பிறகு, கடும் சக்தியும், பெரும் புகழும் கொண்ட அபிமன்யு, கோபத்தால் நிறைந்து, யானைகள், குதிரைகள், தேர்கள், காலாட்கள் நிறைந்த பல்வேறு படையணிகளைக் கொண்ட அந்தப் படையைப் பிளந்தான். கர்ணனைப் பொறுத்தவரை, அபிமன்யுவின் எண்ணிலடங்கா கணைகளால் பீடிக்கப்பட்ட அவன், வேகமான குதிரைகளால் சுமக்கப்பட்டுக் களத்தில் இருந்து தப்பி ஓடினான். பிறகு அந்தக் கௌரவப்படை உடைந்தது [3].
[2] வேறொரு பதிப்பில் இந்த வரி, “காற்றினால் நான்கு பக்கத்திலும் அசைக்கப்பட்டு மலையிலிருந்து தள்ளப்பட்ட கோங்கு மரம் போன்ற கர்ணனுடைய இளைய சகோதரனைக் கண்டு, உம்மைச் சேர்ந்தவர்கள் மனவருத்தமுற்றனர். கர்ணனும், கொல்லப்பட்ட சகோதரனைக் கண்டு திரும்பினான். சுபத்திரையின் மகனான அபிமன்யு கழுகிறகுகள் அணிந்த அம்புகளாலே கர்ணனைப் புறங்காட்டியோடும்படி செய்து, மற்ற சிறந்த வில்லாளிகளையும் சீக்கிரமாகவே எதிர்த்துச் சென்றான்” என்றிருக்கிறது.[3] வேறொரு பதிப்பில் இதற்கு மேலும், “ஓ திருதராஷ்டிரரே, துரோணாசாரியர், “மகாவில்லாளியான கர்ணா! கிருபரே! துரியோதனா! நில்லுங்கள்” என்று அழைத்துக் கொண்டிருக்கும்போதே அந்தச் சேனை நாசம்பண்ணப்பட்டது” என்றிருக்கிறது. கங்குலியின் பதிப்பிலும், மன்மதநாததத்தரின் பதிப்பிலும் இந்த வரிகள் காணப்படவில்லை.
விட்டிற்பூச்சிகளின் கூட்டத்தைப் போலவோ, அடர்த்தியான மழைப்பொழிவைப் போலவோ இருந்த அபிமன்யுவின் கணைகளால் ஆகாயம் மறைக்கப்பட்ட போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, {யாராலும்} எதையும் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அபிமன்யுவின் கூரிய கணைகளால் இப்படிக் கொல்லப்பட்ட உமது போர்வீரர்களில் சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைத்} தவிரப் போர்க்களத்தில் வேறு எவனும் நீடிக்கவில்லை.
பிறகு, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, மனிதர்களில் காளையான சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, தன் சங்கை முழக்கியபடி பாரதப் படையின் மீது வேகமாகப் பாய்ந்தான். உலர்ந்த வைக்கோலுக்கு மத்தியில் வீசப்பட்ட எரியும் கொள்ளியைப் போல, அந்த அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, கௌரவப் படையினூடாக விரைவாகத் திரிந்து தன் எதிரிகளை எரிக்க ஆரம்பித்தான். அவர்களின் வியூகத்தைத் {சக்கரவியூகத்தைத்} துளைத்த அவன் {அபிமன்யு}, தன் கூரிய கணைகளால் தேர்களையும், யானைகளையும், குதிரைகளையும், மனிதர்களையும் சிதைத்து, போர்க்களத்தைத் தலையற்ற முண்டங்களால் நிறைத்தான்.
சுபத்திரை மகனின் {அபிமன்யுவின்} வில்லில் இருந்து ஏவப்பட்ட சிறந்த கணைகளால் வெட்டப்பட்ட கௌரவப் போர்வீரர்கள் தப்பி ஓடினர், அப்படி ஓடுகையில், தங்கள் முன்பு நின்ற தங்கள் தோழர்களைக் கொன்றபடியே ஓடினர். கல்லில் கூராக்கப்பட்டவையும், பயங்கர விளைவுகளை ஏற்படுத்துபவையுமான அந்த எண்ணற்றக் கடுங்கணைகள், தேர்வீரர்களையும், யானைகளையும், குதிரைகளையும் கொன்றபடி களத்தில் வேகமாகப் பாய்ந்தன.
அங்கதங்களுடனும், தங்க ஆபரணங்கள் பிறவற்றுடனும் இருந்த தோள்களும், தோலுறைகளால் மறைக்கப்பட்ட கரங்களும், கணைகளும், விற்களும், உடல்களும், குண்டலங்கள் மற்றும் மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட தலைகளும் களத்தில் ஆயிரக்கணக்கில் கிடந்தன. ஆயிரக்கணக்கான உபஷ்கரங்கள் {கருவிகள்}, அதிஸ்தானங்கள் {இருக்கைப் பீடங்கள்}, நீண்ட ஏர்க்கால்கள், முறிந்த அக்ஷங்கள் {அச்சுகள்}, உடைந்த சக்கரங்கள், நுகத்தடிகள் ஆகியவற்றால் தடுக்கப்பட்டு, ஈட்டிகள், விற்கள், வாள்கள், விழுந்த கொடிமரங்கள், கேடயங்கள், விற்கள் ஆகியவை எங்கும் கிடக்க, கொல்லப்பட்ட க்ஷத்திரியர்கள், குதிரைகள், யானைகள் ஆகியவற்றின் உடல்களுடன் மிகப் பயங்கரமாகத் தெரிந்த அந்தப் போர்களமானது விரைவில் கடக்கப்பட முடியாததாக மாறியது.
ஒருவரை ஒருவர் அழைத்த இளவரசர்கள், அபிமன்யுவால் கொல்லப்பட்ட போது உண்டாகிய ஒலி செவிடாக்குவதாகவும், மருண்டோரின் அச்சங்களை அதிகப்படுத்துவதாகவும் இருந்தது. ஓ! பாரதர்களில் தலைவரே {திருதராஷ்டிரரே}, அந்த ஒலிகள் திசைப்புள்ளிகள் அனைத்தையும் நிறைத்தன. (கௌரவத்) துருப்புகளை எதிர்த்து விரைந்த சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, முதன்மையான தேர்வீரர்களையும், குதிரைகளையும், யானைகளையும் கொன்றான். தன் எதிரிகளை விரைவாக எரித்த அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, உலர்ந்த வைக்கோலுக்கு மத்தியில் விளையாடும் நெருப்பைப் போலப் பாரதப் படைக்கு மத்தியில் திரிவது தெரிந்தது.
நம் துருப்புகளால் சூழப்பட்டுப் புழுதியால் மறைக்கப்பட்ட அவன் {அபிமன்யு}, களத்தில் முக்கிய மற்றும் துணைத் திசைகள் அனைத்திலும் திரிந்து கொண்டிருக்கையில், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே} எங்களில் எவராலும் அந்தப் போர் வீரனை {அபிமன்யுவைப்} பார்க்க முடியவில்லை. ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அவன் {அபிமன்யு}, கிட்டத்தட்ட தொடர்ச்சியாகக் குதிரைகள், யானைகள் மற்றும் மனிதப் போர்வீரர்கள் ஆகியோரின் உயிரை எடுத்தான். அதன் பிறகு உடனே (அங்கிருந்து வெளிப்படும்) அவனை நாங்கள் கண்டோம். உண்மையில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, (தன் கதிர்களால் அனைத்தையும் எரிக்கும்) உச்சிவானத்துச் சூரியனைப் போல அவன் {அபிமன்யு} தன் எதிரிகளை எரித்துக் கொண்டிருப்பதை நாங்கள் கண்டோம். வாசவனுக்கு {இந்திரனுக்கு} இணையானவனும், வாசவனின் மகனுக்கு மகனுமான அபிமன்யு (பகைவரின்) படைக்கு மத்தியில் பிரகாசமாகத் தெரிந்தான்” {என்றான் சஞ்சயன்}.
ஆங்கிலத்தில் | In English |