Monday, May 16, 2016

உடைந்த வியூகத்தை அடைத்த ஜெயத்ரதன்! - துரோண பர்வம் பகுதி – 041

Jayadratha filled up the broken array! | Drona-Parva-Section-041 | Mahabharata In Tamil

(அபிமன்யுவத பர்வம் – 11)

பதிவின் சுருக்கம் : ஜெயத்ரதனின் அற்றல் குறித்து விவரித்த சஞ்சயன்; ஜெயத்ரதனோடு மோதிய யுதிஷ்டிரனும் பீமனும்; அபிமன்யுவால் பிளக்கப்பட்ட வியூகத்தை அடைத்த ஜெயத்ரதன்...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சிந்துக்களின் ஆட்சியாளனுடைய {ஜெயத்ரதனுடைய} ஆற்றலைக் குறித்து நீர் என்னைக் கேட்டீர். அவன் {ஜெயத்ரதன்} பாண்டவர்களோடு எவ்வாறு போரிட்டான் என்பதை விவரிக்கிறேன் கேளும். நன்கு பழக்கப்பட்டவையும், மனோவேகம் கொண்டவையும், தேரோட்டியின் கட்டளைகளுக்குக் கீழ்படிபவையும் சிந்து இனத்தைச் சேர்ந்தவையுமான பெரிய குதிரைகள் (அச்சந்தர்ப்பத்தில்} அவனைச் சுமந்தன. முறையாகத் தயாரிக்கப்பட்டிருந்த அவனது தேர், ஆகாயத்தின் நீர் மாளிகையை {மேகத்தைப்} போலத் தெரிந்தது. வெள்ளியிலான பெரிய பன்றியின் உருவத்தைத் தாங்கியிருந்த அவனது கொடிமரம் மிக அழகாகத் தெரிந்தது. அரசக் குறியீடுகளான வெண் குடை, கொடிகள், அவனுக்கு {ஜெயத்ரதனுக்கு} விசிறுவதற்காகப் பயன்பட்ட காட்டெருதின் வால்கள் {சாமரங்கள்} ஆகியவற்றோடு அவன் ஆகாயத்தில் இருக்கும் சந்திரனைப் போல ஒளிர்ந்தான். இரும்பாலான அவனது தேர்க்கூடு முத்துக்களாலும், வைரங்களாலும், ரத்தினங்களாலும், தங்கத்தாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஆகாயத்தில் சிதறிக் கிடக்கும் ஒளிக்கோள்கள் போல அது பிரகாசாமாகத் தெரிந்தது.


தன் பெரிய வில்லை வளைத்து எண்ணற்ற கணைகளை இறைத்த அவன் {ஜெயத்ரதன்}, எங்கெல்லாம் அர்ஜுனன் மகன் {அபிமன்யு} அந்த வியூகத்தில் {சக்கரவியூகத்தில்} பிளவுகளை {திறப்புகளை} உண்டாக்கினானோ, அந்த இடங்களை மீண்டும் அடைத்தான். அவன் {ஜெயத்ரதன்}, மூன்று கணைகளால் சாத்யகியையும், விருகோதரனை {பீமனை} எட்டாலும் துளைத்தான்; திருஷ்டத்யும்னனை அறுபது கணைகளால் துளைத்த அவன், கூரிய கணைகள் ஐந்தால் துருபதனையும், பத்தால் சிகண்டியையும் துளைத்தான். இருபது கணைகளால் கைகேயர்களைத் துளைத்த ஜெயத்ரதன், திரௌபதி மகன்கள் ஐவரில் ஒவ்வொருவரையும் மூன்று கணைகளால் துளைத்தான். மேலும் எழுபது கணைகளால் யுதிஷ்டிரனைத் துளைத்த சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்}, அடர்த்தியான கணை மழையால் பாண்டவப் படையின் பிற வீரர்களைத் துளைத்தான். அவனது {ஜெயத்ரதனின்} அந்த அருஞ்செயல் மிக அற்புதமானதாகத் தெரிந்தது.

பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, ஜெயத்ரதனின் வில்லைக் குறிபார்த்த தர்மனின் வீர மகன் {யுதிஷ்டிரன்}, நன்கு கடினமாகப்பட்ட பளபளக்கும் கணையொன்றால் அஃதை அறுத்தான். எனினும், கண்ணிமைக்கும் நேரத்திற்குள் மற்றொரு வில்லை எடுத்த சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்}, பார்த்தனை (யுதிஷ்டிரனைப்) பத்து கணைகளால் துளைத்து, மற்றவர்கள் ஒவ்வொருவரையும் மூன்று கணைகளால் தாக்கினான்.

ஜெயத்ரன் வெளிப்படுத்திய கரநளினத்தைக் குறித்துக் கொண்ட பீமன், மூன்று பல்லங்களால் அவனது {ஜெயத்ரதனது} வில், கொடிமரம் மற்றும் குடையை அறுத்தான். பிறகு மற்றொரு வில்லை எடுத்த வலிமைமிக்க ஜெயத்ரதன், அதில் நாணேற்றி பீமனின் கொடிமரம், வில் மற்றும் குதிரைகளை வீழ்த்தினான். ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, வில்லறுந்த பீமசேனன், குதிரைகள் கொல்லப்பட்ட அந்தச் சிறந்த தேரில் இருந்து கீழே குதித்து, மலையின் உச்சிக்குக் குதித்து ஏறும் சிங்கத்தைப் போல, சாத்யகியின் தேரில் ஏறினான்.

இதைக் கண்ட உமது துருப்புகள் மகிழ்ச்சியால் நிறைந்தன. அவர்கள், “நன்று! நன்று” என்று உரக்க முழங்கினார்கள். மேலும் அவர்கள் சிந்துக்கள் ஆட்சியாளனின் {ஜெயத்ரதனின்} அந்த அருஞ்செயலை மீண்டும் மீண்டும் மெச்சினார்கள். உண்மையில், சேர்ந்திருக்கும் பாண்டவர்கள் அனைவரையும், கோபத்தால் தூண்டப்பட்டுத் தனி ஒருவனாகத் தடுத்த அவனது அந்த அருஞ்செயலை உயிர்களனைத்தும் உயர்வாக மெச்சின.

சுபத்திரையின் மகன் {அபிமன்யு} எண்ணற்ற போர்வீரர்களையும் யானைகளையும் கொன்று பாண்டவர்களுக்காக ஏற்படுத்திய பாதை, சிந்துக்களின் ஆட்சியாளனால் {ஜெயத்ரதனால்} நிரப்பப்பட்டது {அடைக்கப்பட்டது}. உண்மையில், வீரர்களான மத்ஸ்யர்கள், பாஞ்சாலர்கள், கைகேயர்கள், பாண்டவர்கள் ஆகியோர் தீவிரமாக முயன்று ஜெயத்ரதனின் முன்னிலையை அடைந்தாலும், அவர்கள் ஒருவராலும் அவனைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. துரோணரால் அமைக்கப்பட்ட அந்த வியூகத்தைத் {சக்கரவியூகத்தைத்} துளைக்க முயன்ற உமது எதிரிகளில் ஒவ்வொருவரும், (மகாதேவனிடம்) பெற்ற வரத்தின் விளைவால் சிந்துக்களின் ஆட்சியாளனால் {ஜெயத்ரதனால்} தடுக்கப்பட்டனர்” {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English