Tuesday, May 17, 2016

வசாதீயனைக் கொன்ற அபிமன்யு! - துரோண பர்வம் பகுதி – 042

Abhimanyu killed Vasatiya! | Drona-Parva-Section-042 | Mahabharata In Tamil

(அபிமன்யுவத பர்வம் – 12)

பதிவின் சுருக்கம் : தேரோட்டியைக் கொன்று விருஷசேனனைக் களத்தை விட்டு விரட்டிய அபிமன்யு; வசாதீயனைக் கொன்றது; கௌரவ வீரர்களை மூர்க்கமாகத் தாக்கி களத்தை உயிரற்ற சடலங்களாலும் போர்க்கருவிகளாலும் நிறைத்தது...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "வெற்றியை விரும்பிய பாண்டவர்களைச் சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} தடுத்தபோது, உமது துருப்புகளுக்கும், எதிரியின் துருப்புகளுக்கும் இடையில் நடைபெற்ற போரானது அச்சந்தரும் வகையில் இருந்தது. வெல்லப்பட முடியாதவனும், இலக்கில் துல்லியம், வலிமை, சக்தி ஆகியவற்றைக் கொண்டவனுமான அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, பெருங்கடலைக் கலங்கடிக்கும் மகரத்தைப் போலக் (கௌரவ) வியூகத்திற்குள் {சக்கரவியூகத்திற்குள} ஊடுருவி அதைக் கலங்கடித்தான். எதிரிகளைத் தண்டிப்பவனும், தன் கணை மழையால் இப்படிப் பகைவரின் படையைக் கலங்கடித்துக் கொண்டிருந்தவனுமான சுபத்திரையின் மகனை {அபிமன்யுவை}, கௌரவப் படையின் முக்கிய வீரர்கள் ஒவ்வொருவரும் தங்கள் தரத்துக்கும், முன்னுரிமைக்கும் தக்கபடி {வரிசை முறைப்படி} எதிர்த்து விரைந்தனர்.


பெரும் பலத்துடன் தங்கள் கணை மழையை இறைத்த அந்த அளவிலா சக்தி கொண்டவர்கள் ஒரு புறமும், தனியனான அபிமன்யு ஒருபுறமும் என நடந்த அந்த மோதல் அச்சந்தருவதாகவே இருந்தது. தேர்க்கூட்டங்களுடன் கூடிய அவ்வெதிரிகளால் அனைத்துப் பக்கங்களிலும் சூழப்பட்ட அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, {கர்ணன் மகனான} விருஷசேனனின் தேரோட்டியைக் கொன்று, அவனது வில்லையும் அறுத்தான். பிறகு, வலிமைமிக்க அந்த அபிமன்யு தன் நேரான கணைகளால் விருஷசேனனின்  குதிரைகளைத் துளைத்தான். காற்றின் வேகத்தைக் கொண்ட அந்தக் குதிரைகள், இதனால், போர்க்களத்திற்கு வெளியே விருஷசேனனைச் சுமந்து சென்றன.

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட அபிமன்யுவின் தேரோட்டி, அந்த நெருக்கமான போரில் இருந்து, களத்தின் வேறு பகுதிக்குக் கொண்டு சென்று அவனது தேரை விடுவித்துக் கொண்டான். (இந்த அருஞ்செயலைக்) கண்ட எண்ணற்ற தேர்வீரர்கள் மகிழ்ச்சியால் நிறைந்து "நன்று! நன்று!" என்றனர்.

சிங்கத்தைப் போன்ற அபிமன்யு, தன் கணைகளால் எதிரிகளைக் கோபத்துடன் கொல்வதைக் கண்ட வசாதீயன் {வஸாதீயன்} [1], தூரத்தில் இருந்து முன்னேறி வந்து, பெரும்பலத்துடன் அவன் மீது வேகமாகப் பாய்ந்தான். பின்னவன் {வசாதீயன்}, தங்கச் சிறகுகள் கொண்ட அறுபது கணைகளால் அபிமன்யுவைத் துளைத்து, அவனிடம் {வசாதீயன் அபிமன்யுவிடம்}, "நான் உயிரோடு உள்ளவரை, உன்னால் உயிருடன் தப்ப முடியாது" என்றான். அவன் {வசாதீயன்} இரும்புக் கவசத்தை அணிந்திருந்தாலும், சுபத்திரையின் மகன் {அபிமன்யு}  நீண்ட தூரம் செல்லும் கணை ஒன்றால் அவனது மார்பைத் துளைத்தான். அதன் பேரில் வசாதீயன் உயிரை இழந்து கீழே பூமியில் விழுந்தான்.

[1] இவன் யாரெனத் தெரியவில்லை.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} வசாதீயன் கொல்லப்பட்டதைக் கண்ட க்ஷத்திரியக் காளையர் பலர், கோபத்தால் நிறைந்து, உமது பேரனை {அபிமன்யுவைக்} கொல்ல விரும்பி, அவனைச் சூழ்ந்து கொண்டனர். அவர்கள், பல்வேறு விதங்களிலான தங்கள் எண்ணற்ற விற்களை வளைத்தபடியே அவனை அணுகினர். அதன் பிறகு, சுபத்திரையின் மகனுக்கும் {அபிமன்யுவுக்கும்}, அவனது எதிரிகளுக்கும் இடையில் நடைபெற்ற போரானது மிகக் கடுமையானதாக இருந்தது.

கோபத்தால் நிறைந்த பல்குனன் மகன் {அபிமன்யு}, அவர்களின் விற்கள், கணைகள், அவர்களது உடலின் பல்வேறு அங்கங்கள், குண்டலங்களாலும், மலர்மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த அவர்களது தலைகள் ஆகியவற்றை வெட்டி வீழ்த்தினான்.

பல்வேறு தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தவையும், வாள்கள், பரிகங்கள், போர்க்கோடரிகள் ஆகியவற்றைக் கொண்டவையும், தோல் கையுறைகள் அணிந்த விரல்களுடன் கூடியவையுமான {வீரர்களின்} கரங்கள் வெட்டப்பட்டு அங்கே காணப்பட்டது. மலர்மாலைகள், ஆபரணங்கள், ஆடைகள், விழுந்திருக்கும் கொடிமரங்கள், கவசங்கள், கேடயங்கள, தங்க ஆரங்கள், கிரீடங்கள், குடைகள், சாமரங்கள், உபஷ்கரங்கள் {பிற கருவிகள்}, அதிஸ்தானங்கள் {தேர்வீரர் அமரும் பீடங்கள்}, தண்டகங்கள் {ஏர்க்கால்கள்}, வந்தூரங்கள் {தேரோட்டி அமரும் பீடங்கள்}, நொறுக்கப்பட்ட அக்ஷங்கள் {அச்சுக்கள்}, ஆயிரக்கணக்கில் உடைந்து கிடந்த சக்கரங்கள் மற்றும் நுகத்தடிகள், அனுகரஷங்கள் {அண்டைமரங்கள்}, கொடிகள், தேரோட்டிகள், குதிரைகள், உடைக்கப்பட்ட தேர்கள், கொல்லப்பட்ட யானைகள் மற்றும் குதிரைகள் ஆகியவை பூமியில் பரவிக் கிடந்தன.

வெற்றியில் உள்ள விருப்பத்தால் ஈர்க்கப்பட்டவர்களும், (உயிரோடு இருந்த போது) வீரத்துடன் கூடிய க்ஷத்திரியர்களுமான பல்வேறு மாநிலங்களின் ஆட்சியாளர்கள் கொல்லப்பட்டு {அவர்களின் உடல்களால்} பரவிக் கிடந்த போர்க்களமானது அச்சந்தரும் காட்சியை அளித்தது.

அபிமன்யு கோபத்துடன் போர்க்களத்தின் அனைத்துத் திசைகளிலும் திரிந்த போது, அவனது வடிவமே காணப்படாமல் போனது. தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட அவனது கவசம், அவனது ஆபரணங்கள், வில், கணைகள் ஆகியவை மட்டுமே காணப்பட்டன. உண்மையில், அவன் தன் கணைகளால் பகை வீரர்களைக் கொன்று வருகையில், அவர்களுக்கு மத்தியில் சூரியனைப் போலச் சுடர்மிகும் பிரகாசத்துட்ன இருந்த அவனை, எவராலும் தங்கள் கண்களால் காண முடியவில்லை" {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English