Sunday, May 22, 2016

பயங்கரப் போர்க்களம்! - துரோண பர்வம் பகுதி – 048

Terrible Battlefield! | Drona-Parva-Section-048 | Mahabharata In Tamil

(அபிமன்யுவத பர்வம் – 18)

பதிவின் சுருக்கம் : அபிமன்யு இறந்ததும் படைகள் பாசறைக்குத் திரும்பியது; போர்க்களத்தின் வர்ணனை...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "அவர்களின் {பாண்டவர்களின்} முதன்மையான வீரர்களில் ஒருவனை {அபிமன்யுவை} இப்படிக் கொன்ற பிறகு, அவர்களின் கணைகளால் பீடிக்கப்பட்டிருந்த நாங்கள், குருதியில் நனைந்தபடியே மாலை வேளையில் எங்கள் பாசறைக்குத் திரும்பினோம். எதிரியால் உறுதியாக வெறித்துப் பார்க்கப்பட்ட நாங்கள், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கடும் இழப்பை அடைந்து, கிட்டத்தட்ட நினைவுகளை இழக்கும் தருவாயில் போர்க்களத்தைவிட்டு மெல்ல வெளியேறினோம். அப்போது பகலுக்கும் இரவுக்கும் இடைப்பட்ட அற்புதமான நேரமும் வந்தது. நரிகளின் அமங்கலமான ஊளைகளையும் நாங்கள் கேட்டோம்.


மேற்கு மலைகளை {அஸ்த மலையை} அடைந்த சூரியன், தாமரை இதழ்களைப் போன்ற வெளிர் சிவப்பு நிறத்தில் கீழே அடிவானத்தில் மூழ்கிக் கொண்டிருந்தான். அவன் {சூரியன்}, எங்கள் வாள்கள், கணைகள், ரிஷ்டிகள், தேரின் வரூதங்கள், கேடயங்கள் மற்றும் ஆபரணங்களில் இருந்த காந்தியையும் தன்னோடு எடுத்துச் சென்றுவிட்டான். ஆகாயத்தையும், பூமியையும் ஒரே நிறம் கொள்ளச் செய்த சூரியன் தனக்குப் பிடித்தமான நெருப்பின் வடிவத்தை ஏற்றான் {அக்னி ஸ்வரூபமான சரீரத்தை அடைந்தான்}.

தங்கள் முதுகில் இருந்த கொடிமரங்கள், அங்குசங்கள் மற்றும் பாகர்கள் விழுந்து கிடக்க, இடியால் பிளக்கப்பட்ட மேகமுடி கொண்ட மலைமுகடுகளைப் போல, உயிரை இழந்து கிடந்த எண்ணற்ற யானைகளின் அசைவற்ற உடல்கள் போர்களமெங்கும் பரவிக் கிடந்தன. தங்கள் வீரர்கள், தேரோட்டிகள், ஆபரணங்கள், குதிரைகள், கொடிமரங்கள், கொடிகள் ஆகியவை நசுங்கி, உடைந்து, கிழிந்து போய்த் துண்டுகளாக நொறுங்கிக் கிடக்கும் பெருந்தேர்களுடன் பூமியானது அழகாகத் தெரிந்தது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் பெருந்தேர்கள், எதிரியின் கணைகளால் தங்கள் உயிர்களை இழந்த உயிரினங்களைப் போலத் தெரிந்தன.

விலையுயர்ந்த பொறிகள் மற்றும் பல்வேறு விதங்களிலான விரிப்புகளுடன் கூடிய பெரும் எண்ணிக்கையிலான குதிரைகள் மற்றும் சாரதிகள் தங்கள் கண்கள், பற்கள், நரம்புகள், நாக்கு ஆகியன தங்கள் இடங்களில் இருந்து பிதுங்கி உயிரற்றுக் கிடந்ததால் அந்தப் போர்க்களம் கொடூரமான பயங்கரத் தன்மையை அடைந்தது. விலையுயர்ந்த கவசங்கள், ஆபரணங்கள், ஆடைகள், ஆயுதங்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டிருந்த உயிரிழந்த மனிதர்கள், விலையுயர்ந்த படுக்கைகள் மற்றும் விரிப்புகளுக்குத் தாங்கள் தகுந்தோரெனினும், கொல்லப்பட்ட குதிரைகள், யானைகள் மற்றும் உடைந்த தேர்களுடன் முற்றிலும் ஆதரவற்றோராக வெறுந்தரையில் கிடந்தனர்.

அந்தப் போர்க்களத்தில் நாய்கள், நரிகள், காக்கைகள், கொக்குகள், ஊனுண்ணும் பிற பறவைகள், ஓநாய்கள், கழுதைப்புலிகள், அண்டங்காக்கைகள், உணவைக் குடிக்கும் பிற உயிரினங்கள், பல்வேறு இனங்களைச் சேர்ந்த அனைத்து ராட்சசர்கள், பெரும் எண்ணிக்கையிலான பிசாசங்கள் ஆகியன, பிணங்களின் தோலைக் கிழித்து, அவற்றின் கொழுப்பையும், இரத்தத்தையும், மஜ்ஜையையும் குடித்து, அவற்றின் இறைச்சியை உண்ணத் தொடங்கின. மேலும் அவை, அழுகிய பிணங்களின் சுரப்புகளை உறிஞ்சத் தொடங்கும் அதே வேளையில், ஆயிரக்கணக்கான சடலங்களை இழுத்துச் சென்ற ராட்சசர்கள் கொடூரமாகச் சிரித்துக் கொண்டே உரக்கப் பாடினர்.

முதன்மையான தேர்வீரர்களால், வைதரணீயைப் போலக் கடப்பதற்குக் கடினமான பயங்கர நதியொன்று அங்கே உண்டாக்கப்பட்டது. அதன் நீர் (விழுந்த உயிரினங்களின்) குருதியால் அமைந்தது. தேர்கள் அதன் தெப்பங்களாகின, யானைகள் அதன் பாறைகளாகின, மனிதர்களின் தலைகள் அதன் சிறு கற்களாகின. (கொல்லப்பட்ட குதிரைகள், யானைகள், மனிதர்கள் ஆகியோரின்) சதைகள் அதன் சேறானது. பல்வேறு விதங்களிலான விலையுயர்ந்த ஆயுதங்கள் (அந்த ஆற்றில் மிதக்கவோ, அதன் கரைகளில் கிடக்கவோ செய்யும்) மலர் மாலைகளாகின. இறந்தோரின் உலங்கங்களுக்கு உயிரினங்களை இழுத்துச் செல்லும் அந்தப் பயங்கர ஆறானது போர்க்களத்தின் நடுவில் மூர்க்கமாகப் பாய்ந்து கொண்டிருந்தது.

வெறுப்பூட்டும் பயங்கரத் தோற்றங்களைக் கொண்ட பெரும் எண்ணிக்கையிலான பிசாசங்கள், அந்த ஓடையில் குடித்தும், உண்டும் மகிழ்ந்தன. அதே உணவை உண்ட நாய்கள், நரிகள் மற்றும் ஊனுண்ணும் பறவைகள் ஆகியன, {மற்ற} உயிரினங்களின் அச்சத்தைத் தூண்டும் வகையில் தங்கள் பெரும் களியாட்டத்தை அங்கே நிகழ்த்தின.

மனிதச் சடலங்கள் எழுந்து நடனமாடத் தொடங்கும் இடமும், யமனுடைய ஆட்சிப்பகுதியைப் பெருகச் செய்வதும், இப்படிப் பயங்கரமாகக் காட்சயளிப்பதுமான அந்தப் போர்க்களத்தை வெறித்துப் பார்த்தப் போர்வீரர்கள், விலையுயர்ந்த தன் ஆபரணங்கள் சிதறிக்கிடக்க, தெளிந்த நெய்யால் மேலும் நனைக்கப்படாத பீடத்தில் உள்ள வேள்வி நெருப்பைப் போலக் களத்தில் கிடப்பவனும், சக்ரனுக்கு ஒப்பானவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான அபிமன்யுவைக் கண்டவாறே அதைவிட்டு {போர்க்களத்தைவிட்டு} மெதுவாக வெளியேறினர்” {என்றான் சஞ்சயன்}.

பதிமூன்றாம் நாள் போர் முற்றும்


ஆங்கிலத்தில் | In English