The lamentation of Yudhishthira! | Drona-Parva-Section-049 | Mahabharata In Tamil
(அபிமன்யுவத பர்வம் – 19)
பதிவின் சுருக்கம் : அபிமன்யு இறந்ததும் போர்க்களத்தை விட்டு அகன்ற வீரர்கள் யுதிஷ்டிரனைச் சூழ்ந்து அமர்தல்; யுதிஷ்டிரனின் புலம்பல்…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "தேர்ப்படைகளின் தலைவனும், சுபத்திரையின் மகனுமான அந்த வீரன் {அபிமன்யு} கொல்லப்பட்ட பிறகு, பாண்டவ வீரர்கள் தங்கள் தேர்களை விட்டு, தங்கள் கவசங்களைக் களைந்து, தங்கள் விற்களை ஒருபுறமாக வீசிவிட்டு மன்னன் யுதிஷ்டிரனைச் சூழ்ந்து அமர்ந்தனர். (இறந்து போன) அபிமன்யுவின் மீது தங்கள் இதயங்களை நிலைக்கச் செய்து, தங்கள் சோகத்தையே அவர்கள் சிந்தித்துக் கொண்டிருந்தனர்.
உண்மையில், தன் தம்பியின் {அர்ஜுனனின்} வீரமகனான வலிமைமிக்கத் தேர்வீரன் அபிமன்யுவின் வீழ்ச்சியால் சோகத்தால் நிரம்பிய மன்னன் யுதிஷ்டிரன், (இப்படிப்பட்ட) புலம்பல்களிலேயே ஈடுபட்டான்: “ஐயோ, என் நலனை அடைய விரும்பிய அபிமன்யு, படை வீரர்களால் நிறைந்ததும், துரோணரால் அமைக்கப்பட்டதுமான அந்த வியூகத்தைப் பிளந்தானே. பெரும் துணிவுள்ளவர்களும், ஆயுதங்களில் சாதித்தவர்களும், போரில் எளிதாக வெல்லப்பட முடியாதவர்களும், போரில் அவனுடன் {அபிமன்யுவுடன்} மோதியவர்களுமான வலிமைமிக்க வில்லாளிகள் முறியடிக்கப்பட்டு, புறமுதுகிடச் செய்யப்பட்டனரே. கருணையற்ற நம் எதிரியான துச்சானனுடன் போரில் மோதிய அவன் {அபிமன்யு}, அந்த வீரனின் {துச்சாசனனின்} புலன்களை இழக்கச் செய்து {மயக்கமடையச் செய்து}, களத்தில் இருந்தே அவனை ஓடச் செய்தானே.
ஐயோ, அர்ஜுனனின் வீரமகன் {அபிமன்யு}, துரோணப் படை எனும் பரந்த கடலைக் கடந்த பிறகு, துச்சாசனன் மகனுடன் மோதி யமனின் வசிப்பிடத்திற்கு விருந்தினனாகச் சென்றுவிட்டானே. அபிமன்யு கொல்லப்பட்ட பிறகு, அர்ஜுனன் மீதும், தனக்குப் பிடித்த மகனை இழந்த அருளப்பட்ட சுபத்திரை மீதும் நான் எவ்வாறு என் கண்களைச் செலுத்துவேன். பொருளற்ற {முட்டாள் தனமான}, ஒத்திசைவற்ற, முறையற்ற எந்த வார்த்தைகளை நாம் இன்று ரிஷிகேசனிடமும் {கிருஷ்ணனிடமும்}, தனஞ்சயனிடமும் {அர்ஜுனனிடமும்} சொல்லப் போகிறோம்? நன்மையை அடைய விரும்பியும், வெற்றியை எதிர்பார்த்தும் சுபத்திரைக்கும், கேசவனுக்கும், அர்ஜுனனுக்கும் நானே இந்தப் பெரும் தீங்கைச் செய்துவிட்டேனே.
பேராசை கொண்ட ஒருவன், தனது தவறுகளை ஒருபோதும் காணமாட்டான். தேனைச் சேகரிப்போர் தங்களுக்கு முன் இருக்கும் வீழ்ச்சியை {பெரும் பள்ளத்தைக்} காண்பதில்லை; நானும் அவர்களைப் போலவே இருக்கிறேன். எவன் பாலகனோ, எவனுக்கு (நல்ல) உணவு, வாகனங்கள், படுக்கைகள், ஆபரணங்கள் கொடுக்கப்பட்டிருக்க வேண்டுமோ, அவனையே நம் படையின் முன்னிலையில் நிறுத்தினோமே. இளம் வயதுடையவனும், போரில் தேர்ச்சி அடையாதவனுமான ஒரு பாலகனுக்குப் பெரும் ஆபத்தான இது போன்ற ஒரு சூழலில் நன்மை எப்படி விளையும்? தன் தலைவனின் ஏவலைச் செய்ய மறுக்காமல், திறமையில் {மனவுறுதியில்} செருக்குடைய ஒரு குதிரையைப் போல, அவன் {அபிமன்யு} தன்னையே தியாகம் செய்து கொண்டானே.
ஐயோ, கோபத்தால் நிறைந்திருக்கும் அர்ஜுனனின் சோகப் பார்வையில் வெடித்து, நாமும் இன்று வெறுந்தரையில் நம்மைக் கிடத்திக் கொள்ளப் போகிறோம். பரந்தமனம், நுண்ணறிவு, பணிவு, மன்னிக்கும் தன்மை {பொறுமை}, அழகு, வலிமை, நன்கு வளர்க்கப்பட்ட அழகிய அங்கங்கள், உயர்ந்தோரிடம் மரியாதை, வீரம், அன்பு, உண்மையில் அர்ப்பணிப்பு, மகத்தான சாதனைகள் ஆகியவற்றைக் கொண்ட தனஞ்சயனின் {அர்ஜுனனின்} அருஞ்செயல்களுக்காகத் தேவர்களே கூட அவனைப் புகழ்கின்றனர். அந்த வீரன் {அர்ஜுனன்}, இந்திரனின் எதிரிகளும், ஹிரண்யபுரத்தைத் தங்கள் வசிப்பிடமாகக் கொண்டவர்களுமான நிவாதகவசர்களையும், காலகேயர்களையும் கொன்றான். கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அவன் {அர்ஜுனன்}, பௌலோமர்களையும் அவர்களைப் பின்தொடர்ந்து வந்தோரையும் கொன்றான். பெரும் வலிமையைக் கொண்ட அவன் {அர்ஜுனன்}, புகலிடம் கேட்பவர்களான தீராச் சினமுடைய எதிரிகளுக்கும் புகலிடத்தை அளிப்பவன் ஆவான் [1]. ஐயோ, அப்படிப்பட்ட ஒருவனின் மகனை {அபிமன்யுவை} இன்று நம்மால் ஆபத்தில் இருந்து காக்க முடியவில்லையே.
[1] வேறொரு பதிப்பில் இவ்வரி, “அபயத்தை விரும்பும் எதிரிக்கும் அபயத்தைக் கொடுப்பவன்” என்று இருக்கிறது.
தார்தராஷ்டிரர்கள் பெரும் பலத்தைக் கொண்டவர்களாக இருப்பினும் ஒரு பெரும் அச்சம் அவர்களை நிறைக்கிறது. தன் மகனின் {அபிமன்யுவின்} கொலையால் சினமூளும் பார்த்தன் {அர்ஜுனன்}, இந்தக் கௌரவர்களை நிர்மூலமாக்கப் போகிறான். தன் சொந்த குலம் மற்றும் தன் ஆதரவாளர்களை அழிப்பவனும், தீய ஆலோசகர்கள் மற்றும் தீய மனம் கொண்டவனுமான துரியோதனன், கௌரவப்படை நிர்மூலமாக்கப்படுவதைக் கண்டு கவலையால் தன் உயிரை விடப் போகிறான் என்பது தெளிவாகத் தெரிகிறது.
ஒப்பற்ற சக்தி மற்றும் ஆற்றலைக் கொண்டவனும், இந்திரனின் மகனுக்கு மகனுமான இவன் {அபிமன்யு} போர்க்களத்தில் கிடப்பதைக் காணும் எனக்கு, வெற்றியோ, அரசுரிமையோ, சாகாத்தன்மையோ, தேவர்களுடன் வசிப்பதோ கூடச் சிறு மகிழ்ச்சியையும் தராது” என்றான் {யுதிஷ்டிரன்}” {என்றான் சஞ்சயன்}.
ஆங்கிலத்தில் | In English |