Vyasa came to console Yudhishthira! | Drona-Parva-Section-050 | Mahabharata In Tamil
(அபிமன்யுவத பர்வம் – 20)
பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனிடம் வந்த வியாசர்; அபிமன்யுவைக் குறித்துச் சொல்லிப் புலம்பி, மரணத்தைக் குறித்த தன் சந்தேகத்தை வியாசரிடம் கேட்ட யுதிஷ்டிரன்; நாரதருக்கும் அகம்பனனுக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொல்லத் தொடங்கிய வியாசர்; மகனை இழந்த மன்னன் அகம்பனன்; அகம்பனனின் துயர் நீக்க வந்த நாரதர்; மரணத்தைக் குறித்து அகம்பனனுக்கு விளக்குவதற்காகப் பிரம்மன் மற்றும் சிவன் குறித்த நிகழ்வொன்றை நாரதர் சொல்ல ஆரம்பித்தது...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "குந்தியின் மகனான யுதிஷ்டிரன், இத்தகு புலம்பல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, பெரும் முனிவரான கிருஷ்ண துவைபாயனர் {வியாசர்} அவனிடம் வந்தார். முறையாக வணங்கி அவரை அமரச் செய்த யுதிஷ்டிரன், தன் தம்பி மகனின் {அபிமன்யுவின்} மரணத்தால் சோகத்தில் பீடிக்கப்பட்டு, “ஐயோ, வலிமைமிக்க வில்லாளிகள் பலருடன் போராடிய சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, அநீதியில் {மறத்தில்} பற்றுடைய பெரும் தேர்வீரர்கள் பலரால் சூழப்பட்டுக் களத்திலே கொல்லப்பட்டானே. பகைவீரர்களைக் கொல்பவனான அந்தச் சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, வயதால் குழந்தையாகவும் {பாலகனாகவும்}, குழந்தைத்தனமான புரிதல் கொண்டவனாகவுமே இருந்தான். வெறிகொண்ட முரண்களுக்கு {எதிரிகளுக்கு} எதிராக அவன் போரில் ஈடுபட்டான்.
போரில் எங்களுக்கு ஒரு பாதையைத் திறக்குமாறு {துரோணரின் வியூகத்தைப் பிளக்குமாறு} நானே அவனைக் கேட்டுக் கொண்டேன். பகைவரின் படையினுள் அவன் ஊடுருவினான். ஆனால், சிந்துக்களின் ஆட்சியாளனால் {ஜெயத்ரதனால்} தடுக்கப்பட்ட எங்களால் அவனை {அபிமன்யுவைப்} பின்தொடர்ந்து செல்ல முடியவில்லை. ஐயோ, போரைத் தங்கள் தொழிலாகக் கொண்டோர், தங்களுக்கு இணையான எதிராளிகளுடனேயே எப்போதும் போரிடுவர். எனினும், பகைவர்கள் அபிமன்யுவுடன் மோதிய போரோ, மிகவும் சமமற்ற ஒன்றாக இருந்தது. அதுவே என்னைப் பெரிதும் சோகத்தில் ஆழ்த்தி, என்னிடம் கண்ணீரை வரவழைக்கிறது. இதைச் சிந்திக்கும் நான், என் மன அமைதியை மீட்பதில் தோற்கிறேன்” என்றான் {யுதிஷ்டிரன்}.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “சிறப்புமிக்க வியாசர், துன்பத்தை ஏற்று, இருப்பை இழந்து இத்தகு புலம்பல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த யுதிஷ்டிரனிடம், இவ்வார்த்தைச் சொன்னார். வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! யுதிஷ்டிரா, ஓ! பெரும் விவேகியே, அறிவின் கிளைகள் அனைத்திலும் தேர்ச்சியுடையவனே, உன்னைப் போன்றோர், பேரிடர்களால் மலைப்பதில்லை. இந்தத் துணிவுமிக்க இளைஞன் {அபிமன்யு}, எண்ணற்ற எதிரிகளைக் கொன்றுவிட்டுச் சொர்க்கத்திற்கு உயர்ந்திருக்கிறான். உண்மையில், அந்த மனிதர்களில் சிறந்தவன் {அபிமன்யு}, (குழந்தையாகவே இருப்பினும்), வயதால் முதிர்ந்தவனைப் போலவே செயல்பட்டிருக்கிறான். ஓ! யுதிஷ்டிரா, இவ்விதியானது மீறப்பட முடியாததாகும். ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, காலனானவன், தேவர்கள், தானவர்கள், கந்தர்வர்கள் ஆகியோர் அனைவரையும் (எந்த விதிவிலக்குமில்லாமல்) எடுத்துக் கொள்கிறான்” என்றார் {வியாசர்}.
அதற்கு யுதிஷ்டிரன் {வியாசரிடம்}, “ஐயோ, உணர்வுகளை இழந்து, தங்கள் படைகளுக்கு மத்தியில் கொல்லப்பட்டு வெற்றுப் பூமியில் கிடக்கும் இந்தப் பூமியின் தலைவர்கள் பெரும் வலிமையைக் கொண்டிருந்தனரே. (இவர்களின் வர்க்கத்தைச் சேர்ந்த {க்ஷத்திரியர்கள்}) பிறரும் பத்தாயிரம் யானைகளின் பலத்திற்கு இணையான பலத்தைக் கொண்டிருந்தனரே. மேலும் பிறரோ, காற்றின் வேகத்தையும் பலத்தையும் கொண்டிருந்தனரே. அவர் அனைவரும் தங்கள் சொந்த வர்க்கத்தினராலேயே {க்ஷத்திரியர்களாலேயே} கொல்லப்பட்டுப் போரில் அழிந்தனர். (தங்கள் சொந்த வர்க்கத்தைத் தவிர) இவர்களைப் போரில் கொல்லும் வேறு எந்த மனிதனையும் நான் காணவில்லை. பெரும் ஆற்றலைக் கொண்ட இவர்கள் பெரும் சக்தியையும் பெரும் வலிமையையும் கொண்டிருந்தனர்.
ஐயோ, தாங்கள் வெல்வோம் என்று தங்கள் இதயங்களில் பொதிந்த உறுதியான நம்பிக்கையுடன் தினமும் போருக்கு வந்தவர்களான இவர்கள், ஐயோ பெரும் விவேகிகளாக இருந்திருப்பினும், (ஆயுதங்களால்) தாக்கப்பட்டு உயிரை இழந்து களத்தில் கிடக்கின்றனரே. பயங்கர ஆற்றலைக் கொண்ட இந்தப் பூமியின் தலைவர்களில் கிட்டத்தட்ட அனைவரும் இறந்துவிட்டதால், மரணம் என்ற வார்த்தையின் முக்கியத்துவம் இன்று புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கிறது. செருக்கிழந்து எதிரிகளுக்கு அடிபணிந்த இந்த வீரர்கள் இப்போது அசைவற்று கிடக்கின்றனர். பல இளவரசர்கள், கோபத்தால் நிறைந்து, (தங்கள் எதிரிகளின் கோபம் என்ற) நெருப்புக்கு முன்பு பலியாகினர்.
’மரணம் {மிருத்யு} எங்கே இருக்கிறது?’ என்ற பெரும் ஐயம் என்னை ஆட்கொள்கிறது. மரணம் {மிருத்யு} யாருடையது (யாருடைய வாரிசு)? மரணம் என்பது எது? ஏன் மரணம் உயிரினங்களை எடுத்துக் கொள்கிறது? ஓ! பாட்டா, ஓ! தேவனுக்கு ஒப்பானவரே {வியாசரே}, இவை அனைத்தையும் எனக்குச் சொல்வீராக” என்றான் {யுதிஷ்டிரன்}.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “அவரிடம் இப்படிக் கேட்ட குந்தியின் மகனான யுதிஷ்டிரனுக்கு ஆறுதல் அளிப்பதற்காக, அந்தச் சிறப்புமிக்க முனிவர் {வியாசர்}, அவனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னார். வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, “கையிலிருக்கும் இந்தக் காரியம் தொடர்பாக, ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பழங்காலத்தில் நாரதர் அகம்பனனிடம் சொன்ன இந்தப் புராதனக் கதையே மேற்கோளாகச் சுட்டப்படுகிறது.
மன்னன் அகம்பனன் [1] இவ்வுலகில் இருந்த போது, ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, தன் மகனின் மரணத்தால் தாங்கமுடியாத சோகத்தில் பெரிதும் பீடிக்கப்பட்டதை நான் அறிந்திருக்கிறேன். மரணத்தின் தோற்றம் குறித்த இந்த அற்புதக் கதையை நான் இப்போது சொல்லப் போகிறேன். ஓ! ஐயா, இந்தப் புராதன வரலாற்றை நான் உரைக்கையில் நீ கேட்பாயாக. இவ்வரலாறானது உண்மையில் அற்புதமானதாகும். இது வாழ்வின் காலத்தை அதிகரிக்கிறது, சோகத்தைக் கொல்கிறது, உடல் நலத்துக்கும் {ஆரோக்கியத்திற்கும்} உகந்ததாக இருக்கிறது. புனிதமான இது, பெரும் எண்ணிக்கையிலான எதிரிகளை {பாவங்களை} அழித்து, மங்கலமான பொருட்கள் அனைத்திலும் மங்கலமானதாக இருக்கிறது. உண்மையில், இந்த வரலாறும் வேதங்களைப் படிப்பது போன்றதே ஆகும். ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, நீண்ட வாழ்நாள் கொண்ட பிள்ளைகளையும், தங்கள் நன்மையையும் விரும்பும் முதன்மையான மன்னர்களால், காலையில் தினந்தோறும் இது {இவ்வரலாறு} கேட்கப்பட வேண்டும்.
[1] இராமாயணத்தில் வரும் அகம்பனன் என்ற அசுரனும் இந்த மன்னனும் வெவ்வேறானவர்கள் .
ஓ! ஐயா {யுதிஷ்டிரா}, பழங்காலத்தில், அகம்பனன் என்ற பெயர் கொண்ட மன்னன் ஒருவன் இருந்தான். ஒருமுறை, போர்க்களத்தில், தன் எதிரிகளால் சூழப்பட்ட அவன் {அகம்பனன்}, கிட்டத்தட்ட அவர்களால் அடக்கப்பட்டான். அவனுக்கு, ஹரி என்று அழைக்கப்பட்ட ஒரு மகன் இருந்தான். வலிமையில் நாராயணனுக்கே இணையான பின்னவன் {ஹரி}, மிக அழகானவனாகவும், ஆயுதங்களில் சாதித்தவனாகவும், பெரும் நுண்ணறிவைக் கொடையாகக் கொண்டவனாகவும், வலிமை கொண்டவனாகவும், போரில் சக்ரனுக்கு {இந்திரனுக்கு} இணையானவனாகவும் இருந்தான் [2].
[2] வேறொரு பதிப்பில் இதற்கு மேலும் இருக்கிறது, “மிகுந்த காந்தியுள்ள அந்த ஹரி, போரில் அந்த நிலைமையை அடைந்திருக்கும் தன் தந்தையைக் கண்டு, மரணத்தைக் குறித்துச் சிந்தியாமல் எதிரிகளுக்கு மத்தியில் நுழைந்தான்” என்று இருக்கிறது. அந்தப் பதிப்பில் இன்னும் அதிமாகவே இருக்கிறது. அவசியமான ஒரு வரியை மட்டுமே இங்கே குறிப்பிட்டிருக்கிறேன்.
போர்க்களத்தில் எண்ணற்ற எதிரிகளால் சூழப்பட்ட அவன் {ஹரி}, அவ்வீரர்கள் மீதும், தன்னைச் சூழ்ந்து கொண்ட யானைகளின் மீதும் ஆயிரக்கணக்கான கணைகளை ஏவினான். போரில் கடினமான பல சாதனைகளை அடைந்த அந்த எதிரிகளைக் கொல்பவன் {ஹரி}, ஓ! யுதிஷ்டிரா, படைக்கு மத்தியிலேயே இறுதியில் கொல்லப்பட்டான்.
மன்னன் அகம்பனன், தன் மகனுக்கான ஈமக்கடன்களைச் செய்து தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டான் [3]. எனினும், தன் மகனுக்காகப் பகலும் இரவும் வருந்திய அந்த மன்னன் {அகம்பனன்}, தன் மன மகிழ்ச்சியை மீண்டும் அடைவதில் தோல்வியுற்றான். தன் மகனின் மரணத்தால் அவன் அடைந்திருக்கும் துயரம் குறித்துத் தெரிந்து கொண்ட தெய்வீக முனிவர் நாரதர் அவனிடம் {அகம்பனனிடம்} வந்தார். தெய்வீக முனிவரைக் கண்ட அந்த அருளப்பட்ட மன்னன் {அகம்பனன்}, எதிரிகளிடம் தான் அடைந்த தோல்வியையும், தன் மகனின் கொலையையும், தனக்கு நேர்ந்த அனைத்தையும் பின்னவருக்கு {நாரதருக்குச்} சொன்னான்.
[3] “துக்க நாட்களின் போது ஒரு மனிதன் சுத்தமற்றவனாகக் கருதப்படுகிறான். எனவே, அவனால் சாதாரண வழிபாடுகளையும், பிற அறச்சடங்குகளையும் செய்ய முடியாது. ஈமச்சடங்குகளைச் செய்து முடித்ததும் அவன் சுத்தமடைகிறான்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
மன்னன் {அகம்பனன் நாரதரிடம்}, “என் மகன் பெரும் சக்தி கொண்டவனாகவும், காந்தியில் இந்திரனுக்கோ, விஷ்ணுவுக்கோ இணையானவனாகவும் இருந்தான். வலிமைமிக்க என் மகன், எண்ணற்ற எதிரிகளை எதிர்த்துக் களத்தில் தன் ஆற்றலை வெளிப்படுத்திய பிறகு இறுதியில் கொல்லப்பட்டான். ஓ! சிறப்புமிக்கவரே, இந்த மரணம் {மிருத்யு} என்பது யார்/எது? அதன் சக்தி, பலம் மற்றும் ஆற்றலின் அளவுதான் என்ன? ஓ! புத்திசாலிகளில் முதன்மையானவரே {நாரதரே}, இது குறித்த அனைத்தையும் நான் உண்மையாகக் கேட்க விரும்புகிறேன்” என்றான் {அகம்பனன்}.
அவனது இவ்வார்த்தைகளைக் கேட்டவரும், வரங்கொடுக்கும் தேவருமான அந்த நாரதர், மகனின் மரணத்தால் உண்டாகும் துயரை அழிப்பதற்கான பின்வரும் விரிவான வரலாற்றை உரைத்தார்.
நாரதர் {அகம்பனனிடம்} சொன்னார், “ஓ! வலிமைமிக்க மன்னா, ஓ! ஏகாதிபதி {அகம்பனா}, என்னால் கேட்கப்பட்டதைப் போலவே சரியாக {நான் உரைக்கப்போகும்} இந்த நீண்ட வரலாற்றைக் கேட்பாயாக. தொடக்கத்தில் பாட்டனான பிரம்மன் அனைத்து உயிர்களையும் படைத்தான். வலிய சக்தி படைத்த அவன் {பிரம்மன்}, படைப்புகளானவை அழிவின் எந்தக் குறியீடுகளையும் கொண்டிருக்கவில்லை என்பதைக் கண்டான். எனவே, ஓ! மன்னா {அகம்பனா}, அண்டத்தின் அழிவைக் குறித்துப் படைப்பாளன் {பிரம்மன்} சிந்திக்கத் தொடங்கினான். ஓ! ஏகாதிபதி {அகம்பனா}, அக்காரியம் குறித்துச் சிந்திந்த படைப்பாளன் {பிரம்மன்}, அழிவுக்கான எந்த வழியையும் கண்டுபிடிக்கத் தவறினான். அப்போது அவன் கோபமடைந்தான். அந்தக் கோபத்தின் விளைவாக வானத்தில் இருந்து ஒரு நெருப்பு எழுந்தது. அந்த நெருப்பு, அண்டத்தில் உள்ள அனைத்தையும் எரிப்பதற்காக அனைத்துத் திசைகளிலும் பரவியது. பிறகு, சொர்க்கம், வானம், பூமி ஆகிய அனைத்தும் நெருப்பால் நிறைந்தன. இப்படியே, படைப்பாளன் {பிரம்மன்}, அசைவன மற்றும் அசையான ஆகியவற்றைக் கொண்ட இந்த அண்டம் முழுமையையும் எரிக்கத் தொடங்கினான். அதன்காரணமாக, அசைவன, அசையாதன ஆகிய உயிரினங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன.
உண்மையில், வலிமைமிக்க அந்தப் பிரம்மன், தன் கோபத்தின் பலத்தால் அனைத்தையும் அச்சுறுத்தும்வகையில் இவை அனைத்தையும் செய்தான். பிறகு, தலையில் சடாமுடி கொண்டவனும், இரவு உலாவிகள் அனைவரின் தலைவனும், ஸ்தாணு அல்லது சிவன் என்றும் அழைக்கப்பட்டவனுமான ஹரன், தேவர்களுக்குத் தலைவனான தெய்வீகப் பிரம்மனை வேண்டினான். அனைத்து உயிர்களுக்கும் நன்மை செய்யும் விருப்பத்தால் (பிரம்மனின் காலில்) அந்த ஸ்தாணு விழுந்த போது [3], துறவிகளில் சிறந்தவர்களின் உயர்ந்த தேவனான அவன் {பிரம்மன்}, சுடர்மிக்கக் காந்தியுடன், “ஓ! விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறத் தகுந்தவனே {ஸ்தாணுவே}, உன் எந்த விருப்பத்தை நாம் சாதிக்க வேண்டும்? ஓ! எம் விருப்பத்தில் பிறந்தவனே, உனக்கு ஏற்புடைய அனைத்தையும் நாம் செய்வோம். ஓ! ஸ்தாணுவே, உன் விருப்பமென்ன? எமக்குச் சொல்வாயாக” என்றான் {பிரம்மன்}.
[3] வேறொரு பதிப்பில், “பிறகு, சடை முடியுள்ளவரும், ஸ்திரரும், பூதகணங்களுக்குப் பதியும், ஹரருமான அந்த ருத்திரர், சத்தியலோகவாசியான பிரம்மதேவரைச் சரணமடைந்தார். பிரஜைகளுடைய நன்மையை விரும்பி அந்த ஸ்தாணுவானவர் வந்திருக்கையில், தேவர்களுள் சிறந்தவரும், ரிஷிகளுள் உத்தமருமான அந்தப் பிரம்ம தேவர், ஜ்வலிக்கின்றவர் போலிருந்து கொண்டு, “குழந்தாய்! நீ காமத்தினால் உண்டானவனாயிருக்கிறாய். விரும்பிவற்றை அடைவதற்குத் தகுந்தவனே! நீ விரும்பிய காரியம் யாது? ஸ்தாணுவே! விரும்பியதைச் சொல். உனக்குப் பிரியமான எல்லாவற்றையும் யான் செய்வேன்” என்று கூறினார்” என்று இருக்கிறது.
ஆங்கிலத்தில் | In English |