The birth of Goddess Mrithyu! | Drona-Parva-Section-051 | Mahabharata In Tamil
(அபிமன்யுவத பர்வம் – 21)
பதிவின் சுருக்கம் : கோபத்தைத் தணிக்கும்படி பிரம்மனிடம் கோரிய ஸ்தாணு; பிரம்மனின் புலன்வாசல்களில் இருந்து வெளிப்பட்ட மரணதேவி; தென்திசை நோக்கிச் சென்ற மரணதேவி அழுதது; அவளது கண்ணீரைக் கைகளில் ஏந்திய பிரம்மன்...
ஸ்தாணு {சிவன் பிரம்மனிடம்}, "ஓ! தலைவா {பிரம்மனே}, பல்வேறு உயிரினங்களை நீ பெரும் கவனத்துடன் படைத்திருக்கிறாய். உண்மையில் பல்வேறு விதங்களிலான உயிரினங்களும் உன்னாலேயே படைக்கப்பட்டு, உன்னாலேயே வளர்க்கப்பட்டு வருகின்றன. அந்த உயிரினங்களே இப்போது உன் நெருப்பின் மூலம் எரிக்கப்படுகின்றன. இதைக் காணும் நான் இரக்கத்தால் {கருணையால்} நிறைகிறேன். ஓ! ஒப்பற்ற தலைவா {பிரம்மனே}, அருள் பாலிப்பாயாக" என்றான் {ஸ்தாணு-சிவன்}.
அதற்குப் பிரம்மன் {சிவனிடம்}, "அண்டத்தை அழிக்க வேண்டும் என்ற எந்த விருப்பமும் எனக்கில்லை, நான் பூமியின் நன்மையையே விரும்பினேன், அதற்காகவே இந்தக் கோபம் என்னை ஆட்கொண்டது. உயிரினங்களின் பாரத்தால் பீடிக்கப்பட்ட பூமாதேவி, தன்னில் இருக்கும் உயிரினங்களை அழிக்கும்படி என்னை எப்போதும் தூண்டிவந்தாள். எனினும், அவளால் தூண்டப்பட்ட என்னால் எல்லையற்ற படைப்பை அழிப்பதற்கான எந்த வழிகளையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனாலே இந்தக் கோபம் என்னை ஆட்கொண்டது" என்றான் {பிரம்மன்}.
ருத்ரன் {சிவன் பிரம்மனிடம்}, "அருள்பாலிப்பாயாக. ஓ! அண்டத்தின் தலைவா {பிரம்மனே}, உயிரினங்களின் அழிவுக்காகக் கோபத்தை வளர்க்காதே. உயிர்களில் அசைவன, அசையாதன எதுவும் இனியும் அழிய வேண்டாம். ஓ! ஒப்பற்றவனே, வரப்போவது {எதிர்காலம்}, வந்தது {கடந்த காலம்}, இருப்பது {நிகழ்காலம்} ஆகிய மூன்று பகுதிகளைக் கொண்ட இந்த அண்டம் உன் கருணையால் நீடிக்கட்டும். ஓ! தலைவா {பிரம்மனே}, கோபத்தால் நீ சுடர்விட்டெரிகிறாய். அந்த உனது கோபத்தில் இருந்து நெருப்பு போன்ற ஒரு பொருள் இருப்பில் எழுந்தது {தோன்றியது}. அந்நெருப்பே இப்போது மலைகளையும், மரங்களையும், ஆறுகளையும், அனைத்து வகை மூலிகைகளையும் {தாவரங்களையும்} புற்களையும் எரிக்கிறது. உண்மையில், அந்நெருப்பு, அசைவன, அசையாதன ஆகியவற்றைக் கொண்ட அண்டத்தை நிர்மூலமாக்குகிறது. அண்டத்தின் அசைவன மற்றும் அசையாதன ஆகியவை சாம்பலாகக் குறைக்கப்படுகின்றன. ஓ! ஒப்பற்றவனே அருள்பாலிப்பாயாக. கோபப்படாதே. நான் கேட்கும் வரம் இதுவே.
ஓ! தெய்வீகமானவனே {பிரம்மனே}, உனக்குச் சொந்தமானவையும் படைக்கப்பட்டவையுமான இந்தப் பொருட்கள் அனைத்தும் அழிக்கப்படுகின்றன. எனவே, உன் கோபம் தணியட்டும். அஃது {கோப நெருப்பு} உனக்குள்ளேயே அழிந்து போகட்டும். நன்மை செய்யும் விருப்பத்துடன் உனது கண்களை உன் உயிரினங்களின் மேல் செலுத்துவாயாக. உயிரைக் கொண்ட உயிரினங்கள் அழிந்துவிடாதபடி செயல்படுவாயாக. தங்கள் உற்பத்தி சக்திகள் பலவீனப்பட்டு இந்த உயிரினங்கள் அழிந்து போக வேண்டாம். ஓ! உலகங்களைப் படைத்தவனே {பிரம்மனே} நீயே என்னை அவர்களது பாதுகாவலனாக நியமித்தாய். ஓ! அண்டத்தின் தலைவா {பிரம்மனே}, அசைவன மற்றும் அசையாதன ஆகியவற்றைக் கொண்ட இந்த அண்டம் அழியாதிருக்கட்டும். நீ அருள்பாலிப்பவனாவே இருக்கிறாய், அதற்காகவே நான் இவ்வார்த்தைகளை உன்னிடம் சொல்கிறேன்" என்றான் {ருத்ரன்}.
நாரதர் {அகம்பனனிடம்} தொடர்ந்தார், "(மகாதேவனின்) இவ்வார்த்தைகளைக் கேட்ட தெய்வீகப் பிரம்மன், உயிரினங்களுக்கு நன்மை செய்ய விரும்பி, தன்னுள் எழுந்த கோபத்தைத் தனக்குள்ளேயே நிறுத்தினான். அந்த நெருப்பை அணைத்தவனும், உலகத்திற்கு நன்மை செய்யும் தெய்வீகமானவனும், பெரும் தலைவனுமான அவன் {பிரம்மன்}, உற்பத்திக்கும், விடுதலைக்கும் {முக்திக்கும்} உண்டான கடமைகளை அறிவித்தான் {சிருஷ்டிக்கும், மோக்ஷத்திற்கும் காரணமான கர்மாவை உண்டாக்கினான்}.
அந்த உயர்ந்த தேவன் {பிரம்மன்}, தன் கோபத்தினால் உண்டான நெருப்பை அணைத்த போது, அவனது பல்வேறு புலன்களின் கதவுகளில் இருந்து, கருப்பு, சிவப்பு, பழுப்பு ஆகிய நிறங்களைக் கொண்டவளாகவும், நாக்கு, முகம் மற்றும் கண்கள் சிவந்தவளாகவும், இரண்டு சிறந்த குண்டலங்களாலும், பல்வேறு பிரகாசமான ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டவளுமாக ஒரு பெண் தோன்றினாள். அவனது {பிரம்மனின்} உடலில் இருந்து வெளிப்பட்ட அவள், அண்டத்தின் தலைவர்களான அவ்விருவரையும் கண்டு சிரித்தபடியே, தென்பகுதியை நோக்கிச் சென்றாள். அப்போது உலகங்களின் படைப்பையும், அழிவையும் கட்டுப்படுத்துபவனான பிரம்மன், அவளை மரணம் {மிருத்யு} என்ற பெயரால் அழைத்தான்.
ஓ! மன்னா {அகம்பனா}, பிரம்மன் அவளிடம் {மிருத்யுவிடம்}, "இந்த என் உயிரினங்களைக் கொல்வாயாக. (அண்டத்தின்) அழிவுக்காக உண்டான என் கோபத்தில் இருந்தே நீ பிறந்திருக்கிறாய். எனவே என் கட்டளையின் பேரில் இதைச் செய்து, முட்டாள்களும், ஞானிகளும் அடங்கிய உயிரினங்கள் அனைத்தையும் கொல்வாயாக. இதைச் செய்வதால் நீ நன்மையை அடைவாய்" என்றான் {பிரம்மன்}.
அவனால் {பிரம்மனால்} இப்படிச் சொல்லப்பட்டதும், மரணம் {மிருத்யு} என்று அழைக்கப்பட்ட அந்தத் தாமரைப் பெண் {மிருத்யு} ஆழமாகச் சிந்தித்து, பிறகு ஆதரவற்றவளாக இனிமையான குரலில் உரக்க அழுதாள். பாட்டன் {பிரம்மன்}, அவள் உதிர்த்த கண்ணீரை உயிரினங்கள் அனைத்தின் நன்மைக்காகத் தன் கைகள் இரண்டால் பிடித்துக் கொண்டு, இந்த வார்த்தைகளால் அவளிடம் மன்றாடத் தொடங்கினான்" {என்றார் நாரதர்}.
ஆங்கிலத்தில் | In English |