Wednesday, May 25, 2016

பிரம்மன் மரணதேவி உரையாடல்! - துரோண பர்வம் பகுதி – 052

The colloquy between Brahma and Mrityu! | Drona-Parva-Section-052 | Mahabharata In Tamil

(அபிமன்யுவத பர்வம் – 22)

பதிவின் சுருக்கம் : பிரம்மனிடம் உயிர்களைக் கொல்ல முடியாது என்று சொன்ன மரணதேவி; பல கோடி வருடங்களாகக் கடுந்தவம் செய்த மரணதேவி; பாவம் சேராத வரத்தை பிரம்மனிடம் பெற்ற மரணதேவி உயிரினங்களின் உயிரை எடுக்க ஒப்புக் கொண்டது; நாரதர் சொன்ன கதையைக் கேட்டு அகம்பனன் மனம் நிறைந்தது; யுதிஷ்டிரனை அறிவுறுத்திய வியாசர்...

நாரதர் {அகம்பனனிடம்} சொன்னார், "அந்த ஆதரவற்ற பெண் {மிருத்யு}, தன் கவலையைத் தனக்குள்ளேயே வைத்துக் கொண்டு, கொடிபோல அடக்கத்துடன் பணிந்து, படைப்பின் தலைவனிடம் {பிரம்மனிடம்} கூப்பிய கரங்களுடன் பேசினாள். அவள் {மிருத்யு, பிரம்மனிடம்}, “ஓ! பேசுபவர்களில் முதன்மையானவரே, உம்மால் படைக்கப்பட்ட பெண்ணான நான், இந்தச் செயல் குரூரமானது, தீமையானது எனத் தெரிந்திருந்தும் இத்தகு செயலை நான் எவ்வாறு செய்வேன்? அநீதிக்கு {அதர்மத்திற்கு} நான் பெரிதும் அஞ்சுகிறேன். ஓ! தெய்வீகத் தலைவரே {பிரம்மரே}, அருள்பாலிப்பீராக. மகன்கள், நண்பர்கள், சகோதரர்கள், தந்தைமார், கணவன்மார் ஆகியோர் எப்போதும் ஒருவருக்கொருவர் அன்புக்குரியவர்களாக இருக்கின்றனர்; (நான் அவர்களைக் கொன்றால்), இந்த இழப்புகளால் பாதிக்கப்படுவோர் எனக்குத் தீங்கிழைக்க முயல்வர் {தீமையை நினைப்பார்கள்}. அதற்காகவே நான் அஞ்சுகிறேன். துக்கத்தால் பீடிக்கப்பட்ட கண்களில் இருந்து வடியும் கண்ணீரும், அழுது புலம்புவோரும் எனக்கு அச்சத்தையே ஊட்டுகின்றனர். ஓ! தலைவா {பிரம்மரே}, நான் உமது பாதுகாப்பை நாடுகிறேன். ஓ! தெய்வீகமானவரே, ஓ! தேவர்களில் முதன்மையானவரே {பிரம்மரே}, நான் யமனின் வசிப்பிடத்திற்குச் செல்ல மாட்டேன். ஓ! வரங்களை அளிப்பவரே, நான் என் சிரம் தாழ்த்திக் கரங்களைக் கூப்பி உமது கருணையை வேண்டுகிறேன். ஓ! உலகங்களின் பாட்டனே {பிரம்மரே}, இந்த {என்} விருப்பத்தை (சாதிக்கவே} நான் உம்மிடம் வேண்டுகிறேன். ஓ! படைக்கப்பட்ட பொருள்களின் தலைவரே {பிரம்மரே}, உமது அனுமதியுடன் நான் தவத்துறவுகளை மேற்கொள்ள விரும்புகிறேன். ஓ! தெய்வீகமானவரே, ஓ! பெரும் தலைவா {பிரம்மரே}, இந்த வரத்தை எனக்கு அருள்வீராக. உம்மால் அனுமதிக்கப்படும் நான், தேனுகரின் அற்புத ஆசிரமத்திற்குச் செல்வேன். உம்மைத் துதிப்பதில் ஈடுபட்டு, அங்கே நான் கடுந்தவங்களை மேற்கொள்வேன். ஓ! தேவர்களின் தலைவா {பிரம்மரே}, கவலையால் அழும் உயிரினங்களுடைய அன்புக்குரியோரின் உயிர் மூச்சை என்னால் எடுக்க இயலாது. அநீதியில் {அதர்மத்தில்} இருந்து என்னைக் காப்பீராக” என்றாள் {மரணதேவி மிருத்யு}.


பிரம்மன் {மரணதேவி மிருத்யுவிடம்}, “ஓ! மரணமே {மிருத்யுவே}, உயிரினங்களின் அழிவை அடைவதற்காகவே நீ கருதப்பட்டாய் {படைக்கப்பட்டாய்}. எதையும் சிந்திக்காமல் சென்று உயிரினங்கள் அனைத்தையும் கொல்வாயாக. இதுவே செய்யப்பட வேண்டும், இது வேறுவிதமாகாது. என் உத்தரவின் படியே செய்வாயாக. இவ்வுலகத்தில் எவரும் உன்னிடம் எந்தக் குறையும் காணமாட்டார்கள்” என்றான்.

நாரதர் {அகம்பனனிடம்} தொடர்ந்தார், “இப்படிச் சொல்லப்பட்ட அந்தப் பெண் {மிருத்யு}, மிகவும் அச்சமடைந்தவளானாள். பிரம்மனின் முகத்தைப் பார்த்தவாறே அவள் கூப்பிய கரங்களுடன் நின்று கொண்டிருந்தாள். உயிரினங்களுக்கு நன்மை செய்ய விரும்பிய அவள் {மிருத்யு}, அவர்களின் அழிவில் தன் இதயத்தை நிலைநிறுத்தவில்லை. அனைத்து உயிர்களின் தலைவனுக்கும் தலைவனான அந்தத் தெய்வீகப் பிரம்மனும் அமைதியுடனே நீடித்தான். பிறகு அந்தப் பாட்டன் {பிரம்மன்} தன்னிடமே மனநிறைவு கொண்டான். அவன், படைப்புகள் அனைத்தின் மீதும் தன் கண்களைச் செலுத்திப் புன்னகைத்தான். எனவே, உயிரினங்கள் அகால மரணத்தால் பாதிக்கப்படாமல் முன்பு போலவே வாழத் தொடங்கின. வெல்லப்பட முடியாத அந்தச் சிறந்த தலைவன் {பிரம்மன்}, தன் கோபத்தை விட்டதன் பேரில், அந்தக் காரிகை, விவேகமுள்ள அந்தத் தேவனின் முன்னிலையில் இருந்து சென்றாள்.

உயிரினங்களை அழிக்க ஒப்பாமல் பிரம்மனை விட்டகன்றவளும், மரணம் {மிருத்யு} என்று அழைக்கப்பட்டவளுமான அந்தக் காரிகை {மிருத்யு}, தேனுகம் என்று அழைக்கப்பட்ட ஆசிரமத்திற்கு விரைவாகச் சென்றாள். அங்கே சென்ற அவள் {மிருத்யு}, சிறந்த மற்றும் உயர்ந்த தவ நோன்புகளைப் பயின்றாள். அங்கே அவள், உயிரினங்களின் மேல் கொண்ட கருணையாலும், அவற்றுக்கு நன்மை செய்யும் விருப்பத்தாலும், தன் புலன்களுக்குப் பிடித்தமான பொருட்களில் இருந்து அவற்றை முழுதும் விலக்கி, ஆயிரத்து அறுநூறு கோடி {Sixteen Billion = 1,600,00,00,000} வருடங்களும், அதற்கு மேலும் ஐயாயிரம் கோடி {five times ten billions = 5,000,00,00,000} வருடங்களும் ஒற்றைக்காலில் நின்றாள். ஓ! மன்னா {அகம்பனா}, மேலும் அவள், இருபத்தோராயிரம் கோடி {one and twenty times ten billions = 21,000,00,00,000} வருடங்களுக்கு மீண்டும் ஒற்றைக் காலில் {மற்றொரு காலில்} நின்றாள். பிறகு அவள் {மிருத்யு}, நூறு லட்சம் கோடி வருடங்கள் {ten times ten thousand billions = 100,00,000,00,00,000} (பூமியின்) உயிரினங்களோடு உலவிக் கொண்டிருந்தாள். அடுத்ததாக, குளிர்ந்த தூய நீரைக் கொண்ட நந்தையை {நந்தை நதியை} அடைந்து, அந்நீரிலேயே எட்டாயிரம் {8,000} வருடங்களைக் கடத்தினாள். நந்தையில் கடும் நோன்புகளை நோற்ற அவள், தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டாள் [1].

[1] வேறொரு பதிப்பில் இந்தப் பத்தி, “அப்போது அந்த மிருத்யுதேவி பிராணி வதத்தை ஏற்றுக் கொள்ளாமல் விரைந்து விலகித் தேனுகாஸ்ரமம் சென்று, அந்த ஆசிரமத்தில் மிக்க உக்கிரமும், உத்தமுமான விரதத்தை அனுஷ்டித்துக் கொண்டு கருணையினாலே பிரஜைகளுக்கு நன்மையை விரும்பி, விரும்பப்படும் புலன்களில் இருந்து பொறிகளைத் திருப்பி இருப்பத்தொரு பத்ம சங்கியையுள்ள வருஷங்கள் ஒரு காலால் நின்றாள். மறுபடியும் மற்றொரு காலால் இருபத்தொரு பத்மகாலம் நின்றாள். பிறகு, அந்தக் கன்னிகை மிருகங்களோடு பதினாயிரம் பத்மகாலம் வரையில் சஞ்சாரஞ்செய்தாள்; பிறகு, குளிர்ந்ததும், நிர்மலமுமான தீர்த்தமுள்ள பரிசுத்தமான நந்தை என்கிற நதியை அடைந்து அதன் ஜலத்தில் எண்ணாயிரம் வருஷங்களைத் தவத்தினால் கழித்தாள்” என்றிருக்கிறது.

அடுத்ததாக அவள், நோன்புகளை நோற்பதற்காகப் புனிதமான அனைத்திலும் முதன்மையான கௌசிகிக்கு {கௌசிகி நதிக்குச்} சென்றாள். காற்றையும், நீரையும் மட்டுமே கொண்டு வாழ்ந்து, அங்கே தவம் பயின்று, பிறகு, பஞ்சகங்கைக்கும், அடுத்ததாக வேதசகத்திற்கும் சென்ற அந்தத் தூய்மையடைந்த காரிகை {மிருத்யு}, பல்வேறு விதங்களிலான கடுந்தவங்களால் தன் உடலை மெலியச் செய்தாள். அடுத்ததாகக் கங்கைக்கும், அங்கிருந்து பெரும் மேருவுக்கும் சென்ற அவள் {மிருத்யு}, தன் உயிர்மூச்சை நிறுத்தி, கல்லைப் போல அசைவற்றவளாக இருந்தாள். பிறகு, இனிமையானவளும், மங்கலமானவளுமான அந்தப் பெண், (பழங்காலத்தில்) தேவர்கள் தங்கள் வேள்வியைச் செய்த இமயத்தின் உச்சிக்குச் சென்று, நூறு கோடி {a billion = 100,00,00,000} வருடங்களுக்குத் தன் பாதத்தின் கட்டைவிரலில் நின்றிருந்தாள். அதன்பிறகு, புஷ்கரை, கோகர்ணம், நைமிசம், மலையம் ஆகியவற்றுக்குச் சென்ற அவள் {மிருத்யு}, தன் இதயத்துக்கு ஏற்புடைய தவங்களைப் பயின்று தன் உடலை மெலியச் செய்தாள். வேறு எந்தத் தேவனையும் ஏற்காமல், பாட்டனிடம் {பிரம்மனிடம்} உறுதியான அர்ப்பணிப்புடன் இருந்த அவள் {மிருத்யு}, அனைத்து வழிகளிலும் பிரம்மனை நிறைவுகொள்ளச் செய்தே வாழ்ந்தாள்.

பிறகு உலகங்களின் மாறாத படைப்பாளன் {பிரம்மன்}, மனநிறைவு கொண்டு, மகிழ்ச்சியான மெல்லிய இதயத்துடன் அவளிடம் {பிரம்மன் மிருத்யுவிடம்}, “ஓ! மரணமே {மிருத்யு}, இவ்வளவு கடுமையான தவங்களை நீ ஏன் மேற்கொள்கிறாய்?” என்று கேட்டான். இப்படிச்சொல்லப்பட்ட மரணதேவி {மிருத்யு}, தெய்வீகப் பாட்டனிடம் {பிரம்மனிடம்}, “ஓ தலைவா {பிரம்மரே}, உயிரினங்கள் உடல் நலத்துடன் வாழ்கின்றன. அவை ஒன்றுக்கொன்று சொற்களாலும் தீங்கிழைப்பதில்லை. அவற்றை நான் கொல்ல முடியாது. ஓ! தலைவா {பிரம்மரே}, நான் இவ்வரத்தை உம்மிடம் பெற விரும்புகிறேன். நான் பாவத்துக்கு அஞ்சுகிறேன். அதற்காகவே நான் தவத்துறவுகளில் ஈடுபடுகிறேன். ஓ! அருளப்பட்டவரே {பிரம்மரே}, எப்போதும் என் அச்சங்கள் விலகுமாறு செய்யும். துயரத்தில் இருக்கும் பெண்ணான நான், எந்தக் குற்றமும் இல்லாதிருக்கிறேன். நான் உம்மை இரந்து கேட்கிறேன் என்னைப் பாதுகாப்பீராக” என்றாள் {மிருத்யு}.

கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றை அறிந்த தெய்வீகப் பிரம்மன் அவளிடம் {மிருத்யுவிடம்}, “ஓ! மரணமே {மிருத்யுவே}, இந்த உயிரினங்களைக் கொல்வதால் நீ எந்தப் பாவத்தையும் செய்தவள் ஆகமாட்டாய். ஓ! இனியவளே, என் வார்த்தைகள் பொய்க்காது. எனவே, ஓ! மங்கலக்காரிகையே {மிருத்யுவே}, இந்த நால்வகை உயிரினங்களையும் கொல்வாயாக. நிலைத்த அறம் எப்போதும் உனதாகட்டும். லோகபாலனான யமனும், பல்வேறு நோய்களும் உனக்கு உதவி செய்பவர்களாகட்டும். பாவத்தில் இருந்து விடுபட்டு, முற்றிலும் தூய்மையடையும் நீ மகிமை அடையும் வகையில் நானும், தேவர்களனைவரும் உனக்கு வரங்களை அளிப்போம்” என்றான் {பிரம்மன்}.

இப்படிச் சொல்லப்பட்ட அந்த மங்கை {மிருத்யு}, ஓ! ஏகாதிபதி {அகம்பனா}, தன் கரங்களைக் கூப்பியபடி, தனக்கு அருள் வேண்டி, அவனிடம் {பிரம்மனிடம்} தன் சிரம் தாழ்த்தி, “ஓ! தலைவா {பிரம்மரே}, “இது நானில்லாமல் நடைபெறாது என்றால், உமது உத்தரவு என் சிரம் மேல் வைக்கப்படட்டும். எனினும், நான் சொல்வதைக் கேளும். பேராசை, கோபம், வன்மம் {தீய நோக்கம்}, பொறாமை, சண்டை, மூடத்தனம், வெட்கமின்மை ஆகியனவும் மற்றும் இன்னும் பிற கடுமையான உணர்வுகளும், உடல்கொண்ட அனைத்து உயிரினங்களின் உடல்களையும் பிளக்கட்டும்” என்றாள் {மிருத்யு} [2].

[2] வேறொரு பதிப்பில் இந்தப் பத்தி, “இது இவ்விதமாகத் தர்மத்தினால் செய்யத்தக்கதாயிருந்தால் இதிலிருந்து பயமில்லை. உம்முடைய கட்டளையானது என்னுடைய சிரசில் வைக்கப்பட்டது. ஆனாலும், நான் உம்மிடத்தில் சொல்வதைக் கேளும். லோபம், குரோதம், அசூயை, பொறாமை, துரோகம், மோகம், வெட்கமில்லாமை, ஒருவரையொருவர் குரூரமாகச் சொல்லுதல் ஆகிய இவைகள் தனித்தனிவிதமாகிப் பிராணிகளுடைய தேகத்தைப் பேதிக்கட்டும்” என்று இருக்கிறது.

பிரம்மன் {மரணதேவி மிருத்யுவிடம்}, "ஓ! மரணமே {மிருத்யுவே}, நீ சொன்னது போலவே இருக்கும். அதேவேளையில், உயிரினங்களை முறையாகக் கொல்வாயாக. ஓ! மங்கலமானவளே, பாவம் உனதாகாது, அது போலவே உன்னைக் காயப்படுத்த நான் முயல மாட்டேன் {உனக்கு நான் தீங்கிழைக்க மாட்டேன்}. என் கரங்களில் இருக்கும் உனது கண்ணீர்த் துளிகளே, உயிரினங்களில் நோய்களாக எழும். அவை மனிதர்களைக் கொல்லும்; மனிதர்கள் கொல்லப்பட்டால், அந்தப் பாவம் உனதாகாது. எனவே, அஞ்சாதே, உண்மையில், பாவம் உனதாகாது. நீதிக்கு {அறத்திற்கு} அர்ப்பணிப்புடன், உன் கடமையை நோற்று {செய்து}, (உயிரினங்கள்) அனைத்தையும் நீ ஆள்வாயாக. எனவே, நீ இந்த உயிரினங்களின் உயிர்களை எப்போதும் எடுப்பாயாக. ஆசை, கோபம் ஆகிய இரண்டையும் விட்டுவிட்டு, உயிரினங்கள் அனைத்தின் உயிரையும் நீ எடுப்பாயாக. இதுவே உனது நிலைத்த {அழியா} அறமாகட்டும். தீய நடத்தை கொண்டோரை பாவமே கொல்லும். என் கட்டளையின்படி செயல்பட்டு, உன்னை நீ சுத்த படுத்திக் கொள்வாயாக. தீயோரை அவர்களது பாவங்களில் மூழ்கடிப்பவள் நீயாகவே இருப்பாய். எனவே, ஆசை, கோபம் ஆகிய இரண்டையும் விட்டுவிட்டு, உயிர் கொண்ட இந்த உயிரினங்களைக் கொல்வாயாக" என்றான் {பிரம்மன்}.

நாரதர் {அகம்பனனிடம்} தொடர்ந்தார், "அந்தக் காரிகை {மிருத்யு}, தான் மரணம் என்ற பெயரால் (தொடர்ந்து) அழைக்கப்படுவதைக் கண்டு (வேறுவிதமாகச் செயல்பட) அஞ்சினாள். மேலும், பிரம்மனின் சாபத்துக்கும் அஞ்சிய அவள், "சரி" என்று சொன்னாள். வேறுவிதமாகச் செய்ய முடியாத அவள், ஆசை, கோபம் ஆகியவற்றைத் துறந்து, உயிரினங்களின் (அழிவுக்) காலம் வந்த போது, அவற்றின் உயிரை எடுக்கத் தொடங்கினாள். உயிரினங்களுக்கு மட்டுமே மரணம் ஏற்படுகிறது. வாழும் உயிரினங்களிலிருந்து நோய்களும் எழுகின்றன. நோய் என்பது உயிரினங்களின் இயல்பற்ற நிலையே. அதனால் {நோயால்} அவை வலியை உணர்கின்றன {துன்புறுகின்றன}. எனவே, உயிரினங்கள் இறந்த பிறகு, கனியற்ற {பலனற்ற} துயரத்தில் நீ ஈடுபடாதே. உயிரினங்கள் இறந்ததும், புலன்களும் அவற்றோடு (அடுத்த உலகத்திற்குச்) செல்கின்றன. தங்களுக்கு உரிய இயக்கங்களை அடையும் அவை (அந்த உயிரினங்கள் மீண்டும் பிறக்கும் போது) மீண்டும் வருகின்றன. இப்படியே, ஓ! உயிரினங்களில் சிங்கமே {அகம்பனா}, தேவர்கள் உட்பட அனைத்து உயிரினங்களும் அங்கே சென்று மனிதர்களைப் போலவே செயல்படும் [3].

[3] வேறொரு பதிப்பில் இவ்வரிகள், "ஆயுள் முடிவில், எல்லா இந்திரியங்களும் ஜீவன்களோடு சென்று பரலோகத்தில் நிலைபெற்றிருந்து அப்படியே திரும்பி வந்துவிடுகின்றன. இம்மாதிரி எல்லாப் பிராணிகளும் மனிதர்களைப் போலவே அந்தப் பரலோகத்தை அடைந்து அவ்விடத்தில் இந்திராதி தேவர்களாக நிலைபெற்று நிற்கின்றன" என்று இருக்கின்றன. இவ்வரிகளே தெளிவாக இருப்பதாகத் தெரிகிறது.

பயங்கர முழக்கங்களும், பெரும் பலமும் கொண்டு, அச்சுறுத்தும் வகையில் உள்ள காற்றானது, எங்கும் இருக்கிறது, எல்லையில்லா சக்தியைக் கொண்டிருக்கிறது. வாழும் உயிரினங்களின் உடல்களை இந்தக் காற்றே பிளக்கின்றது. இக்காரியத்தில் அது {காற்று}, எந்தச் செயலாற்றலையும் வெளிப்படுத்தாது, அதே போல அதன் {உடலின்} இயக்கங்களையும் நிறுத்திவிடாது; (ஆனால் அஃதை {உடலின் இயக்கத்தை நிறுத்துவதை} இயல்பாகவே செய்யும்). தேவர்கள் அனைவரும் கூட மனிதர்களின் பெயர்களைத் தங்களோடு இணைத்துள்ளனர் [4].

[4] வேறொரு பதிப்பில் இது, "பயங்கரமானதும், பயங்கர நாதமுள்ளதும், மகாபலமுள்ளதும், எங்கும் செல்லுகிறதுமான அந்தப் பிராணவாயுவானது, பிராணிகளுடைய தேகங்களை உடைக்கிறது. உக்ரமானதும், அளவில்லா தேஜசுள்ளதுமான வாயுவானது ஒரு பொழுதும் ஓரிடத்திலாவது நிலையையும், நிலையில்லாமையையும் அடைகிறதில்லை. எல்லாத் தேவர்களும் மர்த்யர்களென்று பெயருள்ளவர்களே" என்று இருக்கிறது.

எனவே, ஓ! மன்னர்களில் சிங்கமே {அகம்பனா}, உன் மகனுக்காக வருந்தாதே! உன் மகன் {ஹரி}, வீரர்களுக்குச் சொந்தமான மகிழ்ச்சிகரமான உலகங்களை அடைந்து, நித்திய மகிழ்ச்சியில் தன் நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறான். சோகங்கள் அனைத்தையும் துறந்த அவன், நீதிமான்களின் {தர்மவான்களின்} தோழமையை அடைந்திருக்கிறான். மரணம் என்பது படைப்பாளனாலேயே உயிரினங்கள் அனைத்திற்கும் விதிக்கப்பட்டிருக்கிறது. அவற்றின் காலம் வந்ததும், உயிரினங்கள் முறையாகக் கொல்லப்படுகின்றன. உயிரினங்களின் மரணம் என்பது அந்த உயிரினங்களிலேயே எழுகிறது. உயிரினங்கள் தங்களைத் தாங்களே கொல்கின்றன. தண்டத்தைத் தரித்து வந்து மரணதேவி யாரையும் கொல்வதில்லை. எனவே, பிரம்மனாலேயை விதிக்கப்பட்டது என்பதால் மரணம் தவிர்க்க முடியாததே என்பதை அறிந்த ஞானியர், இறந்து போன உயிரினங்களுக்காக எப்போதும் வருந்துவதில்லை. உயர்ந்த தேவனாலேயே {பிரம்மனாலேயே} இந்த மரணம் விதிக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்துகொண்டு, இறந்து போன உன் மகனுக்காக வருந்துவதைத் தாமதமில்லாமல் விடுவாயாக" {என்றார் நாரதர்}.

வியாசர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "நாரதரால் சொல்லப்பட்ட இந்தப் பயங்கர வார்த்தைகளைக் கேட்ட மன்னன் அகம்பனன், தன் நண்பரிடம் {அகம்பனன், நாரதரிடம்}, "ஓ! சிறப்புமிக்கவரே, ஓ! முனிவர்களில் முதன்மையானவரே {நாரதரே} என் கவலை தீர்ந்தது. நான் மனநிறைவை அடைந்தேன். இந்த வரலாற்றை உம்மிடம் இருந்து கேட்ட நான், உம்மிடம் நன்றியுள்ளவனாக உம்மை வழிபடுகிறேன்" என்றான் {அகம்பனன்}. மன்னனால் இப்படிச் சொல்லப்பட்டவரும், மேன்மையான முனிவர்களில் முதன்மையானவரும், அளவிலா ஆன்மாக் கொண்டவருமான அந்தத் தெய்வீகத் துறவி {நாரதர்}, பிறகு, நந்தவக் காட்டுக்குச் {அசோக வனத்திற்குச்} சென்றார்.

அடுத்தவர் கேட்பதற்காக இந்த வரலாற்றை அடிக்கடி உரைத்தலும், இந்த வரலாற்றை அடிக்கடி கேட்டலும், தூய்மைப்படுத்துவதாகவும், புகழுக்கும், சொர்க்கத்திற்கும் வழிநடத்துவதாகவும், பாராட்டத் தகுந்ததாகவும் கருதப்படுகிறது. மேலும் இது, {கேட்பவர் [அ] சொல்பவரின்} வாழ்நாளின் காலத்தையும் {ஆயுளையும்} அதிகரிக்கிறது.

ஓ! யுதிஷ்டிரா, பொருளுள்ள இந்தக் கதையைக் கேட்டு, க்ஷத்திரியர்களின் கடமைகளையும், வீரர்களால் அடையத்தக்க உயர்ந்த (அருள்) நிலைகளையும் எண்ணி உனது துயரத்தைவிடுவாயாக. வலிமைமிக்கத் தேர்வீரனும், பெரும் சக்தி கொண்டவனுமான அந்த அபிமன்யு, வில்லாளிகள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, (எண்ணிலா) எதிரிகளால் கொல்லப்பட்டுச் சொர்க்கத்தையே அடைந்திருக்கிறான். பெரும் வில்லாளியான அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {அபிமன்யு}, களத்தில் போராடியபடியே, வாள், கதாயுதம், ஈட்டி மற்றும் வில்லால் தாக்குண்டு வீழ்ந்தான். சோமனிலிருந்து எழுந்த அவன், தன் அசுத்தங்கள் அனைத்தும் சுத்தப்படுத்தப்பட்டதால், சந்திரனின் சாரத்தில் மறைந்துவிட்டான். எனவே, ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, உன் மனோபலம் அனைத்தையும் திரட்டிக் கொண்டு, உன் புலன்களைச் செயலிழக்க விடாமல், உன் தம்பிகளுடன் கூடி ஊக்கத்துடனும் விரைவாகவும் போரிடச் செல்வாயாக" {என்றார் வியாசர்}.



கதைக்குள் கதை அமைப்பு:
  1. வியாசர் முன்னிலையில் வியாசரின் சீடர் வைசம்பாயனர், அபிமன்யுவின் பேரன் ஜனமேஜயனிடம் மகாபாரதத்தினைச் சொல்கிறார். 
  2. இப்படிச் சொல்லப்படுவதைக் கேட்ட சூதர் சௌதி நைமிசாரண்யத்தில் முனிவர்களிடம் மீண்டும் மகாபாரத்தை சொல்கிறார்.
  3. அப்படிச் சௌதி சொல்லி வரும் நிகழ்வுகளில், சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் போர்காட்சிகளை விவரிக்கிறான்.
  4. அந்த விவரிப்பின் படி, அபிமன்யு கொல்லப்பட்ட பிறகு, யுதிஷ்டிரனிடம் வியாசர் உரையாடும் நிகழ்வு சொல்லப்படுகிறது.
  5. அந்த உரையாடலுக்குள், நாரதர் முனிவர் அகம்பனன் என்பவனிடம் சொன்ன கதை சொல்லப்படுகிறது.
  6. நாரதர் அகம்பனன் உரையாடலில், பிரம்மன் மரணதேவியான மிருத்யுவிடம் பேசிய நிகழ்வே இப்படி விரிநது வருகிறது.....


ஆங்கிலத்தில் | In English